Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

புத்திசாலி கடல் பச்சோந்தி

புத்திசாலி கடல் பச்சோந்தி

புத்திசாலி கடல் பச்சோந்தி

“ஆக்டோபஸ்! ஐய்யோ பயங்கரம்! மனிதனையே விழுங்கிவிடும். அவனை தன்னிடமாக, தனக்குள்ளாக இழுத்துக்கொள்ளும்; அந்த ராட்சத பிராணி அவனை இப்படி அப்படி அசைய விடாமல் செய்து அவன் உயிரை கொஞ்சம் கொஞ்சமாக குடித்துவிடும்.” —⁠டாய்லர்ஸ் ஆஃப் த ஸீ, விக்டர் யூகோ எழுதியது.

ஆக்டோபஸ் அடிக்கடி தவறாக விமர்சிக்கப்பட்டிருக்கிறது. மேலே கொடுக்கப்பட்டதைப் போன்ற பூர்வகால கட்டுக்கதைகளும் கற்பனைக் கதைகளும் இந்த உயிரினத்தின் மீது “கறுப்புப் புள்ளி” குத்திவிட்டன.

ஆனால் நிஜத்தில், சுமார் 20 அடி நீளமும் 50 கிலோ எடையும் கொண்ட ராட்சத பசிபிக் ஆக்டோபஸ்கூட பொதுவாக மனிதரை தாக்குவது கிடையாது. சமீப காலமாக இந்த எட்டுக்கால் “ராட்சதன்” பற்றிய கட்டுக்கதைகள் மறைந்து, நிஜக் கதைகள் வலம்வருகின்றன; முக்குளிப்பவர்களும் கடல் உயிரியலாளர்களும் பல்வேறு வகையான ஆக்டோபஸுகளைப் பற்றி அதிகமாக கற்றிருக்கிறார்கள்.

இரையைப் பிடிப்பதும் எதிரிகளை சமாளிப்பதும்

ஆக்டோபஸ் மனிதர்களை சாப்பிடுவதற்குப் பதிலாக நண்டு, நத்தை போன்றவற்றை முக்கியமாக தின்கிறது; இரையைப் பிடிக்க எட்டுக் கால்களையும், கிட்டத்தட்ட 1,600 உறிஞ்சு உறுப்புகளையும் பயன்படுத்துகிறது. இந்த உறிஞ்சு உறுப்புகளின் உதவியால் ஒரு சிறிய ஆக்டோபஸ் தன் எடையைவிட 20 மடங்கு அதிக எடையுள்ளவற்றை சர்வசாதாரணமாக தன்வசம் இழுத்துக்கொள்கிறது! சில வகை ஆக்டோபஸ் இரை மீது விஷத்தை பீச்சியடிக்கிறது; மறு விநாடியே இரை ‘அவுட். * அதன்பின் அலகு போன்ற தன் வாய்ப்பகுதியால் இரையை பிடித்துத் தின்கிறது.

ஒருவேளை இன்னொரு பிராணி தன்னைக் கொல்ல முயலுகையில் ஆக்டோபஸ் எப்படி சமாளிக்கிறது? சமாளிக்கக் கடினமான ஒரு விநோதக் குறை அதற்கு இருக்கிறது. அதாவது, ஹீமோகுளோபினை அல்லாமல் ஹீமோசையானினை சார்ந்திருக்கும் அதன் வெளிறிய நீலநிற ரத்தத்தில் குறைவான ஆக்ஸிஜனே இருக்கிறது. இதன் காரணமாக ஆக்டோபஸ் சீக்கிரத்தில் சோர்வடைந்துவிடுகிறது. இந்தக் குறை ஒருபுறம் இருந்தாலும் கடல்நாய்கள், திமிங்கிலங்கள் போன்ற எதிரிகளிடமிருந்து தன்னை தற்காத்துக்கொள்ள விசேஷ திறமைகளையும் அது பெற்றிருக்கிறது.

