Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

போர்க்கால கஷ்டங்கள் பிற்கால வாழ்க்கைக்கு கைகொடுத்தன

போர்க்கால கஷ்டங்கள் பிற்கால வாழ்க்கைக்கு கைகொடுத்தன

போர்க்கால கஷ்டங்கள் பிற்கால வாழ்க்கைக்கு கைகொடுத்தன

எர்ன்ஸ்ட் க்ரோமர் சொன்னது

“இதுதான் உங்க ரூம்.” மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள காபோனில் இந்த வார்த்தைகளே என்னையும் என் பார்ட்னரையும் வரவேற்றன. ஒரேவொரு படுக்கை விரிக்குமளவுக்கே அந்த அறை இருந்தது. அந்த அறையில் ஆறு மாதங்கள் தங்கினோம்.

இரண்டாம் உலகப் போரின்போது நான் ஒரு பண்ணையில் வாழ்ந்து வந்தேன். அந்த சமயத்தில் நான் பட்ட கஷ்டங்கள் பிற்காலத்தில் கடினமான சூழ்நிலைகளை சமாளிக்க எனக்கு கைகொடுத்தன. 1939-⁠ல் போர் துவங்கியவுடன், விரைவிலேயே போலந்தை நாசி ஜெர்மனி கைப்பற்றியது. அப்போது எனக்கு நான்கு வயது. எங்கள் வீட்டில் அம்மா அப்பாவைச் சேர்த்து நாங்கள் மொத்தம் ஏழு பேர். எனக்கு இரண்டு அக்கா, ஒரு தம்பி, ஒரு தங்கை. போரில் ஜெர்மனி தோற்றுவிட்டால் கஷ்டகாலம்தான். ஆகவே அதை சந்திக்க தயாராகும்படி அப்பா எங்களை எச்சரித்தார்.

நாங்கள் லோவர் சைலீஸியாவில் லோவன்ஸ்டைன் என்ற ஒரு சிறிய ஜெர்மானிய கிராமத்தில் வாழ்ந்து வந்தோம். இது இப்போது போலந்துக்குச் சொந்தமாக உள்ளது. சுமார் 60 ஏக்கர் பரப்பிலிருந்த எங்களது பண்ணை நிலத்தில் உணவு தானியங்களை பயிரிட்டோம், கால்நடைகளையும் வளர்த்தோம். அப்பகுதியிலுள்ள பண்ணையாட்களுக்கு தலைவராகவும் அப்பா வேலை பார்த்தார். நாசிக்கள் சைலீஸியாவை கைப்பற்றியபோது, போருக்கு ஆதரவளிக்குமாறு அங்கிருந்த பண்ணையாட்களை ஒன்றுதிரட்ட அப்பாவை அவர்கள் உபயோகித்தனர்.

முதல் உலகப் போரின்போது அப்பா குதிரைப் படையில் சேவை செய்திருந்தார். இப்போதோ நாசிக்களுடைய அரசாங்கத்தின் கீழ் வேலை பார்த்ததால் அந்த இராணுவ சேவையிலிருந்து தப்பித்துக்கொண்டார். என்னுடைய பெற்றோர் பல வருஷங்களுக்கு முன்பே சர்ச்சோடு இருந்த தொடர்பை துண்டித்திருந்தனர். ஏனென்றால் முதல் உலகப் போரின்போது மத குருமார் நடந்துகொண்ட விதம் அவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்திருந்தது. அதனால் நானும் மதப்பற்று என்பதே இல்லாமல் வளர்ந்தேன்.

1941-⁠ல் நான் ஸ்கூலில் சேர்ந்தேன். ஆனால் எனக்கு ஸ்கூலுக்குப் போகவே பிடிக்கவில்லை. ப்ளாக்போர்ட்டையே பார்த்துக் கொண்டிருப்பதைவிட ஆர்வமூட்டும் வேறு பல காரியங்களை செய்யலாமே என்று நினைத்தேன். 1945-ஆம் ஆண்டின் துவக்கத்தில், அதாவது போர் முடிவடைய ஒரு சில மாதங்கள் இருக்கையில், லோவர் சைலீஸியாவின் தலைநகரான பிரஸ்லாவை (இப்போது வ்ராட்ஸ்லேவ்) ரஷ்யர்கள் கைப்பற்றினர். ஒருநாள் சனிக்கிழமை சாயங்காலம் கிட்டத்தட்ட 50 கிலோமீட்டர் தூரத்தில் பார்த்தபோது, பீரங்கி குண்டுகளாலும் விமானத்திலிருந்து பொழிந்த குண்டுகளாலும் அந்த நகரம் அப்படியே தீப்பிழம்பாக ஜொலித்தது. உடனடியாக நாங்கள் மலைகளுக்கு ஓடிப்போக வேண்டியதாயிற்று. போர் முடிந்ததும் லோவன்ஸ்டைனிலுள்ள எங்கள் வீட்டிற்கு திரும்பி வந்தோம்.

