Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அன்றைய உறுதிமொழி இன்றைய வழிகாட்டி

அன்றைய உறுதிமொழி இன்றைய வழிகாட்டி

அன்றைய உறுதிமொழி இன்றைய வழிகாட்டி

சுமார் பொ.ச.மு. 400-⁠ல் ஹிப்பாகிரட்டிக் உறுதிமொழி என்ற ஒன்றை கிரேக்க மருத்துவரான ஹிப்பாகிரட்டிஸ் எழுதினார்; அவர் மருத்துவத்தின் தந்தை என்பதாக பொதுவாய் அழைக்கப்படுகிறார். அந்த உயரிய கொள்கை இன்னமும் மருத்துவ தொழிலுக்கு வழிகாட்டியாக திகழ்கிறது. உங்களுக்கும் அது கற்றுக்கொடுக்கப்பட்டதா? உண்மையில் நிறைய பேருக்கு அது கற்றுத்தரப்படுகிறது. ஆனால் அதைப் பற்றி சொல்லப்படும் விவரங்கள் முழுக்க முழுக்க உண்மையா?

ஹிப்பாகிரட்டிஸ் தன் பெயர் தாங்கிய அந்த உறுதிமொழியை எழுதியிருக்க மாட்டார் என்றே உண்மைகள் காட்டுவதாக தெரிகிறது. அதோடு, இன்றைய மருத்துவம் அதை முதன்முதலில் எழுதப்பட்டபடியே எப்போதும் எடுத்துக்கொள்வதில்லை.

இந்தப் பூர்வ உறுதிமொழியை எழுதியது உண்மையிலேயே யார் என்று நமக்கு தெரியுமா? அப்படியே நமக்கு தெரிந்திருந்தாலும் அந்த உறுதிமொழி இன்று நமக்கு எவ்விதத்திலாவது முக்கியமானதா?

உறுதிமொழியை ஹிப்பாகிரட்டிஸ் எழுதினாரா?

அந்த உறுதிமொழியை ஹிப்பாகிரட்டிஸ் எழுதினாரா இல்லையா என சந்தேகிக்க நிறைய காரணங்கள் உண்டு. அதில் ஒரு காரணம்: அந்த உறுதிமொழியின் ஆரம்பத்தில் அநேக தெய்வங்களிடம் ஒரு பிரார்த்தனை ஏறெடுக்கப்படுகிறது. இருந்தாலும் மருத்துவத்தையும் மதத்தையும் பிரித்துக் காட்டி, வியாதிக்கான காரணம் உடல் சம்பந்தப்பட்டதே ஒழிய இயற்கைக்கு அப்பாற்பட்டது அல்ல என்பதை விளக்கிய முதல் நபர் ஹிப்பாகிரட்டிஸ் என கருதப்படுகிறது.

அதோடு, அந்த உறுதிமொழி தடை செய்த அநேக மருத்துவ முறைகள் ஹிப்பாகிரட்டிஸின் நாட்களில் கடைப்பிடிக்கப்பட்டவையே. (பக்கம் 21-⁠ல் உள்ள பெட்டியைக் காண்க.) உதாரணமாக, அன்று கருக்கலைப்பும் தற்கொலையும் சட்டத்தாலும் பெருவாரி மதங்களாலும் கண்டனம் செய்யப்படவில்லை. அதோடு, உறுதிமொழி எடுப்பவர் அறுவை சிகிச்சை செய்ய மறுப்பதாக வாக்குறுதி அளிக்கிறார். இருந்தாலும் ஹிப்பாகிரட்டிக் புத்தகத் தொகுப்பில் அறுவை சிகிச்சை நுட்பங்களை விளக்கும் புத்தகங்களும் உண்டு; இப்புத்தக தொகுப்பு, ஹிப்பாகிரட்டிஸாலும் மற்ற பூர்வ எழுத்தாளர்களாலும் எழுதப்பட்டதாக சொல்லப்படும் மருத்துவ பிரசுரங்களின் தொகுப்பாகும்.

