Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அணு ஆயுதப் போர் அச்சுறுத்துகிறவர்கள் யார்?

அணு ஆயுதப் போர் அச்சுறுத்துகிறவர்கள் யார்?

அணு ஆயுதப்—போர் அச்சுறுத்துகிறவர்கள் யார்?

“அணு ஆயுதப் பேரழிவு நிகழப்போவது நிஜம். பனிப்போர் முடிவுற்று பத்தாண்டுகளுக்கு மேல் கடந்துவிட்டிருந்தாலும் அணு ஆயுதப் போரின் அச்சுறுத்தல் இன்னும் இருக்கிறது.”​—⁠ஐ.மா.-வின் முன்னாள் இராணுவ செயலர் ராபர்ட் எஸ். மக்நமாரா மற்றும் ஜேம்ஸ் ஜி. ப்ளைட், சர்வதேச ஆய்வுகளுக்கான வாட்சன் நிறுவனத்தின் பன்னாட்டு உறவுகள் பேராசிரியர்.

புல்லட்டின் ஆஃப் தி அட்டாமிக் சயின்டிஸ்ட்ஸ் என்ற பத்திரிகையின் அட்டையில் “அழிவுநாள் கடிகாரம்” ஒன்றின் படம் இருக்கிறது; இந்த உலகம் அணு ஆயுதப் போருக்கு (நள்ளிரவுக்கு) எவ்வளவு அருகில் இருக்கிறது என்பதை அந்தக் கடிகார முள் அடையாளமாக காட்டுகிறது. 1991-⁠ல் பனிப்போர் முடிவுற்றதும் “அழிவுநாள் கடிகாரத்தின்” முள் “நள்ளிரவு” நேரத்திலிருந்து 17 நிமிடங்கள் பின்னுக்குத் தள்ளி வைக்கப்பட்டது. 1947-⁠ல் அக்கடிகாரம் அறிமுகப்படுத்தப்பட்டது முதற்கொண்டு, 1991-⁠ல்தான் அதன் முள் நள்ளிரவிலிருந்து அந்தளவுக்கு தள்ளி வைக்கப்பட்டது. என்றாலும், அந்த ஆண்டிலிருந்து அந்த முள் மறுபடியும் முன்நோக்கி நகர ஆரம்பித்திருக்கிறது. உதாரணமாக, பிப்ரவரி 2002-⁠ல் அக்கடிகாரத்தின் முள் நள்ளிரவை எட்ட ஏழு நிமிடங்களே இருக்குமளவுக்கு முன்னோக்கி நகர்த்தப்பட்டது. பனிப்போர் முடிவுற்ற பிறகு இந்த முள் இவ்வாறு முன்னோக்கி நகர்த்தப்பட்டிருப்பது மூன்றாவது முறையாகும்.

அந்த அறிவியல் பத்திரிகையை பிரசுரிப்போர் கடிகாரத்தின் முள்ளை ஏன் முன்னோக்கி நகர்த்த நினைத்தார்கள்? ஆணு ஆயுதப் போரின் அச்சுறுத்தல் இன்னும் இருப்பதாக அவர்கள் ஏன் உணருகிறார்கள்? அமைதிக்கு அச்சுறுத்தலாக இருப்பது யார்?

“ஆயுதக் குறைப்பின்” இரகசியம்

“31,000-⁠க்கும் அதிகமான அணு ஆயுதங்கள் உலக நாடுகளின் கையிருப்பில் இன்னமும் இருக்கிறது” என புல்லட்டின் ஆஃப் தி அட்டாமிக் சயின்டிஸ்ட்ஸ் கூறுகிறது. “இவற்றில் தொண்ணூற்று ஐந்து சதவீதம் அமெரிக்காவிலும் ரஷ்யாவிலும் உள்ளன; இவற்றில் 16,000-⁠க்கும் அதிகமான ஆயுதங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன” என்றும் அது கூறுகிறது. ஆனால், இவ்வளவு அதிக அணு ஆயுதங்கள் இன்னும் கையிருப்பில் உள்ளது சிலருக்கு விசித்திரமாக தோன்றலாம். இந்த இரு மாபெரும் அணு ஆயுத வல்லரசுகளும் ஏற்கெனவே தங்களுடைய அணு ஆயுதங்களை 6,000-⁠ஆக குறைத்துள்ளதாக அல்லவா அறிவித்திருந்தார்கள்?

