Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மோசடிக்கு ஆளாகாமல் இருப்பது எப்படி

மோசடிக்கு ஆளாகாமல் இருப்பது எப்படி

மோசடிக்கு ஆளாகாமல் இருப்பது எப்படி

“நெஞ்சத்தில் நேர்மையுள்ளவரை ஏமாற்ற முடியாது.” இது ஒரு பழமொழி. ஏனைய பழமொழிகளைப் போலவே இதுவும் நூற்றுக்கு நூறு நிஜமல்ல. ஏனென்றால், ஒவ்வொரு நாளும் நேர்மையான ஆட்கள் மோசடிக்கு ஆளாகிறார்கள்; நேர்மையாக இருப்பது மட்டுமே அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில்லை. இந்த உலகத்திலுள்ள பெரும் அறிவாளிகள் சிலர், மக்களை ஏமாற்றி அவர்களிடமிருந்து பணம் பறிப்பதற்காக சதித் திட்டம் தீட்டி, அதை செயல்படுத்துகிறார்கள். நூற்றுக்கும் அதிகமான ஆண்டுகளுக்கு முன்பு ஓர் எழுத்தாளர் இவ்வாறு குறிப்பிட்டார்: “சில ஏமாற்று வேலைகள் படுதிறமையாக செய்யப்படுவதால் அவற்றால் ஏமாந்து போகாதிருப்பதுதான் முட்டாள்தனம்.”

ஏமாற்று வேலை, வெகு காலத்திற்கு முன்பு ஏதேன் தோட்டத்திலேயே ஆரம்பித்து விட்டது. (ஆதியாகமம் 3:1-5) பழமையான சூழ்ச்சித் திட்டங்கள் பல மாற்றங்களோடு வலம் வருகின்றன; புதிது புதிதாக பல சூழ்ச்சித் திட்டங்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன. ஆகவே இவற்றிலிருந்து உங்களை எப்படி காத்துக்கொள்ளலாம்? மோசடிக்காரர்கள் ஆட்களை ஏமாற்றும் வழிகள் அனைத்தையும் தெரிந்துகொள்ள நீங்கள் பிரயாசப்பட வேண்டியதில்லை. ஆனால், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது அதற்கு ஆளாகாமல் பார்த்துக்கொள்ள உங்களுக்கு பெரிதும் உதவும்.

தனிப்பட்ட தகவலை பத்திரப்படுத்துங்கள்

ஒருவர் உங்களுடைய ‘செக்’ புக்கையோ க்ரெடிட் கார்டுகளையோ திருடினால், அவற்றை பயன்படுத்தி பொருட்களை வாங்க முடியும். உங்களுடைய வங்கிக் கணக்கு விவரங்களை திருடினால், உங்கள் பெயரில் செக்கை ஆர்டர் செய்யவோ எழுதவோ அவரால் முடியும். உங்களுடைய தனிப்பட்ட தகவலைப் பற்றி போதுமானளவு அவருக்கு தெரிந்துவிட்டால், அப்படியே ஆள்மாறாட்டமும் செய்து விடலாம். இப்படியாக உங்களுக்கே உரிய அடையாளத்தை திருடிவிட்டால் போதும், அதன்பிறகு உங்களுடைய கணக்கிலிருந்து அவரால் பணத்தை எடுக்க முடியும், உங்களுடைய க்ரெடிட் கார்டு கணக்கில் பொருட்களை வாங்க முடியும், உங்கள் பெயரில் கடனையும் வாங்க முடியும். a நீங்கள் செய்யாத குற்றத்திற்கு போலீஸார் உங்களை கைதுசெய்தும் விடலாம்!

இவ்வகை மோசடிக்கு நீங்கள் பலியாகாமல் கவனமாயிருப்பதற்கு உங்களுடைய எல்லா தனிப்பட்ட ஆவணங்களையும் பத்திரமாக வையுங்கள். உதாரணமாக, வங்கி இருப்பு விவரங்கள், செக் புக்குகள், டிரைவிங் லைசென்ஸ், தேசிய அடையாள அட்டை போன்றவற்றை பத்திரமாக வையுங்கள். அவற்றை மற்றவர்கள் பார்க்க வேண்டியதற்கான தகுந்த காரணம் இருந்தால் தவிர, உங்களுடைய தனிப்பட்ட அல்லது பண சம்பந்தமான விவரங்களை அவர்களுக்கு கொடுக்காதீர்கள். மிக முக்கியமாக க்ரெடிட் கார்ட் நம்பர்கள், வங்கிக் கணக்கு விவரங்கள் ஆகியவற்றை மற்றவர்களுக்கு தெரிவிக்கக் கூடாது. க்ரெடிட் கார்ட் மூலம் ஒரு பொருளை வாங்கும் சமயத்தில் மட்டுமே அதன் நம்பரை ஒருவருக்கு நீங்கள் தெரிவிக்க வேண்டும்.

