Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தார்மீக தராதரங்களை எங்கே காணலாம்?

தார்மீக தராதரங்களை எங்கே காணலாம்?

தார்மீக தராதரங்களை எங்கே காணலாம்?

தார்மீக தராதரங்கள் மாறிவரும் ஓர் உலகில் நாம் வாழ்கிறோம். ஒரு காலத்தில் கண்டனம் செய்யப்பட்ட நேர்மையற்ற பழக்கங்கள் இன்றோ கண்டும் காணாமல் விடப்படுகின்றன. மீடியாவில் திருடர்களும் மோசடிக்காரர்களும் ஓஹோவென போற்றிப் புகழப்படுகிறார்கள், ஹீரோக்களைப் போல் காட்டப்படுகிறார்கள். “நீ திருடனைக் காணும்போது அவனோடு ஒருமித்துப் போகிறாய்” என்று பைபிள் விவரிப்பதைப் போல் அநேகர் நடந்துகொள்கிறார்கள்.​—சங்கீதம் 50:18.

ஆனால் மோசடிக்காரர்கள் போற்றிப் புகழப்பட வேண்டியவர்கள் அல்லர். ஓர் எழுத்தாளர் இவ்வாறு குறிப்பிட்டார்: “நம்பிக்கைதுரோக நிபுணர்களுக்கே உரிய தனிப்பண்பு அவர்களுடைய இயல்பான திறமையே; பெரும்பாலும் இளம் வயதிலேயே தங்களுக்கு அருகில் இருப்பவர்களை தந்திரமாக நடத்தி காரியத்தை சாதித்துவிடுகையில் அவர்களுடைய குணம் புலப்பட்டுவிடுகிறது. இந்தத் திறமை மட்டுமல்ல, அவ்வாறு காரியத்தை சாதிக்கையில் குற்றவுணர்வோ, வருத்தமோ அவர்களுக்கு ஏற்படுவதில்லை. மாறாக, தங்களுக்கு பரம திருப்தி கிடைத்ததாகவே, அதாவது ஒருவித சந்தோஷம் கிடைத்ததாகவே உணருகிறார்கள்; மற்றவர்களுக்கு என்ன பாதிப்பு வந்தாலும் சரி, தாங்கள் விரும்பியதை தொடர்ந்து சாதிக்க இது அவர்களை உந்துவிக்கிறது.”

ஒரு விதவை சேமித்து வைத்த பணம் மோசடி செய்யப்பட்டிருந்தால், அவளுக்காக பொதுமக்கள் அனுதாபம் காட்டுவது வாஸ்தவமே; ஆனால் ஒரு பெரிய வியாபார நிறுவனத்திலிருந்து பணம் திருடப்பட்டால் அல்லது ஒரு இன்சூரன்ஸ் கம்பெனி ஏமாற்றப்பட்டால் யாருமே கண்ணீர் விடுவதில்லை. பெரிய பெரிய நிறுவனங்களை வைத்து நடத்துபவர்கள் பணக்காரர்கள்தானே என அநேகர் சொல்லலாம். ஆனால் அந்த மோசடியால் நிறுவனத்திற்கு மட்டுமல்ல அதன் வாடிக்கையாளர்களுக்கும் இழப்பு ஏற்படுகிறது. உதாரணமாக ஐக்கிய மாகாணங்களில், மோசடி செய்யப்பட்ட பணத்தை ஈடுகட்ட ஒரு சராசரி குடும்பம் ஒரு வருடத்தில் இன்சூரன்ஸ் பிரிமியத்தோடு 1,000-⁠க்கும் அதிகமான டாலர் கூடுதலாக செலுத்துகிறது.

