Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மைலினுக்கு புதிய முகம்

மைலினுக்கு புதிய முகம்

மைலினுக்கு புதிய முகம்

மைலினின் அம்மா சொன்னபடி

பதினோரு வயதான என் அருமை மகள் மைலினுக்கு ஏன் புதிய முகம் தேவைப்பட்டது? சொல்கிறேன், கேளுங்கள்.

மைலின் என் இரண்டு மகள்களில் இளையவள். இவள் 1992, ஆகஸ்ட் 5-⁠ம் தேதி கியூபாவிலுள்ள ஹோல்க்வின் என்ற இடத்தில் பிறந்தாள். என் கணவரும், மூத்த மகளும், நானும் அவளுடைய வரவால் பூரித்துப் போனோம். ஆனால் சீக்கிரத்தில் ஒரு சம்பவம் எங்கள் சந்தோஷத்தைப் பறித்துக்கொண்டது. அவள் பிறந்து சில நாட்களுக்குள் எனக்கு சின்னம்மை போட்டது, ஒரு மாதத்திற்குப் பிறகு அது மைலினுக்கும் வந்துவிட்டது.

ஆரம்பத்தில் அவளுடைய நிலைமை ஓரளவுக்கு பரவாயில்லை; ஆனால் போகப் போக அது மோசமடைந்தது, ஆகவே ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மைலினுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளித்தபோதிலும் அவளுடைய உடலின் நோய் தற்காப்பு அமைப்பு ரொம்பவே பலவீனமடைந்திருந்தது; இதனால் அவளுக்கு தொற்று ஏற்பட்டிருந்தது. அவளுடைய குட்டி மூக்கு ஒருபக்கமாக ரொம்ப வித்தியாசமாக சிவந்திருந்ததை கவனித்தேன். ஓர் அரிதான, கொடிய பாக்டீரியா அவளைத் தாக்கியிருக்க வேண்டுமென்ற முடிவுக்கு டாக்டர்கள் வந்தார்கள்.

உடனடியாக ஆன்டிபயாட்டிக் மருந்துகளை அவளுக்குக் கொடுக்க ஆரம்பித்தார்கள், ஆனாலும் சில நாட்களுக்குள் பாக்டீரியாக்கள் அவளுடைய முகத்தை சிதைக்க ஆரம்பித்தன. அந்தத் தொற்றை டாக்டர்கள் கட்டுப்படுத்துவதற்குள் மைலினின் மூக்கு பறிபோய்விட்டது; அடுத்தடுத்து அவளுடைய உதடுகளும் ஓரளவு பல் ஈறும் முகவாய் கட்டையும்கூட பறிபோயின. போதாததற்கு ஒரு கண்ணுக்குப் பக்கத்தில் துளைகள் விழுந்தன.

நானும் என் கணவரும் அவளைப் பார்த்து கதறி அழுதோம். எங்களுடைய குழந்தைக்கா இந்த நிலை? என குமுறினோம். அநேக நாட்களுக்கு மைலின் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்தாள்; அவள் பிழைக்கவே மாட்டாள் என டாக்டர்கள் நினைத்தார்கள். “எதையும் சந்திக்க தயாராயிரு” என என் கணவர் எப்போதும் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் இன்குபேட்டருக்குள் என் கையை விட்டு மைலினின் கையைத் தூக்குகையில் அவள் என் கையை அவ்வளவு கெட்டியாக பிடித்துக்கொள்வாள்; அவள் நிச்சயம் பிழைத்துக்கொள்வாள் என்று மனதிற்குப் பட்டது. “நம்ம பொண்ணு சாகப் போறதில்லை. ஆனால் இந்த நிலைமையிலே அவ எப்படிங்க வாழப்போறா?” என என் கணவரிடம் கேட்டேன். ஒவ்வொரு நாளும் கண்விழிக்கையில், நடந்ததெல்லாம் ஒரு கெட்ட கனவாக இருக்கக்கூடாதா என ஏங்குவேன்.

