Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

புகழை விட சிறந்த ஒன்று

புகழை விட சிறந்த ஒன்று

புகழை விட சிறந்த ஒன்று

சார்ல்ஸ் சினட்கோ சொன்னபடி

1957-ல், அமெரிக்காவின் நவேடா மாகாணத்திலுள்ள லேஸ் வேகாஸ் நகரத்தில், பாடுவதற்கு 13-வார கான்ட்ராக்ட் எனக்கு கிடைத்தது; ஒரு வாரத்திற்கு ஆயிரம் டாலர்கள் கிடைக்கும். நிகழ்ச்சி களைகட்டினால் இன்னும் 50 வாரங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். அப்படியானால் அதிகப்படியாக 50,000 டாலர்கள் சம்பாதிக்கலாம். அந்தக் காலத்தில் அது ஒரு பெரிய தொகை! பணத்தை அள்ளித்தரும் இந்த வாய்ப்பு எனக்கு எப்படி கிடைத்தது? இந்த வாய்ப்பை ஏற்கலாமா வேண்டாமா என்று தீர்மானிப்பது ஏன் கடினமாக இருந்தது? சொல்கிறேன் கேளுங்கள்.

ப்பாவுடைய ஊர் உக்ரைன், 1910-ல் கிழக்கு ஐரோப்பாவில் பிறந்தவர். பிரிந்திருந்த அவருடைய அப்பாவும் அம்மாவும் 1913-ல் மறுபடியும் அமெரிக்காவில் ஒன்று சேர்ந்தார்கள். அப்பொழுது என் அப்பாவையும் அங்கு கூட்டிக்கொண்டு வந்தார்கள். 1935-ல் அப்பாவுக்கு திருமணம் ஆனது, அடுத்த வருஷம் பென்ஸில்வேனியாவிலுள்ள ஆம்பிரிஜ் நகரில் நான் பிறந்தேன். இதற்குள் அப்பாவுடைய அண்ணன்மாரில் இரண்டு பேர் யெகோவாவின் சாட்சிகளாக மாறியிருந்தார்கள்.

நானும் என் மூன்று தம்பிமாரும் சிறியவர்களாக இருந்த போது, எங்களுடைய குடும்பம் பென்ஸில்வேனியாவிலுள்ள நியு காஸிலுக்கு அருகே வாழ்ந்து வந்தது. அப்போது யெகோவாவின் சாட்சிகளோடு அம்மா சில காலம் பைபிளை படித்து வந்தார்கள். அப்பாவும் அம்மாவும் சாட்சிகளாக மாறாவிட்டாலும் பெரியப்பாமார் தங்கள் விருப்பப்படி வணங்குவதற்கு உரிமை இருக்கிறது என அப்பா நினைத்தார். எங்களை தேசப்பற்றுள்ளவர்களாக வளர்த்தபோதிலும், மற்றவர்களுடைய மத சுயாதீனத்தை அப்பா எப்போதும் ஆதரித்தார்.

பாடகனாக வாழ்க்கை

எனக்கு இயற்கையிலேயே பாடுவதற்கு ஏற்ற நல்ல குரல் இருந்ததால், என்னை சிறந்த பாடகனாக ஆக்குவதற்கு அப்பாவும் அம்மாவும் தங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்தார்கள். எனக்கு ஆறேழு வயதிருக்கும்போது அப்பா என்னை நைட் கிளப்பிற்கு கூட்டிச் செல்வார். பாடுவதற்கும் கிட்டார் வாசிப்பதற்கும் பாரில் என்னை நிற்க வைப்பார். “தாய்” என்ற தலைப்பில் ஒரு பாடலை பாடுவேன். பாசமுள்ள தாயின் குணங்களை சித்தரிக்கும் அந்த பாடல், படிப்படியாக ஸ்வரம் அதிகமாகி உச்சநிலையை அடைந்து நெஞ்சைத்தொடும் விதத்தில் முடியும். வழக்கமாக பாரில் அதிகமாக குடித்திருக்கும் ஆட்கள் பாடலை கேட்டு அழுதுவிட்டு, என்னுடைய அப்பாவின் தொப்பியில் பணத்தை போட்டுவிட்டு செல்வார்கள்.

