Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“தாக்குதல் ஒருமுறை, பாதிப்போ இருமுறை”

“தாக்குதல் ஒருமுறை, பாதிப்போ இருமுறை”

“தாக்குதல் ஒருமுறை, பாதிப்போ இருமுறை”

ஜாக் மேன்ஸ்மா சொன்னபடி

குழந்தைப் பருவத்தில் தாக்கும் கொடிய நோயான போலியோவை சக்தி வாய்ந்த தடுப்பூசிகள் மற்றும் தொடர்ச்சியான நோய்தடுப்பு திட்டங்கள் மூலமாக ஒழிப்பதில் மருத்துவம் அபார முன்னேற்றம் அடைந்துள்ளது. இருந்தபோதிலும், போலியோவிலிருந்து குணமடைந்து பல பத்தாண்டுகள் ஆன பிறகு மீண்டும் அந்த நோய் தங்களை தாக்கியிருப்பதாக சிலர் சொல்கின்றனர். இது போஸ்ட்-போலியோ சின்ட்ரோம் (PPS) என அழைக்கப்படுகிறது.

நீங்கள் PPS-ஐ பற்றி ஒருவேளை கேள்விகூட பட்டிருக்க மாட்டீர்கள். அது என் வாழ்க்கையை பாதிக்கும் வரை எனக்கும் அதைப் பற்றி ஒன்றுமே தெரியாது. இந்த நோய் என்னை எப்படி பாதித்தது என்பதை உங்களுக்கு விளக்குவதற்கு, 1941-ம் ஆண்டில் எனக்கு என்ன நடந்தது என்பதை முதலில் சொல்கிறேன். அப்பொழுது எனக்கு சுமார் ஒரு வயது.

என்னுடைய பேபி டெஸ்கில் நான் சாய்ந்து கிடந்ததை பார்த்த அம்மா என்னை டாக்டரிடம் உடனடியாக தூக்கிச் சென்றார். என்னை பரிசோதித்த பிறகு, “உங்க பையனை இளம் பிள்ளை வாதம் தாக்கியிருக்கு a என்று டாக்டர் அம்மாவிடம் கூறினார். வெகு விரைவிலேயே என்னுடைய இடுப்பிலிருந்து பாதம் வரை செயலிழந்துவிட்டது.

ஆறு மாதங்கள் என்னுடைய பெயர் வெய்டிங் லிஸ்ட்ல இருந்த பிறகுதான், நான் ஹாஸ்பிட்டலில் சேர்க்கப்பட்டேன். அதை தொடர்ந்து பல வருடங்களுக்கு நோயால் மீண்டும் மீண்டும் பீடிக்கப்பட்டேன். தீவிர ஃபிஸியோதெரப்பி மூலம், கொஞ்சம் கொஞ்சமாக என் கால்கள் வலுவடைந்தன. 14 வயதில் மறுபடியும் நடக்க ஆரம்பித்தேன். ஆனால், சிறுநீர் கட்டுப்பாட்டை இழந்தது போன்ற மற்ற பிரச்சினைகள் இருந்துகொண்டே இருந்தன. பல ஆபரேஷன்களும் நடந்தன. ஒவ்வொரு ஆபரேஷன் முடிந்தவுடன், சக்கர நாற்காலியில் கொஞ்ச காலம் இருப்பேன், பிறகு குணமடைவேன். இப்படியே பல வருடங்கள் உருண்டோடின. இருந்தாலும் இப்போது என்னுடைய இடது பாதம் வலது பாதத்தைவிட மூன்று ஷூ சைஸ் சிறியது, அதுமட்டுமல்லாமல் என் இடது கால் வலது காலைவிட சுமார் மூன்று சென்டிமீட்டர் குட்டையாகவும் இருக்கிறது. சிறுநீர் கட்டுப்பாட்டை இழந்த தர்மசங்கடமான பிரச்சினை 20 வயது தாண்டிய பிறகுதான் சரியானது. கடைசியாக, போலியோவிலிருந்து முற்றிலும் குணமடைந்தேன்​—⁠அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தேன்!

