Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

டயர்கள்—உங்கள் உயிர் அவற்றின் மேல்!

டயர்கள்—உங்கள் உயிர் அவற்றின் மேல்!

டயர்கள்—உங்கள் உயிர் அவற்றின் மேல்!

இரும்பினாலும் கண்ணாடியினாலும் செய்யப்பட்ட கூண்டு போன்ற ஓர் இயந்திரத்திற்குள் நீங்கள் பெல்ட் மாட்டிக்கொண்டு உட்கார்ந்திருப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். நீங்கள் அமர்ந்திருக்கும் இயந்திரத்தில் அமிலமும் எரி பொருட்களும் உள்ள கலன்கள் இருக்கின்றன. அபாயகரமான இந்த இயந்திரத்தை இப்போது தரையிலிருந்து வெறும் சில சென்டிமீட்டர்களுக்கு எழும்பும்படி செய்து, அதை நொடிக்கு சுமார் 30 மீட்டர் என்ற வேகத்தில் செல்லும்படி முடுக்கி விடுகிறீர்கள். இதையெல்லாம் செய்த பிறகு, கடைசியில் உங்களுடைய இயந்திரத்தை, இது போன்ற மற்ற இயந்திரங்களின் மத்தியில் கொண்டு செல்கிறீர்கள். அவை ஒன்றுக்கொன்று படு வேகமாக முண்டியடித்து செல்கின்றன. அதுமட்டுமா, வேறு சில இயந்திரங்களோ உங்களுக்கு நேரெதிராக சர்சர்ரென்று ஜெட் வேகத்தில் செல்கின்றன!

எதைப் பற்றிய விவரிப்பு இது? ஒவ்வொரு முறையும் நெடுஞ்சாலையில் நீங்கள் ஒரு வாகனத்தை ஓட்டிச் செல்லும்போது நடைபெறுவதைப் பற்றிய விவரிப்பே இது. வாகனத்தை கட்டுப்படுத்தி ஓட்டுவதற்கும் பாதுகாப்பாக உணருவதற்கும் எவை உங்களுக்கு உதவுகின்றன தெரியுமா? டயர்களே பெரிதும் உதவுகின்றன.

டயர்களின் வேலை

டயர்கள் பலவித முக்கியப் பணிகளை செய்கின்றன. அவை உங்களுடைய வாகனத்தின் பளுவைத் தாங்குகின்றன; வேகத்தடைகள், குண்டுகுழிகள், கரடுமுரடான சாலைகள் ஆகியவற்றால் உண்டாகும் அதிர்வைக் குறைக்கின்றன; இவ்வாறு, மெத்மெத்தென்று அலாக்காக எப்படிப்பட்ட சாலையிலும் உங்களை கொண்டு செல்கின்றன. மிக முக்கியமாக, டயர்களால்தான் உங்கள் வண்டிக்கு அத்தியாவசியமான ‘ட்ராக்‍ஷன்’ (பிடிமான உராய்வு) கிடைக்கிறது; வண்டியின் வேகத்தை அதிகரிப்பதற்கும், ப்ரேக் பிடிப்பதற்கும், வேண்டிய திசையில் வண்டியை கட்டுப்படுத்தி ஓட்டுவதற்கும் இது உதவுகிறது. இருப்பினும், டயரின் ஒரு சிறிய பகுதியே​—⁠கிட்டத்தட்ட ஒரு போஸ்ட்கார்ட் அளவிலான பகுதி மட்டுமே​—⁠தரையைத் தொடுகிறது.

டயர்கள் இந்தளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதால் அவற்றை பாதுகாப்பாகவும் திறமையாகவும் இயங்க வைக்க நீங்கள் என்ன செய்யலாம்? டயர்களை வாங்கும்போது எப்படி சரியான டயர்களை தேர்ந்தெடுக்கலாம்? இக்கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு முன் டயரின் சரித்திரத்தை சுருக்கமாக பார்க்கலாம்.