1945-ல் நியு காஸிலிலுள்ள WKST என்ற வானொலி நிலையத்தில், என்னுடைய முதல் ரேடியோ நிகழ்ச்சியில் நாட்டுப்புற பாடலை பாடினேன். பின்னர் ஹிட் பரேட்-லிருந்து பிரபலமான பாடல்களையும் பாட ஆரம்பித்தேன். ஹிட் பரேட் என்பது அந்த வாரத்தின் டாப் 10 பாடல்களை சிறப்பித்துக்காட்டும் வாராந்தர ரேடியோ நெட்ஒர்க் நிகழ்ச்சி. 1950-ல், பால் வைட்மான் என்பவருடைய நிகழ்ச்சி மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானேன். அவர் ஏற்பாடு செய்த ஜார்ஜ் கெர்ஷ்வினின் “ராப்சோடி இன் ப்ளு” இன்றும் பிரபலமாக உள்ளது. பாடகனாக என்னுடைய வாழ்க்கை பணியை விரிவுபடுத்தும் நம்பிக்கையோடு அப்பா வெகு விரைவிலேயே பென்ஸில்வேனியாவிலுள்ள எங்கள் வீட்டை விற்றார். பிறகு கலிபோர்னியாவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் நாங்கள் குடியேறினோம்.

அப்பாவின் விடாமுயற்சி காரணமாக விரைவிலேயே பசடீனாவில் வாராந்தர ரேடியோ நிகழ்ச்சியையும், ஹாலிவுட்டில் வாராந்தர அரை மணி நேர டிவி நிகழ்ச்சியையும் நான் சொந்தமாக தொகுத்து வழங்க வாய்ப்பு கிடைத்தது. டெட் டேலின் நூறு-பேர் அடங்கிய இசைக்குழுவுடன் சேர்ந்து காப்பட்டல் ரெக்கார்ட்ஸில் ஒலிப்பதிவு செய்தேன்; CBS ரேடியோ நெட்ஒர்க்கில் பாடகனாகவும் ஆனேன். 1955-ல், வடக்கு கலிபோர்னியாவின் லேக் டேஹோவிற்கு ஓர் இசை கதம்பக் கச்சேரிக்காக சென்றிருந்தேன். என் வாழ்க்கையில் எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது அங்கு வைத்துதான்.

புதிய முன்னுரிமைகளை வைத்தல்

ஏறக்குறைய அந்த சமயத்தில்தான், என்னுடைய பெரியப்பா ஜான்​—⁠பென்ஸில்வேனியாவிலிருந்து கலிபோர்னியாவிற்கு மாறி வந்திருந்த அப்பாவின் பெரிய அண்ணா⁠“தேவனே சத்தியபரர்” (ஆங்கிலம்) என்ற புத்தகத்தை எனக்கு கொடுத்தார். a b லேக் டேஹோவிற்கு போனபோது அந்தப் புத்தகத்தை எடுத்துக்கொண்டு போனேன். எங்களுடைய கடைசி நிகழ்ச்சி ஏறக்குறைய இரவு 12 மணிக்கு பிறகுதான் முடிந்தது; அதற்குப் பிறகு, படுக்கைக்கு போகும்முன் ரிலாக்ஸ் செய்வதற்காக அந்தப் புத்தகத்தை புரட்டினேன். ரொம்ப காலமாக என் மனதில் இருந்த கேள்விகளுக்கு பைபிளிலிருந்து கொடுக்கப்பட்டிருந்த விடைகளை கண்டபோது சந்தோஷத்தில் எனக்கு தலைகால் புரியவில்லை.

அதற்குப்பின் விரைவிலேயே, வேலையை முடித்தவுடன் நைட் கிளப்பில் உட்கார்ந்துகொண்டு சக கலைஞர்களிடம் பைபிள் விஷயங்களை பற்றி பொழுது விடியும் மட்டும் பேசிக் கொண்டிருந்தேன். மரணத்திற்குப்பின் வாழ்க்கை, கடவுள் ஏன் துன்மார்க்கத்தை அனுமதிக்கிறார், மனிதன் கடைசியில் இந்தப் பூமியையும் தன்னையும் அழித்துக்கொள்வானா போன்ற விஷயங்களை நாங்கள் பேசினோம். சில மாதங்களுக்கு பிறகு, ஜூலை 9, 1955-ல், லாஸ் ஏஞ்சல்ஸிலுள்ள ரிக்லி ஃபீல்டில் யெகோவாவின் சாட்சிகளுடைய மாவட்ட மாநாடு நடந்தது. யெகோவா தேவனுக்கு சேவை செய்வதற்காக அந்த மாநாட்டில் முழுக்காட்டுதல் பெற்றேன்.

