Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆரோக்கியத்திற்கு ஆண்டாண்டு கால போராட்டம்

ஆரோக்கியத்திற்கு ஆண்டாண்டு கால போராட்டம்

ஆரோக்கியத்திற்கு ஆண்டாண்டு கால போராட்டம்

நியு யார்க் நகரில் ஜோயன் வசித்து வந்தாள். அவளுக்கு டிபி (காசநோய்) தொற்றியிருந்தது. ஆனால் அது சாதாரண டிபி அல்ல, சற்று வித்தியாசமானது. அது கிட்டத்தட்ட எல்லா மருந்துகளையுமே எதிர்க்கும் சக்தி படைத்தது, தன் வலையில் மாட்டிக்கொள்ளும் பாதிக்குப் பாதி ஆட்களின் உயிரைக் குடித்துவிடுகிறது. ஆனால் ஜோயன் ஒழுங்காக சிகிச்சை எடுக்கவில்லை, ஒரு சமயத்திலாவது மற்றவர்களுக்கு அந்த நோய் பரவ காரணமாய் இருந்திருக்கிறாள். அதனால் டாக்டர் எரிச்சலடைந்து, ‘அவளையெல்லாம் எங்காவது அடைத்து வைக்க வேண்டும்’ என்று சொன்னார்.

டிபி நோய் ஆண்டாண்டு காலமாகவே இருந்துவரும் ஓர் உயிர்க்கொல்லி. சொல்லப்போனால், கோடிக்கணக்கானோர் டிபி-யால் அவதிப்பட்டிருக்கிறார்கள், இறந்திருக்கிறார்கள். இந்த நோய் இருந்ததற்கான அத்தாட்சி, பூர்வ எகிப்து மற்றும் பெருவைச் சேர்ந்த மம்மிகளில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இன்றோ இந்த நோய்க் கிருமி புத்துயிர் பெற்று ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 லட்சம் ஆட்களை பலிவாங்கி வருகிறது.

ஓர் ஆப்பிரிக்க குடிசையில், நெற்றியில் வியர்வைத் துளிகள் படிந்திருந்தவாறே ஒரு சிறிய கட்டிலில் கார்லிட்டோஸ் படுத்திருந்தான். அழுவதற்கும்கூட பெலனின்றி மலேரியா வியாதியால் முடங்கிக் கிடந்தான். கவலை தோய்ந்த அவனது பெற்றோர் மருந்து வாங்க பணமின்றி தவித்தனர். மகனை டாக்டரிடம் காட்டுவதற்கு அக்கம்பக்கத்தில் எந்தவொரு ஆஸ்பத்திரியும் இல்லை. ஜுரம் கொஞ்சங்கூட இறங்கவே இல்லை, 48 மணிநேரத்திற்குள் அவன் இறந்துவிட்டான்.

ஒவ்வொரு ஆண்டும் கார்லிட்டோஸைப் போல கிட்டத்தட்ட 10 லட்சம் குழந்தைகளின் உயிரை மலேரியா குடித்துவிடுகிறது. கிழக்கு ஆப்பிரிக்க கிராமங்களில், மலேரியா நோய்க் கிருமியை சுமந்துவரும் கொசுக்கள் அநேக பிள்ளைகளை ஒரு மாதத்தில் 50 முதல் 80 தடவை கடித்திருக்கின்றன. இந்தக் கொசுக்கள் புதுப் புது இடங்களுக்கு படையெடுத்துக் கொண்டிருக்கின்றன; அதோடு மலேரியாவை எதிர்க்கும் மருந்துகள் அவ்வளவு சக்திமிக்கவையாக இருப்பதில்லை. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 30 கோடி ஜனங்கள் கடும் மலேரியாவால் அவஸ்தைப்படுகிறார்கள்.

