Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகிலேயே மிகவும் சிறிய நாய்

உலகிலேயே மிகவும் சிறிய நாய்

உலகிலேயே மிகவும் சிறிய நாய்

மெக்சிகோவிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

சிநேகபாவத்துடன் கலகலவென்று பழகும் ஒரு ஃபிரெண்ட் உங்களுக்கு வேண்டுமா? அதேசமயம், அமைதியாக உங்கள் மடியில் படுத்திருக்கவும் நீங்கள் ஏதாவது வாசிக்கும்போது பக்கத்தில் உட்கார்ந்திருக்கவும் ஒரு ஃபிரெண்ட் வேண்டுமா? கொஞ்ச சாப்பாடு, கொஞ்ச இடம் மட்டுமே போதுமானதாக நினைக்கிற, அதுவும் ஒவ்வொரு நாளும் வாக்கிங் கூட்டிக்கொண்டு போகிற தொல்லை தராத ஒரு ஃப்ரெண்ட் உங்களுக்கு வேண்டுமா? அப்படியென்றால் உலகிலேயே மிகவும் சிறிய நாய் என்று பெயரெடுத்துள்ள சிஹுவாஹுவாவை வளர்ப்பதில் நீங்கள் ரொம்பவே குஷியடையலாம். a

சிஹுவாஹுவா நல்ல ஒரு காவல் நாய்; ஆம், அது நன்றாக குலைத்து தன் எஜமானரை உஷார்படுத்தும். சொல்லப்போனால், சிஹுவாஹுவாக்கள் மகா தைரியசாலிகள். பெரிய நாய்களைப் பார்த்து இந்தக் குட்டி நாய்கள் துளிகூட பயப்படுவது கிடையாது.

இந்த சிஹுவாஹுவா நாய்களுக்கு சட்டியைக் கவிழ்த்து வைத்திருப்பது போன்ற தலையும், பிரகாசமான விரிந்த கண்களும், உற்சாகமும் சந்தோஷமும் கலந்த துருதுரு பார்வையும், நிமிர்ந்து நிற்கும் காதுகளும் இருக்கின்றன. ஆனால், ரெஸ்ட் எடுக்கும்போது அதன் காதுகள் பக்கவாட்டில் சாய்ந்துவிடுகின்றன. இந்த நாய்களுடைய ரோமம் சிறியதாக, நைசாக இருக்கும் அல்லது நீளமாக பட்டுபோல் இருக்கும். சிவப்பு, பொன்னிறம், நீலம், சாக்லேட் என்று விதவிதமான கலர்களில் இருக்கலாம். அதுமட்டுமல்ல, ஒரு குறிப்பிட்ட கலரில் டிசைன்களையும் அல்லது எதிரும் புதிருமான கலர்களில் திட்டுத்திட்டான டிசைன்களையும் அவை கொண்டிருக்கலாம் அல்லது ஒரே கலரிலும் அவை இருக்கலாம். பிறந்த குழந்தைக்கு தலையில் மென்மையான உச்சி இருப்பது போலவே பெரும்பாலான சிஹுவாஹுவா குட்டிகளுக்கும் இருக்கின்றன, இது அவற்றின் விசேஷித்த ஓர் அம்சம்.

சிஹுவாஹுவா தோன்றிய விதம்

சிஹுவாஹுவா ஓர் இனமாக தோன்றியதைப் பற்றி நிறைய கருத்துகள் இருந்தாலும் அது டெசீசீ என்ற சிறிய நாய் வகையிலிருந்து வந்திருப்பதாக தெரிகிறது. இந்த நாய்களை மெக்சிகோவில் வாழ்ந்த தால்டெக் மக்கள் பொ.ச. 9-⁠ம் நூற்றாண்டின்போது வளர்த்தார்கள். இதற்கான ஆதாரம் வெஹோட்ஸிங்கோ என்னும் இடத்திலுள்ள துறவிமடத்தில் இருக்கிறது. ஃபிரான்ஸிஸ்கன் மடத் துறவிகள் சலூலா நகரத்திலுள்ள பிரமிட்டுகளின் கற்களை வைத்து இந்தத் துறவிமடத்தை கட்டினார்கள். கற்களில் உள்ள பண்டைய சிற்பவேலைகள் இன்றைய நவீன நாளைய சிஹுவாஹுவாக்களின் தோற்றத்திற்கு ஒத்திருக்கின்றன.