அப்படிப்பட்ட திறமைகளில் ஒன்றுதான் தண்ணீரை பீச்சிக்கொண்டு நீந்துவதாகும். ஏதேனும் ஆபத்து வந்துவிட்டால், ஆக்டோபஸ் தன் தடித்த மேல் உறையிலிருந்து தண்ணீரை பீச்சியடிப்பதன் மூலம் பின்பக்கமாக நீந்துகிறது. இந்தத் தந்திரசாலி இன்னொரு விதத்திலும் சாமர்த்தியமாக தப்பிக்கிறது. அது ஒருவித மையை சுரக்கிறது; இந்த மையில், கடல்நீரால் நீர்த்துப்போகாத நிறமி உள்ளது. இது, மேகம் போல் உருவெடுத்து அதற்கு மறைவு அளிக்கிறது; இந்த மேகம் கலைவதற்கு முன்பாகவே அது திசை மாறி பாதுகாப்பான இடத்திற்கு தப்பிச் சென்றுவிடுகிறது.

மாறுவேட மன்னன்

ஆக்டோபஸ், எதிரியிடம் மாட்டுவதை முதலாவதாக விரும்புவதே இல்லை. அது எவ்வாறு எதிரிகளிடமிருந்து மறைந்துகொள்கிறது? புகழ்பெற்ற கடலடி ஆய்வாளரான ஷாக்-ஈவ் காஸ்ட்டோ இவ்வாறு எழுதினார்: “மார்செய்ல்ஸ் நகரில் எங்கள் குழு ஆக்டோபஸுகளை படம்பிடிக்க ஆரம்பித்தபோது, அந்தப் பகுதியில் அவை இல்லை என்றுதான் முக்குளித்த பெரும்பாலோர் சொன்னார்கள்; ஒருவேளை அங்கு அவை இருந்திருந்தாலும் இப்போது இல்லை என்று சொன்னார்கள். உண்மையில், முக்குளிப்பவர்கள் ஆக்டோபஸுகளின் பக்கத்திலேயே நீந்திச் சென்றும் அவற்றை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. அந்தளவுக்கு அவை மாறுவேடம் போட்டு ‘மாயமாக’ மறைந்துகொண்டிருந்தன.” ஆக்டோபஸுகளால் இது எப்படி முடிந்தது?

வளர்ந்த ஆக்டோபஸின் சருமத்தில் கிட்டத்தட்ட 20 லட்சம் க்ரோமட்டோஃபோர்கள், அதாவது நிறமி செல்கள் இருக்கின்றன; அப்படிப் பார்த்தால் ஒவ்வொரு சதுர மில்லிமீட்டருக்கும் 200 செல்கள் வரை இருக்கின்றன. ஒவ்வொரு செல்லிலும் சிவப்பு, மஞ்சள், அல்லது கறுப்பு நிறமி இருக்கிறது. செல்களைச் சுற்றிலுமுள்ள தசைகளை சுருக்குவதன் மூலம் அல்லது தளர்த்துவதன் மூலம் சில விநாடிகளில் ஆக்டோபஸ் அடர்த்தியான ஒரு நிறத்தில் அல்லது பல நிற டிஸைன்களில் பளிச்சென்று உருமாறுகிறது.

இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், ஆக்டோபஸுகளுக்கு நிறங்களை பிரித்துப் பார்க்கும் திறன் கிடையாது. இருந்தாலும் அது மூன்று நிறமிகள் போக இன்னும் பலவித நிறங்களில் தன் சருமத்தை மாற்றிக்கொள்ள முடியும். கண்ணாடித் தட்டுகளைக் கொண்ட இரிடோசைட்டுகள் என்ற செல்கள், ஆக்டோபஸின் சுற்றுப்புற நிறத்திற்கு ‘மாட்ச்’ ஆகும் விதத்தில் ஒளியை விலகச் செய்கின்றன. இது மட்டுமல்ல. ஆக்டோபஸ் பவழப்பாறையில் ஒளிந்திருக்கும்போது அதன் வழுவழுப்பான சருமம் முள்முள்ளாக குத்திட்டு நிற்கும்; இவ்வாறு அது சொரசொரப்பான பரப்போடு ஒன்றிவிடும்.