ரப்பரின் முற்கால முன்னோடிகள்

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே சக்கரங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன; என்றாலும், சக்கரங்களில் ரப்பரை பொருத்தும் எண்ணம் சமீபத்தில்தான் உருவானது. 1800-களின் ஆரம்பத்தில், மரச் சக்கரங்களில் அல்லது இரும்புச் சக்கரங்களில் முதன்முதலாக இயற்கை ரப்பர் பொருத்தப்பட்டது. ஆனால் முரட்டடிக்கு அது தாக்குப் பிடிக்கவில்லை. ஆகவே சக்கரங்களுக்கு ரப்பரைப் பொருத்தும் நம்பிக்கை அற்றுப்போனது. ஆனால் அமெரிக்காவிலுள்ள கனெடிகட் என்ற மாகாணத்தை சேர்ந்த சார்ல்ஸ் குட்இயர் என்ற விஞ்ஞானி இதற்காக உழைத்து கடைசியில் வெற்றி கண்டார்! பிறகுதான் ரப்பரைப் பயன்படுத்தும் நம்பிக்கை மீண்டும் துளிர்த்தது. 1839-⁠ல் ரப்பரை கடினப்படுத்தும் முறையை குட்இயர் கண்டுபிடித்தார். ரப்பரோடு கந்தகத்தைச் சேர்த்து அழுத்தத்தின் கீழ் வெப்பமூட்டுவதே இந்த முறை. இம்முறையில் ரப்பரை டயராக வார்த்தெடுப்பது மிகவும் எளிதாக இருந்தது. இந்த டயர்கள் அவ்வளவு எளிதில் தேய்ந்து போகவில்லை. கெட்டியான ரப்பர் டயர்கள் எங்கும் பிரபலமாயின, ஆனால் பயணம் உலுக்கியெடுப்பதாய் இருந்தது.

1845-⁠ல் ராபர்ட் டபிள்யு. தாம்ஸன் என்ற ஸ்காட்லாந்து எஞ்சினியர் முதன்முதலில் காற்றடிக்கப்பட்ட டயரை தயாரிக்க தனியுரிமை பெற்றார். ஆனால், ஜான் பாயிட் டன்லப் என்ற மற்றொரு ஸ்காட்லாந்துக்காரர் தன் மகனுடைய சைக்கிள் சவாரி ஜம்மென்று இருக்க வேண்டும் என்பதற்காக முயற்சியெடுத்து ஒரு புதிய டயரை, காற்றடிக்கப்பட்ட டயரை கண்டுபிடித்தார். அதன் பிறகுதான் வாடிக்கையாளர்கள் மத்தியில் காற்றடிக்கப்பட்ட டயர்கள் பிரபலமடைந்தன. தான் கண்டுபிடித்த புதிய டயருக்கு 1888-⁠ல் தனியுரிமை பெற்று சொந்த கம்பெனியை டன்லப் ஆரம்பித்தார். இருந்தாலும், காற்றடிக்கப்பட்ட டயர்களை உருவாக்குவதில் இன்னும் பெரும் இடையூறுகளை சமாளிக்க வேண்டியிருந்தது.

1891-ஆம் ஆண்டு ஒரு நாள், ஒரு பிரெஞ்சு சைக்கிள்காரருடைய டயரில் காற்று இறங்கிவிட்டது. அதை சரிசெய்ய முயன்றும் அவரால் முடியாமல் போயிற்று. ஏனென்றால் அந்த டயர் கழற்ற முடியாதபடி சக்கரத்துடன் இணைக்கப்பட்டிருந்தது. ஆகவே தன்னோடிருந்த ஏட்வார் மிஷ்லன் என்பவருடைய உதவியை அவர் நாடினார். அவர் ரப்பரை கடினப்படுத்தும் வேலையை நன்கு அறிந்தவர். அந்த டயரை பழுதுபார்க்க மிஷ்லனுக்கு ஒன்பது மணிநேரம் பிடித்தது. இந்த அனுபவத்திற்கு பிறகுதான், சக்கரத்திலிருந்து எளிதில் கழற்றக்கூடிய காற்றடிக்கப்பட்ட டயரை தயாரிக்க வேண்டுமென்ற உத்வேகம் அவருக்குள் பிறந்தது.