போருக்குப் பின்

போருக்குப் பின் நிலைமை படுமோசமடைந்தது. பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள், கொள்ளையடிப்பது அன்றாட சம்பவமாயிற்று. எங்களுடைய கால்நடைகள் பெரும்பாலானவை களவுபோயின.

ஜூலை 1945-⁠ல் அப்பா கைது செய்யப்பட்டார். ஏழு நாட்கள் இரவு கடும் விசாரணைக்கு உள்ளான பிறகு அவர் விடுதலை செய்யப்பட்டார். மூன்று மாதங்களுக்கு பிற்பாடு மீண்டும் கைது செய்யப்பட்டு எங்கோ கண் காணாத இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். அதன் பிறகு அப்பாவை நாங்கள் பார்க்கவே இல்லை. போலந்தைச் சேர்ந்த இருவர் எங்களது பண்ணையை அபகரித்து அதை சொந்தம் கொண்டாடினார்கள். ஏப்ரல் 1946-⁠ல் தங்களால் எடுக்க முடிந்த பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு வெளியேறும்படி அந்த கிராமத்தில் இருந்த ஜெர்மானியரிடம் சொல்லப்பட்டது.

இப்படியொரு நிலைமையை சந்திக்க அம்மா எங்களை தயார்படுத்தியிருந்ததால் நாங்கள் பீதியடையவில்லை. சக்கரம் பொருத்தப்பட்ட ஒரு பெரிய கூடையில் படுப்பதற்கு தேவையானவற்றை அம்மா வைத்துக்கொண்டார்கள். நாங்கள் ஒவ்வொருவரும் எங்களுக்குத் தேவையானவற்றை ஆளுக்கொரு தோள்பையில் நிரப்பிக் கொண்டோம். போலந்து படையினர் மிருகங்களை ஏற்றும் இரயில் பெட்டிகளில்​—⁠ஒரு பெட்டியில் 30 பேர் வீதம்​—⁠எங்களை கும்பலாக அடைத்தார்கள். சுமார் இரண்டு வாரங்களுக்கு பிறகு, வடமேற்கு ஜெர்மனியில் நாங்கள் போய்ச் சேரவேண்டிய இடத்தை அடைந்தோம்; அது நெதர்லாந்துக்கு அருகேயுள்ள இடம்.

அந்த அரசாங்கம், உறவினர்கள் உட்பட எங்கள் குடும்பத்துக்கு​—⁠மொத்தம் 19 பேருக்கு​—⁠ஒரு பண்ணையைச் சேர்ந்த இரண்டு அறைகளை கொடுத்தது. அப்பண்ணை க்வாக்கன்ப்ரூக்கிலிருந்து சுமார் எட்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்தது. பிற்பாடு, எங்களுடைய உறவினரில் சிலருக்கு மற்ற பண்ணையாட்களோடு தங்குவதற்கு இடம் கிடைத்தது, அதனால் சற்று இட நெரிசல் குறைந்தது.

பிள்ளைகளான எங்களுக்காக அம்மா செய்த தியாகங்கள் கொஞ்சநஞ்சமல்ல. பெரும்பாலான சமயங்களில் தன் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி எங்களுக்கு சாப்பாடு கொடுத்தார்கள். அங்கு சென்ற பிறகு வந்த முதல் குளிர்காலத்தில் எங்களுக்கு விறகு கிடைக்கவில்லை. சுவரிலும் கூரையிலும் கெட்டியாக பனிக்கட்டி படிந்திருந்தது. எங்களுடைய அறைகள் பார்ப்பதற்கு பனிக்குகைகள் போல இருந்தன. நல்ல வேளையாக தூங்குவதற்கு கதகதப்பான படுக்கை இருந்ததால் நாங்கள் தப்பித்தோம்.

யெகோவாவின் சாட்சிகளோடு தொடர்பு

சுமார் 1949-⁠ல் எங்களுடைய ஒரு அத்தையிடமிருந்து அம்மாவுக்கு காவற்கோபுரம் பத்திரிகை ஒன்று கிடைத்தது. அதிலிருந்த ஒரு கட்டுரை அம்மாவுக்கு ஒரு விஷயத்தை நினைவுபடுத்தியது. அதாவது போர் நடந்த சமயத்தில் ஜெர்மனியின் வீழ்ச்சியை முன்னறிவித்த ‘ஒரு குறிப்பிட்ட பிரிவினரை’ கண்டித்து ஹிட்லர் ரேடியோவில் பேசிய விஷயம் அம்மாவுடைய நினைவுக்கு வந்தது. இந்த ஆட்கள் யாராக இருக்கும் என அந்த சமயத்தில் அம்மா யோசித்ததுண்டு. அவர்கள் யெகோவாவின் சாட்சிகளே என்பதை அந்த காவற்கோபுரத்திலிருந்து வாசித்து அறிந்ததானது, அம்மாவின் ஆர்வத்தை தூண்டியது; அவர்களோடு பைபிளை படிக்க வேண்டுமென்று அம்மா முடிவு செய்தார்.

