Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கண்ணாடித் தீவுக்கு விஜயம்

கண்ணாடித் தீவுக்கு விஜயம்

கண்ணாடித் தீவுக்கு விஜயம்

இத்தாலியிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

கை தேர்ந்த கைவினைஞர் ஒருவர் குழல் போன்ற கோலை “க்ளோரி ஹோலினுள்” செருகுகிறார்; ஜுவாலித்து எரியும் உலையின் சிறிய திறப்புக்குத்தான் க்ளோரி ஹோல் என்று பெயர். உருகிய நிலையிலிருக்கும் கண்ணாடியில் கொஞ்சத்தை அந்தக் கோலின் நுனியால் வெளியே எடுக்கிறார்; அது அஸ்தமிக்கும் கதிரவனைப் போல் தகதகக்கிறது. அதை உலையிலிருந்து வெளியே எடுக்கையில் இளஞ்சிவப்பு நிறத்தில் மிக மெல்லிய கண்ணாடி இழை பளிச்சிட்டு நொடியில் மறைந்துவிடுகிறது. “கேதர்” என்று அழைக்கப்படும் இந்த உருக்கிய கண்ணாடியை கைதேர்ந்த கலைஞர் உலோக டேபிளில் உருட்டுகிறார்; கோள வடிவ கண்ணாடி இப்போது உருளை வடிவெடுக்கிறது. அந்த குழல் போன்ற கோலினுள் மென்மையாக ஊதுகிறார், அந்தக் கண்ணாடி பலூன் போல் உப்புகிறது, மீண்டும் அதை டேபிளில் உருட்டுகிறார், சோதித்துப் பார்க்கிறார், அதை மீண்டும் உலைக்குள் நீட்டுகிறார்.

இத்தாலியிலுள்ள வெனிஸ் நகரையடுத்த கடற்கழியில் அமைந்திருக்கும் மூரானோ என்ற சிறிய தீவில் நாம் இருக்கிறோம். இந்தத் தீவு கண்ணாடிப் பொருட்களுக்குப் பிரபலமானது. சொல்லப்போனால், 1,000-⁠க்கும் அதிக ஆண்டுகளாக இப்பகுதியில் கண்ணாடியை ஊதி பொருட்களை உருவாக்கும் தொழில் வெற்றி நடை போடுகிறது. கடற்கழியில் அடுத்துள்ள டர்செலோ என்ற தீவில் பொ.ச. ஏழாம் நூற்றாண்டில் கண்ணாடித் தொழிற்சாலை ஒன்று இருந்ததற்கு அக்கட்டடத்தின் இடிந்த சிதிலங்கள் சான்று பகர்கின்றன. ஆனால் முதன்முதல் வெனிஸ் நகரிலேயே இத்தொழில் நடைபெற்றது என்பதற்கான அத்தாட்சி பொ.ச. 982-⁠ம் வருட ஆவணமொன்றில் காணப்படுகிறது; அதில் “கண்ணாடித் தொழிலாளி டோமினிக்” என்பவர் சாட்சிக் கையெழுத்து போட்டிருந்தார்.

1224-⁠க்குள் வெனிஸிலிருந்த கண்ணாடி தயாரிப்பாளர்கள் தங்களுக்கென ஒரு சங்கத்தை அமைத்திருந்தார்கள். கண்ணாடி தயாரிப்பில் பயன்படுத்தப்படும் உலைகள் அனைத்தையும் நகரத்திலிருந்து அப்புறப்படுத்தும்படி 1291-⁠ல் கிரேட் கவுன்சில் ஆஃப் வெனிஸ் ஆணை பிறப்பித்தது; ஒருவேளை பாதுகாப்பு கருதி அந்த ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கலாம். கடற்கழியில் சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவிலுள்ள மூரானோவுக்கு அவற்றில் பெரும்பாலானவை இடம் மாற்றப்பட்டன; அவை இன்றும் அங்கிருக்கின்றன.

ஏன் பிரபலமானது?

