Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அநேகர் ஏன் அலர்ஜியால் அவதிப்படுகிறார்கள்?

அநேகர் ஏன் அலர்ஜியால் அவதிப்படுகிறார்கள்?

அநேகர் ஏன் அலர்ஜியால் அவதிப்படுகிறார்கள்?

ஸ்பெயினிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

உங்கள் கண்களில் ஒரே அரிப்பு, நீர் வடிகிறது, நாள் முழுவதும் தும்மல், மூக்கு ஒழுகுகிறது, மூச்சு விடுவதற்கு சிரமமாக இருக்கிறது. என்ன ஆகிவிட்டது? உங்களுக்கு ஒருவேளை ஜலதோஷம் பிடித்திருக்கலாம். ஆனால் மகரந்தத் தூள் அருகே இருக்கையில் இந்த அறிகுறிகள் எல்லாம் தோன்றினால் உங்களுக்கு ஒருவேளை அலர்ஜி (hay fever) ஏற்பட்டிருக்கலாம். அப்படியானால் நீங்கள் மட்டுமே அல்ல அநேகர் இந்தப் பிரச்சினையால் அவதிப்படுகிறார்கள். அவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் அதிகரித்து வருகிறது.

“அலர்ஜி என்பது ஒத்துக்கொள்ளாத பொருளுக்கு எதிராக ஒருவரின் உடல் மிதமிஞ்சி எதிர்வினை புரிவதைக் குறிக்கிறது. அலர்ஜியால் அவதிப்படுபவர்களுடைய நோய் தற்காப்பு அமைப்பு, மகரந்தத் தூள் உட்பட வேற்றுப் பொருள் என அது கருதும் எல்லா பொருட்களையும், அவை உண்மையிலேயே ஆபத்தற்றவையாக இருந்தாலும்கூட நிராகரித்துவிடுகிறது” என ம்யூஹேர் டே ஆய் என்ற பத்திரிகை அறிக்கை செய்கிறது. இந்த விதத்தில் நோய் தற்காப்பு அமைப்பு எதிர்வினை புரிகையில் ஆரம்பத்தில் விவரிக்கப்பட்ட எரிச்சலூட்டும் அறிகுறிகள் தோன்றுகின்றன.

ஆங்கிலேய மருத்துவரான ஜான் பாஸ்டாக் இந்த அலர்ஜியின் அறிகுறிகளை 1819-⁠ல் விளக்கினார். அப்படி விளக்கமளித்தவர்களில் இவரே முதன்மையானவர். ஒவ்வொரு சீசனிலும் தான் அவதிப்பட்ட சமயத்தில் தனக்கு வந்த அறிகுறிகளையெல்லாம் அவர் விவரமாக விளக்கினார். புதிதாக வெட்டப்பட்ட வைக்கோலினால் அந்த அறிகுறிகள் ஏற்படுவதாக அவர் நம்பினார். இப்படிப்பட்ட அலர்ஜியைத் தூண்டுவிக்க காரணமாக இருப்பது உண்மையில் பல்வேறு விதமான மகரந்தத் தூள்களே என்பது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. 19-⁠ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இங்கிலாந்து முழுவதிலும் வெகு சிலரே இதனால் அவதிப்படுவதை பாஸ்டாக் கண்டார்.

ஆனால் இன்று இத்தனை அநேகர் அலர்ஜியால் அவதிப்படுவதற்குக் காரணமென்ன? இது சம்பந்தமாக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்திவரும் இரண்டு கோட்பாடுகளைப் பற்றி சொல்கிறார் டாக்டர் காவ்யேர் சூபிசா; இவர் ஸ்பெயினில் மாட்ரிட்டிலுள்ள ஆஸ்துமா, அலர்ஜிகள் தொடர்பான ஆராய்ச்சி மைய இயக்குநர் ஆவார். அந்தக் கோட்பாடுகளில் ஒன்று, டீசல் எஞ்சின்கள்தான் இதற்குக் காரணமென குற்றம்சாட்டுகிறது. டீசல் எரிபொருளிலிருந்து வரும் துகள்கள் நம் உடலிலுள்ள அலர்ஜென்களை செயல்பட தூண்டுவிக்கலாம் என்று நம்பப்படுகிறது; அலர்ஜென்கள் என்பது அலர்ஜி எதிர்வினையை ஊக்குவிக்கும் ஏதுக்களாகும். அலர்ஜி நிபுணரான டாக்டர் க்வான் கோட்னி பாமர் என்பவரின்படி “அலர்ஜி, வளர்ந்த நாடுகளின் ஜனத்தொகையில் 20 சதவீதத்தினரை, அதுவும் நகரவாசிகளை அதிகமாக ஆட்டிப்படைக்கிறது.”

அளவுக்கு அதிகமான சுகாதார முறைகளைப் பின்பற்றுவதே இதற்குக் காரணமாக இருக்கலாமென இரண்டாவது கோட்பாடு சொல்கிறது. ‘நாம் சுத்தம் சுகாதாரமுள்ள ஆப்ரேஷன் தியேட்டரில் பிறக்கிறோம், நோய்க் கிருமிகள் இல்லாத உணவை உண்கிறோம், அநேக நோய்களுக்கு எதிராக தடுப்பூசி போட்டுக் கொள்கிறோம், வியாதி கண்டதும் ஆன்டிபயாடிக்கை விழுங்குகிறோம். இவ்வாறு குழந்தை பருவத்திலிருந்தே நம்முடைய நோய் தற்காப்பு அமைப்பு அலர்ஜியால் பாதிக்கப்படும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறது’ என விளக்குகிறார் டாக்டர் சூபிசா.

இந்த எதிர்ப்பாற்றலின் (immunological) எதிர்வினைக்கு நீங்கள் பலியாகியிருக்கிறீர்கள் என்றால் விரக்தியடைந்து விடாதீர்கள்! சரியான விதத்தில் நோயைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதன் மூலம் அலர்ஜிக்கான இந்த எரிச்சலூட்டும் அறிகுறிகளைக் கட்டுப்படுத்த முடியும், அவை அடிக்கடி வராமலும் பெரிதும் பாதிக்காமலும் காத்துக்கொள்ளவும்கூட முடியும். (g04 5/22)