வீட்டைக் கட்டி பராமரிப்பதில் கடின உழைப்பாளி

ஆக்டோபஸின் ‘வீட்டைக்’ கண்டுபிடிப்பது கடினமாயிருப்பதில் ஆச்சரியமே இல்லை. அவை இடுக்குகளிலும் பெரிய பாறைகளுக்கு அடியிலும் வீடுகளைக் கட்ட விரும்புகின்றன. அந்தந்த இடங்களில் கிடைக்கிற பொருட்களை வைத்தே வீட்டைக் கட்டுகின்றன. கற்கள், உலோகத் துண்டுகள், சிப்பிகள், சிதைந்த கப்பலின் சிதிலங்கள், கடல் குப்பைக்கூளங்கள் ஆகியவற்றால் ஆக்டோபஸின் வீட்டுக் கூரையும் சுவர்களும் அமைக்கப்பட்டிருக்கலாம்.

வீட்டைக் கட்டி முடித்தவுடன் ஆக்டோபஸ் சிரத்தையெடுத்து அதைப் பராமரிக்கிறது. வீட்டு மண்தரையின் சொரசொரப்பைப் போக்க தண்ணீரை பீச்சியடிக்கிறது. சாப்பிட்டு முடித்தவுடன் மிச்ச மீதியெல்லாவற்றையும் வீட்டிற்கு வெளியே அப்புறப்படுத்திவிடுகிறது. இதன் பராமரிக்கும் திறனை சோதித்துப் பார்ப்பதற்காக காஸ்ட்டோவின் குழுவினர் ஆக்டோபஸின் வீட்டுச் சுவரிலிருந்த சில கற்களை அகற்றினார்கள். ஆக்டோபஸ் என்ன செய்தது? ஒவ்வொரு கல்லாக எடுத்து வைத்து மீண்டும் சுவர் எழுப்பியது! காஸ்ட்டோ இவ்வாறு எழுதினார்: “சுவரை மறுபடியும் முழுமையாக கட்டி முடிக்கும்வரை இப்படித்தான் செய்தது; அது அச்சு அசல் முதலில் இருந்த சுவரைப் போலவே இருந்தது.” வீட்டை சுத்தமாகவும் நேர்த்தியாகவும் வைத்துக்கொள்வதில் ஆக்டோபஸ் பெயர்போனது. முக்குளிப்பவர்கள், மணலோ குப்பையோ குவிந்திருக்கும் வீட்டைக் கண்டால் அது காலி வீடு என தெரிந்துகொள்வார்கள்.

கடைசி வீடு

பொதுவாக, பெண் ஆக்டோபஸ் குடியிருக்கும் கடைசியும் முக்கியமுமான வீடு, முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் வீடாகும். ஆண் ஆக்டோபஸ் விந்துப் பையை தன் உடலில் செலுத்தியபின் அது பொருத்தமான வீட்டைத் தேடி வாரக்கணக்காக அலைந்து திரியும்; அதன் கரு அணுக்கள் வெளியாகி விந்துவுடன் சேர்ந்து சினையுறும் வரை அந்த விந்துப் பையை அது உடலிலேயே வைத்துக்கொள்கிறது. பிறகு வீட்டைக் கண்டுபிடித்தவுடன் அதை ஸ்திரப்படுத்தி, முட்டையிட்டு, ஆயிரக்கணக்கான முட்டைகளை கொத்து கொத்தாக கூரைமீது ஒட்ட வைத்துவிடும். ஆனால் நீல வளைய ஆக்டோபஸ் மட்டும் இப்படிப்பட்ட எந்த வீட்டையும் கட்டுவதில்லை. பளிச்சிடும் அதன் நிறங்களே எதிரிகளை எட்டி நிற்கும்படி எச்சரித்துவிடுவதால் தன் குட்டிகளை திறந்த கடல்பரப்பில் வளர்க்கவே விரும்புகிறது; “நச்சு! அபாயம்!” என சொல்லாமல் சொல்லி எச்சரிக்கும் அதன் நிறங்கள் அங்கு எடுப்பாக தெரிவதால் அந்தத் திறந்த கடல்பரப்பே பாதுகாப்பான இடமாக இருக்கிறது.

