Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தாயகம் திரும்பும் ஒலிம்பிக்ஸ்

தாயகம் திரும்பும் ஒலிம்பிக்ஸ்

தாயகம் திரும்பும் ஒலிம்பிக்ஸ்

மண்வெட்டியோடும் மண்வாரியோடும் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் சென்றது இன்று ஒலிம்பிக் விளையாட்டுகள் மீண்டும் உதயமாவதற்கு வழிவகுத்திருக்கிறது. கிரீஸிலுள்ள பண்டைய ஒலிம்பியாவில் கண்டுபிடிக்கப்பட்டவை அங்கு மீண்டும் விளையாட்டுகளை நடத்த வேண்டுமென்ற ஆவலை பிரான்சு நாட்டுக்காரரான பாரன் பயர் டி கூபர்ட்டானுக்கு ஏற்படுத்தியது. இதன் விளைவாக 1896-⁠ல் ஏதன்ஸில் நவீன ஒலிம்பிக்ஸ் முதன்முறையாக நடைபெற்றது.

2004-⁠க்கு சற்று முந்தின வருடங்களில் புல்டோசர்களும் ஜாக்ஹாமர்களும் ஒலிம்பிக்ஸ் மீண்டும் அதன் தாயகத்திற்கே திரும்புவதற்கு வழி செய்தன. கிரீஸின் தலைநகரத்தில் ஒலிம்பிக்ஸுக்காக நவீன முன்னேற்றங்கள் செய்ததால், மாபெரும் கட்டுமான ஸ்தலத்தைப் போல் அது காட்சியளித்தது.

28-வது ஒலிம்பியாட், அதாவது 2004 ஒலிம்பிக் விளையாட்டுகள் ஆகஸ்ட் 13 முதல் 29 வரை ஏதன்ஸில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. என்றுமில்லா விதத்தில் 201 நாடுகளை சேர்ந்த சுமார் 10,000 விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் 28 போட்டி விளையாட்டுகளில் பங்கேற்பார்கள். போட்டி விளையாட்டுகள் 38 இடங்களில் நடைபெறும், இறுதியில் 300-⁠க்கும் அதிகமான பதக்கமளிப்பு விழாக்களோடு முடிவடையும். மீடியாவைச் சேர்ந்த சுமார் 21,500 பேர் வருகை தருகையில் அதைவிட அதிகமான சுமார் 55,000 பாதுகாப்பு பணியாட்கள் கடுமையாய் உழைப்பார்கள்.

தடைகளை தாண்டி

ஒலிம்பிக் விளையாட்டுகளை அவற்றின் தாயகத்தில் நடத்துவதற்காக ஏதன்ஸ் பல காலமாக முயன்று வந்தது. 1996-⁠ம் வருடத்தில் நவீன ஒலிம்பிக்ஸின் நூறாவது ஆண்டை நினைவுகூரும் வகையில் அது தாயகத்தில் நடத்தப்படுவது வெகு பொருத்தமானதாக தோன்றியது.

ஆனாலும் 1996-⁠ம் வருடத்தில் தங்கள் நகரில் அந்த விளையாட்டுகள் நடத்தப்படுவதற்கு ஏதன்ஸ் எடுத்த முயற்சிகள் பயனளிக்கவில்லை. அந்த இரண்டு வார விளையாட்டுகளை நடத்துவதற்குத் தேவைப்படும் அடிப்படை வசதிகள் அந்நகரில் இல்லை என சொல்லப்பட்டது.

இப்படி நிராகரிக்கப்பட்டது கிரீஸையும் அதன் தலைநகரையும் நடவடிக்கை எடுக்க தூண்டியது. சூழ்நிலையை சீர்படுத்துவதாக ஏதன்ஸ் சூளுரைத்தது. சிறந்த உள்நோக்கத்துடனும் உறுதியான சில திட்டங்களுடனும் 1997-⁠ல் இந்த நகரம், 2004 ஒலிம்பிக் விளையாட்டுகளை நடத்த வாய்ப்பளிக்கும்படி மீண்டும் கேட்டுக் கொண்டது. இந்த முறை வெற்றி அதன் பக்கம்.