30 வயதுக்காரரான கென்னத் என்பவர் கலிபோர்னியாவிலுள்ள சான் பிரான்ஸிஸ்கோவில் வசித்து வந்தார்; இவர் 1980-⁠ல் முதன்முறையாக டாக்டரிடம் சென்றார். தனக்கு வயிற்றுப்போக்கு இருப்பதாகவும், களைப்பாக உணருவதாகவும் சொன்னார். அவ்வளவே தான், ஒரு வருடத்திற்குப் பின் அவர் இறந்து போனார். பெரிய பெரிய டாக்டர்கள் சிகிச்சை அளித்த போதிலும், பலனளிக்காமல் எலும்பும் தோலுமாகி கடைசியில் நிமோனியா காய்ச்சல் கண்டு இறந்துவிட்டார்.

இரண்டு வருடங்களுக்குப் பின், சான் பிரான்ஸிஸ்கோவிலிருந்து 16,000 கிலோமீட்டர் தொலைவிலுள்ள வட டான்ஜானியாவைச் சேர்ந்த ஓர் இளம் பெண் இதேவிதமான உபாதைகளால் அவதிப்பட்டாள். சில வாரங்களுக்குள் உடல்நிலை மோசமாகி அவளால் நடக்கக்கூட முடியாமல் போனது, அதன் பிறகு சீக்கிரத்தில் இறந்துவிட்டாள். அந்த கிராம வாசிகள் இந்த விநோத வியாதிக்கு ஜூலியானா நோய் என்று பேரிட்டார்கள். ஏனென்றால் ஜூலியானா என்ற பெயர் பிரிண்ட் செய்யப்பட்டிருந்த துணியை விற்றுவந்த ஒருவர் மூலம்தான் அவளுக்கும் அங்குள்ள மற்ற பெண்களுக்கும் இந்த நோய் தொற்றியிருக்கிறதாம்.

கென்னத்துக்கும் இந்த டான்ஜானியா பெண்ணுக்கும் இருந்தது ஒரே வியாதிதான்​—⁠எய்ட்ஸ்! 1980-களின் ஆரம்பத்தில், மிகவும் ஆபத்தான நுண்ணுயிரிகளை மருத்துவ விஞ்ஞானம் கட்டுப்படுத்திவிட்டதாக தோன்றிய அந்த சமயத்தில்தான் மக்களை தொல்லைபடுத்துவதற்கென்றே இந்தப் புதிய தொற்று நோய் உருவெடுத்தது. இருபது ஆண்டுகளுக்குள் எய்ட்ஸுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர ஆரம்பித்தது. இந்த எண்ணிக்கை, 14-⁠ம் நூற்றாண்டில் யுரேஷியாவை ஆக்கிரமித்த​—⁠ஐரோப்பிய மக்களால் மறக்க முடியாத​—⁠கொள்ளை நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கையைவிட அதிகம்.

பிளாக் டெத்

பிளாக் டெத் என்ற கொள்ளை நோய் 1347-⁠ல், அதாவது க்ரைமியாவிலிருந்து வந்த கப்பல் சிசிலி தீவில் உள்ள மெஸ்ஸினாவில் நங்கூரம் பாய்ச்சிய சமயத்தில் திடீரென படையெடுத்தது. இக்கப்பல் வழக்கமாக சரக்குகளை சுமந்து சென்றதோடு இந்தக் கொள்ளை நோயையும் சுமந்து சென்றது. a சீக்கிரத்தில் இந்த பிளாக் டெத் இத்தாலியை சுற்றி வளைத்தது.

