Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மோசடி—ஓர் உலகளாவிய பிரச்சினை

மோசடி—ஓர் உலகளாவிய பிரச்சினை

மோசடி​—⁠ஓர் உலகளாவிய பிரச்சினை

அவர் வசீகரமானவர், மென்மையாக பேசுபவர். அவர் பெயர் வேன். இப்படிப்பட்ட ஒருவரையே கணவராக அடைய வேண்டுமென கரன் தவம் கிடந்தாள். “எப்படிப்பட்ட கணவர் எனக்கு அமைய வேண்டுமென்று ஆசைப்பட்டேனோ, கடவுளிடம் வேண்டிக்கொண்டேனோ அப்படிப்பட்டவராகவே அவர் இருந்தார். பார்த்தவர்கள் எல்லாருமே எங்களை பொருத்தமான ஜோடியாக நினைத்தார்கள். அவர் என்னை சிலையாக வடித்து பூஜிக்காத குறைதான்” என்று அவள் சொன்னாள்.

ஆனால் ஒரு பிரச்சினை: வேன் ஆஸ்திரேலிய ரகசிய புலனாய்வுத் துறையில் மூன்றாவது முக்கிய அதிகாரியாம். அந்த வேலையை ராஜினாமா செய்ய விரும்பினாராம், ஆனால் அந்தப் புலனாய்வுத் துறையின் பல ரகசிய நடவடிக்கைகளை அவர் தெரிந்து வைத்திருந்ததால் அங்குள்ளவர்கள் அதற்கு சம்மதிக்கவில்லையாம். மீறி ஏதேனும் செய்தால் அவரை கொன்றே போட்டுவிடுவார்களாம்! இதையெல்லாம் கரனிடம் வேன் விளக்கினார். ஆகவே பிரச்சினையை எப்படி தீர்க்கலாமென இருவரும் சேர்ந்து திட்டம் தீட்டினார்கள். கல்யாணம் செய்துகொள்ள வேண்டும், இருவருடைய சொத்துக்களையும் எடுத்துக்கொண்டு ஆஸ்திரேலியாவை விட்டு கனடாவுக்கு ஓடிவிட வேண்டும்​—⁠இதுதான் அவர்களது திட்டம். ஆகவே கரன் தன்னுடைய வீட்டையும் மற்ற எல்லா சொத்துக்களையும் விற்று பணத்தை வேனிடம் ஒப்படைத்து விட்டாள்.

திட்டமிட்டபடியே கல்யாணமும் நடந்தது. ஆனால் நாட்டை விட்டு ஓடிப் போனது வேன் மட்டுமே, கரன் அம்போவென விடப்பட்டாள். அவளிடம் இருந்ததெல்லாம் ஆறே டாலர்தான். சீக்கிரத்தில் அவளுக்கு உண்மை புரிந்தது; அவளை ஏமாற்றுவதற்கென்றே ஜோடிக்கப்பட்ட அடுக்கடுக்கான பொய்களை நம்பி அவள் ஏமாந்துபோயிருந்தாள். வேன் நாடகமாடிவிட்டான்! அவள் மனதைக் கவருவதற்கு தகுந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தான். அவனுடைய பின்னணி, விருப்பவேலைகள், சுபாவம், காதல் எல்லாமே வெறும் நாடகம்; ஆம், அவளுடைய நம்பிக்கையை சம்பாதிப்பதற்காக அவன் போட்ட நாடகம். அவனை நம்பியதால் 2,00,000-⁠க்கும் அதிக டாலர் பணத்தை அவள் பறிகொடுத்ததுதான் மிச்சம். ஒரு போலீஸ் அதிகாரி இவ்வாறு கூறினார்: “அவள் மனதெல்லாம் வெந்து புண்ணாகியிருக்கிறது. பணம் போனது ஒருபுறமிருக்கட்டும், அவள் மனம் படுகிற பாடு இருக்கிறதே, அப்பப்பா சொல்லவே முடியாது.”

“எல்லாமே வெறும் பித்தலாட்டம் என்பதை நினைக்க நினைக்க எனக்கு ஏதோ பிரமை பிடித்தது போல் இருக்கிறது” என கரன் சொன்னாள்.

