Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாண வேடிக்கைகளின் கண்கவர் காட்சி

வாண வேடிக்கைகளின் கண்கவர் காட்சி

வாண வேடிக்கைகளின் கண்கவர் காட்சி

திருவிழாவாக இருந்தாலும் சரி, ஒலிம்பிக் விளையாட்டாக இருந்தாலும் சரி, வாண வேடிக்கைகள் வர்ணஜாலம் புரியாமல் இருக்காது. ஐக்கிய மாகாணங்களில் சுதந்திர தினத்தன்றும், பிரான்சு நாட்டில் கொண்டாடப்படும் பாஸ்டில் தினத்தன்றும், புத்தாண்டு பிறக்கும் இரவில் உலகின் கிட்டத்தட்ட எல்லா முக்கிய நகரங்களிலும் பட்டாசுகள் விண்ணில் வெடித்துச் சிதறுவதையும் வானில் ஒளிப்பிரவாகமே நிகழ்வதையும் பார்க்கலாம்.

அப்படியானால், மனிதன் எப்போதிலிருந்து வாண வேடிக்கைகள் மீது மோகங்கொள்ள ஆரம்பித்தான்? விழிகளுக்குப் பரவசமூட்டும் இக்காட்சிகளை உருவாக்குவதில் மனிதன் என்னென்ன நுட்பங்களை பயன்படுத்தி இருக்கிறான்?

ஒரு கிழக்கத்திய பாரம்பரியம்

ஏறக்குறைய பொது சகாப்தம் பத்தாம் நூற்றாண்டில் சீனர்களே முதன் முதலில் பட்டாசுகளை கண்டுபிடித்தார்கள் என்பதை பெரும்பாலான சரித்திர வல்லுநர்கள் ஒத்துக் கொள்கிறார்கள்; எப்படியெனில் கந்தகத்தையும் கரியையும் வெடியுப்புடன் (பொட்டாஷியம் நைட்ரேட்) சேர்க்கையில் ஒரு வெடிபொருள் உருவாவதை கிழக்கத்திய வேதியியலாளர்கள் கண்டுபிடித்தார்கள். எளிதில் வெடிக்கும் தன்மையுடைய இந்த மூலப் பொருளை ஐரோப்பாவில் அறிமுகப்படுத்துவதற்கு மார்க்கோ போலோவைப் போன்ற மேற்கத்திய ஆய்வுப் பயணிகள் அல்லது ஒருவேளை அரேபிய வணிகர்கள் காரணமாக இருந்திருக்கலாம். ஆகவே, 14-⁠ம் நூற்றாண்டிற்குள் ஐரோப்பிய மக்கள் வாண வேடிக்கைகள் மீது மோகங்கொள்ள ஆரம்பித்தனர்.

ஆனால் இந்தக் கலவைத் தூள் மக்களின் மனங்களைக் கவர்ந்ததோடு ஐரோப்பிய சரித்திரத்தையே மாற்றிவிட்டது. வெடிமருந்து என பிற்பாடு அழைக்கப்பட்ட இந்தக் கலவைத் தூளை, காரீயத்தாலான துப்பாக்கிக் குண்டுகளை செலுத்துவதற்கும், கோட்டைச் சுவர்களை தகர்ப்பதற்கும், அரசியல் சக்திகளை அழிப்பதற்கும் இராணுவத்தினர் பயன்படுத்தினர். “ஐரோப்பிய இடைக்காலத்தின்போது இந்த இராணுவ வெடிமருந்துகளின் உபயோகம் மேற்கத்திய நாடுகளுக்கு பரவியதோடு பட்டாசுகளின் உபயோகமும் பரவியது. அதுமட்டுமல்ல, ஐரோப்பாவில் இராணுவ வெடிமருந்து வல்லுநர் இந்த வெடிமருந்தை பயன்படுத்தி வெற்றி மற்றும் சமாதான கொண்டாட்டங்களை நடத்த வேண்டியிருந்தது” என என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா குறிப்பிடுகிறது.

ஆனால் சீனர்களோ, அழிக்கும் சக்தி படைத்த வெடிமருந்துக்கு அந்தளவு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றே தெரிகிறது. 16-⁠ம் நூற்றாண்டில், சீனாவில் சேவை செய்து வந்த மாட்டியோ ரிட்சி என்ற இத்தாலிய ஜெஸ்யூட் மிஷனரி இவ்வாறு எழுதினார்: “துப்பாக்கி, பீரங்கி ஆகியவற்றை பயன்படுத்துவதில் சீனர்கள் திறமைசாலிகள் அல்ல, ஆகவே அவற்றை போரில் வெகு சொற்பமே பயன்படுத்துகிறார்கள். என்றாலும், விளையாட்டுப் போட்டிகளின் போதும் திருவிழாக்களின் போதும் கண்களுக்கு விருந்தளிக்கும் பட்டாசுகளை தயாரிப்பதற்காக வெடியுப்பை இஷ்டம்போல் பயன்படுத்துகிறார்கள். இந்தக் கண்கவர் காட்சிகளில் சீனர்களுக்கு கொள்ளை ஆசை. . . . வாண வெடிகளை தயாரிப்பதில் அவர்களுடைய திறமை உண்மையில் அபாரமானது.”

