Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

என் பாய் ஃப்ரண்ட் என்னை மோசமாக நடத்துவதை எப்படி தடுக்கலாம்?

என் பாய் ஃப்ரண்ட் என்னை மோசமாக நடத்துவதை எப்படி தடுக்கலாம்?

இளைஞர் கேட்கின்றனர் . . .

என் பாய் ஃப்ரண்ட் என்னை மோசமாக நடத்துவதை எப்படி தடுக்கலாம்?

“இன்னிக்கு என்னோட பாய் ஃப்ரண்ட் என்னை அடிச்சிட்டான். இதுதான் முதல் தடவை. அதுக்காக அவன் எங்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டான். ஆனாலும் இப்போ என்ன செய்றதுன்னே எனக்கு தெரியல.” ​—⁠ஸ்டெல்லா. a

“கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு மாணவி தன்னுடைய காதலனால் கொடுமைப்படுத்தப்பட்டதாகவோ பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகவோ அல்லது இரண்டுக்குமே ஆளானதாகவோ புகார்கள் வந்திருக்கின்றன” என த ஜர்னல் ஆஃப் தி அமெரிக்கன் மெடிக்கல் அஸோசியேஷன் குறிப்பிடுகிறது. 17 முதல் 20 வயதிலுள்ள இளைஞிகளிடம் ஜெர்மனியில் நடத்தப்பட்ட ஒரு சுற்றாய்வில், தகாத பாலியலுக்கு அடிபணிய வேண்டியிருந்ததாக கால்வாசிக்கும் அதிகமானோர் சொன்னார்கள்; முரட்டுத்தனமாக தாக்குவது, பேசிப் பேசியே வற்புறுத்துவது, போதைப் பொருட்கள் அல்லது மதுபானம் கொடுப்பது ஆகிய உத்திகளை பயன்படுத்தி தங்களை அதற்கு அடிபணிய வைத்ததாக சொன்னார்கள். ஓர் ஐ.மா. சுற்றாய்வு காட்டுகிறபடி, தங்களுடைய வகுப்புத் தோழர்கள் “டேட்டிங் செய்கிறவர்களிடம் தரக்குறைவாகவும் புண்படுத்தும் விதத்திலும் பேசுவதை” அந்தச் சுற்றாய்வில் பங்கேற்ற 40 சதவீத டீனேஜர்கள் பார்த்திருக்கிறார்கள். b

தரக்குறைவாக நடத்துபவரையோ, காட்டுக்கத்தல் கத்துபவரையோ, மட்டம்தட்டி பேசுபவரையோ, முரட்டுத்தனமாக தள்ளிவிடுபவரையோ, கன்னத்தில் அறைபவரையோ மணமுடிக்க விரும்பும் இளைஞர்களில் நீங்களும் ஒருவரா? இவ்வாறு மோசமாக நடத்தப்படுவது சர்வசாதாரணமாகி விட்டதென இத்தொடரின் முந்தின கட்டுரை காட்டியது. c மூர்க்கத்தனமான பேச்சையோ நடத்தையையோ யெகோவா தேவன் ஏற்றுக்கொள்வதில்லை என்றும் அதற்கு ஆளாகுபவர்கள் அதை ஒரு சாதாரண விஷயம் என்றோ தங்களுடைய தவறினால்தான் அது ஏற்பட்டது என்றோ நினைக்கக் கூடாது என்றும் அக்கட்டுரை காட்டியது. (எபேசியர் 4:31) இருந்தாலும், அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் என்ன செய்வதென தெரிந்து வைத்திருப்பது எளிதல்ல. ஏனென்றால் உங்களுடைய பாய் ஃப்ரெண்ட் எப்படி நடந்துகொண்டாலும் அவன் மீது இன்னும் உங்களுக்கு அளவுகடந்த ஆசை இருக்கும். அதைவிட, செய்த தவறை சுட்டிக் காட்டினால் அதை அவன் எப்படி எடுத்துக்கொள்வானோ என்ற பயம் வேறு இருக்கும். அப்படியானால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

