Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“கடலின் மணிக்கல்”

“கடலின் மணிக்கல்”

“கடலின் மணிக்கல்”

மிக சிக்கலான, நேர்த்தியான தோற்றத்திலுள்ள கண்ணாடி ஓடுகளுக்குள் தங்களை மறைத்துக் கொண்டிருக்கும் நுண்பாசி தாவரங்களே டயாட்டம்கள்; இவை இந்த உலகிலுள்ள கடல்கள் அனைத்திலும் ஏராளம் காணப்படுகின்றன. பல நூற்றாண்டுகளாக, சொல்லப்போனால் முதன்முதலில் நுண்ணோக்கி கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து, மனிதன் அவற்றின் அழகை ஓவியமாய் வடிக்க முடிந்த சமயத்திலிருந்து அறிவியலாளர்களின் மனதை இவை கொள்ளை கொண்டிருக்கின்றன. “கடலின் மணிக்கல்” என இவற்றை அழைப்பது வெகு பொருத்தமானதே.

1860-⁠களில் ஆல்ஃபிரட் நோபல் என்பவர் டைனமைட்டை கண்டுபிடித்தார்; இவர் நைட்ரோகிளிசரினை நிலைப்படுத்தி எளிதில் எடுத்துச் செல்ல முடிந்த டைனமைட் குச்சிகளை உருவாக்குவதற்கு டயாட்டம்களிலிருந்து எடுத்த சிலிகாவைப் பயன்படுத்தினார். புதைபடிவ டயாட்டம் ஓடுகள் இன்று பல்வேறு விதமான பொருட்கள் வடிவில் விற்பனைக்கு வருகின்றன; உதாரணமாக, சாலை பெயின்ட்டை ஒளிரச் செய்வதற்கு, ஒயினை சுத்திகரிப்பதற்கு, நீச்சல் குளத்தின் தண்ணீரை சுத்திகரிப்பதற்கு என பல வித பயன்களுக்காக அவை விற்கப்படுகின்றன.

எனினும் மிக முக்கியமாக, நம் கோளத்தில் நடைபெறும் கால்வாசி பாக ஒளிச்சேர்க்கைக்கு இந்த நுண்ணிய ஒற்றை செல் தாவரங்களே காரணம். டயாட்டத்தின் கண்ணாடி ஓட்டிலுள்ள சிலிகா, அதனுள் இருக்கும் தண்ணீரில் இரசாயன மாற்றங்களை நிகழ்த்துகிறது, இவ்வாறு ஒளிச்சேர்க்கைக்கு ஏற்ற ஒரு சூழலை உருவாக்குகிறது என அ.ஐ.மா., பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தை சேர்ந்த ஆலன் மிலகன், ஃபிரான்ஸ்வா மாரெல் என்னும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். அதன் கண்ணாடி ஓடு அவ்வளவு சிக்கலான தோற்றத்துடன் இருப்பதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டுமென அறிவியலாளர்கள் நம்புகிறார்கள்; அதனால்தான் அந்த ஓட்டின் மிக அதிகமான பரப்பளவு அதனுள் இருக்கும் தண்ணீரோடு தொடர்புகொள்ள முடிகிறது, இதனால் ஒளிச்சேர்க்கை இன்னும் சிறப்பாக நடந்தேறுகிறது. இந்த நுண்ணிய, ஆனால் அழகிய ஓடுகள் கடல் நீரில் கரைந்துள்ள சிலிகனிலிருந்து எப்படி உருவாகின்றன என்பது இன்னும் புரியாப் புதிராகவே இருக்கிறது; டயாட்டம்கள் கார்பன்-டை-ஆக்ஸைடை உறிஞ்சிக் கொண்டு ஆக்சிஜனை வெளிவிடுவதால் பூமியில் உயிர்கள் வாழ இவை பேருதவி புரிகின்றன, அதிலும் பெரும்பாலான நில தாவரங்களைவிட பேருதவி புரிகின்றன என்பதை மட்டுமே ஆராய்ச்சியாளர்கள் அறிந்திருக்கிறார்கள்.

டயாட்டம்கள் “பூமியில் வெற்றிகரமாக வாழும் உயிரினங்களில்” ஒன்று என மாரெல் மதிப்பிடுகிறார். அவை மட்டும் கார்பன்-டை-ஆக்ஸைடை இந்தளவுக்கு உட்கொள்ளாமல் இருந்திருந்தால், “பசுங்கூட விளைவு (greenhouse effect) இன்னும் படுமோசமாக ஆகியிருக்கும்” என மிலகன் சொல்கிறார்.

டயாட்டம்கள் இறந்துபோகையில் அவற்றின் உடலில் எஞ்சியுள்ள கார்பன் கடலுக்கடியில் மூழ்கிப்போய், இறுதியில் புதைபடிவமாகி விடுகின்றன. இந்த நிலையில் டயாட்டம்கள் பெரும் அழுத்தத்திற்கு உள்ளாகையில் அவை உலகின் எண்ணெய் உற்பத்திக்கு பங்களித்திருப்பதாக சில விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். ஆனாலும் கவலை தரும் விஷயம் ஒன்றுண்டு. புவி சூடடைவதால் கடலின் வெப்பநிலை அதிகரித்துவிடுகிறது; இதனால் டயாட்டம்களின் எஞ்சிய பாகம் கடலுக்கடியில் மூழ்குவதற்கு முன்பே அதை பாக்டீரியா அழித்து விடுகிறது; இவ்வாறு அந்தக் கார்பன் மீண்டும் தண்ணீரின் மேற்பரப்பிற்கு வந்துவிடுகிறது. ஆகவே, உயிர் காக்கும் அமைப்பின் அற்புத வடிவமைப்பில் அங்கம் வகிக்கும் இந்த சின்னஞ்சிறிய “கடலின் மணிக்கல்”லும்கூட இப்போது அடியோடு அழியும் நிலையில் உள்ளது. (g04 6/22)

[பக்கம் 31-ன் படத்திற்கான நன்றி]

© Dr. Stanley Flegler/Visuals Unlimited