Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நோயற்ற ஓர் உலகம்

நோயற்ற ஓர் உலகம்

நோயற்ற ஓர் உலகம்

“ஒரு நாட்டு மக்களின் நல்வாழ்வு மற்றெல்லா நாட்டவருக்கும் நேரடியான நன்மையை அளிப்பதால் அனைத்து நாடுகளும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும், அனைத்து மக்களும் அடிப்படை உடல் நல பராமரிப்பை பெறுவதற்காக சேவை புரிய வேண்டும்.” ​—⁠அல்மா-ஆடா அறிக்கை, செப்டம்பர் 12, 1978.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன், பூமியிலுள்ள அனைவரும் அடிப்படை சுகாதார வசதியைப் பெறுவது சாத்தியமே என சிலருக்கு தோன்றியது. ஆகவே, அடிப்படை சுகாதார வசதியின் பேரில் நடத்தப்பட்ட சர்வதேச மாநாட்டுக்காக, தற்போது கஸக்ஸ்தானில் உள்ள அல்மா-ஆடாவில் பிரதிநிதிகள் கூடிவந்தனர். 2000-வது ஆண்டிற்குள்ளாக மிகப் பெரிய தொற்று நோய்கள் அனைத்திற்குமான தடுப்பு மருந்தை மனிதகுலம் பெற்றிருக்க வேண்டும் என அம்மாநாட்டில் அவர்கள் தீர்மானித்தனர். அதே ஆண்டிற்குள்ளாக, பூமியிலுள்ள அனைவருக்கும் அடிப்படை சுகாதாரமும் சுத்தமான குடிநீரும் கிடைக்கும் எனவும் அவர்கள் நம்பினர். உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) அனைத்து நாடுகளைச் சேர்ந்த அங்கத்தினர்களும் அந்த அறிக்கையில் கையெழுத்திட்டனர்.

அனைவரும் நல்வாழ்வு பெற வேண்டும் என்ற அந்த இலக்கு உண்மையில் மெச்சத்தக்கதாக இருந்தது, ஆனால் நடைமுறையில் அது ஏமாற்றத்தையே அளித்தது. அடிப்படை சுகாதார வசதி அனைவருக்கும் கிட்டவில்லை; அதே சமயம் தொற்று நோய்கள் உலகில் கோடிக்கணக்கான மக்களை இன்னும் அச்சுறுத்தி வருகின்றன. மேலும் இந்த உயிர்க்கொல்லி நோய்கள் பெரும்பாலும் குழந்தைகளையும், வயதுவந்த பெரியவர்களையும் அவர்களுடைய வாழ்க்கையின் சிறந்த காலக்கட்டத்தில் தாக்குகின்றன.

எய்ட்ஸ், டிபி, மலேரியா ஆகிய இந்த மூன்று கொடிய நோய்களின் அச்சுறுத்தல்கூட, “அனைத்து நாடுகளும் ஒன்றுபட்டு உழைக்குமாறு” தூண்டவில்லை. எய்ட்ஸ், டிபி, மற்றும் மலேரியாவை முறியடிப்பதற்கென புதிதாக ஏற்படுத்தப்பட்ட உலகளாவிய நிதி நிறுவனத்திற்கு ரூ. 61,000 கோடி பண உதவி வேண்டுமென அரசாங்கங்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. என்றாலும், 2002 கோடைக்காலம் வரையில் ரூ. 9,400 கோடி மட்டுமே நிதி உதவி அளிக்கப்பட்டிருந்தது; ஆனால், அதே ஆண்டில் இராணுவத்திற்காக ரூ. 32,90,000 கோடி செலவிடப்பட்டது. ஆகவே, பிளவுபட்ட இந்த உலகில், எப்படிப்பட்ட அச்சுறுத்தல் வந்தாலும் பொது நன்மை கருதி அனைத்து நாடுகளையும் ஒன்றிணைக்க முடியாமலிருப்பதே வருந்தத்தக்க விஷயம்.

மருத்துவ துறையினருக்கு என்னதான் நல்லெண்ணம் இருந்தாலும் தொற்று நோய்களை ஒழிக்கும் விஷயத்தில் அவர்கள் கையொடிந்த நிலையில் இருக்கின்றனர். அதற்கு காரணம், ஒருவேளை அரசாங்கங்கள் போதுமான நிதியுதவி அளிக்காமல் இருந்திருக்கலாம். நோய்க் கிருமிகளோவென்றால் அநேக மருந்துகளை எதிர்க்கும் சக்தியை பெற்றுவிட்டன. மேலும் மக்களுடைய வாழ்க்கைப் பாணியே நோய்கள் எளிதில் தொற்றுவதற்கு வழிவகுக்கலாம். அதுமட்டுமல்ல, சில இடங்களில் சகஜமாக காணப்படும் வறுமை, போர், பஞ்சம் ஆகிய பிரச்சினைகளும்கூட கோடிக்கணக்கானோர் நோயால் தொற்றப்படுவதற்கு வசதியாக அமைந்துவிடுகின்றன.

