உங்களுடைய இரத்த குரூப் உங்கள் சுபாவத்தை தீர்மானிக்கிறதா?
பைபிளின் கருத்து
உங்களுடைய இரத்த குரூப் உங்கள் சுபாவத்தை தீர்மானிக்கிறதா?
ஒருவருடைய இரத்தம் எந்த குரூப் என்பதை வைத்து அவருடைய சுபாவத்தை மதிப்பிடுவது சில நாடுகளில் பிரபலமாக இருக்கிறது. உதாரணமாக, ஜப்பானில் உங்களிடம் யாராவது பேச்சுக் கொடுக்கும்போது, ‘உங்களுக்கு எந்த குரூப் இரத்தம்?’ என கேட்பது சகஜம். ‘ஏ’ குரூப் இரத்தமுடையோர் அமைதலாகவும் பொறுப்பாகவும் சந்தேகவாதிகளாகவும் இருப்பார்கள்; ‘பி’ குரூப் இரத்தமுடையோர் கள்ளங்கபடமற்றவர்களாகவும் எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவயப்படுகிறவர்களாகவும் எளிதில் ஏமாறுகிறவர்களாகவும் இருப்பார்கள் என்றெல்லாம் இந்தக் கருத்தை ஆதரிப்போர் சொல்கிறார்கள். ஒரு வகை இரத்த குரூப்பை சேர்ந்தவர்கள் இன்னொரு வகை இரத்த குரூப்பைச் சேர்ந்தவர்களுடன் ஒத்துப்போகவே மாட்டார்கள்—அல்லது நன்றாக ஒத்துப்போவார்கள்—என்றும் அடித்துக் கூறுகிறார்கள்.
ஆகவே, பள்ளியில் மாணவர்களை குரூப் குரூப்பாக பிரிக்கும்போது, கம்பெனிகளில் மானேஜர்களைத் தேர்ந்தெடுக்கும்போது, அல்லது திருமண துணைவர்களைத் தேர்ந்தெடுக்கும்போது அவர்களுடைய இரத்த குரூப்பை அறிவது முக்கியமென சிலர் கருதுகிறார்கள். எந்த குரூப் இரத்தம் என்பது நிஜமாகவே நம்முடைய சுபாவத்தை தீர்மானிக்கிறது என்பதற்கு ஏதாவது அத்தாட்சி இருக்கிறதா? இதன் சம்பந்தமாக பைபிள் ஏதேனும் சொல்கிறதா?
இரத்த குரூப் என்றால் என்ன?
தி உவர்ல்டு புக் மல்டிமீடியா என்ஸைக்ளோப்பீடியா இவ்வாறு விளக்குகிறது: “சிகப்பு இரத்த அணுக்களின் சவ்வுகளில் காப்புமூலங்கள் (antigens) என்ற புரோட்டீன் இருக்கிறது. 300-க்கும் அதிகமான சிகப்பணு காப்புமூலங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.” சிலருக்கு குறிப்பிட்ட சில காப்புமூலங்கள் இருக்கின்றன, மற்றவர்களுக்கோ அவை இருப்பதில்லை, சில காப்புமூலங்கள் சேர்ந்திருக்க முடியாது. ஆகவே, அந்த என்ஸைக்ளோப்பீடியா சொல்கிறபடி, “குறிப்பிட்ட காப்புமூலங்கள் இருப்பதை அல்லது இல்லாதிருப்பதை வைத்தே, மனித இரத்தத்தை விஞ்ஞானிகள் பல்வேறு குரூப்களாக வகைப்படுத்தியிருக்கிறார்கள்.”
மிகவும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இரத்த குரூப் முறை ஏபிஓ முறையாகும், இது மனித இரத்தத்தை ஏ, பி, ஏபி, ஓ என நான்கு குரூப்களாக வகைப்படுத்துகிறது. அதோடு, Rh முறையும் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. சொல்லப்போனால், சுமார் 20 வகையான இரத்த குரூப் முறைகள் உள்ளன.
