Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

திரும்பவும் மழையா!

திரும்பவும் மழையா!

திரும்பவும் மழையா!

அயர்லாந்திலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

“அடடா! திரும்பவும் மழையா!”

இதைப் போல எப்போதாவது சொல்லியிருக்கிறீர்களா? உதாரணத்திற்கு, கோடையில் அயர்லாந்தின் அட்லாண்டிக் கரையோரத்திலுள்ள இயற்கை வனப்பில் ஜொலிக்கும் ஒரு இடத்தை பார்க்கப் போவதாக வைத்துக்கொள்ளுங்கள். பளிச்சென்று கதிரவன் பிரகாசிக்கும் நாளில் இயற்கை காட்சிகளைக் கண்களால் பருக ஆவலுடன் செல்கிறீர்கள். ஆனால் திடீரென பலத்த காற்றுடன் மழை சோவென்று கொட்டுகிறது. உங்களுக்கு எப்படி இருக்கும்? அதுபோன்ற சமயத்தில், மழைக்காக நாம் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதை எளிதில் மறந்துவிடலாம். மழை மட்டும் இல்லாவிட்டால் நாமும் இருக்கப் போவதில்லை, பார்த்து ரசிக்க இந்த அழகிய இயற்கை காட்சிகளும் இருக்கப் போவதில்லை.

எவ்வளவு தடவை மழை பெய்தாலும் வற்றாதளவுக்கு நீர் ‘ஸ்டாக்’ இருப்பதுபோல் தோன்றுகிறது. அது எப்படி முடிகிறது? அதிசயிக்க வைக்கும் நீர் சுழற்சிதான் இதற்குக் காரணம். வாழ்க்கைக்கு அதிக அத்தியாவசியமான மழையின், மிக முக்கிய நிலைகளான ஆவியாதல், திரவமாதல், வீழ்தல் என்ற மூன்று நிலைகளை வெகு சுருக்கமாக கலந்தாலோசிப்பதுகூட, ஏதோ குருட்டாம்போக்கில் மழை பெய்வதில்லை என்பதை நமக்குப் புரிய வைக்கும். இது, “நிறுவப்பட்ட மாறா நியதிகளுக்கு இசைய செயல்படும்” சிக்கலான வடிவமைப்பு என ஒரு புத்தகம் விளக்கமளிக்கிறது.

ஆவியாதல்

பூமியிலுள்ள நீரில் சுமார் 97 சதவீதம் கடல்களில் உள்ளது. மீதமுள்ள நீரில் பெரும்பாலானவை பனிப்பாறைகளின் வடிவில் அல்லது குளங்களிலும் நிலத்தடி நீர்த்தேக்கங்களிலும் உள்ளது. கடல் நீரை குடிக்க முடியாது என்பது உண்மைதான். “பூர்வ கால மாலுமியின் பாட்டு a என்ற ஆங்கில கவிதை கடலில் தவியாய் தவித்த ஒரு மாலுமியின் புலம்பலை எதிரொலிக்கிறது; அங்குள்ள நிலை: ‘தண்ணீர் தண்ணீர் எங்கும் தண்ணீர், ஆனால் குடிக்கவோ ஒரு துளியில்லை.’

கடல் நீர் குடிநீராக மாறுவதற்கு முன்பு பற்பல சிக்கலான படிகளைக் கடந்து வருகிறது. முதலாவதாக அது ஆவியாகி, வாயுவாக மாறுகிறது; அந்த வாயுவே நீராவி. வருடா வருடம் சூரிய உஷ்ணத்தால் நிலத்திலிருந்தும் கடலிலிருந்தும் சுமார் 4,00,000 கன கிலோமீட்டர் நீர் வளிமண்டலத்திற்கு செல்கிறது. பூர்வ காலத்தில் எலிகூ என்பவர் இந்த செயல்பாட்டிற்கான புகழ் மாலையைக் கடவுளுக்குச் சூட்டினார்; “கடலிலிருந்து நீர்த் துளிகளை அவர் ஏறப்பண்ணுகிறார், தாம் உண்டுபண்ணின மூடுபனியிலிருந்து மழையை இறங்கப் பண்ணுகிறார்” என அவர் சொன்னார்.​—⁠யோபு 36:27, த நியு இங்லிஷ் பைபிள்.

