Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

மேகங்களும் யானைகளும்

மேகத்தின் எடை எவ்வளவு? ஒரு மேகக்குவியலில் சுமார் 550 டன் எடை தண்ணீர் இருக்கலாமென ஏபிசி நியூஸ் அறிக்கை செய்கிறது. “அல்லது எளிதில் புரிந்துகொள்ளத்தக்க விதத்தில் இதை சொல்ல வேண்டுமென்றால் . . . யானைகளை கற்பனை செய்து கொள்ளுங்கள்” என வானிலை ஆய்வாளர் பெகி லாமோன் சொல்கிறார். ஒரு யானையின் எடை சுமார் ஆறு டன் இருக்குமென நாம் கணக்கிட்டால் ஒரேவொரு மேகக்குவியலிலுள்ள தண்ணீர் மட்டும் கிட்டத்தட்ட 100 யானைகளின் எடைக்குச் சமமாக இருக்கும். அத்தனை தண்ணீரும் பூமியிலிருந்து மேல் எழும்புகிற வெப்பக் காற்றில் சிறு சிறு துளிகளாக மிதக்கின்றன. அப்படி புடைத்திருக்கும் ஒரு மேகக்குவியலுடன் ஒப்பிட, திரண்டு வரும் பெரிய புயல் மேகம் ஒன்று கிட்டத்தட்ட 2,00,000 யானைகளின் கனத்திற்கு சமமாக இருக்கும். சூறாவளி மேகத்தின் எடையைப் பற்றி என்ன? சூறாவளி மேகத்தின் ஒரு கனசதுர மீட்டரிலுள்ள தண்ணீரின் எடையை கணக்கிட்டு அந்த எடையை அந்த மேகத்தின் மொத்த கன அளவினால் லாமோன் பெருக்கினார். விளைவு? அதன் எடை நான்கு கோடி யானைகளுக்கு சமம். “அதாவது சூறாவளி மேகம் ஒன்றிலுள்ள தண்ணீரின் எடை, பூமியிலுள்ள மொத்த யானைகளின் எடையைவிடவும், சொல்லப்போனால் இதுவரை வாழ்ந்த மொத்த யானைகளின் எடையைவிடவும் அதிகமாக இருக்கும்” என அந்த அறிக்கை சொல்கிறது. (g04 7/22)

பல் துலக்க ஏற்ற வேளை

அமிலம் நிறைந்த பானங்களை பருகிய பிறகும் சரி, அமில உணவை சாப்பிட்ட பிறகும் சரி உடனடியாக உங்கள் பற்களை பிரஷ் செய்வது பல் இனாமலை பாதிக்கும் என மெக்சிகோ நகரில் வெளியாகும் மிலென்யோ செய்தித்தாள் சொல்கிறது. ஜெர்மனியிலுள்ள கர்ட்டிங்கன் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வைப் பற்றி அறிக்கை செய்கையில், அமில உணவுகள் “தற்காலிகமாக பற்களின் இனாமலை வலுவிழக்கச் செய்கின்றன” என அந்த செய்தித்தாள் எச்சரிக்கிறது. எனவே சாப்பாட்டுக்குப் பிறகு உடனடியாக ஒருவர் பிரஷ் செய்வது பற்களைப் பாதிக்கலாம். மாறாக “பற்கள் மீண்டும் வலுப்பெறும்படி சில நிமிடங்கள் காத்திருப்பது உசிதமானது.” (g04 7/22)