ஆகவே இது நிபுணர்கள் மத்தியில் இன்னும் சர்ச்சைக்குரிய விஷயமாக இருந்தாலும், ஹிப்பாகிரட்டிக் உறுதிமொழியை ஹிப்பாகிரட்டிஸ் உண்மையில் எழுதியிருக்க மாட்டார் என்றே தெரிகிறது. உறுதிமொழியில் காணப்படும் தத்துவங்கள் பொ.ச.மு. நான்காம் நூற்றாண்டில் பைத்தகோரஸை பின்பற்றியவர்களுக்குத்தான் கச்சிதமாக பொருந்துகின்றன; ஏனென்றால் உயிரின் புனிதத்தன்மை சம்பந்தப்பட்ட கருத்துக்களை ஏற்றுக்கொண்டவர்கள் அவர்களே, அறுவை சிகிச்சை முறைகளை வெறுத்தவர்களும் அவர்களே.

மறைவும் மறுபிரவேசமும்

அந்த உறுதிமொழியை உண்மையில் யார் எழுதியிருந்தாலும் சரி, ஒரு விஷயத்தை மட்டும் மறுக்க முடியாது; அதாவது, மேற்கத்திய மருத்துவத்தின் மீதும் முக்கியமாக நன்னெறிகள் மீதும் அது ஏற்படுத்திய குறிப்பிடத்தக்க தாக்கத்தை மறுக்க முடியாது. அந்த உறுதிமொழி, “மருத்துவத்தில் ஏற்பட்ட நன்னெறி வளர்ச்சியின் உச்சக்கட்டம்” என்றும் “வளர்ச்சியடைந்த உலகில் நோயாளி-மருத்துவர் உறவிற்கு அடிப்படை” என்றும் “தொழில்முறை ஒழுக்கத்தின் சிகரம்” என்றும் அழைக்கப்பட்டிருக்கிறது. 1913-⁠ல் புகழ்பெற்ற கனடா நாட்டு டாக்டர் சர் வில்லியம் ஆஸ்லர் இவ்வாறு சொன்னார்: “இந்த உறுதிமொழி ஹிப்பாகிரட்டிஸ் காலத்தைச் சேர்ந்ததா இல்லையா என்பது முக்கியமான விஷயமே இல்லை. . . . இருபத்தைந்து நூற்றாண்டுகளாக அது மருத்துவ தொழிலின் அடிப்படை கொள்கையாக இருந்திருக்கிறது; அநேக பல்கலைக்கழகங்களில் மருத்துவ பட்டமளிப்பு விழாவின் பாகமாக இந்த உறுதிமொழி இன்னமும் பயன்படுத்தப்படுகிறது.”

இருந்தாலும் 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்த உறுதிமொழியின் புகழ் மங்கியது; அப்போது ஏற்பட்ட அறிவியல் முன்னேற்றங்கள் இதற்கு காரணமாக இருந்திருக்கலாம். பகுத்தறிவு கோட்பாட்டிற்கு மவுசு கூடிய சூழ்நிலையில் அந்த உறுதிமொழி பழம்பாணியானதாகவும் நடைமுறையற்றதாகவும் தோன்றியிருக்கலாம். ஆனால் அறிவியல் முன்னேற்றங்கள் ஏற்பட்டாலும் தார்மீக நெறிகள் தொடர்ந்து தேவைப்படத்தான் செய்கின்றன. அதனால்தான் அந்த உறுதிமொழி சமீப காலங்களில் மறுபடியும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது போலும்.