வளிமண்டலம் “கிட்டத்தட்ட நம்ப முடியாத சிக்கலான அமைப்பாக” உள்ளது; அது விண்வெளிக்குள் 400 கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவுக்கு பரந்து விரிந்திருக்கிறது. பூமிக்கு மேலே 10 முதல் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்தில்தான் நீர் மறுசுழற்சி செய்யப்படுகிறது. இந்த இடத்திற்கு அடிவளி மண்டலம் என்று பெயர்; இதை, “பூமியின் மேற்பரப்புடன் தொடர்புகொள்ளும் பகுதி என்றும், மேகங்கள், மழை, பனி, புயல்காற்றுகள், இடியுடன்கூடிய சூறாவளி ஆகியவற்றின் பிரதேசம்” என்றும் அவர் ஃப்ரஜையில் உவாட்டர் ப்ளானெட் என்ற புத்தகம் விவரிக்கிறது.

காற்று எந்தளவுக்கு வெதுவெதுப்பாக இருக்கிறதோ அந்தளவுக்கு அது அதிகமான நீரை தன்னகத்தே வைத்துக்கொள்ள முடியும். அதனால்தான் வெதுவெதுப்பான, காற்றோட்டமுள்ள நாளில் நீங்கள் துவைத்த துணிகள் சீக்கிரத்தில் உலர்ந்துவிடுகின்றன. வெப்பமண்டலப் பகுதிகளிலுள்ள வளிமண்டலம் அதிக நீரை தன்னுள் தேக்கி வைக்கிறது. “தேவை அதிகமுள்ள இடத்திற்கு இந்த நீர் அனைத்தும் எப்படி நகர்ந்து செல்கிறது?” என நீங்கள் கேட்கலாம். புவியை சூழ்ந்திருக்கும் பலம் வாய்ந்த காற்று அமைப்புகளின் உதவியால்தான் நகர்ந்து செல்கிறது. பூமி அதன் அச்சில் சுழலுகிற விதத்தாலும், பூமியின் மேற்பரப்பின் சில பகுதிகளைவிட மற்ற பகுதிகள் அதிக உஷ்ணமடைகிற விதத்தாலும்தான் இந்த காற்று அமைப்புகள் (wind systems) உருவாகின்றன; வளிமண்டலம் தொடர்ந்து அசைந்துகொண்டே இருக்கவும் அவை உதவுகின்றன.

அசைந்துகொண்டே இருக்கும் நம் வளிமண்டலத்தில் மிகப் பெரிய காற்று திரள்கள் (air masses) காணப்படுகின்றன. அவை எவ்வளவு பெரியவை? அவை ஒவ்வொன்றும் பல லட்சக்கணக்கான சதுர கிலோமீட்டர் பகுதியை ஆக்கிரமிக்குமளவுக்கு ஒரு பெரிய தீவு போல் இருக்கின்றன; அத்தீவு முழுவதிலும் ஏறக்குறைய ஒரே உஷ்ணநிலை நிலவுகிறது. வெதுவெதுப்பான திரள்கள் வெப்பமண்டலப் பகுதிகளிலும் குளிர்ந்த திரள்கள் ஆர்க்டிக் அல்லது துருவ பகுதிகளிலும் உள்ளன. இந்த காற்று திரள்கள் வளிமண்டலத்தில் மலைக்க வைக்கும் விதத்தில் நீரை “சுமந்து” செல்கின்றன.

வளிமண்டலத்தில் நீராவி நகர்ந்து செல்லும் வடிவமைப்பில் இன்னுமொரு அறிவுப்பூர்வமான கைவண்ணம் மிளிருகிறது. வெப்பமண்டலப் பகுதி போன்று அதிக உஷ்ணமான பகுதிகளிலுள்ள உஷ்ணத்தை அது தேவைப்படும் வேறொரு இடத்திற்கு மாற்றுகிறது. இப்படி அது மாற்றாவிட்டால் பூமியில் சில இடங்களில் உஷ்ணம் மெல்ல மெல்ல அதிகரித்துக் கொண்டே வந்து தகிக்க ஆரம்பித்துவிடும்.

திரவமாதல்

வளிமண்டலத்தில் நீராவி முக்கியமான செயல்களை நடப்பித்தாலும் அது அங்கேயே இருந்து விட்டால் நிலத்தை நனைக்க முடியாது; அதனால் நமக்கு உண்மையிலேயே எந்த பயனும் இருக்காது. உதாரணத்திற்கு சஹாரா பாலைவனத்திற்கு மேலிருக்கும் வளிமண்டலத்தில் பெருமளவு ஈரப்பசை உள்ளது; எனினும் அந்தப் பகுதி வறண்டு வெட்டாந்தரையாய் காணப்படுகிறது. வளிமண்டலத்திலுள்ள ஈரப்பசை பூமியை எப்படி வந்தடைகிறது? முதலாவதாக, அது திரவமாகிறது, முன்னிருந்த நிலைக்கே திரும்புகிறது.

