Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மிருகங்கள் கடவுள் தந்த பரிசு

மிருகங்கள் கடவுள் தந்த பரிசு

மிருகங்கள்—கடவுள் தந்த பரிசு

நீங்கள் எப்போதாவது மிருகக்காட்சி சாலைக்கோ சர்க்கஸுக்கோ போயிருக்கிறீர்களா? அங்குள்ள அழகான மிருகங்களில் ஒன்றை​—⁠ஒருவேளை கம்பீரமான ஒரு சிங்கத்தை அல்லது ஒரு இராட்சத சைபீரிய புலியை⁠—⁠மெல்ல தடவிப் பார்ப்பதற்கோ கொஞ்சிக்குலவுவதற்கோ உங்கள் மனம் துடித்ததா? பயிற்சியாளரோ பராமரிப்பாளரோ அந்த மிருகத்தை வருடிக் கொடுப்பதைக் கண்டு நீங்கள் மெய்சிலிர்த்துப் போயிருக்கலாம். சொல்லப்போனால், சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பைபிள் எழுத்தாளர் இவ்வாறு சொன்னார்: “காட்டில் வாழ்வன, பறப்பன, ஊர்வன, கடலில் வாழ்வன ஆகிய எல்லா உயிரினங்களையும் மனிதர் அடக்கி விடலாம்; அடக்கியும் உள்ளனர்.”​—யாக்கோபு 3:7, பொது மொழிபெயர்ப்பு.

எந்த மிருகமாக இருந்தாலும் சரி, அவற்றை அன்போடும் அக்கறையோடும் பராமரித்து நடத்தும்போது அவை மனிதரோடு நன்றாக உறவாடுகின்றன, பழகுகின்றன, சேர்ந்துகொள்கின்றன. குளிப்பாட்டி, உணவூட்டி எப்போதும் அவற்றை கண்ணும் கருத்துமாக கவனித்து பழக்குவிக்கிற ஒருவருடன் அவை கொஞ்சிக் குலவுவதைப் பார்ப்பது உண்மையிலேயே ஆனந்தம் தருகிறது. யானை, சிங்கம், புலி, கழுகு, முதலை, பாம்பு, ஏன் மீனைக் கூட மனிதன் பழக்கப்படுத்தியதைப் பற்றி ரோம எழுத்தாளர் பிளைனி எழுதினார்; பைபிள் எழுத்தாளரான யாக்கோபு எழுதிய கிட்டத்தட்ட அதே காலக்கட்டத்தில்தான் இவர் எழுதினார்.

மிருகங்களை செல்லப்பிராணிகளாக பழக்குவிப்பது நேற்று இன்று அல்ல, சொல்லப்போனால் பல காலங்களுக்கு முன்பே ஆரம்பமானது. யாக்கோபும் பிளைனியும் எழுதுவதற்கு வெகு காலத்திற்கு முன்பே எகிப்தியர்கள் காட்டு மிருகங்களை பழக்குவித்து செல்லப்பிராணிகளாக வளர்த்தார்கள். இன்றும் சில நாடுகளில், மிருகக்காட்சி சாலையில் இருக்கிற அநேக மிருகங்களை வீடுகளில்கூட நீங்கள் பார்க்கலாம்.

பூர்வ காலத்தில் மனிதருடன் உறவு

மிருகங்களுக்கு முதல் மனிதனாகிய ஆதாம் பெயரிட்டதாக மனித சரித்திரத்தைப் பற்றிய மிகப் பழமையான புத்தகமாகிய பைபிள் அறிவிக்கிறது. “அந்தந்த ஜீவஜந்துக்கு ஆதாம் எந்தெந்தப் பேரிட்டானோ அதுவே அதற்குப் பேராயிற்று. அப்படியே ஆதாம் சகலவித நாட்டு மிருகங்களுக்கும், ஆகாயத்துப் பறவைகளுக்கும், சகலவிதக் காட்டு மிருகங்களுக்கும் பேரிட்டான்” என பைபிள் கூறுகிறது. (ஆதியாகமம் 2:19, 20) ஒவ்வொரு மிருகத்திற்கும் பொருத்தமான பெயரை சூட்டுவதற்கு அதனுடன் ஆதாம் நெருக்கமாக பழகியிருக்க வேண்டும் என தெரிகிறது. அதே சமயத்தில் காட்டு மிருகங்களிடமிருந்துகூட அவனுக்கு எந்த பாதுகாப்பும் தேவைப்படவில்லை. ஏனென்றால் எல்லா மிருகங்களும் ஆதாமுடன் சமாதானமாக இருந்தன; அவற்றோடு பழகியது அவனுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருந்திருக்கும்!

