Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மால்டோவாவின் ஒயின் சுரங்கம்—ஒரு சிறப்புப் பார்வை

மால்டோவாவின் ஒயின் சுரங்கம்—ஒரு சிறப்புப் பார்வை

மால்டோவாவின் ஒயின் சுரங்கம்​—⁠ஒரு சிறப்புப் பார்வை

மால்டோவாவிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

மால்டோவாவின் தலைநகரான கீஷினாவ்வின் புறநகர்ப்பகுதியில் உள்ளது க்ரிகோவா; இங்கு சுமார் 80 மீட்டர் ஆழத்தில் 120 கிலோமீட்டர் நீளத்திற்கு வளைந்து நெளிந்து செல்லும் சிக்கலான சுரங்கப் பாதைகளை மனிதர்கள் அமைத்திருக்கிறார்கள். இருண்ட இந்த நிலத்தடி சுரங்கங்களிலிருந்து ஒருகாலத்தில் சுண்ணாம்புக்கல் வெட்டி எடுக்கப்பட்டது.

எனினும் ஐரோப்பாவில், கடந்த 50 ஆண்டுகளாக குளிர்ச்சியான இந்த நிலத்தடி சுரங்கங்களின் அறைகள், திராட்சையிலிருந்து தயாரிக்கப்படும் மிகச் சிறந்த ஒயின்களை சேமித்து வைப்பதற்கு மிகப் பொருத்தமான இடமாக இருந்து வந்திருக்கின்றன. ஒருகாலத்தில் சுண்ணாம்புக்கல் வெட்டி எடுக்கப்பட்ட சுரங்கத்திலுள்ள பாதைகளில் 60 கிலோமீட்டருக்கும் அதிக தூரத்திற்கு வரிசை வரிசையாக பீப்பாய்களும் பாட்டில்களும் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. 35 கோடி லிட்டர் ஒயினை சேமித்து வைப்பதற்குரிய வசதி இங்கிருப்பதால் இது தென் கிழக்கு ஐரோப்பாவிலேயே மிகப் பெரிய நிலத்தடி ஒயின் கிடங்கு என சொல்லப்படுகிறது.

பண்டைய பாரம்பரியத்தைப் பின்பற்றுதல்

திராட்சையை பயிரிட மால்டோவா உகந்த நாடு. பிரான்ஸில், ஒயின் தயாரிப்பில் புகழ்பெற்று விளங்கும் பர்கண்டி மாநிலம் அமைந்துள்ள அதே அட்சரேகையில் இந்நாடு உள்ளது; அங்குள்ள மிதமான சீதோஷ்ண நிலை அதன் வளமான மண்ணை வெதுவெதுப்பாக்குகிறது. மால்டோவாவில் பொ.ச.மு. 300-⁠ல் ஒயின் தயாரிப்பு ஆரம்பமானது; அந்த சமயத்தில் கிரேக்க வியாபாரிகள் முதன்முதலாக திராட்சை கொடிகளை இங்கு கொண்டு வந்தார்கள். அதற்கு பின்னான நூற்றாண்டுகளில் இந்த நாட்டை காதியர்கள், ஹன்னியர்கள், பல்வேறு நிலப் பண்ணையார்கள் ஆக்கிரமித்த போதிலும் பாரம்பரிய ஒயின் தயாரிப்பு தொடர்ந்து நடைபெற்று வந்தது.