சூழ்நிலையை சீர்தூக்கிப் பாருங்கள்

முதலில், மனதைப் போட்டு அலைக்கழிக்காமல் அமைதியாக இருங்கள். பின்பு, என்ன நடந்தது என்பதை உணர்ச்சிவசப்படாமல் சமநிலையோடு சீர்தூக்கிப் பாருங்கள். (பிரசங்கி 2:14, NW) நீங்கள் உண்மையிலேயே வசைபாட்டுக்கு ஆளானவரா, அல்லது உங்களுடைய பாய் ஃப்ரண்ட் வேண்டுமென்றேதான் முரட்டுத்தனமாக நடந்துகொண்டானா? அல்லது ‘யோசிக்காமல் பேசினானா’? (நீதிமொழிகள் 12:18, திருத்திய மொழிபெயர்ப்பு) இதுபோல் எத்தனை முறை நடந்திருக்கிறது? நீங்கள் கண்டும் காணாமல் விட்டுவிடுவதற்கு இது ஒருமுறை மட்டுமே நடந்த தவறா? அல்லது, சதா மட்டம்தட்டியோ தரக்குறைவாகவோ பேசுவதுதான் அவனுடைய பழக்கமா?

இந்த விஷயத்தில் உங்களுக்கே சரியான முடிவெடுக்க தெரியவில்லை என்றால் அதைப் பற்றி எவரிடமாவது பேசுங்கள்; உங்கள் வயதிலுள்ள ஒருவரிடம் அல்ல, ஆனால் வயதில் பெரிய, ஞானமுள்ள ஒருவரிடம் பேசுங்கள். ஒருவேளை உங்கள் பெற்றோரிடமே மனந்திறந்து சொல்லலாம் அல்லது முதிர்ச்சியுள்ள சக கிறிஸ்தவர் ஒருவரிடம் சொல்லலாம். அவ்வாறு பேசுவது, ஒருவேளை நீங்கள்தான் விஷயத்தை பெரிதுபடுத்துகிறீர்களா அல்லது நிஜமாகவே ஒரு பெரிய பிரச்சினை இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த உங்களுக்கு உதவும்.

பிரச்சினை ஏற்படாது என்று தோன்றினால், நீங்களாகவே உங்களுடைய பாய் ஃப்ரெண்டிடம் நேரடியாக அதைப் பற்றி பேசுவதற்கு ஏற்பாடு செய்யுங்கள். (நீதிமொழிகள் 25:9) அவன் அவ்வாறு நடந்துகொள்வது உங்கள் மனதை எந்தளவுக்கு பாதிக்கிறது என அவனிடம் நிதானமாக சொல்லுங்கள். உங்களுடைய மனம் ஏன் புண்பட்டுவிட்டது என்பதை தெளிவாக எடுத்துச் சொல்லுங்கள். நீங்கள் எதையெல்லாம் பொறுத்துக்கொள்ள மாட்டீர்கள் என்பதை திட்டவட்டமாக சொல்லுங்கள். அதற்கு அவன் எப்படி பிரதிபலிக்கிறான்? உங்களுடைய கருத்துக்களை ஒதுக்கித் தள்ளுகிறானா, அல்லது இன்னும் அதிக கோபமாக எடுத்தெறிந்து பேசுகிறானா? இது, அவன் தன்னை மாற்றிக்கொள்வதாக இல்லை என்பதற்கு ஒரு தெளிவான அறிகுறியாகும்.