நமது ஆரோக்கியத்தில் கடவுள் காட்டும் அக்கறை

ஆனால் இதற்கு பரிகாரம் இருக்கிறது. மனிதகுலத்தின் ஆரோக்கியத்தில் யெகோவா தேவன் மிகுந்த அக்கறை காட்டுகிறார் என்பதற்கு தெளிவான அத்தாட்சி நமக்கு உள்ளது. நமது நோய்த் தடுப்பு மண்டலமே இதற்கு தலைசிறந்த அத்தாட்சியாகும். மேலும், இஸ்ரவேலருக்கு கடவுள் கொடுத்த அநேக சட்டங்கள், அவர்களை தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்க வேண்டுமென்ற அக்கறை அவருக்கிருந்ததை வெளிப்படுத்தின. a

தம் பரலோக தகப்பனின் அதே சுபாவத்தைப் பிரதிபலிக்கிற இயேசு கிறிஸ்துவும் சுகவீனரிடம் பரிவு காட்டுகிறார். குஷ்டரோகம் பீடித்திருந்த ஒருவரை இயேசு எதிர்ப்பட்டதைப் பற்றி மாற்குவின் சுவிசேஷம் இவ்வாறு விவரிக்கிறது. “உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும்” என அந்த குஷ்டரோகி வேண்டினான். அவன் வேதனையில் அவஸ்தைப்படுவதைக் கண்ட இயேசு மனதுருகி, “எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு” என்றார்.​—மாற்கு 1:40, 41.

ஒருசிலரை மட்டுமே இயேசு அற்புதமாக சுகப்படுத்தவில்லை. ‘இயேசு கலிலேயா எங்கும் சுற்றி நடந்து, . . . உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கிச் சொஸ்தமாக்கினார்’ என சுவிசேஷ எழுத்தாளரான மத்தேயு குறிப்பிடுகிறார். (மத்தேயு 4:23) அவர் அளித்த சுகப்படுத்துதல் யூதேயா மற்றும் கலிலேயாவிலிருந்த சுகவீனருக்கு உதவுவதாக மட்டும் இருக்கவில்லை. எதிரிகள் யாரும் இல்லாமல் கடவுளுடைய ராஜ்யம் மனிதகுலத்தை ஆளும்போது எந்தவித நோயும் இருக்காது என்பதற்கு ஒரு முற்காட்சியையும் நமக்கு அளிக்கிறது. அந்த ராஜ்யத்தைப் பற்றியே இயேசு பிரசங்கித்தார்.

அனைவருக்கும் ஆரோக்கியம்—⁠ஒரு கனவல்ல

அனைவருக்கும் ஆரோக்கியம் கிடைக்கப்போவது ஒரு கனவல்ல என பைபிள் நமக்கு உறுதியளிக்கிறது. ‘மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கும்’ காலத்தை அப்போஸ்தலனாகிய யோவான் ஒரு தரிசனத்தில் கண்டார். மனிதரோடு கடவுள் வாசம் செய்யப் போவதால், ‘இனி மரணமோ துக்கமோ அலறுதலோ வருத்தமோ எதுவும் இருக்காது.’ இது நம்புவதற்கே கடினமாக தோன்றுகிறதா? அடுத்த வசனத்தில் கடவுள்தாமே இவ்வாறு அறிவிக்கிறார்: “இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள்.”​—வெளிப்படுத்துதல் 21:3-5.

ஆம், நோய்களுக்கு ஒரு முடிவு வரவேண்டும் என்றால் வறுமை, பஞ்சம், போர் ஆகியவற்றிற்கும் ஒரு முடிவு வரவேண்டும். ஏனென்றால் நோய்க் கிருமிகள் தொற்றுவதில் இவற்றிற்கும் சம்பந்தமுண்டு. ஆகவே, இவற்றிற்கெல்லாம் முடிவு கட்டும் பொறுப்பை தம்முடைய ராஜ்யத்திடம், அதாவது கிறிஸ்துவால் ஆளப்படும் பரலோக அரசாங்கத்திடம் யெகோவா ஒப்படைக்கிறார். லட்சோப லட்சம் ஜனங்களின் ஊக்கமான ஜெபங்களுக்கு அந்த அரசாங்கம் பதிலளிக்கும், பூமிக்கான கடவுளுடைய சித்தத்தையும் அது நிறைவேற்றும்.​—மத்தேயு 6:9, 10.