பின்வரும் விஷயங்கள் “ஆயுதக் குறைப்பின்” இரகசியத்தை அம்பலப்படுத்துகின்றன. சர்வதேச சமாதானத்துக்கான கார்னெகி அறக்கட்டளை நிறுவனத்தின் ஓர் அறிக்கை இவ்வாறு கூறுகிறது: “6,000 போர் ஆயுதங்கள் என்ற எண்ணிக்கை, ஸ்டார்ட் [Strategic Arms Reduction Talks] ஒப்பந்தத்தின் குறிப்பிட்ட கணக்கு விதிகளின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது. அதுபோக, அருகிலுள்ள இடங்களைத் தாக்குவதற்கு பயன்படுத்தப்படும் (tactical) ஆயுதங்களையும் சேமிப்பு (reserve) ஆயுதங்களையும் இரு நாடுகளுமே ஆயிரக்கணக்கில் வைத்துக்கொள்ளும்.” (நேரெழுத்துக்கள் எங்களுடையவை) புல்லட்டின் ஆஃப் தி அட்டாமிக் சயின்டிஸ்ட்ஸ் குறிப்பிடுகிறபடி, “தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள அமெரிக்க ஆயுதங்களில் பெரும்பாலானவை, பிரித்து அப்புறப்படுத்தப்படுவதற்கு பதிலாக (ஏற்கெனவே சேமிப்பில் வைக்கப்பட்டுள்ள சுமார் 5,000 போராயுதங்களோடு சேர்த்து) சேமிப்புக் கிடங்கில் வைக்கப்படும்.”

ஆகவே சேமிப்பில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள அணு ஆயுதங்களோடுகூட, அதாவது ஒரு கண்டத்திலிருந்து மறு கண்டத்திற்கு சென்று முக்கிய மையங்களைத் தாக்கவல்ல ஆயிரக்கணக்கான அணு ஆயுதங்களோடுகூட இன்னும் ஆயிரக்கணக்கான போராயுதங்களும் இருக்கின்றன; அருகிலுள்ள இடங்களை தாக்கக்கூடிய மற்ற அணு ஆயுதங்களும் உள்ளன. அப்படியானால், இந்த முழு உலகையும் பலமுறை அழிக்கும் சக்தி படைத்த ஏராளமான அணு ஆயுதங்களை இந்த இரு மாபெரும் அணு ஆயுத வல்லரசுகளும் ஆயுதக் கிடங்குகளில் வைத்திருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. அபாயத்தை விளைவிக்கும் பெரும் எண்ணிக்கையான இந்த ஆயுதங்களை வைத்திருப்பதில் மற்றொரு அச்சுறுத்தலும் உள்ளது, அதாவது அணு ஆயுத ஏவுகணைகளை தவறுதலாக செலுத்திவிடும் அபாயம் உள்ளது.

தவறுதலாக நடக்கும் அணு ஆயுதப் போர்

ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட ராபர்ட் எஸ். மக்நமாராவும் ஜேம்ஸ் ஜி. ப்ளைட்டும் சொன்னபடி, “‘தாக்குதல் எச்சரிப்பு கிடைத்தவுடன் செலுத்தும்’ விதத்தில் அமெரிக்க அணு ஆயுதங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன.” இது எதைக் குறிக்கிறது? “ரஷ்ய ஏவுகணைகள் பறந்துவரும் அதே சமயத்தில் நமது ஏவுகணைகளும் செலுத்தப்படுவதற்கு தயாரான நிலையில் வைக்கப்பட்டுள்ளன” என்றும் “நமது பாலிஸியின்படி, ரஷ்யரின் தாக்குதலைப் பற்றிய முதல் எச்சரிப்பு கிடைத்து 15 நிமிடங்களுக்குள் நமது ஏவுகணைகளை செலுத்திவிடலாம்” என்றும் அவர்கள் கூறுகிறார்கள். அணு ஆயுத ஏவுகணையை செலுத்தும் அமெரிக்க முன்னாள் அதிகாரி ஒருவர் சொல்கிறபடி, “தரையில் இருக்கும் எல்லா ஏவுகணைகளும் இரண்டே நிமிடத்தில் செலுத்துமளவுக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.”

