கார்னியோலா தேனீ போன்ற சுறுசுறுப்பு
கார்னியோலா தேனீ போன்ற சுறுசுறுப்பு
ஸ்லோவினியாவிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்
தேனீக்கள்—சுறுசுறுப்புக்கு பெயர்பெற்றவை. இருந்தாலும், படுசுறுசுறுப்பாக செயல்படும் ஒரு வகை தேனீ உள்ளது. அதுதான் கார்னியோலா தேனீ. a கார்னியோலா என்ற மாகாணத்தின் பெயரே இத்தேனீக்கு சூட்டப்பட்டுள்ளது; இந்த மாகாணம் இன்றைய மேற்கு ஸ்லோவினியாவில் அமைந்துள்ளது. முதலில், இந்தத் தேனீ பால்கன் தீபகற்பத்திலும் வடக்கே தொலைவில் அமைந்துள்ள கார்பேத்தியன் மலைகள் வரையிலும் மட்டுமே காணப்பட்டது. ஆனால் இன்று, தேனீ வளர்ப்போர் மத்தியில் இந்த வகை தேனீக்களே மிகப் பிரபலம்; ஏன், உலககெங்குமே அவை பிரபலமடைந்திருக்கின்றன.
கார்னியோலா தேனீ இந்தளவு பிரபலமடைவதற்கு காரணம் என்ன? இது உயர் ரக தேனை ஏராளமாக உற்பத்தி செய்கிறது; அதோடு நோய் எதிர்ப்பு சக்தி மிக்கது, கடுங்குளிரையும் தாக்குப் பிடிக்கும் தன்மை உடையது. இவை தவிர இத்தேனீ மென்மையானது, மனிதருக்கு தீங்கு செய்வதில்லை. ஆனால், கூட்டை விட்டு கூட்டமாக வேறு இடத்திற்கு சென்றுவிடும் குணம் இதற்கு இருப்பதால் பெரும் எண்ணிக்கையான தேனீக்களை வளர்க்கும் தொழில் மிகவும் சிரமமாகி விடலாம். தேர்ந்தெடுத்து இனப்பெருக்கம் செய்யும் முறையின் மூலம் தேனீக்கள் இவ்வாறு சென்றுவிடும் குணம் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், மற்ற சாதாரண தேனீக்களைவிட கார்னியோலா தேனீ சுறுசுறுப்பில் படுகில்லாடியாக இருப்பதற்கு காரணம் என்ன? ஒரு காரணம், மற்ற தேனீக்களைவிட இவை காலையில் நேரத்தோடே கூட்டைவிட்டு புறப்பட்டுவிடுகின்றன. இதனால், தேன் தயாரிப்பதற்கு தேவையான மதுவை அதிகமாக சேகரித்து வர போதுமான நேரம் கிடைக்கிறது, அதிக தொலைவான இடங்களிலிருந்தும் மதுவை கொண்டுவந்து கூட்டில் சேர்க்க முடிகிறது.
“தேனீ வளர்க்கும் தேசத்தார்”
ஸ்லோவினியாவில் தேனீ வளர்ப்புத் தொழில் பல காலமாகவே நடைபெற்று வருகிறது, அது ஆர்வமூட்டும் வேலையாகவும் இருந்து வருகிறது. அதனால்தான் ஸ்லோவினிய உயிரியலாளரான யானெஸ் க்ரெகரி தன் நாட்டவரை “தேனீ வளர்க்கும் தேசத்தார்” என விவரிக்கிறார். சொல்லப்போனால், பொ.ச. எட்டாம் நூற்றாண்டிலேயே ஸ்லோவினிய மக்கள் தேனீ வளர்ப்பதில் திறமைசாலிகள் என்று பெயரெடுத்திருக்கிறார்கள். அப்போது முதற்கொண்டு 19-ம் நூற்றாண்டு வரையிலும் அவர்கள் உள்ளீடற்ற மரத்தால் தேன் கூடுகளை
