Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்வதில் என்ன தப்பு?

திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்வதில் என்ன தப்பு?

இளைஞர் கேட்கின்றனர் . . .

திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்வதில் என்ன தப்பு?

“இதுவரை செக்ஸில் ஈடுபடாததால் என்னைப் பற்றி நானே ஒருமாதிரியாக நினைத்துக் கொள்வதுண்டு; அந்த சமயங்களில் எல்லாம் திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்வது என்ன அப்படியொரு உலக மகா பாவமா என்று யோசித்ததுண்டு.”​⁠ஜார்டன். a

“செக்ஸை அனுபவிக்க வேண்டுமென்ற அடங்கா ஆசை எனக்குள் எழுகிறது. சாதாரணமாக எல்லாருக்குமே இப்படிப்பட்ட ஆசை இருக்குமென நினைக்கிறேன். இப்போது எங்கே பார்த்தாலும் வெறும் செக்ஸ், செக்ஸ், செக்ஸ்தான்!” என்கிறாள் கெல்லி.

ஜார்டனும் கெல்லியும் உணருவதைப் போலவே நீங்களும் உணருகிறீர்களா? எப்படியிருந்தாலும் சரி, திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்வதை ஒருகாலத்தில் தடை செய்துவந்த பழக்கவழக்கங்களும் மதிப்பீடுகளும் இன்று இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டிருக்கின்றன. (எபிரெயர் 13:4) 15 முதல் 24 வயதுக்குட்பட்ட ஆண்களில் பெரும்பாலோர் திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்வதில் தவறில்லை என்று நினைப்பதாகவும், சொல்லப்போனால் அதில் ஈடுபடும்படி அவர்களிடம் எதிர்பார்க்கப்படுவதாகவும் ஆசிய நாடு ஒன்றில் நடத்தப்பட்ட சுற்றாய்வு காட்டியது. அப்படியானால் உலகெங்குமுள்ள இளைஞர்களில் பெரும்பாலோர் 19 வயது ஆவதற்கு முன்பே செக்ஸில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை சொல்லவும் வேண்டுமா என்ன!

எனினும், உடலுறவு கொள்ளாமல் விலகியிருக்கும் இளைஞர்களும் இருக்கிறார்கள்; ஆனால் இவர்கள் வேறு வகையான செக்ஸ்களில் ஈடுபடுகிறார்கள்; (பரஸ்பர சுயபுணர்ச்சி என அழைக்கப்படும்) ஒருவருக்கொருவர் பாலுறுப்புகளை தகாத முறையில் தொட்டு தடவும் செக்ஸ்களில் ஈடுபடுகிறார்கள். த நியு யார்க் டைம்ஸ் செய்தித்தாள் கவலையூட்டும் ஓர் அறிக்கையை வெளியிட்டது; அது சொல்வதாவது: “செக்ஸுக்கு வழிவகுக்கும் பொதுவான முதல் கட்ட நடவடிக்கைதான் வாய்வழி செக்ஸ்; உடலுறவுடன் ஒப்பிட, இது அந்தளவுக்கு நெருக்கத்தை ஏற்படுத்தாதது, அந்தளவுக்கு தீங்கு விளைவிக்காதது . . . [மேலும்] கருத்தரிப்பை தவிர்ப்பதற்கும் அவர்களது கன்னித்தன்மையைக் காத்துக்கொள்வதற்கும் ஒரு வழியாகும் . . . என்பது அநேக இளைஞர்கள் மத்தியில் பரவலாக உள்ள நம்பிக்கை.”

ஆனால் கிறிஸ்தவர்கள் திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்வதை எப்படி கருத வேண்டும்? உடலுறவு தவிர மற்ற செக்ஸ்களில் ஈடுபடுவதைப் பற்றி என்ன சொல்லலாம்? அவற்றை கடவுள் அங்கீகரிக்கிறாரா? அவற்றால் பாதிப்பு எதுவும் இல்லையா? அவை உண்மையிலேயே ஒருவருடைய கற்பை பாதுகாக்கின்றனவா? b