ஏப்ரல் 1954-⁠ஆம் ஆண்டு ஒரு நாள், யெகோவாவின் சாட்சிகளான ஒரு தம்பதியரை சந்தித்தேன்; அவர்கள் அம்மாவோடு பைபிள் படிப்பை நடத்திக் கொண்டிருந்தார்கள். பைபிள் படிப்புக்கு பிறகு, அவர்களிடமிருந்து நீங்கள் பூமியில் என்றென்றும் மகிழ்ச்சியோடு வாழ முடியுமா? (ஆங்கிலம்) என்ற சிறு புத்தகத்தையும் காவற்கோபுர பத்திரிகைக்கு ஒரு சந்தாவையும் பெற்றுக்கொண்டேன். அந்த சிறு புத்தகத்தை வாசித்ததும் இதுதான் சத்தியம் என்பது எனக்கு உறுதியாயிற்று. அதனால் அதை வாசிக்கும்படி என் முதலாளியிடம் கொடுத்தேன். இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என அவரிடம் நான் கேட்டபோது, “இதிலுள்ள கருத்துக்கள் எல்லாம் ரொம்ப பிரமாதமாக இருக்கிறது, ஆனால் நம்புவதற்குத்தான் கஷ்டமாக இருக்கிறது. என்னால் இதை நம்பவே முடியவில்லை” என்று சொன்னார்.

“ஆனால், இதுதான் சத்தியம் என்று எனக்கு உறுதியாகிவிட்டதால் அதைத்தான் நான் பின்பற்றப் போகிறேன்” என அவரிடம் சொன்னேன். அவர் தலையை அசைத்தவாறே, “சாந்தமான ஆட்களுக்குத்தான் இந்த செய்தி. உன்னைப் போன்ற காட்டுமிராண்டிகள் ஒரு யெகோவாவின் சாட்சியாக ஆக முடியாது” என்று சொன்னார். என்றாலும் நான் என்னுடைய வாழ்க்கையில் மாற்றங்கள் செய்ய ஆரம்பித்தேன்.

அப்பகுதியில் யெகோவாவின் சாட்சிகள் யாரும் இல்லாதபோதிலும் நான் தனியாகவே பைபிள் படித்தேன்; அவர்களுடைய கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக ஒவ்வொரு வாரமும் சைக்கிளில் சுமார் பத்து கிலோமீட்டர் தூரம் சென்றேன். பிற்பாடு, ஒரு வட்டார மாநாட்டிற்கு சென்றேன்; அங்கே பல சபைகளைச் சேர்ந்த சாட்சிகள் வணக்கத்திற்காக கூடிவந்திருந்தார்கள். அங்குதான் முதன்முதலாக மற்ற சாட்சிகளுடன் வெளி ஊழியத்தில் பங்குகொண்டேன். சீக்கிரத்தில் இந்த ஊழியத்தை தவறாமல் செய்யத் தொடங்கினேன். ஜூலை 14, 1954-⁠ல் அம்மாவும் நானும் முழுக்காட்டுதல் பெற்றோம். பிற்பாடு, என்னுடைய அம்மா வழி பாட்டி தனது 80-⁠ம் வயதில் ஒரு யெகோவாவின் சாட்சி ஆனார்.

நான் வேலை பார்த்த பண்ணையில் ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் பாடுபட வேண்டியிருந்தது; அதனால் அந்த வேலையை விட்டுவிட்டேன். பிற்பாடு வன ஒதுக்கீட்டுப் பகுதி ஒன்றில் வேலை கிடைத்தது. அதன் பிறகு, எங்களுடைய குடும்பம் ஸ்டுட்கார்ட்டுக்கு அருகிலுள்ள சிறிய டவுனாகிய ராய்ட்லிங்கனுக்கு குடிமாறியது. அங்கேதான் என் தங்கை இங்ரிட்டும் ஒரு யெகோவாவின் சாட்சியாக ஆனாள். என் உடன்பிறப்புகளில் இவள் மட்டுமே ஒரு சாட்சியானாள்.