மிருகங்களைப் பராமரிக்கும் பொறுப்பை ஆதாமிடமும் அவனுடைய மனைவி ஏவாளிடமும் கடவுள் ஒப்படைத்தார். பைபிளில் குறிப்பிட்டிருப்பது போல், ‘சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின் மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் மனிதர் ஆள வேண்டும்’ என்பது கடவுளுடைய நோக்கமாக இருந்தது.​—ஆதியாகமம் 1:26.

நெருக்கமான உறவு தொடர்கிறது

மிருகங்களை மனிதர் சரியான விதத்தில் ஆளும்போது அது மனநிறைவை அளிக்கும். மிகவும் பாசத்துடன் வளர்க்கப்படும் ஒரு மிருகம், ஆத்ம நண்பனாக, ஏன் குடும்ப அங்கத்தினனாகக்கூட கருதப்படலாம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே மிருகங்கள் அப்படித்தான் கருதப்பட்டன என்பது பைபிளிலுள்ள ஒரு விவரப்பதிவிலிருந்து தெரியவருகிறது; ஒரு ஏழை மனிதன் ‘ஒரே ஒரு பெண் ஆட்டுக்குட்டியை’ வளர்த்து வந்தான். அந்த ஆட்டுக்குட்டி ‘அவன் வாயின் அப்பத்தைத் தின்று, அவன் பாத்திரத்திலே குடித்து, அவன் மடியிலே படுத்துக்கொண்டு, அவனுக்கு ஒரு மகளைப் போல இருந்தது’ என்று தாவீது ராஜாவிடம் நாத்தான் தீர்க்கதரிசி சொன்னார்.​—2 சாமுவேல் 12:1-3.

ஒரு மிருகம் எவ்வாறு அன்புத் தோழனாக, குடும்பத்தின் ஓர் அங்கமாக ஆக முடியும் என்பதை இன்று அநேகர் அறிந்திருக்கலாம். உதாரணமாக, ஜிம்பாப்வேயின் தலைநகரான ஹராரேவுக்கு அருகே ஒரு குடும்பம் வசித்து வந்தது. அந்தப் பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளுக்கு ஒரு துணையாக இருப்பதற்கு ஆளுக்கொரு நாய்க்குட்டியை வாங்கிக் கொடுத்தனர். அப்போது சுமார் எட்டு வயதாக இருந்த மகன் தன் நாயோடு நடந்து போகையில், மாம்பா என்ற ஒரு பெரிய விஷப் பாம்பு திடீரென்று மரத்திலிருந்து அவனுக்கு நேர் முன்னால் பொத்தென்று விழுந்தது. அந்தப் பாம்பு அவனை தாக்குவதற்குள் இந்த நாய் மின்னல் வேகத்தில் பாய்ந்து அவன் உயிரைக் காப்பாற்றியது. அக்குடும்பத்திற்கு அந்த நாய் எப்பேர்ப்பட்ட பொக்கிஷமாக இருந்திருக்கும் என்பதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?

முக்கியமாக, காது கேளாதோர் தங்களுக்கு உதவியாக இருக்கும்படி பயிற்றுவிக்கப்பட்ட நாய்களை பொக்கிஷமாக கருதுகிறார்கள். ஒரு பெண் இவ்வாறு கூறுகிறார்: “காலிங்பெல் சத்தம் கேட்டதும் ட்விங்க்கி என்னிடம் வந்து என் காலை சீண்டி வாசலுக்கு அழைத்துச் செல்கிறாள். அது போலத்தான் ஓவனிலிருந்து வரும் சத்தத்தைக் கேட்டதும் என்னிடம் ஓடிவந்து என்னை கூட்டிக்கொண்டு செல்கிறாள். புகை அல்லது நெருப்பின் அலார சத்தம் கேட்டால் முதலில் என்னுடைய கவனத்தை ஈர்த்து, பிறகு படுத்துக்கொள்வதற்கு பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறாள்; அதைப் பார்த்ததும், ஏதோ ஆபத்து என்பது எனக்கு புரிந்துவிடும்.”

