Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நம்பிக்கை—நமக்கு ஏன் தேவை?

நம்பிக்கை—நமக்கு ஏன் தேவை?

நம்பிக்கை​—⁠நமக்கு ஏன் தேவை?

முதல் கட்டுரையின் ஆரம்பத்தில் விவரிக்கப்பட்ட தானியேல் மனம் தளராமல் தொடர்ந்து நம்பிக்கையுடன் இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? புற்றுநோயை சமாளித்து இன்றைக்கு உயிரோடு இருந்திருப்பானா? குணமாவதற்கு நம்பிக்கை கைகொடுக்கிறது என்ற கருத்தை தீவிரமாக ஆதரிப்பவரும்கூட இதை ஆமோதிக்க மாட்டார். இதில்தான் முக்கியமான குறிப்பே அடங்கியுள்ளது. நம்பிக்கையின் வலிமையை ஒருவர் மிதமிஞ்சி மதிப்பிடக் கூடாது. எல்லாவற்றிற்கும் அது அருமருந்தாகாது.

டாக்டர் நேதன் சர்னே என்பவர் சிபிஎஸ் செய்திக்கு பேட்டி அளிக்கும்போது, பெரும் வியாதியஸ்தருக்கு சிகிச்சை தரும் விஷயத்தில் நம்பிக்கையின் வலிமையை மிகைப்படுத்திக் காட்டுவதன் ஆபத்தைப் பற்றி எச்சரித்தார்: “போதிய அளவுக்கு தியானம் செய்வதில்லை, போதிய அளவுக்கு நம்பிக்கையான மனநிலை இல்லை என தங்களுடைய மனைவிமார்களை திட்டுகிற கணவன்மார்களுடைய அனுபவங்களை நாங்கள் பார்த்திருக்கிறோம்.” டாக்டர் சர்னே மேலும் கூறினார்: “வியாதி முற்றுவதை தடுக்க முடியும் என்ற ஒரு மாயத்தோற்றத்தை இத்தகைய சிந்தனை உருவாக்கியது, நோயாளியின் உடல்நிலை மோசமாகும்போது, அவர் தன் நோயை போதிய அளவுக்கு கட்டுப்படுத்தவில்லை என்று சொல்வதைப் போல் இருக்கிறது; ஆனால் இது எந்த விதத்திலும் நியாயமல்ல.”

உண்மையில் பார்த்தால், தீரா வியாதியால் அவதியுறுகிறவர்கள் அந்த நோயோடு மிகவும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் படும் வேதனையோடு இன்னுமதிக வேதனையைக் கூட்ட அன்பானவர்கள் ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். அப்படியானால், நம்பிக்கைக்கு மதிப்பில்லை என்ற முடிவுக்கு நாம் வர வேண்டுமா?

வேண்டியதில்லை. உதாரணமாக, அதே டாக்டர் வேதனையை தணிக்கும் சிகிச்சை அளிப்பதில் நிபுணராக இருக்கிறார்; அதாவது, வியாதியை நேரடியாக எதிர்ப்பதில்லை அல்லது வாழ்நாளை நீடிப்பதற்கும் கவனம் செலுத்துவதில்லை, ஆனால் அந்த நோயாளி உயிர் பிழைத்திருக்கும் வரை ஓரளவு சௌகரியமாகவும் சந்தோஷமாகவும் வாழ வைப்பதற்கு கவனம் செலுத்துகிறார். மிகவும் வியாதியாக இருப்பவர்களுக்கும்கூட, அதிக மகிழ்ச்சியான மனநிலையைப் பெற உதவும் சிகிச்சைகளை அளிப்பதால் வரும் மதிப்பை இத்தகைய டாக்டர்கள் உறுதியாக நம்புகிறார்கள். நம்பிக்கை மகிழ்ச்சியான மனநிலையை தரும்​—⁠இன்னும் அதிக நன்மையையும் தரும்​—⁠என்பதற்கு நிறைய அத்தாட்சிகள் இருக்கின்றன.

