அணு ஆயுதப் போர்—இன்னும் அச்சுறுத்துகிறதா?
அணு ஆயுதப் போர்—இன்னும் அச்சுறுத்துகிறதா?
ஜப்பானிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்
“சிந்திக்கும் எந்தவொரு மனிதனும் அணு ஆயுதப் போரைக் குறித்து அஞ்சுகிறான், என்றாலும் தொழில்நுட்பத்தில் வளர்ச்சியுற்ற ஒவ்வொரு நாடும் அதற்காக திட்டமிடுகிறது. அது முட்டாள்தனம் என்பதை எல்லாரும் அறிந்திருந்தாலும், அணு ஆயுதங்களைத் தயாரிப்பதற்கு எல்லா நாடும் ஏதாவதொரு சாக்குப்போக்கு வைத்திருக்கிறது.”—கார்ல் சேகான், வான் ஆராய்ச்சியாளர்.
1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 6-ம் தேதி, அமெரிக்க போர்விமானம் ஜப்பானிலுள்ள ஹிரோஷிமாவில் அணுகுண்டு போட்டது; சடுதியில் கணக்குவழக்கில்லாத அளவுக்கு மனித உயிர்களைக் காவுகொண்டு, பெரும் நாசத்தை விளைவித்தது. இதுவே போரில் முதன்முதலாக பயன்படுத்தப்பட்ட அணுகுண்டு. இந்த குண்டு வெடிப்பினால், 3,43,000 வாசிகள் இருந்த இந்நகரத்தில் 13 சதுர கிலோமீட்டர் பரப்பளவு அடியோடு அழிந்துவிட்டது. நகரத்திலிருந்த மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமான கட்டடங்கள் கற்கூளங்களாயின. குறைந்தபட்சம் 70,000 பேர் மாண்டனர், 69,000 பேர் காயமுற்றனர். மூன்று நாட்களுக்குப்பின் இரண்டாவதாக ஓர் அணுகுண்டு போடப்பட்டது, இந்தத் தடவை நாகசாகியில்; 39,000 பேர் கொல்லப்பட்டனர், 25,000 பேர் காயமடைந்தனர். நகரத்திலிருந்த கிட்டத்தட்ட பாதி கட்டடங்கள் சுக்குநூறாயின அல்லது சேதமடைந்துவிட்டன. மனித சரித்திரத்தில் அதுவரை அப்பேர்ப்பட்ட சக்திவாய்ந்த ஆயுதம் பயன்படுத்தப்படவில்லை. உலகம் மாறியிருந்தது. அது அணு ஆயுத சகாப்தத்திற்குள் அடியெடுத்து வைத்திருந்தது. சில வருடங்களுக்குள் ஐக்கிய மாகாணங்கள், முன்னாள் சோவியத் யூனியன், கிரேட் பிரிட்டன், பிரான்சு, சீனா ஆகிய நாடுகள் அதைவிட அதிபயங்கரமான ஹைட்ரஜன் குண்டை தயாரித்தன.
பனிப்போர்—கம்யூனிஸம் மற்றும் கம்யூனிஸம் அல்லாத நாடுகளுக்கிடையே நடைபெற்ற போட்டி—உயர்தர அணு ஆயுதங்களையும் ஏவுகணைகளையும் தயாரிப்பதற்கு வழிவகுத்தது. கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் (ICBM) தயாரிக்கப்பட்டபோது பயம் உலகை கவ்விக்கொண்டது; இந்த ஏவுகணைகள் 5,600 கிலோமீட்டருக்கு அப்பாலுள்ள நாடுகள் மீதும் குறிவைத்து தாக்கவல்லவை, அதுவும் சில மணிநேரம் கழித்து அல்ல, சில நிமிடங்களிலேயே. 192 குறியிலக்குகளைத் தாக்குவதற்குப் போதுமான அணு ஆயுத ஏவுகணைகள் நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்தன. அணு ஆயுதக் கிடங்குகளில் கிட்டத்தட்ட 50,000 போர் கருவிகள் இருந்ததாக ஒரு சமயம் கணக்கிடப்பட்டது! பனிப்போரின்போது, மனிதகுலம் ‘அணு ஆயுத அர்மகெதோனின்’ விளிம்பில் நின்றது—வெற்றிவீரர்களே இல்லாத ஒரு போர் அது.
