Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“நகரப் பேரவை மற்றவர்கள் மீது அதிகாரம் செலுத்தக் கூடாது”

“நகரப் பேரவை மற்றவர்கள் மீது அதிகாரம் செலுத்தக் கூடாது”

“நகரப் பேரவை மற்றவர்கள் மீது அதிகாரம் செலுத்தக் கூடாது”

கனடாவிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

கனடாவின் உரிமைகள் மற்றும் சுயாதீனங்களின் சாசனம் (Canadian Charter of Rights and Freedoms) கனடா நாட்டு பிரஜைகள் ஒவ்வொருவருடைய உரிமைகளையும் பாதுகாக்கிறது. பேச்சுரிமை, எழுத்துரிமை, வழிபாட்டுரிமை ஆகியவை அரசமைப்பு சட்டத்தின் பாகமானவை; நீதிமன்றங்களின் மூலம் அவற்றை செயல்படுத்த முடியும்.

இப்படியிருக்க, மான்ட்ரீலுக்கு வடமேற்கே உள்ள ப்லேன்வில் நகரம், அனுமதி சீட்டைப் பெறாமல் ‘மத காரணங்களை’ முன்னிட்டு வீட்டுக்கு வீடு ‘செல்ல’ தடை விதிப்பதற்காக அமலில் இருந்த துணைச்சட்டங்களில் திருத்தம் செய்தது. இது யெகோவாவின் சாட்சிகளது கவனத்திற்கு வந்தது. முன்மொழியப்பட்ட இந்த திருத்தம் அவர்கள் செய்யும் வீட்டுக்கு வீடு ஊழியத்தை நேரடியாக பாதிக்கும். (அப்போஸ்தலர் 20:20, 21) ஆனால் அந்த திருத்தம் ஏன் செய்யப்பட்டது? யெகோவாவின் சாட்சிகள் வீட்டுக்கு வீடு செல்வதைக் குறித்து அநேக புகார்கள் வந்திருப்பதாக நகர அதிகாரிகள் சொன்னார்கள். ஆனால் போலீஸ் இலாகாவின் பதிவுகளில், யெகோவாவின் சாட்சிகளுடைய நடவடிக்கை பற்றி கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு புகார்கூட பதிவாகவில்லை!

இருந்தாலும், 1996-⁠ல் அந்தத் திருத்தம் சட்டமாக்கப்பட்டது. அப்போது, ப்லேன்விலிலுள்ள யெகோவாவின் சாட்சிகளின் சார்பாக செயல்பட்ட வழக்கறிஞர்கள் உடனடியாக நோட்டீஸ் அனுப்பினார்கள்; மத சம்பந்தமான உரிமைக்கு அரசமைப்பு சட்டம் இடமளிப்பதால் யெகோவாவின் சாட்சிகளுடைய நடவடிக்கைகளில் குறுக்கிடுவதற்கு அந்த நகரம் சட்டத்தை பயன்படுத்துவது சட்டவிரோதமானதாக இருக்குமென அதில் தெரிவித்தார்கள். இந்த அறிக்கையை நகர அதிகாரிகள் புறக்கணித்துவிட்டு, 17 சமன்களை அனுப்பினார்கள். கனடாவிலுள்ள ஒவ்வொரு பிரஜையின் உரிமைகளான மத உரிமையையும் பேச்சு உரிமையையும் ப்லேன்வில் நகரம் கட்டுப்படுத்தாமல் இருப்பதற்கு யெகோவாவின் சாட்சிகளுடைய வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்கள்.

கியுபெக் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி உயர்திரு ஷான் கிரேப்போ முன்னிலையில் 2000, அக்டோபர் 3, 4 தேதிகளில் வழக்கு விசாரணைக்கு வந்தது. விஷயங்களை கவனமாக சீர்தூக்கிப் பார்த்த பின்பு யெகோவாவின் சாட்சிகள் சார்பாக நீதிபதி தீர்ப்பளித்தார். “உயர்ந்த நன்னெறிகளையும் ஆன்மீக நெறிகளையும் பின்பற்றும்படி அயலகத்தில் உள்ளவர்களை உற்சாகப்படுத்துவதற்காக மனுதாரர்கள் வீட்டுக்கு வீடு செல்கையில் அவர்கள் முதல் கிறிஸ்தவ சபையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறார்கள். . . . ஜனங்களை அவர்களுடைய வீடுகளில் சந்திப்பது கிறிஸ்தவர்களது சமூக சேவையாகும். பயனுள்ளதும் பொதுவாக ஜனங்களுடைய அக்கறைக்குரியதுமான விஷயங்களில் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதற்காக சுமார் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ப்லேன்வில் நகர மக்களை யெகோவாவின் சாட்சிகள் சந்திக்கிறார்கள்” என நீதிபதி கிரேப்போ ஒப்புக்கொண்டார். “ஊழியம் செய்வதற்கு அனுமதி சீட்டைப் பெற வேண்டும் என்ற தேவையிலிருந்து யெகோவாவின் சாட்சிகளுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக [நீதிமன்றம்] தீர்ப்பளிக்கிறது” என தனது தீர்ப்பில் நீதிபதி கிரேப்போ குறிப்பிட்டார்.