கடவுளுடைய ராஜ்யம் எப்போது வருமென நாம் எதிர்பார்க்கலாம்? இக்கேள்விக்கு பதிலளிக்கையில், கடவுளுடைய ராஜ்யம் சீக்கிரத்தில் நடவடிக்கை எடுக்கப் போவதற்கு அடையாளமாக நடக்கும் குறிப்பிடத்தக்க தொடர் சம்பவங்களை மக்கள் காண்பார்கள் என இயேசு முன்னறிவித்தார். இந்த அம்சங்களில் ஒன்றை குறிப்பிடுகையில், ‘பல இடங்களில் கொள்ளைநோய்கள்’ உண்டாகுமென அவர் சொன்னார். (லூக்கா 21:10, 11; மத்தேயு 24:3, 7) “கொள்ளைநோய்” என்பதற்கான கிரேக்க வார்த்தை “உயிரைப் பறிக்கும் எந்தவொரு தொற்று நோயையும்” குறிக்கிறது. மருத்துவ விஞ்ஞானத்தின் அனைத்து முன்னேற்றங்களின் மத்தியிலும் 20-⁠ம் நூற்றாண்டு அதி பயங்கரமான கொள்ளைநோய்களை கண்டிருக்கிறது.​—⁠“1914 முதல் கொள்ளைநோய்களால் ஏற்பட்ட சாவுகள்” என்ற பெட்டியைக் காண்க.

சுவிசேஷங்களில் காணப்படும் இயேசுவின் வார்த்தைகளுக்கு இணையாகவே வெளிப்படுத்துதல் புத்தகத்தில் ஒரு தீர்க்கதரிசனம் இருக்கிறது. இயேசு கிறிஸ்து பரலோகத்தில் ஆட்சிப் பொறுப்பை பெற்றதும் அவருடன் சேர்ந்து அநேக குதிரை வீரர்கள் புறப்படுவதைப் பற்றி அத்தீர்க்கதரிசனம் சித்தரிக்கிறது. நான்காவது குதிரை வீரன் “மங்கின நிறமுள்ள ஒரு குதிரை” மீது சவாரி செய்கிறான், அவன் “கொள்ளை நோயை” (NW) பரப்புகிறான். (வெளிப்படுத்துதல் 6:2, 4, 5, 8) 1914 முதல் சில பயங்கரமான தொற்று நோய்கள் ஏற்படுத்திய மரணங்களைப் பற்றி சிந்திப்பது, அடையாளப்பூர்வமான இந்த குதிரை வீரன் சவாரி செய்துகொண்டே இருந்திருக்கிறான் என்பதை உறுதிப்படுத்துகிறது. உலகளாவிய விதத்தில் காணப்படும் இந்தக் ‘கொள்ளைநோய்’ கடவுளுடைய ராஜ்யத்தின் வருகை சமீபித்துவிட்டது என்பதற்கு மேலுமான ஒரு அத்தாட்சியை அளிக்கிறது. bமாற்கு 13:29.

கடந்த சில பத்தாண்டுகளாக அலையென திரண்டு வந்த தொற்று நோய்களை மருத்துவ விஞ்ஞானம் அடக்கியபோதிலும், மறுபடியும் அலை நம்மை நோக்கி சீறிப் பாய்ந்து வருகிறது. இதை என்றென்றைக்குமாக அடக்கி வைக்க மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்தி தேவை. அதைச் செய்யப்போவதாக நம் படைப்பாளர் வாக்குறுதி அளிக்கிறார். கடவுளுடைய ராஜ்யத்தில், “வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை” என ஏசாயா தீர்க்கதரிசி உறுதியளிக்கிறார். அதுமட்டுமல்ல, “[கடவுள்] மரணத்தை ஜெயமாக விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து, தமது ஜனத்தின் நிந்தையை பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார்.” (ஏசாயா 25:8; 33:22, 24) அந்த நாள் புலர்கையில், நோய் என்றென்றைக்குமாக முறியடிக்கப்பட்டிருக்கும். (g04 5/22)

[அடிக்குறிப்புகள்]

a கழிவு நீக்கம், சுகாதாரம், உடல்நலம், நோயாளிகளை சமுதாயத்திலிருந்து பிரித்து வைப்பது ஆகியவை சம்பந்தப்பட்ட சட்டங்கள் மோசேயின் நியாயப்பிரமாணத்தில் இருந்தன. “தாம்பத்தியம் சம்பந்தப்பட்ட அடிப்படை தகவல்கள், நோயை கண்டுபிடித்தல், சிகிச்சை, நோய்த் தடுப்பு முறைகள் ஆகியவற்றைப் பற்றி பைபிளில் கொடுக்கப்பட்டிருப்பது ஹிப்பாக்ரட்டிஸின் தத்துவங்களைவிட மிகவும் உயர்தரமானது, நம்பகமானது” என டாக்டர் எச். ஓ. ஃபிலிப்ஸ் குறிப்பிட்டார்.

b கடவுளுடைய ராஜ்யத்தின் வருகை சமீபித்துவிட்டது என்பது சம்பந்தமாக கூடுதலான அம்சங்களை அறிந்துகொள்ள யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்ற புத்தகத்தில் 11-⁠ம் அதிகாரத்தைக் காண்க.

