Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

மத பிரசங்கங்கள் விற்பனைக்கு

“ஏராளமான வேலைகள் காரணமாக பிரசங்கங்களை தயாரிக்க முடியாமல் அல்லாடும் மதகுருக்களின் உள்ளான ஆசை ஈடேறியிருக்கிறது: எல்லா நிகழ்ச்சிகளுக்கும் பயன்படுத்த முடிந்த பிரசங்கங்களை சர்ச் ஆஃப் இங்லண்டின் மக்கள் தலைவர் புதிய வெப் சைட்டில் அறிமுகப்படுத்தியிருக்கிறார்” என லண்டனில் வெளியாகும் செய்தித்தாளான த டெய்லி டெலிகிராஃப் அறிக்கை செய்கிறது. அந்த வெப் சைட்டின் ஆசிரியரான பாப் அஸ்டின் இவ்வாறு கூறுகிறார்: “இப்போதெல்லாம் பிரசங்கிமார்கள் அதிகமதிகமான வேலைகளில் மூழ்கிப் போவதால் பிரசங்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடியாமல் போய்விடுகிறது.” “சிந்தனையைத் தூண்டி, அகத்தூண்டுதலை ஏற்படுத்தி, போதனை” அளிக்கும் “நம்பகமான, ரெடிமேட் பிரசங்கங்களை” தன்னுடைய வெப் சைட் தருவதாக அவர் சொல்லிக் கொள்கிறார். “பல்வேறு பைபிள் வசனங்களையும் தலைப்புகளையும் கலந்தாலோசிக்கிற பரிசோதிக்கப்பட்ட 50-⁠க்கும் அதிகமான பிரசங்கங்களை” அந்த வெப் சைட் தற்போது பட்டியலிடுகிறது; ஆனால் மிதமிஞ்சிய அல்லது கோட்பாடு சார்ந்த முரண்படும் கருத்துக்களை அது தவிர்ப்பதாக அந்த செய்தித்தாள் விவரிக்கிறது. அவை, “சபையார் எளிதில் புரிந்துகொள்ள முடிந்த 10-12 நிமிட” பிரசங்கங்கள் என்றும், ஒவ்வொன்றும் 13 அமெரிக்க டாலர் விலை என்றும் அது விவரித்தது. (g04 6/8)

“குடும்பக் கட்டுப்பாடு”​—⁠மிருகக்காட்சி சாலைகள் தவிப்பு

“கருத்தடையைப் பயன்படுத்தாவிட்டால் எந்த மிருகக்காட்சி சாலையும் பிழைக்க முடியாது” என சொல்கிறார் ஹென்னிங் விஸ்னா; இவர் மியூனிச்சிலுள்ள ஹெலாப்ருன் மிருகக்காட்சி சாலையில் தலைமை விலங்கியலராக பணியாற்றுகிறார். மிருகக்காட்சி சாலையிலுள்ள விலங்குகள் வேகமாக இனப்பெருக்கம் செய்கின்றன, அவற்றின் குட்டிகள் செழித்து வளருகின்றன, காட்டில் வாழும் அதே இன விலங்குகளைவிட இவை அதிக காலம் வாழவும் செய்கின்றன. ஆனால் மிருகக்காட்சி சாலையிலோ இடநெருக்கடி. எனவே கருத்தடைக்கு அவசியம் ஏற்படுகிறது. எனினும், “மிருகக்காட்சி சாலையில் குடும்பக் கட்டுப்பாடு செய்வதில் பிரச்சினை இருக்கிறது. விலங்குகள் இதை விரும்புவதில்லை” என்கிறது ஜெர்மனியில் வெளியாகும் ஃபோக்கஸ் பத்திரிகை. உதாரணமாக கரடிகள், சாப்பாட்டில் ஒளித்து வைத்துக் கொடுக்கப்படும் கருத்தடை மாத்திரைகளை முகர்ந்து பார்த்து, கண்டுபிடித்து, அப்புறப்படுத்தி விடுகின்றன. கருத்தடை மாத்திரைகளால் மார்பக புற்றுநோய் போன்ற உடல்நல பிரச்சினைகள் சில விலங்குகளுக்கு ஏற்படுகின்றன. இதற்கு மாற்று வழி, காயடித்தல் மற்றும் அறுவை சிகிச்சையாகும்; ஆனால் இந்த வழிகளாலும் புதிய பிரச்சினைகள் தலைதூக்குகின்றன. ஒரு பிரச்சினை என்னவென்றால், இவை நிரந்தரமானவை, ஒருவேளை எதிர்காலத்தில் இனத்தை பெருக்க வேண்டிய நிலை ஏற்படலாம். இரண்டாவது பிரச்சினை, இம்மாற்று வழி கையாளப்படுகையில் அவ்விலங்குகள் செக்ஸ் ஹார்மோனை உற்பத்தி செய்வதில்லை; இந்த மாற்றம் அவ்விலங்குகளின் மத்தியிலுள்ள உறவை பாதிக்கலாம். மற்றுமொரு வழி தேவையற்ற குட்டிகளைக் கொன்றுவிடுவது; ஆனால் அது விலங்கு ஆர்வலர்கள் அநேகருடைய கோபத்துக்கும், விலங்கின பாதுகாப்பு குழுவினர்களுடைய கோபத்துக்கும் ஆளாக செய்யும். எனவே மிருகக்காட்சி சாலைகள் செய்வதறியாது தவிக்கின்றன. (g04 6/22)