45 வயதில், என் கால்கள் குடைய ஆரம்பித்தன, தளர்ச்சியும் ஏற்பட்டது. இரவில் என் கால் தசைகள் தானாகவே ஆடின, இதனால் தூங்க முடியாமல் தவித்தேன். இந்த அறிகுறிகள் குறையவே இல்லை; மோசமாகிக் கொண்டேதான் இருந்தன. எனக்கு PPS தாக்கியிருப்பது பரிசோதனையில் தெரிய வந்தபோது​—⁠அதுவும் ஆரம்ப தாக்குதலை என் அம்மா கண்டுபிடித்து 44 வருடங்களுக்கு பிறகு தெரிய வந்தபோது அப்படியே அதிர்ந்து போனேன்.

போலியோ என்றால் என்ன?

போலியோ என்பது ஒரு வகை வைரஸ் மூலமாக ஏற்படும் மிகக் கொடிய தொற்றுநோய். இந்த வைரஸ் வாய்வழியாக உடலுக்குள் சென்று குடல்களில் பெருக ஆரம்பிக்கிறது. இந்த வைரஸ் நரம்பு மண்டலத்தை தாக்கியதுமே முழு உடலும் செயலிழந்து விடலாம். எப்படியென்றால், இந்த வைரஸ் மூளைக்கும் அதன்பின் முதுகுத் தண்டிற்கும் செல்கையில், காய்ச்சல், தளர்ச்சி, தலைவலி, வாந்தி, கழுத்து விறைப்பு, கை கால்களில் வலி ஆகிய ஆரம்ப அறிகுறிகள் தென்படும். அநேக நரம்புகள் செயல்படுவது நின்றுவிடும்போது கை, கால்களும் மார்பகத்திலுள்ள சில தசைகளும் செயலிழந்து விடுகின்றன.

ஆனால், தன்னைத்தானே சரிசெய்து கொள்ளும் ஆற்றல் உடலுக்கு இருப்பது நம்மை மலைக்க வைக்கிறது. வைரஸால் பாதிக்கப்படாத நரம்புகளிலிருந்து புதிய “கிளைகள்” முளைக்கின்றன. இந்த கிளைகள், கூடுதலான தொலைபேசி இணைப்புகளைப் போல, செயலிழந்த நரம்புகளால் துண்டித்துவிடப்பட்ட தசை செல்களை மீண்டும் இணைக்கின்றன. முதுகு தண்டிலுள்ள ஒரு மோட்டார் நரம்பு செல் தன் நுனியில் ஆக்ஸான் செல்களை முளைப்பிக்கலாம். இந்த புதிய ஆக்ஸான் செல்கள் முன்பைவிட அதிக தசை செல்களோடு இணைவதால், நரம்பு செல்லின் ஆற்றல் மிகவும் அதிகரிக்கிறது. முன்பு 1,000 தசை செல்களை தூண்டுவித்திருந்த ஒரு மோட்டார் நரம்பு செல், முடிவில் 5,000 முதல் 10,000 தசை செல்களோடு தன்னை திரும்ப இணைத்துக்கொள்கிறது. உண்மையில் இதுதான் என்னுடைய விஷயத்தில் நடந்தது. எனவே மறுபடியும் என்னால் நடக்க முடிந்தது.

என்றபோதிலும், இந்த நரம்பு-தசை யூனிட்டுகள் அதிகம் வேலை செய்வதால், 15 முதல் 40 வருடங்களில் தளர்ச்சியடைய ஆரம்பிக்கலாம் என்ற கருத்து தற்போது நிலவுகிறது. பல பத்தாண்டுகளுக்கு முன்னால் போலியோவினால் பாதிக்கப்பட்ட பிறகு குணமடைந்த நபர்களுக்கு, மறுபடியும் அந்நோய்க்கான அறிகுறிகள் தென்படும் நிலைதான் PPS எனப்படும். பாதிக்கப்பட்டவர்களில் அநேகர் தசை பலவீனம், தளர்ச்சி, மூட்டு வலி, தசை வலி, குளிர் தாங்காமை, சுவாசப் பிரச்சினைகள் ஆகியவற்றை அனுபவிக்கிறார்கள். துல்லியமான புள்ளிவிவரங்கள் கிடைப்பது மிகவும் கடினம் என்றாலும், போலியோவால் தாக்கப்பட்டவர்கள் உலகெங்கிலும் இரண்டு கோடி பேர் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கணக்கிட்டுள்ளது. இதில் 25 முதல் 50 சதவீதத்தினர் PPS-ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதாக சமீபத்திய அத்தாட்சி காட்டுகிறது.

