Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மக்கள் தொகையியலும் பைபிளும் எதிர்காலமும்

மக்கள் தொகையியலும் பைபிளும் எதிர்காலமும்

மக்கள் தொகையியலும் பைபிளும் எதிர்காலமும்

சுவீடனிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் 165 கோடியாக இருந்த மனித குடும்பத்தாரின் எண்ணிக்கை அந்த நூற்றாண்டின் முடிவில் 600 கோடியென ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. பூமியின் ஜனத்தொகை அதிர்ச்சியூட்டும் இதே வேகத்தில் தொடர்ந்து அதிகரிக்குமா? அடுத்த ஆயிரமாண்டில் ஜனத்தொகை வெடிப்பு ஏற்படுமா? திக்குமுக்காட வைக்கும் இந்த சிக்கலான கேள்விகளின் பிடியில் மாட்டிக்கொண்டு தவிக்கும் நிபுணர்கள்தான் மக்கள் தொகையியல் நிபுணர்கள் என அழைக்கப்படுகிறார்கள்; அவர்களது ஆய்வுக்கு மக்கள் தொகையியல் என்று பெயர்.

மக்கள் தொகையியல் என்பது “மனித ஜனத்தொகை பற்றிய, [முக்கியமாக] அதன் அளவு, நெருக்கம், பிறப்பு இறப்பு போன்றவற்றை பற்றிய புள்ளி விவர ஆய்வு” என வெப்ஸ்டர்ஸ் டிக்ஷ்னரி வரையறுக்கிறது. இந்த நிபுணர்கள் ஜனத்தொகையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் மூன்று அம்சங்களை ஆராய்கிறார்கள். அவை: பிறப்பு விகிதம் (பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை); இறப்பு விகிதம் (இறப்பவர்களின் எண்ணிக்கை); குடிபெயருகிறவர்களின் விகிதம் (ஒரு நாட்டிலிருந்து மற்றொன்றிற்கு மாறிச் செல்பவர்களின் எண்ணிக்கை).

வரலாற்று மக்கள் தொகையியல் என்பது கடந்த கால ஜனத்தொகை அதிகரிப்பையும் அதன் ஏற்ற இறக்கங்களையும் பற்றிய ஆய்வு ஆகும். வரலாற்று மக்கள் தொகையியல் நிபுணர்கள் பண்டைய நாகரிகங்களைப் பற்றி முடிந்தளவுக்கு அனைத்தையும் அறிந்துகொள்கிறார்கள்; அதற்கு, எழுதப்பட்ட ஆதாரங்களையும், இடிபாடுகளையும், எலும்புக்கூடுகளையும் இன்னும் பிற கலைப்பொருட்களையும் கவனமாய் ஆராய்கிறார்கள். எனவே இவர்களது ஆய்வின் ஒரு பாகம் ஊகங்களின் அடிப்படையிலும் மறுபாகம் அறிவியலின் அடிப்படையிலும் ஆனது. அட்லஸ் ஆஃப் உவர்ல்ட் பாப்புலேஷன் ஹிஸ்டரி என்ற புத்தகம் இவ்வாறு ஒப்புக்கொள்கிறது: “வரலாற்று மக்கள் தொகையியல் நிபுணர்களின் விளக்க கோட்பாடுகள், தற்போதைய முன்னேற்ற நிலையை வைத்துப் பார்க்கையில் நிரூபிக்க முடியாதவையாக உள்ளன; இதனால் புள்ளி விவர ஆய்வாளரின் கருத்துப்படி அவை நம்பகமானவை என்பதற்கு சாத்தியமே இல்லை.” ஆனாலும் பைபிள் மாணாக்கர்களுக்கோ மக்கள் தொகையியல் ஊகங்கள் ஆர்வத்துக்குரியவை. உண்மையில் அவை பெரும்பாலும் பைபிள் பதிவுகளுடன் ஒத்திருக்கின்றன.

