Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

வயதான குற்றவாளிகள்

“வயதான கைதிகளுக்காக விசேஷமாய் மாற்றியமைக்கப்பட்ட சிறைப் பிரிவு பிரிட்டனில் முதன்முறையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது; குற்றச்செயலில் ஈடுபடும் ஓய்வூதியம் பெறுகிற வயதானவர்களின் எண்ணிக்கை மளமளவென அதிகரித்து வருவதை சமாளிக்கவே இந்த ஏற்பாடு” என அறிக்கை செய்கிறது லண்டனில் வெளியாகும் த சன்டே டைம்ஸ் செய்தித்தாள். போர்ட்ஸ்மௌத் சிறைச்சாலையிலுள்ள அந்தப் பிரிவில், லிஃப்டு போல பயன்படும் நாற்காலி பொருத்தப்பட்டுள்ளது, உடற்பயிற்சி சாதனங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன, பராமரிப்பதில் திறம்பட பயிற்சி பெற்ற பணியாளர்கள் இருக்கிறார்கள். தாங்கள் பெறும் அரசு சலுகைகளும் ஓய்வூதியமும் போதவில்லை என்பதற்காக ஓய்வூதியம் பெறுகிறவர்களில் 1,00,000-⁠க்கும் அதிகமானவர்கள் “குற்றச்செயலில் ஈடுபட்டிருக்கிறார்கள் அல்லது அப்படி ஈடுபடுவதைக் குறித்து சிந்திக்கிறார்கள்” என ஆராய்ச்சி காட்டுகிறது. போதை மருந்துகளைக் கடத்துவது, கடைகளிலிருந்து திருடுவது, பிரிட்டனுக்கு சிகரெட்டு, மதுபானம் ஆகியவற்றை கள்ளத்தனமாக கடத்துவது போன்றவற்றை சிலர் செய்கிறார்கள், ஏன் வங்கிக் கொள்ளையில்கூட ஈடுபட்டிருக்கிறார்கள். 1990-⁠ல் ஓய்வூதியம் பெறுகிறவர்களில் 355 பேர் சிறையில் அடைக்கப்பட்டார்கள், ஆனால் 2000-⁠ல் அந்த எண்ணிக்கை 1,138 ஆக உயர்ந்தது. இவர்களில் அநேகர் இதற்கு முன்பு எந்தக் குற்றச்செயலிலும் ஈடுபட்டதாக பதிவில்லை, ஆனால் அவர்கள் “தங்கள் வாழ்க்கை தரத்தைக் காத்துக்கொள்ள வேண்டும் என்ற பெரும் அழுத்தத்தின்கீழ் இருக்கிறார்கள்” என குற்றச்செயல்களை ஆராயும் நிபுணரான பில் டப்மன் சொல்கிறார். “இவர்கள் ஓய்வூதியத்தைப் பெறும் பரம ஏழைகள் அல்ல, ஆனால் வாழ்க்கை முழுவதும் கடின உழைப்பாளிகளாக, சமுதாயத்தில் சட்டம், ஒழுங்கைக் கடைப்பிடித்த நடுத்தர வர்க்கத்தினர்களாக இருக்கிறார்கள்.” (g04 2/8)

உயிர் காக்கும் சோப்பு

சோப்பு போட்டு கைகளைக் கழுவினாலே போதும் வருடத்திற்கு பத்து லட்சம் பேரின் சாவை தடுக்க முடியும்; இதனால் வயிற்றுப்போக்கு சம்பந்தப்பட்ட வியாதிகள் வருவதை மக்கள் தவிர்க்க முடியும். இதை சொன்னவர் லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்டு ட்ராப்பிக்கல் மெடிஸின் என்ற நிறுவனத்தில் பேராசிரியையாக பணியாற்றும் வால் கர்டிஸ் ஆவார். ஜப்பான், கியோடோவில் நடைபெற்ற பின்தங்கிய நாடுகளுக்கான தண்ணீர் பற்றிய கருத்தரங்கில், மனித மலத்திலுள்ள கிருமிகளை “பொது மக்களின் நம்பர்-1 எதிரி” என கர்டிஸ் குறிப்பிட்டதாக த டெய்லி யோமியூரி செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. “சில சமுதாயங்களில், பச்சிளங்குழந்தைகளின் கால்களை கழுவிவிடும் பெண்கள் அதன் பிறகு தங்கள் கைகளைக் கழுவாமல் உணவு தயாரிப்பது வெகு சகஜமாக இருக்கிறது” என அந்த செய்தித்தாள் சொல்கிறது. சோப்பு போட்டு கைகளைக் கழுவுவது ஆபத்தான வைரஸ்களும் பாக்டீரியாக்களும் பரவுவதைத் தடுக்கிறது. வளரும் நாடுகளில் தண்ணீரின் தரத்தை மேம்படுத்துவதற்கு ஆகும் செலவைவிட வயிற்றுப்போக்கு சம்பந்தப்பட்ட வியாதிகளை குறைப்பதற்காக சோப்பு போட்டு கைகளைக் கழுவுவதற்கு ஆகும் செலவு மூன்று மடங்கு குறைவு என்கிறார் கர்டிஸ். (g04 2/22)

