அணு ஆயுதப் போர் தவிர்க்க முடியுமா?
அணு ஆயுதப்—போர் தவிர்க்க முடியுமா?
“அவர்கள் தங்களைப் பயப்படுத்துவாரில்லாமல் புசித்துப் படுத்துக் கொள்வார்கள்.”—செப்பனியா 3:13.
எல்லாருமே அணு ஆயுத அச்சுறுத்தல் இல்லாத உலகுக்காக ஏங்குகிறார்கள். ஆனால் இந்த உலகத்தின் நிஜங்களைப் பார்த்து, அநேகர் நம்பிக்கையற்றவர்களாக ஆகிவிட்டார்கள். “அணு ஆயுதக் கருவிகளை கட்டுப்படுத்துகிற, குறைக்கிற, கடைசியில் ஒழித்துக்கட்டுகிற எண்ணத்தை ஐமா-வும் சர்வதேச சமுதாயமும் மறந்து வருகின்றன” என கூறுகிறது த கார்டியன் வீக்லி.
இருந்தபோதிலும், இதன் சம்பந்தமாக தேசங்கள் எடுக்கும் முயற்சிகளை சிலர் சுட்டிக்காட்டுகிறார்கள். உதாரணமாக, அணு ஆயுதப் போரை தடுப்பதற்கு ஐக்கிய மாகாணங்கள் மாத்திரமே 2.2 பில்லியன் டாலர் செலவழித்ததாக கணக்கிடப்படுகிறது. இது நிச்சயமாகவே ஒரு சிறிய தொகை அல்ல. ஆனால், அதே நாடு அணு ஆயுதப் போருக்கு ஆயத்தமாக ஆண்டுக்கு சுமார் 27 பில்லியன் டாலர் செலவழிப்பதைப் பார்த்து அநேகர் நிலைகுலைந்து போயிருக்கிறார்கள்.
சமாதான ஒப்பந்தங்களைப் பற்றியென்ன? இத்தகைய முயற்சிகள் நம்பிக்கைக்கு ஆதாரமாக இருக்க முடியுமா?
அணு ஆயுதக் கருவிகளின் கட்டுப்பாட்டு ஒப்பந்தங்கள்
அணுகுண்டு அறிமுகப்படுத்தப்பட்டது முதற்கொண்டு, அணு ஆயுதக் கருவிகளைக் கட்டுப்படுத்த அல்லது குறைக்க எண்ணற்ற ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தம் (NPT [Nuclear Non-Proliferation Treaty]), போராயுதங்களை கட்டுப்படுத்த பேச்சு வார்த்தைகள் (Strategic Arms Limitation Talks), போராயுதங்களை குறைக்க பேச்சு வார்த்தைகள் (Strategic Arms Reduction Talks), விரிவான சோதனை தடை ஒப்பந்தம் (Comprehensive Test Ban Treaty) ஆகியவை இந்த ஒப்பந்தங்களில் சில. அணு ஆயுத அச்சுறுத்தலைப் போக்குவதற்கு இவையெல்லாம் உதவியாக இருந்திருக்கிறது அல்லவா?
எந்தவொரு ஒப்பந்தமும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு இடையே செய்யப்படும் பரஸ்பர வாக்குறுதியை சார்ந்திருக்கிறது. உதாரணமாக, NPT-யின் வெற்றி, அந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட நாடுகளின் மனப்பூர்வமான முயற்சியையே சார்ந்திருக்கிறது; 1970-ல் செய்யப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் அணு ஆயுதக் கருவிகள் தயாரிக்கும் நாடுகளும் அவற்றை தயாரிக்காத நாடுகளும் கையொப்பமிட்டிருக்கின்றன; டிசம்பர் 2000 வரை அவ்வாறு கையொப்பமிட்டிருக்கும் நாடுகளின் எண்ணிக்கை 187 ஆகும். அணு ஆயுதக் கருவிகளைத் தயாரிக்காத நாடுகள்
அவற்றை தயாரிப்பதை அல்லது வாங்குவதை இந்த ஒப்பந்தம் தடை செய்கிறது; அதேசமயத்தில், அணு ஆயுத வல்லரசுகள் தங்களிடமுள்ள அணு ஆயுதக் கருவிகளை ஒழிப்பதற்கு முழு மூச்சுடன் முயற்சி செய்ய வேண்டும். இது பலன் தந்திருக்கிறதா? “NPT ஒப்பந்தத்தில் எந்த ஓட்டைகளுமே இல்லை என்று சொல்ல முடியாதபோதிலும், பரிசோதனைக்குட்பட்ட படைத்துறை சாராத அணு ஆற்றல் தொழில்நுட்பங்களையும் இடங்களையும் வேறு காரணங்களுக்காக பயன்படுத்துவதை தடுப்பதில் பலன் தந்திருக்கிறது” என காரி சப்லெட் என்பவர் “அணு ஆயுதக் கருவிகள் சம்பந்தமாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்” என்ற ஆவணத்தில் விளக்குகிறார்.இந்த ஒப்பந்தத்தினால் ஓரளவு வெற்றி கிட்டியபோதிலும், “பல்வேறு தேசங்கள் இந்தக் கருவிகளை தயாரிப்பதையும் . . . சிலசமயம் வெற்றிகரமாக பயன்படுத்துவதையும் தடுத்து நிறுத்த முடியவில்லை” என சப்லெட் கூறுகிறார். என்றாலும், அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தத்தின் மேற்பார்வையில் இல்லாத இடங்களில் இரகசியமாகத்தான் அவற்றால் தயாரிக்க முடிந்திருக்கிறது என அவர் கூறுகிறார். எந்தவொரு ஒப்பந்தத்தின் வெற்றியும் சம்பந்தப்பட்ட தரப்பினர்களின் நம்பகத்தன்மையைப் பொறுத்தே இருக்கிறது. மனிதருடைய வாக்குறுதிகளை நாம் அப்படியே ஏற்றுக்கொள்ள முடியுமா? மனித சரித்திரத்தில் நடந்தவற்றை கவனிக்கையில், பதில் தெளிவாகத் தெரிகிறது.
