கவலைப்பட்டால் விசுவாசக் குறைவு என அர்த்தமா?
பைபிளின் கருத்து
கவலைப்பட்டால் விசுவாசக் குறைவு என அர்த்தமா?
“கவலையே கூடாது.” இந்தத் தலைப்பின் கீழ் 20-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் வாழ்ந்த ஒரு பாஸ்டர் இவ்வாறு எழுதினார்: பொருளாதார காரியங்களுக்காக கவலைப்படுவது ஒரு தவறு மட்டுமல்ல, “அது ஒரு பயங்கரமான பாவமும்கூட.” மனக்கலக்கத்தையும் கவலையையும் சமாளிப்பதைப் பற்றி கருத்துரையாளர் ஒருவர் சமீபத்தில் இவ்வாறு குறிப்பிட்டார்: “கவலைப்படுவது கடவுள் மீது நமக்கு நம்பிக்கையில்லை என்பதை வெளிப்படுத்துகிறது.”
இந்த இரு எழுத்தாளர்களும் இயேசுவின் மலைப்பிரசங்கத்தை வைத்துத்தான் இந்த முடிவுக்கு வந்தார்கள்; அந்த மலைப்பிரசங்கத்தில், “கவலைப்படாதிருங்கள்” என்று இயேசு சொல்லியிருந்தார். (மத்தேயு 6:25) கவலை இன்று அநேகரை பாதிப்பதால், நாம் ஒருவேளை இவ்வாறு கேட்கலாம்: கவலைப்படுவதற்காக ஒரு கிறிஸ்தவர் குற்றவுணர்வடைய வேண்டுமா? கவலைப்பட்டால் விசுவாசக் குறைவு என அர்த்தமா?
நமது அபூரணங்களை கடவுள் அறிவார்
எல்லா கவலைகளுக்குமே விசுவாசக் குறைவுதான் காரணம் என பைபிள் கற்பிப்பதில்லை. ‘கையாளுவதற்கு கடினமான கொடிய காலங்களில்’ நாம் வாழ்வதால், கொஞ்சம்கூட கவலைப்படாமல் இருப்பது முடியாத விஷயமே. (2 தீமோத்தேயு 3:1, NW) சுகவீனம், வயோதிகம், பொருளாதார அழுத்தங்கள், குடும்ப பிரச்சினைகள், குற்றச்செயல், இன்னும் பிற பிரச்சினைகளால் உண்டாகும் அன்றாட கவலைகளை உண்மை கிறிஸ்தவர்கள் சமாளிக்கிறார்கள். பூர்வ காலங்களிலும்கூட கடவுளுடைய ஊழியர்கள் கலக்கமும் கவலையும் அடைந்திருக்கிறார்கள்.
லோத்துவைப் பற்றிய பைபிள் பதிவை கவனியுங்கள். சோதோம், கொமோராவுக்கு நேரிடும் அழிவிலிருந்து தப்பிப்பிழைக்க மலைகளுக்கு ஓடும்படி கடவுள் அவருக்கு கட்டளையிட்டார். ஆனால் லோத்து அதைக் குறித்து கலக்கமடைந்தார். ஆகவே, “அப்படியல்ல ஆண்டவரே,” “மலைக்கு ஓடிப்போக என்னால் முடியாது, தீங்கு என்னைத் தொடரும், நான் மரித்துப் போவேன்” என்று தயக்கத்துடன் சொன்னார். மலைகளுக்கு ஓடிப்போவதை நினைத்து அவர் ஏன் கலக்கமடைந்தார்? பைபிள் அதைப் பற்றி சொல்வதில்லை. ஆதியாகமம் 19:18-22.