செய்தார்கள். சில ஸ்லோவினிய பிராந்தியங்களில் அவை காரிட்டா அல்லது தொட்டிகள் என அழைக்கப்பட்டன. என்றாலும், சுமார் 15-ம் நூற்றாண்டில் மர அறுவை இயந்திரம் கண்டுபிடிக்கப்படவே, தேன் கூடுகளை அமைப்பதில் இந்த உள்ளீடற்ற மரத் தொட்டிகளுக்குப் பதிலாக மரப்பலகைகள் மெல்ல மெல்ல உபயோகத்திற்கு வந்தன. இவற்றை ட்ரூகெ, அதாவது சவப் பெட்டிகள் என வேடிக்கையாக அழைத்தார்கள்; ஏனென்றால் அவை நீள் சதுரமாக இருந்தன.தேனுக்கும் தேன் மெழுகுக்கும் இருந்த அதிக மவுசுதான் தேனீ வளர்ப்பை லாபம் தரும் முக்கிய தொழிலாக ஆக்கியது. அது அந்நாட்டின் ஆட்சியாளர்களுடைய கவனத்துக்கு எட்டியதால், அவர்கள் தங்களுக்கு பிடித்தமான சிலரிடம் இந்தத் தொழிலை ஒப்படைத்து அவர்களுக்கே எல்லா உரிமைகளையும் வழங்கினர். இந்தத் தொழிலில் அரசாங்கம் ஆர்வம் காட்டியதற்கு காரணமிருந்தது. ஒரு காரணம், முக்கியமாக சர்ச்சுகளுக்கும் துறவி மடங்களுக்கும் வேண்டிய மெழுகுவர்த்திகளை செய்ய தேன் மெழுகு அவசியமாக இருந்தது. இரண்டாவதாக, தேன் மட்டுமே இனிப்பு சுவையூட்டும் ஒரு பொருளாக அன்று கிடைத்தது. 1500-களில் முதன் முதலாக ஒரு வகை கோதுமையை பண்ணைப் பயிராக பயிரிட ஆரம்பித்த பிறகு, தேன் உற்பத்தி இன்னும் அதிகரித்தது; ஏனென்றால் அப்பயிர் இலையுதிர்காலத்தில் தேனீக்களுக்கு கிடைத்த ஒரு புதிய உணவாக இருந்தது. சீக்கிரத்தில் கார்னியோலாவிலிருந்து தேனும் தேன் மெழுகும் பெருமளவில் ஏற்றுமதி செய்யப்பட ஆரம்பித்தன. 1600-களின் மத்திபத்திற்குள் “ஆஸ்திரியாவிலுள்ள சால்ஸ்பர்க் நகர்ப் பகுதிக்கு மட்டுமே ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான குவின்டால் எடையுள்ள தேன்” ஏற்றுமதி செய்யப்பட்டது என 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கார்னியோலா அறிஞர் வால்வாசார் குறிப்பிட்டார். b
கார்னியோலா தேனீயின் புகழ் பரவுகிறது
பல ஆண்டுகளாக, தேனீ வளர்ப்பு என்ற அறிவியலுக்கும் கலைக்கும் கார்னியோலா பல முக்கியமான வழிகளில் பங்களித்திருக்கிறது. 1770-ம் ஆண்டின் ஆரம்பத்தில் மகா ராணியான மரியா தெரஸா, ஆஸ்திரியாவிலுள்ள வியன்னாவில் தேனீ வளர்ப்பு பயிற்சிப் பள்ளி ஒன்றை புதிதாக தொடங்கினார். மேல கார்னியோலாவைச் சேர்ந்த ஆன்டான் யான்ஷா என்பவரை அந்தப் பள்ளியின் முதல் பயிற்சியாளராக நியமித்தார். 1800-களின் பிற்பகுதியில், படுசூட்டிப்பான இந்த கார்னியோலா தேனீக்களே பல பகுதிகளிலுள்ள தேனீ வளர்ப்போரின் தேவைகளுக்கு பொருத்தமானவை என்பதை தேனீ ஆய்வாளர்கள் உணர்ந்தார்கள். கார்னியோலா தேனீ என்ற பெயர் சூட்டப்பட்டதும், உலகெங்கும் அதன் புகழ் பரவ ஆரம்பித்ததும் இந்தக் காலப்பகுதியில்தான். சொல்லப்போனால், 20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கார்னியோலாவில் ரயில் பெட்டிகள் முழுவதிலும் தேன் கூடுகள் வைக்கப்பட்டு பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன; ஒவ்வொரு கூட்டிலும் கார்னியோலா தேனீ குடும்பம் ஒன்று இருந்தது.