நாங்கள் ஆஸ்பத்திரியில் இருந்தபோது ஆறு வயதான என் மூத்த மகள் மைடிலிஸ் என் பெற்றோர் வீட்டில் இருந்தாள். அகண்ட, நீலநிறக் கண்களுடன் அழகிய பொம்மைக்குட்டி மாதிரி ஆஸ்பத்திரிக்குச் சென்ற தன் தங்கை சீக்கிரம் வீடு திரும்பும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தாள். ஆனால் அதன் பிறகு அவள் தன் தங்கையைப் பார்த்தது விகாரமான கோலத்தில்!

‘என் கண்மணிக்கு ஏன் இவ்வளவு கஷ்டம்?’

ஒன்றரை மாதத்திற்குப் பிறகு மைலினை ஆஸ்பத்திரியிலிருந்து அனுப்பிவிட்டார்கள். நாங்கள் நகரத்திலிருந்த எங்கள் வீட்டுக்குச் செல்லவில்லை, ஏனென்றால் யாரும் இவளை பார்க்க நாங்கள் விரும்பவில்லை. என் பெற்றோரின் பண்ணைக்குப் பக்கத்திலிருந்த ஒரு கிராமத்தில் சிறிய வீட்டில் முடங்கிக் கிடந்தோம்.

ஆரம்பத்தில், மைலினுடைய வாய் இருந்த இடத்திலிருந்த ஒரு திறப்பு வழியாக அவளுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக தாய்ப் பால் கொடுக்க முடிந்தது. அவளால் சப்பிக் குடிக்க முடியவில்லை. ஆனால் காயங்கள் குணமடைய ஆரம்பித்தபோது கொஞ்சம் திறந்திருந்த அந்தத் திறப்பும் கிட்டத்தட்ட மூடியேவிட்டது. அவளுக்குத் திரவ உணவை புட்டியில் கொடுக்க மட்டுமே முடிந்தது. அவளுக்கு ஒரு வயதிருக்கையில் நாங்கள் ஹோல்க்வினுக்குத் திரும்பினோம். அங்கு, அவளுடைய வாய் திறப்பை பெரிதாக்குவதற்காக டாக்டர்கள் நான்கு ஆப்ரேஷன்களை செய்தார்கள்.

‘என் கண்மணிக்கு ஏன் இவ்வளவு கஷ்டம்?’ என என்னை நானே கேட்டுக்கொண்டதுண்டு. அதற்கு விடை காண ஆவியுலக மையங்களுக்குப் போனேன், விக்கிரகங்களிடம் பிரார்த்தித்தேன். ஆனால் எதுவும் எனக்கு ஆறுதல் அளிக்கவில்லை. சில உறவினர்களும் நண்பர்களும் சொன்ன புண்படுத்தும் வார்த்தைகள் என்னை இன்னமும் குழப்பிவிட்டன. “இதெல்லாம் ஏன் நடக்குதோ, ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்” என சிலர் சொன்னார்கள். “இது நிச்சயமாக கடவுள் தரும் தண்டனைதான்” என்றார்கள் இன்னும் சிலர். மைலின் வளர்ந்து பெரியவளாகும்போது அவளிடம் என்ன சொல்வேன் என நினைத்துக்கூட நான் அதிகம் கவலைப்பட்டேன். ஒருசமயம் அவள் ரொம்ப சின்னவளாக இருக்கையில் அவளுடைய அப்பாவிடம் “மற்றவர்கள் மாதிரி எனக்கு ஏன் மூக்கு இல்லை?” என கேட்டாள். அவரால் பதில் சொல்ல முடியவில்லை, வெளியே போய் அழுதார். என்ன நடந்தது என்பதை நான் அவளுக்கு ஒருவழியாக விளக்கினேன். ஒரு சின்ன பூச்சி அவளுடைய மூக்கையும் வாயையும் தின்றுவிட்டதாக நான் சொன்னது அவளுக்கு இன்னும் நினைவிருக்கிறது.