16-⁠ம் 18-⁠ம் நூற்றாண்டுகளுக்கு இடையே ஆட்டாமன் பேரரசு இந்த நாட்டின்மீது ஆதிக்கம் செலுத்தியது; அந்த சமயத்தில் மத காரணங்களை முன்னிட்டு ஒயின் தயாரிப்பை தடுத்தது. எனினும் 19-⁠ம் நூற்றாண்டில் ரஷ்ய மன்னர்களான சார்கள் இந்த நாட்டை தங்களுக்குச் சொந்தமென உரிமை கொண்டாடிய போது ஒயின் தயாரிப்பு தீவிரமடைந்தது. அவர்கள் பிரான்சிலிருந்து பல்வேறு ரக திராட்சைகளை இறக்குமதி செய்தார்கள், அந்தக் கொடிகளும் செழித்து வளர்ந்தன. இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு சோவியத் யூனியன் மால்டோவாவில் புதிதாக ஆட்சி அமைத்தது; அது ஒயின் தொழிற்சாலையை திட்டமிட்டு நவீனமயமாக்கியது. சொல்லப்போனால், சோவியத் யூனியன் முழுவதிலும் இதையே ஒயினையும் திராட்சை பழத்தையும் தயாரிக்கும் தலைநகரமாக்கியது. ஒயினை சேமித்து வைப்பதற்கு கச்சிதமான இடம் இந்த சுரங்கங்கள்தான் என்பதை முதன்முதலில் கண்டுபிடித்தவர்கள் இந்த சோவியத் வாசிகளே. தனிச்சிறப்புமிக்க இந்த நிலத்தடி கிடங்குக்கு செல்லும் பயணத்தில் மானசீகமாக எங்களுடன் சேர்ந்துகொள்ளுங்கள், அதைப் பற்றிய சில இரகசியங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.

நிலத்தடி நகரத்துக்குப் பயணித்தல்

ஒயின் தயாரிக்கும் இடத்திற்குப் பயணிக்கையில் அதன் நுழைவாயில் கோபுரம் நம்மை வரவேற்கிறது; சுண்ணாம்புப் பாறையைக் குடைந்து கட்டப்பட்ட கட்டடத்தின் ஒரு பகுதி அது. அந்தக் கட்டடம் பிரான்சிலுள்ள குடியானவனின் மரக்குடிசையைப் போலிருக்கிறது. எனினும் அதைப் பார்த்தால், ஒரு பெரும் கட்டடம் அதன் அடியில் மறைந்திருப்பதாக யாரும் சொல்லவே முடியாது. மெயின் கேட்டிலிருந்து சற்று தூரத்தில் சுரங்கப் பாதையின் அகன்ற திறப்பைக் காண்கிறோம். அதன் அளவைப் பார்த்து பிரமித்து நிற்கிறோம். அது எதிரும் புதிருமாக இரண்டு டிரக்குகள் தாராளமாக போய் வரும் அளவுக்கு விசாலமாக உள்ளது.

வளைந்து நெளிந்து செல்லும் சிக்கலான இந்த நிலத்தடி புதிர்ப் பாதையில் நாம் காரில் கீழ் நோக்கி செல்கிறோம், ஒருசில நிமிடத்திலேயே நம் டூர் கைடாக வரும் பெண்ணை காரில் ஏற்றிக் கொள்கிறோம். இந்த சிக்கலான பாதையில் எங்கு பார்த்தாலும் திருப்பங்கள்; இதைக் காண்கையில் இந்த கைடு மட்டும் கூடவராவிட்டால் கண்ணைக் கட்டி காட்டில் விட்டதைப் போல் நிச்சயம் திண்டாடியிருப்போம் என்பது நமக்குப் புரிந்துவிடுகிறது.

“முன்பு இங்கிருந்து வெட்டி எடுக்கப்பட்ட சுண்ணாம்புக் கல்லை என்ன செய்தார்கள்?” என நம்மில் ஒருவர் அவரிடம் கேட்கிறோம்.

“கீஷினாவ்வில் கட்டடங்களைக் கட்டுவதற்கு அது பயன்படுத்தப்பட்டது. சுண்ணாம்புக் கல்லுக்கு சிறந்த மின்காப்பு தன்மையும், சத்தத்தைக் கட்டுப்படுத்தும் தன்மையும் இருப்பதால் அது கட்டடம் கட்டுவதற்கு அருமையான பொருள்” என்கிறார் அவர்.