ஏறக்குறைய ஆறு மாதங்களுக்குப் பிறகு, 1955 கிறிஸ்மஸ் தினத்தன்று, பொழுதுபோக்கு துறையிலிருந்த ஜாக் மக்காயை சந்திப்பதற்கு, தன்னுடன் வரும்படி சகோதரர் ஹென்றி ரஸல் என்னை அழைத்தார். ஹென்றியும் NBC-⁠ல் இசையமைப்பாளராக பணியாற்றியவர். நாங்கள் ஜாக் வீட்டிற்கு சென்றபோது, அவர்கள் அப்போதுதான் கிறிஸ்துமஸ் பரிசுகளை பிரித்துக் கொண்டிருந்தார்கள். இருந்தாலும், ஜாக் அவருடைய மூன்று பிள்ளைகளையும் மனைவியையும் உட்கார வைத்து நாங்கள் சொல்வதை கேட்டார். அவரும் அவருடைய குடும்பத்தாரும் விரைவிலேயே சாட்சிகளாக ஆனார்கள்.

இந்தக் காலப்பகுதியில்தான் அம்மாவிற்கு நான் பைபிள் படிப்பு எடுக்க ஆரம்பித்தேன்; பைபிள் சத்தியங்களை நன்றாகப் புரிந்துகொண்டு அதை ஏற்றுக்கொண்டார்கள்; இறுதியில் அவர்கள் ஒரு யெகோவாவின் சாட்சியாகி, பயனியராக, அதாவது முழுநேர ஊழியராக ஆனார்கள். காலப்போக்கில், என்னுடைய மூன்று தம்பிகளும் முழுக்காட்டுதல் எடுத்தார்கள், அவர்களும் சிறிது காலத்திற்கு பயனியர் சேவை செய்தார்கள். செப்டம்பர் 1956-ல், என்னுடைய 20-வது வயதில், நானும் ஒரு பயனியரானேன்.

வேலை சம்பந்தமாக தீர்மானங்கள்

இந்த சமயத்தில்தான் என்னுடைய ஏஜன்ட்டின் நெருங்கிய நண்பரான ஜார்ஜ் மர்ஃபி, நான் செய்த வேலையில் முன்னேறுவதற்கு அக்கறை எடுத்துக்கொண்டார். 1930 மற்றும் 1940-களில் வந்த அநேக படங்களில் ஜார்ஜ் நடித்துள்ளார். ஜார்ஜுக்கு அதிக செல்வாக்கு இருந்ததால், டிசம்பர் 1956-ல், நியு யார்க் நகரிலுள்ள CBS-டிவியின் ஜாக்கி க்ளீசன் நிகழ்ச்சியில் பங்கேற்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியை சுமார் 2,00,00,000 பேர் பார்த்து மகிழ்ந்தார்கள், அது என் தொழிலுக்கு அதிக தூண்டுதலாக அமைந்தது. நான் நியு யார்க்கில் இருந்தபோது, யெகோவாவின் சாட்சிகளுடைய உலக தலைமை அலுவலகத்திற்கு முதல் தடவையாக சென்றிருந்தேன்.

க்ளீசன் நிகழ்ச்சியில் நான் நடித்தபின், MGM ஸ்டூடியோஸுடன் ஏழு வருட திரைப்பட கான்ட்ராக்ட்டில் கையெழுத்திட்டேன். தொலைக்காட்சியில் வெஸ்டர்ன் தொடரில் எனக்கு ஒரு ‘ரோல்’ கொடுக்கப்பட்டது. சூதாடுபவனாகவும் குறிபார்த்து சுடுபவனாகவும் ஒழுக்கயீனத்தையும் மற்ற கிறிஸ்தவமற்ற பழக்கங்களையும் மிகைப்படுத்திக் காட்டும் கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க வேண்டியிருந்ததால், கொஞ்ச நாட்களுக்குப் பின்னர் என்னுடைய மனசாட்சி குத்த ஆரம்பித்தது. ஆதலால் நான் அந்த தொழிலையே விட்டுவிட்டேன். பொழுதுபோக்கு துறையில் இருந்தவர்கள் எனக்கு ஏதோ பித்துப் பிடித்துவிட்டது என நினைத்தார்கள்.