நீதிபதி கிரேப்போவின் தீர்ப்பை கியுபெக்கின் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ப்லேன்வில் நகரப் பேரவை மேல்முறையீடு செய்தது. 2003, ஜூன் 17-⁠ல் வழக்கு விசாரணைக்கு வந்தது; முன்னர் விசாரணை நடத்திய நீதிபதியின் தீர்ப்பை ஆதரிக்கும் விதத்தில் 2003, ஆகஸ்ட் 27-⁠ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. போதிப்பதன் மூலமும் வினியோகிப்பதன் மூலமும் மத நம்பிக்கைகளை வெளிப்படுத்துவதற்கு உள்ள உரிமை உட்பட மத சம்பந்தப்பட்ட உரிமைகளைப் பாதுகாக்கிற, கனடாவின் உரிமைகள் மற்றும் சுயாதீனங்களின் சாசனத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றம் இந்த அறிக்கையை வெளியிட்டது: “யெகோவாவின் சாட்சிகளது மத சுதந்திரத்தையும் ப்லேன்வில் நகர மக்களது எண்ணம், நம்பிக்கை, கருத்து, சொல் ஆகியவற்றிற்கான சுதந்திரத்தையும் சர்ச்சைக்குரிய துணைச்சட்டம் கடுமையாய் கட்டுப்படுத்துகிறது. . . . ப்லேன்வில் நகர மக்கள் யெகோவாவின் சாட்சிகளுடைய நடவடிக்கைகள் பங்கம் விளைவிப்பதாக புகார் செய்யவில்லை, ஆனால் அநேக விற்பனையாளர்கள் மற்றும் நடமாடும் வியாபாரிகளுடைய நடவடிக்கைகளைப் பற்றியே அவர்கள் புகார் செய்திருப்பதாக ஆதாரம் காட்டுகிறது. மத காரணங்களுக்காக வீடு வீடாகப் போவதை கட்டுப்படுத்துவதற்கு எந்தக் கட்டாயமும் எழவில்லை, உண்மையில் எந்த அவசியமும் ஏற்படவில்லை. மேலும், சட்டங்கள் கவனமற்ற விதத்தில் பிறப்பிக்கப்பட்டன, முன்னதாக ஆலோசிக்காமல் அவசர அவசரமாக ஏற்றுக்கொள்ளப்பட்டன, பிரஜைகளின் தனிப்பட்ட விஷயங்களை பாதுகாப்பதாக சொல்லப்பட்டிருக்கும் அதன் குறிக்கோளுக்கு முரணாக நியாயமற்ற ரீதியில் மட்டுக்குமீறி செயல்பட்டுள்ளன. . . . சுதந்திரமான, ஜனநாயக சமுதாயத்தில் மாலை வேளையிலும் சரி, வார இறுதி நாட்களிலும் சரி, உள்ளூர் வாசிகள் யாரை தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்ளலாம், ஏற்றுக்கொள்ளக்கூடாது என்பதை தீர்மானிப்பதில் நகரப் பேரவை மற்றவர்கள் மீது அதிகாரம் செலுத்தக் கூடாது. சர்ச்சைக்குரிய அந்தத் துணைச்சட்டம் யெகோவாவின் சாட்சிகளுக்குப் பொருந்தாது என முந்தின நீதிபதி தீர்ப்பளித்திருந்தது சரியே.”

குறுகிய மனதுடன் ஒடுக்குபவர்களிடமிருந்து அனைத்து கியுபெக் பிரஜைகளின் மத உரிமையையும் பாதுகாக்கும் இந்த வழக்கில் கியுபெக்கின் நீதிமன்றங்கள் உரிமைகளின் சாசனத்தைப் பயன்படுத்தியதற்காக யெகோவாவின் சாட்சிகள் சந்தோஷப்படுகிறார்கள். (g04 7/8)

[பக்கம் 24-ன் தேசப்படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

கனடா

ப்லேன்வில்

மான்ட்ரீல்

அ.ஐ.மா.

[பக்கம் 24-ன் படம்]

கனடாவின் உரிமைகள் மற்றும் சுயாதீனங்களின் சாசனம் கனடா நாட்டு பிரஜைகள் ஒவ்வொருவருடைய உரிமைகளையும் பாதுகாக்கிறது

[பக்கம் 25-ன் படங்கள்]

ப்லேன்வில்லில் யெகோவாவின் சாட்சிகள் இப்போது சுதந்திரமாக ஊழியத்தில் ஈடுபடலாம். உள்படம்: அவர்களது ராஜ்ய மன்றத்தில் கூடுகிறார்கள்