இப்படிப்பட்ட விவரங்கள் கிடைப்பதற்காக மோசடிக்காரர்கள் சிலர் குப்பைத் தொட்டிகளை கிளறுகிறார்கள். ஆகவே, உங்களைப் பற்றிய விவரங்கள் அடங்கிய பேப்பர்களை அப்படியே தூக்கியெறிந்து விடாதீர்கள்; அவற்றை எரித்து விடுவதே அல்லது துண்டு துண்டாக கிழித்து விடுவதே ஞானமானது. உதாரணமாக, ரத்து செய்யப்பட்ட செக்குகள், வங்கி ஸ்டேட்மென்டுகள், கம்பெனியின் கொடுக்கல் வாங்கல் சம்பந்தப்பட்ட ஸ்டேட்மென்டுகள், அதோடு காலாவதியான க்ரெடிட் கார்டுகள், டிரைவர் லைசென்ஸுகள், பாஸ்போர்ட்டுகள் ஆகியவற்றை அவ்வாறு அப்புறப்படுத்துவது ஞானமானது. தபால் மூலம் நீங்கள் கேட்காமலேயே உங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் க்ரெடிட் கார்ட் விண்ணப்பங்களையும்கூட அழித்துவிடுவது ஞானமானது; ஏனென்றால் உங்களைப் பற்றிய தகவல் அவற்றில் இருப்பதால் வேறு எவரேனும் அதைத் தவறாக பயன்படுத்துவதற்கு வாய்ப்புள்ளது.

விவேகத்தைப் பயன்படுத்துங்கள்

முதலீடுகளிலிருந்து நினைத்துப் பார்க்க முடியாதளவுக்கு லாபம் கிடைக்கும் என்ற வாக்குறுதிதான் எல்லா மோசடிக்கும் அடிப்படையாக இருக்கிறது. திடீர் பணக்காரர் ஆவதற்காக தீட்டப்படும் ஒரு பொதுவான மோசடி திட்டமே பிரமிட் திட்டம். இத்திட்டத்தில் பல வித்தியாசமான முறைகள் இருக்கின்றன. என்றாலும், இதில் முதலீடு செய்பவர்கள் வேறு பல முதலீட்டாளர்களை சேர்ப்பதன் மூலம் கமிஷன் பெற்றுக்கொள்வதே பொதுவான ஒரு சூழ்ச்சி. b பெயர்ப் பட்டியலில் முதலில் இருப்பவருக்கு பணம் அனுப்பும்படி சங்கிலித்தொடர் போல் கடிதங்களை அனுப்புவதும்கூட இதுபோன்ற ஒரு முறையாகும். பட்டியலில் உங்களுடைய பெயர் முதலிடத்திற்கு வரும்போது நீங்களும் ஆயிரக்கணக்கான டாலர்களை பெற்றுக்கொள்வீர்கள் என்று உறுதியளிக்கப்படுகிறது.

பிரமிட் திட்டங்கள் எப்போதுமே தோல்வியடைகின்றன; காரணம், புதிய ஆட்களை தொடர்ந்து சேர்த்துக்கொண்டே இருப்பது முடியாத விஷயம். பின்வரும் கணக்கை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். ஐந்து பேர் சேர்ந்து ஒரு பிரமிட் திட்டத்தை ஆரம்பிக்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்; அவர்கள் ஒவ்வொருவரும் ஆளுக்கு ஐந்து பேர் வீதம் சேர்க்கும்போது 25 பேர் சேர்ந்துவிடுகிறார்கள். இவர்கள் எல்லாரும் ஐந்து பேர் வீதம் ஆட்களை சேர்க்கும்போது அந்த எண்ணிக்கை 125 ஆக பெருகிவிடுகிறது. இப்படியாக ஒன்பதாவது நிலையில் ஏறக்குறைய 20 லட்சம் பேர் சேர்ந்து விடுகிறார்கள். இவர்களும் புதிய ஆட்களை சேர்த்தால் 90 லட்சம் பேருக்கு மேல் சேர்ந்து விடுகிறார்கள்! அதற்கும் மேல் அதிகமான ஆட்களை சேர்க்க முடியாத நிலை ஒரு சமயத்தில் ஏற்படும் என்பது இத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆகவே அந்தளவு எண்ணிக்கை சேர்ந்ததும் அவர்கள் பணத்தை சுருட்டிக்கொண்டு ஓடிவிடுகிறார்கள். கடைசியில் உங்களுடைய பணத்தை நீங்கள் ஒருவேளை இழந்துவிடலாம். அதுமட்டுமல்ல நீங்கள் சேர்த்துவிட்ட ஆட்கள் தாங்கள் இழந்த பணத்தை உங்களிடமிருந்து திரும்பப் பெறுவதற்கு முயலலாம். பிரமிட் திட்டத்தின் மூலம் நீங்கள் பணம் சேர்க்க வேண்டுமென்றால், மற்றொருவர் பணம் இழக்க வேண்டியிருக்கும் என்பதை நினைவில் வையுங்கள்.

