மலையில் மெத்தூசலா
மலையில் மெத்தூசலா
ப்ரிஸல்கோன் பைன் மரம்—இது உலகிலேயே பழமையான மரம் என கருதப்படுகிறது. இது கடல் மட்டத்திற்கு மேல் 3,000 அடி உயரத்தில் அமைந்திருக்கும் ஒயிட் மலைத் தொடரில் வீற்றிருக்கிறது. இந்த மலைத் தொடர் ஐக்கிய மாகாணங்களின் மேற்குப் பகுதியில் உள்ளது. இம்மரம் மெத்தூசலா மரம் என அழைக்கப்படுகிறது. பழங்கால மனிதன் என்ற மறுபெயரும் இதற்கு உண்டு. இதன் வயது 4,700 ஆண்டுகளுக்கும் அதிகம் என மதிப்பிடப்படுகிறது; மெத்தூசலா தோப்பு என அழைக்கப்படும் பண்டைய ப்ரிஸல்கோன் பைன் மர தோப்பின் மூத்த குடிமகனாக இது விளங்குகிறது. a
இந்த மரங்கள் படுமோசமான சூழலையும் தாக்குப்பிடிக்கின்றன. இங்கு, “ஆண்டுக்கு சராசரியாக 30 சென்டிமீட்டர் மழையே பெய்கிறது, அதுவும் பெரும்பாலும் பனியாகவே பெய்கிறது; ஆகவே மிகக் குறைந்த ஈரப்பதமே காணப்படுகிறது” என நியூ சயன்டிஸ்ட் பத்திரிகையில் வெளிவந்த ஓர் அறிக்கை கூறுகிறது. “இந்த மரங்கள் வளர்ந்து நிற்கும் நிலம் சொற்ப ஊட்டச்சத்துக்களே நிறைந்த ஒரு வகை சுண்ணாம்புப் பாறையாலானது.” அதுமட்டுமல்ல, “இங்கு கோடையில் கடும் வெப்பமும் குளிர்காலத்தில் கடுங்குளிரும் நிலவுகிறது, காற்றும் பலமாக வீசுகிறது.”
என்றாலும், இவை யாவும் இந்த மரங்களின் நீண்ட ஆயுசுக்கு அடிகோலுகின்றன. “வைரஸ்களோ பாக்டீரியாவோ உயிர்வாழ முடியாதளவுக்கு கடும் வறட்சி அங்கு நிலவுகிறது. இந்த மரம் அதிக அடர்த்தியாகவும் பிசின் நிறைந்ததாகவும் காணப்படுவதால் பூச்சிகள் அதற்குள் நுழைய முடிவதில்லை. மின்னல் காரணமாக காடே தீப்பற்றி எரிய வாய்ப்புள்ளது, ஆனால் இந்த மரங்களுக்கு இடையே போதிய இடைவெளி இருப்பதால் தீ தொற்றிப் பரவுவதில்லை” என்றும் நியூ சயன்டிஸ்ட் விளக்குகிறது.
இந்த மரங்களின் வளர்ச்சி காலம் ஓர் ஆண்டில் சுமார் 45 நாட்களுக்கு நீடிக்கிறது. ஆனால் தன் வசமுள்ள குறைந்தளவு போஷாக்கை வீணாக்காமல் அதை கொஞ்சம் கொஞ்சமாக பயன்படுத்துவதால் இவை மிகவும் மெதுவாகவே வளர்கின்றன. இவற்றின் சுற்றளவு, நூறு வருடங்களுக்கு ஓர் அங்குலம் என்ற கணக்கில் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைகிறது. இவற்றின் இலைகளோ 30 வருடங்களுக்கு உதிராமல் இருக்கின்றன. இவற்றில் மிகவும் உயரமான மரம் 18 மீட்டர் வளருகிறது. இவற்றில் வயதான கிழ மரங்கள் இன்னும் ஐந்து நூற்றாண்டுகளுக்கு நீடித்து வாழலாம் என ஆய்வாளர்கள் மதிப்பிடுகிறார்கள்.
சமீப வருடங்களில், ஆயுட்காலத்தை கூட்ட விரும்பும் மக்கள், ப்ரிஸல்கோன் பைன் மரத்தினுடைய ஆயுளின் இரகசியத்தைக் கண்டுபிடிப்பதில் ஆர்வம் காட்டியுள்ளனர். ஆனால் தீர்க்க ஆயுசுடன் வாழ, உயர்ந்த மலையில் வளைந்து, நெளிந்து காணப்படும் அந்த வயதான மரத்திடம் செல்ல வேண்டியதில்லை, மிகவும் எளிய வழி ஒன்று உள்ளது. ‘ஒன்றான மெய்த் தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்’ என பழம்பெரும் நூலாகிய பைபிள் சொல்கிறது. (யோவான் 17:3) இந்த அறிவு அனைவருக்கும் கிடைக்கக்கூடிய ஒன்று. அதை ஏன் நீங்களே ஆராய்ந்து பார்க்கக் கூடாது? (g04 3/22)
[அடிக்குறிப்பு]
a நோவாவின் தாத்தா மெத்தூசலா 969 ஆண்டுகள் வாழ்ந்தார். பைபிள் பதிவின்படி, அவர்தான் அதிகமான ஆண்டுகள் உயிர் வாழ்ந்தவர்.—ஆதியாகமம் 5:27; லூக்கா 3:36, 37.
[பக்கம் 17-ன் படம்]
மெத்தூசலா தோப்பிலுள்ள ஒரு ப்ரிஸல்கோன் பைன் மரம்