மிஷ்லன் கண்டுபிடித்த அந்தப் புதிய டயர்களின் புகழ் ஓங்கியதால் அடுத்த ஆண்டில் சைக்கிள் சவாரி செய்த 10,000 பேர் அந்த டயர்களை வாங்கி பயன்படுத்தினர். விரைவில் பாரிஸ் நகரின் குதிரை வண்டிகளில் காற்றடிக்கப்பட்ட டயர்கள் பொருத்தப்பட்டன, பிரெஞ்சு நாட்டுப் பயணிகள் மகிழ்ச்சியோடு அவற்றில் பயணித்தனர். மோட்டார் வண்டிகளிலும் காற்றடிக்கப்பட்ட டயர்களை பயன்படுத்த முடியும் என்பதை 1895-⁠ல் ஏட்வாரும் அவரது சகோதரர் ஆன்ட்ரேயும் நிரூபித்துக் காட்டினர்; ஆனால் அவர்கள் பயன்படுத்திய அந்தப் பந்தயக் கார் கடைசி இடத்தையே பெற்றது. இருந்தாலும், இந்த விசித்திரமான டயர்களைப் பார்த்து வியந்துபோன மக்கள், அவற்றிற்குள் அப்படி எதைத்தான் இந்த மிஷ்லன் சகோதரர்கள் மறைத்து வைத்திருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்வதற்காக அந்த டயர்களைக் கிழித்துப் பார்த்தார்கள்!

1930-களிலும் 40-களிலும், பஞ்சு, இயற்கை ரப்பர் போன்ற வலுவற்ற பொருட்களுக்கு பதிலாக நீடித்து உழைக்கும் புதிய பொருட்கள் டயர் உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்டன; அதாவது ரேயான், நைலான், பாலியஸ்டர் போன்றவை பயன்படுத்தப்பட்டன. காற்று வெளியேறாதவாறு சக்கரத்துடன் நேரடியாக பொருத்தப்படும் டயரை தயாரிக்கும் வேலை இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஆரம்பமானது. இனி டயருக்குள் காற்று நிரப்பப்பட்ட ஒரு ட்யூப்பை வைக்க வேண்டிய அவசியம் இல்லாதபடி ஆனது. பிற்பாடு, டயர் உற்பத்தியில் மேலும் சில முன்னேற்றங்கள் செய்யப்பட்டன.

இன்றோ, ஒரு டயரை உருவாக்குவதற்கு 200-⁠க்கும் அதிகமான கச்சாப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. நவீன தொழில்நுட்பத்தின் உதவியால் சில டயர்கள் 1,30,000 கிலோமீட்டர் அல்லது அதற்கும் அதிகமான தூரம் ஓடுகின்றன! பந்தயக் காரில் பொருத்தப்படும் டயர்களோ ஒரு மணிநேரத்திற்கு நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் வேகத்தையும் தாக்குப்பிடித்துச் செல்ல வல்லவை. இது ஒருபுறமிருக்க, இப்போது சாதாரண ஜனங்கள்கூட டயர்களை வாங்குமளவுக்கு அவற்றின் விலை மலிவாகியிருக்கிறது.

