Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பியர்—பொன்னிற பானத்தின் கதை

பியர்—பொன்னிற பானத்தின் கதை

பியர்பொன்னிற பானத்தின் கதை

செக் குடியரசிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

தாகத்தில் தவிக்கும் ஒருவர் பெரும்பாலும் எதைக் குடிக்க வேண்டுமென ஆசைப்படுவார்? அநேக நாடுகளில், கடினமாக உழைக்கும் தொழிலாளியாக இருந்தாலும்சரி, வியாபாரம் செய்யும் தொழிலதிபராக இருந்தாலும்சரி, அவருக்குப் பிடித்தமான பொன்னிற பானத்தை பருகவே ஆசைப்படுவார். பிரத்தியேக கசப்பு சுவையுடன், வெள்ளை நுரை ததும்பி நிற்கும் அந்த பானம் அவர் மனக்கண் முன் வரலாம். ‘ஜில்லென்ற ஒரு கிளாஸ் பியருக்காக எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம்!’ என்றும் அவர் சொல்லிக் கொள்வார்.

மனிதன் தோன்றிய காலம் தொட்டே பியரும் இருந்து வந்திருக்கிறது எனலாம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அது பிரபலமான பானமாக வலம் வந்திருக்கிறது; பல பகுதிகளில், அது உள்ளூர் கலாச்சாரத்தோடு ஒன்றிப் போயிருக்கிறது. ஆனால், சில ஐரோப்பிய நாடுகளில் மிதமீறி குடிப்பவர்களின் பிரச்சினைகளுக்கு இதுவே காரணமாக ஆகியிருப்பது வருத்தகரமான விஷயம். இருந்தாலும் மிதமாக குடிக்கையில் அதன் தனித்தன்மைகளும் சுவையும் இதைப் பருகுபவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த பிரபல பானத்தின் கதையை நாம் சற்று ஆராயலாம்.

ஆரம்பம் எப்போது?

மெசபடோமியாவில், பூர்வ சுமேரியர்கள் வாழ்ந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட ஆப்பு வடிவ எழுத்துப் பலகை துண்டுகள் குறிப்பிடுகிறபடி, பொ.ச.மு. மூன்றாம் ஆயிர வருட காலத்திலேயே பியர் இருந்திருக்கிறது. அதே காலப்பகுதியில் பாபிலோனியர்களும் எகிப்தியர்களும்கூட அந்த பானத்தைப் பருகினார்கள். பாபிலோனில் 19 வகை பியர் தயாரிக்கப்பட்டது, அது தயாரிக்கப்படும் விதத்தைக் கட்டுப்படுத்தும் சட்டங்கள்கூட ஹமுராபியின் சட்டத்தொகுப்பில் சேர்க்கப்பட்டிருந்தன. உதாரணமாக அந்த சட்டங்கள், பியரின் விலையை நிர்ணயித்தன, அவற்றை மீறுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பூர்வ எகிப்தில் பரவலாக அது தயாரிக்கப்பட்டது, அது பெரிதும் விரும்பிப் பருகும் ஒரு பானமானது. பியர் தயாரிப்பதைப் பற்றிய எழுத்து வடிவில் காணப்படும் மிகப் பழமையான செய்முறை குறிப்பு அங்கு தொல்லியல் ஆராய்ச்சிகள் மூலம் கண்டெடுக்கப்பட்டது.

பானத்தை தயாரிப்பதில் உட்பட்டுள்ள தொழில்நுட்பம் இறுதியில் ஐரோப்பாவிலும் நுழைந்தது. கெல்டிய இனத்தவரும் ஜெர்மானியரும் இன்னும் பிற இனத்தவரும் பியரை பருகி மகிழ்ந்ததைப் பற்றி பொது சகாப்தத்தின் ஆரம்பத்தில் வாழ்ந்த சில ரோம சரித்திராசிரியர்கள் குறிப்பிட்டார்கள். ஸ்காண்டிநேவிய புராணக்கதையின்படி, மரணத்திற்குப் பிறகு வீராதி வீரர்கள் பிரவேசிக்கும் வல்ஹால்லா என்ற அறையில்கூட அவர்களது கோப்பைகள் பியரினால் நிரம்பி வழிந்ததாக ஸ்காண்டிநேவியர்கள் நம்பினார்கள்.

