எமது வாசகரிடமிருந்து
எமது வாசகரிடமிருந்து
பரிபூரணவாதம் “இளைஞர் கேட்கின்றனர் . . . நான் எதிலும் நூறு சதம் எதிர்பார்ப்பது ஏன்?” மற்றும் “எல்லாவற்றிலும் நூறு சதம் எதிர்பார்ப்பதை நான் எப்படி தவிர்ப்பது?” (ஆகஸ்ட் 8, 2003 மற்றும் செப்டம்பர் 8, 2003) ஆகிய கட்டுரைகளுக்கு நன்றி. எதையும் குறையேதுமின்றி முழுமையாக செய்ய வேண்டுமென்ற வெறியில் இருந்தேன், ஆனால் அது என்னால் தாங்கிக்கொள்ள முடியாத ஒரு பாரம் போல ஆனது; அதனால் என்னுடைய சந்தோஷமே பறிபோனது. தவறாக சொல்லிவிடுவேனோ என்ற பயத்தால் கிறிஸ்தவ கூட்டங்களில் பதில் சொல்வதைக்கூட நான் தவிர்த்தேன். இந்தக் கட்டுரைகளுக்காக யெகோவாவுக்கு என் ஆழ்ந்த நன்றியை தெரிவிக்கிறேன். வீணான சிந்தையை கட்டுப்படுத்த இவை எனக்கு உதவுகின்றன.
எஸ். எம்., இத்தாலி (g04 6/8)
50 ஆண்டுகளாக எனக்கிருந்த பிரச்சினையை சரிசெய்வதற்கு ஏற்ற கட்டுரைகளாக இவை இருந்தன. எதிலும் நூறு சதம் எதிர்பார்ப்பதில் எந்தத் தவறும் இல்லை என்றும், யெகோவாவுக்கு மிகச் சிறந்ததையே நான் அளிக்கிறேன் என்றும் நினைத்தேன். பிள்ளைகளிடத்திலும் என்னோடு வேலை பார்ப்பவர்களிடத்திலும் கிறிஸ்தவ சகோதரர்களிடத்திலும் எனக்கு ஏன் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டதென நான் யோசித்ததுண்டு. என்னுடைய சில கருத்துக்களே அதற்குக் காரணம் என்பதை இப்போது நான் புரிந்துகொண்டேன்; அவை ஏறுக்குமாறாக, யெகோவாவுடைய சிந்தைக்கு முரணாக இருந்தன. ‘மிஞ்சின நீதிமானாக’ நடந்து கொண்டதால் என்னுடைய சந்தோஷத்தையும் மற்றவர்களுடைய சந்தோஷத்தையும் கெடுத்துப் போட்டேன். (பிரசங்கி 7:16) இந்தப் பிரச்சினையை சமாளிப்பது சாமானியமல்ல, இருந்தாலும் யெகோவாவின் உதவியோடு முயன்று பார்க்க விரும்புகிறேன்.
சி. எச்., ஐக்கிய மாகாணங்கள் (g04 6/8)
நூறு சதம் எதிர்பார்க்கும் குணம் எதையும் வெற்றிகரமாக செய்து முடிப்பதற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் என்பதைப் பற்றிய குறிப்புகள் உண்மையிலும் உண்மை! எப்படியும் செய்தே தீர வேண்டும் என நான் விரும்பியவற்றை ஏன் என்னால் செய்ய முடியவில்லை என நினைத்து இத்தனை வருஷங்களாக விரக்தி அடைந்திருக்கிறேன். நண்பர்கள் கிடைக்காமல் போவதைப் பற்றி சொல்லியிருந்ததும் உண்மை; ஏனென்றால், என்னோடு பழக யாருக்குமே விருப்பமில்லாதது போல் நான் அடிக்கடி உணர்ந்திருக்கிறேன். காரணம் என்னவாயிருக்குமென்று எனக்கு பிடிபடவில்லை. இப்போதுதான் புரிந்தது, இந்த குணத்தை மாற்றுவதற்கு நான் தொடர்ந்து கடினமாக போராட வேண்டியிருக்கிறது, அதற்கு யெகோவா உதவி புரிவார்.
எல். ஆர்., ஐக்கிய மாகாணங்கள் (g04 6/8)
யாராலுமே எதையும் நூறு சதம் சரியாக செய்ய முடியாது என்று எனக்கு நன்றாக தெரியும், என்றாலும் என்னுடைய உணர்ச்சிகள்தான் அதற்காக பாடுபடும்படி என்னை தூண்டுகின்றன. யெகோவா நம்மிடம் நூறு சதம் எதிர்பார்ப்பதில்லை, அதே சமயம் நம் இருதயத்தில் என்ன இருக்கிறது என்பதே அவருக்கு முக்கியம் என்பதை வாசித்து அறிந்தது எனக்கு உற்சாகத்தை அளித்தது. இந்தக் கட்டுரைகளுக்கு நன்றி.
தவறாக செய்துவிடுவேனோ என்ற பயம், எதையும் செய்ய விடாமல் என்னை தடுத்தது. நூறு சதம் எதிர்பார்க்கும் குணம் சதா கோபத்தையும் நம்பிக்கையின்மையையும் கவலையையும் தாழ்வு மனப்பான்மையையும் ஏற்படுத்துகிறது என்பதை அறிந்தேன். இந்தப் பிரச்சினையை நான் இன்னும் அடியோடு ஒழிக்கவில்லை, ஆனால் என்னுடைய தவறுகளை நகைச்சுவை உணர்வுடன் எடுத்துக்கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதை புரிந்துகொண்டேன்.
ஏ. ஐ., ஜப்பான் (g04 6/8)
மன அழுத்தமும் கவலையும் என்னை ஆட்டிப்படைத்த போதெல்லாம் “நான் எதற்குமே லாயக்கற்றவள்” என என்னை நானே நொந்துகொண்டதுண்டு. உங்களுடைய கட்டுரைகள் பயனுள்ள விதத்தில் சிந்திக்க எனக்கு உதவியது, அன்பான ஊக்குவிப்பையும் அளித்தது. என் மனதிலிருந்த பெரிய பாரம்—நூறு சதம் எதிர்பார்க்கும் குணம்—இறங்கியது. என்னுடைய மனோபாவத்தை சரிசெய்துகொண்டு சிறந்த மனநிலையை வளர்க்க வேத வசனங்கள் உதவின.
எம். என்., ஜப்பான் (g04 6/8)
செ. பீட்டர்ஸ்பர்க் “செ. பீட்டர்ஸ்பர்க்—ரஷ்யாவின் ‘ஐரோப்பிய நுழைவாயில்’” (செப்டம்பர் 8, 2003) என்ற கட்டுரைக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம். நாங்கள் தேனிலவுக்காக இரண்டு வாரம் சென்றிருந்தபோது செ. பீட்டர்ஸ்பர்க்கிலுள்ள சரித்திரப் புகழ்பெற்ற இடங்களைக் கண்டுகளித்தோம். யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகம், மரின்ஸ்கி தியேட்டர், ஹெர்மிடேஜ் மியூசியம், பீட்டர்ஹாஃப் ஆகியவை எங்கள் நெஞ்சைவிட்டு நீங்காத இடங்களாயின. இக்கட்டுரைக்கு மிக்க நன்றி. இது அந்தப் பெருநகரத்திற்கு செல்ல எங்களுக்கு வழிகாட்டியாக அமைந்தது!
ஏ. மற்றும் ஓ. எஸ்., ரஷ்யா (g04 6/8)