நம்பிக்கைக்கு அடிப்படை

நாங்கள் விரக்தியடைந்திருந்த சமயத்தில், பக்கத்து வீட்டு பெண் யெகோவாவின் சாட்சி என்பது நினைவுக்கு வந்தது. என் கண்மணிக்கு ஏன் இவ்வளவு கஷ்டத்தை கடவுள் கொடுக்கிறார் என பைபிளிலிருந்து காட்டும்படி அந்த பெண்ணிடம் கேட்டேன். “இந்த வியாதி நான் செய்த தப்புக்கு கடவுள் கொடுக்கும் தண்டனை என்றால் அவள் அந்த தண்டனையை ஏன் அனுபவிக்க வேண்டும்?” என்றுகூட கேட்டேன்.

நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகத்தை உபயோகித்து அந்தப் பெண் எனக்குப் பைபிள் படிப்பு நடத்த ஆரம்பித்தார். a மைலினுடைய நிலைமைக்குக் கடவுளைக் குறைசொல்ல முடியாது என்றும், அவர் உண்மையிலேயே நம்மீது அக்கறை உள்ளவர் என்றும் மெல்ல மெல்ல புரிந்துகொள்ள ஆரம்பித்தேன். (யாக்கோபு 1:13; 1 பேதுரு 5:7) இயேசு கிறிஸ்துவின் மூலம் ஆளப்படும் அவருடைய பரலோக ராஜ்ய ஆட்சியின் கீழ் துன்பத்திற்கு முடிவு வரும் என்ற அருமையான நம்பிக்கையை நெஞ்சார நேசித்தேன். (மத்தேயு 6:9, 10; வெளிப்படுத்துதல் 21:3, 4) இந்த அறிவு எனக்குத் தெம்பூட்டியது, யெகோவாவின் சாட்சிகளுடைய கிறிஸ்தவ கூட்டங்களில் கலந்துகொள்ளவும் ஊக்குவித்தது. ஆரம்பத்தில் என் கணவர், புதிதாக எனக்கு ஏற்பட்ட ஆவிக்குரிய ஆர்வத்தைக் கண்டு முகம் சுளித்தார். ஆனால், துன்பத்தை சமாளிப்பதற்கு எனக்கு அது உதவியதால் என் பைபிள் படிப்புக்கு அவர் முட்டுக்கட்டையாக இருக்கவில்லை.

அயல் நாட்டிலிருந்து உதவி

மைலினுக்கு இரண்டு வயதிருக்கையில், மெக்சிகோவிலிருந்த பிரபல பிளாஸ்டிக் சர்ஜன் ஒருவர் இவளைப் பற்றி கேள்விப்பட்டார், இலவசமாக இவளுக்கு சிகிச்சை அளிக்க முன்வந்தார். முதல் ஆப்ரேஷன் 1994-⁠ல் நடந்தது. கிட்டத்தட்ட ஒரு வருடம் நானும் மைலினும் மெக்சிகோவில் தங்கினோம். ஆரம்பத்தில் எங்களால் யெகோவாவின் சாட்சிகளுடன் தொடர்புகொள்ள முடியவில்லை, எனவே கிறிஸ்தவ கூட்டங்களுக்கு போகவில்லை. இது ஆவிக்குரிய விதத்தில் என்னை பலவீனப்படுத்தியது. பிறகு உள்ளூர் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் எங்களுடன் தொடர்பு கொண்டார், மீண்டும் நாங்கள் முடிந்தபோதெல்லாம் சக விசுவாசிகளுடன் கூட்டுறவு கொள்ள ஆரம்பித்தோம். கியூபா திரும்பியதும் பழையபடி பைபிள் படிப்பை தொடர்ந்தேன், மீண்டும் ஆவிக்குரிய பலத்தைப் பெற்றேன்.