ஆகவே இரத்தம் மிகவும் சிக்கலானது. என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா இவ்வாறு கூறுகிறது: “பல்வேறு சிகப்பணு காப்புமூலங்கள் பெரும் எண்ணிக்கையில் இருப்பதால் ஒரே மாதிரி தோன்றும் இரட்டையரைத் தவிர, வேறு யாரும் ஒரேவித இரத்த குரூப் பொருட்களை பெற்றிருப்பதற்கான சாத்தியங்கள் மிக மிகக் குறைவு.”துல்லியமாக சொல்லப்போனால், ஒவ்வொருவருடைய “இரத்த குரூப்”பும் தனித்தன்மை வாய்ந்தது என்பதை இது சுட்டிக்காட்டுகிறது. ஆகவே, குறிப்பிட்ட இரத்த குரூப்பை சேர்ந்தவர்களுடைய சுபாவம் ஒரே மாதிரி இருக்கும் என்பதற்கு எவ்வித அத்தாட்சியும் இல்லை. ஏகப்பட்ட காரணிகள் நமது சுபாவத்தை தீர்மானிக்கின்றன.
எது நம் சுபாவத்தை தீர்மானிக்கிறது?
“சுபாவம் என்பது ஒவ்வொரு நபரையும் வேறுபடுத்திக் காட்டும் நடத்தை சம்பந்தப்பட்ட பண்புகளை மொத்தத்தில் குறிக்கிறது, இவை பிறவியிலேயே வருகின்றன, கற்றுக்கொள்ளவும் படுகின்றன” என என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா விளக்குகிறது. ஆம், நாம் பிறவியிலேயே பெற்றிருப்பதைத் தவிர, நம்முடைய சுபாவத்தை மாற்றியமைக்கும் மற்ற காரணிகளும் இருக்கின்றன, அதாவது குடும்ப சூழல், கல்வி, கூட்டுறவு, நல்ல அனுபவங்கள் கெட்ட அனுபவங்கள் போன்ற காரணிகள் உட்பட்டுள்ளன. ஆகவே, நம்முடைய மரபணு அமைப்பு மட்டுமே நம் சுபாவத்தை தீர்மானிப்பதில்லை. அதே மரபணு அமைப்பைக் கொண்ட ஒன்றுபோல் தோற்றமளிக்கும் இரட்டையரும்கூட வித்தியாசமான சுபாவங்களைப் பெற்றிருக்கிறார்கள்.
மற்றொரு முக்கியமான உண்மை என்னவென்றால், ஒருவருடைய சுபாவம் மாறலாம் அல்லது மாற்றப்படலாம். கிறிஸ்தவ போதனைகளுக்கு ஆட்களை மாற்றும் வல்லமை இருப்பதை அப்போஸ்தலன் பவுல் வலியுறுத்திக் காட்டி இவ்வாறு எழுதினார். “நீங்கள் பழைய மனித இயல்பையும் அதற்குரிய செயல்களையும் களைந்துவிட்டு, புதிய மனித இயல்பை அணிந்திருக்கிறீர்கள். அவ்வியல்பு தன்னை உண்டாக்கினவரின் சாயலுக்கேற்பப் புதுப்பிக்கப்படுகிறது.” (கொலோசெயர் 3:9, 10, பொது மொழிபெயர்ப்பு) தாங்கள் பாவிகள் என்பதையும் பாவ இயல்புகளைச் சுதந்தரித்திருப்பவர்கள் என்பதையும் கிறிஸ்தவர்கள் உணர்ந்திருக்கின்றனர். கடவுளால் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு, அவர்களுடைய சுபாவங்கள் மாற்றப்பட வேண்டியிருந்தது.
