Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பிள்ளைகளுக்கு இப்படிப்பட்ட அப்பா தேவை

பிள்ளைகளுக்கு இப்படிப்பட்ட அப்பா தேவை

பிள்ளைகளுக்கு இப்படிப்பட்ட அப்பா தேவை

பிள்ளைகள் மீது பாசத்தைப் பொழிகிற, அவர்களுக்காக தன்னையே அர்ப்பணிக்கிற ஓர் அப்பா தேவை. அப்படிப்பட்ட ஓர் அப்பா தன்னுடைய பிள்ளைகள் பொறுப்புள்ளவர்களாக, ஒழுக்கமுள்ளவர்களாக வளருவதற்கு தன்னாலான அனைத்தையும் செய்வார். ஆனால் உண்மை என்னவென்றால், பிள்ளைகளுக்கு இப்படிப்பட்ட ஓர் அப்பா தேவை என்பதை யாரும் புரிந்துகொள்வதே இல்லை.

பிள்ளைகளைப் பெற்றெடுப்பது அப்பா அல்ல, அம்மாதான், அதனால் அவள் ஆற்றும் முக்கிய பங்கை விட்டுவிட முடியாது. அதே சமயத்தில், அப்பாவுக்கும் அதேயளவு முக்கிய பங்கு இருப்பதை த வில்சன் க்வார்டர்லி என்ற பத்திரிகை இவ்வாறு கூறியது: “அமெரிக்க சமுதாயத்தை ஆட்டிப்படைக்கும் மிகப் பெரிய பிரச்சினைகளுக்கு முக்கிய காரணம், தகப்பன்மார் தங்கள் கடமையை நிறைவேற்றாததுதான்”​—⁠உலகிலுள்ள பிற நாடுகளையும் நாம் இதோடு சேர்த்துக்கொள்ளலாம்.

ஸூர்னால் டா டார்டெ என்ற பிரேசில் நாட்டு செய்தித்தாள் ஓர் ஆய்வைப் பற்றி குறிப்பிடுகையில், மூர்க்கத்தனம், அடாவடித்தனம், படிப்பில் மட்டம், அக்கறையற்ற தன்மை போன்ற நடத்தை சம்பந்தமான பல பிரச்சினைகள் பிள்ளைகளுக்கு ஏற்படுவதற்கு காரணம் “தகப்பனின் கவனிப்பு இல்லாததே” என அது முடிவாக சொன்னது. பிள்ளைகள் நல்ல முறையில் வளருவதற்கு அம்மா அப்பா ஆகிய இருவருமே அவசியம் தேவை என ஓர் இத்தாலிய நூல் வலியுறுத்துகிறது (மார்செல்லோ பெர்னார்டி எழுதிய லி இம்பெர்ஃபெட்டி ஜேனிடோரி [அபூரண பெற்றோர்கள்]).

குடும்ப வாழ்க்கை முன்னேற

குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்படுவதற்கு பொறுப்பற்ற ஒரு தகப்பன் ஓரளவு காரணமாக இருந்தாலும் சரி, அல்லது முழுக்க முழுக்க காரணமாக இருந்தாலும் சரி, அவற்றை சரி செய்து குடும்ப வாழ்க்கையை மேம்படுத்தவே முடியாது என்று அர்த்தமல்ல. எப்படி? அதற்கு ஒரு தகப்பன் என்ன செய்ய வேண்டும்?

ஆம், பிள்ளைகளுக்கு குடும்பம் என்ற ஓர் ஏற்பாடு தேவை, அதாவது தங்களுடைய நலனில் அக்கறை காட்டும் ஒருவர் இருக்கிறார் என்பதை அவர்கள் உணருவது அவசியம். அந்தத் தேவை பூர்த்தி செய்யப்படாமல் போகையில் பிள்ளைகளுடைய வாழ்க்கை பாழாகிறது​—⁠இதுதான் பெரும்பாலும் எங்கும் நடக்கிறது. ஆனாலும், குடும்பத்தில் அப்பா இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, நம்பிக்கை சுடர் ஒருபோதும் அணைந்துவிடுவதில்லை. ஏனெனில், ‘பரிசுத்த வாசஸ்தலத்திலிருக்கிற தேவன், திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பனாயிருக்கிறார்’ என பைபிளில் சங்கீதம் 68:5 கூறுகிறது. a

உதவி பெறும் விதம்

ஆகவே, வாழ்க்கையில் வெற்றி காண்பதற்கு கடவுளுடைய உதவி இன்றியமையாதது; இந்த உதவியை பெறுவது சாத்தியம் என்பதற்கு முதல் கட்டுரையில் குறிப்பிடப்பட்ட போலந்தை சேர்ந்த லிட்யாவின் அனுபவம் சான்றளிக்கிறது. அவளது குடும்ப நிலவரம் எப்படியிருந்தது? அந்தக் குடும்பத்திற்கு கடவுளுடைய உதவி எப்படி கிடைத்தது?