அடுத்த ஆண்டில் தன்னுடைய ஊரில் நடந்த பயங்கரத்தைப் பற்றி இத்தாலியிலுள்ள சியேனாவைச் சேர்ந்த ஆன்யோலோ டி டூரா இவ்வாறு விவரித்தார்: ‘சியேனாவில் மே மாதம் முதற்கொண்டு ஏராளமானோர் இறக்க ஆரம்பித்தார்கள். இந்தக் கொள்ளை நோய் அந்தளவு கொடூரமாகவும் படுபயங்கரமாகவும் இருந்தது. அந்த நோய் கண்டவர்கள் உடனடியாகவே இறந்துவிட்டார்கள் எனலாம். இரவும் பகலும் மக்கள் நூற்றுக்கணக்கில் செத்து மடிந்தார்கள்.’ அவர் மேலும் சொன்னதாவது, ‘என் கையாலேயே என்னுடைய ஐந்து பிள்ளைகளை எடுத்துப் புதைத்தேன், மற்றவர்களுடைய நிலைமையும் அப்படித்தான் இருந்தது. இறந்தவர்கள் யாரானாலும் சரி, அவர்களுக்காக யாருமே அழவில்லை, ஏனென்றால் கிட்டத்தட்ட எல்லாருமே சாவை எதிர்பார்த்தார்கள். எக்கச்சக்கமானோர் இறந்ததால் இது உலக அழிவுதான் என எல்லாரும் நினைத்தார்கள்.’

நான்கு ஆண்டுகளுக்குள், இந்தக் கொள்ளை நோய் ஐரோப்பா முழுவதிலும் பரவி, மக்கள்தொகையில் சுமார் மூன்றில் ஒருபாகத்தை விழுங்கியது என சரித்திராசிரியர்கள் சொல்கிறார்கள்; ஒருவேளை இரண்டு கோடி முதல் மூன்று கோடி வரையான மக்கள் மரித்திருக்கலாம். தொலை தூரத்தில் அமைந்துள்ள ஐஸ்லாந்துக்கும் இது படையெடுத்து அங்குள்ள மக்களை கொன்று குவித்தது. தூரக் கிழக்கு நாடுகளில் ஒன்றான சீனாவில் 13-⁠ம் நூற்றாண்டின் போது மக்கள்தொகை 12.3 கோடி இருந்தது; 14-⁠ம் நூற்றாண்டிலோ அது சட்டென்று 6.5 கோடியாக சரிந்ததென சொல்லப்படுகிறது. இந்தக் கொள்ளை நோயும் அதோடு சேர்ந்து பீடித்த பஞ்சமுமே அதற்குக் காரணமென தெரிகிறது.

இதற்கு முன் எந்தவொரு கொள்ளை நோயோ போரோ பஞ்சமோ இந்தளவு பரவலான பாதிப்பை ஏற்படுத்தியதில்லை. “இந்தளவு பெரும் நாசம் மனித சரித்திரத்தில் சம்பவித்ததே இல்லை. ஐரோப்பாவிலும் வட ஆப்பிரிக்காவிலும் ஆசியாவின் சில பகுதிகளிலும் கிட்டத்தட்ட 25 முதல் 50 சதவீதம் மக்கள் அழிந்தனர்” என மனிதரும் நுண்ணுயிரிகளும் என்ற ஆங்கில நூல் குறிப்பிடுகிறது.

அமெரிக்க நாடுகள் உலகின் பிற நாடுகளிலிருந்து தனியாக ஒதுங்கி இருந்ததால் இந்த பிளாக் டெத் நோயால் ஏற்பட்ட நாசத்திலிருந்து தப்பித்துக்கொண்டன. ஆனால் சீக்கிரத்தில் கடல் யாத்திரை செய்யும் கப்பல்கள் அந்நாடுகளையும் விட்டுவைக்கவில்லை. 16-⁠ம் நூற்றாண்டில் அமெரிக்க நாடுகளை பல்வேறு கொள்ளை நோய்கள் சூறையாடின, அவை பிளாக் டெத் நோயைவிட படுபயங்கரமான வீதத்தில் உயிர்களை காவுகொண்டன.

பெரியம்மை அமெரிக்க நாடுகளை வெல்கிறது

கொலம்பஸ் 1492-⁠ல் மேற்கிந்திய தீவுகளுக்கு வந்து சேர்ந்தபோது, அங்குள்ள மக்களை ‘லட்சணமான முகத்தோற்றமும் சராசரி உயரமும் கட்டுடலும் உடையவர்கள்’ என விவரித்தார். என்றாலும், ஐரோப்பிய நோய்கள் அவர்களுடைய வாட்டசாட்டமான தோற்றத்தைக் குறிவைத்துவிட்டன.