முழுநேர ஊழியம்

அப்பா இறந்துவிட்டார் என்பதை சட்டப்பூர்வமாக பதிவு செய்ய அம்மா பல வருடங்களாக முயற்சி செய்தபின் கடைசியாக 1957-⁠ல் பலன் கிடைத்தது. அதனால், அம்மாவுக்கு பென்ஷன் கிடைக்க ஆரம்பித்தது. பென்ஷன் கிடைத்ததால் என்னுடைய உதவியின்றி அம்மா குடும்பச் செலவுகளைப் பார்த்துக்கொண்டார். குடும்பச் சுமை இல்லாததால் நான் ஒரு பகுதி நேர வேலையை பார்த்துக்கொண்டே ஏப்ரல் 1957-⁠ல் ஒரு பயனியராக முழுநேர ஊழியத்தை ஆரம்பித்தேன். அடுத்து, விசேஷ பயனியராக சேவை செய்வதற்கு அழைப்பு கிடைத்தது. இந்த விஷயத்தை அறிந்த ஒரு சக சாட்சி என்னை அவருடைய அலுவலகத்திற்கு அழைத்து, “உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்படும் என்று எனக்கு தெரியும்” என சொல்லி 500 டாயிச் மார்க்ஸ் பணத்தை தந்தார். இந்தப் பணத்தைக் கொண்டு எனக்கு வேண்டிய டிரஸ் எல்லாம் வாங்கினேன், இன்னும் மீதியாக 200 மார்க்ஸ் என்னிடம் இருந்தது.

1960-⁠ல் ஆஸ்திரியாவில் வாலண்டியராக சேவை செய்ய முன்வந்தேன். அங்கே ஷைப்ஸ் என்ற சிறிய கிராமத்தில் பிரசங்கித்து அதிக மகிழ்ச்சியடைந்தேன், லின்ஜ் என்ற நகரத்திலும் கொஞ்ச காலத்திற்கு ஊழியம் செய்தேன். ஆனால் அந்த வருஷ கடைசியில், ஒரு மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்தேன், எனது வலது காலில் முறிவு ஏற்பட்டது. பல ஆபரேஷன்களுக்கு பிறகு, என்னுடைய சேவையை மீண்டும் தொடர முடிந்தது. என்றாலும், 1962-⁠ல் பிற நாட்டில் குடியேறுவது சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் காரணமாக ராய்ட்லிங்கனுக்கு திரும்பிப் போக வேண்டியதாயிற்று. அங்கிருந்த சமயத்தில் என்னுடைய காலில் பொருத்தப்பட்டிருந்த உலோகத் துண்டை எடுப்பதற்காக மறுபடியும் ஒரு ஆபரேஷன் செய்ய வேண்டியிருந்தது. மருத்துவ செலவுகளை ஈடுகட்டுவதற்கு சம்பாதிக்க வேண்டியிருந்ததால் ஆறு மாதத்திற்கு பயனியர் சேவையை நிறுத்தி விட்டேன்.

என்னுடைய சபைக்கு பயணக் கண்காணி விஜயம் செய்த சமயத்தில், ஜெர்மனியிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்தில் சேவை செய்வதற்கு விண்ணப்பிக்கும்படி எனக்கு ஆலோசனை கூறினார். கிளை அலுவலகம் அப்போது வீஸ்பேடனில் இருந்தது. அவர் சொன்னபடியே விண்ணப்பித்தேன்; இரண்டு வாரங்களுக்குப் பிறகு கூடிய சீக்கிரம் அங்கு வரும்படி தந்தி வந்தது. ஒரு வாரத்திற்குப் பின் மே 1963-⁠ல் பெத்தேல் என அழைக்கப்படும் ஜெர்மனி கிளை அலுவலகத்தில் கால் பதித்தேன். அங்கே பத்திரிகைகளை அச்சடிக்கும் ரோட்டரி பிரஸ்ஸில் வேலை செய்தேன்.

ஊக்கமாக கற்றுக்கொண்டேன்

இதுவரை வாழ்ந்ததிலேயே பெத்தேல்தான் எனக்கு மிகவும் பிடித்த இடமாக இருந்தது; சீக்கிரத்தில் அங்கு செய்யப்பட்ட கடின வேலைக்கு ஏற்ப என்னை மாற்றிக்கொண்டேன். 1965-⁠ல் ஸ்பெயினுக்கு விஜயம் செய்து அங்கு பைபிள் பிரசுரங்களை இரகசியமாக கொண்டு சென்றேன். ஏனெனில் அந்நாட்டில் அப்போது பிரசங்க வேலை தடை செய்யப்பட்டிருந்தது. அங்கு விஜயம் செய்ததால் வேறொரு மொழியை கற்றுக்கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் என்னில் துளிர்த்தது. ஆகவே ஆங்கிலத்தை கற்றுக்கொள்ள விரும்பினேன். கிடைத்த எல்லா சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தி அதைப் படித்தேன். ஏறக்குறைய இந்த சமயத்தில்தான் முதன்முதலாக ஜெர்மனியில் ஆங்கிலம் பேசும் தொகுதி ஒன்று உருவானது, நானும் அந்தத் தொகுதியோடு சேர்ந்துகொண்டேன். முதன்முதலில் காவற்கோபுர படிப்புக் கட்டுரையை நான் ஆங்கிலத்தில் படித்தபோது, அதை முடிப்பதற்கு ஏழு மணிநேரம் எடுத்தது. இரண்டாவது முறை படித்தபோது ஐந்து மணிநேரம்தான் எடுத்தது, எனவே நான் முன்னேறி வருவதை உணர்ந்தேன்.