தரைமட்டத்திற்குக் கீழே சுமார் 70 மீட்டர் செல்லுகையில் சுரங்கப் பாதை எங்கும் வெளிச்சம் குறைவாகவே உள்ளது; இதனால் அச்சத்தை ஏற்படுத்தும் ஓரளவு இருண்ட சூழல் நிலவுகிறது. பல்வேறு பாதைகள் பிரிந்து செல்லும் ஒரு மத்திய இடத்தில் நாம் வண்டியை நிறுத்துகிறோம். பல்வேறு திசைகளுக்குச் செல்லும் அப்பாதைகளின் இருபுறமும் வரிசை வரிசையாக நீண்ட தூரத்திற்கு பெரிய பெரிய ஒயின் பீப்பாய்கள் அணிவகுத்து நிற்கின்றன. எந்த வகை ஒயின் வைக்கப்பட்டுள்ளதோ அதன் பெயரே அந்த சாலைக்கு சூட்டப்பட்டிருப்பதை கவனிக்கிறோம். பினோட், ஃபேடேயாஸ்கா, காபேர்நே என்ற ஒருசில பெயர்களைப் பார்த்ததுமே இன்னும் சில பெயர்கள் நினைவுக்கு வருகின்றன.

நுரைத்தெழும்பாத (still) ஒயின்களை வைக்க பெரும்பாலும் ஓக் மர பீப்பாய்கள் பயன்படுத்தப்படுகின்றன என்றும் நுரைத்தெழும்பும் (sparkling) ஒயின்களை வைக்க உலோகத்தாலான சிறிய பீப்பாய்கள் பயன்படுத்தப்படுகின்றன என்றும் நம் கைடு சொல்கிறார். சொற்ப வேலையாட்களே கண்ணில் தட்டுப்பட்டதால் எத்தனை பேர் அங்கு வேலை செய்கிறார்கள் என கேட்கிறோம். “சுமார் 300 பேர் இங்கு வேலை செய்கிறார்கள். இங்கு குளிராக இருப்பதால் வருடம் முழுவதும் அவர்கள் கதகதப்பான ஆடைகளையே அணிகிறார்கள். இந்தக் குளிர், ஒயினைப் பாதுகாக்க தோதாக இருப்பதோடு அவர்களை இளமைப் பொலிவுடன் வைத்துக் கொள்வதற்கும் கைகொடுப்பதாக நம்புகிறார்கள். எனவே அவர்கள் உண்மையில் இந்தக் குளிரைப் பொருட்படுத்துவதே இல்லை” என அவர் சொல்கிறார்.

அடுத்ததாக நுரைத்தெழும்பும் ஒயின் தயாரிப்பை நாம் காணவிருக்கிறோம். நூற்றுக்கணக்கான பாட்டில்கள் 30 டிகிரி சாய்மானத்தில் தலைகீழாக வைக்கப்பட்டிருக்கின்றன. “இந்த சாய்மானத்தில் பாட்டில்களை தலைகீழாக வைக்கையில் மண்டியெல்லாம் கார்க்கில் படிந்துவிடுகிறது. இதற்குப் பிறகு அந்தக் கார்க் அதிவிரைவில் உறைய வைக்கப்படுகிறது. இப்போது கார்க்கை அந்த மண்டியுடன் சேர்த்து எளிதில் அகற்றிவிட்டு, புதிய கார்க்கை பொருத்தலாம்” என நம்மிடம் கைடு சொல்கிறார்.