காரணம் எதுவாக இருந்தாலும் லோத்து மிகவும் பயந்தார். அதற்கு கடவுள் எப்படி பிரதிபலித்தார்? விசுவாசக் குறைவுக்காக அல்லது நம்பிக்கை இல்லாததற்காக லோத்துவை அவர் கண்டித்தாரா? இல்லவே இல்லை. மாறாக, அவரிடம் யெகோவா தயவு காட்டி அருகிலுள்ள பட்டணத்திற்குச் செல்ல அனுமதித்தார்.—மெய் வணக்கத்தார் சில சமயங்களில் கவலையில் ஆழ்ந்துபோனதை பற்றிய பைபிள் உதாரணங்கள் இன்னும் அநேகம் உள்ளன. தான் கொலை செய்யப்படப் போவதைப் பற்றி கேள்விப்பட்ட எலியா தீர்க்கதரிசி உயிருக்கு பயந்து தலைதப்ப ஓடிப் போனார். (1 இராஜாக்கள் 19:1-4) மோசே, அன்னாள், தாவீது, ஆபகூக், பவுல் ஆகியோரும், விசுவாசத்தில் உறுதியாயிருந்த இன்னும் பிற ஆண்களும் பெண்களும்கூட தங்கள் கவலைகளை வெளிப்படுத்தியுள்ளார்கள். (யாத்திராகமம் 4:10; 1 சாமுவேல் 1:6; சங்கீதம் 55:5; ஆபகூக் 1:2, 3; 2 கொரிந்தியர் 11:28) இருந்தாலும், கடவுள் அவர்களுக்கு கருணை காட்டி, தமது சேவையில் தொடர்ந்து அவர்களை பயன்படுத்தினார்; அதன் மூலம் அபூரண மனிதரை அவர் நிஜமாகவே புரிந்து வைத்திருப்பதை காண்பித்தார்.
‘நம்மை எளிதில் அகப்படுத்துகிற பாவம்’
ஆனால், தொடர்ந்து கவலைப்பட்டுக்கொண்டே இருப்பது நமது விசுவாசத்தை பலவீனப்படுத்தி கடவுள் மீதுள்ள நம்பிக்கையை இழக்கும்படி செய்துவிடும். விசுவாசக் குறைவைப் பற்றி பேசுகையில், அது ‘நம்மை எளிதில் அகப்படுத்துகிற பாவம்’ என அப்போஸ்தலன் பவுல் குறிப்பிட்டார். (எபிரெயர் 12:1, NW) அவ்வப்போது விசுவாசத்தை பலவீனப்படுத்தும் சந்தர்ப்பங்களில் ‘எளிதில் அகப்படும்’ மனப்பாங்கு பவுலுக்கும் இருந்திருக்கலாம்; ஆகவேதான் இங்கு அவர் தன்னையும் உட்படுத்தி கூறியிருக்கிறார்.
ஒருவேளை சகரியாவின் விஷயத்திலும் இது உண்மையாக இருந்திருக்கலாம்; அதனால்தான் தன் மனைவி கர்ப்பமடைவாள் என தேவதூதன் சொன்னபோது அவர் அதை நம்பாமல் இருந்திருக்கலாம். ஒரு சமயம் இயேசுவின் அப்போஸ்தலர்களால் ஒருவரை சுகப்படுத்த முடியாமல் போயிற்று. அதற்கு அவர்களுடைய ‘அவிசுவாசமே,’ அதாவது விசுவாசக் குறைவே காரணம். என்றாலும், இவர்கள் எல்லாருக்கும் கடவுளுடைய ஆதரவு தொடர்ந்து கிடைத்தது.—மத்தேயு 17:18-20; லூக்கா 1:18, 20, 67; யோவான் 17:26.
மறுபட்சத்தில், கடவுள் நம்பிக்கையை இழந்து பெரும் விபரீதங்களை அனுபவித்தவர்களைப் பற்றியும் பைபிள் சொல்கிறது. உதாரணமாக, எகிப்தை விட்டு வந்த இஸ்ரவேலர் பலர் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை; அவர்களுடைய விசுவாசக் குறைவே அதற்குக் காரணம். ஒரு சந்தர்ப்பத்தில் அவர்கள் நேரடியாகவே கடவுளுக்கு எதிராக பேசினார்கள். “நாங்கள் வனாந்தரத்திலே சாகும்படி நீங்கள் எங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணினதென்ன? இங்கே அப்பமும் இல்லை, தண்ணீரும் இல்லை” என்று சொன்னார்கள். கடவுளுடைய கோபத்திற்கு அடையாளமாக, அவர்களை தண்டிக்கும்படிக்கு விஷப் பாம்புகள் அனுப்பப்பட்டன.—எண்ணாகமம் 21:5, 6.