இதே காலக்கட்டத்தில்தான், மரப்பலகையாலான அந்த பாரம்பரிய தேன் கூட்டுக்கு க்ரானிச், அதாவது “கார்னியோலா தேன்கூடு” என்ற பெயர் வந்தது. க்ரானிச்சின் சிறப்புக்கு காரணம் அது ஒருசமயம் பெற்றிருந்த ஒப்பற்ற கலை வடிவமே. (பக்கம் 26-ல் “தேன் கூட்டின் ஓவியங்கள்” என்ற பெட்டியைக் காண்க.) ஸ்லோவினியாவில் இன்று 7,000-க்கும் மேற்பட்ட தேனீ தொழிலாளர்கள் 1,60,000-க்கும் அதிகமான தேன்கூடுகளை பராமரிக்கிறார்கள். ஸ்லோவினிய தேனீ வளர்ப்பு சரித்திரத்தை நினைப்பூட்டும் வண்ணமாக ரேடோவிலிகா நகரில் ஒரு விசேஷித்த தேனீ வளர்ப்பு மியூஸியமும் உள்ளது.
ஒரு பிரபல சின்னம்
ஸ்லோவினிய மக்கள் வெகு காலமாகவே தேனீயை கடின உழைப்புக்கும் நடைமுறை ஞானத்துக்கும் சின்னமாக கருதி வந்தார்கள். இன்றைய ஸ்லோவினியாவில் 1693-ல் ஸ்தாபிக்கப்பட்ட முதல் அறிவியல் சங்கம் கடின உழைப்பு சங்கம் என அழைக்கப்பட்டது, அச்சங்கம் அதன் சின்னத்தில் தேனீயின் உருவத்தைப் பொறித்தது. அச்சங்கத்தின் உறுப்பினர்களும்கூட ஆபியஸ் என அழைக்கப்பட்டார்கள்; லத்தீனில் அதன் அர்த்தம் “தேனீக்கள்” என்பதாகும். தேனீக்களை சிக்கனத்திற்கு அடையாளமாகவும் ஸ்லோவினியர்கள் கருதினார்கள்; ஆகவே வர்த்தக உலகின் சின்னமாகவும்கூட தேனீயின் உருவம் பயன்படுத்தப்பட்டது. வங்கி பாஸ் புத்தகங்களின் அட்டைகளிலும் ஸ்லோவினிய நாணயங்கள் சிலவற்றின் பின்புறத்திலும் தேனீயின் உருவம் காணப்படுகிறது.
இப்படி எதற்கெடுத்தாலும் தேனீயையே உதாரணமாக ஸ்லோவினியர்கள் பயன்படுத்துவதற்கு காரணம், அவர்கள் தாமே கடின உழைப்பாளிகள் என்ற பெயரை எடுத்திருப்பதுதான். “தேனீக்களைப் பார்த்துப் படி” என்ற ஒரு ஸ்லோவினிய பழமொழியும் உண்டு. ஆகவே, சுறுசுறுப்பான தேனீக்களை பார்க்கும் போதெல்லாம் அல்லது சுவையான தேனை—அவற்றின் உழைப்பினால் கிடைக்கும் மதுரமான பலனை—ருசிக்கும் போதெல்லாம் கடின உழைப்பாளிகளாகிய கார்னியோலா தேனீக்கள் உங்கள் ஞாபகத்துக்கு வரலாம். (g04 3/22)
[அடிக்குறிப்புகள்]
a கார்னியோலா தேனீயின் அடிவயிற்றைச் சுற்றி பட்டுப் போன்ற முடி சாம்பல் நிற வளையங்களாக காணப்படுவதால், இது சாம்பல் வளைய தேனீ என்றும் அழைக்கப்படுகிறது.
b ஒரு குவின்டால் என்பது 100 கிலோவுக்கு அல்லது சுமார் 220 பவுண்டுக்கு சமம்.
[பக்கம் 26-ன் பெட்டி/படங்கள்]
தேன் கூட்டின் ஓவியங்கள்
ஸ்லோவினிய நாட்டு தேனீப் பண்ணையில் ஒன்றுக்கு மேற்பட்ட தேன்கூடுகள் அடுக்கடுக்காக வைக்கப்படுகின்றன. அவை பார்ப்பதற்கு ஒரு செவ்வகப் பெட்டியின் இழுப்பறைகளைப் போல் இருக்கும். அவற்றில் குட்டையான பகுதி முன்புறம் பார்த்தாற்போல் வைக்கப்படுகின்றன. தேன்கூடுகளின் முன்னாலுள்ள பலகைகளில் ஆயில் பெயின்டிங்குகளை தீட்டும் கலை 1700-கள் முதல் 1900-கள் வரையிலும் தழைத்தோங்கியது. இந்த ஒப்பற்ற கலை வடிவங்களுக்கு எடுத்துக்காட்டுகளாக சுமார் 3,000 தேன்கூடுகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. இருந்தாலும், ஆண்டாண்டு காலமாக உருவாக்கப்பட்டு, ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த தேன்கூடுகளை கணக்கிட்டால் இந்த எண்ணிக்கை சிறு துளிதான்.