குளிர்காயும் அடுப்பு—⁠பாதுகாப்பு டிப்ஸ்

“குளிர்காயும் அடுப்பு அல்லது விறகு அடுப்பின் புகை வீட்டிற்கு உள்ளேயும்சரி, வெளியேயும்சரி காற்று மாசுபட காரணமாகி விடலாம், அதோடு தீப்பிடிக்கும் சாத்தியத்தையும் ஏற்படுத்தலாம்” என யூஸி பெர்க்லி வெல்னஸ் லெட்டர் குறிப்பிடுகிறது. பெரும்பாலும் குளிர்காயும் அடுப்பு தூய்மைக்கேட்டால் வரும் ஆபத்துகளையும் உடல்நலப் பிரச்சினைகளையும் தவிர்க்க, வெல்னஸ் லெட்டர் பின்வரும் டிப்ஸ்களை கொடுக்கிறது:

“புகைப்போக்கியை நன்கு செயல்படும் விதத்தில் . . . சுத்தமாகவும், பழுதின்றியும் வைத்துக்கொள்ளுங்கள்.”

“முக்கியமாக உங்கள் வீடு காற்று புக முடியாதபடி அடைபட்டதாக இருக்குமானால் . . . கார்பன் மோனாக்சைடை கண்டறியும் கருவி ஒன்றைப் பொருத்துவதைப் பற்றி சிந்தியுங்கள்.”

“அதிக புகையைக் கக்கும் பெரிய அடுப்பை அல்ல, ஆனால் சிறிய அடுப்பை அமையுங்கள்.”

“குறைந்தது ஆறு மாத காலத்திற்கு முன் சேகரித்த, உலர்ந்த, உறுதியான கட்டைகளைப் பயன்படுத்துங்கள். கெட்டியான கட்டைகள் நன்கு, நின்று எரியும்.”

“காற்றோட்டத்திற்காக சில அங்குலத்துக்கு ஒரு ஜன்னலை திறந்து வையுங்கள்.”

“எளிதில் தீப்பிடித்துக் கொள்ளும் சுவர்கள் மற்றும் சாமான்களிலிருந்து குறைந்தது ஒரு மீட்டர் தள்ளி உங்கள் விறகு அடுப்பு அமைக்கப்பட்டுள்ளதாவென்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் தரையின் பாதுகாப்புக்கு அனல் காப்பை” பயன்படுத்துங்கள்.

“பதப்படுத்தப்பட்ட மரத்துண்டை, பிளைவுட்டை, பார்டிக்கில் போர்டை (particle board), சாயம் பூசப்பட்ட கட்டையை, கலர் காகிதத்தை, அல்லது பிளாஸ்டிக்கை எரிக்காதீர்கள். இவை நச்சுப் புகையை கக்கும்.”

“திறந்த வெளியில் குளிர் காய்கையில், நெருப்பிற்கு முன் பாதுகாப்பு திரையை (firescreen) எப்போதும் வையுங்கள்.” (g03 11/8)

எண்ணங்களும், உணர்ச்சிகளும், ஆரோக்கியமும்

மனதிற்குள் செல்லும் விஷயங்கள் நாம் நினைத்திருந்ததைவிட பெரும் பாதிப்பை நம் உடலில் ஏற்படுத்த முடியுமென விப்ராஸ்ட் என்ற போலந்து நாட்டு பத்திரிகையில் வெளியான ஓர் அறிக்கை சொன்னது. “நம் உடலிலுள்ள நரம்புகள், நோய் எதிர்ப்பு சக்தி, ஹார்மோன், இரத்த ஓட்டம், இனப் பெருக்கம் ஆகிய அமைப்புகளையும் மற்ற எல்லா முக்கிய உறுப்புகளையும் நம் எண்ணங்களும் உணர்ச்சிகளும் பாதிக்கின்றன” எனவும் அந்த அறிக்கை கூறுகிறது. எனவே “அழுத்தம் நிறைந்த வாழ்க்கை வாழ்பவர்கள் மற்றவர்களைவிட இரண்டு மடங்கு அதிக ஜலதோஷத்தாலும் காய்ச்சலாலும் அவதிப்படுகிறார்கள்” என வார்சாவிலுள்ள மிலிட்டரி இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹைஜீன் அண்டு எபிடிமியோலஜி துறையைச் சேர்ந்த பேராசிரியர் மாரிக் கோவால்சைக் சொல்கிறார். மனச்சோர்வுற்ற பெண்கள் கருத்தரிப்பதற்கான வாய்ப்பு பாதிக்குப் பாதி குறைகிறது என அவர் சொல்கிறார். மன அழுத்தம் புற்றுநோய் ஏற்படுவதற்கு காரணமாக இல்லாவிட்டாலும் “மந்த நிலையிலிருக்கும் புற்றுநோய் மளமளவென வளருவதற்கு” காரணமாக ஆகலாம் எனவும் விப்ராஸ்ட் அறிக்கை செய்கிறது. கோபமும் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கலாம்; ஏனென்றால் மூர்க்கமான, அன்பற்ற ஆட்களுக்கு மகுட உருதமனி (coronary) நோய் வருவதற்கும் மாரடைப்பு ஏற்படுவதற்கும் அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. (g04 1/8)