பின்னர், வின்டேஜ் என்ற உயர் ரக ஒயின் பாட்டில்கள் வைக்கப்பட்டிருந்த பகுதிக்கு வருகிறோம். “பத்து லட்சத்துக்கும் அதிகமான வின்டேஜ் ஒயின் பாட்டில்கள் இங்கு சேமித்து வைக்கப்பட்டுள்ளன. ஒயின் உற்பத்தி செய்யும் கிட்டத்தட்ட எல்லா ஐரோப்பிய நாடுகளும் தங்கள் உயர் ரக ஒயினில் கொஞ்சத்தை எங்கள் பாதாள நிலத்தடி கிடங்கில் சேமித்து வைத்திருக்கின்றன. இங்குள்ள மிகப் பழமையான வின்டேஜ் ஒயின் 1902-⁠ம் ஆண்டில் தயாரிக்கப்பட்டது; அந்த பாட்டிலில் இருப்பது எருசலேமில் யூத பஸ்கா பண்டிகைக்காக தயாரிக்கப்பட்ட ஒயின். சில வருடங்களுக்கு முன்பு ஒருவர் இந்த பாட்டிலுக்காக 1,00,000 டாலரைக் கொடுக்க முன்வந்தார். ஆனாலும் அது மறுக்கப்பட்டது. உண்மையில் அந்த பாட்டில் விலைமதிக்க முடியாததாக கருதப்பட்டது” என நம் கைடு கூறுகிறார்.

இப்பகுதியிலுள்ள ஒயின் பாட்டில்கள், பார்வையாளர்கள் வரும் சில நிமிடம் தவிர எப்போதும் முழுக்க முழுக்க இருட்டில்தான் சேமித்து வைக்கப்படுகின்றன என்று நம்மிடம் அவர் சொல்கிறார். தூசி படிந்த பாட்டில் லேபிள்களின் மீது சட்டென நம் கண்களை ஓடவிடுகையில் பெரும்பாலான ஒயின்களுக்கு எங்களைவிட வயது அதிகம் என்பது நமக்குப் புரிகிறது!

நமது பயணத்தின் இறுதிக்கட்டம் ஒயினை ருசிபார்க்கும் அறைகளைப் பார்வையிடுவது. அவற்றில் மிகப் பெரிய அறைக்கு ப்ரஸிடென்ஷியல் பேன்க்வெட் ஹால் என்று பெயர். ஓக் மரத்தாலான நீண்ட, கனமான டேபிளும் அதற்குப் பொருத்தமான சேர்களும் இருக்கின்றன; 65 பேர் அதில் உட்காரலாம். சோவியத் ஆட்சிக் காலத்தில் இந்த அறை, முறையான அரசு விருந்துகளுக்குப் பயன்படுத்தப்பட்டது. இன்றும்கூட, ஜகஜோதியாக விளக்குகள் மின்ன, பளிச்சென்ற வண்ணத்தில் காட்சியளிக்கும் இந்த அறை அரசு விழாக்களுக்கு பொருத்தமான இடமாக இருக்கிறது.

சாலா காசா மாரே (விருந்தினர் அறை) 15 பேர் உட்காரும் வசதி கொண்டது; அது, மால்டோவா நாட்டவரின் பாரம்பரிய ரசனைக்கேற்ப அழகுபடுத்தப்பட்டுள்ளது. இன்னொரு அறை, பாட்டம் ஆஃப் த சார்மாடிக் சீ பேன்க்வெட் ஹால் ஆகும். அதில் உள்ள வட்டமான மேஜையில் 10 பேர் உட்கார்ந்து ஒயினை ரசித்துப் பருகி, உணவருந்த முடியும். இந்த அறையின் மிக விசேஷ அம்சம் அதன் கூரையாகும். ஆரம்பத்தில் இந்த அறை நீரடி குகையாக இருந்ததால் ஷெல்ஃபிஷ், பிற நீர்வாழ் உயிரிகள் போன்றவை கல்லாகிப்போய் இருப்பதைக் காண முடிகிறது. சொல்லப்போனால், இன்றுள்ள மால்டோவா முழுவதுமே ஒருகாலத்தில் “சார்மாடிக் கடலின் அடியில் இருந்தது” என்பதை டூர் கைடு நமக்கு நினைவுபடுத்துகிறார்.