[பக்கம் 12-ன் பெட்டி]

1914 முதல் கொள்ளைநோய்களால் ஏற்பட்ட சாவுகள்

இந்தப் புள்ளிவிவரங்கள் முற்றிலும் குத்துமதிப்பானவை. என்றாலும், 1914 முதற்கொண்டு கொள்ளைநோய் மனிதகுலத்தை எந்தளவுக்கு வேட்டையாடியிருக்கிறது என்பதை இவை சுட்டிக்காட்டுகின்றன.

பெரியம்மை (30 முதல் 50 கோடி) பெரியம்மையை ஒழிப்பதற்கு ஏற்ற எந்த சிகிச்சையும் கண்டுபிடிக்கப்படவில்லை. 1980-⁠ல் ஏற்படுத்தப்பட்ட ஒரு சர்வதேச தடுப்பு மருந்து திட்டம் ஒருவழியாக இந்நோயை ஒழிப்பதில் வெற்றி கண்டது.

டிபி (10 முதல் 15 கோடி) டிபி நோய் இப்போது ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 லட்சம் மக்களை காவுகொள்கிறது. இந்த உலகில் சுமார் மூன்று பேரில் ஒருவருக்கு இந்த டிபி நோய்க் கிருமி உள்ளது.

மலேரியா (8 முதல் 12 கோடி) 20-⁠ம் நூற்றாண்டின் முதல் ஐம்பது ஆண்டுகளில் மலேரியாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை வருடத்திற்கு சுமார் 20 லட்சமாக இருந்தது. இப்போது இந்நோய் ஆப்பிரிக்காவில் சகாராவின் தென்பகுதிகளிலேயே முக்கியமாய் மையங்கொண்டிருக்கிறது; அங்கு ஆண்டுக்கு பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் இன்னும் மலேரியாவால் மடிந்துகொண்டிருக்கிறார்கள்.

ஸ்பானிஷ் ஃப்ளூ (2 முதல் 3 கோடி) இந்நோயால் இறந்தோரின் எண்ணிக்கை இன்னும் அதிகம் என்று சில சரித்திராசிரியர்கள் சொல்கிறார்கள். இக்கொள்ளைநோய் 1918-19 ஆண்டுகளில், அதாவது முதல் உலகப் போருக்குப் பின் உலகெங்கும் பரவியது. “ப்யூபோனிக் பிளேக்கூட இவ்வளவு வேகமாக இத்தனை அநேக மக்களின் உயிரை காவுகொள்ளவில்லை” என கூறுகிறது மனிதரும் நுண்ணுயிரிகளும் என்ற புத்தகம்.

டைஃபஸ் (சுமார் 2 கோடி) போரைத் தொடர்ந்து இந்நோய் பெருமளவு பரவியது. முதல் உலகப் போரின் விளைவாக ஏற்பட்ட இந்நோய் கிழக்கு ஐரோப்பிய நாடுகளை சூறையாடியது.

எய்ட்ஸ் (2 கோடிக்கும் அதிகம்) இந்த நவீன கொள்ளைநோய் இப்போது ஒவ்வொரு ஆண்டும் 30 லட்சம் உயிர்களைக் கொல்லுகிறது. ஐக்கிய நாடுகளின் எய்ட்ஸ் திட்டத்தின் தற்போதைய மதிப்பீட்டின்படி, “தடுப்பதற்கும் சிகிச்சை அளிப்பதற்கும் மிகப் பரந்தளவில் முயற்சி எடுக்கப்படாவிட்டால் 2000-ஆம் ஆண்டு முதல் 2020-ஆம் ஆண்டிற்குள்ளாக 6.8 கோடி மக்கள் இறந்துவிடுவார்கள்.”

[பக்கம் 11-ன் படங்கள்]

கடவுளுடைய ராஜ்யத்தில் இந்த நோய்களின் அச்சுறுத்தல் இருக்காது

எய்ட்ஸ்

மலேரியா

டிபி

[படங்களுக்கான நன்றி]

AIDS: CDC; malaria: CDC/Dr. Melvin; TB: © 2003 Dennis Kunkel Microscopy, Inc.

[பக்கம் 13-ன் படம்]

இயேசு சகலவித வியாதிகளையும் நோய்களையும் சுகப்படுத்தினார்