1518-⁠ல் ஹிஸ்பானியோலா தீவை பெரியம்மை திடீரென தாக்கியது. பூர்வீக அமெரிக்கர்களுக்கு இந்நோயைப் பற்றி முன்பின் தெரியாததால், அதன் பாதிப்பு படுபயங்கரமாக இருந்தது. அத்தீவில் சுமார் ஆயிரம் பேர் மட்டுமே உயிர்பிழைத்தார்கள் என சம்பவத்தை நேரில் கண்ட ஒரு ஸ்பானியர் குறிப்பிட்டார். இந்தக் கொள்ளைநோய் விரைவில் மெக்சிகோவுக்கும் பெருவுக்கும் பரவி பயங்கரமான பாதிப்புகளை ஏற்படுத்தியது.

அடுத்த நூற்றாண்டில் ஆங்கிலேய குடியேறிகள் வட அமெரிக்காவிலுள்ள மாஸசூஸெட்ஸ் பகுதிக்கு வந்து சேர்ந்தபோது பெரியம்மை நோய் அங்குள்ள மக்களை கிட்டத்தட்ட சர்வநாசம் செய்திருந்ததை கண்டார்கள். “அங்குள்ள குடிகளில் ஏறக்குறைய எல்லாரையுமே பெரியம்மை பூண்டோடு அழித்துப்போட்டது” என ஆங்கிலேய குடியேறிகளின் தலைவரான ஜான் வின்த்ராப் எழுதினார்.

பெரியம்மையுடன் இன்னும் பல கொள்ளை நோய்களும் கைகோர்த்துக் கொண்டன. கொலம்பஸ் வருகை தந்தபின் கிட்டத்தட்ட அடுத்த நூற்றாண்டுக்குள் அமெரிக்க நாடுகளில் இறக்குமதி செய்யப்பட்ட நோய்களால் சுமார் 90 சதவீத மக்கள் மாயமாய் மறைந்துவிட்டதாக ஒரு நூல் குறிப்பிடுகிறது. மெக்சிகோவில் மக்கள்தொகை மூன்று கோடியிலிருந்து 30 லட்சமாக குறைந்தது, பெருவிலோ 80 லட்சத்திலிருந்து 10 லட்சமாக சரிந்தது. சொல்லப்போனால், பெரியம்மைக்கு பலியானவர்கள் பூர்வ அமெரிக்கர்கள் மட்டுமல்லர். “மனித சரித்திரம் முழுவதிலும், . . . பிளாக் டெத் நோயைவிடவும் இருபதாம் நூற்றாண்டில் நடந்த எல்லா போர்களைவிடவும் கோடிக்கணக்கான உயிர்களை பறித்திருப்பது பெரியம்மைதான்” என குறிப்பிடுகிறது ஸ்கர்ஜ்​⁠தி ஒன்ஸ் அண்ட் ஃப்யூச்சர் த்ரெட் ஆஃப் ஸ்மால்பாக்ஸ் என்ற புத்தகம்.

போராட்டம் இன்னும் வெற்றியடையவில்லை

இப்போதெல்லாம், அதிர வைக்கும் கொள்ளை நோய்களாகிய பிளாக் டெத், பெரியம்மை ஆகியவை ஒரு பழங்காலக் கதையாக தோன்றலாம். 20-⁠ம் நூற்றாண்டின் போது, முக்கியமாக தொழில்நுட்ப நாடுகளைச் சேர்ந்தவர்கள் உயிர்க்கொல்லி நோய்களுக்கு எதிரான பல போராட்டங்களை வென்று காட்டியிருக்கிறார்கள். பெரும்பாலான நோய்கள் தொற்றுவதற்கு காரணங்களை டாக்டர்கள் கண்டறிந்திருக்கிறார்கள், அதைக் குணப்படுத்துவதற்கான வழிகளையும் கண்டுபிடித்திருக்கிறார்கள். (கீழே உள்ள பெட்டியைக் காண்க.) புதிய தடுப்பூசிகளும், ஆன்டிபயாட்டிக்குகளும் குணப்படுத்துவதற்கு கடினமான நோயையும் ஒழித்துக்கட்ட வல்ல சர்வரோகநிவாரணி போல் தோன்றின.