வேசித்தனத்தில் உட்பட்டுள்ளவை

இக்கேள்விகளுக்கான நம்பகமான பதிலை படைப்பாளராகிய யெகோவா தேவனிடமிருந்து மட்டுமே பெற முடியும். ‘வேசித்தனத்திற்கு விலகியோடும்படி’ அவர் தமது வார்த்தையின் மூலம் நம்மிடம் சொல்கிறார். (1 கொரிந்தியர் 6:18) உண்மையில் அப்படி விலகியோடுவது எதை அர்த்தப்படுத்துகிறது? “வேசித்தனம்” என மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை உடலுறவை மட்டுமே குறிப்பதில்லை; அது செக்ஸுடன் சம்பந்தப்பட்ட பல்வேறு வக்கிர செயல்களையும் குறிக்கிறது. எனவே மணமாகாத இருவர் வாய்வழி செக்ஸில் ஈடுபடும்போது அல்லது ஒருவருக்கொருவர் இனப்பெருக்க உறுப்புகளை தகாதமுறையில் தொட்டு தடவும்போது அவர்கள் வேசித்தன குற்றம் செய்தவர்களாக ஆகிறார்கள்.

எனினும் கடவுள் பார்வையில் அவர்கள் ‘கன்னிகைகளாக’ அதாவது கற்புள்ளவர்களாகவே இருக்கிறார்களா? பைபிளில் “கன்னிகை” என்ற வார்த்தை ஒழுக்க சுத்தத்தின் அடையாளமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. (2 கொரிந்தியர் 11:2-6) ஆனால் இது சொல்லர்த்தமாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ரெபேக்காள் என்ற இளம் பெண்ணைப் பற்றி பைபிள் சொல்கிறது. அவள் ‘புருஷனை அறியாத [“உடலுறவு கொள்ளாத,” NW] கன்னிகையாய் இருந்தாள்’ என அது சொல்கிறது. (ஆதியாகமம் 24:16) “உடலுறவு” என்பதற்கான எபிரெய வேர்ச்சொல் பொதுவான ஆண், பெண் உடலுறவை மட்டுமல்லாமல் அதோடு சம்பந்தப்பட்ட மற்ற செயல்களையும் அர்த்தப்படுத்தியது என்பது கவனிக்க வேண்டிய விஷயம். (ஆதியாகமம் 19:5, NW) எனவே பைபிளின்படி, ஓர் இளைஞனோ இளைஞியோ எந்த விதமான வேசித்தனத்தில் ஈடுபட்டாலும் அந்த நபர் கற்புள்ளவராக கருதப்பட மாட்டார்.

வேசித்தனத்திற்கு மட்டுமல்லாமல் அதற்கு வழிநடத்தும் எல்லா வித அசுத்தமான நடத்தைகளில் இருந்தும் விலகியோடும்படி கிறிஸ்தவர்களை பைபிள் பலமாக ஊக்குவிக்கிறது. c (கொலோசெயர் 3:5) உங்களிடம் இத்தகைய உறுதியை மற்றவர்கள் காணும்போது அவர்கள் உங்களை கேலி செய்யலாம். கிறிஸ்தவ இளம் பெண் கெல்லி இவ்வாறு சொல்கிறாள்: “‘எப்பேர்ப்பட்ட ஜாலியான அனுபவத்தை நீ மிஸ் பண்றேன்னு உனக்கு தெரியவே மாட்டேங்குது!’ என்பதைத்தான் உயர்நிலைப் பள்ளியில் படிக்கிற காலத்தில் சதா கேட்டுக் கொண்டிருந்தேன்.” ஆனால், திருமணத்திற்கு முன் உடலுறவு என்பது வெறும் ‘அநித்தியமான பாவசந்தோஷமே.’ (எபிரெயர் 11:25) அது உடலுக்கும் உள்ளத்துக்கும் ஆன்மீகத்தன்மைக்கும் நிரந்தரமாக கேடு விளைவித்து விடலாம்.