இயேசுவின் சொந்த ஊரான நாசரேத்தின் குடிகள் தங்களுடைய ஊரிலேயே செய்யப்பட்ட அநேக அற்புதங்களை காணும் பாக்கியத்தை தவறவிட்டனர்; ஏனெனில் அவர்கள் விசுவாசத்தில் குறைவுபட்டார்கள். அதுமட்டுமல்ல, அன்றிருந்த பொல்லாத சந்ததியாருடைய விசுவாசக் குறைவின் காரணமாக அவர்களை இயேசு வன்மையாக கண்டித்தார். (மத்தேயு 13:58; 17:17; எபிரெயர் 3:19) ஆகவே, அப்போஸ்தலன் பவுல் சரியாகவே இவ்வாறு எச்சரித்தார்: “சகோதரரே, ஜீவனுள்ள தேவனைவிட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள [“விசுவாசக் குறைவுள்ள,” NW] பொல்லாத இருதயம் உங்களில் ஒருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள்.”—எபிரெயர் 3:12.
ஆம், படுமோசமான சில கட்டங்களில், பொல்லாத இருதயத்தால் இந்த விசுவாசக் குறைவு ஏற்படுகிறது. ஆனால் முன்பு குறிப்பிட்ட சகரியாவின் விஷயத்திலும் இயேசுவின் அப்போஸ்தலர்களுடைய விஷயத்திலும் இது உண்மையல்ல. அவர்களுடைய விசுவாசக் குறைவு ஏதோவொரு பலவீனத்தினால் தற்காலிகமாக ஏற்பட்டதே. மொத்தத்தில் அவர்கள் ‘இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள்’ என்பதை அவர்களுடைய வாழ்க்கைப் பாணி காட்டியது.—மத்தேயு 5:8.
நமது தேவைகளை கடவுள் அறிவார்
அன்றாட கவலைகளுக்கும் விசுவாசக் குறைவு என்ற பாவத்துக்கும் இடையேயுள்ள வித்தியாசத்தை அறிய பைபிள் நமக்கு உதவுகிறது. அறவே கடவுள் நம்பிக்கையற்ற மனப்பாங்கு பொல்லாத, கல்நெஞ்சத்திலிருந்து பிறக்கிறது; இதை அன்றாட கவலைகளோடு அல்லது மனித பலவீனத்தின் காரணமாக ஏதோவொரு சந்தர்ப்பத்தின்போது விசுவாசத்தில் குறைவுபடுவதோடு குழப்பிக்கொள்ளக் கூடாது. ஆகவே, அவ்வப்போது கவலைப்படுவதற்காக கிறிஸ்தவர்கள் குற்றவுணர்வடைய வேண்டியதில்லை.
இருந்தாலும், கவலை நம்மை ஆட்டிப்படைக்காமல் இருப்பதற்கும் அது நம் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்தாமல் இருப்பதற்கும் நாம் கவனமாக இருப்பது அவசியம். ஆகவே இயேசு சொன்ன வார்த்தைகளின் கருத்து இதுதான்: “என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று கவலைப்படாதிருங்கள்.” அதே சமயத்தில், “இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரம பிதா அறிந்திருக்கிறார். முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்” என்று சொல்லி ஆறுதலளித்தார்.—மத்தேயு 6:25-33. (g04 6/8)
[பக்கம் 12-ன் படம்]
அப்போஸ்தலனாகிய பவுல் பல கவலைகளை அனுபவிக்க வேண்டியிருந்தது