அதுமட்டுமல்ல, போலியான பிராண்டில் விற்கப்படும் விலை குறைந்த துணிமணிகள், கடிகாரங்கள், வாசனை திரவியங்கள், மேக்கப் பொருட்கள், ஹேன்ட்பேக்குகள் போன்றவற்றை வாங்கவே அநேகர் விரும்புகிறார்கள். போலியான பொருட்கள் விற்கப்படுவதன் காரணமாக வியாபார நிறுவனங்களுக்கு ஒவ்வொரு வருடமும் கோடிக்கணக்கான பண இழப்புதான் ஏற்படுகிறது என்பதை அவர்கள் உணர்ந்தாலும், தங்களுக்கு எந்த இழப்பும் இல்லை என்றே நினைக்கிறார்கள். ஆனால், கடைசியில் நல்ல பொருட்களையும் சேவைகளையும் பெற்றுக்கொள்வதற்கு வாடிக்கையாளர்கள் அதிகம் செலவு செய்ய வேண்டியிருக்கிறது. அதுமட்டுமல்ல, போலியான பொருட்களை வாங்குவதால் மோசடிக்காரர்களின் பாக்கெட்டுகளுக்குத்தான் நம் பணம் போய்ச் சேருகிறது.

மோசடியை எதிர்த்துப் போராடும் ஓர் எழுத்தாளர் இவ்வாறு எழுதினார்: “இன்று தில்லுமுல்லு இந்தளவு அதிகமாக நடப்பதற்கு காரணம், தார்மீக நெறிகள் அறவே இல்லாத ஒரு சமுதாயத்தில் நாம் வாழ்வதுதான் என்று உறுதியாக நம்புகிறேன். தார்மீக நெறிகளின் படுவீழ்ச்சி, ஒரு பித்தலாட்ட பண்பாட்டை உருவாக்கியிருக்கிறது. . . . தார்மீக நெறிகளை வீட்டில் கற்பிக்காத ஒரு சமுதாயத்தில் நாம் வாழ்கிறோம். தார்மீக நெறிகளை பள்ளியில் கற்பிக்காத ஒரு சமுதாயத்தில் நாம் வாழ்கிறோம்; காரணம், தார்மீகத்தை கற்றுக்கொடுத்தால் ஆசிரியர்கள் குற்றவாளிகளாகி விடுவார்கள்.”

அதற்கு முற்றிலும் மாறாக, யெகோவாவின் சாட்சிகளோ கடவுளுடைய வார்த்தையிலுள்ள தார்மீக தராதரங்களை கற்றுக்கொடுக்கிறார்கள், அவற்றின்படி வாழ முயலுகிறார்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றைப் போன்ற பைபிள் நியமங்களுக்கேற்ப அவர்கள் செயல்படுகிறார்கள்:

● “உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக.”​மத்தேயு 22:39.

● “வஞ்சனை செய்யாதிருப்பாயாக.”​மாற்கு 10:19.

● “திருடுகிறவன் இனித் திருடாமல், குறைச்சலுள்ளவனுக்குக் கொடுக்கத்தக்கதாகத் தனக்கு உண்டாயிருக்கும்படி, தன் கைகளினால் நலமான வேலை செய்து, பிரயாசப்படக்கடவன்.”​எபேசியர் 4:28.

● ‘எல்லாவற்றிலும் யோக்கியமாய் நடக்க விரும்புகிறோம்.’​எபிரெயர் 13:18.

யெகோவாவின் சாட்சிகள் சுயதிருப்தியுள்ளவர்களாகவோ, சுயநீதியுள்ளவர்களாகவோ இல்லை; என்றாலும், அனைவருமே இந்த நியமங்களை பின்பற்றினால் இந்த உலகம் வாழ்வதற்கு இன்னும் சிறந்த இடமாக மாறும் என்பதை அவர்கள் நம்புகிறார்கள். ஒரு நாள் இந்த பூமி அப்படிப்பட்ட இடமாக மாறிவிடும் என்று கடவுள் அளித்திருக்கும் வாக்குறுதியையும் அவர்கள் நம்புகிறார்கள்.​—2 பேதுரு 3:13. (g04 7/22)

[பக்கம் 11-ன் சிறு குறிப்பு]

கடவுளுடைய வார்த்தையிலுள்ள நியமங்களை அனைவருமே பின்பற்றினால் இந்த உலகம் வாழ்வதற்கு இன்னும் சிறந்த இடமாக மாறும்

[பக்கம் 10-ன் படம்]

“உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக”​—⁠மெய்க் கிறிஸ்தவர்கள் இது போன்ற பைபிள் நியமங்களை பின்பற்றுகிறார்கள்