Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஒரு கோலால் பூமியை அளத்தல்

ஒரு கோலால் பூமியை அளத்தல்

ஒரு கோலால் பூமியை அளத்தல்

கிரேக்க கணித மேதையும் வானியல் நிபுணருமான எரட்டாஸ்தனிஸைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அவருடைய பெயரைக் கேள்விப்படாத வானியல் நிபுணர்களே இல்லை. அவர்களது மனதில் எரட்டாஸ்தனிஸ் உயர்ந்தோங்கி நிற்கக் காரணமென்ன?

எரட்டாஸ்தனிஸ் சுமார் பொ.ச.மு. 276-⁠ல் பிறந்தார்; கிரீஸிலுள்ள ஏதன்ஸில் ஓரளவு கல்வி பயின்றார். பின்பு தன் வாழ்க்கையின் பெரும் பகுதியை எகிப்திலுள்ள அலெக்சாண்டிரியாவில் கழித்தார். அந்த சமயத்தில் அது கிரேக்க ஆட்சியின் கீழ் இருந்தது. சுமார் பொ.ச.மு. 200-⁠ல் எரட்டாஸ்தனிஸ் ஒரு சாதாரண கோலைப் பயன்படுத்தி பூமியின் பரிமாணங்களை கணக்கிட முனைந்தார். அது ‘முடியாத காரியம்!’ என நீங்கள் சொல்லலாம். ஆனால் அவர் அதை எப்படி செய்தார்?

செவெனே (இன்றைய பெயர் அஸ்வான்) என்ற நகரத்தில் கோடை காலத்தின் முதல் நாள் உச்சிப் பொழுதில் சூரியன் தலைக்கு மேல் நேராக இருப்பதை எரட்டாஸ்தனிஸ் கவனித்தார். ஆழமான கிணறுகளின் தரையைத் தொட்ட சூரிய ஒளி எந்த நிழலையும் ஏற்படுத்தாததை வைத்தே அவர் இதை அறிந்துகொண்டார். ஆனால் செவெனேக்கு வடக்கே 5,000 ஸ்டேடியா a தூரத்திலுள்ள அலெக்சாண்டிரியா நகரில் அதே நாளில் உச்சிப் பொழுதில் நிழலைப் பார்க்க முடிந்தது. இதைக் கண்டபோது எரட்டாஸ்தனிஸின் மனதில் ஒரு உத்தி பிறந்தது.

எரட்டாஸ்தனிஸ் ஒரு சாதாரண கோலை செங்குத்தாக நட்டு வைத்தார். அலெக்சாண்டிரியாவில் உச்சிப் பொழுதில் சூரியன் தலைக்கு மேல் இருக்கையில் அந்தக் கோல் ஏற்படுத்திய நிழலின் கோணத்தை அவர் அளந்தார். அதன் கோணம் நேர்கோட்டிலிருந்து 7.2 டிகிரி என அவர் கண்டுபிடித்தார்.

பூமி கோள வடிவமானது என எரட்டாஸ்தனிஸ் நம்பினார்; ஒரு வட்டத்திற்கு 360 டிகிரி என்பதையும் அவர் அறிந்திருந்தார். எனவே 360-ஐ தான் கணித்திருந்த 7.2 டிகிரியால் வகுத்தார். விளைவு? அந்தக் கோணம் முழு வட்டத்தில் ஐம்பதில் ஒரு பாகமாக இருந்தது. எனவே செவெனேயிலிருந்து அலெக்சாண்டிரியாவுக்கு இடையே உள்ள தூரம் அதாவது 5,000 ஸ்டேடியா என்பது, பூமியின் சுற்றளவில் ஐம்பதில் ஒரு பாகத்திற்கு சமமாக இருக்க வேண்டும் என அவர் முடிவு செய்தார். ஆகவே 5,000-⁠ஐ 50-ஆல் பெருக்கி, பூமியின் சுற்றளவு 2,50,000 ஸ்டேடியா என்ற விடையை அவர் பெற்றார்.

இன்றைய கணிப்புகளுடன் ஒப்பிடுகையில் அவருடைய கணிப்பு எந்தளவுக்கு துல்லியமானது? 2,50,000 ஸ்டேடியா என்பது தற்கால அளவில் 45,000 முதல் 46,000 கிலோமீட்டருக்கு சமம். பூமியை வலம் வரும் விண்கலத்தைப் பயன்படுத்தி, துருவங்களினூடாக பூமியின் சுற்றளவு 40,008 கிலோமீட்டர் என வானியல் நிபுணர்கள் அறிவித்தார்கள். எனவே 2,000 ஆண்டுகளுக்கும் முன்பு எரட்டாஸ்தனிஸ் கண்டுபிடித்ததை தற்கால அளவுடன் ஒப்பிடுகையில் அந்தளவுக்கு வித்தியாசம் இல்லை என்பது மலைப்பை ஏற்படுத்துகிறது. ஒரு கோலையும் வடிவியல் (geometric) வாதத்தையும் மட்டுமே வைத்துக்கொண்டு அவர் கண்டுபிடித்ததைப் பார்க்கையில் அந்தத் துல்லியம் இன்னும் வியப்பை ஏற்படுத்துகிறது! இன்றைய வானியல் நிபுணர்கள் இந்த வடிவியல் முறையை அடிப்படையாக வைத்தே நம் சூரிய மண்டலத்திற்கு வெளியே உள்ள தூரத்தை அளக்கிறார்கள்.

பூமி உருண்டை என எரட்டாஸ்தனிஸ் அறிந்திருந்தது குறிப்பிடத்தக்கது என சிலர் கருதலாம். சமீப காலம் வரை, அதாவது சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை, விஞ்ஞானத்தில் கரைகண்ட சில அறிவாளிகள்கூட பூமி தட்டையானது என நம்பினார்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. பூர்வ கிரேக்கர்கள் பூமியின் வடிவத்தை தங்கள் அறிவியல் கணிப்புகளின் அடிப்படையில் கணித்தார்கள். ஆனாலும் எரட்டாஸ்தனிஸ் வாழ்ந்த காலத்துக்கு சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னரே, ‘அவர் [கடவுள்] பூமி உருண்டைக்கு மேல் வீற்றிருக்கிறவர்’ என எபிரெய தீர்க்கதரிசி ஒருவர் ஆவியின் ஏவுதலால் எழுதினார். (ஏசாயா 40:22, கத்தோலிக்க பைபிள்) ஏசாயா அறிவியல் மேதை அல்ல. அப்படியானால், பூமி உருண்டை என அவருக்கு எப்படி தெரியும்? இந்த உண்மையை கடவுளுடைய ஆவியே அவருக்கு வெளிப்படுத்தியது. (g04 6/22

[அடிக்குறிப்பு]

a ஸ்டேடியா என்பது பண்டைய கிரேக்கில் நீளத்தை அளக்க பயன்படுத்தப்பட்ட அலகு ஆகும். அதன் துல்லியமான அளவு இடத்துக்கு இடம் மாறுபட்டபோதிலும் ஒரு ஸ்டேடியா என்பது சுமார் 160 முதல் 185 மீட்டராக இருக்குமென நம்பப்படுகிறது.

[பக்கம் 29-ன் படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

சூரிய கதிர்

செவெனே

7.2°

அலெக்சாண்டிரியா

7.2°