Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அவன் ஏன் என்னை ரொம்ப மோசமாக நடத்துகிறான்?

அவன் ஏன் என்னை ரொம்ப மோசமாக நடத்துகிறான்?

இளைஞர் கேட்கின்றனர் . . .

அவன் ஏன் என்னை ரொம்ப மோசமாக நடத்துகிறான்?

“அடிக்கடி என் [பாய் ஃப்ரண்ட்] சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் என்னை குறைகூறுகிறான். ஆனால் நான் இன்னும் அவனைத்தான் விரும்புகிறேன்.”​⁠காத்ரின். a

“வெளியில் எந்த [காயமும்] தெரியவில்லை, ஆனால் உள்ளுக்குள் வலியால் துடித்தேன்.”​⁠ஆன்ட்ரேயா, பாய் ஃப்ரண்டிடம் கன்னத்தில் அறை வாங்கியவள்.

மிகவும் கவர்ச்சியாக, கண்ணியமாக தோன்றுகிற ஒரு வாலிபனை ஓர் இளம் பெண் காதலிக்கிறாள். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அவனுடைய சாயம் வெளுக்க ஆரம்பிக்கிறது. நேசமான வார்த்தைகள் நெஞ்சை சுடும் நக்கலான, குறைகூறும் வார்த்தைகளாக மாறுகின்றன. இதெல்லாம் ஒன்றுமில்லை, செல்லமான கிண்டல்கள்தான் என நினைத்து முதலில் அவற்றையெல்லாம் அவள் ஒதுக்கித் தள்ளிவிடுகிறாள். ஆனால் நிலைமை ரொம்ப மோசமாகி, சொல்லால் அடிப்பதும், கோபத்தில் கொதித்தெழுவதும், பின்பு அதற்காக வருத்தத்தைத் தெரிவிப்பதுமே அவனுடைய வேலையாகிப் போய்விடுகிறது. அவன் இப்படியெல்லாம் நடப்பதற்கு தான்தான் காரணம், என்றைக்காவது ஒருநாள் மாறிவிடுவான் என நினைத்துக்கொண்டு, அந்த இளம் பெண் அப்படியே எல்லா வேதனையையும் தன் மனதிற்குள்ளேயே போட்டு புதைத்துவிடுகிறாள். ஆனால் நிலைமை தேறுகிற மாதிரி தெரிவதில்லை. இப்பொழுது அவளுடைய பாய் ஃப்ரண்ட் இன்னும் மோசமாக நடக்க ஆரம்பித்து, அவள் மீது எரிந்துவிழுகிறான், கத்திக் கூச்சல் போடுகிறான். ஒரு தடவை கோபாவேசத்தில் அவளை அப்படியே ஒரே தள்ளாக தள்ளிவிடுகிறான்! அடுத்த தடவை தன்னை அடித்தே விடுவான் என அவள் அஞ்சி நடுங்க ஆரம்பிக்கிறாள். இந்தச் சூழ்நிலை இன்றைக்கு சகஜமான ஒன்றாகிவிட்டது. b

வசை மொழியும் அடியும் வாங்கும் காதலர்கள் சதா ஏச்சுப் பேச்சுக்கும் வசைபாட்டுக்கும் கோபாவேசத்துக்கும் ஆளாகலாம். நீங்கள் அப்படிப்பட்ட நிலைமையில் இருக்கிறீர்களா? (“எச்சரிப்பூட்டும் சில அறிகுறிகள்” என்ற பெட்டியைக் காண்க.) அப்படியானால், என்ன செய்வது, ஏது செய்வது என தெரியாமல் போகுமளவிற்கு உங்களுக்கு ஒரே கவலையாகவும் குழப்பமாகவும் இருக்கலாம்.

நீங்கள் நினைப்பது போல இப்படிப்பட்ட நிலைமைகளெல்லாம் ஒன்றும் அசாதாரணமானவை அல்ல. ஐந்து பேரில் ஒருவர் ஏதாவது ஒருவகை காதல் வன்முறைக்கு ஆளாகியிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கணக்கிடுகின்றனர். திட்டுவதை ஒருவகை வன்முறையாக எடுத்துக்கொண்டால், இதற்கு ஐந்தில் நான்கு பேர் ஆளாகிறார்கள். பொதுவாக மக்கள் நினைக்கிறபடி, இதற்கு பலியாகிறவர்கள் எல்லாருமே பெண்கள் அல்ல. காதல் வன்முறையைப் பற்றி ஒரு பிரிட்டிஷ் ஆராய்ச்சி கூறுகிறபடி, “ஆண்கள் பெண்கள் இருசாராருமே கிட்டத்தட்ட சரிவிகிதத்தில்” இதற்கு பலியாகிறார்கள் என அறிவிக்கப்படுகிறது. c

காதலிக்கும்போது ஏன் இத்தகைய மோசமான நடத்தை சம்பவிக்கிறது? நீங்கள் இத்தகைய சூழ்நிலைமையில் இருந்தால் என்ன செய்ய வேண்டும்?