மாடுகளைவிட மக்கள் மலிவானவர்களா?

உலகில் பணக்கார, ஏழை மக்களின் மத்தியிலுள்ள இடைவெளி அதிகரித்து வருகிறது. கடந்த 20 வருடங்களாக, உலக சந்தையில் (70 கோடி பேர் வாழும்) மிகவும் பின்தங்கிய நாடுகளின் பங்கு வீதம் 1 சதவீதத்திலிருந்து 0.6 சதவீதமாக குறைந்திருக்கிறது. “ஆப்பிரிக்காவிலுள்ள கருப்பர்களில் பெரும்பாலான மக்கள் முந்தின சந்ததியாரைவிட தற்போது ஏழ்மை நிலையில் இருக்கிறார்கள்” என ஷலாங்ஸ் பத்திரிகையில் எழுதுகிறார் பிரான்சு நாட்டின் பொருளியலாளரான ஃபிலிப் ய்யூர்ஜன்சன். உதாரணத்திற்கு, 4,00,000 பேர் வாழும் லக்ஸம்பர்க்கின் பொருள் வளம் எவ்வளவோ, அதில் மூன்றில் ஒரு பாகத்தை மட்டும் வைத்துக் கொண்டு எத்தியோப்பியாவில் உள்ள 6.7 கோடி மக்கள் வாழ்க்கையை ஓட்டுகின்றனர். ஐரோப்பிய விவசாயிகள் தங்களுடைய ஒவ்வொரு மாட்டிற்கும் தலா 150 ரூபாயை தினசரி மானியமாகப் பெற தகுதி பெற்றிருக்கிறார்கள், ஆனால் சுமார் 250 கோடி பேர் ஒவ்வொரு நாளும் அதற்குக் குறைவான தொகையுடன் காலம் தள்ள வேண்டியிருக்கிறது என ய்யூர்ஜன்சன் குறிப்பிடுகிறார். இவ்வாறு உலகின் அநேக பாகங்களிலுள்ள “ஓர் ஏழை, மாட்டைவிட மலிவானவராக இருக்கிறார்” என சொல்கிறார் ய்யூர்ஜன்சன். (g04 6/8)