பெண் ஆக்டோபஸ் கடமையுணர்ச்சியுள்ள ஒரு தாய். முட்டையிட்ட பிறகு அது பெரும்பாலும் உண்ணாமல் தின்னாமல் இருந்து விடுகிறது. அதற்குப் பதிலாக தன் முட்டைகளை பாதுகாத்து, சுத்தப்படுத்தி, அதிக ஆக்ஸிஜன் கிடைக்குமாறு செய்து, வீட்டை ஸ்திரப்படுத்தி, எதிரிகளை விரட்டியடிக்க எப்போதும் தயாராக நிற்கிறது. முட்டைகள் பொரிந்தவுடன் தாய் ஆக்டோபஸ் இறந்துவிடுகிறது; ஆனால் இறுதி மூச்சு வரை அவற்றை நன்கு பேணிப் பராமரிக்கிறது. “பெண் ஆக்டோபஸ் தன் முட்டைகளை அதோகதியாக விட்டுச் சென்றதாக இதுவரை எவரும் அறிக்கை செய்ததில்லை” என காஸ்ட்டோ சொன்னார்.

பெரும்பாலான இனத்தைச் சேர்ந்த ஆக்டோபஸ் குஞ்சுகள், பிறந்ததுமே நீரின் மேற்பரப்பிற்கு சென்று மிதக்கின்றன. அவற்றில் அநேகத்தை மற்ற கடற்பிராணிகள் தின்றுவிடுகின்றன. இருந்தாலும் உயிர்தப்பியவை பல வாரங்களுக்குப் பிற்பாடு மறுபடியும் கடலின் அடித்தளத்திற்கு வந்து, பெரிய ஆக்டோபஸுகளாக வளருகின்றன; அவை மூன்று வருடங்கள் வரை உயிர்வாழ்கின்றன.

எந்தளவு புத்திசாலிகள்?

மிருகங்களைப் பொறுத்தவரை, அனுபவ பாடம் கற்றுக்கொண்டு பிரச்சினைகளை தீர்க்கும் திறனே “புத்திக்கூர்மை” என்பதாக சிலர் சொல்கின்றனர். இதைக் குறித்து காஸ்ட்டோ சொல்வதைக் கவனியுங்கள்: “ஆக்டோபஸின் கூச்ச உணர்வு முக்கியமாய் விவேகத்தையும் ஜாக்கிரதை உணர்வையும் அடிப்படையாகக் கொண்ட பகுத்துணர்வுமிக்க செயலே. . . . முக்குளிப்பவர் தனக்கு எவ்விதத்திலும் தீங்கு செய்யப்போவதில்லை என்பதை அறிந்தவுடனேயே ஆக்டோபஸின் கூச்சம்​—⁠எவ்வித ‘காட்டு’ மிருகத்தையும்விட சீக்கிரத்தில்⁠—⁠போய்விடுகிறது.”

முதுகெலும்பற்ற பிராணிகளிலேயே அதிக வளர்ச்சியடைந்த மூளையையும் கண்களையும் உடையதுதான் ஆக்டோபஸ். நம் கண்களைப் போலவே அவற்றின் கண்களாலும் துல்லியமாக ஃபோகஸ் செய்ய முடியும், வித்தியாசமான வெளிச்சங்களுக்கு ஏற்ப மாற்றியமைக்கவும் முடியும். மூளையிலுள்ள ஆப்டிக் லோப், கண்களிலிருந்து பெறும் தகவலை மொழிபெயர்க்கிறது; இதுவும் கூரிய தொடு உணர்வும், ஆச்சரியப்படத்தக்க விதத்தில் புத்திசாலித்தனமான தீர்மானங்களை எடுக்க ஆக்டோபஸுக்கு உதவுகின்றன.