நம்பிக்கையின் மதிப்பு

“நம்பிக்கை வலிமைமிக்க சிகிச்சை” என மருத்துவ இதழியலாளர் டாக்டர் டபிள்யு. ஜிப்ஃபோர்டு-ஜோன்ஸ் அடித்துக் கூறுகிறார். தீரா வியாதியால் அவதியுறும் நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்ட உணர்ச்சிப்பூர்வ ஆதரவு எந்தளவு பயனளிக்கிறது என்பதன் பேரில் நடத்தப்பட்ட பல்வேறு ஆராய்ச்சிகளை அவர் மறுபரிசீலனை செய்தார். இப்படிப்பட்ட ஆதரவு அதிக நம்பிக்கையான மனநிலையைக் காத்துக்கொள்ள அவர்களுக்கு உதவி செய்வதாக கருதப்படுகிறது. 1989-⁠ல் நடத்தப்பட்ட ஓர் ஆராய்ச்சியில், இத்தகைய ஆதரவு அளிக்கப்பட்ட நோயாளிகள் நீண்டகாலம் உயிர் வாழ்ந்ததாக கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் சமீப காலத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியிலோ அதிக உறுதியான முடிவெடுக்க முடியவில்லை. என்றாலும், உணர்ச்சிப்பூர்வ ஆதரவைப் பெறும் நோயாளிகள் அப்படிப்பட்ட ஆதரவைப் பெறாத நோயாளிகளைவிட குறைந்தளவு மனச்சோர்வோ வேதனையோதான் அடைகிறார்கள் என்பதை ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன.

இருதய நோயின் விஷயத்தில் நம்பிக்கையான மற்றும் நம்பிக்கையற்ற மனநிலை எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் பற்றி நடத்தப்பட்ட மற்றொரு ஆராய்ச்சியை கவனியுங்கள். வாழ்க்கையை நம்பிக்கையான கண்ணோட்டத்தில் பார்க்கிறார்களா இல்லையா என்பதைக் குறித்து 1,300-⁠க்கும் அதிகமான ஆண்கள் கவனமாக ஆராயப்பட்டார்கள். அவர்களில் 12 சதவீதத்தினருக்கும் அதிகமானோர் ஏதாவது ஒரு வகை இருதய நோயினால் அவதியுற்றிருந்தார்கள் என்பதை பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தப்பட்ட ஆராய்ச்சி கண்டுபிடித்தது. அவர்களில் நம்பிக்கையற்ற மனநிலை உடையவர்கள் நம்பிக்கையான மனநிலை உடையவர்களைவிட 2-⁠க்கு 1 என்ற வீதத்தில் அதிகமாக இருந்தனர். பொது சுகாதாரத்தைச் சேர்ந்த ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் உடல்நலம் மற்றும் சமூக நடத்தை சம்பந்தமாக உதவி பேராசிரியராக பணிபுரியும் லாரா குப்ஸான்ஸ்கி இவ்வாறு குறிப்பிடுகிறார்: “‘நம்பிக்கையோடு சிந்திப்பது’ உங்களுடைய ஆரோக்கியத்திற்கு நல்லது என்ற கருத்தை ஆதரிக்கும் பெரும்பாலான அத்தாட்சி மற்றொருவர் வாயிலாக பெறப்பட்ட விவரங்களின் அடிப்படையிலானது​—⁠இருதய நோய் சம்பந்தப்பட்ட துறையில் இந்தக் கருத்துக்கு உண்மையான மருத்துவ அத்தாட்சி சிலவற்றை இந்த ஆராய்ச்சி தருகிறது.”

தங்களுடைய உடல்நிலை நன்றாக இருக்கிறது என கருதுபவர்களைவிட தங்களுடைய உடல்நிலை மோசமாக இருக்கிறது என நினைப்பவர்கள் அறுவை சிகிச்சைக்குப்பின் மெதுவாக குணமாகிறார்கள் என்பதை சில ஆராய்ச்சிகள் கண்டுபிடித்திருக்கின்றன. நம்பிக்கையான மனநிலைக்கும் நீண்ட ஆயுளுக்கும் தொடர்பு இருப்பதாகவும்கூட கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முதுமையடைவதைக் குறித்ததில், நம்பிக்கையான மற்றும் எதிர்மறையான நோக்கு எவ்வாறு வயதானவர்களை பாதிக்கிறது என்பதை கண்டறிய ஓர் ஆராய்ச்சி நடந்தது. முதுமையுடன் அதிக ஞானத்தையும் அனுபவத்தையும் இணைத்துப் பேசும், மின்னல் வேகத்தில் தோன்றி மறையும் செய்திகளை வயதானவர்கள் பார்க்கும்படி செய்யப்பட்டபோது, அவர்கள் அதற்குப்பின் அதிக பலத்துடனும் தெம்புடனும் நடந்து சென்றதாக கண்டறியப்பட்டது. சொல்லப்போனால், இந்த முன்னேற்றம் 12 வார கால உடற்பயிற்சியால் கிடைக்கும் பலனுக்கு சமமாக இருந்தது!