இத்தகைய மாற்றங்களை எது சாத்தியமாக்குகிறது? கடவுளுடைய வார்த்தையின் அல்லது செய்தியின் வல்லமையே இதை சாத்தியமாக்குகிறது. கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளுக்கு இருக்கும் பலமான செல்வாக்கைப் பற்றி பவுல் இவ்வாறு எழுதினார்: “தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.” (எபிரெயர் 4:12) கடவுளுடைய ஆவியின் செயல்பாட்டுக்கு ஒருவர் தன்னை கீழ்ப்படுத்தி, பைபிளில் உள்ள ஒழுக்க தராதரங்களுக்கு இசைவாக வாழ முயற்சி செய்யும்போது, அவருடைய சுபாவம் படிப்படியாக மாறலாம். இவ்வாறு வடிவமைக்கப்படும் கிறிஸ்தவ சுபாவத்தில் ‘உருக்கமான இரக்கம், தயவு, மனத்தாழ்மை, சாந்தம், நீடிய பொறுமை’ ஆகியவையும் அடங்கும்.—கொலோசெயர் 3:12.
கிறிஸ்தவ நியாயத்தன்மை
எந்த குரூப் இரத்தம் என்பதைப் பற்றி அறிவதை எந்தவொரு பைபிள் நியமமும் தடை செய்வதில்லை என்பது உண்மைதான். ஆனால் மனிதருடைய நடத்தையோடு இதற்கு ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்பதை அறிவது மற்றொரு விஷயம். வாழ்க்கையில் எல்லா விஷயங்களையும் போலவே, நம்முடைய நடவடிக்கைகளை கடவுளுடைய வார்த்தை வழிநடத்த அனுமதிக்க வேண்டும். (சங்கீதம் 119:105) நியாயத்தன்மையும்கூட இன்றியமையாதது.—பிலிப்பியர் 4:5, NW.
சுபாவத்திலுள்ள குறைபாடுகளை களைய முயலாமல் இருப்பதற்கு இரத்த குரூப்பை சாக்காக பயன்படுத்துவது நிச்சயமாகவே நியாயமற்றது. தங்களுடைய மரபணு அமைப்பு எப்படியிருந்தாலும், முடிந்தவரை யெகோவா மற்றும் இயேசுவின் குணங்களைப் பிரதிபலிப்பதற்கு கிறிஸ்தவர்கள் தங்களுடைய சுபாவத்தை உருப்படுத்தியமைப்பதில் தொடர்ந்து முன்னேற வேண்டும்.—எபேசியர் 5:1.
அதோடு, யெகோவா மற்றவர்களை எப்படி நோக்குகிறாரோ அதைப் போலவே கிறிஸ்தவர்களும் பிறரை நோக்க முயற்சி செய்ய வேண்டும். “தேவன் பட்சபாதமுள்ளவரல்ல.” (அப்போஸ்தலர் 10:34, 35) எல்லா வகையான மக்களையும் யெகோவா சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறார். ஆகவே, சிலருடைய இரத்த குரூப்பின் நிமித்தம் அவர்களுடைய கூட்டுறவை புறக்கணிப்பது அல்லது தவிர்ப்பது நியாயமற்றதாகும், அது கிறிஸ்தவத்திற்கு எதிரானதும்கூட. “பொருத்தமான” இரத்த குரூப்புடைய சிலருடன் மட்டுமே பழகும் விஷயத்திற்கும் அது பொருந்துகிறது. ‘பட்சபாதமுள்ளவர்களாய் இருப்பீர்களானால், பாவஞ்செய்கிறீர்கள்’ என பைபிள் புத்திமதி கூறுகிறது.—யாக்கோபு 2:9.
விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் முன்னேறுகையில், மனித சரீரத்தைப் பற்றிய புதிய கண்டுபிடிப்புகளும் கோட்பாடுகளும் வந்தவண்ணம் இருக்கின்றன. இவற்றால் கவர்ந்திழுக்கப்படுவது இயல்பானதே. என்றாலும், கிறிஸ்தவர்கள் தங்களுடைய சிந்தையை மனித கோட்பாடுகள் அல்ல, ஆனால் பைபிள் வழிநடத்தும்படி அனுமதிப்பது நல்லது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும், கிறிஸ்தவர்கள் ‘எல்லாவற்றையும் நிச்சயப்படுத்திக்கொண்டு,’ ‘நலமானதைப் பற்றிக்கொள்வது’ அவசியம்.—1 தெசலோனிக்கேயர் 5:21; NW. (g04 2/8)