இவ்வாறு ஏவுகணைகள் எந்நேரத்திலும் தயாராக இருப்பதால், தவறுதலாக கிடைக்கும் எச்சரிப்பால் தெரியாத்தனமாக அவற்றை செலுத்திவிடும் அபாயம் உள்ளது. “அமெரிக்க அணு ஆயுத பயிற்சிகளின்போது ஏவுகணைகளை செலுத்தும்படி பல சந்தர்ப்பங்களில் தவறுதலாக கட்டளைகள் அனுப்பப்பட்டிருக்கின்றன” என யு.எஸ். நியூஸ் & உவர்ல்ட் ரிப்போர்ட் என்ற பத்திரிகையில் வெளிவந்த ஒரு கட்டுரை கூறுகிறது. ரஷ்யாவிலும்கூட இப்படிப்பட்ட தவறான எச்சரிப்புகள் கிடைத்திருக்கின்றன. 1955-⁠ல் நார்வே நாட்டின் ஆய்வு-ராக்கெட் தவறுதலான எச்சரிப்பை கொடுத்ததும் ரஷ்ய அதிபர் ஏவுகணைகளை செலுத்துவதற்கான வேலையை ஆரம்பித்துவிட்டார்.

இப்படி அணு ஆயுதங்களை அந்தளவுக்கு தயார் நிலையில் வைத்திருப்பதால் தீர்மானங்களை எடுக்க வேண்டியவர்களுக்குத்தான் பெரும் சிக்கல். நல்ல வேளையாக முன்பெல்லாம் படைத்தலைவர்கள் தவறான எச்சரிப்புகளை இனம் கண்டிருக்கிறார்கள், இதனால் அணு ஆயுதப் போர் ஏற்படாமல் தடுக்க முடிந்தது. 1979-⁠ல் நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றி ஓர் ஆய்வாளர் இவ்வாறு விளக்கினார்: “அமெரிக்க ஏவுகணைகள் [செலுத்தப்படுவதை] தடுத்தது எதுவென்றால், முன்கூட்டியே எச்சரிக்கும் எங்களது செயற்கைக் கோள்களே; சோவியத்தின் ஏவுகணைகள் எதுவும் வானில் இல்லை என்பதை அந்த செயற்கைக் கோள்கள் காட்டின.” ஆனால் இப்போதெல்லாம், முன்கூட்டியே எச்சரிக்கும் செயற்கை கோள் முறையும் மோசமடைந்து வருகிறது. “முன்கூட்டியே எச்சரிக்கும் ரஷ்ய செயற்கைக் கோள்கள் பெரும்பாலானவை செயலிழந்துவிட்டதை அல்லது அவற்றிற்குரிய சுற்றுப்பாதையிலிருந்து விலகி சென்றுவிட்டதைக்” குறித்து ஆய்வாளர்களும் வல்லுநர்களும் கவலை தெரிவிக்கிறார்கள். ஆகவே, அமெரிக்க படையின் ஓய்வு பெற்ற துணைத் தலைவர் பல வருடங்களுக்கு முன்பு சொன்னபடி, “எதிராளி தாக்குவதற்கு முன்பே தாக்குவதற்கான வாய்ப்பு, அல்லது தவறாக புரிந்துகொண்டதாலோ, தகுதியற்றவருக்கு அதிகாரமளித்ததாலோ, தவறுதலாகவோ ஏவுகணையை செலுத்துவதற்கான வாய்ப்பு கடந்த காலத்தில் இருந்ததைப் போலவே இன்றும் மிக அதிகம்.”

அணு ஆயுதக் கிளப்பின் புதிய அங்கத்தினர்கள்

மிகப் பெரிய ஆயுதக் கிடங்குகளை வைத்திருக்கிற இரு மாபெரும் அணு ஆயுத வல்லரசுகளைத் தவிர, சீனா, பிரான்சு, கிரேட் பிரிட்டன் போன்ற மற்ற அணு ஆயுத வல்லரசுகளும் உள்ளன. இந்த அனைத்து வல்லரசுகளும் மொத்தமாக அணு ஆயுத கிளப் என அழைக்கப்படுகின்றன; இவை சமீபத்தில் இந்தியாவையும் பாகிஸ்தானையும் புதிய அங்கத்தினர்களாக தங்களுடன் சேர்த்துக் கொண்டன. இந்த நாடுகளைத் தவிர, இஸ்ரேல் உட்பட இன்னும் பல நாடுகள் அணு ஆயுதங்களை நாடுகிற அல்லது ஒருவேளை ஏற்கெனவே வைத்திருக்கிற நாடுகள் என பெரும்பாலும் விவரிக்கப்படுகின்றன.

