Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

குதிரையையும் நாவையும் அடக்குதல்

குதிரையையும் நாவையும் அடக்குதல்

குதிரையையும் நாவையும் அடக்குதல்

“குதிரை யுத்த நாளுக்கு ஆயத்தமாக்கப்படும்” என பூர்வ இஸ்ரவேலின் ஞானமுள்ள ராஜாவான சாலொமோன் சொன்னார். ( நீதிமொழிகள் 21:31) போர்களில் வெற்றி வாகை சூடுவதில் குதிரைப் படைகள் வெகு காலமாகவே முக்கிய பங்கு வகித்திருக்கின்றன. குதிரையின் குணத்தையும் பலத்தையும் கட்டுப்படுத்துவதற்கு பூர்வ காலம் முதலே கடிவாளம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

கடிவாளம் என்பது, “விலங்கின் வாயிலுள்ள தகட்டை இறுக்கிப் பிடிக்கும் வார்களாலான ஒரு சாதனமாகும்; இந்த வார்களினால் மனிதன் அதைக் கட்டுப்படுத்துகிறான்” என விளக்குகிறது என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா. பண்டைய கடிவாளங்களுக்கும் இன்றைய கடிவாளங்களுக்கும் இடையே அந்தளவு வேறுபாடு இல்லை; குதிரைகளைக் கட்டுப்படுத்துவதற்கும் அவற்றின் மீது சவாரி செய்வதற்கும் அவை அதிக பயனுள்ளவையாய் நிரூபித்திருக்கின்றன.

சாலொமோனின் தகப்பனாகிய தாவீது ராஜா பின்வருமாறு எழுதுகையில் கடிவாளத்தின் முக்கியத்துவத்தை சொல்லாமல் சொன்னார்: “கடிவாளம் பூட்டி வாரினால் இழுத்தாலன்றி உன்னைப் பின்தொடர்ந்து வராத குதிரை போன்றோ கோவேறு கழுதை போன்றோ அறிவிலியாய் இராதே!” (சங்கீதம் [திருப்பாடல்கள்] 32:9, பொது மொழிபெயர்ப்பு) குதிரையைப் பழக்கிவிட்டால் பின்பு அது நன்றியுள்ள நண்பனாய் ஆகிவிடுகிறது. மகா அலெக்சாந்தர், பூசெஃபாலஸ் என்றழைக்கப்பட்ட தன் குதிரையை அருமையாய் நேசித்தார்; அந்தக் குதிரையைக் கௌரவிக்கும் விதத்தில் இந்தியாவிலுள்ள ஒரு நகரத்திற்கு அதன் பெயரைச் சூட்டினார்.

குதிரைகளை பழக்குவதில் மனிதர்கள் நூற்றாண்டுக் கணக்கில் வெற்றி கண்டிருக்கிறார்கள்; ஆனால் அவர்களது அபூரண இயல்பை கட்டுப்படுத்துவதைக் குறித்ததிலோ விஷயம் வேறு. “நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்; ஒருவன் சொல் தவறாதவனானால் அவன் பூரணபுருஷனும், தன் சரீரமுழுவதையும் கடிவாளத்தினாலே அடக்கிக்கொள்ளக் கூடியவனுமாயிருக்கிறான்” என கிறிஸ்தவ சீஷனாகிய யாக்கோபு சொன்னார். ( யாக்கோபு 3:2) யோசிக்காமல் அல்லது புண்படுத்தும் வகையில் அல்லது கோபத்தில் வார்த்தைகளை அள்ளி வீசியதே இல்லையென நம்மில் யார்தான் சொல்ல முடியும்?

அப்படியானால் ‘ஒரு மனுஷனாலும் அடக்க முடியாத’ கட்டுக்கடங்கா நாவிற்கு ஏன் கஷ்டப்பட்டு கடிவாளம் போட வேண்டும்? ( யாக்கோபு 3:8) பழக்குவித்த குதிரை பயனுள்ளதாக இருக்குமென்பதால் அதற்காக நேரத்தையும் முயற்சியையும் செலவழிக்க ஆட்கள் தயாராக இருக்கிறார்கள். அதைப் போலவே நம் நாவை எந்தளவுக்கு நன்கு பழக்குவிக்கிறோமோ, அதாவது அடக்குகிறோமோ அந்தளவு அது அதிக பயனுள்ளதாக இருக்கும்.

தயவான வார்த்தைகள் நம் நண்பர்களுக்கும், சக பணியாட்களுக்கும், உறவினர்களுக்கும் ஆறுதலின் அருமருந்தாக அமையலாம், உற்சாகத்தைத் தரலாம். ( நீதிமொழிகள் 12:18) இத்தகைய வார்த்தைகள் நம்மை சுற்றியிருப்பவர்களின் வாழ்க்கையை ரம்மியமாக்கலாம். ஆனால் கடிவாளமிடப்படாத நாவு பிரச்சினைகளை வரவழைக்கும். “உன் . . . நாவை காத்துக்கொள், பிரச்சினையிலிருந்தும் உன்னைக் காத்துக்கொள்” என பைபிள் எச்சரிக்கிறது. ( நீதிமொழிகள் 21:23, த நியு இங்லிஷ் பைபிள்) நம் நாவை அடக்குவதில் எந்தளவுக்கு வெற்றி காண்கிறோமோ அந்தளவுக்கு நமக்கும் நாம் சொல்வதைக் கேட்பவர்களுக்கும் உதவியாய் இருப்போம். a(g04 5/22)

[அடிக்குறிப்பு]

a கிறிஸ்தவர்களின் பேச்சிற்கும் அவர்களது வணக்கத்திற்கும் இடையே நெருங்கிய தொடர்பிருப்பதாக பைபிள் அவர்களுக்கு நினைப்பூட்டுவது அக்கறைக்குரிய விஷயம். “உங்களில் ஒருவன் தன் நாவை அடக்காமல், தன் இருதயத்தை வஞ்சித்து, தன்னை தேவபக்தியுள்ளவனென்று எண்ணினால் அவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும்” என்று அது சொல்கிறது.​—⁠யாக்கோபு 1:26.

[பக்கம் 31-ன் படம்]

மகா அலெக்சாந்தர்

[படத்திற்கான நன்றி]

Alinari/Art Resource, NY