டயர்களை தேர்ந்தெடுத்தல்

உங்களிடம் ஒரு மோட்டார் வாகனம் இருக்கிறதென்றால், புதிய டயர்களை தேர்ந்தெடுக்கும் சிக்கலை ஒருவேளை சந்தித்திருக்கலாம். டயர்களை எப்போது மாற்ற வேண்டும் என்பதை நீங்கள் எப்படி தீர்மானிப்பீர்கள்? தேய்ந்திருக்கிறதா அல்லது பழுதடைந்திருக்கிறதா என தவறாமல் பரிசோதிப்பதன் மூலம் தீர்மானிக்கலாம். a தேய்மானத்தை கண்டுபிடிக்க உதவும் சிலவற்றை டயர்களிலேயே உற்பத்தியாளர்கள் அமைத்துள்ளார்கள்; இவை பொதுவாக வேர் பார்ஸ் (Wear bars) என அழைக்கப்படுகின்றன. உங்களுடைய டயரின் ஆயுள் எப்போது முடிவடைகிறது என்பதை இவை காட்டுகின்றன. டயரிலுள்ள ‘ட்ரெட்’ அமைந்திருக்கும் பகுதியில் தடித்த ரப்பர் பட்டைகளாக காணப்படுபவைதான் இந்த வேர் பார்ஸ். டயரின் ஆயுட்காலத்தை தீர்மானிக்க டயரின் ‘ட்ரெட்’ பிரிந்துவிட்டிருக்கிறதா என்றும், வெளியே ஒயர்கள் துருத்திக்கொண்டிருக்கிறதா என்றும், டயரின் பக்கவாட்டு பகுதிகள் புடைத்து காணப்படுகிறதா என்றும், இன்னும் வேறு ஏதாவது ஒழுங்கற்ற நிலை காணப்படுகிறதா என்றும் பரிசோதிப்பது நல்லது. இவற்றில் எதையேனும் நீங்கள் கண்டுபிடித்தால், அந்த டயரை பழுதுபார்க்கும் வரையில் அல்லது புது டயர் மாற்றும் வரையில் வண்டியை ஓட்டக் கூடாது. அவை புதிதாக வாங்கிய டயர்களாக இருந்தால், அவற்றிற்கு உத்தரவாதம் இருந்தால், அந்த டயருக்கு பதிலாக குறைந்த விலையில் புதிய டயரை விற்பனையாளர் கொடுக்கலாம்.

ஒரே ‘ஆக்ஸிலில்’ உள்ள டயர்களை மாற்றும்போது இரண்டும் ஒரே வகையானதாக இருப்பது நல்லது. ஒரேவொரு புதிய டயரை மாற்றுவதாக இருந்தால், அந்த ‘ஆக்ஸிலில்’ உள்ள மற்றொரு டயரின் ‘ட்ரெட்’டும் அதிகம் இருக்க வேண்டும். அப்போதுதான் பிரேக் பிடிக்கையில் ‘ட்ராக்‍ஷன்’ சமமாக கிடைக்கும்.

டயர்களின் வித்தியாச வித்தியாசமான எல்லா வகைகளையும், அளவுகளையும், மாடல்களையும் ஆராய்ந்து பார்த்து தேர்ந்தெடுப்பதற்குள் நம் மூளையே குழம்பிவிடலாம். என்றாலும், முக்கியமான சில கேள்விகளுக்கு பதிலளிப்பது இந்த வேலையை மிகவும் எளிதாக்கும். முதலாவதாக, வாகன உற்பத்தியாளரின் ஆலோசனைகளை படித்துப் பாருங்கள். உங்கள் வாகனத்திற்கே உரிய சில பிரத்தியேக குறிப்புகளை, உதாரணமாக டயர் மற்றும் சக்கரத்தின் அளவு, தரைக்கும் வாகனத்துக்கும் இடையே இருக்க வேண்டிய இடைவெளி, பளுவைத் தாங்கும் திறன் ஆகியவற்றை கவனத்தில் வைப்பது அவசியம். உங்கள் வாகனத்தின் வடிவமைப்பையும்கூட கவனத்தில் வைப்பது முக்கியம். ‘ஆன்ட்டி-லாக்’ பிரேக்குகள், ‘ட்ராக்‍ஷன்’ கன்ட்ரோல், ஆல் வீல் ட்ரைவ் ஸிஸ்டம் ஆகியவற்றைக் கொண்ட நவீன வாகனங்களில் சில பிரத்தியேக அம்சங்களைக் கொண்ட டயர்களையே பொருத்த வேண்டியிருக்கும். உங்கள் வாகனத்திற்கு எது ஏற்ற டயர் என்பதைப் பற்றிய இன்னும் பல விஷயங்கள் பொதுவாக உற்பத்தியாளரின் கையேட்டில் உள்ளன.