பனிப்போரின் முடிவு
“ஸால்ட் [Strategic Arms Limitation Talks] I மற்றும் II ஒப்பந்தங்கள் வெளிப்படுத்திக் காட்டியபடி,” 1970-களில் பனிப்போரின் உக்கிரம் தணிந்தது. “இதில் இரு வல்லரசுகளும் எதிரிகளின் ஏவுகணைகளைத் தடுக்கக்கூடிய தங்கள் ஏவுகணைகள் மீதும் (antiballistic missiles) அணு ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடிய தங்கள் ஏவுகணைகள் மீதும் (strategic missiles) கட்டுப்பாடுகள் விதித்தன” என்று தி என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா கூறுகிறது. பின்பு, 1980-களின் பிற்பகுதியில், பனிப்போர் உருகி, கடைசியில் முடிவுக்கு வந்தது.
“பனிப்போர் முடிவுக்கு வந்ததால், அணு ஆயுதக் கருவிகளை உற்பத்தி செய்யும் போட்டியும் ஐக்கிய மாகாணங்களுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான மோதலும் முடியப் போகிறது என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் பிறந்தது” என சர்வதேச சமாதானத்திற்கான கார்னெகி அறக்கட்டளை நிறுவனம் வெளியிட்ட ஓர் அறிக்கை கூறுகிறது. அணு ஆயுதங்களைக் குறைப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளால், சமீப வருடங்களில் நூற்றுக்கணக்கான அணு ஆயுதக் கிடங்குகள் அழிக்கப்பட்டுள்ளன. 1991-ல் சோவியத் யூனியனும் ஐக்கிய மாகாணங்களும் அழிவுக்குரிய போராயுதங்களின் குறைப்பு மற்றும் கட்டுப்பாடு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. சரித்திரத்தில் முதல் முறையாக, இந்த இரு வல்லரசுகளும் வெறுமனே தங்களுடைய அணு ஆயுதக் கருவிகளைக் கட்டுப்படுத்துவதற்கு மட்டுமல்ல, ஒவ்வொன்றும் 6,000 என்ற அளவுக்கு குறைப்பதற்கும்கூட ஒப்பந்தம் செய்தன. ஒப்பந்தப்படி அணு ஆயுத தளவாடங்களின் எண்ணிக்கையை குறைத்துவிட்டதாக இரு தரப்பினரும் 2001-ன் முடிவில் அறிவித்தனர். மேலும், 2002-ல், “மாஸ்கோ ஒப்பந்தம்” செய்யப்பட்டது. வரும் பத்தாண்டுகளில் அணு ஆயுதங்களை 1,700-க்கும் 2,200-க்கும் இடைப்பட்ட எண்ணிக்கை வரை இன்னும் குறைக்க வேண்டும் என்பதே அந்த ஒப்பந்தம்.
இத்தகைய முன்னேற்றங்கள் இருந்தாலும், “அணு ஆயுதப் போரை பொறுத்தவரை, இது திருப்திப்பட்டு கொள்வதற்குரிய காலம் அல்ல” என ஐநா பொதுச் செயலாளர் கோஃபி அன்னன் கூறினார். “21-ம் நூற்றாண்டின் துவக்கத்தில்கூட அணு ஆயுதப் போர் மிகவும் நிஜமான ஒன்றாக இருக்கிறது, பயங்கரமாக அச்சுறுத்தும் சாத்தியமும் இருக்கிறது” என்றும் அவர் கூறினார். அணு ஆயுதப் பேரழிவு—ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் நடந்ததைவிட மிக மிக மோசமான பேரழிவு—இன்னும் நம்முடைய நாளில் ஓர் அச்சுறுத்தலாகவே இருப்பது வருந்தத்தக்கது. யார் அச்சுறுத்துகிறார்கள்? மிக முக்கியமாக, இதை தவிர்க்க முடியுமா? (g04 3/8)