அதைவிட குறிப்பிடத்தக்க ஒன்றுதான் பார்வையற்றோருக்கும் அவர்களுடைய ‘கைடு’ நாய்களுக்கும் இடையே உள்ள விசேஷித்த உறவு. வழிகாட்டும் கண்கள் (ஆங்கிலம்) என்ற புத்தகத்தின் நூலாசிரியரும் ‘கைடு’ நாய்களுக்கு பயிற்சி அளிப்பவருமான மைக்கேல் டக்கரின் கருத்துப்படி, பார்வையற்றோர் ஓர் இடத்தில் கட்டிப் போட்டது போல் இல்லாமல், “விடுதலையையும் சுதந்தரத்தையும் அனுபவிக்க” ஒரு ‘கைடு’ நாய் உதவுகிறது; அதோடு “வெளியில் போய்வர தைரியத்தையும் சிறந்த தோழமையையும் அளிக்கிறது.” இவ்வாறு அவர்களுக்கு ஒரு புது வாழ்வை அது ஏற்படுத்திக் கொடுக்கிறது. உண்மையிலேயே, இத்தகைய நாய்களுக்கும் அவற்றின் எஜமான்களுக்கும் இடையிலான உறவை காண்பது எத்தனை இனிமையானது!

வேறு விதமான உடல் ஊனங்களை உடையோரும் தோழமைக்காக நாய்களை வைத்திருப்பதால் இதேபோன்ற பயன்களைப் பெறுகிறார்கள். சக்கர நாற்காலியே தஞ்சமென இருக்கிற ஒரு பெண்மணி வைத்திருக்கிற நாய், ஃபோனை எடுப்பதற்கும் கடிதங்களில் ஸ்டாம்புகளை ஒட்டுவதற்கும் பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது! மற்றொரு நாயோ 120 வித்தியாசமான கட்டளைகளுக்கு கீழ்ப்படிகிறது, சூப்பர் மார்க்கெட்டின் ஷெல்ஃபுகளிலிருந்து கேன்களையும் பாக்கெட்டுகளையும் தன் ஊனமுற்ற எஜமானிடம் எடுத்துக் கொடுக்கிறது. அவர் தனக்கு வேண்டிய பொருட்களை அடையாளங்காட்ட அவற்றின் மீது லேசர் ஒளியை அடிக்கும் போது அந்த நாய் அவற்றை எடுத்து வந்து அவரிடம் கொடுக்கிறது.

செல்லப்பிராணிகள், முதியோருக்கும் நன்மை பயக்கின்றன. “பெரும்பாலும் சமுதாயத்தை விட்டு ஒதுக்கப்பட்டது போல் உணரும் முதியவர்களின் வாழ்க்கைக்கு” நாய்கள் போன்ற செல்லப்பிராணிகள் “நோக்கத்தையும் அர்த்தத்தையும் கொடுத்து ஆதரிக்கின்றன” என ஒரு கால்நடை மருத்துவர் சொன்னார். த டோரன்டோ ஸ்டார் இவ்வாறு அறிவித்தது: “சிநேகமாக பழகும் மிருகங்களால் டென்ஷன் குறைகிறது, அடிக்கடி டாக்டரை சந்திக்கும் தேவை குறைகிறது, மாரடைப்பே வந்தாலும் உயிர் பிழைக்கும் வாய்ப்பும் அதிகமாக இருக்கிறது.”

த நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா ஆர்வத்திற்குரிய இந்தக் குறிப்பை தெரிவிக்கிறது: “செல்லப்பிராணிகளை வளர்ப்பதானது, எந்தளவுக்கு பொறுப்போடு நடந்துகொள்கிறோமோ அந்தளவுக்கு பலன் கிடைக்கும் என்பதை பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க உதவுகிறது; அதோடு செக்ஸை பற்றி ஓரளவு கற்றுக் கொடுக்கவும் வாய்ப்பளிக்கிறது. இணை சேருவது, அதற்கு பிறகு கருவுற்றிருக்கும் காலப்பகுதி, குட்டி போடுவதிலும் குட்டிகளை கவனிப்பதிலும் உட்பட்டுள்ள பிரச்சினைகள் ஆகிய அனைத்தையும் பிள்ளைகள் கவனிக்கிறார்கள்.”

செல்லப்பிராணிகளிடம் காட்டும் பற்று

மிருகங்களுக்கு அபாரமான நன்றி விசுவாசம் இருப்பதால்தான் சிலர் தங்கள் குடும்பத்தாரைவிட செல்லப்பிராணிகள் மீதே அதிக அன்பையும் பாசத்தையும் கொட்டுகிறார்கள். விவாகரத்து வழக்குகளில் சொத்து தகராறுகளுக்கு தீர்ப்பு வழங்கும்போது, சில சமயம் அவர்களுடைய செல்லப்பிராணியை யார் கவனிப்பது என்றும் தீர்ப்பு வழங்கப்படுகிறது. மக்கள் உயில் எழுதும்போது தங்களுடைய சொத்துக்களை அனுபவிக்கும் பயனாளிகளின் வரிசையில், தங்கள் செல்லப்பிராணிகளின் பெயரையும் சேர்த்திருக்கிறார்கள்; அதுவும் எக்கச்சக்கமான சொத்துக்களை அவற்றின் பெயரில் எழுதுகிறார்கள்.