யூரி ககாரின் பேன்க்வெட் ஹால் உட்பட இந்த எல்லா அறைகளிலுமுள்ள ஃபர்னிச்சர்களும் உள்ளூரில் வளரும் ஓக் மரங்களிலிருந்து தயாரிக்கப்பட்டவை. யூரி ககாரின் என்ற பிரபலமான விண்வெளி வீரர் 1966, அக்டோபர் 8-9 தேதிகளில் கீஷினாவ்வுக்கு விஜயம் செய்தார். அவர் எழுதிய பாராட்டுக் கடிதத்தில் ‘திருப்திப்படுத்தவே முடியாத வல்லுநருக்குக்கூட அவருடைய மனதுக்குப் பிடித்தமான ஒயின் [இங்கு] கிடைத்துவிடும்’ என குறிப்பிட்டிருந்தார்.

“இந்த நிலத்தடி கிடங்கைப் புழங்க ஆரம்பித்த கடந்த 50 ஆண்டுகளில் நூற்றுக்கும் அதிகமான நாடுகளிலிருந்து பார்வையாளர்கள் இங்கு விஜயம் செய்திருக்கிறார்கள். சோவியத் ஆட்சிக் காலத்தில், நுரைத்தெழும்பும் எங்கள் ஒயின்களை சோவியத் ஷாம்பெய்ன் என்ற பெயரிலேயே எல்லாரும் அறிந்திருந்தார்கள். அவை மால்டோவாவிலிருந்து வந்தவை என்பது அநேகருக்கு தெரியாது. இன்று நுரைத்தெழும்பும் எங்கள் ஒயின்களை க்ரிகோவா என்ற பெயரில் விற்பனை செய்கிறோம், எங்களிடம் சிவப்பு, வெள்ளை ரக ஒயின்கள் உள்ளன” என நமது கைடு சொல்கிறார். நம்முடன் பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டதற்காகவும் சிறந்த விதத்தில் நம்மை டூர் அழைத்துச் சென்றதற்காகவும் நாம் கைடுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

சிக்கலான புதிர்ப்பாதைகள் நிறைந்த இந்த நிலத்தடி பகுதியிலிருந்து வெளிவருகையில் ஏதோ வேறொரு உலகிலிருந்து வந்ததைப் போல் தோன்றுகிறது. வெளியே பளிச்சென சூரியன் பிரகாசிப்பதால் உஷ்ணமாக இருக்கிறது. வானில் துளிகூட மேகமில்லை. கீஷினாவ்வுக்குத் திரும்புகையில், வழிநெடுக தொடர்கதைபோல் தொடரும் திராட்சை தோட்டங்களைப் பார்க்கிறோம்; கண்ணும் கருத்துமாய் பராமரிக்கப்படுகிற அத்தோட்டங்களில் கிட்டத்தட்ட அறுவடைக்குத் தயாராக பழங்கள் கொத்துக் கொத்தாய் காய்த்துக் குலுங்குகின்றன. (g04 2/22)

[பக்கம் 25-ன் தேசப்படங்கள்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

உக்ரைன்

மால்டோவா

ருமேனியா

கீஷினாவ்

[பக்கம் 24-ன் படம்]

நுழைவாயில் கோபுரத்துடன் க்ரிகோவா ஒயின் தொழிற்சாலை

[பக்கம் 24-ன் படம்]

நிலத்தடி சுரங்கப் பாதைகளில், 120 கிலோமீட்டர் நீளமுள்ள சிக்கலான புதிர்ப்பாதையிலுள்ள ஒரு சாலையின் பெயர்

[பக்கம் 24-ன் படம்]

நிலத்தடி ஒயின் கிடங்குக்குள் கார் அனுமதிக்கப்படுகிற சுரங்கப் பாதை

[பக்கம் 24-ன் படம்]

பத்து லட்சத்துக்கும் அதிகமான வின்டேஜ் ஒயின் பாட்டில்கள் இங்கே சேமித்து வைக்கப்பட்டுள்ளன