Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

விசுவாசப் பரீட்சை

விசுவாசப் பரீட்சை

விசுவாசப் பரீட்சை

பிரிட்டனிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

ரிச்மாண்ட் என்பது இங்கிலாந்தின், வட யார்க்‍ஷயரிலுள்ள எழில் கொஞ்சும் நகரம். 1066-⁠ல் நடந்த நார்மன் படையெடுப்புக்குப் பிறகு கட்டப்பட்ட இதன் கோட்டையிலிருந்து பார்க்கையில் யார்க்‍ஷயர் டேல்ஸ் நேஷனல் பார்க்குக்கு செல்லும் ஸ்வேல் நதிப் பள்ளத்தாக்கு கண்களுக்கு விருந்தளிக்கிறது.

த ரிச்மாண்ட் சிக்ஸ்டீன் என்ற டிவி டாக்குமென்டரி ஒன்று இந்த கோட்டையின் நவீன கால சரித்திரத்தின் முக்கிய அம்சத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது; முதல் உலகப் போரின் சமயத்தில் மனசாட்சியின் நிமித்தம் இராணுவத்தில் சேர மறுத்ததற்காக சிறை தண்டனை அனுபவித்த 16 பேருக்கு ஏற்பட்ட கதியை அது வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது. அவர்களுக்கு என்ன நேர்ந்தது?

இராணுவத்தில் கட்டாய ஆள் சேர்ப்பு

1914-⁠ல் பிரிட்டன் போர் பிரகடனம் செய்யப்பட்ட உடனே தேச பக்தி காரணமாக சுமார் 25 லட்சம் ஆண்கள் அதன் ஆயுதப் படைகளில் சேர்ந்துகொண்டார்கள். எனினும், போரில் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது, அதோடு அரசியல்வாதிகள் வாக்குறுதி கொடுத்ததுபோல் போர் அவ்வளவு சீக்கிரத்தில் முடிவடையாது என்பதை மக்கள் புரிந்துகொண்டார்கள்; எனவே, “வேண்டுகோளின் பேரிலல்ல, பெரும்பாலும் கட்டாயத்தின் பேரிலேயே இராணுவத்தில் ஆட்கள் சேர்க்கப்பட்டார்கள்” என்கிறார் போர் வரலாற்றாசிரியராகிய ஆலன் லாய்ட். ஆகவே பிரிட்டிஷ் சரித்திரத்திலேயே முதன்முறையாக மார்ச் 1916-⁠ல் மணமாகாத ஆண்கள் கட்டாயத்தின் பேரில் ஆயுதப் படைகளில் சேர்க்கப்பட்டார்கள்.

மேல் முறையீடுகளை விசாரிப்பதற்கென்றே இரண்டாயிரம் விசேஷ நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன; ஆனால் மனசாட்சியின் நிமித்தம் இராணுவத்தில் சேர மறுத்தவர்களில் வெகு சிலருக்கே முற்றிலும் விலக்களிக்கப்பட்டது. அவர்களில் பெரும்பாலோர், போரில் நேரடியாக ஈடுபடாமலேயே அதை ஆதரிக்கும் படைப்பிரிவுகளில் பணியாற்றும்படி கட்டளையிடப்பட்டார்கள். அவ்வாறு பணியாற்ற மறுத்தவர்கள், கட்டாயமாக இராணுவத்தில் சேர்க்கப்பட்டவர்களாகவே கருதப்பட்டு இராணுவ நீதிமன்றத்திற்கு முன் நிறுத்தப்பட்டார்கள். பிறகு படுகேவலமாக நடத்தப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டார்கள்; அதுவும் படுமோசமான, நெரிசலான சிறைகளிலேயே பெரும்பாலும் அடைக்கப்பட்டார்கள்.

ரிச்மாண்ட்டிலிருந்த பதினாறு பேர்

அந்தப் பதினாறு பேரில் ஐந்து பேர் சர்வதேச பைபிள் மாணாக்கர்கள் ஆவர்; முன்பு யெகோவாவின் சாட்சிகளுடைய பெயர் அதுதான். 1905-⁠ல், தனது 15-வது வயதில் பைபிள் மாணாக்கராக ஆன ஹர்பர்ட் சீனியர் என்பவர் சுமார் 50 ஆண்டுகள் கழித்து இவ்வாறு எழுதினார்: “கிட்டத்தட்ட நிலவறை போல் இருட்டாக இருந்த சிறைக்கூடங்களில் எங்களை போட்டார்கள். [ஐந்திலிருந்து ஏழு சென்டிமீட்டருக்கு] புழுதி படிந்திருந்ததால் வருஷக்கணக்காக அவை உபயோகிக்கப்படாமல் இருந்திருக்க வேண்டுமென்றே சொல்லலாம்.” சிறையின் வெள்ளையடிக்கப்பட்ட சுவர்களில் கைதிகள் வரைந்தும் எழுதியும் வைத்திருந்த ஸ்லோகன்கள் இப்போது மங்கலாகவும் சில இடங்களில் தெளிவற்றும் காணப்படுகின்றன; அவற்றை மக்கள் பார்வையிடுவதற்கு சமீபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவற்றில் பெயர்கள், செய்திகள், நேசத்திற்கும் பாசத்திற்கும் உரியவர்களின் வரைபடங்கள் ஆகியவற்றுடன் விசுவாசத்தை வெளிக்காட்டும் வாசகங்களும் காணப்படுகின்றன.