என்றாலும், ஐ.மா. அலர்ஜி மற்றும் தொற்று நோய்களின் தேசிய நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரான டாக்டர் ரிச்சர்ட் கிராவ்ஸே குறிப்பிடுகிறபடி, “சாவையும் வரிகளையும் போல கொள்ளை நோய்களும் தவிர்க்க முடியாதவை.” டிபி-யும் மலேரியாவும் ஒழிந்துவிடவில்லை. கொள்ளைநோய் உலகை இன்னும் வேட்டையாடி வருகிறது என்பதற்கு இப்போது எங்கும் பரவிவரும் எய்ட்ஸ் எனும் உயிர்க்கொல்லி ஓர் அதிர்ச்சியூட்டும் நினைப்பூட்டுதலை அளித்திருக்கிறது. “உலகில் சாவு ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது தொற்று நோய்களே; வருங்காலங்களிலும் அவை தொடர்ந்து சாவை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும்” என குறிப்பிடுகிறது மனிதரும் நுண்ணுயிரிகளும் என்ற புத்தகம்.

நோயை ஒழிப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருந்தபோதிலும், கடந்த சில பத்தாண்டுகளில் கிடைத்த வெற்றிகள் எல்லாம் நீடித்து நிற்காதோ என சில டாக்டர்கள் பயப்படுகிறார்கள். “தொற்று நோய்களின் அபாயச்சங்கு இன்னும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது​—⁠இப்போது மிக மோசமாக அலறிக்கொண்டிருக்கிறது” என எச்சரிக்கிறார் கொள்ளைநோயியல் நிபுணர் ராபர்ட் ஷோப். அதற்கு காரணத்தை அடுத்த கட்டுரையில் காணலாம். (g04 5/22)

[அடிக்குறிப்பு]

a இக்கொள்ளை நோய் பல விதங்களில் உருவெடுத்தது; ப்யூபோனிக் பிளேக், நியூமோனிக் பிளேக் ஆகியவை அதற்கு எடுத்துக்காட்டுகளாகும். முக்கியமாக எலிகளில் காணப்படும் உண்ணிகள் மூலம் ப்யூபோனிக் பிளேக் பரவியது. நோய் தொற்றியவர் இருமுவதன் மூலமோ தும்முவதன் மூலமோ நியூமோனிக் பிளேக் பரவியது.

[பக்கம் 5-ன் சிறு குறிப்பு]

இருபது ஆண்டுகளுக்குள் எய்ட்ஸுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 14-⁠ம் நூற்றாண்டில் யுரேஷியாவை ஆக்கிரமித்த கொள்ளை நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கையைவிட அதிகம்

[பக்கம் 6-ன் பெட்டி/படங்கள்]

அறிவு Vs மூடநம்பிக்கை

14-⁠ம் நூற்றாண்டில் அவின்யோனில் போப்பின் குடும்பத்தாரை பிளாக் டெத் நோய் தாக்கியது. அந்த கொள்ளைநோய்க்கு முக்கிய காரணம் சனி, வியாழன், செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்களும் கும்பராசியில் சேர்ந்திருப்பதே என போப்பிடம் அவருடைய டாக்டர் தெரிவித்தார்.

சுமார் நான்கு நூற்றாண்டுகளுக்கு பிற்பாடு, ஜார்ஜ் வாஷிங்டன் தொண்டை வலியுடன் படுக்கைக்கு சென்றார். அதை சரிசெய்ய மூன்று பிரபல டாக்டர்கள் அவருடைய நரம்பிலிருந்து இரண்டு லிட்டர் இரத்தத்தை வெளியே வடியவிட்டார்கள். சில மணிநேரத்திற்குள் அவர் இறந்துவிட்டார். இரத்தத்தை இவ்வாறு வடியவிடுவது 2,500 ஆண்டுகளாக, அதாவது ஹிப்பாகிரட்டிஸ் காலம் முதல் 19-⁠ம் நூற்றாண்டின் மத்திபம் வரையில் ஒரு பொதுவான மருத்துவ சிகிச்சையாக இருந்தது.