கரனைப் போல் இன்னும் எண்ணற்றவர்கள் பொய்ப் பித்தலாட்டங்களுக்கு பலியாகிறார்கள். எவ்வளவு பணம் மோசடி செய்யப்படுகிறது என்று சரிவர தெரியாவிட்டாலும் கோடிக்கணக்கான டாலர் மோசடி செய்யப்படுவதாக மதிப்பிடப்படுகிறது, ஒவ்வொரு வருடமும் இது அதிகரித்தும் வருகிறது. கரனைப் போன்ற பலியாடுகள் பணத்தை இழந்துவிடுவது போக, பெரும் உணர்ச்சிக் கொந்தளிப்புக்கு ஆளாகிறார்கள்; நம்பிக்கைக்குப் பாத்திரமானவராக கருதிய ஒருவராலேயே நம்பிக்கைத் துரோகம் செய்யப்பட்டதை எண்ணி அவர்களது மனம் வலியால் துடிதுடிக்கிறது.

முன்ஜாக்கிரதையே சிறந்த கொள்கை

“பாசாங்கு செய்தோ, போலி ஆதாரங்களை காட்டியோ, வாக்குறுதிகள் கொடுத்தோ பணத்தை அபகரிக்க திட்டமிட்டு வஞ்சிப்பது, அல்லது சதித் திட்டம் போடுவதுதான்” மோசடி என வரையறுக்கப்படுகிறது. பெரும்பாலான மோசடிக்காரர்களுக்கு எந்தத் தண்டனையும் கொடுக்கப்படாதது வருந்தத்தக்க விஷயம்; அவர்கள் திட்டமிட்டுத்தான் மோசடி செய்திருக்கிறார்கள் என்பதை நிரூபிப்பது பெரும்பாலும் கடினமாக இருப்பதாலேயே தண்டனை வழங்க முடிவதில்லை. அதுமட்டுமல்ல, ஏமாற்றுப் பேர்வழிகள் பலர் சட்டத்தின் ஓட்டைகளை நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார்கள், தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தியும் கொள்கிறார்கள். ஆகவே தங்கள் மீது குற்றம் சுமத்தவே முடியாதபடி சாமர்த்தியமாக மோசடி செய்கிறார்கள். மேலும், ஒரு மோசடிக்காரன் மீது கிரிமினல் வழக்கு தொடுப்பதால் ஏகப்பட்ட நேரமும் பணமும் வீணாவதுதான் மிச்சம். பொதுவாக, கோடிக்கணக்கான பணத்தை சுருட்டியவர்கள், அல்லது ஊர் உலகத்தையே உலுக்கும் அளவுக்கு அதிர்ச்சியூட்டும் காரியத்தை செய்தவர்கள்தான் குற்றவாளிகளாய் தீர்க்கப்படுகிறார்கள். அப்படியே ஒரு பித்தலாட்டக்காரன் பிடிபட்டு, தண்டிக்கப்பட்டாலும்கூட, அவன் அந்த பணத்தை ஏற்கெனவே செலவழித்திருப்பான் அல்லது ஒளித்து வைத்திருப்பான். ஆகவே, பாதிக்கப்பட்டவர் பெரும்பாலும் பணத்தைத் திரும்பப் பெறுவது அபூர்வமே.

சுருங்கச் சொன்னால், உங்களை யாரேனும் மோசடி செய்திருந்தால், போன பணம் போனதுதான், திரும்பக் கிடைப்பது கஷ்டம். ஆகவே, ஏமாந்துபோய் பணத்தைத் தொலைத்துவிட்டு பிறகு மறுபடியும் அதைத் தேடி அலைந்து கொண்டிருப்பதைவிட, ஏமாறாமல் முன் ஜாக்கிரதையுடன் இருப்பதே சிறந்த கொள்கை. ஒரு ஞானி வெகு காலத்திற்கு முன்பு இவ்வாறு எழுதினார்: “விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறான்; பேதைகள் நெடுகப்போய்த் தண்டிக்கப்படுகிறார்கள்.” (நீதிமொழிகள் 22:3) அப்படியென்றால் நீங்கள் மோசடிக்கு ஆளாகாமல் இருப்பதற்கான வழிகள் என்ன? அவற்றை அடுத்த கட்டுரை விளக்குகிறது. (g04 7/22)