உழைப்பு எதுவும் இல்லாமலேயே உங்கள் முதலீட்டுக்காக பெரும் தொகையை லாபமாக யாரேனும் தருகிறார்களா? அப்படியானால், இந்த எச்சரிப்புக்கு கவனம் செலுத்துங்கள்: நம்பவே முடியாதளவுக்கு லாபம் கிடைக்கும் என்று ஒருவர் சொல்வாரானால் அது உண்மையில் நம்ப முடியாததுதான். “இது வித்தியாசமான ஒன்று” என நினைத்து விளம்பரதாரர் கொடுக்கும் வாக்குறுதிகளையும், அதனால் பலனடைந்தவர்களின் அறிக்கைகளையும் அவசரப்பட்டு நம்பிவிடாதீர்கள். பணத்தை வாரிக் கொடுப்பதற்கோ இரகசியங்களை எல்லாம் சொல்லிக் கொடுத்து உங்களை பணக்காரர் ஆக்குவதற்கோ யாரும் பிஸினஸ் செய்வதில்லை என்பதை நினைவில் வையுங்கள். தனக்கிருக்கும் விசேஷித்த அறிவால் உங்களுக்கு நிறைய பணம் கிடைக்கும் என ஒருவர் சொன்னால், ‘அந்த அறிவைப் பயன்படுத்தி அவர் பணக்காரர் ஆக வேண்டியதுதானே? என்னை பணக்காரராக ஆக்குவதற்கு அவர் ஏன் தன்னுடைய நேரத்தை வீணாக்குகிறார்?’ என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளலாம்.

ஒரு போட்டியில் நீங்கள் ஜெயித்துவிட்டீர்கள் அல்லது உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது என்று சொல்லப்பட்டால் என்ன செய்வீர்கள்? உற்சாக வெள்ளத்தில் மூழ்கிவிடாதீர்கள்​—⁠அது அநேகரை மோசம்போக்கிய ஒரு திட்டமாகவே இருக்கலாம். உதாரணமாக, இங்கிலாந்தை சேர்ந்த ஒரு பெண்மணிக்கு ஒரு பரிசு கிடைத்திருப்பதாக கடிதம் வந்தது. ஆனால் அந்த பரிசு சம்பந்தமான செலவுகளை ஈடுகட்டுவதற்கு அவள் 25 டாலரை கட்டணமாக அனுப்ப வேண்டியிருந்தது. அதை அனுப்பி வைத்தாள். பிறகு, பரிசு பெற்றவர்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்ததில் மூன்றாவது பரிசாக 2,45,000 டாலர் அவளுக்கு கிடைத்திருப்பதாக கனடாவிலிருந்து அவளுக்கு போன் வந்தது. ஆனால், இதிலும் உட்பட்டுள்ள செலவுக்கு கட்டணமாக அப்பரிசுத் தொகையில் ஒரு சதவீதத்தை அவள் கட்ட வேண்டியிருந்தது. அவள் 2,450 டாலரையும் அனுப்பி வைத்தாள், ஆனால் எந்தப் பரிசும் கையில் வந்து சேரவில்லை. ‘இலவச பரிசுக்கு’ நீங்கள் பணம் செலுத்த வேண்டியிருந்தால் அது ஒரு மோசடி திட்டமே. உங்களையே இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘நான் எந்தப் போட்டியிலும் சேராமலேயே எனக்கு எங்கிருந்து பரிசு கிடைக்கும்?’