குளியலறையில், சூடான நீரிலிருந்து வரும் வெதுவெதுப்பான காற்று சில்லென்றிருக்கும் சன்னல்மீதோ கண்ணாடிமீதோ படுகையில் நீராவி திரவமாவதை நீங்கள் ஒருவேளை பார்த்திருப்பீர்கள். காற்றின் ஒரு பகுதி, குளிர்ச்சி அதிகமுள்ள உயரமான இடத்திற்கு மேல் எழும்பிச் சென்று உஷ்ணம் குறைகையிலும் இதுபோன்ற ஒன்றுதான் நிகழ்கிறது. எது காற்றை மேலே எழும்பச் செய்கிறது? கனமான, குளிர்ந்த காற்று வெதுவெதுப்பான காற்றை மேலே எழும்பச் செய்யலாம். சில சமயங்களில் மலைகள் காற்றை மேல் நோக்கித் தள்ளுகின்றன. இன்னும் சில சமயங்களில், முக்கியமாக வெப்பமண்டலப் பகுதிகளில் வெப்பச்சலனத்தால் (convection currents) அது மேல் நோக்கி தள்ளப்படுகிறது.

‘ஆனால் வளிமண்டலத்திலுள்ள இந்த நீராவி எதன்மீது படிகையில் திரவமாகிறது?’ என நீங்கள் கேட்கலாம். வளிமண்டலம் எங்கும், புகை, தூசி, கடல் உப்பு போன்ற மிக மிகச் சிறிய துகள்கள் காணப்படுகின்றன. காற்றின் ஒரு பகுதி குளிர்ச்சியடைகையில், இந்த சின்னஞ்சிறிய துகள்கள் மீது நீராவி படிந்து திரவமாகிறது; இத்துகள்கள் நீர்த்துளிகளுக்கு மையக் கருக்களாக விளங்குகின்றன. இந்த நுண்ணிய நீர்த்துளிகள் பிற்பாடு கண்களுக்கு தெரியும் விதத்தில் மேகங்களாக உருவெடுக்கின்றன.

எனினும் இந்த நீர் உடனடியாக பூமியில் விழுவதில்லை. காற்றைவிட நீர் 800 மடங்கு அடர்த்தியாக இருந்தும் அது ஏன் விழுவதில்லை? ஒவ்வொரு மேகத்துளியும் மிகச் சிறியதாகவும் அடர்த்தி குறைந்ததாகவும் இருப்பதால் காற்றோட்டத்தில் மிதந்து செல்ல முடிவதே அதற்குக் காரணம். முன்னர் குறிப்பிடப்பட்ட எலிகூ நீர் சுழற்சியின் இந்த விநோதமான செயலைக் கண்டு வியந்து போய், “சமநிலையில் மேகங்களாக ஆகாயத்தில் தொங்குகின்றன, இது பூரணத் திறமையுடைய [சிருஷ்டிகரின்] ஓர் ஆச்சரியமூட்டும் செயல்” என சொன்னார். (யோபு 37:16, நியு இங்லிஷ் பைபிள்) உங்கள் தலைக்கு மேலாக மிதந்து செல்லும் பஞ்சு போன்ற சிறிய மேகத்தில் 100 முதல் 1,000 டன் ஈரப்பசை இருக்கலாம் என்பதை அறிவது ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது அல்லவா?

வீழ்தல்

பெரும்பாலான மேகங்கள் மழையைத் தருவதே இல்லை. வளிமண்டலத்திற்கு நீர் எப்படி செல்கிறது என்பதையும் வானத்தில் மேகங்கள் எப்படி மிதக்கின்றன என்பதையும் விளக்குவது ஓரளவு சுலபம். ஆனாலும் மீண்டும் “நீர் எப்படி கீழே இறங்குகிறது என்பதை விளக்குவதுதான் உண்மையிலேயே கடினம்” என்கிறார் ஓர் எழுத்தாளர்.​—⁠வளிமண்டலத்தின் சவால் (ஆங்கிலம்).