1966-⁠ல் 43-வது கிலியட் வகுப்பில் கலந்துகொள்ளும்படி அழைப்பு வந்தது. இது மிஷனரி வேலையில் யெகோவாவின் ஊழியர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக அமெரிக்காவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒரு பள்ளியாகும். அதில் பட்டம் பெற்ற பிறகு, ஏப்ரல் 1967-⁠ல் குன்ட்டர் ரெஷ்காவும் நானும் மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள காபோனுக்கு நியமிக்கப்பட்டோம். அதன் தலைநகரான லிப்ரேவிலுக்கு நாங்கள் போய் சேர்ந்தபோதுதான் ஆரம்பத்தில் சொன்ன அந்தக் குட்டி அறையில் தங்கினோம். எங்களுடைய உடைகளையோ சாப்பாட்டு அறையில் தொங்கவிட்டோம். ஆறு மாதங்களுக்கு பிறகு மற்றொரு மிஷனரி இல்லத்திற்கு குடிமாறினோம்.

காபோனில் பிரெஞ்சு மொழியை கற்றுக்கொள்வது எனக்கு ஒரு பெரும் பாடாக இருந்தது. ஒருவழியாக கடும் முயற்சி செய்து ஓரளவுக்கு அதைக் கற்றுக்கொண்டேன். அடுத்து 1970-⁠ல் காபோனில் திடீரென பிரசங்க வேலை தடை செய்யப்பட்டது. இரண்டு வாரங்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறும்படி மிஷனரிகள் எல்லாருக்கும் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

மத்திய ஆப்பிரிக்க குடியரசுக்கு

மற்ற மிஷனரிகளோடு சேர்ந்து நானும் மத்திய ஆப்பிரிக்க குடியரசுக்கு நியமிக்கப்பட்டேன். பிரெஞ்சு மொழி அந்நாட்டின் ஆட்சி மொழியாக இருந்தது. ஆனால் அங்குள்ள பெரும்பாலான மக்களிடம் பிரசங்கிப்பதற்கு சாங்கோ மொழியை கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. தலைநகரான பங்குய்யிலிருந்து சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பம்பாரி என்ற டவுனில் ஒரு மிஷனரி இல்லத்தை நிறுவுவதற்கு நாங்கள் அனுப்பப்பட்டோம். பம்பாரியில் மின்வசதியும் இல்லை, வீட்டிற்குள் தண்ணீர் வசதியும் இல்லை; ஆனால் அங்கிருந்த இரண்டு சபைகளுக்கு எங்களுடைய உதவி தேவைப்பட்டது. ஐரோப்பாவில் போர்க் காலத்தின்போது எனக்கு கிடைத்த அனுபவமே பம்பாரியில் மட்டுமல்ல பிற்பாடு சென்ற பிற இடங்களிலும் இருந்த சூழ்நிலைகளை எளிதில் சமாளிக்க உதவியது.

பம்பாரியில் இரண்டு வருஷம் சேவை செய்த பிறகு, ஒரு பயணக் கண்காணியாக சபைகளை சந்திப்பதற்கு நியமிக்கப்பட்டேன். அந்நாட்டில் சுமார் 40 சபைகள் இருந்தன. எனக்கு நியமிக்கப்பட்ட ஒவ்வொரு சபைக்கும் சென்று அங்கு ஒருவாரம் சேவை செய்வேன். என்னிடம் ஒரு சிறிய கார் இருந்தது. ஆனால் மிக மோசமான மண் ரோடாக இருந்தால், பொது போக்குவரத்தில் தான் சென்றுவருவேன்.

அந்த நாட்டிலேயே பங்குய்யில் மட்டும்தான் வண்டிகளை பழுதுபார்ப்பதற்கான இடம் இருந்தது. என்னுடைய சேவைக்காக தூர தூரமான இடங்களுக்கு பயணம் செய்ய வேண்டியிருந்ததால், வண்டியை பழுதுபார்ப்பது சம்பந்தமான சில புத்தகங்களையும், கருவிகளையும் வாங்கினேன். காரில் ஏற்பட்ட பெரும்பாலான ரிப்பேர்களை நானே செய்தேன். ஒரு சமயம் ட்ரைவ் ஷாஃப்ட்டில் உள்ள யுனிவர்ஸல் பேரிங்கின் ஹௌஸிங் முறிந்துவிட்டது; அதனால் கார் நகராமல் நின்றுவிட்டது. நானோ வீடுகள் இருந்த பகுதியிலிருந்து 60 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தேன். காட்டிலிருந்து வைரம் பாய்ந்த மரக்கட்டை ஒன்றை வெட்டிக் கொண்டுவந்து செதுக்கி அதை பேரிங்கின் ஹௌஸிங்காக பொருத்தினேன். நிறைய க்ரீஸ் தேய்த்து, அதைக் கம்பியால் ட்ரைவ் ஷாஃப்ட்டுடன் இணைத்துக் கட்டி ஒருவழியாக என் பயணத்தைத் தொடர்ந்தேன்.