என்ன உதவி செய்யலாம்?

அதிகம் வேலை செய்த பழைய மோட்டார் நரம்பு செல் மிகவும் வலுவிழந்துவிடுவதால், அதன் ஒரு சில நுனி நரம்புகள் செயலிழந்து விடுகின்றன; இதனால் அநேக தசை நார்களின் இணைப்புகள் மறுபடியும் துண்டிக்கப்படுகின்றன என்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலை ஏற்படுவதைத் தாமதப்படுத்துவதற்கு, பாதிக்கப்பட்ட தசைகளை அதிகம் வருத்தாதிருப்பது அவசியம். கைத்தடிகள், போலியோ ஷூக்கள் (braces), ஊன்றுகோல்கள், சக்கர நாற்காலிகள், ஸ்கூட்டர்கள் போன்ற உபகரணங்களை பயன்படுத்துமாறு சில உடற்பயிற்சி மருத்துவர்கள் சிபாரிசு செய்கின்றனர். என்னுடைய விஷயத்தில், போலியோ ஷூக்களை அணிய வேண்டியிருந்தது. விழுந்துவிடாமலிருக்க கணுக்கால்களை தாங்கிப்பிடிக்கும் ஸ்பெஷல் ஷூக்களையும் வைத்திருக்கிறேன்.

ஒருவருடைய சூழ்நிலைக்கு தக்கவாறு, மிதமான உடற்பயிற்சி செய்வதும் தசைகளை நீட்டுவதும் தேவைப்படலாம். தசைகளுக்கு அழுத்தம் தராமல் இருதய இரத்தக்குழாயின் செயல்பாட்டை முன்னேற்றுவிக்க சிறந்த வழி, நீச்சலடிப்பது அல்லது வெதுவெதுப்பான தண்ணீர் தொட்டியில் உடற்பயிற்சி செய்வதாகும். எந்தவொரு உடற்பயிற்சி திட்டத்திலும், டாக்டர் அல்லது உடற்பயிற்சி மருத்துவரோடு நோயாளி ஒத்துழைப்பது முக்கியம்.

போலியோவினால் பாதிக்கப்பட்டவர்களுடைய நரம்பு செல்கள் தொடர்ந்து பயன்படுத்தப்படுவதால் முடிவில் சில தசைநார்களின் செயல்பாடுகளில் கோளாறு ஏற்படுகிறது. ஆதலால் உடல் வலிமை குன்றலாம், படுமோசமான தளர்ச்சியும் ஏற்படலாம். தொடர்ந்து வலியெடுப்பதால் அல்லது மறுபடியும் நோயோடு போராட வேண்டியிருப்பதால் ஏற்படும் மன அழுத்தத்தின் விளைவால்கூட உடல் வலிமை குன்றலாம். நாள் முழுக்க அடிக்கடி ஓய்வெடுப்பது தளர்ச்சியை மேற்கொள்ளும் அருமருந்தாக இருப்பதை நான் கண்டேன். நோயாளிகள் தங்களுடைய அன்றாட வேலையை களைப்படையும் அளவுக்கு அரக்கப்பரக்க செய்யாமல் நிதானமாக செய்யும்படி அநேக டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.

என்னுடைய விஷயத்தில், கணுக்களிலும் தசைகளிலும் தொடர்ந்து ஏற்பட்ட வலிதான் என்னை ரொம்பவே கஷ்டப்படுத்தியது. குறிப்பாக அன்றாட நடவடிக்கைகளின்போது மிக அதிகம் உபயோகிக்கும் தசைகளில் சிலருக்கு வலியெடுக்கலாம். வேறு சிலருக்கு களைப்போடுகூட, ஃப்ளூ காய்ச்சலின்போது உண்டாவது போல் எல்லா தசைகளிலும் வலி ஏற்படலாம்.