கடவுளுடைய நோக்குநிலையை அறிதல்

கடவுளுடைய பார்வையில் இப்படிப்பட்ட சூழ்நிலைமை எவ்வளவு பயங்கரமானது என்பதை முதலாவதாக நீங்கள் அறிந்திருக்க வேண்டும். பிறரை புண்படுத்துகிற காரியங்களை சொல்வதும் செய்வதும் அபூரண மனிதருக்கு சகஜம் என்பது உண்மைதான். (யாக்கோபு 3:2) ஒருவரையொருவர் நேசிக்கிற, நம்புகிற ஆட்களுக்கும்கூட எப்போதாவது கருத்து வேற்றுமைகள் உண்டாகத்தான் செய்யும். உதாரணமாக, அப்போஸ்தலன் பவுலும் பர்னபாஸும் முதிர்ச்சி வாய்ந்த கிறிஸ்தவர்களாக இருந்தார்கள். என்றாலும், ஒரு சந்தர்ப்பத்தில், அவர்களுக்கு இடையே ‘கடுங்கோபம் மூண்டது.’ (அப்போஸ்தலர் 15:39) ஆகவே, நீங்கள் யாரையாவது காதலித்து வந்தால், அவ்வப்பொழுது உங்களுக்கு இடையே இறுக்கமான சூழ்நிலை ஏற்படலாம்.

மேலும், உங்களுடைய பாய் ஃப்ரண்ட் ஒருபோதும் திட்டவே கூடாது என எதிர்பார்ப்பதும் நடைமுறைக்கு ஒத்துவராது. சொல்லப்போனால், நீங்கள் கலியாணம் செய்துகொள்ள திட்டமிட்டு வருகிறீர்கள் அல்லவா? உங்களிடம் காணப்படும் ஏதாவது ஒரு போக்கு அல்லது பழக்கம் அவனுக்குப் பிடிக்காமலிருந்தால், அதைப் பற்றி பேசுவது அவனுடைய பங்கில் அன்பான செயல்தானே? குறைகூறுவது வேதனையாக இருக்கும் என்பது உண்மைதான். (எபிரெயர் 12:11) ஆனால், அன்பாக குறையை எடுத்துச் சொன்னால், அது தூஷணப் பேச்சாக இருக்காது.​—நீதிமொழிகள் 27:⁠6.

அதற்காக காட்டுக்கத்தல் கத்துவது, கன்னத்தில் அறைவது, குத்துவது, அல்லது திட்டுவது எல்லாம் கொஞ்சம்கூட சரியில்லை. ‘கோபமும் மூர்க்கமும் பொறாமையும், . . . தூஷணமான வார்த்தைகளுமாகிய இவைகளையெல்லாம்’ பைபிள் கண்டனம் செய்கிறது. (கொலோசெயர் 3:8) மற்றவர்களை இழிவுபடுத்துவதற்கு, அச்சுறுத்துவதற்கு, அல்லது ஒடுக்குவதற்கு தனது ‘அதிகாரத்தை’ ஒருவர் பயன்படுத்தும்போது யெகோவா கடுங்கோபம் கொள்கிறார். (பிரசங்கி 4:1; 8:9) சொல்லப்போனால், புருஷர்கள் ‘தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூர வேண்டும்; . . . தன் சொந்த மாம்சத்தைப் பகைத்தவன் ஒருவனுமில்லையே; . . . ஒவ்வொருவனும் தன் மாம்சத்தைப் போஷித்துக் காப்பாற்றுகிறான்’ என கடவுளுடைய வார்த்தை கட்டளையிடுகிறது. (எபேசியர் 5:28, 29) காதலிக்கும் பெண்ணை தூஷணமாக பேசுகிற அல்லது தவறாக நடத்துகிற ஒருவன் தான் கணவனாக இருப்பதற்கு தகுதியில்லாதவன் என்பதைத்தான் காட்டுகிறான். அதேசமயத்தில், யெகோவா தேவனுடைய கோபத்தையும் கிளறிவிடுகிறான்!

அது உங்கள் தப்பு அல்ல!