அணு ஆயுதக் கிளப்பின் அங்கத்தினர் மத்தியில்​—⁠புதிய அங்கத்தினர் மத்தியில்கூட​—⁠அரசியல் சச்சரவு ஏற்பட்டால் அது அணு ஆயுத போரைத் தூண்டிவிடலாம். “கியூபா ஏவுகணை பிரச்சினைக்கு பிறகு இரு நாடுகள் அணு ஆயுதப் போரின் விளிம்பிற்கே சென்றதற்கு எடுத்துக்காட்டு . . . இந்தியா, பாகிஸ்தான் பிரச்சினையாகும்” என புல்லட்டின் ஆஃப் தி அட்டாமிக் சயின்டிஸ்ட்ஸ் கூறுகிறது. 2002-⁠ம் ஆண்டின் ஆரம்பத்தில் அந்தப் பிரச்சினை படுதீவிரமடைந்ததால் அணு ஆயுத தாக்குதல் நிஜமாகிவிடும் என்ற பயம் அநேகரை கவ்வியது.

அது தவிர, ஒட்டுமொத்த அழிவை ஏற்படுத்தும் இன்னும் பல ஆயுதங்களின் கண்டுபிடிப்பால், அணு குண்டுகளை பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகமாகியுள்ளன. அமெரிக்க இராணுவத்தின் இரகசிய அறிக்கையைப் பற்றி பேசுகையில், “எதிரிகள் சேமித்து வைத்திருக்கும் உயிரியல் மற்றும் ரசாயன ஆயுதங்களையும், ஒட்டுமொத்த அழிவை ஏற்படுத்தும் பிற ஆயுதங்களையும் அழித்துவிடுவதற்கு ஒருவேளை அணு ஆயுதங்களை பயன்படுத்துவது” அமெரிக்க அணு ஆயுத பாலிஸியின் பாகமாக ஆகிவிடலாம் என த நியூ யார்க் டைம்ஸ் குறிப்பிட்டது.

அமெரிக்காவில் செப்டம்பர் 11, 2001-⁠ல் நடந்த தீவிரவாத தாக்குதல் மற்றொரு அணு ஆயுத அச்சுறுத்தலை உலகிற்கு உணர்த்தியது. தீவிரவாத அமைப்புகள் அணு ஆயுதங்களை உருவாக்க முயன்று கொண்டிருப்பதாக​—⁠ஒருவேளை ஏற்கெனவே வைத்திருப்பதாக​—⁠இன்று அநேகர் நம்புகிறார்கள். அது எப்படி சாத்தியம்?

தீவிரவாதிகளும் “கழிவு ஆயுதங்களும்”

கள்ளச் சந்தையில் விற்கப்படும் பொருட்களை பயன்படுத்தி அணு குண்டை தயாரிப்பது சாத்தியமா? சாத்தியமே என டைம் பத்திரிகை குறிப்பிடுகிறது. அணு ஆயுத தீவிரவாதத்தை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட குழுவைப் பற்றி இந்தப் பத்திரிகை அறிவித்தது. இக்குழு இதுவரையில் “சாதாரண எலக்ட்ரானிக் ஸ்டோரில் கிடைக்கும் பொருட்களையும் கள்ளச் சந்தையில் விற்கப்படும் அணு எரிபொருளையும் பயன்படுத்தி ஒரு டஜனுக்கும் அதிகமான குண்டுகளை எளிதில் உருவாக்கியுள்ளது.”

அணு ஆயுதங்களை குறைப்பதும் அவற்றின் பாகங்களை பிரித்தெடுத்துவிடுவதும் அணு ஆயுத திருட்டு அதிகமாவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளன. “பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ள ஏவுகணைகள், போர் விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆகியவற்றிலிருந்து ரஷ்யரின் ஆயிரக்கணக்கான அணு ஆயுதங்களை அகற்றி, அவற்றை பாதுகாப்பற்ற சேமிப்பிடங்களில் வைப்பது வெறிபிடித்த தீவிரவாதிகளுக்கு ‘தீனி’ போடுவதாக இருக்கும்” என டைம் பத்திரிகை கூறுகிறது. பிரித்துப் போடப்பட்ட அணு ஆயுதத்தின் பாகங்கள் ஒரு சிறு குழுவினரின் கையில் கிடைத்தால் போதும், அவர்கள் அதை திரும்பவும் ஒன்று சேர்த்து ஒரு ஆயுதமாக உருவாக்கி விடலாம்; சீக்கிரத்தில் அணு ஆயுத கிளப்பின் அங்கத்தினராகவும் ஆகிவிடலாம்!