உலகின் பெரும்பாலான இடங்களில் கண்ணாடிப் பொருட்கள் தொன்றுதொட்டே தயாரிக்கப்பட்டு வந்தாலும் மூரானோ கண்ணாடிக்கு, அதாவது வெனிஸின் கண்ணாடிக்கு இந்தளவு மவுசு இருப்பது ஏன்? ஏனென்றால் இங்குள்ள கைவினைஞர்கள், கண்ணாடிப் பொருட்களை ஊதி உருவாக்கும் தொழிலை பாரம்பரியமாக செய்து வந்த எகிப்து, பெனிக்கே, சிரியா, பைசாண்டிய கொரிந்து போன்ற பிற பகுதிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததால் தங்கள் கலைநயத்தை மேன்மேலும் புதுப்பித்துக்கொண்டே இருந்தார்கள். வெனிஸின் மிகப் பண்டைய தொழிற்சாலைகளில் பின்பற்றப்பட்ட முறைகளையும் தயாரிக்கப்பட்ட பொருட்களையும் பார்த்தால் அவற்றைக் கீழை நாடுகளிலிருந்து கற்றிருக்க வேண்டுமென தோன்றுகிறது. மூரானோவில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள், இங்குள்ள கைதேர்ந்த நிபுணர்களின் பக்கத்தில் பிற ஐரோப்பிய மையங்கள் ஒருபோதும் நெருங்க முடியாதளவுக்கு இவர்களை உயர்த்தியது.

ஐரோப்பாவில் 13-⁠ம் 14-⁠ம் நூற்றாண்டுகளில் வெனிஸ் “ஊதித் தயாரிக்கும் கண்ணாடியில் ‘கலைப்படைப்புகளை’ அளிக்கும் திறமை பெற்ற ஒரே மையமாக விளங்கியது” என மூரானோவில் கண்ணாடி என்ற ஆங்கில புத்தகம் சொல்கிறது. வெனிஸில் தயாரிக்கப்படும் பொருட்கள் கிழக்கத்திய மத்தியதரைக் கடல் பகுதி முதல் வட ஐரோப்பா வரை தொலைதூரங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. வெனிஸின் துடுப்புக் கப்பல்கள் இரண்டு லண்டன் துறைமுகத்தில் நங்கூரமிட்டு கண்ணாடிப் பொருட்களை விற்பனை செய்வதற்கு 1399-⁠ல் இங்கிலாந்தின் மன்னர் இரண்டாம் ரிச்சர்ட் அனுமதி அளித்தார். அதே காலப்பகுதியில் வெனிஸின் கண்ணாடிப் பொருட்கள் பிரான்சிலிருந்த உயர்குடியினர் உடைமைகளில் இடம்பெற்றன. காலப்போக்கில் மூரானோ இன்னும் அநேக பொருட்களுக்கும் பிரபலமானது; அவற்றில் முகம் பார்க்கும் கண்ணாடிகள், சரவிளக்குகள், வண்ண வண்ண கண்ணாடிப் பொருட்கள், தங்கத்தாலும் எனாமலாலும் முலாம் பூசப்பட்ட அலங்கார பொருட்கள், கண்ணாடிக்கல், போலி மணிக்கற்கள், வேலைப்பாடுமிக்க தண்டுடைய கோப்பைகள், பல்வேறு வடிவங்களில் அழகழகான பொருட்கள் ஆகியவை அடங்கும்.

வெனிஸ் தன் வியாபார ரகசியங்களை பொத்திப் பாதுகாத்து வந்தது; தரமான பொருட்களைத் தயாரிப்பதில் தனக்கு நிகராக யாரும் போட்டி போடாதிருப்பதற்கு தன்னால் முடிந்ததையெல்லாம் செய்தது. 13-⁠ம் நூற்றாண்டிலேயே, கண்ணாடித் தொழிலாளர்கள் வேறெங்கும் குடிபெயர்ந்து செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேன்மேலும் கடுமையாயின; மூரானோவின் நிரந்தர பிரஜைகள் மட்டுமே கண்ணாடித் தொழிலாளிகளாக அல்லது அத்தொழில் பயில்பவர்களாக வேலை செய்ய அனுமதிக்கப்பட்டார்கள். ஒருசமயம், அப்பிரதேசத்தை விட்டு ஓடிப்போன கண்ணாடித் தொழிலாளிகளைப் பிடித்துவந்து பெரும் அபராதம் விதித்தார்கள்; அத்துடன் துடுப்புக் கப்பலில் கால்கள் விலங்கிடப்பட்ட நிலையில் ஐந்து ஆண்டுகள் துடுப்பு வலிக்கும் தண்டனையையும் அளித்தார்கள்.