தன்னுடைய மகள் லிட்யா சொன்னது போல, பிள்ளைகள் சின்ன வயதில் இருந்த சமயத்தில் தான் குடும்பத்தை கவனியாமல் விட்டுவிட்டதாக ஃப்ரான்சிஸெக் சொல்கிறார். “பிள்ளைகள் என்ன செய்றாங்கன்னு நான் கண்டுக்கவே இல்லை. நான் அவர்களிடம் பாசம் காட்டவில்லை, எனக்கும் அவர்களுக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லாமலிருந்தது” என அவர் சொல்கிறார். அதனால்தான், லிட்யாவுக்கு 14 வயது இருந்தபோது அவளும் அவளுடைய தம்பியும் தங்கையும் ரௌடி கும்பலோடு சேர்ந்து பார்ட்டிக்கு சென்று, புகை பிடித்து, குடித்து, கும்மாளம் போட்டு அடிதடியில் ஈடுபட்ட விஷயமெல்லாம் அவருக்குத் தெரியாமல் இருந்தது.

கடைசியில் ஒருநாள் பிள்ளைகளுடைய அட்டகாசமெல்லாம் ஃப்ரான்சிஸெக்கிற்கு தெரிய வந்தபோது, அவர் மிகவும் குழம்பிப் போனதால் நிலைமையை சரிசெய்ய ஏதாவது செய்தே தீர வேண்டும் என்று தீர்மானித்தார். “உதவிக்காக கடவுளை வேண்டினேன்” என அவர் சொல்கிறார். ஆச்சரியம் என்னவென்றால், அதற்குப்பின் சீக்கிரத்திலேயே யெகோவாவின் சாட்சிகள் அவரை வீட்டில் சந்தித்தார்கள்; அவரும் மனைவியும் பைபிள் படிப்புக்கு ஒத்துக்கொண்டார்கள். காலப்போக்கில், படித்த விஷயங்களை அவர்கள் தங்கள் வாழ்க்கையில் பின்பற்ற தொடங்கினார்கள். அது பிள்ளைகளை எப்படி பாதித்தது?

ஃப்ரான்சிஸெக் இவ்வாறு விளக்குகிறார்: “நான் என்னுடைய குடிப்பழக்கத்தை விட்டுட்டு ஒரு நல்ல அப்பாவாக மாறியதை அவங்க பார்த்தாங்க. யெகோவாவின் சாட்சிகளை பற்றி அதிகமா தெரிஞ்சுக்க அவங்க விரும்பினாங்க. அவங்களும்கூட பைபிள் படிக்க ஆரம்பித்தாங்க, அதிலிருந்து எல்லா கெட்ட சகவாசத்தையும் விட்டுட்டாங்க.” அவருடைய மகன், ராஃபா தன் அப்பாவைப் பற்றி இவ்வாறு சொல்கிறான்: “நான் அப்பாவை ஒரு ஃப்ரெண்ட் மாதிரி நேசிக்க ஆரம்பித்தேன்.” அவன் தொடர்ந்து சொல்வதாவது: “அப்போதிலிருந்து ரௌடி பையன்களுடைய சகவாசமெல்லாம் எனக்கு தேவையில்லாமல் போய்விட்டது. வீட்டில் எல்லாரும் ஆன்மீக காரியங்களில் சுறுசுறுப்பாக ஈடுபட ஆரம்பித்தோம்.”

