Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

சின்னஞ்சிறுசுகளிடம் நொறுக்குத்தீனி விற்பனை

ஃபாஸ்ட்-ஃபுட் விற்பனையாளர்கள் “பிள்ளைகளுடைய உணவுப் பழக்கங்களை கெடுத்து, அவர்கள் பருமனாவதற்கு வழிவகுக்கும் தீவிர விளம்பரங்களை” செய்வதாக அதிகமதிகமான உணவியல் நிபுணர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள் என்பதாக டோக்கியோவின் IHT ஆசாஹி ஷிம்புன் செய்தித்தாள் வெளியிட்ட ஒரு கட்டுரை குறிப்பிட்டது. “பிள்ளைகளிடம் விற்பனை செய்வதற்கு டிவிதான் மிக திறம்பட்ட கருவியாக இருக்கிறது” என அந்த அறிக்கை சொல்கிறது. ஆனால் அதுமட்டுமல்ல, உணவுப்பொருட்களை விற்கும் கம்பெனிகள் “எந்தெந்த வழிகளிலெல்லாம் முடியுமோ அந்தந்த வழிகளிலெல்லாம் தங்கள் ஐட்டங்களை பிள்ளைகளிடம் விளம்பரப்படுத்தப் பார்க்கின்றன.” சினிமாக்கள், விளையாட்டுகள், இன்டர்நெட் சைட்டுகள், கணக்குப் புத்தகங்கள், விதவிதமான பொம்மைகள் என எதை எடுத்தாலும் உணவுப்பொருள் கம்பெனிகளின் விளம்பரங்கள்தான். அவை ஏன் பிள்ளைகளிடம் விளம்பரம் செய்கின்றன? “அவர்கள்தான் மிகப் பெரிய வாடிக்கையாளர் கூட்டம்” என குறிப்பிடுகிறார் டெக்ஸஸ் A&M-⁠ன் மார்க்கெட்டிங் பேராசிரியர் ஜேம்ஸ் மாக்னீல். ஆனால் “அந்தக் கம்பெனிகள் விற்பவை பெரும்பாலும் எந்தச் சத்துமில்லாத நொறுக்குத்தீனிதான்; பழங்களையும் காய்கறிகளையும் யாராவது விளம்பரப்படுத்திப் பார்த்திருக்கிறீர்களா?” என்கிறார் ஹார்வர்டு ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த்-⁠ன் பேராசிரியர் வால்டர் விலட். (g04 4/22)

மின்னல் சாம்ராஜ்யம்

“உலகிலேயே பிரேசில் நாட்டில்தான் மிக அதிகளவில் மின்னல் ஏற்படுகிறது” என சாட்டிலைட் விவரங்களை அலசும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருப்பதாக யூ க்ளோபூ செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. பிரேசிலில் “விநாடிக்கு இரண்டு முதல் மூன்று முறை மின்னல்கள் ஏற்படுகின்றன, ஆக வருடத்திற்கு மொத்தம் ஏழு கோடி முறை மின்னல்கள் ஏற்படுகின்றன.” காரணம் என்ன? அங்குள்ள ஏராளமான மழைக்காடுகளும், உஷ்ணமான சீதோஷண நிலையுமே. இது இடிமின் புயல்கள் அடிக்கடி ஏற்படுவதற்கு கச்சிதமான சூழ்நிலையை உருவாக்குகிறது. பிரேசிலில் மின்னல் ஒவ்வொரு வருடமும் சுமார் 100 பேருடைய உயிரை காவு கொள்வதோடு தொலைபேசி இணைப்புகளையும் மின்சார கேபிள்களையும் துண்டித்து, தொழிற்சாலைகளையும் மற்ற கட்டடங்களையும் சேதப்படுத்துகிறது. இதனால் கிட்டத்தட்ட 20 கோடி டாலர் இழப்பை ஏற்படுத்துவதாகவும் கணக்கிடப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, பொதுவான நம்பிக்கைக்கு முரணாக “அது மூன்று, ஐந்து, அல்லது பத்து தடவைகூட ஒரே இடத்தை தாக்கலாம்” என விண்வெளி ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானி ஓஸ்மார் பின்டூ ஜூனியர் சொல்கிறார். (g04 4/8)