ஆனால், கடவுளுடைய பண்பாகிய மனத்தாழ்மையையும் உள்ளப்பூர்வமான வருத்தத்தையும் காட்டினால் அப்போது என்ன செய்யலாம்? அந்த சந்தர்ப்பத்தில் நீங்கள் மீண்டும் உங்கள் நட்பைத் தொடரலாம். என்றாலும், கவனமாக இருங்கள். சொல்லடி கொடுப்பவர்கள் பெரும்பாலும் ஒருவரை புண்படுத்திவிட்டு அதன் பிறகு தாங்கள் மனம் வருந்துவதாக வியாக்கியானம் செய்வார்கள்​—⁠அதெல்லாம் கொஞ்ச காலத்திற்குத்தான், பிறகு மீண்டும் தங்கள் புத்தியைக் காட்ட ஆரம்பித்து விடுவார்கள். எனவே, உங்கள் காதலன் எந்தளவுக்கு உள்ளப்பூர்வமாக மாற்றங்களை செய்கிறான் என்பது நாட்கள் போகப் போகத்தான் தெரியவரும். எந்தளவுக்கு கவனமாக இதைச் செய்கிறான் என்பதற்கு ஒரு சிறந்த அறிகுறி, கிறிஸ்தவ மூப்பர்களின் உதவியை அவன் நாடுவதற்கு தயாராக இருப்பதே.​—யாக்கோபு 5:14-16.

“எல்லாரும் பாவஞ்செய்து, தேவ மகிமையற்றவர்களாகி” விட்டவர்கள் என்பதை அறிந்துகொள்ளுங்கள். (ரோமர் 3:23) எந்தக் குறையும் இல்லாத ஒருவரை நீங்கள் தேடினாலும் நிச்சயம் கண்டுபிடிக்க முடியாது. திருமண தம்பதிகள் எல்லாருமே, அபூரணத்தின் காரணமாக ஓரளவுக்கு “சரீரத்திலே உபத்திரவப்படுவார்கள்.” (1 கொரிந்தியர் 7:28) சீர்தூக்கிப் பார்க்கும் விஷயத்தில் கடைசியாக, அவனுடைய குறைகளை பொறுத்துக்கொண்டு சந்தோஷமாக வாழ முடியுமா என நீங்கள் தீர்மானிக்க வேண்டும். இந்தத் தீர்மானம் எடுப்பதற்கு மிகச் சிறந்த வழி, கொஞ்ச காலம் விட்டுப்பார்ப்பதே.

வன்முறையை பிரயோகிக்கையில்

ஆனால், இவ்வாறு வசைபாடுவதில் கொதித்தெழுந்து வாய்க்கு வந்தபடி அவமரியாதையாக பேசினால், முரட்டுத்தனமாக தாக்கப் போவதாக பயமுறுத்தினால், அல்லது ஒருவேளை உங்களை தள்ளிவிடவோ அறையவோ செய்து உடலளவில் இம்சைப்படுத்தினால், இது ஒரு வித்தியாசப்பட்ட பிரச்சினையாகி விடுகிறது. இது அந்த நபரிடம் தன்னடக்கமே இல்லை என்பதைக் காட்டுகிறது; வன்முறையை இன்னும் அதிகமாக வெளிக்காட்டும் அளவுக்கு நிலைமை மோசமாகலாம்.

மணமாகாத ஜோடிகள் முதல் காரியமாக தனிமையான இடங்களில் இருப்பதை தவிர்ப்பதே சிறந்தது. ஆனால் எப்படியோ அந்த முரடனோடு தனிமையில் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், “தீமைக்குத் தீமை செய்யாதிருங்கள்.” (ரோமர் 12:17) “மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்; கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்” என்பதை நினைவில் கொள்ளுங்கள். (நீதிமொழிகள் 15:1) அமைதியாக இருங்கள். உங்களை வீட்டில் கொண்டு விடும்படி சொல்லுங்கள். அவசியம் ஏற்பட்டால், அங்கிருந்து நடையைக் கட்டுங்கள், அல்லது ஓடிவிடுங்கள்!