இடைக்காலத்தின்போது ஐரோப்பாவில் பியர் தயாரிக்கும் பணி துறவி மடங்களில் நடைபெற்றது. ஐரோப்பிய துறவிகள் ஹாப் (hop) எனப்படும் ஒருவகை கசப்புக் காய்களை பதனம் செய்வதற்குப் பயன்படுத்தி பியர் தயாரிக்கும் தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் செய்தார்கள். 19-⁠ம் நூற்றாண்டில் ஏற்பட்ட தொழில்மயமாக்கல் காரணமாக இயந்திரங்களின் மூலம் பியர் தயாரிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது; இந்தப் பிரபல பானத்தின் சரித்திரத்தில் இது ஒரு மைல் கல்லாகும். பிறகு மிக முக்கியமான சில அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன.

பியரை புளிக்கச் செய்த ஈஸ்ட்டில் சில உயிரிகள் இருந்ததை பிரான்சு நாட்டு வேதியியல் வல்லுநரும் நுண்ணுயிரியல் நிபுணருமான லூயி பாஸ்டர் கண்டுபிடித்தார். சர்க்கரையை மதுபானமாக மாற்றுவதை மிக துல்லியமாக கட்டுப்பாட்டில் வைப்பதற்கு இந்தக் கண்டுபிடிப்பு உதவியது. டென்மார்க் நாட்டு தாவரவியலர் இமில் க்றிஸ்டியன் ஹான்சன் என்பவர் இந்தப் பானத்தை தயாரிப்பதில் மிகப் பிரசித்தி பெற்றவர்களில் ஒருவர் ஆனார். விதவிதமான ஈஸ்ட்டுகளை ஆராய்வதிலும் வகைப்படுத்துவதிலும் அவர் தன் வாழ்நாளை செலவிட்டார். அவரது மற்ற பணிகளோடுகூட, இந்தப் பானத்தை தயாரிக்க பயன்படுத்தப்படுகிற கசடில்லாத ஒரு வகை ஈஸ்ட்டை உற்பத்தி செய்யும் ஆராய்ச்சியில் கண்ணும் கருத்துமாய் ஈடுபட்டார். இப்படியாக பியர் தயாரிக்கும் துறையில் ஹான்சன் நிஜமாகவே ஒரு புரட்சியை ஏற்படுத்தினார்.

ஆனால் பியரை தயாரிப்பது அந்தளவு சவால்மிக்க வேலையா என்ன? நம்ப முடியாததாக தோன்றினாலும் அது பெரும் சவால்மிக்க வேலைதான். தெவிட்டாத சுவையுடைய பியரைத் தயாரிப்பதில் உட்பட்டுள்ள நுணுக்கங்களை இப்போது நாம் சுருக்கமாக ஆராய்வோம்.

உங்கள் கோப்பைக்கு வரும் முன்பு

நூற்றாண்டுகள் செல்லச் செல்ல பியரை தயாரிக்கும் தொழில்நுட்பத்தில் பெருமளவு மாற்றங்கள் நிகழ்ந்தன, இன்றும்கூட அது ஆலைக்கு ஆலை வேறுபடுகிறது. ஆனால் கிட்டத்தட்ட எல்லா பியர்களிலும் பொதுவாக நான்கு முக்கிய பொருட்கள் அடங்கியுள்ளன; அவை, பார்லி, ஹாப், தண்ணீர், ஈஸ்ட் ஆகியவை. பியரை தயாரிப்பதற்கான வழிமுறையை மொத்தம் நான்கு படிகளாக பிரிக்கலாம்: மால்ட் தயாரித்தல், வர்ட் (wort) தயாரித்தல், புளிக்க வைத்தல், பக்குவமடைய விடுதல்.

மால்ட் தயாரித்தல். இந்தப் படியில் பார்லி தரம் பிரிக்கப்படுகிறது, அளக்கப்படுகிறது, சுத்தம் செய்யப்படுகிறது. அதன் பிறகு தண்ணீரில் ஊற வைக்கப்படுகிறது; பார்லி முளைப்பதற்காக இப்படி செய்வது அவசியம். இது முளைப்பதற்கு சுமார் 14 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையில் ஐந்து முதல் ஏழு நாட்கள் எடுக்கிறது. இறுதியில் கிடைப்பதே கிரீன் மால்ட்; இது உலர வைக்கப்படுவதற்காக பிரத்தியேக, பிரமாண்டமான சூட்டடுப்புகளுக்கு மாற்றப்படுகிறது. இந்த கிரீன் மால்ட் இனியும் முளைக்காதிருப்பதற்கு, இதிலுள்ள ஈரப்பசை 2 முதல் 5 சதவீதம் வரை குறைக்கப்படுகிறது. இப்படி உலர வைக்கப்பட்ட பிறகு மால்ட்டின் முளைகள் நீக்கப்படுகின்றன, பிறகு அது மாவாக அரைக்கப்படுகிறது. இப்போது அடுத்த படிக்கு தயாராகிறது.