வேவு பார்க்கும் மொபைல் ஃபோன்கள்

காமிராக்கள் பொருத்தப்பட்ட மொபைல் ஃபோன்கள் பிஸினஸ் ரகசியங்களுக்கு ஆபத்தாயிருப்பதாக ஃப்ராங்க்ஃபுர்டர் ஆல்கெமைன் ட்ஸைடூங் என்ற செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. அந்த காமிராக்கள் விற்பனையை அதிகரிப்பதற்கான இன்னொரு சாதனம் மட்டுமே என முதலில் நினைக்கப்பட்டது; ஆனால் இந்தப் புதிய செல்-ஃபோன்கள் எடுக்கும் டிஜிட்டல் ஃபோட்டோக்களில், மிக நுணுக்கமான விவரங்களும் தெளிவாக விழுந்துவிடுவதால் அநேக கம்பெனிகளின் செக்யூரிட்டி ஆபீஸர்கள் அவற்றை பெரும் பிரச்சினையாக கருதுகிறார்கள். இந்த ஃபோன் காமிராக்கள் எளிதில் கண்ணில் படுவதில்லை; அதோடு மற்ற காமிராக்களைப் போலில்லாமல் எடுத்த படத்தை ஒரு நொடியில் வேறெங்காவது அனுப்பிவிட முடிந்தவை. இதனால் தொழில்துறை வேவுக்கு இவை கன கச்சிதமாக இருக்கின்றன. அத்துமீறுபவர் பிடிபட்டாலும் அதற்கு முன்பாகவே அவர் வசமிருந்த ஃபோன் படம் எடுத்து அனுப்பிவிட்டிருக்கும். இந்தக் காரணங்களால் அநேக கம்பெனிகள் தங்கள் ரகசிய இடங்களில்​—⁠டிசைன்கள் போடப்படும் இலாக்காக்கள், பொருட்களின் புதிய மாடல்கள் பரிசோதிக்கப்படும் இடங்கள் போன்றவற்றில்​—⁠இப்படிப்பட்ட காமிராக்கள் பொருத்தப்பட்ட மொபைல் ஃபோன்கள் வைத்திருப்பதை ஏற்கெனவே தடை செய்துவிட்டன. (g04 4/8)

இசை பயிற்சியும் ஞாபகசக்தியும்

“இசை பயிலும் பிள்ளைகள் மற்ற பிள்ளைகளைவிட அபாரமான ஞாபகசக்தியை பெற்றிருக்கிறார்கள், அதிக வார்த்தைகளையும் அறிந்திருக்கிறார்கள்” என ஒரு புதிய ஆராய்ச்சி காட்டுவதாக கனடாவின் த க்ளோப் அண்டு மெயில் செய்தித்தாள் அறிக்கையிடுகிறது. இசை பயிலுவது மூளையின் இடது பக்கத்தை தூண்டுவித்து, மூளையின் மொத்த செயல்திறனை அதிகரித்து, சொற்களை கற்றுக்கொள்வது போன்ற மற்ற வேலைகளை இன்னும் திறம்பட செய்ய உதவுகிறது என ஹாங்காங்கின் சீன பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஆக்னஸ் ச்சான் சொல்கிறார். பேச்சு மற்றும் பார்வை சம்பந்தப்பட்ட ஞாபகத்திறனின் பேரில் 6 முதல் 15 வயதுக்குட்பட்ட 90 மாணவர்களை வைத்து சோதனைகள் செய்யப்பட்டன. இசை பயின்றவர்கள் மற்றவர்களைவிட அதிக வார்த்தைகளை ஞாபகம் வைத்திருந்தார்கள். எவ்வளவு அதிக காலம் இசை பயின்றிருந்தார்களோ அவ்வளவு அதிகமாக வார்த்தைகளை கற்றிருந்தார்கள். “அது மூளைக்கு குறுக்கு-பயிற்சி தருவதுபோல் இருக்கிறது” என்கிறார் டாக்டர் ச்சான். இசை பயிலுபவர்களுக்கு “ஸ்கூலில் நன்றாக படிப்பு வரும்” என அவர் நினைக்கிறார். (g04 4/22)

எத்தனை நட்சத்திரங்கள்?

லண்டனின் த டெய்லி டெலிகிராஃப் இவ்வாறு அறிக்கை செய்கிறது: டெலஸ்கோப் வழியாக “70 கோடி கோடி கோடி​—⁠ஏழுக்கு பிறகு 22 பூஜ்யங்கள்⁠—⁠நட்சத்திரங்களை பூமியிலிருந்து பார்க்க முடிவதாக வானவியலாளர்கள் கணக்கிட்டிருக்கிறார்கள்.” அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த வானவியலாளர்கள் “பூமிக்கு அருகேயுள்ள, பிரபஞ்சத்தின் ஒரு சிறிய பரப்பிலிருந்த எல்லா நட்சத்திர மண்டலங்களையும்,” அவை ஒவ்வொன்றிலும் இருந்த நட்சத்திரங்களையும் எண்ணினார்கள். அந்த எண்ணிக்கைகளை வைத்து வானத்திலுள்ள மற்ற நட்சத்திரங்களின் எண்ணிக்கையை கணக்கிட்டார்கள். “இது இப்பிரபஞ்சத்திலுள்ள எல்லா நட்சத்திரங்களின் மொத்த எண்ணிக்கை அல்ல, ஆனால் டெலஸ்கோப்பினால் பார்க்க முடிந்தவற்றின் எண்ணிக்கை மட்டுமே; இமாலய எண்ணிக்கைகளை பார்த்து பழகிப்போன வானவியலாளர்களுக்கே இந்த எண்ணிக்கை தலைசுற்ற வைக்கிறது” என அக்குழுவின் தலைவரான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டாக்டர் சைமன் டிரைவர் கூறினார். டெலஸ்கோப்பின் உதவியின்றி வெறும் கண்களால் பார்த்தால், பூமியின் மிக இருண்ட பகுதிகளில் சில ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களும் வெளிச்சமான பகுதிகளில் நூறு நட்சத்திரங்களும் மட்டுமே தெரியும். (g04 4/22)