நற்பெயரெடுத்தவர்களுடன் மட்டுமே பிஸினஸில் ஈடுபடுங்கள்

நேர்மையற்றவர்களை பார்த்தவுடன் கண்டுபிடித்துவிடலாம் என நினைக்கிறீர்களா? ஜாக்கிரதை! மற்றவர்களுடைய நம்பிக்கையை எவ்வாறு பெறுவது என்பதை ஏமாற்றுப் பேர்வழிகள் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள். அவ்வாறு நம்பிக்கையை சம்பாதிப்பதில் அவர்கள் படுகில்லாடிகள். நேர்மையான விற்பனையாளர்களானாலும் சரி, நேர்மையற்ற விற்பனையாளர்களானாலும் சரி, வாடிக்கையாளர்களிடம் ஒரு பொருளை விற்பதற்கு முன் அவர்களின் நம்பிக்கையை சம்பாதிக்க வேண்டும் என்பதை அறிந்திருக்கிறார்கள். அப்படியானால் யாரையுமே நம்பக்கூடாது என்று அர்த்தமல்ல, மாறாக மோசம் போகாமல் பார்த்துக்கொள்ள ஓரளவுக்கு சந்தேகக் கண்ணோட்டமும் இருப்பது முக்கியம். ஒரு நபர் நம்பகமானவரா என்பதை உங்கள் மனம் எடைபோடுவதை வைத்து முடிவுசெய்வதற்கு பதிலாக, மோசடிக்காரர்கள் பலரிடம் பளிச்சென காணப்படும் இரண்டு அடையாளங்களை வைத்து கண்டுபிடிக்க கவனமாயிருங்கள்: முதலாவதாக, நம்புவதற்கு கடினமாக இருக்கும் ஒன்றை அவர் சொல்கிறாரா? இரண்டாவதாக, சட்டென தீர்மானம் எடுக்கும்படி உங்களை அவசரப்படுத்துகிறாரா?

நம்புவதற்கு கடினமாக இருக்கும் விஷயங்கள் இன்டர்நெட்டில் நிரம்பி வழிகின்றன. இன்டர்நெட் மூலம் பயனுள்ள பொருட்களையும் சேவைகளையும் பெற முடிந்தாலும், மோசடிக்காரர்கள் தங்கள் பெயரை தெரிவிக்காமலேயே மற்றவர்களை எளிதில் மோசம் போக்குவதற்கும் அது உதவுகிறது. உங்களுக்கு ஈ-மெயில் அக்கவுண்ட் இருக்கிறதா? இருக்கிறதென்றால், உங்களுக்கு ஏகப்பட்ட ஸ்பாம் (spam), அதாவது வியாபாரம் சம்பந்தப்பட்ட ஈ-மெயில்கள் நீங்கள் கேட்காமலேயே வந்து குவிகின்றன. ஸ்பாம் மூலம் அளிக்கப்படும் பொருட்களுக்கும் சேவைகளுக்கும் பஞ்சமேயில்லை. இருந்தாலும் இவற்றில் பலவும் பொய்யானவை. ஒரு ஈ-மெயிலை படித்து அதில் குறிப்பிட்டுள்ள ஏதாவது பொருளுக்காகவோ சேவைக்காகவோ பணத்தை அனுப்பினால் ஒருவேளை உங்களுக்கு ஒன்றுமே கிடைக்காமல் போகலாம். அப்படி ஏதாவது கிடைத்தாலும்கூட நீங்கள் கொடுத்த பணத்திற்குத் தகுந்த மதிப்புள்ளதாக அது இருக்காது. ஒரு சிறந்த ஆலோசனை என்னவென்றால், ஸ்பாம் அனுப்பும் எவரிடமிருந்தும் எதையும் ஒருபோதும் வாங்காதீர்கள்.