மோசமான பாதிப்புகள்

திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்ளும்படி ஓர் இளைஞன் வஞ்சிக்கப்பட்டதை சாலொமோன் ராஜா ஒருசமயம் கவனித்தார் என பைபிள் சொல்கிறது. ‘வெட்டுவதற்காக இழுத்துச் செல்லப்படும் காளை மாட்டுக்கு’ அந்த இளைஞனை சாலொமோன் ஒப்பிட்டார். கசாப்புக் கடைக்கு மாடு இழுத்துச் செல்லப்படும்போது என்ன நடக்கப் போகிறதென அதற்கு தெரியவே தெரியாது. திருமணத்திற்கு முன் உடலுறவில் ஈடுபடும் இளைஞர்களும் ஏறத்தாழ அதைப் போலவே இருக்கிறார்கள்; தங்களுடைய செயல்களால் எத்தகைய மோசமான பாதிப்புகள் விளையும் என்பதை ஏதோ கொஞ்சம் அறிந்திருக்கிறார்கள் அல்லது அறவே அறியாதிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது! அந்த இளைஞனைப் பற்றி சாலொமோன் சொன்னபோது, “தன் உயிர் அழிக்கப்படும் என்பதை அறியாமலே சென்றான்” என்றார். (நீதிமொழிகள் 7:22, 23, பொது மொழிபெயர்ப்பு) ஆம், உங்கள் “உயிர்” ஆபத்திலிருக்கிறது.

உதாரணமாக, ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான இளைஞர்கள் பாலியல் நோய்க்கு (STD) பலியாகிறார்கள். “எனக்கு அக்கிகள் (herpes) வந்திருந்ததை அறிந்தபோது எங்கேயாவது ஓடி ஒளிந்துகொள்ளலாம் போல் இருந்தது” என்கிறாள் லிடீயா. “அது வேதனைமிக்க, குணமாகாத வியாதி” என புலம்புகிறாள். உலகெங்கும் புதிதாக HIV தொற்றப்படுகிறவர்களில் பாதிக்கும் அதிகமானோர் (நாளொன்றுக்கு 6,000 பேர்) 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள்.

திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்வதோடு சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகளில் எக்கச்சக்கமாக சிக்கிக் கொள்கிறவர்கள் பெண்களே. STD-⁠ன் (அதோடுகூட HIV-⁠ன்) அச்சுறுத்தலை ஆண்களைவிட பெண்களே அதிகளவில் எதிர்ப்படுகிறார்கள் என்பதாக உண்மைகள் காட்டுகின்றன. ஒரு டீனேஜ் பெண் தாய்மை அடைகையில் தனக்கும் பிறவாத தன் குழந்தைக்கும் மேலுமான ஆபத்துகளை தானே வரவழைத்துக் கொள்கிறாள். ஏன் அப்படி சொல்கிறோம்? ஏனென்றால், சுகப்பிரசவத்திற்கு அந்த இளம் பெண்ணின் உடல் இன்னமும் பக்குவம் அடையாதிருக்கலாம்.

ஒருவேளை அந்த டீனேஜ் தாயின் உடல்நலம் அந்தளவுக்கு மோசமாகாமல் தப்பித்துக் கொண்டாலும்கூட, தாய் என்ற ஸ்தானத்திலுள்ள பெரும் பொறுப்புகளை அவள் சுமக்கத்தான் வேண்டியிருக்கும். பச்சிளம் குழந்தையோடு வாழ்க்கையை ஓட்டுவது நினைத்ததைப் போல் லேசுப்பட்ட காரியமல்ல என்பதை அநேக பெண்கள் அனுபவரீதியில் கண்டிருக்கிறார்கள்.

இது தவிர, ஆன்மீக ரீதியிலும் உணர்ச்சி ரீதியிலும் பின்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. தாவீது ராஜா பாலுறவு பாவத்தில் வீழ்ந்தது கடவுளுடன் உள்ள அவருடைய உறவுக்கே ஆபத்தை விளைவித்தது, கிட்டத்தட்ட ஆன்மீக அழிவை சந்தித்தார் என்றே சொல்லலாம். (சங்கீதம் 51) ஆன்மீக ரீதியில் அவர் சுதாரித்துக் கொண்டபோதிலும் வாழ்நாள் பூராவும் தன் பாவத்தின் பாதிப்புகளால் அவதிப்பட்டார்.

