Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எவருமே தனிமையில் வாடாத ஒரு காலம்

எவருமே தனிமையில் வாடாத ஒரு காலம்

எவருமே தனிமையில் வாடாத ஒரு காலம்

முதல் மனிதன் படைக்கப்பட்டபோது, “தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்” என ஆதியாகமம் 2:18 குறிப்பிடுகிறது. ஆம், மற்றவர்களோடு சேர்ந்து, ஒருவரையொருவர் சார்ந்து வாழ வேணடும் என்பதற்காகவே மனிதர் படைக்கப்பட்டனர்.

யெகோவா தேவனே நம்முடைய மிகச் சிறந்த நண்பர். அவரே ‘இரக்கங்களின் பிதா, சகலவிதமான ஆறுதலின் தேவன், சகல உபத்திரவங்களிலேயும் எங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்’ என அப்போஸ்தலன் பவுல் ஒப்புக்கொள்கிறார். (2 கொரிந்தியர் 1:3, 4) தமது ஊழியர்கள் எவரேனும் வேதனைப்படும்போது யெகோவா தம்முடைய வருத்தத்தைத் தெரிவிக்கிறார். அவர் அனுதாபமும் பரிவும் காட்டுகிற கடவுள். “நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்; நாம் மண்ணென்று நினைவுகூருகிறார்.” (சங்கீதம் 103:14) யெகோவா தேவனிடம் நெருங்கிச் செல்ல வேண்டும் போல் நீங்கள் உணரவில்லையா? அவர் காட்டும் அன்பிற்கும், தயவிற்கும், கவனிப்பிற்கும் நன்றிசொல்ல வேண்டும் போல் உணரவில்லையா?

தனிமையில் வாடுவோரை யெகோவா ஆதரிக்கிறார்

கடந்த காலங்களில் கடவுளுடைய ஊழியர்கள் பலர் தனிமையில் தத்தளிப்பது போல் உணர்ந்த சந்தர்ப்பங்கள் உண்டு. யெகோவாவே அவர்களை தாங்கி ஆதரித்து ஆறுதல்படுத்தினார். உதாரணமாக எரேமியாவை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் தன்னுடைய வாலிப வயதிலே தீர்க்கதரிசியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 40 பைபிள் எழுத்தாளர்களில், தங்களுடைய தனிப்பட்ட உணர்ச்சிகளை அதிகமாக வெளிப்படுத்தியவர் ஒருவேளை எரேமியாவாக இருக்கலாம். கடவுளிடமிருந்து தன்னுடைய முதல் நியமிப்பை பெற்றபோது, அவர் பயந்து தான் தகுதியற்றவர் என்பதாக உணர்ந்தார். (எரேமியா 1:6) அந்த நியமிப்பை அவர் நிறைவேற்றுவதற்கு யெகோவாவை முற்றிலும் சார்ந்திருக்க வேண்டியிருந்தது. உண்மையில், ‘பயங்கரமான பராக்கிரமசாலியைப் போல்’ யெகோவா அவருடன் இருந்தார்.​—எரேமியா 1:18, 19; 20:11.

எரேமியாவின் காலத்திற்கு சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு, பாகால் தீர்க்கதரிசிகளாகிய தன்னுடைய ஆட்கள் கொலை செய்யப்பட்டதை அறிந்த யேசபேல் ராணி, எலியாவைத் தீர்த்துக்கட்டுவதாக சபதம் பூண்டாள். அதை அறிந்த எலியா சுமார் 450 கிலோமீட்டர் தொலைவில் சீனாய் தீபகற்பத்தில் அமைந்துள்ள ஓரேப்புக்கு ஓடிப்போனார். அங்கே ஒரு குகையில் இரவுப் பொழுதை கழித்தார். அப்பொழுது யெகோவா தேவன் அவரிடம், “எலியாவே, இங்கே உனக்கு என்ன காரியம்” என்று கேட்டார். அதற்கு எலியா, இஸ்ரவேலர் எல்லாரிலும் யெகோவாவை வணங்கும் ஒருவனாக, கடவுளுடைய சேவையை வைராக்கியமாக செய்த ஒரே தீர்க்கதரிசியாக தான் மட்டும் அங்கு தனித்திருப்பது போல உணர்ந்ததாக கூறினார். எலியா தனியாக இல்லை என்பதை யெகோவா உறுதிப்படுத்தினார். யெகோவா அவருடன் இருந்தார், எலியாவுக்கு தெரியாதிருந்தபோதிலும் 7,000 சக இஸ்ரவேலரும் அவருடன் இருந்தனர் என்று சொல்லி யெகோவா அவரை சமாதானப்படுத்தினார்; அதோடு அவருடைய விசுவாசத்தையும் பலப்படுத்தினார். அவர் எலியாவின் இருதயத்தைத் தூண்டி, தன்னுடைய நியமிப்பை விட்டுவிடாதிருக்கும்படி உற்சாகப்படுத்தினார். (1 இராஜாக்கள் 19:4, 9-12, 15-18) எலியாவைப் போலவே, யாருமின்றி தனிமையில் இருப்பதாகவோ லாயக்கற்றவராகவோ நாம் எப்போதாவது உணர்ந்தால், நாமும்கூட பலத்திற்காக யெகோவாவிடம் ஜெபிக்கலாம். மேலும், உண்மையாய் சத்தியத்தில் நிலைத்திருப்பவர்களிடத்தில் கிறிஸ்தவ மூப்பர்கள் பகுத்துணர்வுடன் ஆறுதலாக பேசலாம், இவ்வாறு கடவுளுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதில் அவர்களுக்கு இருக்கும் பங்கை உணர்த்தலாம்.​—1 தெசலோனிக்கேயர் 5:14.

