Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தனிமை எனும் சிறையை விட்டு வெளிவருதல்

தனிமை எனும் சிறையை விட்டு வெளிவருதல்

தனிமை எனும் சிறையை விட்டு வெளிவருதல்

தனிமையுணர்வை சமாளிப்பது எளிதல்ல. காரணம், பலமான உணர்ச்சிகளின் எழுச்சியே அந்த உணர்வு. அப்படியானால் தனிமையுணர்வை ஒருவர் எப்படி சமாளிக்கலாம்? சக்திவாய்ந்த இந்த உணர்ச்சியை வெல்ல சிலர் என்ன செய்திருக்கிறார்கள்?

தனிமையுணர்வை எதிர்ப்படுதல்

தீர்மானம் ஏதாவது எடுக்கும்போது ஒண்டியாக இருக்கவே ஹெலன் a விரும்புகிறாள், ஆனால் தனிமையுணர்வு ஆபத்தில் கொண்டுபோய் விடலாம் என்பதை அவள் உணர்கிறாள். அவள் சிறுமியாக இருந்தபோது, பெற்றோருக்கும் அவளுக்கும் இடையே சரியான பேச்சுத்தொடர்பு இருக்கவில்லை. அவர்களுடைய கவனத்தை எப்படி ஈர்ப்பது என்று தெரியாமல் தன்னுடைய ரூமைப் பூட்டிக்கொண்டு உள்ளேயே கிடந்தாள். அவள் இவ்வாறு சொல்கிறாள்: “என்னால் சரிவர சாப்பிட முடியவில்லை. மனச்சோர்வு என்னை வாட்டி வதைத்தது. ‘என் பிரச்சினைகளைப் பற்றி அம்மாவும் அப்பாவும் கவலைப்படாதபோது நான் ஏன் அவர்களுடைய பிரச்சினைகளைப் பற்றி கவலைப்பட வேண்டும்?’ என்று எனக்குள்ளே சொல்லிக்கொண்டதுண்டு. கல்யாணம் செய்துகொண்டால் என்னுடைய தனிமையுணர்வு போய்விடும் என்று யோசிக்க ஆரம்பித்தேன். ஆகவே, தனிமையிலிருந்து தப்பிப்பதற்காக கல்யாணம் செய்துகொள்ள வழி தேடினேன். ஆனால் நான் யோசித்துப் பார்த்தபோது, ‘என்னுடைய எண்ணத்தை நான் முதலாவது சரிசெய்ய வேண்டும். அதற்கு பதிலாக, மற்றொருவனுடைய வாழ்க்கையை நான் ஏன் பாழ்ப்படுத்த வேண்டும்!’ என்ற முடிவுக்கு வந்தேன். உதவிகேட்டு யெகோவாவிடம் ஜெபித்தேன், என்னுடைய அத்தனை மனவேதனையையும் அவரிடம் கொட்டித் தீர்த்தேன்.

“மிகவும் ஆறுதலளிக்கிற வார்த்தைகள் பைபிளில் இருப்பதை கண்டறிந்தேன். உதாரணமாக, ஏசாயா 41:10-⁠ல் ‘நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம் பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. அப்பா என்று சொல்லிக்கொள்ள யாருமே கிடையாது என்று நினைத்த எனக்கு இந்த வார்த்தைகள் ரொம்ப உதவியாக இருந்தன. இன்று நான் பைபிளை தவறாமல் படித்து வருகிறேன், என்னுடைய பரம தகப்பனிடம் தவறாமல் ஜெபம் செய்தும் வருகிறேன். தனிமையுணர்வை ஜெயிக்க கற்றுக்கொண்டேன்.”