அதேவிதமான துன்பத்தை இன்றும் இளைஞர்கள் அனுபவிக்கலாம். உதாரணமாக, வெறும் 17 வயதாக இருக்கையில் ஷெரி என்பவள் ஒரு பையனுடன் செக்ஸில் ஈடுபட்டாள். அவன் தன்னைக் காதலிப்பதாக நினைத்தாள். பல வருடங்கள் உருண்டோடிய போதிலும் இன்னமும் தான் செய்தவற்றையெல்லாம் எண்ணி அவள் வருந்துகிறாள். “பைபிள் சத்தியங்களுக்கு நான் அந்தளவுக்கு மதிப்புக் கொடுக்காமல் போனேன், அதன் விளைவுகளை அனுபவித்தேன். யெகோவாவின் தயவை இழந்தேன், அது எனக்குப் பேரிடியாக இருந்தது” என்று புலம்புகிறாள். ட்ரிஷ் என்ற இளம் பெண்ணும் அதே விதமாக சொன்னாள்: “என் வாழ்க்கையில் நான் செய்த மிகப் பெரிய தவறு, திருமணத்திற்கு முன் செக்ஸில் ஈடுபட்டதுதான். திரும்பவும் ‘கன்னியாக’ ஆவதற்கு எதை வேண்டுமானாலும் செய்ய நான் தயாராக இருக்கிறேன்.” ஆம், உணர்ச்சியில் ஏற்பட்ட வடுக்கள் வருடக்கணக்கானாலும் மறையவே மறையாது, மனச்சோர்வும் கவலையும்தான் மனதை வாட்டி வதைக்கும்.

தன்னடக்கத்தை கற்றுக்கொள்ளுதல்

ஷான்டா என்ற இளம் பெண் இந்த முக்கியமான கேள்வியைக் கேட்கிறாள்: “திருமணத்திற்கு முன் இளைஞர்கள் செக்ஸுக்கு இடங்கொடுக்கக் கூடாது என்று சொல்லிவிட்டு பின்பு ஏன் கடவுள் அவர்களுக்கு அத்தகைய ஆசைகளை கொடுக்கிறார்?” முக்கியமாய், “மலரும் பருவத்தில்” பலமான பாலியல் ஆசைகள் ஏற்படுவது உண்மைதான். (1 கொரிந்தியர் 7:36, NW) சொல்லப்போனால், காரணமே இல்லாமல் திடீரென தங்களுடைய பால் உணர்ச்சிகள் தூண்டிவிடப்படுவதாக டீனேஜர்கள் உணரலாம். ஆனால் இது மோசமான ஒன்றல்ல. இனப்பெருக்க அமைப்பு வளர்ச்சியடைகையில் இப்படிப்பட்ட உணர்ச்சிகள் ஏற்படுவது சகஜம்தான். d

அதுமட்டுமல்ல, உடலுறவு ஆனந்தத்தை அளிக்க வேண்டும் என்பது உண்மையில் யெகோவாவின் நோக்கம்தான். மனிதர்கள் பூமியை நிரப்பும்படி சொன்ன அவருடைய ஆதி நோக்கத்திற்கு இசைவாகவே அது இருந்தது. (ஆதியாகமம் 1:28) ஆனாலும், பிள்ளைகளைப் பிறப்பிக்கும் சக்தியை நாம் தவறாகப் பயன்படுத்துவது ஒருபோதும் கடவுளுடைய நோக்கமாக இருக்கவில்லை. “உங்களில் அவனவன் தன்தன் சரீரபாண்டத்தைப் பரிசுத்தமாயும் கனமாயும் ஆண்டுகொள்ளும்படி அறிந்”திருக்க வேண்டுமென பைபிள் சொல்கிறது. (1 தெசலோனிக்கேயர் 4:5) கோபப்படும் போதெல்லாம் ஒருவரை அடிப்பது எந்தளவுக்கு முட்டாள்தனமாக இருக்குமோ அந்தளவுக்கு பாலியல் ஆசைகள் தலைதூக்கும் போதெல்லாம் அவற்றை திருப்தி செய்து கொள்வதும் இருக்கும்.

உடலுறவு என்பது கடவுள் கொடுத்த பரிசு, பொருத்தமான சமயத்தில், அதாவது மணமான பிறகே அனுபவிக்க வேண்டிய பரிசு. திருமணத்திற்கு புறம்பாக செக்ஸில் ஈடுபடுவதை கடவுள் எப்படி கருதுகிறார்? சரி, ஒரு நண்பருக்கு பரிசளிக்க ஒரு பொருளை நீங்கள் வாங்கி வைத்திருப்பதாக கற்பனை செய்துகொள்ளுங்கள். அதை நீங்கள் அவருக்கு கொடுப்பதற்கு முன்பே உங்களிடமிருந்து அவர் திருடி விடுகிறார்! உங்களுக்கு எப்படி இருக்கும், நிலைகுலைந்து போய் விடுவீர்கள் அல்லவா? அப்படியானால், கடவுள் ஒருவருக்கு கொடுப்பதற்காக வைத்திருக்கும் அந்தப் பரிசை, திருமணத்திற்கு முன்பே உடலுறவு கொள்வதன் மூலம் துஷ்பிரயோகம் செய்கிறாரென்றால், கடவுளுக்கு எப்படி இருக்கும் என்பதை சற்று எண்ணிப் பாருங்கள்.