ஆனால், துஷ்பிரயோகம் செய்கிறவர்கள் பெரும்பாலும் மற்றவர்களைத்தான் குற்றம் சாட்டுகிறார்கள். ஆகவே, உங்களுடைய பாய் ஃப்ரண்ட் கோபப்படுவதற்கு நீங்கள்தான் காரணம் என ஒருவேளை உணரக்கூடும். ஆனால் அவனுடைய கோபத்திற்கும் உங்களுக்கும் அதிக சம்பந்தமோ அல்லது எந்தவித சம்பந்தமோ இல்லாதிருக்கலாம். வன்முறையை ஆயுதமாக பயன்படுத்துவதும் திட்டுவதும் சகஜமாக கருதப்படும் வீடுகளில் வளர்ந்த ஆண்களே பெரும்பாலும் துஷ்பிரயோகம் செய்கிறார்கள். d சில நாடுகளில், ஆண்கள் ஆதிக்கம் செலுத்துகிறவர்களாக இருக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிற கலாச்சாரம் வாலிபர்களை பாதிக்கிறது. “ஆம்பிளையாக” நடந்துகொள்ளும்படி அவர்களுடைய சகாக்களும்கூட அவர்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்கக்கூடும். தன்னம்பிக்கை இல்லாததால், நீங்கள் சொல்கிற அல்லது செய்கிற கிட்டத்தட்ட எல்லா காரியங்களுமே தன்னை அச்சுறுத்துவதாக அவன் நினைக்கலாம்.

சூழ்நிலைமை எதுவாக இருந்தாலும்சரி, மற்றொருவர் கோபத்தில் கொதித்தெழுவதற்கு நீங்கள் பொறுப்பாளி அல்ல. தூஷணமான பேச்சும் வன்முறையும் ஒருபோதும் சரியல்ல.

உங்கள் சிந்தையை மாற்றிக்கொள்ளுதல்

அப்படியிருந்தபோதிலும், காரியங்களைப் பற்றிய உங்களுடைய நோக்குநிலையை மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கலாம். எப்படி? இதை சிந்தித்துப் பாருங்கள்: வன்முறையும் புண்படுத்தும் பேச்சும் நிறைந்த ஒரு சூழலில் ஒரு பெண் வளர்ந்து வந்திருந்தால், இப்படிப்பட்ட விஷயங்களெல்லாம் அவளுக்கு இயல்பாக தோன்றலாம். இத்தகைய கிறிஸ்தவமற்ற நடத்தையை வெறுப்பதற்கு மாறாக, அதை அவள் சகித்துக்கொள்ளக்கூடும்​—⁠ஒருவேளை அது அவளுக்கு கவர்ச்சியாகவும்கூட இருக்கலாம். சொல்லப்போனால், ரொம்ப மரியாதையுடன் நடந்துகொள்கிற ஆண்களை சுத்த அறுவையாக நினைப்பதாக துஷ்பிரயோகத்திற்கு பலியான பெண்கள் சிலர் ஒத்துக்கொள்கிறார்கள். வேறுசில இளம் பெண்களோ தங்களுடைய பாய் ஃப்ரண்டின் குணத்தை மாற்றிவிட முடியும் என்ற ஆசைக் கனவில் மிதக்கிறார்கள்.

இதில் ஏதாவது உங்களுடைய விஷயத்தில் உண்மையாக இருந்தால், இதன் சம்பந்தமாக ‘உங்கள் மனம் புதிதாகிறதினாலே நீங்கள் மறுரூபமாக’ வேண்டும். (ரோமர் 12:2) இப்படிப்பட்ட துஷ்பிரயோகத்தைப் பற்றி யெகோவா எப்படி கருதுகிறார் என்பதை ஜெபம், படிப்பு, தியானம் ஆகியவற்றின் மூலம் கவனமாக சிந்தித்துப் பார்த்து, அதை வெறுக்கத்தக்க ஒன்றாக கருதுங்கள். நீங்கள் தவறாக நடத்தப்படுவதற்கு எந்த விதத்திலும் தகுதியானவர்கள் அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும். கோபாவேசப்படும் பாய் ஃப்ரண்டை மாற்றும் திறமை உங்களுக்கு இல்லை என்பதை புரிந்துகொள்ள அடக்கத்தை வளர்த்துக்கொள்வது​—⁠உங்களுடைய வரம்புகளை உணர்ந்துகொள்வது​—⁠உதவியாக இருக்கும். தன்னை மாற்றிக்கொள்வது அவனுடைய பொறுப்பு!​—கலாத்தியர் 6:5.