அன்பான ஒருவரை மரணத்தில் பறிகொடுக்கும்போது கவலை தொற்றிக்கொள்கிறது; அது தனிமையுணர்வை ஏற்படுத்தலாம். 16 வயது லூயிஸா தன் ஆதங்கத்தை இவ்வாறு சொல்கிறாள்: “எனக்கு ஐந்து வயதாக இருக்கும்போது என் அப்பா கொல்லப்பட்டார். ஆறுதலுக்காக நான் பாட்டியிடம் போனேன், ஆனால் என் மீது அவர் அன்பு காட்டவே இல்லை. அந்தப் பிள்ளைப் பருவத்தில் நான் ஏங்கின அளவுக்கு பாசம் கிடைக்கவில்லை. எட்டோ ஒன்பதோ வயதிருக்கும்போது மூன்று முறை தற்கொலை செய்ய முயற்சித்தேன். எனக்கும் என்னுடைய மூன்று அக்காமாருக்கும் சாப்பாடு போட அம்மா கஷ்டப்பட வேண்டியிருந்ததால் நான் செத்துப்போவதுதான் என்னுடைய குடும்பத்திற்கு நல்லது என்று நினைத்தேன். பிறகு, யெகோவாவின் சாட்சிகளுடன் கூட்டுறவு கொள்ள ஆரம்பித்தோம். ஓர் இளம் தம்பதியர் என்னை நெஞ்சார நேசித்தார்கள். ‘உன்னைப் பற்றி நாங்க ரொம்ப பெருமையா நினைக்கிறோம், நீ எங்களுக்கு ரொம்ப முக்கியமானவள்’ என்று அவர்கள் அடிக்கடி சொல்வதுண்டு. ‘நீ எங்களுக்கு ரொம்ப முக்கியமானவள்’ என்ற வார்த்தைகள் எனக்கு தெம்பூட்டின. சில சமயங்களில் என்னுடைய உணர்ச்சிகளை மற்றவர்களிடம் வெளிக்காட்டுவதற்கு கஷ்டமாக இருந்தது; ஆனால் காவற்கோபுரம், விழித்தெழு!-வில் உள்ள கட்டுரைகளை வாசிக்கையில் நான் யெகோவாவுக்கு நன்றி தெரிவிக்கிறேன். ஏனென்றால் அந்தப் பத்திரிகைகளிலிருந்து யெகோவாவின் அன்பை என்னால் உணர முடிகிறது. நான் நிறைய விஷயங்களில் என்னை மாற்றிக்கொண்டேன். இன்று என்னால் புன்னகைக்க முடிகிறது, அதுமட்டுமல்ல என்னுடைய சோகத்தையும் சந்தோஷத்தையும் அம்மாவிடம் தெரிவிக்கவும் முடிகிறது. இப்போதும்கூட சில சமயங்களில் பழைய நினைவுகள் என் மனதுக்கு வருகின்றன, ஆனாலும் முன்புபோல் தற்கொலை செய்துகொள்ள வேண்டுமென்றோ எனக்கு பிரியமானவர்களிடம் பேசுவதை நிறுத்திவிட வேண்டுமென்றோ உணருவதில்லை. ‘என் சகோதரர் நிமித்தமும் என் சிநேகிதர் நிமித்தமும், உன்னில் சமாதானம் இருப்பதாக என்பேன்’ என்று சங்கீதக்காரனாகிய தாவீது சொன்னதை எப்போதும் நினைவில் வைக்கிறேன்.”​—சங்கீதம் 122:8.