செக்ஸ் உணர்ச்சிகள் எழுகையில் நீங்கள் என்ன செய்யலாம்? சுருங்கச் சொன்னால், அவற்றைக் கட்டுப்படுத்தக் கற்றுக்கொள்ளுங்கள். யெகோவா தாமே, “உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்” என்பதை உங்களுக்கு நீங்களே நினைப்பூட்டிக் கொள்ளுங்கள். (சங்கீதம் 84:11) “திருமணத்திற்கு முன் செக்ஸில் ஈடுபடுவது அந்தளவுக்கு ஒன்றும் மோசமானதல்ல என்ற நினைப்பு மனதில் தோன்றும் போதே அதனால் விளையும் மோசமான ஆன்மீக பாதிப்புகளைப் பற்றி யோசிக்கத் தொடங்கி விடுவேன்; யெகோவாவுடன் உள்ள என் உறவை பாதிக்கும் எந்த பாவச் செயலும் எனக்கு தேவையில்லை” என கார்டன் என்ற இளைஞன் சொல்கிறான். சுயகட்டுப்பாட்டை வளர்த்துக் கொள்வது எளிதல்ல. ஆனால் ஏட்ரீன் என்ற இளைஞன் ஒப்புக்கொள்ளும் விதமாக, “அது சுத்தமான மனசாட்சியை தருகிறது, யெகோவாவுடன் நல்லுறவை அனுபவிக்கும்படியும் செய்கிறது; அதுமட்டுமல்ல, கடந்த கால செயல்களால் விளையும் குற்ற உணர்விலிருந்து விடுபட்டு, தங்குதடையின்றி மிக முக்கியமான காரியங்களிடம் கவனத்தை ஒருமுகப்படுத்த உதவுகிறது.”​—⁠சங்கீதம் 16:11.

ஆக, எல்லா விதமான ‘வேசிமார்க்கத்துக்கும் விலகியிருக்க’ அநேக நியாயமான காரணங்கள் உள்ளன. (1 தெசலோனிக்கேயர் 4:3) என்றாலும், இதை செய்வது எப்போதுமே சுலபமல்ல. எனவே, ‘உங்களை சுத்தவானாகக் காத்துக் கொள்வது’ பற்றிய நடைமுறையான வழிகள் இனிவரும் இதழில் கலந்தாலோசிக்கப்படும்.​—⁠1 தீமோத்தேயு 5:22. (g04 7/22)

[அடிக்குறிப்புகள்]

a சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

b இங்கு கற்பு என்பது ஆண், பெண் இருபாலாருக்கும் பொருந்தும்.

c வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம் போன்றவற்றைப் பற்றிய கலந்தாலோசிப்புக்கு அக்டோபர் 22, 1993 தேதியிட்ட விழித்தெழு!-வில் வெளிவந்த “இளைஞர் கேட்கின்றனர் . . . ‘வெகு தூரம்’ என்பது எவ்வளவு தூரம்?” என்ற கட்டுரையைக் காண்க.

d 1992, ஜனவரி 8 தேதியிட்ட எமது இதழில், “இளைஞர் கேட்கின்றனர் . . . ஏன் இது என் உடலுக்கு நேரிட்டுக்கொண்டிருக்கிறது?” என்ற கட்டுரையைக் காண்க.

[பக்கம் 13-ன் சிறு குறிப்பு]

ஓர் இளைஞனோ இளைஞியோ எந்த வித வேசித்தனத்தில் ஈடுபட்டாலும் அந்த நபர் கடவுளுடைய பார்வையில் கற்புள்ளவராக இருப்பாரா?

[பக்கம் 13-ன் படம்]

திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்வது, கடவுள் பயமுள்ள இளைஞனின் மனசாட்சியை சேதப்படுத்தும்

[பக்கம் 14-ன் படம்]

திருமணத்திற்கு முன் உடலுறவில் ஈடுபடுகிறவர்கள் பாலியல் நோய்களுக்கு பலியாகும் ஆபத்திருக்கிறது