இளம் பெண்கள் சிலர் தங்களைக் குறித்து தாழ்வாக மதிப்பிடுவதால் தவறாக நடத்தப்படுவதை சகித்துக்கொள்கிறார்கள். ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட காத்ரின் இவ்வாறு கூறுகிறாள்: “அவன் இல்லாத வாழ்க்கையை என்னால் நினைத்துப் பார்க்கவே முடியாது, இவனைவிட நல்ல வேறொரு ஆளை என்னால் கற்பனைகூட பண்ணிப் பார்க்க முடியாது.” ஹெல்கா என்ற இளம் பெண்ணும் தனது பாய் ஃப்ரண்டைப் பற்றி இப்படித்தான் கூறினாள்: “அவன் என்னை அடிக்கட்டும், ஏனென்றால் என்னை கண்டுக்காமல் இருப்பதைவிட இது எவ்வளவோ பரவாயில்லை.”

வெற்றிகரமான உறவுக்கு இத்தகைய நோக்குநிலைகள் நல்ல அஸ்திவாரமாக இருக்கின்றனவா? சொல்லப்போனால், உங்களையே நீங்கள் நேசிக்க முடியாதிருந்தால், வேறொருவரை உங்களால் உண்மையிலேயே நேசிக்க முடியுமா? (மத்தேயு 19:19) சமநிலையான சுயமரியாதையை வளர்த்துக்கொள்ள முயலுங்கள். e தவறாக நடத்தப்படுவதை சகித்துக்கொள்வது அதைச் செய்ய உங்களுக்கு உதவாது. இரேனா என்ற இளம் பெண் அனுபவப்பூர்வமாக அறிந்திருக்கிறபடி, தவறாக நடத்தப்படுவதை சகித்துக்கொள்வது “உங்களுடைய எல்லா சுயமரியாதையையும் பறித்துவிடும்.”

உண்மையை உணர்ந்துகொள்ளுதல்

துஷ்பிரயோகம் செய்கிறான் என்பதை ஒத்துக்கொள்வது சிலருக்கு கடினமாக இருக்கலாம்​—⁠முக்கியமாக காதல் உணர்ச்சிகள் பலமாக இருக்கும் பட்சத்தில். ஆனால் உண்மைக்கு உங்களுடைய கண்களை மூடிக்கொள்ளாதீர்கள். பைபிள் நீதிமொழி ஒன்று இவ்வாறு சொல்கிறது: “விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறான்; பேதைகள் நெடுகப்போய்த் தண்டிக்கப்படுகிறார்கள்.” (நீதிமொழிகள் 22:3) ஹானா என்ற இளம் பெண் இவ்வாறு சொல்கிறாள்: “ஒரு பையன் மீது நீங்கள் காதல் வயப்படும்போது, நீங்கள் கிட்டத்தட்ட குருடாகிவிடுகிறீர்கள், அவனுடைய நல்ல குணங்கள் மட்டுமே உங்களுடைய கண்ணுக்குத் தெரியும்.” ஆனால் நீங்கள் தவறாக நடத்தப்பட்டு வந்தால், அவனுடைய சுய ரூபத்தை கண்டுபிடிப்பது முக்கியம். உங்களுடைய பாய் ஃப்ரண்ட் உங்களை பயமுறுத்தினால் அல்லது கீழ்த்தரமாக நடத்தினால் ஏதோ பெரும் தவறு இருக்கிறது. உங்களுடைய உணர்ச்சிகளை மறுக்கவோ அவனை நியாயப்படுத்தவோ அல்லது உங்களையே குற்றப்படுத்தவோ முயற்சி செய்யாதீர்கள். இப்படிப்பட்ட செயல்களை திருத்தவில்லையென்றால், துஷ்பிரயோகம் செய்வது இன்னும் அதிகரிக்கத்தான் செய்யும் என்பதை அனுபவம் காட்டுகிறது. உங்களுடைய பாதுகாப்புக்குப் பங்கம் ஏற்படலாம்!