பாட்டிலில் போட்டு மூடப்பட்டிருந்த நண்டை பிடிப்பதற்காக ஆக்டோபஸ் அந்த பாட்டிலின் மூடியை கழற்ற கற்றுக்கொண்டதை பார்த்ததாக அநேக விஞ்ஞானிகள் அறிக்கை செய்கிறார்கள். அதுமட்டுமல்ல, ஆக்டோபஸால் ஒரு ஜாடியின் மூடியை திருகிக் கழற்றியெடுத்துவிட்டு அதிலுள்ள உணவை சாப்பிட முடியுமென மற்றவர்கள் சொல்லியிருக்கிறார்கள். கனடாவிலுள்ள வான்கூவர் நீர்வாழ் பிராணிகளின் காப்பகத்தில், ஒரு ஆக்டோபஸ் இரவுதோறும் கழிவுநீர்க் குழாய் வழியாக பக்கத்து தொட்டிக்கு சென்று அங்கிருந்த மீன்களை சாப்பிட்டதாம்.

ஆக்டோபஸின் புத்திக்கூர்மையைப் பற்றி இயற்கையின் ரகசியங்களை கண்டறிதல் என்ற ஆங்கில புத்தகம் இவ்வாறு முடிக்கிறது: “பொதுவாக உயர் பாலூட்டி வகைகளுக்குத்தான் அதிக புத்திக்கூர்மை இருப்பதாக சொல்கிறோம்; ஆனால் ஆக்டோபஸுகளும் படுபுத்திசாலிகள் என்பதற்கு அத்தாட்சி இருக்கிறது.”

ஆக்டோபஸின் புத்திசாலித்தனம், “இயல்புணர்வால் ஞானமுள்ளவை” என்று பைபிள் விவரிக்கும் உயிரினங்களை நம் ஞாபகத்திற்கு கொண்டுவரலாம். (நீதிமொழிகள் 30:24, NW) அவை உண்மையில் அற்புதப் படைப்புகள். விஞ்ஞானிகளும் சரி முக்குளிப்பவர்களும் சரி ஆக்டோபஸை விக்டர் யூகோ கற்பனை செய்தபடி ‘பயங்கரமான’ ஒன்றாக இனியும் கருதுவதில்லை. புத்திசாலித்தனமான இந்தக் கடல் பச்சோந்தியை ஆராய்பவர்கள் ஆச்சரியத்தில் வாயடைத்துப் போகிறார்கள். (g04 4/22)

[அடிக்குறிப்பு]

^ பாரா. 6 ஆஸ்திரேலியாவில் காணப்படும் நீல வளைய ஆக்டோபஸின் விஷம் மட்டுமே மனிதனைக் கொல்லக்கூடியது. அது சுவாச மண்டலத்தை செயலிழக்கச் செய்துவிடுகிறது.

[பக்கம் 15-ன் படம்]

நீல வளைய ஆக்டோபஸ்

[படத்திற்கான நன்றி]

© Jeffrey Rosenfeld

[பக்கம் 16-ன் படம்]

பசிபிக் ரீஃப் ஆக்டோபஸ் தன்னை பிடிக்க வரும் மீனின் வாயிற்கு நேர் கீழாகவே மாறுவேடத்தில் மறைந்திருக்கும் காட்சி. உங்களால் அதைக் கண்டுபிடிக்க முடிகிறதா?

[பக்கம் 16, 17-ன் படங்கள்]

ஆக்டோபஸுகளின் வகைகளும் நிறங்களும் ஏராளம்

[பக்கம் 17-ன் படம்]

சின்னஞ்சிறு குட்டிகள் மேற்பரப்புக்கு வருகின்றன

[படத்திற்கான நன்றி]

© Fred Bavendam

[பக்கம் 16-ன் படங்களுக்கான நன்றி]

மேலே இடது: © Roger T. Hanlon; மேலே: © Jeffrey Rosenfeld