அப்படியானால், நாம் யார் மீதுதான் நம்பிக்கை வைப்பது?
புது வழியில் சிந்தித்தல்
டிசம்பர் 2001-ல், நோபல் பரிசு பெற்ற 110 பேர் இவ்வாறு ஒப்புக்கொண்டு ஓர் அறிக்கையில் கையொப்பமிட்டார்கள்: “சர்வதேச அளவில் ஒன்றுபட்டு நடவடிக்கை எடுத்தால்தான் எதிர்காலத்திற்கு நம்பிக்கை இருக்கும், அதுவும் அந்த நடவடிக்கை ஜனநாயகத்தால் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும். . . . நாம் மாற்றியிருக்கும் இவ்வுலகில் உயிர் பிழைப்பதற்கு நாம் புது வழியில் சிந்திக்க கற்றுக்கொள்ள வேண்டும்.” ஆனால், எப்படிப்பட்ட “புது வழியில்” சிந்திப்பது அவசியம்? அணு ஆயுத கருவிகளைக் கொண்டு உலக சமாதானத்தை அச்சுறுத்துகிறவர்கள் புது வழியில் சிந்திக்க கற்றுக்கொள்வார்கள் என நினைப்பது நடக்கிற காரியமா?
பைபிள் நமக்கு இவ்வாறு அறிவுரை கூறுகிறது: “பிரபுக்களையும், இரட்சிக்கத் திராணியில்லாத மனுபுத்திரனையும் நம்பாதேயுங்கள்.” (சங்கீதம் 146:3) ஏன் நம்பக் கூடாது? பைபிள் பதிலளிக்கிறது: ‘மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்ல, தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்ல.’ (எரேமியா 10:23) ஆம், இந்தப் பூமியை சமாதானமாக ஆளும் திறமை மனிதருக்குக் கொடுக்கப்படவில்லை என்பதே அடிப்படை காரணமாகும். பைபிள் கூறுகிறபடி, ‘மனுஷன் தனக்கே கேடுண்டாக வேறொரு மனுஷனை ஆண்டுவந்திருக்கிறான்’.—பிரசங்கி 8:9.
இந்தப் பூமியை ஆளும் திறமை மனிதருக்கு இல்லையென்றால், யாருக்குத்தான் இருக்கிறது? நம்பகமான, திறமைமிக்க ஓர் அரசாங்கத்தால் சமாதானம் நிலைநாட்டப்படும் என பைபிள் வாக்குறுதி அளிக்கிறது. இந்த அரசாங்கமே கடவுளுடைய ராஜ்யம் என பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது; இதை உணராமலேயே லட்சோபலட்சம் பேர் இந்த அரசாங்கத்திற்காக ஜெபித்து வந்திருக்கிறார்கள். அதாவது, “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, . . . உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போல பூமியிலேயும் செய்யப்படுவதாக” என கர்த்தருடைய ஜெபத்தை சொல்லும்போது இதற்காக ஜெபித்து வந்திருக்கிறார்கள். (மத்தேயு 6:9, 10) சமாதான பிரபுவாகிய இயேசு கிறிஸ்து இந்த ராஜ்யத்தின் ராஜாவாக வீற்றிருக்கிறார். அவருடைய ஆட்சியை விவரித்து பைபிள் இவ்வாறு கூறுகிறது: “அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை.”—ஏசாயா 9:6, 7.
‘பிரபுக்களாகிய’ அரசியல்வாதிகளும் மனித அரசாங்கங்களும் இத்தகைய புது வழியில் சிந்திக்க கற்றுக்கொள்கிறதில்லை, ஆனால் உங்களால் கற்றுக்கொள்ள முடியும். இலவசமாக நடத்தப்படும் பைபிள் படிப்பு திட்டத்தின் வாயிலாக பைபிள் தரும் நம்பிக்கையின் செய்தியை ஏற்றுக்கொள்வதற்கு யெகோவாவின் சாட்சிகள் லட்சக்கணக்கானோருக்கு உதவி செய்திருக்கிறார்கள். நீங்கள் கூடுதலான தகவல் பெற விரும்பினால், இந்தப் பத்திரிகையைப் பிரசுரிப்போருடன் தொடர்புகொள்ளுங்கள், அல்லது நீங்கள் வசிக்கும் இடத்திலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றத்திற்கு விஜயம் செய்யுங்கள். (g04 3/8)
[பக்கம் 8, 9-ன் படம்]
கடவுளுடைய ராஜ்ய அரசாங்கத்தில், இந்தப் பூமி அணு ஆயுத அச்சுறுத்தலின்றி இருக்கும்