வர்ட் தயாரித்தல். அரைக்கப்பட்ட மால்ட் தண்ணீரில் சேர்த்து கூழாக்கப்பட்டு மெதுமெதுவாக சூடாக்கப்படுகிறது. குறிப்பிட்ட வெப்பநிலைகளில் என்ஸைம்கள் மாவுச்சத்தை தனிச்சர்க்கரையாக மாற்ற ஆரம்பிக்கின்றன. இந்நிலை நான்கு மணிநேரத்திற்கும் அதிகமாக நீடித்த பிறகு வர்ட் என்ற திரவம் உருவாகிறது; பின்னர் இந்தக் கலவை வடிக்கப்பட்டு கசடுகள் அனைத்தும் நீக்கப்படுகின்றன. அடுத்ததாக இந்தக் கலவை கொதிக்க வைக்கப்படுகிறது; இது என்ஸைம்களின் செயல்பாட்டை நிறுத்திவிடுகிறது. கொதிக்க வைக்கையில் இந்த வர்ட்டில் ஹாப்புகள் சேர்க்கப்படுகின்றன; இவை பியருக்கே உரிய கசப்பு சுவையை அளிக்கின்றன. இப்படி சுமார் இரண்டு மணிநேரம் கொதித்த பிறகு தேவையான வெப்பநிலைக்கு வர்ட் குளிர்விக்கப்படுகிறது.

புளிக்க வைத்தல். பியர் தயாரிப்பில் இதுவே மிக முக்கியமான படி எனலாம். ஈஸ்ட் சேர்க்கப்பட்டதன் காரணமாக, வர்ட்டிலுள்ள தனிச்சர்க்கரை ஆல்கஹாலாகவும் கார்பன் டையாக்ஸைடாகவும் மாறுகிறது. ஏல் பியர் (ale) அல்லது லாகர் பியர் (lager) என எந்த வகை பியர் தயாரிக்கப்படுகிறதோ அதற்கேற்ப புளிக்க வைக்கப்படுகிற காலமும் (பெரும்பாலும் ஒரு வாரத்திற்குள்) வெப்பநிலையும் வேறுபடுகிறது. கிரீன் பியர் என்று அழைக்கப்படும் பக்குவமடையாத இந்த பியர், பக்குவமடைவதற்காக லாகர் நிலவறையில் உள்ள சேமிப்புக் கலங்களுக்கு மாற்றப்படுகிறது.

பக்குவமடைய விடுதல். இந்த நிலையில் பியர் அதற்கே உரிய சுவையையும் மணத்தையும் பெறுகிறது; அதிலுள்ள கார்பன் டையாக்ஸைடும்கூட அந்த பியரை நுரையுடன் பொங்கி எழும்பும்படி செய்கிறது. எந்த வகை பியர் என்பதைப் பொறுத்து, பக்குவமடைவதற்கு மூன்று வாரங்களிலிருந்து சில மாதங்கள் வரை விடப்படலாம். பின்பு, அது மரப் பீப்பாய்களிலோ பாட்டில்களிலோ அடைக்கப்படுகிறது; இறுதியில், அது போய்ச் சேர வேண்டிய இடத்தை அடைந்துவிடுகிறது; ஒருவேளை அது உங்கள் டேபிளாகக்கூட இருக்கலாம்! சரி, நீங்கள் எந்த வகை பியரை பருகிப் பார்க்க ஆசைப்படுகிறீர்கள்?

பல்வகை பியர்

உண்மையில், பியர்கள் ஒன்றுக்கொன்று பெருமளவு வேறுபடுகின்றன. வெளிறிய நிறத்திலோ அடர் நிறத்திலோ, இன்சுவையாகவோ கசப்பாகவோ, பார்லியிலிருந்தோ கோதுமையிலிருந்தோ தயாரிக்கப்பட்ட பியரை நீங்கள் பருகலாம். தயாரிப்பின்போது பயன்படுத்தப்படுகிற தண்ணீரின் ருசி, மால்ட்டின் வகை, பின்பற்றப்படுகிற தொழில்நுட்பம், சேர்க்கப்படுகிற ஈஸ்ட்டுகள் போன்ற பல அம்சங்களை பொறுத்தே பியரின் சுவை அமைகிறது.

