ஏன் அநேகர் தனிமை சிறையில்?
ஏன் அநேகர் தனிமை சிறையில்?
தனிமையுணர்வு—இன்றைய சமுதாயத்தில் அநேகரை இது பீடிக்கிறது. வயது, இனம், அந்தஸ்து, மதம் என்ற எந்த பாகுபாடுமின்றி எல்லாரையுமே இது தொற்றுகிறது. நீங்கள் எப்போதாவது தனிமையில் வாடியிருக்கிறீர்களா? இப்போது நீங்கள் தனிமையில் வாடுகிறீர்களா? சொல்லப்போனால், நாம் ஒவ்வொருவரும் ஏதாவதொரு சமயத்தில் தோழமைக்காக ஏங்கியிருக்கிறோம். நாம் சொல்வதை காதுகொடுத்துக் கேட்கிற ஒருவர், நமக்கு ஆறுதலான வார்த்தைகள் சொல்லி நம்மை தெம்பூட்டுகிற ஒருவர், அல்லது ஒருவேளை நமது அடிமனதில் புதைந்திருக்கும் எண்ணங்களையோ உணர்ச்சிகளையோ புரிந்து பேசுகிற ஒருவர், நம்மை ஓர் ஆளாக மதிக்கிற ஒருவர் நமக்குத் தேவை என்று உணர்ந்திருக்கிறோம். ஆம், நம்முடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொள்கிற ஒருவர் நமக்கு வேண்டும்.
ஆனால், தனிமரமாக இருந்தாலே, நாம் தனிமையில் தவிக்கிறோம் என்று அர்த்தமில்லை. ஒருவர் தனிக்கட்டையாக பல காலம் வாழலாம்; தன்னந்தனியாக விடப்பட்டது போன்ற உணர்வே இல்லாமல் திருப்தியுடன் எல்லா காரியங்களையும் செய்யலாம். மறுபட்சத்தில், தனிமரமாக இருப்பதை நினைத்துக்கூட பார்க்க முடியாத சிலர் இருக்கிறார்கள்.
தனிமையுணர்வு என்பது சக்திவாய்ந்த ஓர் உணர்வாகும், அது வேதனைமிக்கதாகவும் இருக்கலாம். இது நம்மை வெறுமையாக உணர வைக்கிறது. மற்றவர்களிடம் ஒட்டுறவே இல்லாமல் ஒதுக்கப்பட்டது போன்ற ஓர் உணர்வை ஏற்படுத்துகிறது. அச்சமயங்களில் நாம் உணர்ச்சி ரீதியில் பலவீனமடைந்து நிலைகுலைந்து போய்விடலாம். எழுத்தாளர் ஜூடித் வியார்ஸ்ட் இவ்வாறு சொல்கிறார்: “தனிமை என்பது இருதயத்தில் பாரமாக அழுத்தும் கல்லைப் போல கிடக்கிறது. . . . தனிமை நம்மை வெறுமையாகவும் நம்பிக்கையற்றவர்களாகவும் விட்டுச்செல்கிறது. தனிமை நம்மை தாயில்லா பிள்ளை போல, வழிதப்பிச் சென்ற ஆட்டைப் போல, இந்தப் பிரமாண்டமான உலகில், அக்கறையற்ற உலகில் அவ்வளவு சிறுமையானவர்களாகவும் கைவிடப்பட்டவர்களாகவும் உணரச் செய்கிறது.” நீங்கள் எப்போதாவது இவ்வாறு உணர்ந்திருக்கிறீர்களா? தனிமையுணர்வுக்கு காரணங்கள் யாவை?
பிரச்சினைகளும் சந்தர்ப்ப சூழ்நிலைகளும் மக்களின் மீது பலதரப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. ஒருவேளை உங்களுடைய தோற்றம், குலம் அல்லது மதம் காரணமாக
சகாக்களால் ஒதுக்கித் தள்ளப்பட்டதைப் போல் நீங்கள் உணரலாம். சூழ்நிலையில் ஏற்படும் மாற்றங்களும் தனிமையுணர்வை ஏற்படுத்தலாம். உதாரணத்திற்கு புதிய பள்ளியில் சேருவது, ஒரு புதிய வேலையை ஆரம்பிப்பது, அல்லது பக்கத்திலுள்ள ஒரு புதிய இடத்திற்கோ, நகரத்திற்கோ, நாட்டிற்கோ குடிமாறுவது ஆகிய சூழ்நிலைகளில் உங்களுடைய பழைய நண்பர்களை விட்டுப்பிரிய நேருவதால் தனிமையுணர்வு ஏற்படலாம். அப்பாவோ அம்மாவோ இறந்துவிட்டால் அல்லது மணத்துணை இறந்துவிட்டால் தனிமையுணர்வு வாட்டியெடுக்கும், ஒருவேளை பல ஆண்டுகளுக்கு அது தொடரலாம். அதுமட்டுமல்ல, நாம் வயதாகி வருகையில் நம் நண்பர் வட்டமும், நமக்குப் பழக்கமானவர்களும் மாறலாம், குறையலாம், அல்லது இல்லாமலும் போகலாம்.மணம் செய்துகொள்வது தனிமையுணர்விலிருந்து விடுதலை அளிக்கும் என்று எப்போதுமே உறுதியாக சொல்ல முடியாது. ஒருவருக்கொருவர் சரியாக புரிந்துகொள்ளாத நிலையோ ஒத்துப்போகாத நிலையோ டென்ஷனை ஏற்படுத்தலாம். அதனால் நம்பிக்கையின்மையும், ஒருவேளை கணவன், மனைவியும் பிள்ளைகளும் பிரிந்துபோக வேண்டிய நிலையும்கூட உருவாகலாம். அன்பானவரின் இறப்பு, விவாகரத்து, பிரிந்து செல்வது, அல்லது உணர்ச்சி ரீதியில் பிரிந்திருப்பது போன்ற காரணங்களால் ஏற்படும் தனிமையுணர்வைத் தவிர, மற்றொரு விதமான தனிமையுணர்வும் உள்ளது; அது நம்மை பெருமளவு பாதிக்கலாம். அதாவது, நமக்கும் கடவுளுக்கும் இடையே உள்ள உறவு பாதிக்கப்பட்டு அவரிடமிருந்து விலகிச் சென்றுவிட்டதை உணரும்போதே இவ்விதமான தனிமையுணர்வு ஏற்படுகிறது.
மேலே சொல்லப்பட்டுள்ள சந்தர்ப்பங்களில் ஏதாவது ஒன்றை நீங்கள் எதிர்ப்பட்டிருக்கிறீர்களா? தனிமையுணர்வை சமாளிப்பது சாத்தியமா? (g04 6/8)
[பக்கம் 4-ன் படங்கள்]
வாழ்க்கையில் நிகழும் மாற்றங்கள், புதிய பள்ளியில் சேருவதிலிருந்து மணத் துணையை இழப்பது வரை எல்லாமே தனிமையுணர்வை ஏற்படுத்துகின்றன