உடலுறவில் ஈடுபடும்படி ஒருவன் பலவந்தம் பண்ணினால் ஒரு பெண் என்ன செய்ய வேண்டும்? சொல்லப்போனால், காதல் ஜோடிகள் காதலிக்க ஆரம்பித்தது முதற்கொண்டே தங்களுக்குள் பாச மழை பொழிவதில் கட்டுப்பாடுகளை வைப்பது ஞானமானது. (1 தெசலோனிக்கேயர் 4:3-5) ஓர் இளைஞன் பைபிள் நியமங்களை மீறும்படி ஓர் இளைஞியை வற்புறுத்தினால், தான் எவ்விதத்திலும் அதற்கு இடங்கொடுக்கப் போவதில்லை என்பதை அவள் உறுதியாக சொல்லிவிட வேண்டும். (ஆதியாகமம் 39:7-13) இப்படிப்பட்ட பாலியல் தொல்லைக்கு இணங்கி பலியாகிவிட நேர்ந்த ஆன்னா என்பவள், தயவுசெய்து “இணங்கிவிடாதீர்கள்” என்று கேட்டுக்கொள்கிறாள். “தன்மானத்துடன் நடந்து கொள்ளுங்கள். அவனை நீங்கள் உயிருக்கு உயிராக நேசித்தாலும் இந்தத் தப்பை மட்டும் செய்துவிடாதீர்கள்!” நீங்கள் மறுப்பதை அவன் அசட்டை செய்வானாகில், மேற்கொண்டு என்ன செய்ய முயற்சித்தாலும் அதை கற்பழிப்பாகவே கருதுவீர்கள் என சொல்லிவிடுங்கள். அதன் பிறகும் அவன் விடாப்பிடியாக இருந்தால், கூச்சல் போடுங்கள். பலாத்காரம் செய்ய முற்படும் ஒருவனை எதிர்ப்பது போல் அவனையும் எதிர்த்துப் போராடுங்கள். d

முரட்டுத்தனமாக நடந்துகொள்வது, பாலியல் பலாத்காரத்திற்கு முயலுவது ஆகிய இந்த இரு விஷயங்களிலும் நீதிமொழிகள் 22:24-⁠ல் கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனை பொருத்தமானதே. அது இவ்வாறு சொல்கிறது: “கோபக்காரனுக்குத் தோழனாகாதே; உக்கிரமுள்ள மனுஷனோடே நடவாதே.” எனவே சரீரப்பிரகாரமாகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் பாதிப்பை ஏற்படுத்தும் ஓர் உறவைத் தொடர வேண்டுமென்ற கட்டாயம் உங்களுக்கு இல்லை. இம்சைப்படுத்தும் ஒருவனுக்கும் உங்களுக்கும் இனி எந்த சம்பந்தமும் இல்லை என்பதை தெரிவிப்பதற்காக அவனை தனிமையில் சந்திக்க முயலுவதும் ஆபத்துதான். அப்படியானால் இதை பெற்றோருக்கு தெரியப்படுத்துவதே சிறந்த வழி. நீங்கள் மோசமாக நடத்தப்பட்டதை அறிந்து அவர்கள் கொதிப்படைவதும் குழம்பிப் போவதும் இயல்புதான். ஆனால், மேற்கொண்டு என்ன செய்யலாம் என்பதைத் தீர்மானிக்க அவர்களால் உங்களுக்கு உதவ முடியும். e

அவனை மாற்ற முயலுதல்

எப்படியானாலும், உங்களுடைய பாய் ஃப்ரண்டின் சுபாவத்தை மாற்றுவது உங்கள் பொறுப்பு அல்ல. உதாரணமாக, இரேனா இவ்வாறு ஒப்புக்கொள்கிறாள்: “அவனை நேசிப்பதால் எப்படியாவது கஷ்டப்பட்டு அவனை மாற்ற முடியும் என நீங்கள் நினைக்கலாம். ஆனால் அது முடியவே முடியாது.” இதை நேடினாவும் ஒத்துக்கொண்டு இவ்வாறு சொல்கிறாள்: “அவனை எப்படியாவது மாற்றிவிடலாம் என்றுதான் நினைத்துக்கொண்டே இருக்கிறேன்.” உண்மை என்னவென்றால், ‘தன்னுடைய மனதை புதிதாக்கினால்’ மட்டுமே அவனால் மாற முடியும். (ரோமர் 12:2) அவ்வாறு செய்வதற்கு தொடர்ந்து நீண்ட காலத்திற்கு கடும் முயற்சி எடுப்பது அவசியம்.