ஒரு கைதி இப்படியாக எழுதியிருந்தார்: “கொள்கைகள் எதுவும் இல்லாமல் சாவதைவிட என் கொள்கைகளுக்காக சாவதையே நான் விரும்புகிறேன்.” இயேசு கிறிஸ்துவையும் அவரது போதனைகளையும் பற்றிய அநேக குறிப்புகளும் காணப்படுகின்றன; அதோடுகூட அன்றைய நாட்களில் சர்வதேச பைபிள் மாணாக்கர்கள் அமைப்பு (IBSA) பயன்படுத்திய சிலுவையும் கிரீடமுமுள்ள சின்னத்தின் படங்களும் கவனமாக வரையப்பட்டிருக்கின்றன. த டிவைன் ப்ளான் ஆஃப் தி ஏஜஸ் என்ற புத்தகத்தில் காணப்படும் ‘காலங்களின் விளக்கப்படத்தை’ தனது சிறையின் சுவற்றில் வரைந்து வைத்திருந்ததாக ஹர்பர்ட் சீனியர் குறிப்பிட்டார்; ஆனால் அது இப்போது காணப்படவில்லை. பிரதான சிறைக்கூடத்தில் இருந்த அல்லது வேறெந்தச் சுவர்களிலாவது இருந்த மற்ற எழுத்துக்களைப் போலவே அதுவும் மங்கி மறைந்திருக்கலாம். மற்றொரு வாசகம் இவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது: ‘கிளாரன்ஸ் ஹால், லீட்ஸ், I.B.S.A. மே 29, 1916. பிரான்சுக்கு அனுப்பப்பட்டார்.’

பிரான்சுக்கு அனுப்பப்படுவதும் திரும்பி வருவதும்!

பிரான்சிலும் பெல்ஜியத்திலும் போரில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது. பிரிட்டிஷ் போர்த் தளபதி ஹரேஷோ ஹர்பர்ட் கிச்சனருக்கும் பிரிட்டிஷ் படைத்தலைவர் டக்லஸ் ஹேக்குக்கும், மணமானவர்கள் உட்பட அதிகமதிகமான படைவீரர்கள் உடனடியாக தேவைப்பட்டார்கள்; ஆகவே மணமான ஆண்களும் மே 1916 முதல் இராணுவத்தில் கட்டாயமாக சேர்க்கப்பட்டார்கள். மனசாட்சியின் நிமித்தம் இராணுவத்தில் சேர மறுப்பவர்களை தண்டிப்பதன் மூலம் மக்கள் மனதில் பீதியைக் கிளப்ப அதிகாரிகள் தீர்மானித்தார்கள். எனவே அந்தப் பதினாறு பேரும் துப்பாக்கி முனையில் சட்டவிரோதமாக ரயிலில் ஏற்றப்பட்டார்கள்; அவர்களுடைய கைகளுக்கு விலங்கிடப்பட்டிருந்தது, சுற்று வழியில் அவர்கள் இரகசியமாக பிரான்சுக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். ஹெரிட்டேஜ் பத்திரிகை சொல்கிறபடி, பூலோன் என்ற கடற்கரையில் “இவர்கள் கிட்டத்தட்ட சிலுவையில் அறையப்பட்டது போல், குத்துமுள் கம்பியால் மரத்துடன் சேர்த்து கட்டப்பட்டிருந்தார்கள்”; அத்துடன், தப்பியோடிய ஒரு பிரிட்டிஷ் வீரனை அவர்கள் கண்களுக்கு முன்பாகவே சுட்டுக் கொன்றார்கள். ஆணைகளுக்கு அவர்கள் அடிபணிய மறுத்தால் அவர்களுக்கும் அதே கதிதான் என அவர்களிடம் சொன்னார்கள்.