இந்த சமயத்தில்தான், நான் ஆரம்பத்தில் சொன்ன லேஸ் வேகாஸில் பாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதே சமயத்தில் எங்களுடைய பயணக் கண்காணியின் விஜயத்திற்கான வேலைகளையும் செய்ய வேண்டியதாக இருந்தது. நான் அந்த வாய்ப்பை நழுவவிட்டால், மொத்தமாக எல்லா வாய்ப்பையும் நழுவவிட வேண்டியதுதான். நான் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்று அப்பா எதிர்பார்த்தார். எனக்காக அவர் செய்த எல்லா தியாகங்களுக்காகவும் இதை அவர் எதிர்பார்ப்பது நியாயமென்று உணர்ந்தேன். அதனால் எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது.

எனவே, எங்களுடைய நடத்தும் கண்காணியான கார்ல் பார்க்கை அணுகினேன். அவரும்கூட இசைக் கலைஞனாகவும், 1920-களில் நியு யார்க் WBBR ரேடியோ ஸ்டேஷனில் வயலின் வித்துவானாகவும் இருந்தவர். நான் இந்தக் கான்ட்ராக்ட்டை எடுத்துக்கொண்டால், வாழ்நாள் பூராவும் எந்தவொரு பணக்கஷ்டமும் இல்லாமல் பயனியர் ஊழியம் செய்யலாம் என்று அவரிடம் விளக்கினேன். அதற்கு அவர், “நீங்க என்ன முடிவெடுக்கணும்னு என்னால் சொல்ல முடியாது, ஆனா நீங்க ஒரு முடிவுக்கு வர என்னால் உதவ முடியும்” என்று சொன்னார். “இந்த வாரம் அப்போஸ்தலன் பவுல் நம்முடைய சபையை விஜயம் செய்ய வருகிறார்னா நீங்க போவீங்களா?” என்று அவர் கேட்டார். அதோடு, “நீங்க என்ன செய்யனும்னு இயேசு எதிர்பார்ப்பார்ன்னு நினைக்கிறீங்க?” என்றும் கேட்டார்.

அப்போதுதான் என்னுடைய குழப்பம் தீர்ந்ததாக நினைத்தேன். லேஸ் வேகாஸ் கான்ட்ராக்ட்டை எடுக்கப் போவதில்லை என்ற தீர்மானத்தை அப்பாவிடம் சொன்னவுடனே நான் அவருடைய வாழ்க்கையை நாசமாக்குவதாக புலம்பினார். அன்று இராத்திரி என்னை பார்க்கும்வரை கைத்துப்பாக்கியுடன் அவர் காத்துக்கொண்டிருந்தார். என்னை கொல்ல வேண்டும் என்று அவர் நினைத்திருந்தார், ஆனால் அவர் தூங்கிவிட்டார்​—⁠ஒருவேளை அதிகமாக குடித்ததால் தூங்கியிருக்கலாம். பின்னர் கராஜுக்குள் சென்று வண்டியிலிருந்து வரும் புகையை சுவாசித்து தற்கொலை செய்துகொள்ள முயன்றார். மீட்புப் படையினரை நான் அழைத்தபோது, அவர்கள் அப்பாவை காப்பாற்றினார்கள்.