டீனேஜ் சூதாட்டம்

மாகில் பல்கலைக்கழகத்திலுள்ள இளம் சூதாட்டக்காரர்களுக்கான பன்னாட்டு மையத்தின்படி “12 முதல் 17 வயதுக்குட்பட்ட கனடா நாட்டு இளவட்டங்களில் பாதிக்கும் அதிகமானோர் பொழுதுபோக்கிற்காக சூதாடுபவர்களென கருதப்படுகிறார்கள்; இவர்களில் 10 முதல் 15 சதவீதத்தினர் அதிகமதிகமாக சூதாட்டத்தில் ஈடுபடும் ஆபத்தான நிலையில் இருக்கிறார்கள், 4 முதல் 6 சதவீதத்தினர் ‘சூதாட்ட அடிமைகளாக’ கருதப்படுகிறார்கள்” என டோரான்டோவில் வெளியாகும் நேஷனல் போஸ்ட் செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. இந்த மோகம் பெரும்பாலும் சிறுவயதிலேயே ஆரம்பமாகிறது; லாட்டரி டிக்கெட்டுகளை சில பிள்ளைகள் பரிசுகளாக பெறும்போதும், ஆன்-லைனில் இன்டர்நெட்டில் சூதாடும்போதும் ஆரம்பமாகிறது. விளைவு? புகைபிடிப்பது, போதைப்பொருள் துஷ்பிரயோகம் போன்ற அடிமைப்படுத்தும் பிற பழக்கங்களைவிட இப்போது சூதாட்டத்தில்தான் அதிகமதிகமான கனடா நாட்டு டீனேஜர்கள் சிக்கியுள்ளார்கள் என ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். சூதாட்டத்தை டீனேஜர்கள் தவிர்ப்பது பற்றிய வகுப்புகள் கனடா நாட்டு உயர்நிலைப் பள்ளிகளில் நடத்தப்படுவது இந்தப் பிரச்சினையை கட்டுப்படுத்த உதவுமென ஆசிரியர்கள் நம்புகிறார்கள். (g04 7/8)

கத்தோலிக்க குருமாரும் பைபிள் அறிவும்

“குருமார் எந்தளவுக்கு பைபிளைப் பற்றி அறிந்து வைத்திருக்கிறார்கள்?” இந்தக் கேள்வியை கத்தோலிக்க குருவாகவும், ட்யூரின் டயோசிஸன் ஆஃபீஸ் ஃபார் காட்டகிஸத்தின் இயக்குநருமான ஆண்ட்ரீயா ஃபோன்டானா கேட்டார். “பாமரர் ஒருவர் [தன்னை] அணுகி டயோசிஸில் பைபிள் படிப்பு கோர்ஸுகள் ஏதாவது நடத்தப்படுகிறதா” என கேட்டபோதுதான் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட அந்தக் கேள்வி தன் மனதில் எழுந்ததாக இத்தாலியில் வெளியாகும் ஆவேனிரெ என்ற கத்தோலிக்க செய்தித்தாளில் ஃபோன்டானா எழுதினார். அந்தப் பாமரர் செல்லும் சர்ச்சில் “பரிசுத்த வேதாகமம் குறிப்பிடப்படவே இல்லை.” கேள்விக்கு பதிலளிக்கும் விதத்தில் அவர் இவ்வாறு எழுதினார்: “உண்மையை சொன்னால், [குருமார்] செமினரி கோர்ஸுகளில் கலந்துகொண்டதற்குப் பிறகு ஒரு சிலரே தொடர்ந்து பைபிளைப் படிக்கிறார்கள்; வருந்தத்தக்க விஷயம் இது. . . . சர்ச்சுக்கு செல்லும் பலருக்கு, பெரும்பாலும் ஞாயிற்றுக்கிழமை பிரசங்கங்கள் மட்டும்தான் பைபிள் வசனத்தை கேட்பதற்கும் அதனிடம் நெருங்கி வருவதற்குமான ஒரே வாய்ப்பாக இருக்கிறது.” எனவே, பைபிளிலிருந்து “அதிகத்தைக் கற்றுக்கொள்ள தானாகவே போய் யெகோவாவின் சாட்சிகளுடன் சேர்ந்து கொண்டதாக” அந்தப் பாமரர் சொன்னாராம். (g04 7/8)

“சவக் கடல் சாகிறது”