நம்பிக்கை, நம்பிக்கையான மனநிலை, நம்பிக்கையான நோக்கு போன்ற உணர்ச்சிகள் ஏன் ஆரோக்கியம் தருவதாக தெரிகிறது? திட்டவட்டமான பதிலை அளிப்பதற்கு விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் ஒருவேளை மனிதனுடைய மனதையும் உடலையும் இன்னும் நன்றாக புரிந்துகொள்ளாமல் இருக்கலாம். ஆனாலும், இந்த விஷயத்தைப் பற்றி ஆராய்கிற நிபுணர்கள் ஓரளவு அறிவுப்பூர்வமான தகவலின் அடிப்படையில் ஊகிப்புகள் செய்கின்றனர். உதாரணமாக, நரம்பியல் பேராசிரியர் ஒருவர் இவ்வாறு கூறுகிறார்: “மகிழ்ச்சியாகவும் நம்பிக்கையாகவும் இருப்பது இன்பகரமானது. அதனால் கவலையும் அழுத்தமும் மிகக் குறைவாகவே ஏற்படுகிறது, இத்தகைய சூழ்நிலைமைகளில் உடல் செழித்தோங்குகிறது. ஆகவே, ஆரோக்கியத்திற்காக மனிதன் செய்யக்கூடிய மற்றொரு செயல் நம்பிக்கையோடு இருப்பதாகும்.”

இந்த எண்ணம் சில மருத்துவர்களுக்கும் உளநோய் வல்லுநர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் புதுமையாக தோன்றலாம், ஆனால் பைபிள் மாணாக்கருக்கு இது புதுமையானதல்ல. சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்னர், ஞானியாகிய சாலோமோன் ராஜா இந்தக் கருத்தை எழுத்தில் வடிப்பதற்கு ஆவியால் ஏவப்பட்டார்: “மனமகிழ்ச்சி நல்ல ஒளஷதம்; முறிந்த ஆவியோ எலும்புகளை உலரப்பண்ணும்.” (நீதிமொழிகள் 17:22) இந்த சமநிலையான கருத்தை கவனியுங்கள். மனமகிழ்ச்சி எந்தவொரு வியாதியையும் குணமாக்கிவிடும் என இந்த வசனம் சொல்வதில்லை, ஆனால் அது “நல்ல ஔஷதம்” என்றுதான் சொல்கிறது.

சொல்லப்போனால், நம்பிக்கை ஒரு மருந்தாக இருந்தால், எந்த மருத்துவர்தான் அதை எழுதிக் கொடுக்க மாட்டார்? அதோடு, ஆரோக்கியம் என்ற வட்டத்திற்கும் அப்பால் அதிக நன்மைகளை நம்பிக்கை அளிக்கிறது.

நம்பிக்கையான மனநிலை, நம்பிக்கையற்ற மனநிலை, உங்கள் வாழ்க்கை

நம்பிக்கையான மனநிலையுடைய ஆட்கள் பல வழிகளில் பயனடைவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். பள்ளியில், வேலை செய்யுமிடத்தில், விளையாட்டுத் துறையில்கூட அவர்கள் சிறப்பாக செய்கிறார்கள். உதாரணமாக, பெண்கள் தடகள அணியைப் பற்றி ஓர் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. பயிற்சியாளர்கள் அந்தப் பெண்களின் விளையாட்டுத் திறமைகளை மட்டுமே நூல்பிடித்தாற் போல மதிப்பிட்டார்கள். அதேசமயத்தில், அந்தப் பெண்களிடம் சுற்றாய்வு நடத்தப்பட்டு, அவர்களுடைய நம்பிக்கையின் அளவு கவனமாக மதிப்பிடப்பட்டது. விளையாட்டுத் திறமைகளைவிட நம்பிக்கையின் அளவே அவர்கள் வெற்றி பெறுவார்களா இல்லையா என்பதை துல்லியமாய் சுட்டிக்காட்டியதாக கண்டுபிடிக்கப்பட்டது. நம்பிக்கைக்கு ஏன் இந்தளவு வலிமைமிக்க செல்வாக்கு இருக்கிறது?