அப்பா இப்படி திடீர் திடீரென கோபாவேசம் அடைந்ததால், எங்கள் சபையிலிருந்த அநேகருக்கு அப்பா என்றாலே பயம் பிடித்துவிட்டது. ஆனால், எங்களுடைய வட்டார கண்காணியான ராய் டவுல் பயப்படவில்லை. அவர் அப்பாவை பார்க்க சென்றபோது அப்பா அவரிடம், நான் பிறந்தபோது பிழைப்பதே ரொம்ப கஷ்டமாக இருந்ததாகவும், நான் பிழைத்தால் கடவுளுடைய சேவைக்கு என்னை அர்ப்பணிப்பதாக நேர்ந்து கொண்டதாகவும் சொன்னார். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமென கடவுள் எதிர்பார்ப்பார் என்பதைக் குறித்து எப்போதாவது யோசித்ததுண்டா என்று அப்பாவிடம் ராய் கேட்டார். அது அப்பாவை திகைப்படைய செய்தது. “முழுநேர ஊழியம் கடவுளுடைய குமாரனுக்கு ஏற்றதாக இருந்தால், அது ஏன் உங்க மகனுக்கும் ஏற்றதாக இருக்காது?” என்றார். அதன்பின், என்னுடைய தீர்மானத்தையே அப்பா ஏற்றுக்கொண்டதாக தெரிந்தது.

இதற்கிடையே, ஜனவரி 1957-ல், ஷர்லி லார்ஜ் என்ற சகோதரி அவளுடைய பயனியர் பார்ட்னருடன் தன்னுடைய நண்பர்களைப் பார்க்க கனடாவிலிருந்து வந்திருந்தாள். அவளோடும் அவளுடைய பார்ட்னரோடும் வீட்டுக்கு வீடு ஊழியத்திற்குச் சென்றபோது, நானும் ஷர்லியும் ஒருவருக்கொருவர் நன்கு அறிமுகமானோம். கொஞ்ச நாட்களுக்குப் பிறகு, நான் பேர்ல் பெய்லியோடு பாடிய ஹாலிவுட் பௌல் என்ற பெரிய அரங்கிற்கு என்னோடு ஷர்லியும் வந்திருந்தாள்.

தீர்மானித்ததை நிறைவேற்றுதல்

செப்டம்பர் 1957-ல், அயோவா மாகாணத்தில் விசேஷ பயனியராக சேவை செய்யும் நியமிப்பை பெற்றேன். நான் இந்த நியமிப்பை ஏற்க தீர்மானித்திருக்கிறேன் என்று அப்பாவிடம் சொன்ன போது அவர் விம்மினார். எது அதிக முக்கியம் என்ற விஷயத்தில் என்னுடைய நோக்குநிலையில் ஏற்பட்ட மாற்றத்தை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஹாலிவுட்டிற்கு விரைந்துசென்று என்னுடைய எல்லா கான்ட்ராக்ட்டையும் ரத்து செய்தேன். நான் கான்ட்ராக்ட் எடுத்திருந்த அநேகரில் புகழ்பெற்ற இசைக்குழு மற்றும் பாடகர்குழு தலைவரான ஃப்ரெட் வாரிங்கும் ஒருவர். என்னுடைய ஒப்பந்தத்தை நிறைவேற்றவில்லை என்றால், நான் மறுபடியும் பாடகனாக வேலை செய்ய முடியாது என்று அவர் சொன்னார். யெகோவா தேவனுக்கு அதிகமாக ஊழியம் செய்வதற்காக நான் பாடும் தொழிலையே விடப்போகிறேன் என்பதை விளக்கினேன்.

நான் சொன்னதை திரு. வாரிங் மதித்து கேட்டு, தன்னுடைய கனிவான பதிலால் என்னை ஆச்சரியத்தில் மூழ்கடித்தார்: “தம்பி, நீ இந்த நல்ல வாழ்க்கைப் பணியை விட்டுக்கொடுப்பது எனக்கு ரொம்ப வருத்தமாயிருக்கு, ஆனா என் வாழ்நாள் முழுக்க நான் இந்த இசைத்துறையில் இருந்தாலும், இசையே வாழ்க்கையல்ல, இன்னும் அதிகம் இருக்குன்னு கத்துக்கிட்டேன். கடவுள் உன்னை ஆசீர்வதிப்பாராக.” யெகோவாவின் சேவையை செய்வதற்கு இனி என் வாழ்வில் எந்த தடையும் இல்லை என்பதை உணர்ந்தவனாக, கண்களில் ஆனந்தக் கண்ணீரோடு வீட்டிற்கு காரை ஓட்டி வந்ததை என்னால் மறக்கவே முடியாது.

“உங்க விசுவாசம் என்ன ஆச்சு?”