வீக்கத்தை குறைக்கும் மாத்திரைகள் அல்லது மற்ற மருந்து மாத்திரைகள் மூலம் வலியை குறைக்கலாம். ஆனால் மாத்திரைகள் சாப்பிட்டாலும், போலியோ நோயாளிகள் அநேகர் நடக்க முடியாதளவுக்கு தீராத வலியால் அவதிப்படுகின்றனர். ஒத்தடத்தோடு கூடிய ஃபிஸியோதெரப்பியும் உடலை நிமிர்த்தி நேராக்கும் உடற்பயிற்சிகளும் வலியை குறைக்க உதவும். இந்த நோயால் பாதிக்கப்பட்ட மயக்க மருந்து நிபுணரான ஒரு பெண்மணிக்கு தன் வேலையையே விடவேண்டியிருந்தது; “என்னால இந்த சக்கர நாற்காலியிலிருந்து எழுந்து கஷ்டப்பட்டு ரூமை கடந்து போயிட முடியும். ஆனா உயிர்போகிற அந்த வலியை நினைச்சுப் பார்த்தா, நடக்காம இருக்கிறதே எவ்வளவோ மேல்” என்று அவர் சொன்னார். இப்போது மருந்து மாத்திரையின் உதவி இருந்தாலும், எனக்கு அடிக்கடி சக்கர நாற்காலியின் உதவி தேவைப்படுகிறது.

சில போலியோ நோயாளிகளின் உடலுக்கு தோலிலிருந்து இரத்தத்தை வேறு பக்கமாக அனுப்பும் திறனில்லாமல் போய்விடுகிறது. நம் உடம்பில் இயல்பாக நடக்கும் அந்த செயல், தசை செல்களில் வெப்பத்தை தக்கவைக்க உதவுகிறது. இந்த திறன் இல்லாதபோது, பாதிக்கப்பட்ட கால் அதிக வெப்பத்தை வெளியேற்றி குளிர்ந்த நிலையை அடைகிறது. இந்நிலையில், மோட்டார் நரம்பு செல்லிலிருந்து தசைகளுக்கு வரும் தகவல்தொடர்பு மந்தமாக இருப்பதன் விளைவாக, தசைகள் சரியாக செயல்படாது. ஆகையால் கூடுதலான உடைகளை உடுத்தி பாதிக்கப்பட்ட இந்த தசைகளை கதகதவென்று வைத்துக்கொள்வது மிக முக்கியம். குளிரான இராத்திரிகளில் சிலர் எலக்ட்ரிக் போர்வையை அல்லது ஒத்தடப் பையை பயன்படுத்துகிறார்கள். குளிரில் அதிகம் இருப்பதை தவிர்ப்பது நல்லது. வெப்பநிலையான இடத்திற்கு மாறிசெல்வது எனக்கு அவசியமாக இருந்தது.

சுவாசப் பிரச்சினைகள் பொதுவாக காணப்படுகின்றன. முக்கியமாக பல்பர் போலியோவால் பாதிக்கப்பட்டவர்களிடம் இது காணப்படுகிறது. இந்த போலியோ மேல் கழுத்திலுள்ள முதுகு தண்டை பாதித்து, சுவாசத்திற்கு உதவும் தசைகளை வலுவிழக்க செய்துவிடுகிறது. கடந்த காலங்களில், இந்த போலியோவால் பாதிக்கப்பட்ட அநேகருக்கு செயற்கை நுரையீரல் பொருத்தப்பட வேண்டியிருந்தது. இன்றோ, வலுவிழந்த நுரையீரல் தசைகளுக்கு கைகொடுக்க ரெஸ்பிரேட்டர்களை பயன்படுத்த வேண்டியிருக்கலாம். உடலை அதிகம் வருத்திக்கொண்டால் மூச்சுவிடுவது எனக்கு மிகவும் கடினமாகிவிடும். எனவே, ஒரு சிறிய கருவியை பயன்படுத்தி தினமும் நுரையீரல் தசைகளுக்கு பயிற்சி அளிக்கிறேன்.