ஜலப்பிரளயத்திற்குப் பின் ஜனத்தொகை அதிகரிப்பு

நோவாவின் நாளைய ஜலப்பிரளயத்தில் எட்டு பேர் மட்டுமே தப்பிப்பிழைத்தார்கள் என பைபிள் சொல்கிறது. அதன் பின்னர் சுமார் 1,400 வருடங்களில் பூமியின் மக்கள் தொகை ஐந்து கோடியை எட்டியிருக்கலாமென மக்கள் தொகையியல் நிபுணர்கள் சிலர் ஊகிக்கிறார்கள். 8 பேரிலிருந்து 1,400 வருடங்களுக்குள்ளாக சுமார் ஐந்து கோடி பேராக அதிகரித்தது நம்ப முடியாததா?

முதலாவதாக, ஐந்து கோடி என்பது மதிப்பீடு மட்டும்தான். ஆனாலும் பைபிளில் ஆதியாகமம் 9:1-⁠ல் பின்வருமாறு சொல்லப்பட்டிருப்பது ஆர்வத்துக்குரியது: “தேவன் நோவாவையும், அவன் குமாரரையும் ஆசீர்வதித்து: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள் [என்றார்].” பிறகு 10, 11 அதிகாரங்களில் நோவாவின் குமாரர்களான சேம், காம், யாப்பேத் என்பவர்களின் சந்ததியில் வந்த 70 குடும்பங்களைப் பற்றி வாசிக்கிறோம். தொடர்ந்து வாசிக்கையில் ஆபிரகாம் முதல் சேம் வரையிலான ஆண்களின் வம்சாவளி பட்டியலை நாம் காண்கிறோம்; அவர்கள் தங்களுக்கு ‘குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றார்கள்.’ ‘பூமியை நிரப்பும்படியான’ கடவுளுடைய கட்டளைக்கு இணங்க, இந்த சமயத்தில் பிறப்பு விகிதம் எப்போதையும்விட மிக அதிகமாய் இருந்திருக்கலாம்.

இறப்பு விகிதத்தைப் பற்றி என்ன சொல்லலாம்? ஜலப்பிரளயத்திற்குப் பின் தொடர்ந்து வந்த பல நூறு ஆண்டுகளின்போது மனிதன் நீண்ட ஆயுசுடன் வாழ்ந்தானென ஆதியாகம புத்தகத்தின் அதே அதிகாரங்கள் விவரிக்கின்றன. a பிறப்பு விகிதம் அதிகமாகவும் இறப்பு விகிதம் குறைவாகவும் இருக்கையில் படுவேகமாக ஜனத்தொகை அதிகரிக்கும்.

எகிப்தில் இஸ்ரவேலர் தங்கியிருந்தபோது

எகிப்து தேசத்தில் இஸ்ரவேலர் தங்கியிருந்த காலத்தில் ஜனத்தொகை எக்கச்சக்கமாக அதிகரித்ததைப் பற்றிய பைபிள் பதிவை சில ஆராய்ச்சியாளர்கள் சந்தேகக் கண்ணுடன் பார்க்கிறார்கள். யாக்கோபுடைய குமாரர்களின் மனைவிகளை கணக்கில் சேர்க்காமல் “எகிப்துக்குப் போன யாக்கோபின் குடும்பத்தார் எழுபதுபேர்” என பைபிள் குறிப்பிடுகிறது. (ஆதியாகமம் 46:26, 27) ஆனாலும், இஸ்ரவேலர் 215 ஆண்டுகளுக்குப் பிறகு எகிப்தைவிட்டு வெளியேறிய சமயத்தில் ‘பிள்ளைகள் தவிர ஆறுலட்சம் புருஷர் இருந்தது’ ஆச்சரியமளிக்கும் விஷயம். (யாத்திராகமம் 12:37) பெண்களையும் பிள்ளைகளையும் சேர்த்து நாம் கணக்கிட்டால் மொத்தம் கிட்டத்தட்ட 30 லட்சம் பேர் இருந்திருக்கலாம்! அத்தகைய அதிகரிப்பு சாத்தியம்தானா?