தேவையான மாற்றங்களை செய்வதற்கு ஏதன்ஸ் தயாரானது. விளையாட்டுகளை அதன் மண்ணில் வரவேற்கும் ஆசை எக்கச்சக்கமான வேலைகளையும் முன்னேற்றங்களையும் திடீரென உசுப்பிவிட்டது. திரும்பிய பக்கமெல்லாம் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கும் சாலைகளை அமைப்பதற்கும், விளையாட்டுகளுக்கான இடங்களை தயார்படுத்துவதற்கும் இயந்திரங்கள் நிலத்தை தோண்டின. மத்திய கோடை காலத்தின் வார இறுதி நாட்களில் கொளுத்தும் வெயிலில், நிலங்களை தோண்டும் கருவிகளையும், கிரேன்களையும், நெற்றி வேர்வை சிந்த பாடுபடும் ஆட்களையும் எங்கும் ஒருவர் பார்க்க முடியும்.

மார்ச் 2001-⁠ல் ஏதன்ஸின் புதிய பன்னாட்டு விமான நிலையத்தில் முதல் விமானம் தரையிறங்கியது; இந்த விமான நிலையம் உலக தரத்தில் உச்சியிலிருந்தவற்றின் வரிசையில் இடம் பிடித்தது. மேலும், மொத்தத்தில் 120 கிலோமீட்டருக்கு புதிய சாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டது, ஏற்கெனவே இருந்த 90 கிலோமீட்டர் சாலைகளை சீரமைப்பது பற்றியும் தீர்மானிக்கப்பட்டது. வாகன நெரிசலை சமாளிக்க புதிய சாலை அமைப்பில் சுமார் 40 மேம்பாலங்கள் கட்டும் திட்டமும் சேர்த்துக் கொள்ளப்பட்டது. அதோடு இன்னும் 24 கிலோமீட்டருக்கு டிராம் ஓடுவதற்கு சுரங்க இருப்புப் பாதைகளும் புதிதாக அமைக்கப்பட்டன. ஜனநெரிசலை கட்டுப்படுத்தவும், காற்று மாசடைவதைக் குறைக்கவும் 32 கிலோமீட்டர் தூரத்திற்கு புறநகர் பகுதியில் நவீன இரயில் நிலையங்கள் திட்டமிடப்பட்டன.

சுருங்க சொன்னால், ஆங்காங்கே பச்சைப் பசேலென்ற பகுதிகளுடனும், சுத்தமான சுற்றுச் சூழலுடனும், புதிய போக்குவரத்து அமைப்புகளுடனும் ஏதன்ஸ் நகரம் புதுப்பொலிவுடன் ஜொலிப்பதற்கு சில வருடங்களுக்கு உள்ளாகவே முயற்சி எடுத்தது. “ஒலிம்பிக்ஸ் நடைபெறுவதற்கு முன் ஏதன்ஸை அறிந்த ஜனங்கள் அதை மீண்டும் பார்க்கையில் அடையாளம் தெரியாமல் விழிப்பார்கள்” என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (IOC) தலைவரான ஷாக் ரோஹா சொன்னார்.

மாரத்தான் ஏற்பாடுகள்

ஒலிம்பிக் விளையாட்டின் துவக்க விழாவிற்கான நாள் நெருங்கி வருகையில் வேலை படுமும்முரமானது. கட்டுமான பணியின் முன்னேற்றத்தையும் ஏற்பாட்டையும் கண்ட IOC தலைவர் ரோஹா அதை சர்டாகி என்ற கிரீஸின் பாரம்பரிய நடனத்திற்கு ஒப்பிட்டார். நகைச்சுவை உணர்வுடன் அவர் இவ்வாறு சொன்னார்: “இதை சர்டாகி போன்ற ஓர் இசைக்கு ஒப்பிடுவேன். அது மெதுவாக ஆரம்பித்து, வேகமெடுத்துக் கொண்டே இருக்கும், இறுதியில் அதன் வேகத்துக்கு நீங்கள் ஈடுகொடுக்க முடியாது.”