முக்கியமாக, காட்டுப்பகுதியில் அல்லது கிராமப் பகுதியில் சேவை செய்வதுதான் ரொம்பவே கஷ்டமாக இருந்தது. ஏனென்றால் அங்கு அவ்வளவாக யாருக்கும் எழுதப் படிக்கத் தெரியாது. அங்கிருந்த ஒரு சபையில் ஒருவருக்கு மட்டுமே வாசிக்க தெரிந்திருந்தது, ஆனால் அவருக்கோ பேச்சுக் கோளாறு இருந்தது. காவற்கோபுர படிப்பு ரொம்பவே கஷ்டமாக இருந்தது, ஆனால் அதிலுள்ள குறிப்புகளை புரிந்துகொள்ள அவர்கள் எடுத்த உண்மையான முயற்சியை பார்த்தது விசுவாசத்தை பலப்படுத்துவதாக இருந்தது.

முழுமையாக புரிந்துகொள்வதற்கு கடினமாக இருந்த பாடங்களிலிருந்து ஏதாவது பிரயோஜனம் இருந்ததா என அந்தத் தொகுதியினரிடம் பின்னர் கேட்டேன். அவர்கள் சொன்ன பதிலோ என் மனதைத் தொட்டது: “ஒருவருக்கொருவர் அளிக்கும் உற்சாகம் எங்களுக்கு கிடைக்கிறதே!”​—எபிரெயர் 10:23-25.

எனது கிறிஸ்தவ சகோதரர்கள் பலரும் படிப்பறிவில்லாதவர்களாக இருந்தாலும், வாழ்க்கையைப் பற்றியும் வாழ்வதைப் பற்றியும் அநேகத்தை அவர்கள் எனக்கு கற்றுக்கொடுத்தார்கள். ‘பிறரை தங்களிலும் மேலானவர்களாக எண்ணுவதைப்’ பற்றிய பைபிள் ஆலோசனையின் முக்கியத்துவத்தை நான் மதித்துணர்ந்தேன். (பிலிப்பியர் 2:3) எனது ஆப்பிரிக்க சகோதரர்கள் அன்பு, தயவு, உபசரிப்பு ஆகியவற்றைப் பற்றியும் அந்தக் காட்டுப் பகுதியில் எப்படி உயிர்வாழ்வது என்பது பற்றியும் நிறைய கற்றுக்கொடுத்தார்கள். கிலியட் பள்ளியின் பிரிவுபசார பேச்சில் அப்போது அந்தப் பள்ளி பிரஸிடென்டாக இருந்த சகோதரர் நேதன் நார் சொன்ன வார்த்தைகளின் அர்த்தத்தை இந்த சந்தர்ப்பத்தில்தான் அதிகமாக உணர்ந்தேன். “எங்களுக்கு எல்லாம் தெரியும் என நினைக்காமல் தாழ்மையோடிருங்கள். நமக்கு எல்லாமே தெரியாது. கற்றுக்கொள்ள வேண்டியவை நிறைய இருக்கின்றன” என அவர் சொல்லியிருந்தார்.

ஆப்பிரிக்க காட்டில் வாழ்க்கை

ஒவ்வொரு சபையாக சென்ற சமயத்தில் நான் உள்ளூர் சகோதரர்களுடன் தங்கினேன். பொதுவாக நான் சபைக்கு விஜயம் செய்யும் வாரம், முக்கியமாக பிள்ளைகளுக்கு பல்வகையான ஒரு திருவிழா போல் இருந்தது. ஏனென்றால் அந்தச் சபையை சேர்ந்தவர்கள் வேட்டைக்கு அல்லது மீன்பிடிக்க சென்று, எல்லாருக்குமாக தினமும் ஏராளமான உணவை தயாரிப்பார்கள்.

அந்த சகோதரர்களோடு சேர்ந்து குடிசைகளில் வாழ்ந்து, கறையான் முதல் யானைக் கறி வரை எல்லாவற்றையுமே சாப்பிட்டேன். குரங்குக் கறி இல்லாத நாளே இருக்காது. எல்லாவற்றையும்விட காட்டுப் பன்றிக் கறியும் முள்ளம் பன்றிக் கறியும் ரொம்ப ருசியாக இருந்தன. ஆனால், தினமும் அப்படியொரு பெரிய விருந்து ஏற்பாடு செய்யப்படவில்லை. கண்ட உணவையெல்லாம் சாப்பிட்டதால் ஆரம்பத்தில் அவை என் உடம்புக்கு ஒத்துக்கொள்ளவில்லை. கொஞ்ச காலம் கழித்து கிட்டத்தட்ட எந்த உணவை சாப்பிட்டாலும் ஒன்றும் செய்யவில்லை, எல்லாமே நன்கு ஜீரணமானது. பப்பாளிப் பழத்தை அதிலுள்ள விதையோடு சாப்பிடுவது வயிற்றிற்கு நல்லது என்பதை அறிந்துகொண்டேன்.