ஏதோவொரு பொருளை விற்பதாக ஃபோன் செய்பவர்கள் விஷயத்திலும் இந்த ஆலோசனை பொருந்தும். டெலிஃபோன் மூலம் வியாபாரம் நடத்தும் அநேகர் சட்டமுறைப்படி தொழில் நடத்துபவர்களே, இருந்தாலும் டெலிமார்க்கெட்டிங் மோசடி திட்டங்கள் மூலம் ஒவ்வொரு ஆண்டும் மக்களிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்யப்படுகிறது. விற்பனை சம்பந்தமாக ஃபோனில் தொடர்பு கொள்கிறவரிடம் வெறுமனே பேசுவதன் மூலம் அவர் சொல்வது நம்பத்தகுந்ததா என்பதை அறிந்துகொள்ள முடியாது. ஒரு மோசடிக்காரன், வங்கியின் அல்லது க்ரெடிட் கார்ட் பாதுகாப்பு ஏஜென்ஸியின் பிரதிநிதி போலவும் நடிக்கலாம். ஒருவர் உங்களுக்கு ஃபோன் செய்து நீங்கள் கணக்கு வைத்திருக்கும் ஒரு வங்கியையோ ஒரு கம்பெனியையோ சேர்ந்தவர் என சொல்லி, அங்கு நீங்கள் ஏற்கெனவே கொடுத்துள்ள தகவல்களை கேட்பாராகில் அந்த நபரைக் குறித்து நீங்கள் சந்தேகப்படுவது நியாயமே. அப்படி ஒருவர் கேட்பாராகில், அவருடைய ஃபோன் நம்பரை சொல்லும்படி நீங்கள் கேட்கலாம். அது வங்கியின் அல்லது ஏஜென்ஸியின் நம்பர்தான் என்பதை உறுதிசெய்தபின் அவருக்கு ஃபோன் செய்யலாம்.

ஃபோனில் தொடர்பு கொள்ளும் முன்பின் தெரியாத ஒருவரிடம் உங்களுடைய க்ரெடிட் கார்ட் எண்ணையோ மற்ற தனிப்பட்ட தகவல்களையோ கொடுக்காமலிருப்பதே சிறந்தது. ஒருவர் ஃபோனில் உங்களிடம் தொடர்பு கொண்டு ஒரு பொருளை விற்பதாக சொன்னால், அது உங்களுக்கு தேவையில்லாத பொருளாக இருந்தால், “ஸாரி, எனக்கு பழக்கமில்லாத ஆட்களுடன் ஃபோனில் எந்த பிஸினஸ் சமாச்சாரத்தையும் வைத்துக்கொள்வதில்லை” என நாசூக்காக சொல்லிவிட்டு அந்த டெலிஃபோன் அழைப்பை ‘கட்’ செய்து விடலாம். உங்களிடம் பித்தலாட்டம் செய்ய முயலும் ஒரு புதியவரோடு நீங்கள் அநாவசியமாக பேச்சு வைத்துக்கொள்ள வேண்டியதில்லை.

நற்பெயரெடுத்த வியாபார நிறுவனங்களுடனும் ஆட்களுடனும் மட்டுமே பிஸினஸ் வைத்துக்கொள்ளுங்கள். அங்கீகாரம் பெற்ற கம்பெனிகள் அநேகம் இருக்கின்றன; அப்படிப்பட்ட கம்பெனிகளோடு ஃபோன் மூலமோ இன்டர்நெட் மூலமோ எந்த பயமுமின்றி வியாபாரம் செய்யலாம். முடிந்தால், தனிப்பட்ட ஒரு நிறுவனத்தின் உதவியோடு சேல்ஸ்மேனையும், கம்பெனியையும், முதலீட்டையும் பற்றிய விஷயங்களை அறிந்துகொள்ளுங்கள். முதலீடு பற்றிய விவரத்தை தரும்படி கேளுங்கள், அதை கவனமாக படித்து அது நம்பத்தகுந்ததா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சட்டென தீர்மானிக்கும்படி உங்களை அவசரப்படுத்துவதற்கோ வற்புறுத்துவதற்கோ இடமளிக்காதீர்கள்.

விவரங்களை எழுதி வையுங்கள்

மோசடிக்காரர்கள் எல்லாருமே ஆரம்பத்தில் மோசடிக்காரர்களாக இருப்பதில்லை. நல்ல எண்ணத்தோடு ஆரம்பிக்கப்பட்ட ஒரு பிஸினஸ் நஷ்டத்தில் முடிவடையலாம். அப்படி நேரிடுகையில் அதை நடத்துபவர்கள் பீதியடைந்து தங்களுடைய இழப்பை ஈடுகட்ட தில்லுமுல்லு செயல்களில் இறங்கலாம். பிஸினஸ் எக்ஸிக்யூட்டிவ்கள் கம்பெனியின் வருவாயையும் லாபத்தையும் பற்றி பொய்க் கணக்கு காட்டுவதையும் பிறகு நஷ்டமடைகையில் இருக்கிற பணத்தை சுருட்டிக் கொண்டு தலைமறைவாகி விடுவதையும் பற்றி நீங்கள் நிச்சயம் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