ஆகவே, தன்னடக்கம் இல்லாத ஒருவனிடம் பழகாதிருப்பதே மிகவும் நல்லது. (நீதிமொழிகள் 22:24) உங்களுக்கு நன்றாக தெரியாத ஒருவன் உங்களை காதலிக்க விரும்பினால், அவனைப் பற்றி நன்கு அறிந்துகொள்வது ஞானமான காரியம். முதலில், தொகுதியாக ஆட்கள் இருக்கும் இடத்தில் அவனுடன் கூட்டுறவு கொள்ள விரும்புவதாக ஏன் சொல்லக் கூடாது? சட்டென்று காதல் வயப்படாமலிருந்து அவனைப் பற்றி அறிந்துகொள்ள இது உங்களுக்கு உதவலாம். பின்வருவது போன்ற அர்த்தமுள்ள கேள்விகளைக் கேட்டுக்கொள்ளுங்கள்: அவனுடைய நண்பர்கள் யார்? எப்படிப்பட்ட மியூசிக், சினிமா படங்கள், கம்ப்யூட்டர் கேம்ஸ், ஸ்போர்ட்ஸ் அவனுக்கு இஷ்டம்? ஆன்மீக காரியங்களில் அக்கறை இருப்பதை அவனுடைய உரையாடல் காட்டுகிறதா? அவனைப் பற்றி தெரிந்தவர்களிடம் கேளுங்கள், உதாரணமாக அவனுடைய சபையைச் சேர்ந்த மூப்பர்களிடம் கேளுங்கள். முதிர்ச்சிவாய்ந்த, தேவபக்திமிக்க நடத்தையின் காரணமாக மற்றவர்களால் ‘நற்சாட்சி பெற்றவனாக’ இருக்கிறானா என அவர்கள் உங்களுக்குச் சொல்வார்கள்.​—அப்போஸ்தலர் 16:⁠2.

ஆனால் நீங்கள் ஏற்கெனவே மோசமான ஒருவனுடன் பழகி வந்தால் என்ன செய்யலாம்? அடுத்த இதழில் இந்தக் கேள்விக்கு பதிலளிக்கப்படும். (g04 5/22)

[அடிக்குறிப்புகள்]

a சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

b சொல்லாலும் கையாலும் அடிபடும் நபர்களுக்காகவே இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. தவறிழைத்தவர்களுக்கு உதவக்கூடிய அறிவுரைகள், அக்டோபர் 22, 1996, மார்ச் 22, 1997 ஆகிய பிரதிகளில் வெளிவந்த “புண்படுத்தும் வார்த்தைகளிலிருந்து குணப்படுத்தும் வார்த்தைகளுக்கு,” “சத்தாய்ப்பதில் என்ன தவறு?” ஆகிய கட்டுரைகளில் கொடுக்கப்பட்டுள்ளன.

c ஆனால், எளிமைக்காக, இத்தகைய துஷ்பிரயோகத்திற்கு பலியாகிறவர்களை பெண்பாலில் நாம் குறிப்பிடுவோம். இங்கு சிந்திக்கப்படும் நியமங்கள் ஆண்கள் பெண்கள் ஆகிய இருபாலாருக்கும் பொருந்துகின்றன.

d எமது அக்டோபர் 22, 1996 இதழில், “தூஷணத்திற்கான காரணங்களை வெளிப்படுத்துவது” என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரையில் காண்க.

e யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட இளைஞர் கேட்கும் கேள்விகள்​—⁠பலன்தரும் விடைகள் என்ற புத்தகத்தில் 12-⁠ம் அதிகாரத்தைக் காண்க.

[பக்கம் 19-ன் பெட்டி]

எச்சரிப்பூட்டும் சில அறிகுறிகள்

◼ நீங்கள் தனியாக இருக்கும்போது அல்லது மற்றவர்களுடன் இருக்கும்போது, உங்களைப் பற்றியோ உங்களுடைய குடும்பத்தைப் பற்றியோ உங்களுடைய நண்பர்களைப் பற்றியோ அவன் அடிக்கடி இகழ்ச்சியாக பேசுகிறான்

◼ உங்களுடைய ஆசைகளை அல்லது உணர்ச்சிகளை எப்போதும் அசட்டை செய்துவிடுகிறான்

◼ உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் உங்களைக் கட்டுப்படுத்த முயலுகிறான், எல்லா சமயத்திலும் நீங்கள் இருக்கும் இடத்தைச் சொல்லும்படி உங்களை வற்புறுத்துகிறான், உங்களுக்காக எல்லா தீர்மானங்களையும் அவனே செய்ய விரும்புகிறான்

◼ உங்களைப் பார்த்துக் காட்டுக்கத்தல் கத்துகிறான், தள்ளிவிடுகிறான், அல்லது பயமுறுத்துகிறான்

◼ தகாத விதத்தில் பாசத்தை காட்டும்படி உங்களை வற்புறுத்துகிறான்

◼ உங்களுடைய செயல் ஏதாவது விதத்தில் அவனுக்கு எரிச்சலூட்டுமோ என கிட்டத்தட்ட எப்பொழுது பார்த்தாலும் நீங்கள் கவலைப்படுகிறீர்கள்

[பக்கம் 18-ன் படம்]

எப்போதுமே குறைகூறுவது அல்லது திட்டுவது மோசமான உறவிற்கு அத்தாட்சியாக இருக்கலாம்