அணு குண்டை உருவாக்கித்தான் அணு ஆயுத கிளப்பில் சேர வேண்டுமென்ற அவசியமில்லை என பீஸ் பத்திரிகை வலியுறுத்துகிறது. அணு குண்டு தயாரிப்புக்கு அவசியமான யுரேனியத்தை அல்லது புளூடோனியத்தை தேவையான அளவில் வைத்திருந்தாலே போதும். “ஆயுதங்களுக்கு பயன்படுத்தக்கூடிய யுரேனியத்தை வைத்திருக்கும் தீவிரவாதிகள், அதில் ஒரு பாதியை எடுத்து மீதி பாதியளவு யுரேனியத்தின்மீது வெறுமனே போட்டாலே போதும், எளிதில் வெடிக்கச் செய்ய முடியும்” என அந்தப் பத்திரிகை குறிப்பிடுகிறது. அப்படியானால் அத்தகைய அணு மூலப்பொருள் எந்தளவு தேவைப்படுகிறது? அந்தப் பத்திரிகை குறிப்பிடுகிறபடி, “மூன்று கிலோ [ஏழு பவுண்டுகள்] போதுமானதாக இருக்கும்.” ஆயுதங்களுக்கு பயன்படுத்தக்கூடிய இதேயளவு அணு மூலப்பொருள்தான் 1994-⁠ல் செக் குடியரசிலிருந்த கடத்தல்காரர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது!

அணுக் கழிவுகள் மற்றொரு வகையான அணு ஆயுதமாக உருவெடுக்கலாம். “கதிரியக்க கழிவுப்பொருளையும் சாதாரண வெடிமருந்துகளையும் ஒன்றுசேர்ப்பது உயிருக்கே உலைவைக்கும் ஒரு கலவையாகும்; இது வல்லுனர்களுக்கு மிகவும் கவலைதரும் விஷயம்” என தி அமெரிக்கன் ஸ்பெக்டேட்டர் கூறுகிறது. இவ்வகையான ஆயுதங்களும், கதிரியக்கத்தை பரப்பும் கருவிகளுமே கழிவு ஆயுதங்கள் அல்லது கழிவு குண்டுகள் என அழைக்கப்படுகின்றன. இவை எந்தளவுக்கு ஆபத்தானவை? கழிவு குண்டுகள் “வெடித்துச் சிதறி வெப்பத்தை உண்டாக்குவதன் மூலம் அழிவை ஏற்படுத்துவதற்கு பதிலாக செறிவுமிக்க கதிரியக்க பொருட்களை பரப்பி நச்சூட்டுவதன் மூலம் அழிவை ஏற்படுத்துகின்றன; இதற்கு வீரியமிக்க சாதாரண வெடிமருந்துகளை பயன்படுத்துகின்றன” என ஐஎச்டி ஆஸாகி ஷிம்புன் கூறுகிறது. “இதனால் மக்களுக்கு கதிரியக்க நோய் முதல் மெதுமெதுவான வேதனைமிக்க சாவு வரையான பாதிப்புகள் ஏற்படலாம்” என்றும் அது கூறுகிறது. எளிதில் கிடைக்கும் அணுக் கழிவை பயன்படுத்துவதால் அந்தளவுக்கு பெரிய ஆபத்து ஒன்றும் ஏற்படாது என சிலர் சொன்னாலும், கள்ளச் சந்தையில் வீரியமிக்க அணு ஆயுதப் பொருட்கள் இருப்பது அநேகருக்கு கவலையளிக்கிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஓர் உலகளாவிய சுற்றாய்வின்படி, “அடுத்த பத்து ஆண்டுகளில் அணு ஆயுத தீவிரவாதம் வெடிக்கலாம் என 60 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் நினைக்கிறார்கள்.”

அணு ஆயுத அச்சுறுத்தல் உலகை இன்னும் ஆட்டிப்படைத்துக் கொண்டுதான் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. பிரிட்டனின் ஜனவரி 16-22, 2003 தேதியிட்ட கார்டியன் வீக்லி இவ்வாறு குறிப்பிட்டது: “பனிப் போரின் இருண்ட நாட்களுக்குப் பிறகு இப்போது அணு ஆயுதங்களை அமெரிக்கா மீண்டும் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. . . . ஒரு சிறிய காரணம் கிடைத்தாலே போதும், அணு ஆயுதப் போரை துவங்க அமெரிக்கா தயாராக உள்ளது.” ஆகவே, இவ்வாறு கேட்பது நியாயமானதே: அணு ஆயுதப் போரை தடுக்க முடியுமா? அணு ஆயுத அச்சுறுத்தல் இல்லாத உலகம் வருமா? பதில் அடுத்த கட்டுரையில். (g04 3/8)

[பக்கம் 6-ன் பெட்டி]

இரண்டாம் அணு ஆயுத சகாப்தமா?