பில்ஸ்னர் (அல்லது பில்ஸ்) என்ற வெளிறிய நிறத்திலிருக்கும் உயர் ரக லாகர் பியர் மிகப் பிரபலமான ஒரு பியர் ஆகும். உலகெங்குமுள்ள நூற்றுக்கணக்கான பியர் உற்பத்தி ஆலைகளில் இந்த வகை பியர் தயாரிக்கப்படுகிறது. இருந்தாலும் ஒரிஜினல் பில்ஸ்னர் செக் குடியரசிலுள்ள பில்ஸன் என்ற நகரத்தில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. தொழில்நுட்பம் மட்டுமல்ல பயன்படுத்தப்படுகிற பொருட்களும் அதன் தயாரிப்பின் இரகசியத்தில் அடங்கியுள்ளது. அதில், மென்னீர் (soft water) உயர் ரக மால்ட், சரியான வகை ஈஸ்ட் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.​—⁠பக்கத்தில் உள்ள பெட்டியைக் காண்க.

அருமையான மற்றொரு வகை பியர் இருக்கிறது; அதுதான் வைஸ் பியர், அதாவது கோதுமையிலிருந்து தயாரிக்கப்படும் பியர்; இது முக்கியமாய் ஜெர்மானியர் பெரிதும் விரும்பிப் பருகும் பானமாகும். பிரிட்டனில் விசேஷித்து விளங்கும் பியர் வகைகள் போர்ட்டர், ஸ்டவுட் என்பவை. போர்ட்டர் பியர் சாராயச்சத்து நிறைந்தது, மேற்புறம் புளிக்கச் செய்யும் ஈஸ்ட் சேர்க்கப்பட்டது; வறுக்கப்பட்ட மால்ட்டிலிருந்து தயாரிக்கப்படுவதால் இந்த பியர் அடர் நிறத்துடன் இருக்கிறது. முதன்முதலாக 18-⁠ம் நூற்றாண்டில் போர்ட்டர் பியர் லண்டனில் தயாரிக்கப்பட்டது. ஆரம்பத்தில் போர்ட்டர்கள் போன்ற கடின உழைப்பாளிகளுக்கு “போஷாக்கு” அளிப்பதற்காகவே இது தயாரிக்கப்பட்டது. ஸ்டவுட் பியர் அடர்த்தியான நிறமும் சாராயச்சத்தும் மிக்கதாகும்; இது பாரம்பரிய போர்ட்டர் பியரிலிருந்து சற்று வேறுபட்டது, கின்னஸ் குடும்பத்தாரால் அயர்லாந்திலும் உலகெங்கிலும் இது பிரபலமடைந்தது. பொதுவாக லாக்டோஸ் (பால் சர்க்கரை) அடங்கிய இன்சுவையுள்ள ஆங்கிலேயரது ஸ்டவுட்டை அல்லது இன்சுவையற்றதும், கசப்பானதும், அதிக சாராயச்சத்து நிறைந்ததுமான அயர்லாந்தினரது ஸ்டவுட்டை ஆனந்தமாய் அருந்தலாம்.

பியரை ரசித்து ருசித்து அருந்துபவர்கள் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கிய அம்சம் அதை எப்படி குடிக்கிறார்கள் என்பது; அதாவது அதை பாட்டிலிலிருந்து குடிக்கிறார்களா, கேனிலிருந்து குடிக்கிறார்களா, பீப்பாயிலிருந்து பிடித்துக் குடிக்கிறார்களா என்பது. அமெரிக்கர்களுக்கு ஜில்லென்ற பியர் என்றால் கொள்ளைப் பிரியம். மற்றவர்களுக்கு, சாதாரண வெப்பநிலையில் இருந்தாலும் சரி, பப் (Pub) நிலவறையில் வைக்கப்பட்டுள்ள பீப்பாயிலிருந்து நேரடியாக பிடித்துக் கொஞ்சம் ஜில்லென கொடுத்தாலும் சரி பிரச்சினையில்லை.