மருத்துவ கல்லூரியில் சேரும்போதோ படிப்பை முடித்து பட்டம் பெறும்போதோ உறுதிமொழி எடுப்பது மறுபடியும் முக்கிய அம்சமாகிவிட்டது. ஐ.மா.-விலும் கனடாவிலும் உள்ள மருத்துவ கல்லூரிகளின் பேரில் 1993-⁠ல் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின்படி 98 சதவீத கல்லூரிகள் ஏதோவொரு வித உறுதிமொழியை எடுக்கும்படி மாணவர்களிடம் எதிர்பார்க்கின்றன. ஆனால் 1928-⁠ல் 24 சதவீத கல்லூரிகள் மட்டுமே அவ்வாறு உறுதிமொழியை எதிர்பார்த்தன. பிரிட்டனில், அதேபோன்ற ஆய்வின்படி சுமார் 50 சதவீத மருத்துவக் கல்லூரிகள் தற்போது ஒரு உறுதிமொழியை அல்லது பிரகடனத்தை பயன்படுத்துகின்றன. ஆஸ்திரேலியாவிலும் நியூ ஜீலாந்திலும்கூட சுமார் 50 சதவீத கல்லூரிகள் அதைப் பயன்படுத்துகின்றன.

காலங்களுக்கேற்ப மாறுதல்

ஆனால் ஹிப்பாகிரட்டிக் உறுதிமொழி மாறாதது அல்ல; கடந்த பல நூற்றாண்டுகளாக அது கிறிஸ்தவமண்டலத்தின் நம்பிக்கைகளுக்கு ஏற்ப மாற்றப்பட்டது. சிலசமயங்களில் மற்ற பிரச்சினைகளுக்கு​—⁠உதாரணத்திற்கு கொள்ளைநோயால் பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளுக்கு​—⁠ஏற்ப அதில் மாற்றங்கள் செய்யப்பட்டன. இன்னும் சமீப காலங்களில் அது நவீன சிந்தனைக்கு ஏற்ப மாற்றப்பட்டிருக்கிறது.

அந்த உறுதிமொழியின் அநேக வர்ஷன்களில் நவீன மருத்துவத்திற்கு ஒத்துவராத குறிப்புகள் நீக்கப்பட்டு, இன்றைய சமுதாயத்திற்கு முக்கியமாக தேவைப்படும் மற்ற கருத்துக்கள் புகுத்தப்பட்டிருக்கின்றன. உதாரணத்திற்கு நோயாளியின் தன்னுரிமை சம்பந்தப்பட்ட நியமம் இன்றைய மருத்துவத்திற்கு மிக முக்கியமாக இருக்கலாம்; ஆனால் பூர்வ கிரேக்க மருத்துவத்தில் அதுபோன்ற எதுவும் இருக்கவில்லை, ஹிப்பாகிரட்டிக் உறுதிமொழியிலும் அது இல்லை. தற்போது பயன்படுத்தப்படும் அநேக பிரகடனங்களில் நோயாளியின் உரிமை முக்கிய பங்கு வகிக்கிறது.

அதோடு, மருத்துவர்-நோயாளி உறவுமுறையும் மாறியிருக்கிறது; விவரமறிந்து ஒப்புதல் தெரிவிப்பதற்கே (informed consent) அதிகமதிகமாக முக்கியத்துவம் தரப்படுகிறது. ஆகவே வெகு சில மருத்துவ கல்லூரிகளே ஹிப்பாகிரட்டிக் உறுதிமொழியை உள்ளபடி இன்னமும் பின்பற்றுகின்றன.

உறுதிமொழியில் செய்யப்பட்ட பிற மாற்றங்கள் அதிக ஆச்சரியமளிக்கின்றன. 1993-⁠ல், ஐக்கிய மாகாணங்களிலும் கனடாவிலும் பயன்படுத்தப்பட்ட உறுதிமொழிகளில் 43 சதவீதம் மட்டுமே டாக்டர்கள் தங்கள் செயலுக்கு பொறுப்பாளிகள் என்ற குறிப்பை பெற்றிருந்தன; உறுதிமொழியின் மிக சமீபத்திய வர்ஷன்கள், அதிலுள்ள நிபந்தனைகளை மீறுவதற்கு எந்த தண்டனையையும் குறிப்பிடுவதில்லை. கருணைக் கொலையும் கருக் கொலையும் செய்யாதிருத்தல், தெய்வத்திடம் மன்றாடுதல் ஆகியவை அரிதாகவே இடம்பெற்றன; நோயாளிகளோடு உடலுறவு கொள்ளாதிருப்பதற்கான உறுதிமொழி, ஆய்வு செய்யப்பட்ட கல்லூரிகளின் 3 சதவீத பிரகடனங்களில் மட்டுமே இடம்பெற்றிருந்தது.