தனிமையில் வாடுவோரை ஆதரிக்கவும் அன்புடன் ஆறுதலளிக்கவும் யெகோவா தயாராயிருப்பதை இந்த உதாரணங்களிலிருந்தும் இன்னும் பிறவற்றிலிருந்தும் நாம் அறிந்துகொள்ள முடியும். ஆம், “சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமானவர்; நெருக்கப்படுகிற காலங்களில் அவரே தஞ்சமானவர்.”​—சங்கீதம் 9:9; 46:1; நாகூம் 1:7.

ஆழ்ந்த உணர்ச்சிகளும் அனுதாபமுமுள்ள ஒருவர்

யெகோவாவைப் போல் உணர்ச்சிகளை துல்லியமான சமநிலையோடு வெளிக்காட்டியவர் என்ற பெருமை இயேசு கிறிஸ்துவையே சேரும். நாயீன் ஊரில் ஒரு சவ அடக்க ஊர்வலத்தை இயேசு எதிர்ப்பட்டபோது அவர் எப்படி பிரதிபலித்தார் என்பதை லூக்கா இவ்வாறு விவரிக்கிறார்: “மரித்துப்போன ஒருவனை அடக்கம் பண்ணும்படி கொண்டு வந்தார்கள்; அவன் தன் தாய்க்கு ஒரே மகனாயிருந்தான். . . . கர்த்தர் அவளைப் பார்த்து, அவள் மேல் மனதுருகி: அழாதே என்று சொல்லி, கிட்டவந்து, பாடையைத் தொட்டார்; அதைச் சுமந்தவர்கள் நின்றார்கள்; அப்பொழுது அவர்: வாலிபனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். மரித்தவன் எழுந்து உட்கார்ந்து, பேசத் தொடங்கினான். அவனை அவன் தாயினிடத்தில் ஒப்புவித்தார்.” (லூக்கா 7:12-15) இயேசுவின் உணர்ச்சிகள் பலமாக தூண்டப்பட்டன. அவர் பரிவுள்ளம் கொண்டவர். தனிமையில் விடப்பட்ட விதவையின் மகனை எழுப்பி உயிரோடு அவளிடம் ஒப்படைத்தபோது அவள் எவ்வளவாய் மகிழ்ச்சி அடைந்திருப்பாள் என்பதை சற்று கற்பனை செய்து பாருங்கள்! அதன் பிறகு தனிமை என்ற பாரம் அவளைவிட்டு நீங்கிற்று.

இயேசு ‘நம்முடைய பலவீனங்களைக் குறித்தும் பரிதவிக்கிறார்’ என்று நாம் உறுதியோடிருக்கலாம். தனிமையில் வாடும் நல்மனம் படைத்தோருக்காக அவர் பரிதவிக்கிறார், அதாவது அவர்கள் மீது அனுதாபம் காட்டுகிறார் என்பதில் சந்தேகமில்லை. உண்மையில், அவர் மூலம் “நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங் கிருபையை அடையவும்” முடியும். (எபிரெயர் 4:15, 16) இயேசுவைப் பின்பற்றி நாமும்கூட சோகத்திலும், வேதனையிலும், தனிமையிலும் அவதியுறுபவர்களிடத்தில் அனுதாபத்தைக் காட்டலாம். பிறருக்கு உதவுவதன் மூலம், நம்முடைய தனிமையுணர்வு குறையும். ஆனால், தனிமையுணர்வு என்ற எதிர்மறையான உணர்ச்சியை சமாளிப்பதற்கு மற்றொரு வழியும் உள்ளது.