பியர்களில் பல வகைகள் இருப்பது உண்மைதான். அதை நீங்கள் மிதமாக குடிக்கையில் உடல்நலம் சம்பந்தமாக சில நன்மைகளை அடையலாம். சொல்லப்போனால், அதில் பல்வேறு முக்கிய வைட்டமின்களும் தாதுப் பொருட்களும் இருக்கின்றன; அவை ரிபோஃபிளேவின், ஃபோலிக் அமிலம், குரோமியம், துத்தநாகம் போன்றவை. பியரை மிதமாக பருகுவது இருதய நோயையும் தோல் கோளாறுகளையும் தவிர்ப்பதற்கு உதவலாமென சில அதிகாரப்பூர்வ தகவல்கள் சொல்கின்றன. கிடைக்கக்கூடிய பல விதமான பிராண்டுகளிலும் வகைகளிலுமிருந்து நீங்கள் தேர்ந்தெடுத்து, மிதமாக குடிப்பீர்களென்றால் இந்த அருமையான, புத்துணர்ச்சி அளிக்கும் பானத்தை நிச்சயம் அனுபவித்து மகிழ்வீர்கள். அடுத்த முறை வெள்ளை நுரை ததும்பும் இந்தப் பொன்னிற பானத்தை கிளாஸில் பார்க்கையில் அதன் சுவாரஸ்யமான கதையை மனதில் சற்று ஓட விடுங்களேன்! (g04 7/8)

[பக்கம் 21-ன் பெட்டி/படம்]

தயாரிப்பில் பங்கேற்கும் முக்கிய கதாபாத்திரங்கள்

கடந்த காலங்களில் அநேக திறம்பட்ட நிபுணர்கள் பியர் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தார்கள். அவர்களில் சிலர் இதோ:

மால்ட் தயாரிப்பவர்​—⁠பியர் தயாரிப்பதில் முதல் முக்கிய கதாபாத்திரம். இவர் பார்லியிலிருந்தும் கோதுமையிலிருந்தும் மால்ட்டை தயாரிக்க நியமிக்கப்பட்டார். தானியம் முளைப்பதையும், கிரீன் மால்ட்டை பிரமாண்டமான சூட்டடுப்பில் உலர வைக்கப்படுவதையும் கண்காணித்தார். மால்ட்டின் தரத்தைப் பொருத்தே பெருமளவு பியரின் சுவை அமையுமாதலால் இவருக்கு அதிக பொறுப்பு இருந்தது.

காய்ச்சுபவர் (மேலே படத்தில்)​—⁠கொதிக்க வைக்கும் பொறுப்பு இவருடையது. முதலாவதாக, அரைக்கப்பட்ட மால்ட்டை தண்ணீரில் கரைத்தார், பிறகு கொதிக்கும்போது அதில் ஹாப்புகளை சேர்த்தார். வர்ட் தயாரிப்பதே அவரது பணி.

நிலவறை நிபுணர்​—⁠பியர் தொட்டிகளிலுள்ள பியர் புளிப்பேற்றப்படுவதையும் லாகர் நிலவறையில் அது பக்குவமடைவதையும் கண்காணித்த அனுபவசாலியான நிபுணர். அதன் பிறகு பருகுவதற்குத் தயார் நிலையிலுள்ள பியரை அவர் சிறிய கலங்களுக்கு மாற்றினார்.

[படத்திற்கான நன்றி]

S laskavým svolením Pivovarského muzea v Plzni

[பக்கம் 22-ன் பெட்டி/படங்கள்]

பில்ஸ்னர்அதிகளவில் காப்பியடிக்கப்பட்ட பியர்

1295-⁠ல் இதன் தயாரிப்பு ஆரம்பமானது. போஹிமியாவின் அரசர் இரண்டாம் வென்சஸ்லாஸ் என்பவர் பில்ஸன் என்ற நகரை நிர்மாணித்தார்; அதன் பின் சீக்கிரத்திலேயே, பில்ஸன் நகரவாசிகளான 260 பேருக்கு பியர் தயாரிக்க அனுமதி அளித்தார். ஆரம்பத்தில் அவர்கள் சிறிய அளவில் தங்கள் வீடுகளிலேயே பியரை தயாரித்தார்கள், பிறகு சங்கங்களை அமைத்து பியர் தயாரிக்கும் ஆலைகளை அமைத்தார்கள். இருந்தாலும் காலப்போக்கில் போஹிமியாவின் பொருளாதார நிலையிலும் கலாச்சாரத்திலும் பின்னடைவு ஏற்பட்டது; இதனால் பியர் தயாரிப்பும் பாதிக்கப்பட்டது. பாரம்பரிய முறையைப் பின்பற்றாமல் அவர்களது சொந்த செய்முறை குறிப்புகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட பியர்கள் பெரும்பாலும் சுவையற்றவையாக, பியர் என சொல்லிக்கொள்ளவே அருகதையற்றவையாக இருந்தன.