மோசடியிலிருந்தும் தவறாக புரிந்துகொள்வதிலிருந்தும் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமென்றால், நீங்கள் பெரியளவில் எந்தவொரு முதலீட்டையும் அளிப்பதற்கு முன்பு விவரங்களை எழுத்தில் வாங்க வேண்டும். நீங்கள் கையெழுத்திடும் எந்தவொரு ஒப்பந்தத்திலும், முதலீட்டையும் உறுதிமொழிகளையும் பற்றிய நிபந்தனைகள் எல்லாம் எழுதப்பட்டிருக்க வேண்டும். நீங்கள் அளிக்கும் முதலீடு எவ்வளவுதான் நம்பத்தகுந்ததாக தோன்றினாலும், நினைத்தபடியே எல்லாம் நடக்கும் என யாராலும் உறுதியாக சொல்ல முடியாது என்பதையும் அறிந்துகொள்ளுங்கள். (பிரசங்கி 9:11) சொல்லப்போனால், எந்த ஆபத்தும் இல்லாத முதலீடு என்று ஒன்றுமே இல்லை. ஆகவே, பிஸினஸ் தோல்வியடைந்தால் அதில் முதலீடு செய்துள்ள ஒவ்வொருவருக்கும் என்னென்ன கடமைகளும் பொறுப்புகளும் வரும் என்பது முன்கூட்டியே ஒப்பந்தத்தில் குறிப்பாக எழுதப்பட்டிருக்க வேண்டும்.

இப்போது சுருக்கமாக கலந்தாலோசித்த விஷயங்களைக் குறித்து கவனமாய் இருந்து அவற்றிலுள்ள அடிப்படை நியமங்களை பின்பற்றினால், மோசடிக்காரர்களிடம் நீங்கள் எளிதில் சிக்கிவிட மாட்டீர்கள். பைபிளின் ஒரு பழங்கால முதுமொழி மிகச் சிறந்த ஆலோசனை அளிக்கிறது. அது இவ்வாறு கூறுகிறது: “பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்; விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்.” (நீதிமொழிகள் 14:15) ஒரு மோசடிக்காரன் தான் சொல்வதை அப்படியே நம்பிவிடும் அனுபவமற்ற ஆட்களை குறிவைக்கிறான். மோசடிக்கு ஆளாகாமல் முன்னெச்சரிக்கையோடு இருப்பவர்கள் வெகு சிலர்தான் என்பதே வருந்தத்தக்க விஷயம். (g04 7/22)

[அடிக்குறிப்புகள்]

b பிரமிட் திட்டம் என்பது, “மல்டிலெவல் மார்க்கெட்டிங் புரோகிராம் ஆகும். இத்திட்டத்தில் சேருபவர்கள் தங்களைப் போல் மற்றவர்களையும் சேர்ப்பதற்காக நுழைவுக் கட்டணம் செலுத்த வேண்டும்.” பொதுவாக இப்படிப்பட்ட திட்டங்களில் விற்பனை என்பது இருக்காது.

[பக்கம் 7-ன் சிறு குறிப்பு]

நம்பவே முடியாதளவுக்கு லாபம் கிடைக்கும் என்று ஒருவர் சொல்வாரானால் அது உண்மையில் நம்ப முடியாததுதான்

[பக்கம் 6-ன் பெட்டி/படம்]

மோசடிக்கு ஆளானவர்களின் கவனத்திற்கு

மோசடிக்கு ஆளானவர்கள் அவமானத்திலும் குற்றவுணர்விலும் கூனிக்குறுகி விடுகிறார்கள், நிலைகுலைந்து போகிறார்கள், தங்கள் மீதே கோபம் கொள்கிறார்கள். நீங்கள் அவர்களில் ஒருவராக இருந்தால் உங்கள்மீதே குற்றம் காணாதீர்கள். நீங்கள் சிக்கிவிட்டது உண்மைதான், ஆனால் குற்றம் உங்களுடையது அல்ல, உங்களை ஏமாற்றியவரே குற்றவாளி. நீங்கள் தவறு செய்திருந்தால் அதை மனதில் ஒப்புக்கொண்டு, வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேறுங்கள். நீங்கள் ஒரு முட்டாள் என்று முடிவு கட்டிவிடாதீர்கள். இந்த ஏமாற்றுப் பேர்வழிகள் மகா புத்திசாலிகளை​—⁠பெருந் தலைவர்களையும் பாங்க் மானேஜர்களையும், எக்ஸிக்யூட்டிவ்களையும் ஃபைனான்ஸ் மானேஜர்களையும், வழக்கறிஞர்களையும் இன்னும் பலரையும்​—⁠திறமையாக ஏமாற்றிவிடுகிறார்கள் என்பதை நினைவில் வையுங்கள்.