அந்த சமயத்திலும்கூட என் கணவருக்கு பைபிள் விஷயங்களில் ஆர்வமில்லை. அவருக்கு ஆர்வத்தை ஏற்படுத்த, பைபிள் பிரசுரங்களிலிருந்து சில பகுதிகளை நான் நன்கு புரிந்துகொள்வதற்காக அவற்றை எனக்கு வாசித்துக் காட்டும்படி அவரிடம் கேட்டேன். இறுதியில் அவர் பைபிள் படிப்புக்கு ஒப்புக்கொண்டார். மைலினின் சிகிச்சைக்காக அவளும் நானும் அடிக்கடி மெக்சிகோ சென்று நீண்ட காலம் தங்கியது எங்கள் இல்லற வாழ்க்கையைப் பாதிக்குமோ என அவர் கவலைப்பட்டார்; ஆகவே ஆவிக்குரிய விதமாக ஒன்றுபட்டிருப்பது இப்படிப் பிரிந்திருக்கும் காலங்களில் சமாளித்து வாழ்வதற்கு உதவுமென அவர் நினைத்ததால் பைபிள் படிப்புக்கு ஒப்புக்கொண்டார். அப்படி ஒன்றுபட்டிருந்தது உண்மையில் எங்களுக்கு உதவியது. என் கணவரும் மூத்த மகளும் நானும் 1997-⁠ல் யெகோவாவின் சாட்சிகளாக முழுக்காட்டுதல் பெற்றோம்.

ஆரம்பத்தில் நாங்கள் மெக்சிகோவில் அடிக்கடி தங்க நேர்ந்தபோது, அந்த சின்னப் பூச்சி மட்டும் தன் முகத்தை தின்னாதிருந்தால் தன் அப்பாவிடமிருந்தும் அக்காவிடமிருந்தும் இப்படி பிரிந்திருக்க வேண்டியிருந்திருக்காது என மைலின் சொல்லுவாள். இப்படி நீண்ட காலத்திற்கு குடும்பத்தாரை விட்டுப் பிரிந்திருந்தது மனதை பெரிதும் வாட்டியது. ஆனாலும் இவ்வாறு ஒரு முறை மெக்சிகோவில் தங்கியபோது பெத்தேல் என்று அழைக்கப்படும், மெக்சிகோவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்திற்கு சென்றது எனக்கு நினைவிருக்கிறது; அது எனக்கு அதிக உற்சாகத்தை அளித்தது. அங்கு தங்கியிருக்கையில் ஐந்தாவது முறையாக அவளுக்கு ஆப்ரேஷன் நடக்கவிருந்தது; ஆனால் சிகிச்சைக்குப் பிறகு பயங்கர வலி இருக்கும் என்பதால் மீண்டும் தனக்கு ஆப்ரேஷன் வேண்டாமென மைலின் சொல்லிக் கொண்டிருந்தாள். ஆனால் கிளை அலுவலகத்தில் சேவை செய்யும் சில சாட்சிகள் அவளிடம், தைரியமாக இருந்து ஆப்ரேஷனுக்கு சம்மதித்தால் ஆஸ்பத்திரியிலிருந்து திரும்பி வந்ததும் பார்ட்டி கொடுப்பதாக சொன்னார்கள். இவளும் ஆப்ரேஷனுக்கு சம்மதித்தாள்.

மைலின் அப்போது எப்படி உணர்ந்தாள் என்பதை அவளே சொல்லட்டும்: “பெத்தேலில் பார்ட்டி என்றதும் எனக்கு ஒரே குஷியாகிவிட்டது. அதனால் ஆப்ரேஷன் சமயத்தில் ரொம்ப தைரியமாக இருந்தேன். நிறைய ஆவிக்குரிய சகோதர சகோதரிகளுடன் சேர்ந்து அந்த பார்ட்டியில் கலந்துகொண்டது ஜாலியாக இருந்தது. அவங்க எனக்கு ஏகப்பட்ட கார்டுகளைக் கொடுத்தாங்க. அதெல்லாத்தையும் பத்திரமாக வைச்சிருக்கேன். அவங்க கொடுத்த உற்சாகம்தான் அடுத்தடுத்த ஆப்ரேஷன்களை தாங்கிக்க எனக்கு சக்தி கொடுத்தது.”