போலியோ நோயாளிகளுக்கு மற்றொரு சிக்கலும் ஏற்படலாம்; அதைப் பற்றியும் அவர்கள் அறிந்திருக்க வேண்டும். அறுவை சிகிச்சை செய்த அன்றே அவர்கள் வீடு திரும்புவது நல்லதல்ல. கெஸ்லர் மறுவாழ்வு நிறுவனத்தில் பணிபுரியும் டாக்டர் ரிச்சர்ட் எல். ப்ரூனொ இவ்வாறு சொல்கிறார்: “போலியோ நோயாளிகள் எவரும் ஆபரேஷன் நடந்த அதே நாளில் எக்காரணத்தைக் கொண்டும் வீடு திரும்பக்கூடாது; லோக்கல் அனஸ்தீஸியா கொடுத்து செய்யப்படும் மிகச் சிறிய சிகிச்சைகளாக இருந்தால் மட்டுமே அவ்வாறு வீடு திரும்பலாம்.” எந்தவொரு மயக்கமருந்திலிருந்தும் தெளிவடைய அவர்களுக்கு இரண்டு மடங்கான நேரம் தேவைப்படுகிறது; கூடுதல் வலி நிவாரணிகளும் அவர்களுக்கு தேவை; பொதுவாக மற்ற நோயாளிகளைவிட இவர்கள் நீண்ட நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டிவரும் என்றெல்லாம்கூட அவர் குறிப்பிடுகிறார். இதை நான் முன்பே அறிந்திருந்தால், சமீபத்தில் நடந்த சிறிய அறுவை சிகிச்சை பிறகு எனக்கு நிமோனியா வந்திருக்காது. அறுவை சிகிச்சைக்குமுன் இந்த விஷயங்களை குறித்து அறுவை சிகிச்சை மருத்துவரிடமும் மயக்கமருந்து நிபுணரிடமும் கலந்தாலோசிப்பது ஞானமான செயலாகும்.

இன்று என்னுடைய வாழ்க்கை

14 வயதில் நடக்க ஆரம்பித்தபோது, என்னுடைய பல பிரச்சினைகள் தீர்ந்துவிட்டதாக நினைத்தேன். இருப்பினும், அநேக வருடங்களுக்கு பிறகு அதே பிரச்சினைகள்தான் திரும்பவும் வந்து என்னை வாட்டுகின்றன. என்னை போல் போலியோவால் தாக்கப்பட்டு மறுபடியும் PPS-ஆல் பாதிக்கப்பட்டவர்களுடைய நிலையை ஒரு எழுத்தாளர், “தாக்குதல் ஒருமுறை பாதிப்போ இருமுறை” என்பதாக குறிப்பிட்டார். சில சமயங்களில் சோர்ந்து போய்விடுவது இயல்பானதுதான். என்றாலும், இப்போது என்னால் நடமாட முடிகிறது, என்னையே கவனித்துக்கொள்ளவும் முடிகிறது. தன்னம்பிக்கையோடு இருப்பதும், மாறும் சூழ்நிலைமைகளுக்கு ஏற்ப அனுசரித்துப் போவதும், இன்னமும் செய்ய முடிவதை நினைத்து சந்தோஷப்படுவதுமே எனக்கு சிறந்த நிவாரணியாக இருந்திருக்கிறது.

உதாரணத்திற்கு, சுமார் பத்து வருடங்களுக்கு முன் என்னுடைய முழுநேர ஊழியத்தை ஆரம்பிக்கையில், என்னால் நன்றாகவே நடமாட முடிந்தது. ஓரளவு தொலைவான தூரம்கூட தெம்பாகவும் வலியில்லாமலும் நடக்க முடிந்தது. ஆனால், இப்போது கொஞ்ச தூரம் நடப்பதே பெரிய விஷயம். சக்தியை வீணாக்காதிருக்க மாடிப்படிகளில் ஏறுவதையும் மேடுகளில் நடப்பதையும் தவிர்க்கிறேன். முடிந்தபோதெல்லாம் சக்கர நாற்காலியை பயன்படுத்துகிறேன். வெவ்வேறு வழிகளில் ஊழியம் செய்வது எனக்கு மிகுந்த சந்தோஷத்தை தருகிறது, அதுவே என் நோய் நீக்கும் மருந்தாகவும் இருக்கிறது.