தனிமையுணர்வை சமாளிக்க கடவுளுடைய வார்த்தை உதவுகிறது

‘தேவவசனத்தினால் உண்டாகும் ஆறுதலினால் நமக்கு நம்பிக்கையுண்டு’ என்பதை அநேகர் கண்டறிந்திருக்கிறார்கள். தனிமையுணர்வை சமாளிக்க உதவும் நடைமுறை ஆலோசனைகள் கடவுளுடைய வார்த்தையில் ஏராளம் உள்ளன. (ரோமர் 15:4; சங்கீதம் 32:8) உதாரணமாக, ‘நம்மைக் குறித்து எண்ண வேண்டியதற்கு மிஞ்சி எண்ணாதிருக்கும்படி’ கடவுளுடைய வார்த்தை அறிவுரை கூறுகிறது. (ரோமர் 12:3) இந்த அறிவுரையைப் பின்பற்றுவதற்கு, நம்முடைய சிந்தனையை சரிப்படுத்த வேண்டியிருக்கலாம். மனத்தாழ்மையுடனும் அடக்கத்துடனும் இருப்பது, அதாவது நம்முடைய வரம்புகளைக் குறித்து எதார்த்தமான கண்ணோட்டத்துடன் இருப்பது, சமநிலையான, நியாயமான எதிர்பார்ப்புகளை வளர்த்துக்கொள்ள நமக்கு நிச்சயம் உதவும். பிறரிடம் உள்ளப்பூர்வமாக தனிப்பட்ட அக்கறையை வளர்த்துக்கொள்ளும்படியும் கடவுளுடைய வார்த்தை ஆலோசனை கொடுக்கிறது. (பிலிப்பியர் 2:4) இது இருவழிப் பாதை போன்றது. மற்றவர்களிடத்தில் அக்கறை காட்டும்போது நீங்களும் அதே பலனை அவர்களிடத்திலிருந்து பெறுவீர்கள். ஒருவருக்கொருவர் இப்படிப்பட்ட நல்ல நட்பை ஏற்படுத்திக்கொள்வது வெறுமையுணர்விலிருந்து விடுபட உதவுகிறது, நம் வாழ்க்கைக்கு அர்த்தத்தையும் கொடுக்கிறது.

கிறிஸ்தவர்களாக நாம் ‘சபை கூடிவருதலை விட்டுவிடாதிருக்கவும்’ பைபிள் நம்மை உற்சாகப்படுத்துகிறது. (எபிரெயர் 10:24, 25) ஆகவே யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களில் தவறாமல் கலந்துகொள்வது போன்ற பயனுள்ள நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள். நமது ஆன்மீக, உணர்ச்சிப்பூர்வ, சரீர நலனைக் காப்பதில் கிறிஸ்தவ கூட்டங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. நமது வாழ்க்கையை முற்றிலும் ஆரோக்கியமான நடவடிக்கைகளால் நிரப்புவதற்கு மகிழ்ச்சிகரமான ஒரு வழி கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியை பிறரிடம் பேசுவதாகும். இது சரியான வழியில் நம் மனதை ஒருமுகப்படுத்துகிறது, நம் விசுவாசத்தை பலப்படுத்துகிறது, நம் நம்பிக்கையை பாதுகாக்கிறது.​—எபேசியர் 6:14-17.

யெகோவாவிடம் ஜெபத்தில் நெருங்கி வாருங்கள். “கர்த்தர் மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்” என தாவீது அறிவுரை கூறினார். (சங்கீதம் 55:22) கடவுளுடைய வசனத்தை படிப்பதன் மூலம் நீங்கள் மகிழ்ச்சி காணலாம். (சங்கீதம் 1:1-3) தனிமையுணர்வு உங்களை சிறைப்படுத்துமானால், யெகோவாவுடைய வார்த்தையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள அவரது அன்பான கவனிப்பைப் பற்றி தியானியுங்கள். “என் ஆத்துமா மண்ணோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது; உமது வசனத்தின்படி என்னை உயிர்ப்பியும்” என சங்கீதக்காரன் எழுதினார்.​—சங்கீதம் 119:25.

“நான் தனிமையில் வாடுகிறேன்” என யாருமே சொல்லாத காலம்

கவலைகளும், ஏமாற்றங்களும், எதிர்மறை உணர்ச்சிகளும் இல்லாத ஒரு புதிய உலகை யெகோவா தேவன் நமக்கு வாக்குகொடுத்திருக்கிறார். “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின” என்று பைபிள் கூறுகிறது. (வெளிப்படுத்துதல் 21:4) ஆம், முந்தினவை ஒழிந்துபோயின என்று சொல்லும்போது, இன்று நாம் எதிர்ப்படும் சரீர, மன மற்றும் உணர்ச்சிப்பூர்வ வேதனைகளும் ஒழிந்துபோகும் என்று அது அர்த்தப்படுத்துகிறது.

இந்த பூமி சிநேகப்பான்மையான மக்களால் நிறைந்திருக்கையில் வாழ்க்கை இனிமையாய் இருக்கும். இயேசு கிறிஸ்துவால் ஆளப்படும் தமது பரலோக ராஜ்யத்தின் மூலம் நம் தனிமையுணர்வை யெகோவா நிரந்தரமாக போக்கிவிடுவார். பூங்காவனம் போன்ற பூமியில் நாம் செய்வதற்கென புதுப்புது, ஆச்சரியமான காரியங்கள் காத்திருக்கின்றன. ஆக, “நான் தனிமையில் வாடுகிறேன்” என நாம் ஒருபோதும் சொல்லாத காலம் விரைவில் வரவிருக்கிறது. (g04 6/8)

[பக்கம் 9-ன் படம்]

தனிமரமாக இருந்தாலும், யெகோவாவின் ஆதரவு இருப்பதால் நாம் தனிமையாக உணர மாட்டோம்

[பக்கம் 10-ன் படங்கள்]

எரேமியாவையும் எலியாவையும் பற்றிய பைபிள் பதிவுகள் நமக்கு எதை கற்பிக்கின்றன?