அந்தக் கேள்விக்குப் பதிலைப் பெற, எகிப்திலிருந்த இஸ்ரவேலரின் எண்ணிக்கை அதிகரித்ததைப் பற்றி பைபிள் சொல்வதை நாம் கவனமாக சிந்திப்போம்: “இஸ்ரவேல் புத்திரர் மிகுதியும் பலுகி, ஏராளமாய்ப் பெருகிப் பலத்திருந்தார்கள்; தேசம் அவர்களால் நிறைந்தது.” அந்த சமயத்தில் இஸ்ரவேலர் அப்படி அதிகரித்தது வழக்கத்துக்கு மாறானதாக இருந்தது.​—⁠யாத்திராகமம் 1:7.

இன்றுள்ள நாடுகளிலும் இத்தகைய அதிகரிப்பைக் காண்பது ஆர்வத்துக்குரியது; உதாரணத்திற்கு 1980-களில் கென்யா இப்படிப்பட்ட அதிகரிப்பைக் கண்டது. ஆனாலும், இஸ்ரவேலரின் அதிகரிப்பு வழக்கத்துக்கு மாறாக இருந்ததற்கான காரணம் அது நீண்ட காலம் நீடித்ததே.

இஸ்ரவேலர் பலுகிப் பெருகியதற்கு மற்றொரு காரணத்தை பைபிளே கொடுக்கிறது. இஸ்ரவேலர் எகிப்தில் வாழ்ந்த காலத்தில் உணவுப் பற்றாக்குறையால் அவர்கள் அவதிப்படவில்லை. பொதுவாக பஞ்சம் தலைதூக்குகையில் அநேகர் இளவயதிலேயே அகால மரணமடைவார்கள். இதனால் அக்காலப் பகுதியில் குழந்தை பிறப்பும் குறைந்துவிடுகிறது. ஆனால் இஸ்ரவேலருக்கோ வயிறார சாப்பிட ஏராளமான உணவிருந்ததாக பைபிள் சொல்கிறது. யோசேப்பின் குடும்பத்தார் எகிப்துக்கு வந்தபோது பார்வோன் அவரிடம் இவ்வாறு சொன்னார்: “தேசத்திலுள்ள நல்ல இடத்திலே உன் தகப்பனையும் உன் சகோதரரையும் குடியேறும்படி செய்; அவர்கள் கோசேன் நாட்டிலே குடியிருக்கலாம்.” (ஆதியாகமம் 47:6) இஸ்ரவேலர் எகிப்தியருக்கு அடிமைகளான பின்பும்கூட சாப்பிடுவதற்கு அவர்களுக்குப் போதுமான உணவிருந்ததாக தோன்றுகிறது. சொல்லப்போனால், இஸ்ரவேலர் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, தாங்கள் அடிமைகளாக இருக்கையில் அப்பம், மீன், வெள்ளரிக்காய்கள், கொம்மட்டிக்காய்கள், கீரைகள், வெங்காயங்கள், வெள்ளைப் பூண்டு ஆகியவற்றையும் நிறைய இறைச்சியையும் புசித்ததை ஏக்கத்தோடு நினைத்துப் பார்த்தார்கள்.​—⁠யாத்திராகமம் 16:3; எண்ணாகமம் 11:5.