ஆம், PPS என் வாழ்க்கையை பாதித்திருப்பது உண்மையே. அது என் உடல்நலத்தை மேலும் சீரழிக்கலாம். ஆனால் புதிய உலகில் எல்லோருமே பூரண ஆரோக்கியமும் பலமும் நிறைந்த இளைஞர்களாக மாறுவோம் என்ற பைபிளின் வாக்குறுதி எனக்கு பெரும் ஆறுதலை அளிக்கிறது. “நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம் பண்ணுவேன்” என்ற ஏசாயா 41:10-ல் உள்ள உற்சாகமூட்டும் வார்த்தைகளை கடந்த வருடங்களில் நான் அடிக்கடி நினைத்து பார்த்ததுண்டு. PPS மறையும்வரை, கடவுளுடைய உதவியோடு, அதை சமாளிக்க நான் திடதீர்மானத்துடன் இருக்கிறேன். (g04 7/22)

[அடிக்குறிப்பு]

a போலியோமைலைட்டிஸ் அல்லது போலியோ என்றும் அழைக்கப்படுகிறது.

[பக்கம் 16-ன் பெட்டி]

‘எனக்கு போஸ்ட்-போலியோ சின்ட்ரோம் இருக்குமா?’

ஒருவருக்கு பின்வரும் அறிகுறிகளில் பல இருந்தால் போஸ்ட்போலியோ சின்ட்ரோமால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அநேக நிபுணர்கள் நம்புகின்றனர்:

◼ முன்பு பாராலிட்டிக் போலியோமைலைட்டிஸ் இருந்தது ஊர்ஜிதமாகியிருந்தால்

◼ ஓரளவு அல்லது முழுமையாக உடலின் செயல்பாடு குணமடைந்த பிறகு குறிப்பிட்ட இடைவெளிக்கு (குறைந்தபட்சம் 15 ஆண்டுகள்) நரம்புகளின் செயல்பாடு நிலையாயிருந்தால்

◼ தசை வலுவிழத்தல், தளர்ச்சியடைதல், தசைகள் சுருங்குதல், அல்லது தசை மற்றும் மூட்டு வலி ஆகியவை படிப்படியாக அல்லது திடீரென தாக்கினால்

◼ மூச்சுவிடுவதில் அல்லது விழுங்குவதில் பிரச்சினைகள் இருந்தால்

◼ குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு தொடர்ந்து அறிகுறிகள் தென்பட்டால்

◼ வேறெந்த நரம்பியல், எலும்பியல், அல்லது மற்ற மருத்துவ பிரச்சினைகள் இல்லாதிருந்தால்

வயதாக வயதாக, போலியோவால் பாதிக்கப்பட்டவர்களின் நரம்பு-தசை யூனிட்கள் அளவுக்கதிகமான உபயோகத்தால் இயல்பாகவே வலுவிழந்துவிடும் என்பது உண்மைதான்; அதற்காக போலியோ நோயாளிகள் ஒவ்வொருவருக்கும் PPS வரும் என்றில்லை. சொல்லப்போனால், புதிய அறிகுறிகளோடு டாக்டரிடம் செல்லும் போலியோ நோயாளிகளில் பகுதிக்கும் மேற்பட்டவர்களுக்கு PPS இருப்பதில்லை. ஒரு நிபுணர் குறிப்பிடுகையில்: “புதிய அறிகுறிகளோடு இருக்கும் போலியோ நோயாளிகளில் அறுபது சதவீதத்தினருக்கு, போலியோவோடு தொடர்பே இல்லாத மருத்துவ அல்லது நரம்பியல் பிரச்சினையே உள்ளது. அந்தப் பிரச்சினைகளை குணப்படுத்திவிடலாம். மீதமுள்ளவர்களில் 20 சதவீதத்தினருக்கு போலியோவின் எஞ்சிய பாதிப்புகளோடு தொடர்புடைய எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அதிகமாக உள்ளன.”

[பக்கம் 17-ன் பெட்டி]

நிவாரணம் உண்டா?