அவரது மதிப்பீட்டுக்கு இசைவாக ஒலிம்பிக் கிராமம், அதாவது “ஒலிம்பிக்ஸ் ஏற்பாடுகள் அனைத்தின் அடிப்படைத் தளம்” ஏதன்ஸின் வடக்கில் ஒரு புறநகர் பகுதியில் புதிதாக உருவானது. ஒலிம்பிக் விளையாட்டின் போது சுமார் 16,000 விளையாட்டு வீரர்களுக்கும் குழு தலைவர்களுக்கும் குடியிருப்பாக விளங்கும் இந்த கட்டுமானம், கிரீஸில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய குடியிருப்பு கட்டுமான திட்டமாகும். விளையாட்டுகள் முடிந்த பிறகு சுமார் 10,000 நகரவாசிகளின் குடியிருப்பாக இது மாறப் போகிறது.

பண்டைய சரித்திரத்திற்கும் வழிவழியாக வரும் இந்த நவீன விளையாட்டுகளுக்கும் இடையே உள்ள தொடர்பை ஒலிம்பிக்ஸ் அமைப்பாளர்கள் மறந்துவிடவில்லை. எனவே பண்டைய காலத்தில் விளையாட்டுகள் நடந்த இடமாகிய ஒலிம்பியாவில் சில விழாக்கள் நடத்தப்படும். ஒலிம்பிக் கலை நிகழ்ச்சிகள் நடக்கும் அதே சமயத்தில் முக்கியமான பிற தொல்லியல் கண்டுபிடிப்பு ஸ்தலங்களுக்கும் விசேஷ கவனம் செலுத்தப்படும். புகழ்பெற்ற மாரத்தான் போர் களத்திற்கு அருகே புதிதாக படகு போட்டிக்கான மையம் கட்டப்பட்டது. பொ.ச.மு. 490-⁠ல் பெர்சியர்கள் தோற்கடிக்கப்பட்டதை அறிவிக்க ஏதன்ஸின் வீரர்கள் மாரத்தானிலிருந்து ஏதன்ஸுக்கு 42 கிலோமீட்டர் தூரம் ஓடினார்கள் என பாரம்பரியமாக நம்பப்படுகிறது; அவர்கள் பயன்படுத்திய அதே மார்க்கத்தை இந்த விளையாட்டுகளின் அமைப்பாளர்கள் இப்போது தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். எனவே பூர்வ காலத்தவர் ஓடிய அதே பாதையில் தாங்கள் ஓடியதாக மாரத்தான் ஓட்டக்காரர்கள் சொல்லிக் கொள்ளலாம்.

தங்கப் பதக்கத்தை தட்டிச் செல்வது

விளையாட்டின் துவக்க விழாவில் வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடக்கையில் 75,000 பேர் உட்காரும் வசதி படைத்த ஒலிம்பிக் ஸ்டேடியம் எல்லாருடைய கவனத்தையும் தன்வயப்படுத்தும். ஏதன்ஸின் ஒலிம்பிக் கட்டுமானங்களில் புதுப்பிக்கப்பட்ட இந்த ஸ்டேடியம் அநேகருக்கு “மணிமகுடத்தின் மணிக்கல்” ஆகும். இந்த ஸ்டேடியத்தை தனிச்சிறப்புமிக்கதாக ஆக்குவது இதன் கூரைதான்; இதை திட்டமிட்டு வடிவமைத்தவர் பிரபல ஸ்பானிய கட்டடக் கலைஞரான சான்டையாகோ காலாட்ராவா ஆவார்.