தேசங்கள் இரண்டாம் அணு ஆயுத சகாப்தத்திற்குள் அடியெடுத்து வைத்துவிட்டதாக பத்திரிகை எழுத்தாளர் பில் கெல்லர் த நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகையில் கருத்து தெரிவித்தார். (இப்போது அவர் அந்தப் பத்திரிகையின் எக்ஸிகியூட்டிவ் எடிட்டராக இருக்கிறார்.) முதல் சகாப்தமானது, ஜனவரி 1994 வரை, அதாவது முன்னாள் சோவியத் யூனியனிடமிருந்து பெற்றுக்கொண்ட ஆயுதங்களை உக்ரைன் திருப்பிக் கொடுத்துவிடுவதற்கு ஒப்புக்கொண்ட சமயம் வரை நீடித்தது. அவர் ஏன் இரண்டாம் அணு ஆயுத சகாப்தத்தைப் பற்றி பேசினார்?

கெல்லர் இவ்வாறு எழுதுகிறார்: “இந்தியாவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்துத்துவ தேசிய அரசாங்கம் 1998-⁠ல் ராஜஸ்தான் பாலைவனத்தில் ஐந்து வெடிகுண்டு சோதனைகளை நடத்தியபோது அந்த இரண்டாம் அணு ஆயுத சகாப்தத்தின் அறிவிப்பு முழங்கியது. இரண்டு வாரங்களுக்குப் பிறகு பாகிஸ்தானும் அதேபோல் சோதனைகளை நடத்தியது.” இந்த சோதனைகள் முந்தின அணு ஆயுத சகாப்தத்தில் நடத்தப்பட்ட சோதனைகளிலிருந்து எப்படி வித்தியாசப்பட்டிருக்கின்றன? “இவை ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தை மனதில் வைத்து தயாரிக்கப்பட்ட அணு ஆயுதங்கள்.”

ஆகவே, அணு ஆயுத கிளப்புடன் இன்னும் இரண்டு அங்கத்தினர்கள் சேர்ந்திருக்கும் நிலையில் இந்த உலகம் எப்படி பாதுகாப்பாக உணர முடியும்? கெல்லர் தொடர்ந்து சொல்வதாவது: “ஒரு நாடு அணு ஆயுதங்களை புதிதாக பெற்றுக்கொள்ள ஆரம்பிக்கையில் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் மற்றொரு நாட்டுடன் போரிடுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.”​—⁠“த திங்க்கபிள்,” த நியூ யார்க் டைம்ஸ் மாகஸின், மே 4, 2003, பக்கம் 50.

“ஆறு புதிய அணு குண்டுகளை உண்டாக்குவதற்கு போதுமான புளூடோனியத்தை” வட கொரியா வைத்திருக்கலாம் என்ற செய்தி நிலைமையை இன்னும் சிக்கலாக்குகிறது. “புதிய அணு ஆயுதங்களை உண்டாக்குவதில் வட கொரியா வெற்றிபெற்று, அதன் வெற்றியை நிரூபித்துக் காட்ட ஒருவேளை அவற்றில் ஒன்றை வெடிக்கச் செய்து சோதனையும் நடத்தலாம் என்ற பயம் தினம் தினம் அதிகரிக்கிறது.”​—⁠த நியூ யார்க் டைம்ஸ், ஜூலை 18, 2003.

[பக்கம் 7-ன் படம்]

ஓர் அரசாங்க அதிகாரி “சூட்கேஸ்” போன்ற ஒரு அணு குண்டின் மாதிரியைக் காட்டுகிறார்

[படத்திற்கான நன்றி]

AP Photo/Dennis Cook

[பக்கம் 7-ன் படம்]

முன்கூட்டியே எச்சரிக்கும் பழைய செயற்கைக் கோள்கள் செயலிழந்து வருகின்றன

[படத்திற்கான நன்றி]

NASA photo

[பக்கம் 5-ன் படத்திற்கான நன்றி]

பூமி: NASA photo