உறுதிமொழியின் மதிப்பு

ஹிப்பாகிரட்டிக் உறுதிமொழியில் அநேக மாற்றங்கள் செய்யப்பட்டது உண்மைதான்; ஆனால் உயரிய தார்மீக நெறிகளை அடிப்படையாக கொண்ட ஒரு தொழிலுக்கு உறுதிமொழிகள் முக்கியமானவை என பெரும்பாலும் கருதப்படுகிறது. மேலே குறிப்பிடப்பட்ட 1993-⁠ம் ஆண்டு ஆய்வின்படி, பெரும்பாலான உறுதிமொழிகள் டாக்டர்கள் தங்கள் நோயாளிகளோடு செய்யும் ஒப்பந்தத்தை வலியுறுத்துகின்றன; வருங்கால டாக்டர்கள் தங்கள் நோயாளிகளுக்கு மிகச் சிறந்த சிகிச்சையளிக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றன. அப்படிப்பட்ட உறுதிமொழியைச் செய்வது, மருத்துவ தொழிலுக்கு அடிப்படையான மதிப்புவாய்ந்த தார்மீக நியமங்களின் மீது ஒருவரது கவனத்தை திருப்புகிறது.

த மெடிக்கல் ஜர்னல் ஆஃப் ஆஸ்டிரேலியா-வில் பிரசுரிக்கப்பட்ட ஒரு தலையங்கத்தில் எட்மன்ட் பெலெக்ரினோ இவ்வாறு எழுதினார்: “இன்று அநேகருக்கு மருத்துவ உறுதிமொழி என்பது செல்லரித்துப்போன பூர்வகால கருத்தின் எஞ்சிய பகுதியாக தெரியலாம். ஆனால் உண்மையில் அக்கருத்து போதியளவில் மருத்துவத் துறையின் ‘மனதில்’ இன்னமும் இருக்கிறது; ஆகவே அக்கருத்தை முழுமையாக மறந்துவிடுவது மருத்துவத்தை வர்த்தகமாக, தொழில்துறையாக, அல்லது பாட்டாளி வர்க்க தொழிலாக ஆக்குவதைக் குறிக்கும் என்பதை நமக்கு உணர்த்துகிறது.”

ஹிப்பாகிரட்டிக் உறுதிமொழியோ அதன் அடிப்படையில் உருவாகியிருக்கும் நவீன பிரகடனங்களோ இன்று நடைமுறையானதா இல்லையா என்பது தொடர்ந்து நிபுணர்கள் மத்தியில் விவாதிக்கப்படும். முடிவு எதுவாக இருந்தாலும் சரி, நோயாளிக்கு சிறந்த சிகிச்சையளிக்க டாக்டர் செய்யும் ஒப்பந்தம் உண்மையில் பாராட்டத்தக்கதே. (g04 4/22)

[பக்கம் 21-ன் பெட்டி]

ஹிப்பாகிரட்டிக் உறுதிமொழி

லூட்விக் ஏடல்ஸ்டைன் என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது

மருத்துவக் கடவுள் அப்பொல்லோ, அஸ்க்ளிபியஸ், இயியா, பானாக்கியா ஆகியவர்களின் பெயரிலும் மற்றெல்லா தேவ, தேவதைகளின் பெயரிலும் ஆணையிடுகிறேன்; இந்த உறுதிமொழியையும் ஒப்பந்தத்தையும் என் முழு திறமைக்கும் அறிவுக்கும் ஏற்ப நிறைவேற்றுவேன் என அவர்கள் சாட்சியாக சொல்கிறேன்:

இந்தக் கலையை எனக்குக் கற்றுக்கொடுத்தவரை என் பெற்றோர் போல் நடத்துவேன்; அவரது கூட்டாளியாக இருப்பேன்; அவருக்கு காசு தேவைப்பட்டால் நான் கொடுத்து உதவுவேன்; அவரது பிள்ளைகளை என் சகோதரர்கள் போல் கருதி இந்தக் கலையை கற்றுக்கொடுப்பேன்; கற்றுக்கொள்ள அவர்களுக்கு ஆர்வம் இருந்தால் பணமுமின்றி எவ்வித ஒப்பந்தமுமின்றி கற்றுக்கொடுப்பேன்; என் மகன்களுக்கும், எனக்கு போதித்தவரின் மகன்களுக்கும், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு மருத்துவ சட்டத்திற்கேற்ப உறுதிமொழி எடுத்த எல்லா மாணவர்களுக்கும் சட்டதிட்டங்களையும் போதனையையும் மற்றெல்லா விஷயங்களையும் கற்றுக்கொடுப்பேன்; அவர்களைத் தவிர வேறு யாருக்கும் கற்றுக்கொடுக்க மாட்டேன்.

ன் திறமைக்கும் அறிவுக்கும் ஏற்ப நோயாளியின் நலனுக்காக உணவுத் திட்டங்களை செயல்படுத்துவேன்; அவர்களை தீங்கிலிருந்தும் அநீதியிலிருந்தும் காப்பேன்.

விஷ மருந்தை யார் கேட்டாலும் கொடுக்க மாட்டேன், அதை பரிந்துரைக்கவும் மாட்டேன். அதேபோல் கருக்கலைப்பு சிகிச்சையை எந்தப் பெண்ணிற்கும் அளிக்க மாட்டேன். என் உயிரையும் என் கலையையும் தூய்மையோடும் பரிசுத்தத்தோடும் காப்பேன்.

கத்தியை கையிலெடுக்க மாட்டேன்; உடலுக்குள் கற்கள் உருவாகி அவதிப்படுபவர்களுக்காகக்கூட அதை எடுக்க மாட்டேன்; மாறாக அதற்குரிய அறுவை சிகிச்சை மருத்துவர்களிடம் விட்டுவிடுவேன்.

நான் எப்படிப்பட்ட வீடுகளுக்கு சென்றாலும் நோயாளியின் நலனுக்காகவே பாடுபடுவேன்; எவ்வித அநீதியையும் தீங்கையும் இழைக்காதிருப்பேன்; எந்த வம்பும் செய்ய மாட்டேன்; முக்கியமாக பெண்களோடும் ஆண்களோடும்​—⁠அவர்கள் அடிமைகளோ இல்லையோ​—⁠உடலுறவு கொள்ள மாட்டேன்.

மனித உயிர் சம்பந்தமாக ரகசியம் காப்பேன்; சிகிச்சையின்போதோ மற்ற சமயங்களிலோ, நான் பார்க்கும் அல்லது கேட்கும் காரியங்களை​—⁠ஒருகாலும் வெளியே சொல்லக்கூடாத விஷயங்களை​—⁠ரகசியமாக வைத்துக்கொள்வேன்; அதை வெளியே சொல்வது வெட்கக்கேடானதென கருதுவேன்.

நான் இந்த உறுதிமொழியை நிறைவேற்றினால், உயிரையும் இக்கலையையும் அனுபவித்து மகிழ்வேனாக; இனி வரும் காலங்களில் எல்லாம் அனைவர் மத்தியிலும் புகழையும் கௌரவத்தையும் பெறுவேனாக; நான் அதை மீறி பொய்யாக சத்தியம் செய்தால் இந்த எல்லாவற்றிற்கும் நேரெதிரான சாபங்கள் என்னை வந்து சேருவதாக.

[பக்கம் 20-ன் படம்]

ஹிப்பாகிரட்டிக் புத்தக தொகுப்பில் ஒரு பக்கம்

[பக்கம் 20-ன் படத்திற்கான நன்றி]

ஹிப்பாகிரட்டிஸ் மற்றும் பக்கம்: Courtesy of the National Library of Medicine