முன்னேற்றமும் சகிப்பதற்கு உதவியும்

மைலினுக்கு இப்போது 11 வயது; அவளுடைய முகத்தை சரிசெய்ய இதுவரைக்கும் 20 ஆப்ரேஷன்கள் நடந்திருக்கின்றன. அவை ஓரளவு உதவியிருந்தாலும்கூட இன்னமும் அவளால் வாயை முழுமையாக திறக்க முடியவில்லை. ஆனாலும் அவள் எப்போதுமே தைரியமாக இருக்கிறாள், எதையும் நல்ல விதமாக எடுத்துக் கொள்ளும் மனநிலையுடன் இருக்கிறாள். ஆவிக்குரிய காரியங்களிடம் அவளுக்குப் போற்றுதல் அதிகம். ஆறு வயதிலிருந்து உள்ளூர் சபையில் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் பேச்சு கொடுக்கிறாள்; 2003, ஏப்ரல் 27-⁠ம் தேதி முழுக்காட்டுதல் பெற்றாள். ஒரு சமயத்தில் மூன்று பைபிள் படிப்புகள் வரை நடத்தியிருக்கிறாள். மெக்சிகோவிலிருந்த சமயத்தில் ஒரு பெரியவரிடம் பேசினாள், அவரும் அவளுடன் பைபிள் படிக்க ஒப்புக்கொண்டார். கிறிஸ்துவின் மரண நினைவு ஆசரிப்புக்கும் மற்ற சபைக் கூட்டங்களுக்கும் வரும்படி அவரை அழைத்தாள்; அவரும் ஆர்வத்துடன் வந்து கலந்துகொண்டார்.

மைலின் வீட்டுக்கு வீடு ஊழியம் செய்கையில் சிலர் அவளுடைய முகத்தைப் பார்த்துவிட்டு நெருப்புக் காயமாவென கேட்கிறார்கள். அந்த சந்தர்ப்பத்தை அவள் நழுவவிடாமல், பரதீஸிய பூமியில் யெகோவா அவளுக்கு புதிய முகத்தைக் கொடுப்பார் என்று சொல்லி, தன் பைபிள் அடிப்படையிலான நம்பிக்கையை பகிர்ந்துகொள்கிறாள்.​—⁠லூக்கா 23:43.

ஆப்ரேஷன்கள் ஒருபக்கம், மற்ற பிள்ளைகள் செய்யும் கேலி கிண்டல்கள் மறுபக்கம்; இதனால் மைலின் அனுபவிக்கும் வேதனையை சொல்ல முடியாது. இதையெல்லாம் சகிக்க அவளுக்கு எது உதவி செய்திருக்கிறது? நம்பிக்கை சுடர்விட அவள் இவ்வாறு பதிலளிக்கிறாள்: “என்னைப் பொறுத்த வரை யெகோவா ஒரு உண்மையான நபர். அவர் எனக்கு தைரியம் கொடுக்கிறார், தாங்கிக்க சக்தி தருகிறார். இனிமேல் எனக்கு ஆப்ரேஷன் எதுவும் வேண்டாம், ஏன்னா டாக்டர்கள் என்னதான் செய்தாலும் என் முகத்தை முழுமையாக சரிசெய்ய அவர்களால் முடியாது. நான் பிறந்தபோது எப்படி இருந்தேனோ அப்படி என்னை திரும்பவும் ஆக்க அவர்களால் முடியாது. ஆனால் யெகோவா எனக்கு புதிய உலகத்தில் புதிய முகத்தைத் தரப் போகிறார், அப்போது நான் திரும்பவும் அழகாயிடுவேன்.” (g04 5/22)

[அடிக்குறிப்பு]

a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.

[பக்கம் 26-ன் சிறு குறிப்பு]

“யெகோவா எனக்கு புதிய உலகத்தில் புதிய முகத்தைத் தரப் போகிறார்”

[பக்கம் 27-ன் சிறு குறிப்பு]

கடவுளைக் குறைசொல்ல முடியாது என்பதை மெல்ல மெல்ல புரிந்துகொள்ள ஆரம்பித்தேன்