மார்த்தாவை அவரது கணவர் விவாகரத்து செய்து 22 வருடங்கள் ஆகின்றன. இந்தக் காலப்பகுதியில் தன்னுடைய பிள்ளையை அவர் தன்னந்தனியாக வளர்த்தார். “சில சமயங்களில் ஏதோவொரு காரியத்தை வெற்றிகரமாக செய்ய முடியாமல் போகும்போது வெறுமையுணர்வும் தனிமையுணர்வும் மீண்டும் என்னில் தலைதூக்குகிறது” என அவர் கூறுகிறார். இந்த உணர்ச்சிகளை அவர் எப்படி சமாளிக்கிறார்? “யெகோவா தேவனிடம் ஜெபத்தில் உடனுக்குடன் சொல்வதே இவற்றை சமாளிப்பதற்கான சிறந்த வழி என கண்டிருக்கிறேன். ஜெபிக்கும்போது, நான் தனிமையில் இல்லை என்பதை அறிந்துகொள்கிறேன். என்னைவிட யெகோவா என்னைப் பற்றி நன்றாகவே புரிந்துகொள்கிறார். மற்றவர்களிடம் தனிப்பட்ட அக்கறை காட்டுவதற்கும் நான் வழிதேடுகிறேன். எதிர்மறையான உணர்ச்சிகளை எதிர்த்துப் போராடுவதற்கு நான் செய்துவரும் முழுநேர ஊழியம் ஒரு சக்திவாய்ந்த ஆயுதமாக இருக்கிறது. கடவுளுடைய ராஜ்யத்தின் ஆசீர்வாதங்களைப் பற்றி மற்றவர்களிடம் பேசுகையில், அவர்கள் முற்றிலும் நம்பிக்கையற்றவர்களாய், தங்களுடைய பிரச்சினைகள் தீரவே தீராது என நினைத்து விரக்தியுடன் இருப்பதை பார்க்கும்போதுதான், நம் வாழ்க்கைக்கு அர்த்தமுண்டு என்பதையும் இந்த உணர்ச்சிகளை எதிர்த்துப் போராடியே தீர வேண்டும் என்பதையும் நன்றாகவே புரிந்துகொள்ள முடிகிறது.”

93 வயதான எல்பாவுக்கு ஒரேவொரு மகள்தான். அந்த மகளும் வேறொரு நாட்டில் மிஷனரியாக சேவை செய்கிறார். தன்னுடைய தனிமையுணர்வை எப்படி சமாளிக்கிறார் என்பதை எல்பா சொல்கிறார்: “உவாட்ச்டவர் கிலியட் பைபிள் பள்ளியில் கலந்துகொள்ளும்படி என் மகளுக்கும் அவளுடைய கணவருக்கும் அழைப்பு வந்தபோது அவர்களுடைய முகம் சந்தோஷத்தில் பளிச்சிட்டது, நானும் அவர்களுடைய சந்தோஷத்தில் பங்குகொண்டேன். பிற்பாடு, வேறொரு நாட்டில் சேவை செய்வதற்கான நியமிப்பை அவர்கள் பெற்றபோது, நான் கொஞ்சம் சுயநலவாதியாக உணர ஆரம்பித்தேன். இனி நான் அவர்கள் பக்கத்தில் இருக்க முடியாதே என நினைத்து மனம் பாரமானது. அந்த சூழ்நிலை, நியாயாதிபதிகள் 11-⁠ம் அதிகாரத்தில் யெப்தாவையும் அவரது ஒரே மகளையும் பற்றி விவரிக்கப்பட்டுள்ளதைப் போல இருந்தது. ஆகவே, யெகோவாவிடம் மன்னிப்பு கேட்டு கண்ணீரோடு ஜெபிக்க வேண்டியதாயிற்று. என் மகளும் மருமகனும் எப்போதும் என்னோடு பேச்சுத்தொடர்பு வைத்துக்கொள்கிறார்கள். அவர்கள் ரொம்ப பிஸியாக இருப்பார்கள் என்று எனக்கு தெரியும், ஆனால் அவர்கள் எங்கு சேவை செய்தாலும், எனக்காக நேரமெடுத்து வெளி ஊழியத்தில் கிடைத்த அனுபவங்களை எழுதி அனுப்புகிறார்கள். அவர்கள் எழுதும் கடிதங்களை நான் திரும்பத் திரும்ப வாசிக்கிறேன். இது வாரா வாரம் அவர்கள் என்னிடம் நேரில் பேசுவதுபோல் இருக்கிறது, அதற்கு நான் ரொம்பவே நன்றியுள்ளவளாக இருக்கிறேன். அதுமட்டுமல்ல, என்னைப் போன்ற வயதானவர்களுக்கும் சுகவீனருக்கும் தேவையான காரியங்களை சபையிலுள்ள மூப்பர்கள் கவனித்துக்கொள்கிறார்கள்; சபைக் கூட்டங்களுக்கு செல்வதற்கு போக்குவரத்து வசதியை செய்து கொடுக்கிறார்கள், எங்களுடைய மற்ற தேவைகளையும் கவனித்துக்கொள்கிறார்கள். ஆவிக்குரிய சகோதர சகோதரிகளையும் யெகோவா கொடுத்த பரிசாகவே நான் கருதுகிறேன்.”