பிற்காலத்தில் அஸ்டெக்குகள், தால்டெக்குகளைத் தோற்கடித்தபோது அஸ்டெக்குகளின் உயர்குடியினர் இந்த நாய்களை, குறிப்பாக நீல நிற சிஹுவாஹுவாக்களை வழிபட ஆரம்பித்தார்கள். மரித்தோரின் ஆத்மாக்கள் கீழுலகிற்கு பயணிக்கும்போது அவற்றிற்கு இந்தக் குட்டி நாய்கள் வழிகாட்டிகளாகக்கூட இருக்க முடியுமாம்! அஸ்டெக்குகளின் கடைசி மன்னரான இரண்டாம் மான்ட்டாஸூமாவுக்கு இந்த சிஹுவாஹுவா நாய்கள் மீது கொள்ளைப் பிரியம் இருந்தது. நூற்றுக்கணக்கான சிஹுவாஹுவா நாய்களை அவர் வைத்திருந்தாரென்றும், அதுவும் ஒவ்வொன்றிற்கும் ஓர் ஆளை நியமித்திருந்தாரென்றும் சொல்லப்படுகிறது. மெக்சிகோ/ஐக்கிய மாகாணங்களின் எல்லையில் மனித கல்லறைகளுக்குள் சிஹுவாஹுவா நாய்களின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சரித்திர ஆசிரியரும் சிஹுவாஹுவா நிபுணருமாகிய மறைந்த தெல்மா கிரே என்பவருடைய ஆராய்ச்சியில் அஸ்டெக்குகளின் சொந்த நாய்கள், மெக்சிகோவை வென்ற ஸ்பானியர்களால் வளர்க்கப்பட்ட சின்ன டெரியர் வகை நாயுடன் கலப்பினம் செய்யப்பட்டிருக்கிறது என்பதை கண்டுபிடித்தார். இதுவே இன்றைய குட்டி சிஹுவாஹுவாக்கள் உருவாவதற்கு காரணமாயிருக்கிறது. 1800-களின் மத்திபத்தில் மெக்சிகோவிற்கு சென்ற அமெரிக்க வியாபாரிகள் சிஹுவாஹுவா என்ற இடத்தில் இந்த வகை நாயைக் கண்டு, அவற்றை தங்கள் நாட்டிற்கு திரும்ப எடுத்துச் சென்றதால் இதற்கு சிஹுவாஹுவா என்ற பெயர் வந்தது. அந்தச் சமயத்தில் மெக்சிகோவின் மன்னரான மாக்ஸிமிலியனின் மனைவி கார்லாட்டா என்பவர் சிஹுவாஹுவாவை ஐரோப்பாவிற்கு கொண்டு சென்று சர்வதேச அளவில் அதைப் பிரபலமாக்கினார்.

செல்லப்பிராணியாக சிஹுவாஹுவாவை வளர்த்தல்

சிஹுவாஹுவாக்கள் வீட்டிற்குள் வளர்க்கப்பட வேண்டிய நாய்கள். அடுக்குமாடி கட்டிடத்தில் வாழும் மக்களுக்கும், வயதானவர்களுக்கும், ஊனமுற்றோர்களுக்கும் அல்லது வீட்டிலேயே அடைபட்டு கிடப்பவர்களுக்கும் அவை ஏக பொருத்தம். நல்ல கவனிப்பும் மனித தொடர்பும் இருந்தால் அவை நன்றாக வளரும். ஆனாலும் அவை ரொம்பவே குட்டியாக இருப்பதால் சில முன்னெச்சரிக்கை படிகளை எடுக்க வேண்டியிருக்கிறது. தெரியாமல் அதை மிதித்துவிட்டாலோ, அதன் மீது உட்கார்ந்துவிட்டாலோ, அதை ரொம்ப அழுத்தி பிடித்துவிட்டாலோ அவ்வளவுதான், இந்த சிஹுவாஹுவாக்களுக்கு பயங்கரமாக அடிபட்டுவிடும் அல்லது செத்துகூடப்போய்விடும். கட்டில், சோஃபா போன்ற உயரமான இடங்களில் இருக்கும்போது அவற்றை அப்படியே கவனிக்காமல் விட்டுவிடக்கூடாது. ஆம், அவற்றால் உயரத்தை கணிக்க முடியாது, அப்படி விட்டுவிட்டால் அவை கீழே குதிக்க முயன்று எலும்பை உடைத்துக்கொள்ளும். இந்த எல்லா காரணங்களுக்காகவே சின்னஞ்சிறு பிள்ளைகளுக்கு சிஹுவாஹுவா செல்லப்பிராணியாக இருப்பது சரிப்பட்டு வராது.