நீங்கள் கவனத்தில்கொள்ள வேண்டிய மற்றொரு அம்சம் சாலையின் தன்மைகள். உங்களுடைய வாகனத்தை பெரும்பாலும் மண் ரோட்டில் ஓட்டுவீர்களா அல்லது தார் ரோட்டில் ஓட்டுவீர்களா? மழைக்காலத்தில் ஓட்டுவீர்களா அல்லது வெயில் காலத்தில் ஓட்டுவீர்களா? ஒருவேளை இதுபோன்ற பல்வேறு சூழ்நிலைகளில் நீங்கள் ஓட்ட வேண்டியிருக்கலாம். அப்படியானால் எல்லாவித சாலைகளிலும் அல்லது எல்லா சீதோஷண நிலையிலும் ஓட்டுவதற்கு ஏற்ற டயர் உங்களுக்கு தேவைப்படலாம்.

டயரின் ஆயுட்காலத்தையும் ‘ட்ராக்‍ஷன்’ வீதத்தையும்கூட கவனத்தில் கொள்ள வேண்டும். பொதுவாக, ‘ட்ரெட்’டின் சேர்மானப்பொருள் மென்மையாய் இருக்கும்போது டயருக்கு அதிக ‘ட்ராக்‍ஷன்’ கிடைக்கிறது; ஆனால் அது சீக்கிரத்திலேயே தேய்ந்து விடும். மறுபட்சத்தில், ‘ட்ரெட்’டின் சேர்மானப் பொருள் கெட்டியாக இருந்தால், டயருக்கு குறைவான ‘ட்ராக்‍ஷனே’ கிடைக்கும்; ஆனால் டயர் நீடித்து உழைக்கும். ‘ட்ராக்‍ஷன்’ வீதங்களை பொதுவாக டயர் விற்பனை செய்யும் இடங்களில் உள்ள விற்பனை புத்தகத்தில் காணலாம். கவனமாயிருங்கள்! இந்த வீதம் உற்பத்தியாளருக்கு உற்பத்தியாளர் மாறுபடுகிறது.

எத்தகைய டயர்களை வாங்குவதென்று யோசித்து விட்டீர்கள். இனி கடைசியாக விலையை விசாரித்து முடிவு செய்ய வேண்டியதுதான். பிரபல உற்பத்தியாளர்கள் பொதுவாக தரத்திற்கு சிறந்த காப்புறுதி அளிக்கிறார்கள், உத்தரவாதமும் அளிக்கிறார்கள்.

டயர்களை பராமரித்தல்

டயர்களை சரியாக பராமரிப்பதில் மூன்று விஷயங்கள் உட்பட்டுள்ளன: சரியான காற்றழுத்தம், டயர்களை தவறாமல் சுற்றுமுறையில் மாற்றுதல், அவற்றை சமநிலையிலும் சரியான நிலையிலும் வைத்தல். டயரின் காற்றழுத்தத்தை சரியான அளவில் வைத்திருப்பது மிக முக்கியம். காற்றழுத்தம் அதிகமாக இருந்தால் ‘ட்ரெட்’டின் மையப்பகுதி சீக்கிரத்தில் தேய்ந்துவிடும். மறுபட்சத்தில், காற்றழுத்தம் மிகக் குறைவாக இருந்தால் டயர் ஓரங்களில் அதிக தேய்மானம் ஏற்படும், எரிபொருளின் திறனும் குறைந்துவிடும்.