பொ.ச. முதல் நூற்றாண்டின்போது

கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தை இன்னும் நன்கு புரிந்துகொள்வதற்குக்கூட மக்கள் தொகையியல் உதவலாம். உதாரணமாக, ‘சகல ஜாதிகளையும் சீஷராக்கும்படி’ தம்முடைய சீஷர்களுக்கு இயேசு கொடுத்த கட்டளையை நாம் வாசிக்கையில், ‘அந்த பிரசங்க வேலைக்கான நியமிப்பு எவ்வளவு விஸ்தாரமானது?’ என நாம் யோசிக்கலாம். (மத்தேயு 28:19) முதல் நூற்றாண்டில் ரோம பேரரசில் எத்தனை பேர் வாழ்ந்தார்கள்? ஐந்து முதல் ஆறு கோடி பேர் வாழ்ந்ததாக சிலர் மதிப்பிடுகிறார்கள். அது உண்மையென்றால் ஆரம்ப கால கிறிஸ்தவ சுவிசேஷகர்கள் பிரமாண்டமான வேலை செய்ய வேண்டியிருந்தது!

கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தை வாசிக்கையில் அப்போஸ்தலன் பேதுரு வெகு தொலைவிலிருந்த பாபிலோனுக்குச் சென்று நற்செய்தியைப் பிரசங்கித்ததைப் பற்றி நாம் அறிகிறோம். (1 பேதுரு 5:13) அவர் ஏன் பாபிலோனுக்குச் சென்றார்? த நியு என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்காவிலுள்ள குறிப்பு அறிவொளி அளிக்கிறது: “பாலஸ்தீனாவிற்கு வெளியே முக்கியமாக சிரியா, ஆசியா மைனர், பாபிலோனியா, எகிப்து ஆகிய இடங்களில் யூதர்கள் அதிகமிருந்தார்கள்; இந்த ஒவ்வொரு இடத்திலும் சுமார் 10,00,000 யூதர்கள் இருந்ததாக மதிப்பிடப்பட்டிருக்கிறது.” குறிப்பாக யூதர்களுக்கு பிரசங்கிக்கும்படி பேதுரு நியமிக்கப்பட்டதால் யூத சமுதாயத்தினர் வாழ்ந்த காலனியாகிய பாபிலோனுக்கு அவர் பயணப்பட்டது நியாயமானதே. (கலாத்தியர் 2:9) அங்கு திரளான யூதர்கள் வாழ்ந்ததால் பிராந்தியத்திற்கு அவருக்கு குறைவே இல்லை!

எதிர்காலத்தைப் பற்றி என்ன சொல்லலாம்?

நாம் பார்த்தபடி, மனிதனின் கடந்த கால வரலாற்றிலிருந்து சில தகவல்களைப் பெறுவதில் மக்கள் தொகையியல் நிபுணர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்கள் எதிர்காலத்தைப் பற்றி என்ன சொல்கிறார்கள்? அவர்கள் முக்கியமான கேள்விகளை எழுப்பியிருக்கிறார்கள். இந்த ஆயிரமாண்டில் ஜனத்தொகை வெடிப்பு ஏற்படுமா? யாரும் உறுதியாக சொல்ல முடியாது. அநேக நாடுகளில் பிறப்பு விகிதம் குறைவதை கவனிக்கையில் உலக ஜனத்தொகை சமநிலை அடையுமென சில ஆராய்ச்சியாளர்கள் முன்னறிவிக்கிறார்கள்.