“சவக் கடல் சாகிறது, பெரியளவில் பொறியியல் நுட்பத்தை பயன்படுத்தி முயற்சி எடுத்தால் மட்டுமே அதை காப்பாற்ற முடியும்” என அசோசியேட்டட் பிரஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு ஒன்று தெரிவித்தது. அதிகப்படியான உப்பு செறிந்துள்ளதால் அக்கடல் நீரில் எந்த ஜீவராசிகளும் வாழ முடியாததன் காரணமாகவே அது சவக் கடல் என அழைக்கப்படுகிறது; இது பூமியின் நீர்நிலைகளிலேயே மிகவும் தாழ்வானது, அதாவது, 400 மீட்டர் கடல் மட்டத்திற்குக் கீழே உள்ளது. “ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, சவக் கடலுக்கு [பெருமளவு] தண்ணீரை அளித்து வந்த ஜோர்டான் நதியால் [அதிகளவு ஆவியாகும் தண்ணீருக்கும் உள்ளே வந்து சேரும் தண்ணீருக்கும் இடையே] சமநிலையைக் காத்து வர முடிந்தது” என அந்தக் கட்டுரை சொல்கிறது. “ஆனால் சமீப பத்தாண்டுகளில், இஸ்ரேலையும் ஜோர்டானையும் பிரிக்கும் இந்த குறுகிய நதி பாயும் பாதையின் வழிநெடுக உள்ள பெரிய பயிர்நிலங்களின் நீர்ப்பாசனத்திற்காக இந்த இரு நாடுகளும் அதன் தண்ணீரை எடுத்துக் கொண்டதால் ஆவியாகும் தண்ணீரை ஈடுகட்டுமளவுக்கு தண்ணீர் சவக் கடலுக்குப் போய் சேருவதில்லை.” எந்த முயற்சியும் எடுக்கப்படாவிட்டால் வருடத்திற்கு ஒரு மீட்டர் என்ற கணக்கில் தண்ணீரின் அளவு தொடர்ந்து குறைந்துகொண்டே வரும்; இது சுற்றிலுமுள்ள நிலத்திற்கு மட்டுமல்ல வனவாழ்வுக்கும் தாவரங்களுக்கும்கூட பெரும் பங்கம் விளைவிக்கும் என இஸ்ரேலிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. ஐந்து ஆண்டு கால வறட்சி வேறு சவக் கடலை இன்னும் படுமோசமாக்கி வருகிறது. (g04 7/8)

உங்கள் கட்டிங் போர்டை சுத்தமாக வையுங்கள்!

மர கட்டிங் போர்டு நல்லதா பிளாஸ்டிக் கட்டிங் போர்டு நல்லதா? “எந்த போர்டாக இருந்தாலும் அதை நீங்கள் மிகவும் சுத்தமாக வைக்கும் வரை நல்லதுதான். பச்சை இறைச்சியையும் பறவை மாம்சத்தையும் வெட்டுவதற்கு நீங்கள் மர போர்டை உபயோகித்தாலும் சரி, பிளாஸ்டிக் போர்டை உபயோகித்தாலும் சரி அதன் பிறகு அதை சூடான சோப்புத் தண்ணீரில் நன்கு தேய்த்து கழுவுங்கள்” என யூஸி பெர்க்லி வெல்னஸ் லெட்டர் சொல்கிறது. அந்த போர்டில் ஆழமான வெட்டோ, கொழுப்புத் துணுக்கோ இருந்தால் அதை சிரத்தை எடுத்து முற்றிலும் சுத்தமாக கழுவி அகற்றுங்கள். “நீங்கள் தண்ணீரில் துளி பிளீச் சேர்த்து (ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி பிளீச் சேர்த்து) அலசியும் போர்டிலுள்ள கிருமிகளை நீக்கலாம்” என வெல்னஸ் லெட்டர் குறிப்பிடுகிறது. அதே போல் கைகளையும் கத்திகளையும் சுத்தமாக கழுவி துடைக்க வேண்டும். (g04 7/22)

டெலிவிஷன்—⁠“கொடிய போதை மருந்து”