ரப்பர் வழியாக காற்று கசிவதால் ஒவ்வொரு மாதமும் டயரின் காற்றழுத்த அளவில் அரை கிலோகிராம் அல்லது அதற்கும் மேலாக குறைந்துவிடலாம். ஆகவே, பார்த்த மாத்திரத்திலேயே டயர்களில் சரியானளவு காற்று இருக்கிறதா என உங்களால் சொல்லிவிட முடியும் என நினைக்காதீர்கள். ரப்பர் தயாரிப்பாளர்களின் சங்கம் குறிப்பிடுகிறபடி, “டயரில் காற்றழுத்தம் கிட்டத்தட்ட பாதிக்குப் பாதி இறங்கிவிடலாம், ஆனாலும் பார்ப்பதற்கு காற்று இறங்கியதாகவே தெரியாது!” ஆகவே, டயரின் காற்றழுத்தத்தை அறிந்துகொள்வதற்காக காற்றழுத்த மானியை (pressure gauge) பயன்படுத்துங்கள், குறைந்தது மாதத்தில் ஒருமுறையாவது காற்றழுத்தத்தைப் பாருங்கள். வாகன உரிமையாளர்களில் அநேகர் தங்களுடைய வசதிக்காக ஒரு காற்றழுத்த மானியை டேஷ்போர்டில் உள்ள சிறிய அறையில் வைக்கிறார்கள். எஞ்சின் ஆயிலை மாற்றுகையில் எப்போதும் உங்கள் டயர்களை பரிசோதியுங்கள். உங்களுடைய வாகனம் அதிக சூடாக இல்லாத நிலையில் மட்டுமே, வேறு வார்த்தையில் சொன்னால் குறைந்தபட்சம் மூன்று மணிநேரத்திற்கு வண்டியை பயன்படுத்தாத நிலையில் அல்லது ஒன்றரை கிலோமீட்டருக்கும் குறைவாகவே ஓட்டியிருக்கும் நிலையில் மட்டுமே டயர்களை பரிசோதிக்க வேண்டும். டயரின் காற்றழுத்தம் சம்பந்தப்பட்ட சில முக்கிய குறிப்புகள் வாகன உரிமையாளரின் கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன அல்லது ஓட்டுநரின் அருகேயுள்ள கதவிலோ டேஷ்போர்டில் உள்ள சிறிய அறையிலோ உள்ள லேபிளில் குறிப்பிடப்பட்டுள்ளன. உலுக்கியெடுக்கும் பயணத்தை தவிர்க்க விரும்பினால், டயர்களில் அதிகபட்ச அளவுக்கு காற்றடைக்காதீர்கள்; அதிகபட்ச அளவு எவ்வளவென்று டயரின் பக்கவாட்டில் குறிக்கப்பட்டுள்ளது.

டயர்களை சுற்றுமுறைப்படி தவறாமல் மாற்றும்போது அவை நீடித்து உழைக்கும், தேய்மானமும் ஒரேவிதமாக இருக்கும். 10,000 முதல் 13,000 கிலோமீட்டர் ஓடிய பிறகு உங்களுடைய டயர்களை இவ்வாறு சுற்றுமுறையில் மாற்றி வருவது சிறந்தது, இல்லையென்றால், உற்பத்தியாளருடைய ஆலோசனைப்படியே செய்யுங்கள். இந்த விஷயத்திலும் சுற்றுமுறைப்படி மாற்றும் விதத்தைப் பற்றிய குறிப்புகளுக்கு கையேட்டைப் பாருங்கள்.

முடிவாக, உங்களுடைய டயரின் சரியான நிலையை (tire alignment) வருஷந்தோறும், அல்லது வழக்கத்திற்கு மாறான அதிர்வையோ ஸ்டியரிங்கில் ஒழுங்கற்ற நிலையையோ கவனித்தால் பரிசோதியுங்கள். வெவ்வேறு அளவில் பளுவை சுமந்து செல்கையில் டயர்களை சரியான நிலையில் வைப்பதற்கென்றே உங்களுடைய வாகனத்தில் ‘சஸ்பென்ஷன்’ அமைப்பு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும், டயர்கள் இயல்பாகவே தேய்வுறுவதால் அவற்றை அவ்வப்போது பரிசோதிப்பதும் அவற்றின் நிலையை சரிசெய்வதும் அவசியம். தேர்ச்சி பெற்ற ‘சஸ்பென்ஷன்’ மற்றும் ‘வீல் அலைன்மென்ட்’ டெக்னிஷியன் ஒருவரால் உங்களுடைய டயரை துல்லியமான ‘அலைன்மென்ட்’டில் வைக்க முடியும், அது உங்களுடைய டயரின் ஆயுளைக் கூட்டும், வண்டியை சுமுகமாக ஓடவும் வைக்கும்.