ஆகவே, உங்களுடைய தீர்மானத்தில் உறுதியாய் இருங்கள்; உங்களுடைய உணர்ச்சிகளை தனக்கு சாதகமாய் பயன்படுத்திக்கொள்ள அவன் எடுக்கும் எந்த முயற்சிக்கும் கவனம் செலுத்தாதீர்கள். உணர்ச்சிப்பூர்வமாகவும் சரீரப்பிரகாரமாகவும் எந்தளவுக்கு விலகியிருக்க முடியுமோ அந்தளவுக்கு அவனைவிட்டு விலகியிருக்க முயலுங்கள். உறவை மீண்டும் புதுப்பித்துக் கொள்வதற்காக உங்களிடம் வந்து பேசுவதற்கு, கெஞ்சுவதற்கு அல்லது பயமுறுத்துவதற்கு இடமளிக்காதீர்கள். முரடனான தன் பாய் ஃப்ரண்டிடம் பழகுவதை இரேனா நிறுத்திவிட்டபோது, அவன் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டினான். இப்படிப்பட்ட ஓர் ஆளுக்கு உதவி தேவை என்பது தெளிவாக இருக்கிறது, ஆனால் உங்களுடைய உதவி அல்ல. கிறிஸ்தவமற்ற நடத்தையை நீங்கள் உறுதியாக எதிர்ப்பதுதானே அவனுக்கு நீங்கள் செய்யும் பேருதவி. அவன் தன்னை மாற்றிக்கொள்ள விரும்பினால், தாராளமாக மற்றவர்களின் உதவியை நாடலாம்.

ஆனால் சிலரோ, கல்யாணத்திற்கு பிறகு இந்தப் பிரச்சினை சரியாகி விடும் என நினைக்கிறார்கள். ஓர் ஆய்வாளர் இவ்வாறு கூறுகிறார்: “இம்சிக்கிற பாய் ஃபிரண்டுகளை திருமணம் செய்கிற பெண்களும், இம்சிக்கிற கேர்ல் ஃபிரண்டுகளை திருமணம் செய்கிற ஆண்களும் இந்த முரட்டு குணம் மாறாததை நினைத்து ஆச்சரியப்படுகிறார்கள். திருமணம் செய்துவிட்டால் எல்லா பிரச்சினைகளும் பறந்துவிடும் என்ற கட்டுக்கதையை பலரும் நம்புகிறார்கள். அதை நம்பாதீர்கள்.” காதலிக்கும் காலத்தில் இம்சைப்படுத்த தொடங்கினால் அது மண வாழ்க்கையிலும் பெரும்பாலும் தொடரலாம் என்பதே உண்மை.

“விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறான்” என பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 22:3) நீங்கள் நேசிக்கும் ஒருவருடன் பழகுவதை நிறுத்திவிடுவது கஷ்டம்தான். ஆனால் சதா இம்சைக்குள்ளாகும் ஒரு மண வாழ்க்கையில் மாட்டிக்கொள்வது அதைவிட கடினமானது. அதுமட்டுமல்ல, உங்களுக்கு ஏற்ற ஒரு துணை கிடைக்கவே மாட்டார் என நீங்கள் பயப்பட வேண்டியதில்லை. உங்களுக்கு இதுவரை கிடைத்த அனுபவத்தை வைத்து அவரைவிட மென்மையான, தயவான, தன்னடக்கமுள்ள ஒருவரை கண்டடைவதற்கான பக்குவத்தை பெறுவீர்கள்.