போஸ்ட்-போலியோ சின்ட்ரோமிற்கான காரணம் உறுதியாக தெரியாததாலும், எந்தவொரு திட்டவட்டமான பரிசோதனை முறை இல்லாததாலும், அதற்கு தற்போது நிவாரணியே இல்லை. இருப்பினும், மூன்று-அம்ச சிகிச்சைமுறை ஒன்று உள்ளது. ஒரு நிபுணர் சொல்வதாவது: “80%-க்கும் மேற்பட்ட PPS நோயாளிகள் இந்த சிகிச்சை முறையின் மூலம் பயன் பெறுவார்கள்.”

மூன்று-அம்ச சிகிச்சைமுறை என்னவென்றால்:

1. வாழ்க்கை பாணியில் சரிப்படுத்துதல்கள்:

◼ சக்தியை வீணாக்காதவாறு பார்த்துக் கொள்ளுதல்

◼ உதவும் உபகரணங்கள்

◼ களைப்படைய செய்யாத உடற்பயிற்சிகள்

◼ உடலை வெதுவெதுப்பாக வைத்திருத்தல்

2. மருந்துகளும் ஊட்டச்சத்துப் பொருட்களும்

டாக்டர்கள் எழுதிக் கொடுக்கும் மருந்துகளும் சரி இயற்கை ஊட்டச்சத்துப் பொருட்களும் சரி எதுவும் கைகொடுப்பதாக தெரிவதில்லை. முன்னேற்றம் கிடைப்பதாக அநேக அறிக்கைகள் சொல்கின்றன; ஆனால் இவை பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து நேரடியாக வராததால், கூடுதல் ஆராய்ச்சி தேவைப்படுகிறது. இயற்கை மூலிகை மருந்துகளை மற்ற மருந்துகளோடு சேர்ந்து எடுப்பது பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் ஜாக்கிரதையாயிருங்கள். நீங்கள் எதை உட்கொள்ள நினைக்கிறீர்களோ அதை உங்கள் மருத்துவரிடம் எப்போதும் தெரியப்படுத்துங்கள்.

3. வாழ்க்கை தரம்

“PPS தாக்கிய நோயாளிக்கு ஒரு மருத்துவர் கொடுக்க முடிந்த சிறந்த மருந்து அதைப் பற்றிய அறிவும் உற்சாகமும்தான். . . . வாழ்க்கை பாணியில் சரிப்படுத்துதல்களை செய்ய முடிந்த நோயாளிகள் (சிறப்பாக பிரச்சினைகளை தீர்க்கும் திறனுடையவர்கள், வீட்டிலும் வேலையிலும் தங்களுக்கு கச்சிதமாக பொருந்தும் சூழலை உடையவர்கள், தகவல்களையும் உதவிகளையும் அதிகம் பெற்றிருப்பவர்கள், தேவைப்படும்போது உபகரணங்களை பயன்படுத்த மனமுள்ளவர்கள்) தங்களுடைய அன்றாட அலுவல்களில் விரைவாக ஈடுபட ஆரம்பித்து விடுகிறார்கள்.”​—⁠டாக்டர் சூசன் ப்பேர்ல்மேன்.

[பக்கம் 18-ன் பெட்டி]

உடற்பயிற்சி பற்றியதென்ன?

ஆரம்பத்தில், போலியோ நோயாளிகள் “வலிக்கும் வரை” உடற்பயிற்சி செய்யுமாறு உற்சாகப்படுத்தப்பட்டனர். பின்பு 1980-களில், செயல்படும் தசை செல்களை “பிழிந்தெடுக்கும்” உடற்பயிற்சியின் அபாயங்களை குறித்து எச்சரிக்கப்பட்டனர்.

ஆனால், அதிகமாகவும் இல்லாமல் குறைவாகவும் இல்லாமல் சமநிலையோடு உடற்பயிற்சி செய்யுமாறு நிபுணர்கள் இன்று சிபாரிசு செய்கின்றனர். ‘அதிகம் உடற்பயிற்சி செய்யாதீர்கள், ஒன்றும் செய்யாமலும் இருந்துவிடாதீர்கள்’ என்பதுதான் அவர்களுடைய தற்போதைய அறிவுரை. “புதிய தகவலின்படி நம்முடைய இயலாமையின் அளவு எவ்வளவாக இருந்தபோதிலும், உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க நாம் தூண்டப்பட வேண்டும். நம்முடைய சூழ்நிலைக்கு பொருந்தும் ஒரு உடற்பயிற்சி திட்டத்தை வகுத்து, அதிலிருந்து பலன் கிடைக்கும் வரை விடாமல் செய்ய வேண்டும்” என்று தேசிய உடற்பயிற்சி மற்றும் ஊனமுற்றோர் மையம் சொல்கிறது.