ஆனாலும் எல்லா நிபுணர்களும் இந்த முன்னறிவிப்பை ஆமோதிப்பதில்லை. பாப்புலேஷன் டுடே என்ற பத்திரிகை இவ்வாறு சொல்கிறது: “இன்று ஜனத்தொகை அதிகரிப்பு, பிறப்பு விகிதத்தின் அடிப்படையில் இரண்டு வித்தியாசமான ‘உலகங்களாக’ பிரிக்கப்படுகின்றன: ஒவ்வொரு தம்பதியினருக்கும் இரண்டு அல்லது அதற்கும் குறைவான குழந்தைகள் இருப்பது ஒரு உலகம்; அதற்கும் அதிகமான குழந்தைகள் இருப்பது மற்றொரு உலகம். ‘இரண்டு குழந்தைகள் அல்லது அதற்கும் குறைவாக இருக்கும் உலகில்’ ஐரோப்பா, ஐக்கிய மாகாணங்கள், கனடா, ஜப்பான் ஆகிய நாடுகளும் தொழில்நுட்பத்தில் படுவேகமாக வளர்ந்துவரும் நாடுகளும் அடங்கும். . . . அதற்கு எதிர்மாறாக, ‘பிறப்பு விகிதம் மளமளவென அதிகரிக்கும் உலகில்’ ஆப்பிரிக்காவிலுள்ள பெரும்பாலான நாடுகள், ஆசியா, லத்தீன் அமெரிக்கா ஆகியவை அடங்கும்; இங்கு ஒவ்வொரு தம்பதியினருக்கும் இரண்டு குழந்தைகளுக்கும் அதிகம் உண்டு. உலக ஜனத்தொகையில் பாதியளவு ஜனங்களை தன்னகத்தே கொண்ட இந்நாடுகளில் ஒவ்வொரு பெண்ணுக்கும் சராசரியாக நான்கு குழந்தைகள் இருக்கின்றன.”

எனவே சில நாடுகளில் ஜனத்தொகை அதிகரிப்பு குறைந்திருந்தாலும் மற்ற நாடுகளில் அது அதிகரித்துள்ளது அல்லது ஸ்திரமாக ஒரே நிலையில் உள்ளது. பாப்புலேஷன் டுடே பத்திரிகை எதிர்கால வாய்ப்புகளை இவ்வாறு தொகுத்துரைக்கிறது: “பெரும்பாலான வளரும் நாடுகளில் மளமளவென ஜனத்தொகை அதிகரிப்பது நின்றபாடில்லை. குழந்தைகளின் இறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் பெண்களுக்குக் கல்வி புகட்டுவதற்கும் குடும்ப கட்டுப்பாட்டுக்கும் உதவுகிற திட்டங்களில் எத்தனை நாடுகள் எவ்வளவு சீக்கிரத்தில் பணத்தை முதலீடு செய்கின்றன என்பதைப் பொறுத்தே, கற்பனையிலல்லாமல் நிஜத்தில் உலகளாவிய ‘ஜனத்தொகை வெடிப்புக்கு’ ஒரு முடிவு கட்ட முடியும்.”

தற்போது 600 கோடியையும் தாண்டிவிட்ட பூமியின் ஜனத்தொகை மளமளவென இன்னும் அதிகரிக்குமா? காலம்தான் பதில் சொல்லும். ஆனால் பூமி நிரம்பி வழிய வேண்டுமென்பதல்ல, மாறாக நிரப்பப்பட வேண்டும் என்பதே கடவுளுடைய நோக்கமாயிருப்பது நமக்குத் தெரியும். (ஆதியாகமம் 1:28) கடவுளுடைய ராஜ்ய ஆட்சியில் இது நிறைவேறும் என நாம் உறுதியாக நம்பலாம்.​—⁠ஏசாயா 55:10, 11. (g04 5/8)

[அடிக்குறிப்பு]

a பின்னர், சுமார் பொ.ச.மு. 1500-⁠ல் மோசே குறிப்பிட்டது போல, மனிதனின் வாழ்நாள் காலம் 70 அல்லது 80 வருடங்களாக குறைந்துவிட்டது.​—⁠சங்கீதம் 90:⁠10.

[பக்கம் 14-ன் படம்]

ஜலப்பிரளயத்தில் தப்பிப்பிழைத்தவர்களில் இருந்து ஆரம்பமான உலக ஜனத்தொகை இன்று 600 கோடியையும் தாண்டியிருக்கிறது

[பக்கம் 15-ன் படம்]

எகிப்தில் குறைந்த எண்ணிக்கையில் இருந்த இஸ்ரவேலர்கள் 215 ஆண்டுகளில் சுமார் 30 லட்சம் பேராக அதிகரித்தார்கள்