இருந்தாலும், கண்ணாடித் தொழிலாளர்கள் திருட்டுத்தனமாக இத்தாலி, ஐரோப்பா எங்கும் பல இடங்களுக்குக் குடிபெயர்ந்தார்கள்; அங்கு உலைகளை நிறுவி, மூரானோவுக்குப் போட்டியாக அதே முறையில் அச்சு அசப்பில் அதே போன்ற கண்ணாடிப் பொருட்களைத் தயாரித்தார்கள். பெரும்பாலான சமயங்களில் அப்பொருட்கள் மூரானோவில் தயாரிக்கப்பட்டவற்றிலிருந்து பிரித்தறிய முடியாதளவுக்கு ஒரே மாதிரி இருந்தன; அவை அ லா ஃபாசன் டா வனிஸ், அதாவது வெனிஸின் பாணி என அறியப்படலாயின.

வெனிஸின் கலைநயத்தின் புகழ் 15-⁠ம் 16-⁠ம் நூற்றாண்டுகளில் கொடி கட்டிப் பறந்தது. மூரானோவில் பிரத்தியேகமான கண்ணாடிப் பொருட்கள் கற்பனைத் திறனுடன் வெவ்வேறு வடிவங்களில் தயாரிக்கப்பட்டன; அவற்றில் சில, ஊதி உருவாக்கப்பட்ட உயர்தர கண்ணாடிப் பொருட்கள், பளபளக்கும் மேற்பூச்சுடைய பொருட்கள், ஒளி ஊடுருவாத லாட்டிமோ (பால் வண்ண கண்ணாடி), ரேடிசெலோ (வேலைப்பாடுமிக்க கண்ணாடி) ஆகியவை. இத்தகைய பொருட்கள் விற்பனையிலும் சக்கைப்போடு போட்டன; அரசர்களின் மேஜைகளை அலங்கரித்தன.

அந்தக் காலத்தில், “உலைகள் செயல்பட்டு வந்த சமயத்தில் கடற்கழிக்கு வரும் ஆர்வமிக்க பயணி அவற்றிற்கு விஜயம் செய்யாமல் திரும்ப மாட்டார்” என கண்ணாடிக் கலையின் சரித்திராசிரியர் ஒருவர் சொல்கிறார். நாங்களும் அவற்றிற்கு விஜயம் செய்யாமல் திரும்பப் போவதில்லை. எனவே இந்தக் காலை வேளையில் வாபோரெட்டோ என்றழைக்கப்படும் மோட்டார் படகில் கிரேட் கேனாலிலிருந்து மூரானோவுக்கு செல்கிறோம். நீங்களும் வாருங்கள் சேர்ந்து செல்லலாம்.

உலைகளும் விற்பனை அங்காடிகளும்

வாபோரெட்டோவில் மூரானோவிற்கு வந்து இறங்கியதும் ஜனங்கள் நம்மை அருகிலுள்ள கண்ணாடித் தொழிற்சாலைகளுக்கு அழைத்துச் செல்கிறார்கள்; அங்கு கண்ணாடித் தொழிலாளிகள் கைவண்ணத்தில் கண்ணாடிகள் உருப்பெறுவதை கட்டணமின்றி நேரில் கண்டுகளிக்கலாம். ஒரு கைவினைஞர் உருக்கிய கண்ணாடிப் பந்தை கோலில் எடுத்து ஊதுகிறார், சுழற்றுகிறார், அது அவரது கோலின் முனையில் நீண்ட குமிழியாக இருக்கிறது. பண்பட்ட அனுபவத்தால் இடுக்கியையும் கத்திரியையும் உபயோகித்து அந்த உருவற்ற கண்ணாடியை இழுக்கிறார், கத்தரிக்கிறார், நசுக்குகிறார்; இவ்வாறு, பின்னங்கால்களை ஊன்றி பாயும் குதிரையின் தலையையும், கால்களையும், வாலையும் உருவாக்குகிறார்.