மரப்பலகைகளில் முக்கியமாக காணப்படுவது, “புனிதர்களையும்” பைபிள் கதைகளையும் சித்தரிக்கும் மத சம்பந்தமான சித்திரங்களாகும். ஆனால், மிருகங்களின் சித்திரங்களும் ஜனங்கள் தங்கள் தொழிலில் ஈடுபடுவதைப் போன்ற சித்திரங்களும், அதோடு கற்பனையான, நகைச்சுவையான காட்சிகளும் அந்த ஓவியங்களில் இடம்பெறுகின்றன. சில ஓவியங்களோ குடும்ப உறவுகளை சித்தரிக்கின்றன. உதாரணமாக, பழித்துப் பேசும் ஒரு பெண்ணின் நாக்கை கூர்மைப்படுத்துவதற்காக இரண்டு பேய்கள் ஏந்திரக்கல்லை பயன்படுத்துவதை சில ஓவியங்கள் சித்தரிக்கின்றன; இன்னும் சிலவோ ஒரு மனைவி தன் கணவனை மதுக்கடையிலிருந்து வீட்டுக்கு இழுத்துக்கொண்டு வருவதை சித்தரிக்கின்றன.
தேன்கூட்டில் இவ்வாறு வரையப்பட்டுள்ள ஓவியங்கள், “ஸ்லோவினிய பாரம்பரியத்தின் முத்துக்கள் போன்றவை,” “பாமரர்களின் ஞானத்தை பிரதிபலிக்கும் பழங்கால என்ஸைக்ளோப்பீடியா,” “மிகவும் நம்பத்தகுந்த ஸ்லோவினிய கலையாக இருக்கலாம்” என்றெல்லாம் போற்றிப் புகழப்பட்டிருக்கின்றன. ஆனால் பயனுள்ள ஒரு நோக்கத்திற்காகவும் இந்த ஓவியங்கள் வரையப்பட்டன. ஒரே இடத்தில் ஏகப்பட்ட கூடுகள் இருப்பதால், ஒரு தேனீ தவறுதலாக வேறு தேன்கூட்டுக்குள் சென்று விடலாம்; அப்படி சென்றுவிட்டால் சாவுதான் கதி. ஆகவே, தேனீக்கள் அதனதன் கூடுகளுக்கு செல்ல ஒவ்வொரு தேன்கூட்டிலும் வரையப்பட்டுள்ள வித்தியாசமான வர்ண ஓவியங்கள் உதவியதாக தேனீ வளர்ப்பவர்கள் நம்பினார்கள்.
[படங்கள்]
“ஆதாமும் ஏவாளும்”
“எகிப்திற்கு விற்றுப்போடப்படும் யோசேப்பு”
“இயேசு எருசலேமுக்கு வருகிறார்”
முகப்பு பலகையில் பாரம்பரிய ஓவியங்கள் வரையப்பட்ட ஸ்லோவினிய தேனீப் பண்ணை
[படத்திற்கான நன்றி]
அனைத்து தேனீப் பண்ணைகளின் புகைப்படங்கள்: Z dovoljenjem upravitelja rojstne hiše pisatelja Josipa Jurčiča
[பக்கம் 23-ன் தேசப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
ஆஸ்திரியா
இத்தாலி
ஸ்லோவினியா
கார்னியோலா
குரோஷியா
ஏட்ரியாடிக் கடல்
[படத்திற்கான நன்றி]
வரைபடம்: Mountain High Maps® Copyright © 1997 Digital Wisdom, Inc.
[பக்கம் 24-ன் படம்]
கார்னியோலாவின் பிரசித்தி பெற்ற தேனீயின் உருவம் பொறிக்கப்பட்ட ஸ்லோவினிய நாணயம்
[பக்கம் 25-ன் படம்]
தீங்கு செய்யாத, மென்மையான தேனீ என்ற பெயர் பெற்றது கார்னியோலா தேனீ
[பக்கம் 25-ன் படம்]
இளம் வேலைக்கார தேனீக்கள் சூழ இருக்கும் ராணித் தேனீ
[பக்கம் 25-ன் படம்]
லார்வாக்கள்
[படத்திற்கான நன்றி]
Foto: Janez Gregori