காட்டுப் பகுதியில் எதிர்பாராத பல காரியங்கள் நடக்கலாம். ஒரு சந்தர்ப்பத்தில் அந்தக் காட்டுப் பகுதியில் வாழ்ந்த மக்கள் என்னை ஒரு மாமி-வாட்டர் என தவறாக நினைத்துவிட்டார்கள்; தண்ணீரில் குடியிருக்கும் செத்துப்போன ஒருவரின் வெள்ளைப் பேய் என்று அதற்கு அர்த்தமாம். அது ஒருவரை தண்ணீருக்குள் இழுத்து மூழ்கடித்துவிடும் என மக்கள் நம்பினார்கள். ஒருநாள் நான் குளத்தில் குளித்துவிட்டு வெளியே வந்தபோது, அங்கு தண்ணீர் எடுக்க வந்த சிறுமி என்னைக் கண்டதும் அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தாள். நான் ஒரு பேய் அல்ல என்றும், கடவுளைப் பற்றி பிரசங்கிப்பதற்காக வந்திருப்பவன் என்றும் அங்கிருந்த ஒரு யெகோவாவின் சாட்சி என்னைப் பற்றி அவர்களிடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர்கள் நம்பவில்லை. “போயும் போயும் ஒரு வெள்ளைக்காரர் இந்தக் காட்டில் வந்து குடியிருக்கவே மாட்டார்” என்று அவர்கள் விவாதித்தனர்.

பெரும்பாலும் நான் வெளியில்தான் படுத்தேன்; ஏனென்றால் வெளியே காற்று இதமாக இருந்தது. நான் போன இடமெல்லாம் ஒரு கொசு வலையை எடுத்துச் சென்றேன். ஏனென்றால் பாம்பு, தேள், எலி போன்றவற்றிலிருந்து அதுவே என்னை பாதுகாத்தது. பலமுறை இராணுவ எறும்புகள் படைதிரண்டு வந்திருக்கின்றன; அப்போதெல்லாம் இந்த கொசு வலையே என்னை பாதுகாத்தது. ஒருநாள் ராத்திரி டார்ச் லைட் அடித்துப் பார்த்தபோது கொசு வலை முழுக்க இந்த எறும்புகள் மொய்த்துக் கொண்டிருந்தன. நான் உடனே அங்கிருந்து ஓட்டம் பிடித்தேன். ஏனெனில், இந்த எறும்புகள் பார்ப்பதற்கு சிறிதாக இருந்தாலும் அவை சிங்கங்களையே கொன்றுவிடுபவை.

காங்கோ ஆற்றின் அருகே மத்திய ஆப்பிரிக்க குடியரசின் தென் பகுதியில் இருந்தபோது, அங்கிருந்த குள்ளர்களிடம் (Pygmies) பிரசங்கித்தேன்; அவர்கள் நிலத்தையே சார்ந்து பிழைப்பு நடத்துபவர்கள். அவர்கள் வேட்டையாடுவதில் கில்லாடிகள், எதை சாப்பிடலாம் எதை சாப்பிடக் கூடாது என்பதை அவர்கள் நன்றாக அறிந்து வைத்திருக்கிறார்கள். அவர்களில் சிலர் சாங்கோ மொழி பேசுபவர்கள்; அவர்கள் பைபிள் விஷயங்களை நன்கு செவிகொடுத்துக் கேட்பவர்கள். தங்களை மறுபடியும் வந்து சந்திக்க ஒத்துக்கொள்வார்கள், ஆனால் அங்கு செல்லும்போதோ அவர்கள் இருக்க மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் மற்றொரு இடத்திற்கு குடிபெயர்ந்திருப்பார்கள். நான் அங்கிருந்த சமயத்தில் அவர்களில் யாருமே ஒரு யெகோவாவின் சாட்சி ஆகவில்லை. ஆனால் பிற்பாடு காங்கோ குடியரசில் இருந்த குள்ளர்களில் சிலர் யெகோவாவின் சாட்சிகளாக மாறினார்கள் என்பதை கேள்விப்பட்டேன்.

மத்திய ஆப்பிரிக்க குடியரசில் ஐந்து வருஷம் வட்டாரக் கண்காணியாக சேவை செய்தேன். அப்போது அந்த நாடு நெடுக பிரயாணம் செய்து, பெரும்பாலும் காட்டுப் பகுதியில் இருந்த சபைகளுக்கு விஜயம் செய்தேன்.