நீங்களும் தனிமையுணர்வை சமாளிக்கலாம்

இளைஞரோ முதியவரோ, மணமாகாதவரோ மணமானவரோ, பெற்றோரை உடையவரோ அனாதையோ, அன்பானவரை இழந்தவரோ அல்லது ஏதோவொரு தனிமையுணர்வில் தத்தளிப்பவரோ, நீங்கள் யாராக இருந்தாலும் சரி உங்களுடைய உணர்ச்சிகளை சமாளிப்பதற்கு வழிகள் இருக்கின்றன. ஹோக்கபெட் என்ற 18 வயது இளைஞியின் அப்பா தன் வீட்டிலுள்ள ஆறு பேரையும் அம்போவென விட்டுவிட்டு வேறொரு நாட்டிற்கு போய்விட்டார். அவள் இவ்வாறு ஆலோசனை சொல்கிறாள்: “மனந்திறந்து பேசுங்கள்! நம்முடைய எண்ணங்களை வெளிப்படுத்துவது முக்கியம். இல்லையென்றால், நம்மைப் பற்றி யாரும் புரிந்துகொள்ளப் போவது கிடையாது.” அவள் மேலுமாக இவ்வாறு பரிந்துரைக்கிறாள்: “உங்களைப் பற்றியே ரொம்ப யோசித்துக் கொண்டிருப்பதை நிறுத்துங்கள். அனுபவமுள்ளோரின் உதவியை நாடுங்கள்; உதவிக்காக இளைஞரிடம் போகாதீர்கள், அவர்கள் நிலைமை உங்களைவிட மோசமாக இருக்கலாம்.” முன்பு குறிப்பிட்ட லூயிஸா இவ்வாறு சொல்கிறாள்: “மனந்திறந்து யெகோவாவிடம் ஜெபம் செய்வது, இனி வேறு வழியேயில்லை என்ற எண்ணத்திலிருந்து விடுபட உதவுகிறது.” மனைவியை இழந்த கார்கே தனிமையுணர்வை எப்படி சமாளிக்கிறார் என்பதை இவ்வாறு குறிப்பிடுகிறார்: “மனவுறுதியுடன் இருப்பது அவசியம். பிறரிடம் அக்கறை காட்டுவது எனக்கு பெரிதும் உதவுகிறது. மற்றவர்களிடம் பேசுகையில் ‘இரக்கம்’ அல்லது அனுதாபம் காட்டுவது நமது உரையாடலை அர்த்தமுள்ளதாக்கும், மற்றவர்களிடமுள்ள அருமையான குணங்களை அறிந்துகொள்ளவும் உதவும்.”​—1 பேதுரு 3:8.

தனிமையுணர்வை விரட்ட அநேக காரியங்களை செய்ய முடியும். தனிமையுணர்வே இல்லாத காலம் எப்போதாவது வருமா? அத்தகைய காலம் வருமென்றால், அது எப்படி வரும்? அடுத்த கட்டுரையில் பதில்களைக் காணலாம். (g04 6/8)

[அடிக்குறிப்பு]

a சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

[பக்கம் 8-ன் சிறு குறிப்பு]

“மனந்திறந்து யெகோவாவிடம் ஜெபம் செய்வது, இனி வேறு வழியேயில்லை என்ற எண்ணத்திலிருந்து விடுபட உதவுகிறது.”​—⁠லூயிஸா

[பக்கம் 7-ன் பெட்டி/படங்கள்]

தனிமையுணர்வை சமாளிக்க வழிகள்

◼ உங்கள் சூழ்நிலை மாறலாம், அது அப்படியே இருக்கப் போவதில்லை, அதேசமயத்தில் மற்றவர்களும் இதே போன்ற சூழ்நிலையை எதிர்ப்படுகிறார்கள் என்பதை நினைவில் வையுங்கள்.