ஏமாற்று வலையில் வீழ்பவர்கள் பணத்தை அல்லது சொத்துக்களை மட்டுமல்ல, ஆனால் தன்னம்பிக்கையையும், சுயமரியாதையையும்கூட இழந்துவிடுகிறார்கள். நண்பர் என கருதிய ஒருவரால் ஏமாற்றப்படுவது நம்பிக்கை துரோகம் செய்யப்படுவதாகும். அவ்வாறு ஏமாற்றப்படுவது நிலைகுலைய வைக்கிறது. உங்களுடைய மனபாரம் நீங்கும் வரைக்கும் அதைக் கொட்டித் தீருங்கள். நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒருவரிடம் அதைப் பற்றி பேசுவது பெரும்பாலும் உதவியாயிருக்கும். ஜெபமும்கூட மிகுந்த ஆறுதல் அளிக்கும். (பிலிப்பியர் 4:6-8) இருந்தாலும், ஒரேயடியாக அதைப் பற்றியே கவலைப்பட்டுக் கொண்டிருக்காமல் அதை மறந்துவிடுவதற்கு ஒரு சமயம் உண்டு என்பதையும் அறிந்துகொள்ளுங்கள். அதைப் பற்றியே ஏன் கவலைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும்? பிரயோஜனமான இலக்குகளை வைத்து, அவற்றை அடைய முயலுங்கள்.

இழந்தவற்றை திரும்ப பெறுவதற்கான சூழ்ச்சித் திட்டங்களைக் குறித்து கவனமாயிருங்கள். வஞ்சிக்கப்பட்டவர் இழந்த பணத்தை திரும்பப் பெறுவதற்கு உதவி செய்வதாக ஏமாற்றுப் பேர்வழிகள் ஃபோனில் சொல்லலாம். ஆனால் அந்த நபரை மீண்டும் ஏமாற்றுவதே அவர்களுடைய குறிக்கோள்.

[பக்கம் 8, 9-ன் பெட்டி/படம்]

ஸ்பாம் மோசடிகள்—பொதுவான ஆறு ஈ-மெயில் மோசடிகள்

1. பிரமிட் திட்டங்கள்: சொற்ப உழைப்பும் சொற்ப முதலீடும் இருந்தாலே போதும், எக்கச்சக்கமான பணத்தை வாரிக்கொள்ளலாம் என்ற எண்ணத்தையே இவை எப்போதும் அளிக்கின்றன. இதில் ஒரு திட்டம் என்னவென்றால், நீங்கள் பணம் செலுத்தி ஒரு கிளப்பில் சேர்ந்துகொள்ள வேண்டும், இன்னும் சிலரையும் அதில் சேர்த்துவிட்டால் உங்களுக்கு ஒரு கம்ப்யூட்டரோ வேறு ஏதாவது எலக்ட்ரானிக் பொருளோ கிடைக்கும். மற்றொரு வித்தியாசமான திட்டம், சங்கிலித் தொடர்போல் கடிதம் அனுப்புவதாகும். இவை பெரும்பாலும் சட்ட விரோதமானவையாகவே இருக்கின்றன. இதில் முதலீடு செய்யும் அநேகர் பணத்தை இழந்துவிடுகிறார்கள்.

2. வீட்டிலிருந்தே வேலை செய்யும் திட்டங்கள்: இப்படிப்பட்ட ஒரு திட்டத்தில், நகைகளை, விளையாட்டு சாமான்களை, அல்லது ஒரு சாதனத்தை அஸெம்பிள் செய்யும்படி அதன் உதிரி பாகங்கள் உங்களிடம் கொடுக்கப்படுகிறது. ஆனால், உங்களிடம் அந்த வேலையை ஒப்படைத்தவர்களோ, அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு நீங்கள் தரமாக அஸெம்பிள் செய்யவில்லை என்று சொல்லி அவற்றை வாங்க மறுத்துவிடுகிறார்கள். இப்போது உதிரி பாகங்களை வாங்குவதற்கு நீங்கள் செலவழித்த பணமும் அவற்றை அஸெம்பிள் செய்வதற்கு எடுத்த நேரமும் வீணாகிவிடுகின்றன.