உணர்ச்சிப் புண்களை குணப்படுத்துதல்

சொல்லாலும் செயலாலும் இம்சைக்கு ஆளாகும் ஒருவர் அப்படியே இடிந்துபோய் விடலாம். இப்படிப்பட்ட நிலைக்கு பலியான மேரி இவ்வாறு ஆலோசனை கொடுக்கிறார்: “உடனடியாக யாரிடமாவது சொல்லி உதவியைப் பெறுங்கள். நானே பிரச்சினையை தீர்த்துவிடுவேன் என்றுதான் நினைத்தேன், ஆனால் மற்றவர்களிடம் பேசியது எனக்கு உதவியது.” உங்களுடைய பெற்றோரிடம், முதிர்ச்சியுள்ள நம்பகமான ஃப்ரண்டிடம், அல்லது ஒரு கிறிஸ்தவ மூப்பரிடம் தெரியப்படுத்துங்கள். f

நன்மை பயக்கும் புத்தகங்களை வாசித்தல், ஸ்போர்ட்ஸ், அல்லது ஹாபிகள் போன்றவற்றில் ஈடுபடுவதன் மூலம் தங்களை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்வது உதவியாய் இருந்திருப்பதை சிலர் உணர்ந்திருக்கிறார்கள். “பைபிள் வாசிப்பதும் கிறிஸ்தவ கூட்டங்களில் கலந்துகொள்வதும்தான் அதிக உதவியாக இருந்ததென” இரேனா கூறுகிறாள்.

முரட்டுத்தனமான சொல்லையும் செயலையும் யெகோவா வெறுக்கிறார் என்பது தெளிவாக உள்ளது. அவருடைய உதவியோடு, தகாத விதமாய் நடத்தப்படுவதிலிருந்து உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளலாம். (g04 6/22)

[அடிக்குறிப்புகள்]

a சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

b ஆண்கள் பெண்கள் என இருபாலாருமே சொல்லாலும் கையாலும் இம்சைக்கு ஆளாகிறார்கள். என்றாலும் “ஆண்களைவிட பெண்களே அதிகமாக புண்படுகிறார்கள்” என நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பிற்கான ஐ.மா. மையங்கள் குறிப்பிடுகின்றன. பாதிக்கப்படுகிறவர்கள் யாராக இருந்தாலும், இக்கட்டுரையில் தகவலை எளிமையாக அளிப்பதற்காக இம்சிப்பவரை ஆண்பாலில் குறிப்பிடுகிறோம்.

c ஜூன் 8, 2004 விழித்தெழு! இதழில் “இளைஞர் கேட்கின்றனர்  . . . அவன் ஏன் என்னை ரொம்ப மோசமாக நடத்துகிறான்?” என்ற கட்டுரையைக் காண்க.

d ஜூன் 8, 1993 விழித்தெழு! இதழில் கற்பழிப்பை எதிர்த்து போராடுவது சம்பந்தமான தகவல் உள்ளது.

e கற்பழிக்க முயன்றது போன்ற சில விஷயங்களை போலீஸிடம் தெரிவிக்க பெற்றோர் தீர்மானிக்கலாம். இப்படிப்பட்ட அதிர்ச்சியூட்டும் அனுபவம் மற்ற பெண்களுக்கு நேரிடாதபடி இது தடுக்கும்.

f உணர்ச்சி ரீதியில் படுமோசமாக பாதிக்கப்பட்ட சிலர் டாக்டரிடம் அல்லது மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற தீர்மானிக்கலாம்.

[பக்கம் 24-ன் படம்]

காதலிக்கும் காலத்தில் மோசமாய் நடத்தப்படுவது பெரும்பாலும் மண வாழ்க்கையிலும் தொடருகிறது

[பக்கம் 25-ன் படம்]

தகாத விதத்தில் பாசத்தைக் காட்டுவதற்கு இடமளிக்காதீர்கள்