இசையும் கோபாவேசமும்

அயோவா மாநில பல்கலைக்கழகத்தையும் டெக்ஸஸ் டிபார்ட்மென்ட் ஆஃப் ஹியூமன் சர்வீசஸ் (அ.ஐ.மா.) நிறுவனத்தையும் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் வன்முறை நிறைந்த பாட்டுகள் ஏற்படுத்தும் பாதிப்பை கண்டறிய முயன்றார்கள்; அதற்கு 500-⁠க்கும் அதிகமான கல்லூரி மாணவர்களை வைத்து தொடர்ந்து ஐந்து பரிசோதனைகளை நடத்தினார்கள். ஒரே பாடகர் பாடிய வன்முறை நிறைந்த பாடல்களையும் வன்முறையை சித்தரிக்காத பாடல்களையும் ஏராளமாக கேட்ட பிறகு, மாணவர்களின் கோபாவேச உணர்ச்சிகளைக் கண்டறிவதற்கு பல்வேறு பரிசோதனைகள் நடத்தப்பட்டன. வன்முறை நிறைந்த பாட்டுகள் வேறு எந்தத் தூண்டுதலுமின்றி பகைமை உணர்ச்சிகளையும் கோபாவேச எண்ணங்களையும் அதிகரிக்க செய்யலாம் என அந்த ஆய்வின் முடிவு தெரிவித்ததாக ஜர்னல் ஆஃப் பர்ஸனாலிட்டி அண்டு சோஷியல் சைக்காலஜி என்ற பிரசுரம் வெளியிட்டது. “பாடல் வரிகள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பது வன்முறை நிறைந்த பொழுதுபோக்கு மீடியாவை வைத்து செய்யப்பட்ட இந்த ஆராய்ச்சியிலிருந்தும் பிற ஆராய்ச்சியிலிருந்தும் பெறப்பட்ட முக்கிய முடிவாகும்” என்கிறார் முன்னணி ஆராய்ச்சியாளரான கிரெக் ஆன்டர்சன். “இந்த விஷயம் இவற்றை வாங்கும் அனைவருக்கும், முக்கியமாக பிள்ளைகளையும் டீனேஜர்களையும் உடைய பெற்றோர்களுக்கு முக்கியமானது” என்றார் ஆன்டர்சன். (g04 6/8)

போதையேறிய பிள்ளைகள்

பிரிட்டனில் “எக்கச்சக்கமாக குடித்து வெறித்ததால் ஆறு வயதே நிரம்பிய பிள்ளைகள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்” என விபத்து மற்றும் அவசர சிகிச்சை இலாகாக்களை வைத்து 50 ஆஸ்பத்திரிகளில் நடத்தப்பட்ட சுற்றாய்வு காட்டியதாக லண்டனில் வெளியாகும் த டெய்லி டெலிகிராஃப் செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. ஒரு ஆஸ்பத்திரியில் கோடை விடுமுறையின்போது ஒரு வாரத்தில் சுமார் 100 போதையேறிய பிள்ளைகளுக்கு சிகிச்சை அளித்ததாக டாக்டர்களும் நர்சுகளும் அறிக்கை செய்தார்கள். “மதுபான துஷ்பிரயோகத்தால் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படும் பிள்ளைகளின் வயது வரவர குறைந்துகொண்டே வருவதாக 70 சதவீதத்திற்கும் அதிகமான மருத்துவ பணியாளர்கள் நம்புகிறார்கள்” என அந்த செய்தித்தாள் சொல்கிறது. மேலும், பிரிட்டனில் 20 ஆண்டுகளில், மதுபானத்தால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை மும்மடங்காக அதிகரித்துள்ளதென சமீபத்திய அரசாங்க அறிக்கை காட்டுகிறது. (g04 6/8)