சுருங்க சொன்னால், ஒரு நபர்:

◼ அனுபவமிக்க மருத்துவர் அல்லது ஃபிஸியோதெரப்பி நிபுணரின் உதவியோடு உடற்பயிற்சி செய்ய வேண்டும்

◼ முதலில் மெதுவாக அல்லது மிதமாக உடற்பயிற்சியை ஆரம்பித்து, பிறகு படிப்படியாக வேகத்தை கூட்ட வேண்டும்

◼ இதயத் துடிப்பை படிப்படியாக அதிகப்படுத்தும் உடற்பயிற்சிகளை முதலிலும் அதை படிப்படியாக குறைக்கும் உடற்பயிற்சிகளை முடிவிலும் செய்ய வேண்டும்

◼ உடலை நிமிர்த்தி நேராக்கும் உடற்பயிற்சிகளுக்கும் ஏரோபிக்ஸ் பயிற்சிகளுக்கும் அதிக கவனம் செலுத்த வேண்டும்

◼ முடிந்தால், வெதுவெதுப்பான தண்ணீர் தொட்டியில் செய்யப்படும் உடற்பயிற்சிகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

த ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மெடிக்கல் லெட்டர்-ல் ஒரு நிபுணர் சொன்னதாவது: “ஒரு மணிநேரத்திற்கு மேலாக தொடர்ந்து களைப்பும் வலியும் இருந்தால் நம்முடைய தசைகளை அளவுக்கதிகமாக நாம் பயன்படுத்தியிருக்கிறோம் என அர்த்தம்.” ஆகையால் உங்கள் உடலின் அறிகுறிக்கு செவிசாய்த்து, வலி, களைப்பு மற்றும் பலவீனத்தை தவிர்த்திடுங்கள்.

[பக்கம் 19-ன் பெட்டி]

அபாய காரணிகள் என்னென்ன?

நோயாளிகளின் நிலை ஒருவருக்கொருவர் வேறுபடுவதாக இருந்தாலும், போலியோ நோயாளிகளுக்கு பின்வரும் காரணிகள் போஸ்ட்-போலியோ சின்ட்ரோம் வருவதற்கான அபாயத்தை அதிகரிக்கலாம்:

ஆரம்ப போலியோ தாக்குதல் மிகவும் கடுமையாக இருந்திருந்தால். பொதுவாக சொல்லப்போனால், ஆரம்ப தாக்குதல் எவ்வளவு கடுமையாக இருக்கிறதோ, PPS தாக்குவதற்கான அபாயமும் அவ்வளவு அதிகமாக உள்ளது

ஆரம்பத்தில் தாக்கிய வயது. சிறு வயதில் போலியோ வந்தவர்களுக்கு PPS தாக்குவதற்கான அபாயம் குறைவே

குணமடைதல். ஆச்சரியத்திற்குரிய விஷயம் என்னவென்றால், ஆரம்ப குணமடைதல் எவ்வளவு வேகமாகவும் முழுமையாகவும் நடக்கிறதோ, PPS வருவதற்கான வாய்ப்பும் அவ்வளவு அதிகம் உள்ளது

உடற்பயிற்சி. போலியோவால் பாதிக்கப்பட்டவர், பல வருடங்களாக, களைப்படைந்து போகும் அளவிற்கு உடற்பயிற்சி செய்வாரானால், PPS-க்கான அபாயம் அதிகரிக்கலாம்

[பக்கம் 15-ன் படம்]

11 வயதில், அறுவை சிகிச்சைக்குப்பின் குணமடைய ஒரு நர்ஸ் எனக்கு உதவுகிறார்

[பக்கம் 19-ன் படம்]

இன்று, என் மனைவியுடன் முழுநேர கிறிஸ்தவ ஊழியத்தில்