ஒரு சிறிய மழைத்துளி உருவாக “பத்து லட்சம் அல்லது அதற்கும் அதிகமான மேகத்துளிகள்” தேவைப்படலாம். மிதக்கும் இந்த சின்னஞ்சிறிய மேகத்துளிகளை, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் பூமியில் பொழியும் 100 கோடி டன் அல்லது அதற்கும் அதிக அளவுள்ள நீராக மாற்றுவது எது என்பதற்கு முழு திருப்தியளிக்கும் பதில் யாரிடமும் இருப்பதாக தெரியவில்லை. இந்தச் சின்னஞ்சிறிய மேகத்துளிகள் வெறுமனே ஒன்றுசேர்ந்து பெரிய மழைத் துளிகளாக உருவாகின்றனவா? சில சமயங்களில் அப்படி உருவாகின்றன. வெப்பமண்டலம் போன்ற பகுதிகளில் மழைத் துளிகள் உருவாவதற்கு இதுவே காரணமாக இருக்கலாம். ஆனாலும், அயர்லாந்தின் அட்லாண்டிக் கரையோரம் போன்ற இடங்களில் “மழைத் துளி எப்படி உருவாகிறது என்பது புரியாப் புதிராகவே” இருக்கிறது.

அயர்லாந்தின் அட்லாண்டிக் கரையோரத்தில், சின்னஞ்சிறிய மேகத்துளிகள் வெறுமனே ஒன்றுசேர்ந்து பெரிய மழைத் துளிகளாக உருவாவதில்லை. இவை சின்னஞ்சிறிய ஐஸ் படிகங்களாக மாறுகின்றன​—⁠இதன் செயல்முறை இன்னும் முழுமையாக புரிந்துகொள்ளப்படவில்லை. இந்தப் படிகங்கள் ஒன்றாக சேர்ந்து “இயற்கையின் ஈடிணையற்ற கைவண்ணமாகிய” பனித்திவலைகளாக மாறுகின்றன. பனித்திவலைகள் பெரிதாகவும் அடர்த்தி மிகுந்தவையாகவும் மாறுகையில் மேல் நோக்கி எழும்பும் காற்றோட்டத்தை எதிர்த்து பூமியில் விழ ஆரம்பிக்கின்றன. அதிக குளிர்ச்சியான இடத்தில் பனியாக பொழிகின்றன; அப்படி பொழிகையில் சராசரியாக அதில் நூறு கோடிக்கணக்கான பனித்திவலைகள் இருக்கும். ஆனால் வெதுவெதுப்பான காற்றை கடந்து வந்தாலோ அவை உருகி மழைத் துளிகளாக மாறுகின்றன. எனவே பனி என்பது உறை மழை அல்ல. மாறாக, பெரும்பாலான மழை​—⁠மித வெப்பமண்டலத்திலாவது​—⁠பனியாக “புறப்பட்டு” பூமிக்கு வருகையில் உருகிவிடுகிறது.

ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவுக்கு பயணித்த பின்னர், அதுவும் முழுமையாக புரிந்துகொள்ள முடியாத சிக்கலான செயல்முறைகளை சந்தித்த பின்னர் மழை மீண்டும் திரும்பி வருகிறது. இது உங்கள் திட்டங்களிலும் வேலைகளிலும் அவ்வப்போது குறுக்கிடுவதென்னவோ உண்மைதான். ஆனால் இந்த அருமையான ஏற்பாடு என்றும் முடிவுறா நீர் சுழற்சிக்கு வழிசெய்கிறது. ஆம் மழை உண்மையில் ஒரு வரப்பிரசாதம்தான். எனவே அடுத்த முறை மழைச்சாரல் உங்கள்மீது படும்போது கடவுளிடமிருந்து வரும் அந்தப் பரிசை முன்பைவிட அதிகமாக போற்றுவீர்கள் அல்லவா? (g04 2/8)

[அடிக்குறிப்பு]

a சாம்யெல் டெய்லர் கோல்ரிட்ஜ் என்ற ஆங்கில கவி எழுதியது.