மூடநம்பிக்கையும் பாரம்பரியமும் மருத்துவ முன்னேற்றத்திற்கு தடையாக இருந்தாலும், முழு மூச்சுடன் செயல்படும் டாக்டர்கள் தொற்று நோய்களுக்கான காரணங்களையும் அதற்கான நிவாரணிகளையும் கண்டுபிடிக்க கடினமாக முயன்றிருக்கிறார்கள். அவர்கள் புரிந்த சில சாதனைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பெரியம்மை. 1798-⁠ல் எட்வர்ட் ஜென்னர் பெரியம்மைக்கு வெற்றிகரமாக ஒரு தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்தார். 20-⁠ம் நூற்றாண்டில் போலியோ, மஞ்சள் காய்ச்சல், மணல்வாரி அம்மை, ரூபெல்லா போன்ற பிற நோய்கள் வராமல் காப்பதில் தடுப்பு மருந்துகள் பலனளித்திருக்கின்றன.

டிபி. 1882-⁠ல் ராபர்ட் கோச், டிபி நோயை உண்டுபண்ணும் பாக்டீரியாவைக் கண்டறிந்தார், அதை அறிவதற்கான பரிசோதனையையும் கண்டுபிடித்தார். சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு, டிபி நோயை குணப்படுத்தும் ஸ்ட்ரெப்டோமைசின் என்ற திறமிக்க ஆன்டிபயாட்டிக் கண்டுபிடிக்கப்பட்டது. ப்யூபோனிக் பிளேக்கை குணப்படுத்துவதிலும் இந்த மருந்து பயனளித்திருக்கிறது.

மலேரியா. 17-⁠ம் நூற்றாண்டு முதற்கொண்டு, க்வினைன், அதாவது சின்கோனா மரப்பட்டைகளிலிருந்து பெறப்படும் மருந்து, கோடிக்கணக்கான மலேரியா நோயாளிகளின் உயிரை காப்பாற்றியிருக்கிறது. ஆனோஃபெலஸ் எனும் கொசுக்களே இந்நோயைக் கடத்துகின்றன என்பதை 1897-⁠ல் ரொனால்ட் ராஸ் கண்டுபிடித்தார்; வெப்பமண்டல நாடுகளில் இந்நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் வகையில் பிற்பாடு கொசுக்களை ஒழிக்கும் முயற்சிகளும் எடுக்கப்பட்டன.

[படங்கள்]

இராசி மண்டல அட்டவணையும் (மேலே) இரத்தம் வடியவிடுதலும்

[படத்திற்கான நன்றி]

இரண்டும்: Biblioteca Histórica “Marqués de Valdecilla”

[பக்கம் 3-ன் படங்கள்]

இன்று டிபி நோய்க் கிருமி புத்துயிர் பெற்று ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 லட்சம் ஆட்களை பலிவாங்கி வருகிறது

[படங்களுக்கான நன்றி]

எக்ஸ்ரே: New Jersey Medical School–National Tuberculosis Center; மனிதன்: Photo: WHO/Thierry Falise

[பக்கம் 4-ன் படங்கள்]

பிளாக் டெத் தொற்றாமல் பாதுகாக்க முகமூடி அணிந்திருப்பதை சித்தரிக்கும் ஜெர்மன் சித்திரம்; இது சுமார் 15-⁠ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. மூகமூடியின் மூக்குப் பகுதியில் வாசனைப் பொருள் வைக்கப்பட்டிருந்தது

[படத்திற்கான நன்றி]

Godo-Foto

[பக்கம் 4-ன் படம்]

ப்யூபோனிக் பிளேக்குக்கு காரணமான பாக்டீரியா

[படத்திற்கான நன்றி]

© Gary Gaugler/Visuals Unlimited