முதல் தொழிற்சாலையைவிட்டு வெளிவந்ததும் அமைதி நிலவும் ரியோ டேயி வேட்ரீ என்ற கண்ணாடித் தொழிலாளரின் கால்வாய்க்கு அருகே மெல்ல செல்கிறோம்; வெனிஸில் பெரும்பாலான இடங்களில் ஜனங்களை நடைபாதைகளில் அல்லது கால்வாயில் காணலாம்; இங்கும் அவ்வாறே உள்ளது. மூரானோவில் அநேக கண்ணாடிப் பட்டறைகளும் ஷோரூம்களும் இருப்பதை நாம் கவனிக்கிறோம். அவற்றில் சில, தேனீர் செட்டுகள், விளக்குத் தண்டுகள், மலைக்க வைக்கும் கனமான சிலைகள் என நேர்த்தியான, உயர்தர கண்ணாடிப் பொருட்களை பார்வைக்கு வைத்திருக்கின்றன; அவற்றை உருவாக்க அபார திறமையும் கூர்ந்த கவனமும் தேவை என்பதில் சந்தேகமே இல்லை. இன்னும் சில பட்டறைகளும் ஷோரூம்களும், குறைந்த விலை கண்ணாடிப் பொருட்களை விற்பனை செய்கின்றன; அவற்றில் சிறிய மணிகள் முதல் பூஞ்சாடிகள், பல வண்ண பேப்பர் வெயிட்டுகள் வரை உள்ளன. அவற்றில் பல கண்களுக்கு விருந்தளிக்கின்றன. அவை அனைத்தும் கையால் தயாரிக்கப்பட்டவை.

பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்படும் விதத்தைக் காண்கையில் நாம் அதிசயித்துப் போகிறோம். நீரற்ற உப்பு (soda ash), சுண்ணாம்புக்கல், நைட்ரேட், ஆர்சனிக் ஆகியவை 30 சதவீதமும் மணல் 70 சதவீதமும் கலந்து உருவான மூரானோ கண்ணாடி, 1,400 டிகிரி செல்சியஸில் திரவநிலையில் இருக்கிறது, சுமார் 500 டிகிரி செல்சியஸில் இறுகுகிறது. இந்த இரண்டு வெப்பநிலைக்கும் இடைப்பட்ட பொருத்தமான வெப்பநிலையில் கண்ணாடி மிருதுவாகவும் இளகிய நிலையிலும் இருக்கிறது. எனவே அதை ஊதி ஒரு பொருளாக உருவாக்குவதற்கு அல்லது வடிப்பதற்கு அது தொடர்ந்து இளகிய நிலையில் இருக்கும்படி மீண்டும் மீண்டும் அதை உலையில் சூடாக்க வேண்டியிருக்கிறது. கிடைமட்டக் கைப்பிடிகளுள்ள பெஞ்சுகளில் கைவினைஞர்கள் உட்கார்ந்துகொண்டு தங்கள் குழல் போன்ற கோல்களை அந்தக் கைப்பிடிகள்மீது வைத்து உருட்டுகிறார்கள். அவர்கள் அதை ஒரு கையால் திருப்புகையில் மறு கையில் ஒரு கருவியை அல்லது சூட்டைத் தாக்குப்பிடிக்கும், நீரில் தோய்த்த பியர்வுட் மரத்தாலான அச்சைப் பயன்படுத்தி உருகு நிலையிலுள்ள கண்ணாடியை வடிவமைக்கிறார்கள்.

ஒரு கைவினைஞர் கண்ணாடிக் குமிழ் ஒன்றை ஊதி நீள் வடிவம் பெறச் செய்வதை நாம் பார்க்கிறோம்; அவருடைய உதவியாளரிடம் அந்தக் குமிழின் ஒரு முனையை கத்தரிக்க சொல்கிறார், பிறகு தன் குழல் போன்ற கோலை நேராக பிடித்துக்கொண்டு அந்தக் குமிழின் கத்தரிக்கப்பட்ட திறப்பு விரியும்படி அதை சுழற்றுகிறார்; அப்போது ஒரு மலர் மொட்டு விரிவதுபோல அந்தக் கண்ணாடி விரிகிறது. அதை மேலும் சூடாக்கி, ஓரத்தை நசுக்கி வடிவமைக்கையில் அது சரவிளக்குச் சட்டத்தை அலங்கரிக்கும் லில்லிப்பூ வடிவ விளக்காக மாறுகிறது.