3. ஆரோக்கியம் மற்றும் டயட் மோசடிகள்: உடற்பயிற்சி செய்யாமலோ சாப்பாட்டைக் குறைக்காமலோ உடல் பருமனைக் குறைக்க உதவும் மாத்திரைகள், ஆண்மைக் குறைவை போக்கும் மருந்துகள், தலைமுடி உதிர்வதைத் தடுப்பதற்கான க்ரீம்கள் போன்றவை இன்டர்நெட்டில் எக்கச்சக்கமாக அறிமுகப்படுத்தப்படுகின்றன. அத்துடன் அவற்றை பயன்படுத்தி வெற்றி கண்ட வாடிக்கையாளரின் அறிக்கைகளும் சிலசமயங்களில் கொடுக்கப்படுகின்றன. இந்த விளம்பரங்களில், “புத்தம்புதிய அறிவியல் கண்டுபிடிப்பு,” “அற்புத நிவாரணி,” “இரகசிய ஃபார்முலா,” “பழங்கால மூலிகை” போன்ற வார்த்தைகள் பொதுவாக பயன்படுத்தப்படுகின்றன. உண்மை என்னவென்றால், இவற்றில் பெரும்பாலான மருந்துகள் பலன் தருவதில்லை.

4. முதலீட்டு திட்டங்கள்: இத்திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு மிகக் குறைந்த அல்லது எந்தவித ஆபத்துமின்றி அதிகபட்ச லாபம் கொடுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. பொதுவாக வெளிநாட்டு வங்கியில் பணத்தை முதலீடு செய்யும்படி சொல்லப்படுகிறது. தங்களுடைய பணத்தை கையாளுபவர்களுக்கு பெரிய பெரிய ஆட்களுடன் தொடர்பும் முதலீடு சம்பந்தமாக ஆழ்ந்த அறிவும் இருப்பதாக சொல்லப்படும் வாக்குறுதிகளை கேட்டு முதலீடு செய்பவர்கள் கவர்ந்திழுக்கப்படுகிறார்கள்.

5. க்ரெடிட் ரிப்பேர்: இந்த மோசடி திட்டங்கள், உங்களுடைய க்ரெடிட் ஃபைலில் உள்ள சாதகமற்ற விவரங்களை நீக்கிப்போட முன்வருகின்றன; அதன் மூலம் நீங்கள் ஒரு க்ரெடிட் கார்டை, வண்டி வாங்குவதற்கு கடனை, அல்லது ஒரு வேலையை பெறுவதற்கு தகுதியை பெறுவீர்கள் என்று சொல்கின்றன. அவர்கள் என்னதான் உத்தரவாதம் அளித்தாலும் அவர்களது வாக்குறுதியை அவர்களால் காப்பாற்ற முடியாது.

6. விடுமுறை பரிசு திட்டங்கள்: மிகக் குறைந்த செலவில் விடுமுறையை இன்பமாய் கழிக்கும் வாய்ப்பை நீங்கள் வென்றிருக்கிறீர்கள் என வாழ்த்தும் ஒரு ஈ-மெயிலை நீங்கள் பெறுகிறீர்கள். இன்னும் சில ஈ-மெயில்களோ, நீங்கள் விசேஷித்த விதத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறீர்கள் என குறிப்பிடுகின்றன. இதே நோட்டீஸ் லட்சக்கணக்கானோருக்கு அனுப்பப்பட்டிருக்கலாம் என்பதை நினைவில் வையுங்கள். அது மட்டுமல்ல தங்கும் வசதி எல்லாம் விளம்பரத்தில் சொல்லப்பட்டதைவிட படுமட்டமாக இருக்கும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

[படத்திற்கான நன்றி]

தகவல்: ஐ.மா. ஃபெடரல் ட்ரேட் கமிஷன்

[பக்கம் 7-ன் படம்]

பிரமிட் திட்டங்கள் எப்போதுமே தோல்வியடைகின்றன

[பக்கம் 9-ன் படம்]

நீங்கள் கையெழுத்திடும் எந்தவொரு ஒப்பந்தத்திலும், முதலீட்டையும் உறுதிமொழிகளையும் பற்றிய நிபந்தனைகள் எல்லாம் எழுதப்பட்டிருக்க வேண்டும்