இன்று செல்லப்பிராணிகள் லாபம் தரும் வியாபார உலகில் முக்கிய இடம்பிடித்து விட்டதில் ஆச்சரியமல்ல! வளர்ப்பு பிராணிகள் சம்பந்தமான எல்லா விஷயங்களுக்கும் ஆலோசனை வழங்கும் புத்தகங்களும் பத்திரிகைகளும் சந்தையில் குவிந்துள்ளன. சிலர் தங்களுடைய செல்லப்பிராணிகளுக்கு பணத்தை வாரியிறைக்க தயாராக இருப்பதை வர்த்தக உலகம் அறிந்திருக்கிறது; ஆகவே அவர்களுக்கு தேவையான அத்தனையையும் அளிக்கிறது.

உதாரணமாக, வளர்ப்புப் பிராணிகளை பாதிக்கும் எல்லா விதமான நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கிற நன்கு தேர்ச்சி பெற்ற டாக்டர்கள் இருக்கிறார்கள். வளர்ப்பு பிராணியின் சோர்வை குறைப்பதற்கு மருந்து கொடுக்கும் மன நோய் டாக்டர்களும் இருக்கிறார்கள். அது மட்டுமா, வளர்ப்பு பிராணிகளுக்கான வழக்கறிஞர்கள், இன்ஷ்யூரன்ஸ் ஏஜென்ட்டுகள் இருக்கிறார்கள்; அவற்றை சுத்தம் செய்வதற்கான சேவைகளும், அவற்றிற்கு பயிற்சி கொடுக்கும் நிறுவனங்களும் உள்ளன. செல்லப்பிராணிகளுக்கு ஈமச் சடங்குகளும் நடத்தப்படுகின்றன. பிராணிகளை குளோனிங் செய்து கொடுப்பதற்கும் பலர் முன்வருகிறார்கள்​—⁠எல்லாம் ஏகப்பட்ட காசுக்காகத்தான்!

செல்லப்பிராணிப் பிரியர்கள் உலகம் முழுக்க இருக்கிறார்கள். தி அனிமல் அட்ராக்‍ஷன் என்ற புத்தகத்தில் டாக்டர் ஜானகா நியூபி இவ்வாறு எழுதுகிறார்: “நம்முடைய நாய், அந்த நாளில் நடந்த எல்லா காரியங்களையும்விட நாம் வீட்டிற்கு வந்ததுதான் பெரிய காரியம் என்பது போல் நம்மிடம் ஓடி வந்து, வாலை ஆட்டிக் கொண்டு நம்மை நக்குகிறது. இதை ‘அன்பு’ என்று சொல்வதே சரியானது.” அதனால்தான் செல்லப்பிராணிகளை வைத்திருப்பவர்கள் அதே ‘அன்பை’ அவற்றின் மீது காட்ட தூண்டப்படுகிறார்கள்.

இருந்தாலும், வளர்ப்பு பிராணிகளை மனிதர்போல் நடத்துவதில் தீய விளைவுகளும் ஏற்படலாம். எதுவானாலும், நம் தேவைகளை மற்ற மனிதர்கள் நிறைவு செய்யும் விதத்தில் வளர்ப்பு பிராணிகளால் நிறைவு செய்ய முடியாது. அதுமட்டுமல்ல, பிராணிகளை நகர்ப்புற வாழ்விற்கு ஏற்ப வளர்ப்பதால் சில பிராணிகளுக்கும் அவற்றின் எஜமான்களுக்கும் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அடுத்த கட்டுரையில் அவற்றை ஆராயலாம். (g04 2/22)

[பக்கம் 3-ன் படம்]

காட்டு மிருகங்களை பழக்குவிப்பது பல காலங்களுக்கு முன்பே ஆரம்பமானது

[படத்திற்கான நன்றி]

A detail from The Great King of the Parthians Hunts With His Tame Panthers by Giovanni Stradanno: © Stapleton Collection/CORBIS

[பக்கம் 4-ன் படம்]

இஸ்ரவேல் மேய்ப்பர்கள் ஆட்டுக்குட்டிகளை மென்மையாக நடத்தினார்கள்

[பக்கம் 5-ன் படங்கள்]

ஊனமுற்றோருக்கும் முதியோருக்கும் செல்லப்பிராணிகள் உதவலாம்