உருகிய நிலையிலுள்ள பளிச்சென்ற கண்ணாடித் திரட்டிற்கு வண்ணம் சேர்ப்பதற்கு கைவினைஞர் சூட்டில் உருகி ஒட்டிக்கொள்ளும் வண்ண வண்ணப் பொடிகளை அதன்மீது தூவுகிறார். பூக்கள் போன்ற வடிவங்களைப் பெறுவதற்கு மூரினே என்ற முறை பயன்படுத்தப்படுகிறது; இந்த முறையில், வெவ்வேறு நிறங்களிலும் டிசைன்களிலும் உள்ள கண்ணாடிக் குச்சிகளாலான நாணய வடிவ வில்லைகள் சேர்க்கப்படுகின்றன. உலோகத் தட்டில் தனித்தனி கண்ணாடிக் குச்சிகள் அல்லது தொகுதி தொகுதியான குச்சிகள் நேர்நேராக வைக்கப்பட்டுள்ளன; அவற்றின் மீது உருளை வடிவ கண்ணாடித் திரட்டு உருட்டப்படுகிறது; அப்போது அவை அதன் வெளிப்புறத்தை மூடிவிடுகின்றன. அதை மீண்டும் உலையில் காட்டுகையில் பல்வேறு வண்ணத்திலோ, பூப்பின்னல் போன்றோ, சுருள் வடிவிலோ உள்ள அக்குச்சிகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டு அக்கண்ணாடியின் பாகமாகிவிடுகின்றன; இவற்றை பின்னர் பூஞ்சாடியாகவோ, விளக்காகவோ அல்லது விருப்பப்பட்ட எந்த வடிவிலோ ஊதி உருவாக்குகிறார்கள். பொருட்களை வெவ்வேறு உருக்கு உலைகளில் முக்குவதன் மூலம் வண்ணமுள்ள அல்லது வண்ணமில்லாத பல அடுக்குகள் கொண்ட கனமான பொருட்கள் உருவாக்கப்படுகின்றன.

ஆம், ஒவ்வொரு படைப்புக்குப் பின்னும் பெரிய கதையே இருக்கிறது, ஒவ்வொன்றும் பிரத்தியேக தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்படுகிறது. பண்டைய பாரம்பரியங்களின் உதவியால், வெனிஸின் சரித்திரப் புகழ்பெற்ற இத்தீவில் கண்ணாடித் தொழிலாளிகள் நெருப்பின் உதவியோடு மணலை உருமாற்றி அழகு கொழிக்கும், கண்கவர் பொருட்களைப் படைக்கிறார்கள். (g04 5/22)

[பக்கம் 22-ன் படம்]

ரியோ டேயி வேட்ரீ, மூரானோ, இத்தாலி

[பக்கம் 23-ன் படம்]

15-⁠ம் நூற்றாண்டை சேர்ந்த “பரோவியர் கப்”

[பக்கம் 23-ன் படம்]

16-⁠ம் நூற்றாண்டை சேர்ந்த வைர நுனியால் செதுக்கப்பட்ட கோப்பை

[பக்கம் 24-ன் படங்கள்]

1. க்ளோரி ஹோல்

2. கண்ணாடித் திரட்டை கைவினைஞர் உருவமைக்கிறார்

3. இன்னும் நன்கு இளகுவதற்கு கண்ணாடி மீண்டும் சூடேற்றப்படுகிறது

4. இடுக்கியையும் கத்திரியையும் பயன்படுத்தி குதிரையின் பாதத்தை உருவாக்குகிறார்

5. இறுதியில், குதிரை தயார்!

[படத்திற்கான நன்றி]

Photos courtesy http://philip.greenspun.com