இதன் கூரை பொறியியலின் அற்புத படைப்பாகும்; இது மொத்தம் 16,000 டன் எடையுள்ள கண்ணாடி சட்டங்களால் ஆனது, 10,000 சதுர மீட்டர் பரப்பை ஆக்கிரமிக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கூரையை பிரமாண்டமான இரண்டு வளைவுகள் தாங்கியுள்ளன; இவை ஒவ்வொன்றும் 304 மீட்டர் வீச்சளவும் 80 மீட்டர் உயரமும் உடையவை; ஆஸ்திரேலியாவின் சிட்னி ஹார்பர் பிரிட்ஜின் அளவில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு அளவுடையவை! இந்த வளைவுகளை உண்டு பண்ணும் ஸ்டீல் குழாய்கள் ஒவ்வொன்றும் 9,000 முதல் 10,000 டன் எடையுள்ளவை; கட்டுமான நிபுணரின்படி, “ஒரு பஸ் நுழைந்து செல்ல முடியுமளவுக்கு இவை மிகப் பெரியவை.” அந்தக் கூரையின் மொத்த எடை பாரிசிலுள்ள ஈஃபில் டவரைபோல் இரண்டு மடங்கு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபோன்ற பிரமாண்டமான கூரை ஏன் தேவை? ஏதன்ஸில் ஆகஸ்ட் மாதத்தில் வெயில் எந்தளவுக்கு சுட்டுப்பொசுக்கும் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள்! 60 சதவீத சூரிய வெளிச்சத்தை பிரதிபலிக்க செய்யும் விசேஷித்த பூச்சு இந்தக் கண்ணாடி சட்டங்களில் பூசப்பட்டுள்ளது. இது தவிர வேறு காரணங்களும் உள்ளன. இந்தக் கூரையின் வடிவமைப்பு, விளையாட்டுகளைப் பொறுத்ததில் வரலாற்று சிறப்புமிக்கதாக திகழ வேண்டுமென்று எதிர்பார்க்கப்பட்டது. முன்னாள் கிரேக்க பண்பாட்டு துறை அமைச்சர் இவான்ஜிலாஸ் வினிசிலாஸ் சொன்னபடி, “இது கட்டடக் கலையில் பெரும் வரலாற்று சிறப்புமிக்கதும் ஏதன்ஸ் ஒலிம்பிக் கேம்ஸின் சின்னமும் ஆகும்.”

நிறைவு விழாவிற்குப் பிறகு இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க கட்டுமானங்கள், நினைவை விட்டு நீங்காத ஒரு நிகழ்ச்சியை நடத்துவதற்கு எந்தளவுக்கு அரும் பாடுபட வேண்டியிருந்தது என்பதற்கு நினைப்பூட்டுதல்களாக விளங்கும். ஒலிம்பிக்ஸுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட எல்லா அடிப்படை வசதிகளும் தங்கள் நகரத்தில் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவிப்பதில் கைகொடுக்குமென ஏதன்ஸ் வாசிகள் நம்புகிறார்கள். எப்போதையும் போலவே, பிரச்சினைகளைக் கண்டு சோர்ந்து போகாமல் தொடர்ந்து அந்த சவால்களை சமாளிப்பார்கள்​—⁠சர்டாகி நடனத்தில் அவர்கள் செய்வதைப் போலவே. (g04 8/8)

[பக்கம் 27-ன் பெட்டி]

பரீட்சிக்கப்படும் கொள்கைகள்

ஒலிம்பிக்ஸின் அமைப்பாளர்கள் விளையாட்டுகளுடன் தொடர்புடைய கொள்கைகளை வலியுறுத்த விரும்புகிறார்கள்; அவை “நேர்மையான போட்டி, விளையாட்டு, சமாதானம், பண்பாடு, கல்வி” ஆகியவை. எனினும் நாணயத்தின் மறுபக்கத்தில் அரசியல், தேசியவாதம், வியாபாரம், ஊழல் ஆகியவை தலைகாட்டுகின்றன.