கண்கவர் காட்சியின் இரகசியம்

ஆரம்ப காலத்தில், விதவிதமான வர்ண ஜாலங்களை உருவாக்க பட்டாசுகளை தயாரித்தவர்களுக்கு திறமையும் தைரியமும் தேவைப்பட்டது என்பதில் சந்தேகமில்லை. வெடிமருந்து பெரிய துகள்களாய் இருந்தால் மெதுவாக பற்றியெரிவதையும், பொடி போன்று மென் துகள்களாய் இருந்தால் வெடியோசையோடு எரிவதையும் அவர்கள் கண்டறிந்தார்கள். மூங்கிலின் அல்லது காகித குழலின் ஒரு முனையை அடைத்து அதன் கீழ்பாகத்தில் பெரிய துகள்களாலான வெடிமருந்தை நிரப்பி ராக்கெட்டுகளை தயாரித்தார்கள். வெடிமருந்தில் தீப்பற்ற வைத்தபோது, வேகமாக விரிவடையும் வாயுக்கள் அந்தக் குழலின் திறந்த முனையிலிருந்து வெளிவருவதால் அந்த ராக்கெட்டை ஆகாயத்தில் செலுத்தியது. (விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் விண்ணில் ராக்கெட்டுகளை செலுத்துவதற்கு இன்றும் இந்த அடிப்படை விதியையே பயன்படுத்துகிறார்கள்.) அந்த ராக்கெட்டின் மேல்முனையில் மென் துகள்களாலான வெடிமருந்து நிரப்பப்பட்டிருக்கும்; ஆகவே உயரே தன் பாதையின் உச்சக்கட்டத்தை அது நெருங்கும்போது, எல்லாம் சரியாக இருந்தால், அந்த ராக்கெட் வெடிக்கும்.

காலங்கள் பல கடந்து சென்றாலும் பட்டாசுகளை தயாரிக்கும் தொழில் நுட்பத்தில் அதிக மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை. என்றாலும் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கீழை நாட்டவர்கள் வெண்ணிற அல்லது பொன்னிற காட்சிகளை உருவாக்குவது எப்படி என்பதை மட்டுமே முதன்முதலில் அறிந்திருந்தார்கள். இத்தாலியர்கள் அவற்றில் வர்ணங்களை சேர்த்தார்கள். 19-⁠ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், வெடிமருந்தில் பொட்டாசியம் குளோரேட்டை அவர்கள் சேர்த்தபோது, உலோகங்களை வாயுக்களாக மாற்றும் அளவுக்கு இந்தக் கலவை நன்கு பற்றியெரிந்து சூடாவதையும் அந்த நெருப்பில் பலவித வண்ண சாயல்கள் உருவாவதையும் கண்டுபிடித்தார்கள். இந்த உத்தியைப் பயன்படுத்தி, இன்று சிகப்பு நிற ஒளியை தருவதற்கு ஸ்ட்ரான்ஷியம் கார்பனேட் சேர்க்கப்படுகிறது. பிரகாசமான வெண்ணிற ஒளியை உருவாக்க டைட்டானியம், அலுமினியம், மெக்னீசியம் ஆகியவை சேர்க்கப்படுகின்றன. ஊதா நிற ஒளியைப் பெறுவதற்கு தாமிர சேர்மங்களும், பச்சை நிற ஒளியைப் பெறுவதற்கு பேரியம் நைட்ரேட்டுகளும், மஞ்சள் நிற ஒளியைப் பெறுவதற்கு சோடியம் ஆக்ஸலேட் சேர்ந்த கலவைகளும் பயன்படுத்தப்படுகின்றன.

வாண வேடிக்கைகளின் கண்கவர் புதுவித தோற்றங்களுக்கு கம்ப்யூட்டர்கள் பங்களித்திருக்கின்றன. பட்டாசுகளை கையினால் பற்ற வைப்பதற்கு பதிலாக, மின்சாரத்தினால் அவை தானாகவே தக்க சமயத்தில் வெடிக்குமாறு தொழில்நுட்ப வல்லுநர்கள் கம்ப்யூட்டர்களில் துல்லியமாக புரோக்ராம் செய்து வைக்க முடியும். அதன் மூலம் இசையின் சந்தநயத்திற்கு ஏற்ப அவற்றை வெடிக்க செய்ய முடியும்.