இப்போது ஃப்ரான்சிஸெக் யெகோவாவின் சாட்சிகளுடைய சபையில் ஒரு மூப்பராக சேவை செய்கிறார். அதுமட்டுமல்ல இன்று வரை குடும்பத்தின் மீது அக்கறை காட்டி அவர்கள் ஒவ்வொருவருடைய ஆன்மீக முன்னேற்றத்திற்கு வேண்டியதை செய்து வருகிறார். அவருடைய மனைவியும் லிட்யாவும் பயனியர்களாக, முழுநேர ஊழியம் செய்து வருகிறார்கள். ராஃபாவும் அவனுடைய தங்கை ஸில்வியாவும் பைபிள் படிப்பு நடத்துவதிலும், கிறிஸ்தவ கூட்டங்களில் பதில் சொல்வதிலும் தங்களுடைய நம்பிக்கையை பிறரிடம் சொல்வதிலும் உற்சாகமாய் ஈடுபடுகிறார்கள்.

கற்பித்ததை கடைப்பிடித்தார்

மாக்காரேனாவின் அப்பா லூயிஸின் விஷயத்தில் என்ன நடந்தது என்பதையும் கவனியுங்கள். ஸ்பெயினைச் சேர்ந்த இந்த 21 வயது இளைஞியைப் பற்றி முந்தின கட்டுரை குறிப்பிட்டிருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். ‘அப்பனுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்திருப்பது போல்’ லூயிஸும் ஒரு குடிகாரனாக இருந்தார். மாக்காரேனா சொன்னதுபோல், சில சமயங்களில் அவர் ஃப்ரெண்ட்ஸோடு சேர்ந்து அப்படியே பல நாட்களுக்கு காணாமல் போய்விடுவார். அதுமட்டுமல்ல, தன்னுடைய மனைவிக்கு துணைவி என்ற ஒரு மதிப்புகூட கொடுக்காமல் வேலைக்காரி போல நடத்தினார். அவர்களுடைய வாழ்க்கை சின்னாபின்னமாகும் நிலையில் இருந்தது. இதனால் மாக்காரேனாவும் அவளுடைய தம்பி தங்கைகளும் மிகவும் மனமொடிந்து போயிருந்தனர்.

என்றாலும், லூயிஸ் பிற்பாடு யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிள் படிக்க ஒத்துக்கொண்டார். அவர் இவ்வாறு விவரிக்கிறார்: “நான் என்னுடைய மனைவி மக்களோடு நேரம் செலவிட ஆரம்பித்தேன். நாங்க எல்லாரும் ஒன்றாக உட்கார்ந்து பேசினோம், சாப்பிட்டோம், பைபிள் படித்தோம். நாங்க எல்லாரும் சேர்ந்து வீட்டு வேலைகளை செய்தோம், சந்தோஷமாக பொழுதையும் போக்கினோம்.” மாக்காரேனா சொல்கிறாள்: “குடும்பத்தின் மீது உண்மையான அக்கறை காட்டி கவனிச்சுக்கிற ஒரு அப்பா இருக்கிறார்னு நான் உணர ஆரம்பித்தேன்.”

மெச்சத்தக்க விஷயம் என்னவெனில், கடவுளை சேவிக்க லூயிஸ் தன் குடும்பத்தை உற்சாகப்படுத்தியது மட்டுமல்லாமல் தான் கற்பித்ததை அவரும் கடைப்பிடித்தார். “விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருந்த பிஸினஸை” அவர் விட்டுவிட்டார். “ஏனென்றால், அப்பாவுடைய நேரமெல்லாம் அதிலேயே போய்விடுகிறது. அதே சமயத்தில் வீட்டு காரியங்களை நல்ல விதமாக கவனிச்சுக்கணும் என்று அவர் ஆசைப்பட்டார்” என மாக்காரேனா விவரிக்கிறாள். அதனால் கிடைத்த பலன் ஏராளம். “எளிமையாக வாழ்ந்து ஆன்மீக காரியங்களுக்கு முதலிடம் கொடுப்பது எப்படி என்று அப்பாவோட முன்மாதிரியை பார்த்து புரிஞ்சுகிட்டேன்” என்று மாக்காரேனா சொல்கிறாள். இப்போது மாக்காரேனா ஒரு பயனியராக சேவை செய்கிறாள், அவளுடைய அம்மாவும் தம்பி தங்கைகளும் கிறிஸ்தவ சபையில் சுறுசுறுப்பான அங்கத்தினர்களாக இருக்கிறார்கள்.