கோபக்கார இளைஞரின் இருதயத்திற்கு ஆபத்து!

“எதற்கெடுத்தாலும் எரிந்துவிழும் சிறார்களுக்கும் இளைஞர்களுக்கும் சாந்தமாக இருக்கும் அவர்களுடைய சகாக்களைவிட வளர்சிதை மாற்ற கோளாறு (metabolic syndrome) வருவதற்கு மூன்று மடங்கு அதிக வாய்ப்புள்ளது; இந்தக் கோளாறு இருதய நோய் வரும் என்பதற்கு ஆபத்தான அறிகுறியாகும்” என அறிக்கை செய்கிறது மான்ட்ரீலில் வெளியாகும் த கஸெட் என்ற செய்தித்தாள். எரிந்துவிழும் 134 இளைஞர்களையும் சிறார்களையும் வைத்து அமெரிக்காவையும் பின்லாந்தையும் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தினார்கள்; அவ்வளவாக கோபப்படாதவர்களைவிட மூக்குக்கு மேல் கோபப்பட்ட இளைஞர்களுக்கு இருதய நோய் தாக்கும் ஆபத்து 22 சதவீதம் அதிகம் இருந்ததை அவர்கள் கண்டுபிடித்தார்கள். “50 வயதாகையில் திடீரென ஒருநாள் தானாகவே இருதய நோய் வந்துவிடுவதில்லை, இருதய நோய் இளமையிலேயே ஆரம்பித்து விடுகிறது” என்கிறார் இந்த ஆய்வின் துணை ஆசிரியரான டாக்டர் கிறிஸ்டன் சாலமன். (g04 2/8)

பிரிட்டனின் வயதான பறவை

“பிரிட்டனின் வயதான பறவை [80,00,000 கிலோமீட்டர்] தூரம் பறந்தும் 52 வருடங்கள் வாழ்ந்தும் இன்னமும் திடகாத்திரமாக இருக்கிறது” என அறிக்கை செய்கிறது லண்டனில் வெளியாகும் த டைம்ஸ் செய்தித்தாள். கருப்பு-வெள்ளை நிறமுள்ள மேங்க்ஸ் (Manx) என்ற அந்தச் சிறிய கடல் பறவைக்கு “1957, மே மாதத்தில் சுமார் ஆறு வயதாக இருக்கையில் முதன்முதலாக அடையாள வளையமிடப்பட்டது.” அது 1961, 1978, 2002 ஆகிய ஆண்டுகளில் பிடிபட்டது, அதற்குப் பிறகு அதை மீண்டும் பார்ப்பதை பறவையியல் வல்லுநர்கள் துளியும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் 2003-⁠ன் ஆரம்பத்தில் வடக்கு வேல்ஸ் கடற்கரைக்கு அருகில் அது மீண்டும் தென்பட்டது. இந்தப் பறவை இடப்பெயர்ச்சியின்போது தென் அமெரிக்காவுக்கு போய் வருவதற்கு குறைந்தபட்சம் 8,00,000 கிலோமீட்டராவது பறந்திருக்க வேண்டும் என பறவையியல் பிரிட்டிஷ் டிரஸ்ட்டு கணக்கிடுகிறது. அதோடு உணவுக்காக தவறாமல் அது 1,000 கிலோமீட்டர் பறப்பதையும் கணக்கிட்டால் அது 80,00,000 கிலோமீட்டருக்கும் அதிகமாக பறந்திருக்கிறது என அறிவியலாளர்கள் முடிவுக்கு வருகிறார்கள். வடக்கு வேல்ஸிலுள்ள பார்ட்ஸீ பறவை கண்காணிப்பு நிலையத்தை சேர்ந்த கிரேயம் ஏப்பில்டன் இவ்வாறு சொல்கிறார்: “இந்த வயதான பறவைக்கு நான்காவது முறையாக வளையமிடப்பட்டிருக்கிறது; இதற்கு முன் இப்படி சம்பவித்ததே இல்லை. முந்தைய வளையங்கள் எல்லாம் பழையதாகிவிட்டன.” (g04 2/8)