மதத் தொடர்பு

சீனர்களின் திருவிழாக்களில் வாண வேடிக்கைகள் முக்கிய பாகம் வகித்ததாக ஜெஸ்யூட் மிஷனரியான ரிட்சி குறிப்பிட்டார். “புத்தாண்டின் போதும் பிற சமயச் சடங்குகளின் போதும் பேய்களை விரட்டுவதற்கு முதன் முதலில் [பட்டாசுகளை] சீனர்கள் கண்டுபிடித்ததாக” பாப்புலர் மெக்கானிக்ஸ் என்ற பத்திரிகை கூறுகிறது. அனைத்து மதத்தவருடைய பண்டிகை நாட்களும் பழக்கவழக்கங்களும் என்ற தனது ஆங்கில நூலில் ஹவர்டு வி. ஹார்ப்பர் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “தொன்றுதொட்டே, விசேஷித்த சமயச் சடங்குகளின்போது புறமதத்தவர் தங்களுடைய கைகளில் விளக்குகளை கொண்டு சென்றிருக்கின்றனர், சொக்கப்பனையையும் எரித்திருக்கின்றனர். ஆக, தானாகவே வர்ண ஜாலங்கள் படைக்கும் வாண வேடிக்கைகள் பண்டிகைகளின் அம்சமாக ஆனதில் வியப்பே இல்லை.”

பெயர்க் கிறிஸ்தவர்களும் வாண வேடிக்கைகளை பயன்படுத்த ஆரம்பித்தவுடன் பட்டாசு தயாரிப்பாளர்கள் தங்களுக்கென ஒரு புனிதரை வைத்துக்கொண்டார்கள். த கொலம்பியா என்ஸைக்ளோப்பீடியா இவ்வாறு குறிப்பிடுகிறது: “[செயின்ட் பார்பரா] ஒரு கிறிஸ்தவ பெண்ணாக மாறியதால் அவளுடைய தந்தை அவளை ஒரு கோபுரத்தில் அடைத்து வைத்து பிற்பாடு கொன்றுவிட்டதாக சொல்லப்படுகிறது. அதனால் அவளுடைய தந்தையை மின்னல் பழிவாங்கியதாம். இவ்வாறு அவருடைய சாவுக்கு நெருப்பு காரணமாக இருந்ததால், படைக்கலங்களையும் பட்டாசுகளையும் தயாரிப்போருக்கும் பயன்படுத்துவோருக்கும் செயின்ட் பார்பரா புனிதரானாராம்.”

செலவழிக்க தயங்குவதில்லை

திருவிழாக்களுக்கானாலும் சரி தேசிய கொண்டாட்டங்களுக்கானாலும் சரி, பெரிய பெரிய பட்டாசுகளை, அதிலும் உயர்தர பட்டாசுகளை வெடிப்பதில் மக்களுக்கு தீராத ஆசை இருப்பதுபோல் தெரிகிறது. 16-⁠ம் நூற்றாண்டில் நடத்தப்பட்ட ஒரு சீன வாண வேடிக்கையைப் பற்றி ரிட்சி இவ்வாறு எழுதினார்: “நான்கிங் என்ற நகரில் இருந்தபோது வருடப் பிறப்பை கொண்டாடுவதற்காக பட்டாசுகள் கொளுத்தப்பட்டதை நான் பார்த்தேன்; அது அந்த நகர் மக்களின் முக்கியமான பண்டிகையாக இருந்தது. அந்த சமயத்தில் அவர்கள் எவ்வளவு வெடிமருந்தை பயன்படுத்தியிருப்பார்களென கணக்கிட்டுப் பார்த்தேன்; ஒரு பெரிய போரை பல வருடங்கள் நடத்துவதற்கு போதுமான வெடிமருந்தை பயன்படுத்தியிருந்தார்கள்.” வாண வேடிக்கைகளுக்காக செலவிட்ட பணத்தைப் பற்றி அவர் இவ்வாறு சொல்கிறார்: “பட்டாசுகளுக்காக காசை கரியாக்குவதைப் பற்றி கொஞ்சம்கூட அவர்கள் கவலைப்படுவதாக தெரியவில்லை.”

இந்த விஷயத்தில் இடைப்பட்ட காலத்தில் அப்படியொன்றும் பெரிய மாற்றம் ஏற்படவில்லை. 2000-⁠ம் ஆண்டில் சிட்னி ஹார்பர் பிரிட்ஜில் நடத்தப்பட்ட ஒரு விழாவின்போது அங்கு கூடிவந்திருந்த பத்து லட்சத்துக்கும் அதிகமானோரை மகிழ்விப்பதற்காக 20 டன் பட்டாசுகள் கொளுத்தப்பட்டன. அதே ஆண்டில் ஐக்கிய மாகாணங்களில், 7 கோடி கிலோ பட்டாசுகளுக்காக 62.5 கோடி டாலர் செலவிடப்பட்டது. வாண வேடிக்கைகள் எல்லாவித கலாச்சாரத்தினரையுமே கவர்ந்து வருகிறது என்பதில் துளியும் சந்தேகமில்லை. ஆகவே, “பட்டாசுகளுக்காக காசை கரியாக்குவதைப் பற்றி கொஞ்சம்கூட அவர்கள் கவலைப்படுவதாக தெரியவில்லை” என்றே இன்றும் சொல்லலாம். (g04 2/8)