காற்று குறைந்த டயர்

“உயிர்ச்சேதம் ஏற்படும் சாலை விபத்துக்களில் 17-⁠ல் ஒன்றிற்கு நேரடி காரணம் டயர்தான்” என வாலொர் ஆக்ட்வெல் என்ற பிரெஞ்சு பத்திரிகையில் ஒரு செய்தித் துணுக்கு குறிப்பிட்டது. மிஷ்லான் டயர் கம்பெனி நடத்திய ஆய்வுகளின்படி, “2002-⁠ல் மூன்றில் இரண்டு வாகனங்களின் ஒரு டயராவது எப்போதும் போதியளவு காற்று இல்லாதிருந்தது.” மிஷ்லான் கம்பெனியின் தொழில்நுட்பத் தொடர்பு இயக்குநரான பையர் மெனென்டெஸ் சொல்கிறபடி, “அளவுக்கதிகமான காற்று இருந்தால் தங்கள் டயர்கள் வெடித்துவிடும் என்றும் காற்று குறைவாக இருப்பதைவிட அது ஆபத்தானது என்றும் டிரைவர்கள் தவறாக நினைக்கிறார்கள். இதற்கு நேரெதிர் மாறானதே உண்மை.” டயரிலுள்ள காற்று மிகவும் குறைவாக இருக்கும்போது பிரேக் பிடிப்பதற்கு நேரம் எடுக்கிறது, சாலை வளைவுகளில் டயர் வழுக்கிவிடுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது; அதுமட்டுமல்ல, “திடீரென வண்டியை திருப்பும்போது கன்ட்ரோல் போய்விடலாம்” என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. மேலும் காற்று குறையக் குறைய டயரின் வடிவம் மாறுகிறது. இதனால் டயர் பாகங்கள் சூடாகி திடீரென அது செயலிழந்துவிடலாம். (g04 4/22)

தேன்கூட்டின் வெப்பமூட்டும் அமைப்பு

கடுங்குளிர் காலங்களை தாக்குப்பிடிக்க தேனீக்கள் “தங்களின் மார்பக தசைகளை சிலுப்புவதன் மூலம் வெப்பத்தை உண்டாக்குகின்றன” என ஃப்ராங்க்ஃபுர்டர் ஆல்கெமைன் ட்ஸைடூங் அறிக்கை செய்கிறது. ஆனால் தேன்கூட்டிற்குள் வெப்பநிலை சீராக இருப்பதில்லை. தேனீக்களின் சராசரி உடல் வெப்பம், தேன்கூட்டின் நடுப்பகுதியில் உள்ளவற்றிற்கு 30 டிகிரி செல்சியஸ் இருக்கும்; ஆனால், தேன்கூட்டின் சுவர்களுக்கு அருகே உள்ளவற்றிற்கு 12 டிகிரி செல்சியஸ் அல்லது அதைவிடக் குறைவாக இருக்கும். தேன்கூட்டின் நடுவிலுள்ள தேனீக்கள் அதன் சுவர்களுக்கு அருகே உள்ள தேனீக்களைவிட மிக அதிக தடவை தங்கள் மார்பக தசைகளை சிலுப்பிக்கொள்வதாக ஆஸ்திரியாவிலுள்ள கிராஸ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இவ்வகையில் வெப்பம் வீணாக வெளியே சென்றுவிடாமல் அவை பார்த்துக்கொள்கின்றன; இவ்வாறு குளிர்காலத்திற்கான தங்கள் உணவுத் தேவைகளைக் குறைக்கின்றன. ஆனால் பின்வரும் விஷயம் இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது: தேன்கூட்டின் வெதுவெதுப்பும் சௌகரியமும் மிக்க நடுப்பகுதியில் உள்ள தேனீக்களுக்கு வெளிப்புறத்திற்கு அருகேயுள்ள தேனீக்களைவிட அதிக வெப்பத்தை உண்டாக்க வேண்டும் என எப்படித் தெரியும்? (g04 4/8)