வழக்கமாக ஒலிம்பிக்ஸ் என்றவுடன், அநேகர் டிவியே கதியென்று கிடப்பதும், கொழுத்த லாபம் சம்பாதிக்கும் விளம்பர ஒப்பந்தங்களும் சேர்ந்து விளையாட்டுகளுக்கான விளம்பரதாரர் உரிமையை பெரும் வியாபாரமாகவே ஆக்கிவிட்டிருக்கின்றன. “ஒலிம்பிக்ஸ் இப்போது மிகப் பெரிய வியாபாரமாகும். கவனமாக திட்டமிட்டு வியாபார காரணங்களுக்காக அநேக தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன” என்றார் ஆஸ்திரேலியாவின் ஆய்வாளர் மரி ஃபிலிப்ஸ்.

மற்றவர்கள் விளையாட்டுகளில் வெளிப்படும் படுமோசமான தேசியவாதத்தை சாடுகிறார்கள். விளையாட்டுகள் நடைபெறும் காலத்தில் போராட்டங்களும் போர்களும் நடக்காதிருப்பதற்காக தற்கால போர் நிறுத்த உடன்பாட்டை அறிமுகப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், அதன் அடையாள அர்த்தம் ஒருபுறமிருக்க, அந்த சண்டைகளுக்கான காரணங்கள் சரிசெய்யப்பட்டால் தவிர இத்தகைய முயற்சிகளால் எந்தப் பயனும் இல்லை. “விளையாட்டுகள் அரசியல் செல்வாக்கைப் பெறும் களமாக இருக்கின்றன” என கருத்துத் தெரிவித்தார் அறிவியல் பேராசிரியராக இருக்கும் பிரையன் மார்டின். “ஒலிம்பிக்ஸில் விளையாட்டு வீரர்களுக்கு இடையிலான போட்டி, நாடுகளுக்கு இடையிலான போட்டியாக ஆகிவிடுகிறது. நாடு கலந்துகொள்ளாவிட்டால் விளையாட்டு வீரர்களும் இதில் கலந்துகொள்ள முடியாது. தனி நபர்களும் குழுக்களும் பெறும் வெற்றிகள், கொடிகளின் மூலமும் தேசிய கீதத்தின் மூலமும் தேசத்துக்கு கிடைத்த வெற்றிகளாக அடையாளம் காட்டப்படுகின்றன. . . . நிகழ்ச்சிகளில் தனிப்பட்டவருக்கு எதிராகவும், செல்வாக்கிற்கும் தகுதிக்குமான போட்டியில் நாடுகள் ஒன்றுக்கொன்று எதிராகவும் வன்முறையை வெளிக்காட்டும் மற்றொரு களமாக [ஒலிம்பிக்ஸ்] ஆகியிருக்கிறது. . . . ஒலிம்பிக் அமைப்பு, சமாதானத்தை முன்னேற்றுவிக்கும் அதன் ஆரம்ப நோக்கத்தை செயல்படுத்த சக்தியற்றதாக போய்விட்டது.”

[பக்கம் 27-ன் படங்கள்]

ஏதன்ஸ் ஒலிம்பிக் ஸ்போர்ட்ஸ் வளாகம்

2004-⁠க்கான பதக்கத்தின் டிஸைன்

[படங்களுக்கான நன்றி]

வானிலிருந்து ஃபோட்டோ: AP Photo/Thanassis Stavrakis; பதக்கத்தின் டிஸைன்: © ATHOC

[பக்கம் 28-ன் படங்கள்]

ஏதன்ஸின் மெட்ரோ

ஏதன்ஸ் பன்னாட்டு விமான நிலையம்

[படத்திற்கான நன்றி]

© ATHOC

[பக்கம் 29-ன் படக்குறிப்பு]

கட்டுமான பணி நடைபெறும் ஒலிம்பிக் கிராமம்

அகியோஸ் கோஸ்மாஸ் படகு மையம்

[படத்திற்கான நன்றி]

© ATHOC/ஃபோட்டோ: K. Vergas

[பக்கம் 28, 29-ன் படம்]

கட்டுமான பணி நடைபெறும் ஒலிம்பிக் ஸ்டேடியத்தின் கூரை

[பக்கம் 29-ன் படம்]

முழுமையடைந்த கூரையின் சிறிய மாதிரி

[படத்திற்கான நன்றி]

© ATHOC