என்றாலும், நாம் நினைப்பதைவிட சிஹுவாஹுவாக்கள் நல்ல ஆரோக்கியமுள்ள நாய்கள். சொல்லப்போனால், நிறைய வருடங்கள் வாழும் நாய்களில் சிஹுவாஹுவாவும் ஒன்று, டீனேஜ்வரைகூட இவை வாழலாம். அவை எப்போதுமே துருதுருவென்று இருக்கும், படு சுட்டியும்கூட. விளையாட்டு சாமான்களுடன் அடிக்கும் லூட்டியே அதற்கு போதும், வேறு உடற்பயிற்சியே வேண்டாம். பெரிய நாய்களைவிட இதனுடைய கலோரிகள் வேகமாக தகிக்கப்படுவதாலும் இதற்கு சிறிய செரிமான மண்டலம் இருப்பதாலும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைவுபட வாய்ப்பிருக்கிறது. எனவே இதற்கு அடிக்கடி கொஞ்சம் கொஞ்சமாக உணவு கொடுப்பது அவசியம், அதிகமான ஓய்வும் இதற்கு தேவை. எதற்கெடுத்தாலும் வெடவெடத்துப் போவது இந்த வகை நாய்களின் இயல்பு. ஆம், சிஹுவாஹுவாக்கள் குளிரில் மட்டும் நடுங்குவதில்லை. சந்தோஷம், கவலை, அதிருப்தி, பயம் இவற்றில் ஏதாவது ஒன்று ஏற்பட்டாலும் அவை நடுநடுங்க ஆரம்பித்துவிடுகின்றன.

சிஹுவாஹுவா நாய்கள் நன்றி மறவாதவை. நம்மை சந்தோஷப்படுத்துபவை. அவற்றை நாம் மிக நன்றாக பயிற்றுவிக்கவும் முடியும். ஏ நியூ ஓனர்ஸ் கைடு டு சிஹுவாஹுவா என்ற புத்தகத்தில் இவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறது: “சிஹுவாஹுவாவுக்கு தேவையான கவனிப்பை கொடுக்க நீங்கள் முன்வந்தால் வேறு எந்த நாயும் இந்தளவு திறன் வாய்ந்ததாகவும் அன்பானதாகவும் எல்லாவற்றிற்கும் ஒத்துப்போவதாகவும் இருப்பதை காண மாட்டீர்கள்.” மிகவும் சிறியதான இந்த சிஹுவாஹுவா ஒரு சூப்பர் ஃபிரெண்ட் என்பதை நிறைய பேர் அனுபவத்தில் கண்டிருக்கிறார்கள். (g04 8/22)

[அடிக்குறிப்பு]

a “இயல்பாக” தோன்றிய சிறிய நாய் என்றால் அது சிஹுவாஹுவாதான், அதாவது ஒரே ஜாதியைச் சேர்ந்த பெரிய நாய்களின் கலப்பினத்தால் பிறக்காத சின்ன நாயாக இது இருக்கிறது.

[பக்கம் 15-ன் படம்]

பூனைக்குட்டியும் ஒரு சிஹுவாஹுவா குட்டியும்

[படத்திற்கான நன்றி]

© Tim Davis/CORBIS

[பக்கம் 15-ன் படம்]

வளர்ந்த சிஹுவாஹுவா