நைஜீரிய கிளை அலுவலகத்தில்

மே 1977-⁠ல் நைஜீரியாவில் லாகோஸ்ஸிலுள்ள யெகோவாவின் சாட்சிகளின் கிளை அலுவலகத்தில் சேவை செய்வதற்கு அழைக்கப்பட்டேன். ஆப்பிரிக்காவிலேயே மக்கள் தொகை மிகுந்த இந்த இடத்தில் அப்போது கிட்டத்தட்ட 1,00,000 யெகோவாவின் சாட்சிகள் இருந்தனர். அந்தக் கிளை அலுவலகத்தில் சுமார் 80 பேர் சேவை செய்தனர். கராஜில் வேலை செய்யும்படி எனக்கு நியமிப்பு கிடைத்தது, வண்டிகளை சர்வீஸ் செய்வது போன்ற வேலைகள் அங்கு இருந்தன.

1979-⁠ல், பண்ணை வேலைக்கு​—⁠நான் ஐரோப்பாவில் இளைஞனாக இருந்த காலத்தில் செய்த அதே வேலைக்கு⁠—​நியமிக்கப்பட்டேன். கிளை அலுவலக அங்கத்தினருக்காக உணவுப் பொருட்கள் பயிரிடப்பட்ட அந்தப் பண்ணை நிலம் இலாரோவில், லாகோஸ்ஸிலிருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. வெப்பமண்டல மழைக்காட்டில் செய்யப்படும் விவசாயத்திற்கும் ஐரோப்பிய விவசாயத்திற்கும் வித்தியாசமிருந்ததை அப்போது நான் அறிந்துகொண்டேன். மூன்றரை வருஷம் அங்கு வேலை செய்த பிறகு, லாகோஸ்ஸுக்கு திரும்பினேன்; அங்கு மீண்டும் கராஜில் வேலை செய்தேன்.

1986-⁠ல் லாகோஸ்ஸிலிருந்து சுமார் 360 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இகேட்யூமாவுக்கு மாற்றப்பட்டேன். அங்கே புதிதாக ஒரு பெரிய கிளை அலுவலகத்தின் கட்டுமான வேலை நடைபெற்று வந்தது. அந்த அலுவலகம் ஜனவரி 1990-⁠ல் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதில் ஓர் அச்சகம், ஒரு சிறிய பண்ணை, 500 பேர் தங்கும் வசதி கொண்ட குடியிருப்பு கட்டடங்கள் உள்ளன. இவை யாவும் 140 ஏக்கர் நிலத்தில் இரண்டு மீட்டர் உயர சுற்றுச்சுவருக்குள் அமைந்துள்ளன. தற்போது இங்குள்ள பண்ணையையும் நிலத்தையும் சுமார் 35 பேர் கவனித்து வருகிறார்கள்; நான் அவற்றை மேற்பார்வை செய்கிறேன்.

இதுவரை சுமார் 27 வருஷங்களாக நைஜீரியாவில் வாழ்ந்து வருகிறேன். கிளை அலுவலகத்தில் எனக்கு கொடுக்கப்பட்ட பல நியமிப்புகளில் நான் உண்மையிலேயே மகிழ்ச்சி கண்டிருக்கிறேன். என்னுடைய அம்மா யெகோவாவிடம் விசுவாசத்தில் நிலைத்திருந்ததை நினைத்து சந்தோஷப்படுகிறேன். 14 வருஷங்களாக விசேஷ பயனியர் சேவை செய்துவரும் என் தங்கை இங்ரிட், இப்போதும் தன் கணவரோடு சேர்ந்து யெகோவாவை சேவிப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

நான் பட்ட கஷ்டங்களின் மத்தியிலும், யெகோவாவுக்கும் மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்த ஆன்மீக சகோதரர்களுக்கும் சேவை செய்வதில் உண்மையில் மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன். இன்று வரை நல்ல தேக ஆரோக்கியத்தோடு இருப்பதற்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன், நமது மகத்தான கடவுளாகிய யெகோவாவை தொடர்ந்து சுறுசுறுப்பாக சேவிப்பதற்கு அந்த ஆரோக்கியத்தைக் காத்துக்கொள்ள உதவுமாறும் ஜெபிக்கிறேன். (g04 6/22)

[பக்கம் 21-ன் தேசப்படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

நைஜீரியா

மத்திய ஆப்பிரிக்க குடியரசு

காபோன்

[படத்திற்கான நன்றி]

Mountain High Maps® Copyright © 1997 Digital Wisdom, Inc.

[பக்கம் 18-ன் படம்]

1939-⁠ல் என் அம்மா கெர்ட்ரூட் மற்றும் தங்கை இங்ரிட்டுடன்

[பக்கம் 20-ன் படம்]

காபோனில் மிஷனரியாக சேவிக்கையில்

[பக்கம் 20-ன் படம்]

மத்திய ஆப்பிரிக்க குடியரசில் இது போன்ற கிராமங்களில் தங்கினேன்