[பக்கம்14-ன் பெட்டி/படம்]

ஆலங்கட்டிகள் உருவாகும் விதம்

“குமுறும் இடிமின் மேகங்களின் விநோத படைப்பே ஆலங்கட்டி” என வானிலை என்ற ஆங்கிலப் புத்தகம் சொல்கிறது. மேகத்துளிகள் இடிமின் மேகங்களிலுள்ள சின்னஞ்சிறிய துகள்கள் மீது பட்டு திரவமாகையில் சிலசமயங்களில் அவை மேல் நோக்கி வீசும் வலுவான காற்றில் சிக்கிக்கொள்கின்றன; இவ்வாறு மேகத்தில் அதிக உறைநிலை உள்ள பகுதிக்கு அவை அடித்துச் செல்லப்படுகின்றன. இந்த உறைநிலையில், ஆரம்ப நிலையிலுள்ள அந்த மழைத்துளி மீது மற்ற துகள்கள் படிந்து, உடனடியாக உறைந்துவிடுகின்றன. இந்த செயல்முறை மீண்டும் மீண்டும் நிகழ்கிறது; உறைந்த மழைத்துளி, உறைந்த பரப்புக்கு உள்ளேயும் வெளியேயுமாக பயணித்துக் கொண்டேயிருக்கிறது. இப்படி பயணிக்கும் ஒவ்வொரு முறையும், வெங்காயத்தின் தோல் அடுக்குகளைப் போல் உறைந்த மழைத் துளியின்மீது ஐஸ்ஸால் ஆன புதிய அடுக்குகள் உருவாகின்றன, அதனால் அதன் கனம் அதிகமாகிக்கொண்டே வருகிறது. இறுதியில் அது இன்னும் கனமுள்ளதாகி மேகத்தின் மேல் நோக்கி வீசும் காற்றை எதிர்த்து படிகநிலையில் பூமியில் விழுகிறது; இதுவே நாம் அறிந்திருக்கும் ஐஸ்ஸாலான ஆலங்கட்டி. “சில சமயங்களில், ஒவ்வொரு ஆலங்கட்டியும் 0.76 கிலோகிராம் எடையுடன் மிகப் பிரமாண்டமான அளவுக்கு உருவாகலாம்” என வளிமண்டலம், வானிலை, சீதோஷ்ணநிலை என்ற ஆங்கிலப் புத்தகம் சொல்கிறது.

[படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

ஆலங்கட்டி

↑ மேல் நோக்கி வீசும் காற்று

உறைநிலை ................................................

↓ கீழ் நோக்கி வீசும் காற்று

[பக்கம் 15-ன் பெட்டி/படங்கள்]

உங்களுக்குத் தெரியுமா?

சராசரியாக, சுமார் பத்து நாட்களுக்கு மட்டுமே சப்ளை செய்வதற்கு போதுமான நீர் உலகெங்குமுள்ள வளிமண்டலத்தில் உள்ளது.

கோடைகால இடிமின் புயல் ஒன்று, இரண்டாம் உலகப் போரில் ஹிரோஷிமாமீது போடப்பட்ட அணுகுண்டைப் போல் ஒரு டஜன் அணுகுண்டுகளுக்கு ஈடான ஆற்றலை வெளிவிடும் சக்தி படைத்தது. ஒவ்வொரு நாளும் உலகெங்கும் சுமார் 45,000 இடிமின் புயல்கள் ஏற்படுகின்றன.

முக்கியமாக வளிமண்டலம் சூரிய உஷ்ணத்தினால் நேரடியாக சூடடைவதில்லை. அதன் பெரும்பாலான உஷ்ண ஆற்றல் வளிமண்டலத்தை நேரடியாக கடந்து செல்கிறது. சூடடைந்த பூமியின் மேற்பரப்பிலிருந்து வளிமண்டலத்திற்கு திரும்பும் ஆற்றலாலேயே இது சூடடைகிறது.

பூமியில் மிகுதியாக உள்ள, ஒரே சமயத்தில், ஒரே இடத்தில் திண்மமாகவும், திரவமாகவும், வாயுவாகவும் மூன்று வெவ்வேறு நிலைகளில் காணப்படும் பொருள் நீர் மட்டுமே.

தரை மட்டத்தில் உருவாகும் மேகமே மூடுபனி ஆகும்.

[பக்கம் 16, 17-ன் படங்கள்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

நீராவி திரவமாகி மேகங்களாக → மேகங்களிலுள்ள ஈரப்பசை மழையாகவும்

உருவாகிறது பனியாகவும் கீழே விழுகிறது

↑ ↓ ↓

சூரிய உஷ்ணத்தால் நீர் மழைத்துளிகளும் பனித்திவலைகளும்

ஆவியாகிறது

பூமியிலுள்ள நீரில் 97 சதவீதம்

கடல்களில் உள்ளது