எறும்புகளும் ஆன்ட்டிபயாட்டிக்குகளும்

“சில எறும்புகள் தங்கள் குட்டி எறும்புகளுக்கு உணவாக காளான்களை வளர்க்கின்றன; அக்காளான்களைப் பாதுகாக்க ஒருவகை ‘பூச்சிக் கொல்லியாக’ ஆன்ட்டிபயாட்டிக்குகளைக்கூட பயன்படுத்துகின்றன என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்” என த மியாமி ஹெரால்ட்-⁠ன் பன்னாட்டு பதிப்பு சொல்கிறது. இலை வெட்டிகள் (leaf cutters) என்றழைக்கப்படும் இந்த எறும்புகள் ஒரு விவசாயியைப் போலவே காளான்களை நடவு செய்கின்றன, வெட்டிவிடுகின்றன, களையெடுக்கின்றன. அக்காளான்களை தொற்றுள்ள பூசணத்திலிருந்து பாதுகாக்கும் இந்த ஆன்ட்டிபயாட்டிக் ஒரு பாக்டீரியாவால் உற்பத்தி செய்யப்படுகிறது; ஸ்ட்ரெப்டோமைசிட்டே (Streptomycete) வகையை சேர்ந்த இது, இலை வெட்டி எறும்புகளின் தோலிலே குடியிருக்கிறது. மருந்துகளை எதிர்க்கும் நுண்ணுயிரிகளை சமாளிக்க புதிய புதிய ஆன்ட்டிபயாட்டிக்குகளை மனிதன் தொடர்ந்து கண்டுபிடிக்க வேண்டியிருக்கையில், இலை வெட்டி எறும்புகள் ஆண்டாண்டு காலமாக அதே ஆன்ட்டிபயாட்டிக்கை வெற்றிகரமாக பயன்படுத்தி வருகின்றன என சொன்னார் பூச்சிகளின் நிபுணர் டெட் ஷுல்ட்ஸ்; இவர் வாஷிங்டன், டி.சி.-யிலுள்ள நேஷனல் மியூஸியம் ஆஃப் நேச்சுரல் ஹிஸ்டரி நிறுவனத்தைச் சேர்ந்தவர். எறும்புகளின் இரகசியத்தைப் புரிந்துகொள்வதற்கும் “மனிதவர்க்கம் உயிர் வாழ்வதற்கு நேரடியாக உதவலாம்” என ஷுல்ட்ஸ் குறிப்பிடுகிறார். (g04 6/22)

உலகளாவிய உடல்நலக் கேடு

சர்க்கரை வியாதி அதிர்ச்சியளிக்கும் அளவுக்கு அதிகரித்திருப்பதால், ஒருபோதும் இல்லாதளவுக்கு “மாபெரும் உடல்நல சீர்கேட்டை” நோக்கி உலகம் சென்று கொண்டிருக்கிறது என எச்சரித்தார் பேராசிரியர் சர் ஜார்ஜ் அல்பர்டி; பிரிட்டனை சேர்ந்த இவர், இன்டர்நேஷனல் டையாபட்டீஸ் ஃபெடரேஷன் (IDF) என்ற அமைப்பின் தலைவராக இருக்கிறார். IDF-⁠ன் கணக்கீட்டின்படி உலகெங்கும் 30 கோடிக்கும் அதிகமானோருக்கு க்ளூக்கோஸ் செரிமானத்தில் பிரச்சினை உள்ளது; இது பெரும்பாலும் சர்க்கரை வியாதியில் போய் முடிகிறது என பிரிட்டனில் வெளியாகும் கார்டியன் செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. வகை-2 சர்க்கரை வியாதி ஒருகாலத்தில் முக்கியமாக வயதானவர்களுக்கு மட்டுமே வந்தது, ஆனால் இப்போது பிரிட்டனிலுள்ள இளம் பிள்ளைகளையும் பாதிக்கிறது; காரணம் அவர்கள் நொறுக்குத் தீனியாலும் உடற்பயிற்சி செய்யாததாலும் பருத்துப் போயிருப்பதே. “வாழ்க்கைப் பாணியில் மாற்றங்களை செய்வதன் மூலம்தான் பெரும்பாலும் இதை [சர்க்கரை வியாதியையும், அதன் பாதிப்புகளையும்] தவிர்க்க முடியும் என்பதே பெரும் கவலைதரும் அம்சம்” என்கிறார் அல்பர்டி. “பணக்கார நாடுகளின் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தையும் நாகரிக வாழ்க்கைப் பாணியையும்” பின்பற்றுவதால் வளரும் நாடுகளில்கூட சர்க்கரை வியாதியின் அதிகரிப்பைக் காணலாம் என சொல்கிறது த கார்டியன். (g04 6/22