ரயில்வே அதிகாரியின் தீர்மானம்

ஆகவே, பிள்ளைகளின் நலனை மனதில் வைத்து தீர்மானங்கள் எடுக்கும் ஒரு தகப்பனே பிள்ளைகளுக்குத் தேவை என்பது தெளிவாகிறது. முதல் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்த டாகேஷி டாமூரா என்ற ஜப்பானிய உயர் அதிகாரியின் டீனேஜ் மகன் கெட்ட ஆட்களோடு சகவாசம் வைத்து பயங்கரமான பிரச்சினையில் மாட்டிக்கொள்ளும் நிலையில் இருந்தான். அது 1986-⁠ம் வருஷம்; அப்போதுதான் ஜப்பானிய ரயில்வேயில் தனக்கிருந்த உயர் பதவியை டாகேஷி விட்டுவிட தீர்மானித்தார். தான் எடுத்த தீர்மானத்தைக் குறித்து 18-⁠க்கும் அதிகமான ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது டாகேஷி எப்படி உணருகிறார்?

“நான் எடுத்த தீர்மானங்களிலேயே இதுதான் ரொம்ப நல்ல தீர்மானம் என்று நினைக்கிறேன்” என அவர் சமீபத்தில் சொன்னார். “பைபிளை படிக்கிறது உட்பட எல்லா காரியங்களையும் என் பையனோட ஒன்றாக உட்கார்ந்து செய்றேன், அதனால் நல்ல பலன் கிடைத்திருக்கிறது. நாங்க ஃப்ரெண்ட்ஸ் ஆயிட்டோம், எல்லா கெட்ட சகவாசங்களையும் பழக்கங்களையும் அவன் விட்டுட்டான்” என அவர் சொன்னார்.

சில வருஷங்களுக்கு முன்னால் டாகேஷியின் மனைவி ஒரு யெகோவாவின் சாட்சியாக மாறினார். கணவரும் பைபிளை ஆராய்ந்து படித்து குடும்பத்தில் அதிக பொறுப்புள்ள ஒருவராவதற்கு அவளுடைய சிறந்த நடத்தையே அவரை தூண்டியது. பிற்பாடு, அவரும் அவருடைய மகனும் மகளும் யெகோவாவின் சாட்சிகளானார்கள். டாகேஷியும் அவருடைய மகனும் இப்போது வெவ்வேறு சபைகளில் மூப்பர்களாக சேவை செய்கிறார்கள்; அவருடைய மனைவியும் மகளும் பயனியர்களாக சேவை செய்கிறார்கள்.

தகப்பன்மாருக்கு உதவி தேவை

பிள்ளைகளை தாங்கள் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதாக தகப்பன்மார் பலர் உணர்ந்தாலும், அதற்காக தாங்கள் என்ன செய்வதென்று அவர்களுக்குத் தெரிவதில்லை. லா பாங்வார்ட்யா என்ற ஸ்பெயின் நாட்டு செய்தித்தாளின் தலையங்கத்தில், “டீனேஜ் பிள்ளைகளை எப்படி வளர்ப்பதென்று தெரியவில்லை என 42 சதவீத [ஸ்பானிய] பெற்றோர் ஒத்துக்கொள்கிறார்கள்” என்று எழுதியிருந்தது. டீனேஜை எட்டாத சின்னஞ்சிறுசுகள், மழலைகள் விஷயத்திலும் தகப்பன்மாரின் நிலை அதுதான். அநேகர் நினைப்பதற்கு நேர்மாறாக, இந்த சின்னஞ்சிறுசுகளுக்கும்கூட அவர்களோடு இருந்து பொறுப்பாக கவனிக்கும் ஓர் அப்பா தேவை.

ஒரு நல்ல அப்பாவாக ஆவதைப் பற்றி இன்னும் என்னென்ன தெரிந்துகொள்ளலாம்? அப்பாமாருக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாக திகழ்பவர்கள் யார், அவர்களிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்? பதில்களை அடுத்த கட்டுரையில் ஆராயலாம். (g04 8/22)

[அடிக்குறிப்பு]

a யெகோவாவின் சாட்சிகளால் வெளியிடப்பட்ட குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் என்ற புத்தகத்தில் “ஒற்றை பெற்றோர் குடும்பங்கள் வெற்றிபெற முடியும்!” என்ற அதிகாரத்தை தயவுசெய்து காண்க.

[பக்கம் 7-ன் படங்கள்]

பிள்ளைகளுடைய தேவைகளை பூர்த்தி செய்த தகப்பன்மார்

ஃப்ரான்சிஸெக்கின் குடும்பம்

லூயிஸின் குடும்பம்

டாகேஷியின் குடும்பம்