“ஒரு நாளுக்கு இரண்டு மணிநேரத்துக்கும் அதிகமாக டெலிவிஷன் பார்க்கும் பிள்ளைகள் பள்ளிப் படிப்பில் தேறுவதில்லை” என ஸ்பெயினில் வெளியாகும் லா வான்குவார்டியா என்ற செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. சிறந்த கல்வி புகட்டும் கருவியாக டிவி இருக்கலாம் என்று நம்புகிற போதிலும் அதைப் பயன்படுத்துவதால் ஏற்படும் மோசமான பாதிப்புகளைப் பற்றி குழந்தைகள் நல நிபுணர் ஃபிரான்தீஸ்கோ ம்யூன்யோஸ் குறிப்பிடுகிறார். அதிகளவு டிவி பார்ப்பவர்கள் நன்கு செயல்பட முடியாமல் போவதற்கான காரணம், அவர்கள் “முதிர்ச்சி அடைவது தாமதப்படுகிறது, மனதளவில் கருத்துக்களைப் புரிந்துகொள்ளும் திறமை குறைவுபடுகிறது” என ம்யூன்யோஸ் நம்புகிறார். “சில நிகழ்ச்சிகள், விளம்பரங்கள், மியூசிக் வீடியோக்கள் ஆகியவற்றைப் பார்ப்பதற்கும் மதுபானங்கள், புகையிலை, போதை மருந்துகள் ஆகியவற்றை பயன்படுத்துவதற்கும் இடையே சம்பந்தம் இருப்பது டீனேஜர்கள் மத்தியில் தெள்ளத் தெளிவாக தெரிகிறது” என்றும் அவர் குறிப்பிடுகிறார். எல்லா இளைஞர்களுமே டிவியில் பார்த்த மோசமான காரியங்களை செய்ய மாட்டார்கள் என ஒப்புக்கொண்டாலும் டெலிவிஷனை “கொடிய போதை மருந்து” என குழந்தை மனநல மருத்துவர் பெளலிநோ காஸ்டெல்ஸ் அழைக்கிறார்; “பக்குவமடையாத மனங்களில் அது பயங்கர பாதிப்பை ஏற்படுத்துவதால்” அதை அவ்வாறு அழைக்கிறார். (g04 7/22)

வாழிடம் பறிபோன பின் கண்டுபிடிக்கப்பட்ட புதிய இனம்

புதிய அணைக்கட்டு ஒன்றைக் கட்டுவதற்காக வெனிசுவேலாவின் காரனி நதியில் அமைந்துள்ள மனித சஞ்சாரமற்ற காரீசால் தீவிலுள்ள காடு அப்புறப்படுத்தப்பட்டது; இதுவரை அறியப்படாத புதிய பறவை ஒன்று அப்போது கண்டுபிடிக்கப்பட்டது என காராக்ஸில் வெளியாகும் டெய்லி ஜர்னல் செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. மரங்கள் அப்புறப்படுத்தப்படுவதற்கு முன்பாக அங்கிருந்த பறவை வகைகள் எடுத்துச் செல்லப்பட்டன; அந்த ஏகாந்த தீவில் ஆட்கள் நுழைய முடியாத அடர்த்தியான மூங்கில் காடுகளில் சின்னஞ்சிறிய, நீல புள்ளிகள் உள்ள ஒரு வகை குருவியும் வசித்ததாக பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. புதிதாக அறியப்பட்ட இவ்வினப் பறவைகளில் அநேகத்தை அருகிலுள்ள பகுதிகளில் கண்டுபிடிக்கலாமென இயற்கையியலாளர்கள் நம்புகிறார்கள். இதற்கிடையில், “காரீசால் சீட்ஈட்டர் குருவி . . . இத்தனை காலம் மறைந்திருந்த இடத்தை இப்போது நாம் அழித்திருப்பது அந்தக் கண்டுபிடிப்பின் சந்தோஷத்தையே குறைத்துவிட்டது” என ஆராய்ச்சியாளர் ராபின் ரெஸ்ட்டால் சொல்கிறார். (g04 7/22)