1916, ஜூன் மாத மத்திபத்தில், மரண தண்டனைத் தீர்ப்பு வழங்கப்படுவதற்காக இந்தப் பதினாறு பேரும் 3,000 படை வீரர்களுக்கு முன்பாக அணிவகுத்து அழைத்துச் செல்லப்பட்டார்கள்; ஆனால் இதற்குள்ளாக கிச்சனர் இறந்துவிட்டார், பிரிட்டிஷ் பிரதம மந்திரி இந்தத் தீர்ப்பில் குறுக்கிட்டார். லண்டனிலுள்ள அதிகாரிகள் அனைவருக்கும் சங்கேத மொழியில் போஸ்ட் கார்ட் மூலம் செய்தி அனுப்பப்பட்டது, அந்த இராணுவ ஆணை தள்ளுபடியானது. மரண தண்டனைத் தீர்ப்புகளை எல்லாம் பத்து வருட சிறை தண்டனை தீர்ப்புகளாக மாற்றும்படி தளபதி ஹேக்குக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

பதினாறு பேரும் பிரிட்டனுக்குத் திரும்பிய பிறகு அவர்களில் சிலர் ஸ்காட்லாந்திலுள்ள கருங்கல் சுரங்கங்களில் அருவருக்கத்தக்க சூழ்நிலைகளில் “தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வேலையை” செய்வதற்கு கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வ செய்தி ஒன்று தெரிவிக்கிறது. ஹர்பர்ட் சீனியர் உட்பட மற்றவர்கள் இராணுவ சிறைக்கு அல்ல ஆனால் பொது சிறைக்கு அனுப்பப்பட்டார்கள்.

விட்டுச் சென்ற சொத்து

ரிச்மாண்ட் கோட்டை தற்போது இங்லிஷ் ஹெரிட்டேஜ் என்ற அமைப்பினுடைய பராமரிப்பின் கீழுள்ளது; அருங்காட்சியகமாக திகழும் இந்த ரிச்மாண்ட் கோட்டையிலுள்ள சிறைச் சுவர்கள் மோசமான நிலையில் இருப்பதால் சிறைக்கூடங்களையும் அதிலுள்ள ஸ்லோகன்களையும் சேதப்படுத்தாமல் பார்வையாளர்கள் அவற்றை நன்கு ஆராய்வதற்கு வசதியாக நிஜம் போல் உணர வைக்கும் கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் (virtual-reality touch screen) பயன்படுத்தப்படுகிறது. இதைக் காண மாணவர்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள்; மனசாட்சியின் நிமித்தம் இராணுவத்தில் சேர மறுத்தவர்கள் தண்டனை அனுபவிக்கவும், சிறையில் அடைக்கப்படவும், தாங்கள் உண்மையோடு விசுவாசித்த கொள்கைகளுக்காக ஒருவேளை சாவதற்கும்கூட ஏன் தயாராக இருந்தார்கள் என்பதைப் புரிந்துகொள்ளும்படி அம்மாணவர்கள் உற்சாகப்படுத்தப்படுகிறார்கள்.

இந்தப் பதினாறு பேரும், “மனசாட்சியின் நிமித்தம் இராணுவத்தில் சேர மறுக்கும் விவாதத்தை பொது மக்களின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்கள், அதற்காக அங்கீகாரத்தையும் மரியாதையையும் பெற்றுக்கொள்ள ஆரம்பித்தார்கள்.” இது, இரண்டாம் உலகப் போரின்போது மனசாட்சியின் நிமித்தம் இராணுவத்தில் சேர மறுப்பவர்களாக தங்கள் பெயர்களைப் பதிவு செய்தவர்களை நன்கு புரிந்துகொண்டு நடத்த அதிகாரிகளுக்கு உதவியது.

2002-⁠ல் கோட்டையிலிருந்த அழகான ஒரு தோட்டம் அந்தப் பதினாறு பேருக்காக அர்ப்பணிக்கப்பட்டது; இது அவர்களது தார்மீக கொள்கைகளுக்காக செலுத்தப்பட்ட அஞ்சலி. (g04 2/22)

[பக்கம் 12, 13-ன் படங்கள்]

இடமிருந்து வலம்: தடுப்புக்காவல் பகுதியிலுள்ள சிறைக்கூடங்களுடன் 12-⁠ம் நூற்றாண்டைச் சேர்ந்த ரிச்மாண்ட் கோட்டை கோபுரம்

ஹர்பர்ட் சீனியர், அந்தப் பதினாறு பேரில் ஒருவர்

அந்தப் பதினாறு பேர் வைக்கப்பட்டிருந்த சிறைக்கூடங்களில் ஒன்று

பின்னணியிலுள்ள பார்டர்: பல வருடங்களாக சிறைச் சுவரில் எழுதப்பட்ட எழுத்துக்களின் சில பகுதிகள்