“புத்திசாலி” டயர்கள்

டயரின் காற்றழுத்தம் மிகவும் குறைந்துவிட்டால் சில கார்கள் கம்ப்யூட்டர்களின் உதவியால் அதை ஓட்டுநருக்கு எச்சரிக்கின்றன. சில டயர்கள் காற்றழுத்தம் இல்லாமலேயே சிறிது தூரத்திற்கு ஓடுகின்றன; சில டயர்களோ ஓட்டை விழுந்தால் தாமாகவே அடைத்துக்கொள்கின்றன. சொல்லப்போனால், இன்னும் பல்வேறு சூழ்நிலைகளுக்கு ஏற்ற டயர்களை பொறியியலாளர்கள் தொடர்ந்து பெருமளவில் வடிவமைத்து வருகிறார்கள்.

நவீன வாகனங்களில் உள்ள பொருட்கள், ‘ட்ரெட்’ டிசைன், ‘சஸ்பென்ஷன்,’ ஸ்டியரிங், ப்ரேக் அமைப்புகள் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தால் டயர்கள் வாகனம் ஓட்டுவதை சுலபமாக்குகின்றன, அதை பாதுகாப்பாகவும் கொண்டு செல்கின்றன. (g04 6/8)

[அடிக்குறிப்பு]

a உங்களுடைய டயர்களை பரிசோதிப்பதற்கு பக்கம் 17-⁠ல் கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையைக் காண்க.

[பக்கம் 17-ன் அட்டவணை/படங்கள்]

டயரை பராமரிக்க உதவும் செக் லிஸ்ட்

பார்த்து கண்டுபிடித்தல்:

◻ பக்கச் சுவர்கள் புடைத்திருக்கின்றனவா?

◻ ‘ட்ரெட்’ பரப்பில் ஒயர்கள் காணப்படுகின்றனவா?

◻ ‘ட்ரெட்’ குறைந்தளவு தேய்ந்திருக்கிறதா, அல்லது ‘வேர் பார்ஸ்’ தெரியுமளவுக்கு தேய்ந்திருக்கிறதா?

இன்னும் சில:

◻ உற்பத்தியாளரின் பரிந்துரைக்கு ஏற்ப டயரில் காற்றழுத்தம் உள்ளதா?

◻ டயர்களை சுற்றுமுறையில் மாற்றுவதற்கான சமயம் வந்துவிட்டதா? (எவ்வளவு கிலோமீட்டர் ஓடிய பின் மாற்ற வேண்டும், எந்த சுற்றுமுறையில் மாற்ற வேண்டும் என்பதற்கு உற்பத்தியாளரின் ஆலோசனையை பின்பற்றுங்கள்.)

◻ சீதோஷண நிலை மாற மாற வித்தியாசமான டயர்களை போட வேண்டுமா?

[படம்]

வேர் பார்

[பக்கம் 16-ன் படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

டயரின் பாகங்கள்

ட்ரெட், ட்ராக்‍ஷனையும், அதாவது பிடிமான உராய்வையும் கார்னரிங் கிரிப்பையும் அளிக்கிறது

பெல்ட்டுகள் ட்ரெட்டை சமநிலைப்படுத்துகின்றன, பலப்படுத்துகின்றன

பக்கவாட்டு சுவர், சாலை மற்றும் சாலையின் ஓரங்களால் டயரின் பக்கவாட்டுப் பகுதி பாதிக்கப்படாமல் பாதுகாக்கிறது

பாடி ப்ளை, டயருக்கு வலுவூட்டுகிறது, நெகிழ்வுதன்மையை அளிக்கிறது

இன்னர் லைனர், டயரின் உள்ளே காற்றை தக்கவைக்கிறது

பீட், காற்று வெளியேறாதபடிக்கு சக்கரத்துடன் இறுகப் பிடித்துக்கொள்கிறது

[பக்கம் 15-ன் படங்கள்]

காற்றடைக்கப்பட்ட டயர்கள் பொருத்திய முற்கால சைக்கிளும் காரும்; பண்டைய டயர் தொழிற்சாலையில் பணியாளர்கள்

[படத்திற்கான நன்றி]

The Goodyear Tire & Rubber Company