ஆப்பிரிக்காவை ஆட்டிப்படைக்கும் மலேரியா

“ஒவ்வொரு நாளும் ஆப்பிரிக்க கண்டத்தில் 3,000 குழந்தைகளை” மலேரியா பலி வாங்குகிறது என குறிப்பிடுகிறது பிரான்சில் வெளியாகும் லா ஃபிகாரோ என்ற செய்தித்தாள். உலக சுகாதார அமைப்பின்படி (WHO), வருடா வருடம் ஆப்பிரிக்காவில் 30 கோடிக்கும் அதிகமானோர் படுமோசமான மலேரியா தொற்றுகளால் பாதிக்கப்படுகிறார்கள்; இதில் குறைந்தபட்சம் பத்து லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள். வருடம் 2000-⁠த்தில் மலேரியா தாக்கியபோது புருண்டியில் சரித்திரம் காணாத படுமோசமான நிலைமை ஏற்பட்டது. ஏழு மாதத்தில் அதன் ஜனத்தொகையில் பாதிப் பேர், அதாவது சுமார் 35 லட்சம் பேர் மலேரியாவால் தாக்கப்பட்டார்கள். மருந்துகளுக்கு மசியாத ஒட்டுண்ணிகள் க்வினைன் சிகிச்சைகளை பயனற்றவையாக ஆக்கிவிட்டிருப்பதே அதற்குக் காரணமாகும். அதே சமயத்தில், அதிக செலவுக்கு பயந்துகொண்டு அநேக ஆப்பிரிக்க நாடுகள் க்வினைனுக்குப் பதிலாக ஆர்டிமிஸியா அனுவா என்ற சீன தாவரத்திலிருந்து பெற்ற புதிய மருந்துகளைப் பயன்படுத்த மறுக்கின்றன. இதனால் “ஆப்பிரிக்காவை மலேரியா தொடர்ந்து ஆட்டிப்படைத்து வருகிறது” என WHO-⁠ன் பிரமுகர் ஒருவர் சொன்னார். (g04 2/22)

லத்தீனை புழக்கத்தில் வைத்தல்

லத்தீனை புழக்கத்திலிருந்து மறைந்த மொழியாக பலர் கருதினாலும் வத்திகன் அதைப் புழக்கத்தில் வைத்துக்கொள்ளவும் தற்காலத்துக்கு ஏற்றவாறு அதை மாற்றவும் முயற்சி செய்து வருகிறது. ஏன்? வத்திகனில் இத்தாலிய மொழி புழக்கத்தில் இருந்தாலும் லத்தீன் ஆட்சி மொழியாகவும் போப்பின் சுற்றறிக்கைகள், மற்ற ஆவணங்கள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிற மொழியாகவும் தொடர்ந்து இருப்பதே அதற்குக் காரணம். 1970-களில் உள்ளூர் மொழிகளிலேயே சர்ச்சு ஆராதனைகள் நடத்தப்படலாம் என்ற ஆணை அமலுக்கு வந்த பிறகு லத்தீனைப் பயன்படுத்துவது வெகுவாக குறைந்துவிட்டது. எனவே அந்த மொழி புழக்கத்திலிருந்து மறைந்துவிடாதிருக்க ஆறாம் போப் பால் லத்தீன் ஸ்தாபனத்தை ஏற்படுத்தினார். அதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்று லத்தீன்-இத்தாலிய அகராதியை இரண்டு தனித் தொகுதிகளாக பிரசுரிப்பது; அப்படி பிரசுரிக்கப்பட்ட அனைத்தும் விற்பனையாயின. இப்போது இவை இரண்டையும் இணைத்து ஒரு புதிய பதிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது; அதன் விலை 115 டாலராகும். அதில் “எஸ்கார்யோரும் லாவாடோர்” (டிஷ்வாஷர்) போன்ற சுமார் 15,000 நவீனமாக்கப்பட்ட லத்தீன் சொற்கள் உள்ளன. மற்றொரு புதிய தொகுதி “இரண்டு அல்லது மூன்று வருடங்களில் எதிர்பார்க்கப்படுகிறது” என த நியு யார்க் டைம்ஸ் செய்தித்தாள் சொல்கிறது. அதில் பெரும்பாலான வார்த்தைகள் “கம்ப்யூட்டர் மற்றும் தகவல் சேவைகளிலிருந்து” எடுத்து சேர்க்கப்படும். (g04 2/22)