அந்த சமயத்தில் ஐரோப்பாவில் இரண்டு வகை பியர் தயாரிக்கப்பட்டன. முக்கியமாக மேற்புறம் புளிக்கச் செய்யும் ஈஸ்ட் சேர்க்கப்பட்ட பியர் போஹிமியாவில் தயாரிக்கப்பட்டது; கீழ்ப்புறம் புளிக்கச் செய்யும் ஈஸ்ட் சேர்த்து தயாரிக்கப்பட்ட, அதைவிட உயர் ரக பியர் முக்கியமாய் பவரியாவில் பிரபலமடைந்திருந்தது. பவரியாவின் லாகர் பியர்களுக்கும் பில்ஸன் பியர்களுக்கும் இடையே பெரும் வித்தியாசம் இருந்தது.

1839-⁠ல் முக்கிய மாற்றம் நிகழ்ந்தது. பில்ஸன் நகரவாசிகளில் சுமார் 200 பேர் சூழ்நிலையை சரிப்படுத்த முன்வந்தார்கள். அவர்கள் பர்ஜிஸ் ப்ரூயரி என்ற உற்பத்தி ஆலையை ஸ்தாபித்தார்கள்; இங்கு கீழ்ப்புறம் புளிக்கச் செய்யும் ஈஸ்ட் சேர்க்கப்பட்ட, அதாவது பவரியா ரக பியர் தயாரிக்கப்பட்டது. பியர் தயாரிப்பில் தலைசிறந்து விளங்கிய யோசெஃப் கிரால் என்பவர் பவரியாவுக்கு வரும்படி அழைக்கப்பட்டார். அவர் உடனடியாக பவரியாவுக்கே உரிய பியரைத் தயாரிப்பதில் ஈடுபட்டார். அவரது முயற்சி வித்தியாசமான பலனை அளித்தது; என்றாலும், எதிர்பார்த்ததைவிட அருமையான பலனை அளித்தது. கிராலின் அனுபவமும் உள்ளூரில் கிடைத்த சிறந்த பொருட்களும் சேர்ந்து உலகத்தையே கலக்கிய பியரைத் தயாரிப்பதற்கு கைகொடுத்தன. ஏன் அப்படி சொல்கிறோம்? ஏனென்றால் அதன் சுவையும் நிறமும் மணமும் தனித்தன்மை வாய்ந்தவையாக விளங்கின. எனினும் பில்ஸ்னர் வகை பியர் உலகப் புகழ்பெற்றதாக இருந்தாலும் அதில் சில குறைபாடுகள் இருக்கத்தான் செய்தன. பியர் தயாரிப்பவர்களில் அநேகர் இதிலிருந்து லாபம் சம்பாதிக்கும் ஆசையில் தாங்கள் தயாரித்த பியருக்கு பில்ஸ்னர் என பெயர் சூட்டினார்கள். இப்படியாக பில்ஸ்னர் பிரபலமடைந்தது; அதுமட்டுமல்ல, பொன்னிற பானங்களிலேயே மிக அதிகளவில் காப்பியடிக்கப்பட்டதாகவும் ஆனது.

[படங்கள்]

யோசெஃப் கிரால்

பில்ஸன் ப்ரூயரியிலுள்ள தண்ணீர் கோபுரம்

[படத்திற்கான நன்றி]

S laskavým svolením Pivovarského muzea v Plzni

[பக்கம் 20-ன் தேசப்படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

பில்ஸன்

[பக்கம் 2021-ன் படம்]

ரொட்டியையும் பியரையும் தயாரிப்பதை சித்தரிக்கும் எகிப்திய உருவச்சிலை

[படத்திற்கான நன்றி]

Su concessione del Ministero per i Beni e le Attività Culturali - Museo Egizio - Torino

[பக்கம் 23-ன் படங்கள்]

ஹாப்புகள், மால்ட், பியர் உற்பத்தி ஆலை