நம்பிக்கையான மனநிலைக்கு எதிரிடையான நம்பிக்கையற்ற மனநிலையைப் பற்றி ஆராய்வதன் மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. 1960-களில், மிருகங்களின் நடத்தை சம்பந்தமான பரிசோதனைகள் எதிர்பாராத தகவலை கொடுத்தன. அது, “கற்றுக்கொள்ளப்படும் நம்பிக்கையற்ற மனநிலை” (learned helplessness) என்ற சொற்றொடரை உருவாக்குவதற்கு அவர்களை வழிநடத்தியது. மனிதரும்கூட இதுபோன்ற கோளாறினால் அவதியுறக்கூடும் என்பதை அவர்கள் கண்டுபிடித்தனர். உதாரணமாக, ஆய்வில் உட்படுத்தப்பட்ட மனிதர்கள் காட்டுக் கத்தலான இரைச்சலை கேட்கும்படி செய்யப்பட்டனர், தொடர்ச்சியான பட்டன்களை அழுத்துவதன் மூலம் அதை நிறுத்திவிடலாம் என்றும் அவர்களிடம் சொல்லப்பட்டது. அந்த இரைச்சலை நிறுத்துவதில் அவர்கள் வெற்றி கண்டனர்.

இரண்டாவது தொகுதியினரும் அதையே செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர்​—⁠ஆனால் பட்டன்களை அழுத்தியும் இரைச்சல் நிற்கவில்லை. நீங்கள் கற்பனை செய்கிறபடி, இரண்டாவது தொகுதியிலிருந்த அநேகர் நம்பிக்கையற்ற மனநிலையை வளர்த்துக் கொண்டார்கள். பிற்பாடு நடத்தப்பட்ட சோதனைகளில், எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதற்கு அவர்கள் தயங்கினார்கள். என்ன செய்தாலும் ஒன்றும் தேறப் போவதில்லை என்றே உறுதியாக நினைத்தார்கள். ஆனால், இரண்டாவது தொகுதியினரிலும்கூட, நம்பிக்கையான மனநிலையுடையவர்கள் மனந்தளர மறுத்துவிட்டார்கள்.

அந்த ஆரம்ப பரிசோதனைகள் சிலவற்றை தயாரிப்பதற்கு உதவிய டாக்டர் மார்ட்டின் செலிக்மன் நம்பிக்கையான மனநிலையையும் நம்பிக்கையற்ற மனநிலையையும் ஆராயும் படிப்பை மேற்கொள்ளும்படி உந்துவிக்கப்பட்டார். லாயக்கற்றவர்கள் என்ற மனச்சாய்வுடையவர்கள் வெளிப்படுத்திய சிந்தையை அவர் கவனமாக ஆராய்ந்தார். இத்தகைய நம்பிக்கையற்ற மனநிலை வாழ்க்கையில் அநேக நடவடிக்கைகளில் ஈடுபடுவதை கடினமாக்குகிறது அல்லது முற்றிலும் செயலற்ற நிலைக்கு தள்ளுகிறது. நம்பிக்கையற்ற மனநிலையையும் அதன் விளைவுகளையும் செலிக்மன் இவ்வாறு தொகுத்துரைக்கிறார்: “துன்பத்திற்கு நாம்தான் காரணம், அது அப்படியேதான் இருக்கும், நாம் செய்கிற எல்லாவற்றையும் நாசமாக்கிவிடும் என நாம் பழக்கமாகவே நம்பினால், இன்னுமதிக துன்பமே நமக்கு நேரிடும் என்பதை என்னுடைய இருபத்தைந்து வருடகால ஆராய்ச்சி என்னை நம்ப வைத்திருக்கிறது.”

மேற்குறிப்பிடப்பட்ட இத்தகைய முடிவுகள் சிலருக்கு புதிதாக தோன்றலாம், ஆனால் பைபிள் மாணாக்கருக்கு அவை கேள்விப்பட்ட ஒன்றாகவே தொனிக்கின்றன. “ஆபத்துக் காலத்தில் நீ சோர்ந்து போவாயானால், உன் பெலன் குறுகினது” என்ற நீதிமொழியை கவனியுங்கள். (நீதிமொழிகள் 24:10) ஆம், எதிர்மறையான சிந்தைகளுடன்கூடிய சோர்வு, உங்களுடைய பலத்தை உறிஞ்சிவிடும் என பைபிள் தெளிவாக விளக்குகிறது. அப்படியானால், நம்பிக்கையற்ற மனநிலையை எதிர்த்துப் போராடி, உங்களுடைய வாழ்க்கையில் நம்பிக்கையை பெற எது உதவும்? (g04 4/22)

[பக்கம் 4, 5-ன் படம்]

நம்பிக்கை அதிக நன்மை தருகிறது