◼ சக்திக்கு மிஞ்சியதை உங்களிடமிருந்து எதிர்பார்க்காதீர்கள்.

◼ உங்களைக் குறித்து திருப்தியாக உணருங்கள்.

◼ சாப்பிடுவதிலும் உடற்பயிற்சி செய்வதிலும் நல்ல பழக்கங்களை வளர்த்துக்கொள்ளுங்கள், போதுமானளவு தூங்குங்கள்.

◼ தனிமையாக இருக்கையில் புதுப்புது படைப்புகளை உருவாக்குவது, புதிய திறமைகளை வளர்த்துக்கொள்வது போன்ற காரியங்களுக்காக நேரத்தை செலவிடுங்கள்.

◼ உங்கள் கடந்த கால அனுபவத்தை வைத்து நீங்கள் சந்திக்கும் ஆட்களை எடைபோடாதீர்கள்.

◼ உங்களுடைய நண்பர்களையும் அவர்களுடைய சிறந்த குணங்களையும் உயர்வாக மதிப்பிடுங்கள். ஒரு நல்ல நட்பு வட்டத்தை அமைத்துக்கொள்ள முயலுங்கள். அனுபவமிக்க பெரியவர்களுடைய கருத்துக்களை கேளுங்கள்.

◼ மற்றவர்களுக்காக எதையாவது செய்யுங்கள்​—⁠அவர்களைப் பார்த்து புன்முறுவல் பூக்கலாம், கனிவாக ஓரிரு வார்த்தைகள் சொல்லலாம், பைபிளிலிருந்து ஒரு விஷயத்தை பகிர்ந்து கொள்ளலாம். நாம் மற்றவர்களுக்கு தேவை என்ற நினைப்பே தனிமையுணர்வை தணிக்கும் அருமருந்தாகும்.

◼ சினிமா அல்லது டிவி நட்சத்திரங்களுடனோ, இன்டர்நெட் அல்லது நாவல்களில் வரும் கதாபாத்திரங்களுடனோ உறவை வளர்த்துக்கொள்வதைப் போல் கற்பனை செய்யாதீர்கள்.

◼ நீங்கள் மணமானவரென்றால், உங்கள் எல்லா உணர்ச்சிப்பூர்வ தேவைகளையும் நிறைவு செய்யும்படி துணையிடம் எதிர்பார்க்காதீர்கள். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கவும், கைகொடுத்து ஆதரிக்கவும் கற்றுக்கொள்ளுங்கள்.

◼ பிறரிடம் பேசவும் அவர்கள் சொல்வதை காதுகொடுத்துக் கேட்கவும் கற்றுக்கொள்ளுங்கள். மற்றவர்களிடத்திலும் அவர்களுக்கு ஆர்வமூட்டுகிற விஷயங்களிலும் கவனம் செலுத்துங்கள். அனுதாபம் காட்டுங்கள்.

◼ நீங்கள் தனிமையாக உணருவதை ஒத்துக்கொண்டு, நம்பகமான முதிர்ச்சியுள்ள ஒரு நண்பரிடத்தில் அதைப் பற்றி பேசுங்கள். மற்றவர்களிடத்தில் சொல்லாமல் தனிமையில் தவிக்காதீர்கள்.

◼ மட்டுக்கு மீறி மது அருந்தாதீர்கள் அல்லது குடிக்கவே குடிக்காதீர்கள். மதுபானம் அருந்துவதால் உங்களுடைய பிரச்சினை தீர்ந்துவிடாது. சில காலத்திற்குப் பிறகு மீண்டும் அது தலைதூக்கும்.

◼ பெருமையை தவிர்த்திடுங்கள். உங்களை புண்படுத்துகிறவர்களை மன்னியுங்கள், உறவை புதுப்பிக்க முயலுங்கள். பதிலடி கொடுக்க சந்தர்ப்பம் பார்த்து காத்திராதேயுங்கள்.

[பக்கம் 6-ன் படம்]

தனிமையுணர்வை ஒருவர் எப்படி சமாளிக்கலாம்?