சுமார் 1,200 மக்கள் வசிக்கும் அயோவாவிலுள்ள ஸ்டிராபெரி பாயின்ட் நகரில், என்னுடைய பயனியர் பார்ட்னர் ஜோ டிரிஃப்போடு சேர்ந்து என் சேவையை ஆரம்பித்தேன். ஷர்லி அங்கு வந்திருந்தபோது, நாங்கள் திருமணத்தைப் பற்றி பேசினோம். எனக்கும் சரி அவளுக்கும் சரி சேமிப்பே கிடையாது. சம்பாதித்த பணமெல்லாம் அப்பா கன்ட்ரோலில் இருந்தது. ஆகையால் நான் அவளிடம் இவ்வாறு விளக்கினேன்: “நான் உன்ன கல்யாணம் பண்ணிக்க ஆசப்படுறேன், ஆனா நாம் எப்படி வாழ்க்கையை ஓட்டுறது? மாதாமாதம் ஸ்பெஷல் பயனியர் உதவித் தொகை 40 டாலர் மட்டும்தான் எனக்கு கிடைக்குது.” அவள் வழக்கம்போல, சாந்தமாக அதேசமயத்தில் ஒளிவுமறைவின்றி நேரடியாக என்னிடம் இவ்வாறு கேட்டாள்: “ஆனால் சார்ல்ஸ், உங்க விசுவாசம் என்ன ஆச்சு? முதலாவது ராஜ்யத்தையும் அதன் நீதியையும் தேடினால், நம்முடைய எல்லா தேவைகளையும் கூட கொடுப்பார் என்று இயேசு சொல்லியிருக்கிறாரே.” (மத்தேயு 6:33) அப்போது ஒரு முடிவுக்கு வந்தோம். நவம்பர் 16, 1957-ல் நாங்கள் மணம் முடித்தோம்.

ஸ்டிராபெரி பாயின்ட்டிற்கு புறநகர்ப் பகுதியில் ஒரு விவசாயி என்னோடு பைபிள் படித்துவந்தார். அவருக்கு காட்டில் உள்ள தன்னுடைய நிலத்தில் 3.6 மீட்டர் அகலமும் 3.6 மீட்டர் நீளமும் கொண்ட மரக்கட்டைகளால் ஆன சிறுகுடில் இருந்தது. அதில் மின் வசதியோ தண்ணீர் குழாய் வசதியோ கிடையாது, ஏன் கழிப்பறைகூட கிடையாது. ஆனால் எங்களுக்கு தேவைப்பட்டால், வாடகையின்றி அதில் குடியிருக்கலாம். காலை முழுக்க ஊழியத்தில் இருந்ததாலும், இரவில் மட்டுமே தலைசாய்க்க இடம் வேண்டும் என்ற நிலை இருந்ததாலும், நவீன வசதிகள் எதுவுமில்லாத அந்த இடத்திற்குச் செல்ல தீர்மானித்தோம்.

அருகிலிருந்த ஊற்றிலிருந்து தண்ணீர் மொண்டு வருவேன். அடுப்பில் மரக்கட்டைகளை எரியவிட்டு குடிலை அனலாக வைத்தோம், மேலும் மண்ணெண்ணெய் விளக்கை வைத்து படித்தோம்; ஷர்லி மண்ணெண்ணெய் அடுப்பில் சமைத்தாள். குளிப்பதற்கு பழைய தண்ணீர் தொட்டியை பயன்படுத்தினோம். இரவில் ஓநாய்கள் ஊளையிடுவதை கேட்டிருக்கிறோம். கிறிஸ்தவ ஊழியர்களின் தேவை அதிகம் இருக்கும் இடத்தில் யெகோவாவுக்கு சேவை செய்வதற்கும், நாங்கள் ஒருவருக்கொருவர் துணையாக இருப்பதற்கும் கொடுத்துவைத்தவர்களாக உணர்ந்தோம். சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில், அயோவாவிலிருந்த டிக்கோராவில் பில் மெலெஃபான்ட்டும் அவருடைய மனைவி சான்ட்ராவும் ஸ்பெஷல் பயனியராக இருந்தார்கள். இப்பொழுது புரூக்லினிலுள்ள தலைமை அலுவலகத்தில் அவர்கள் வேலை செய்கிறார்கள். அவ்வப்போது, அவர்கள் வந்து நாள் முழுக்க எங்களோடு ஊழியத்தில் கலந்துகொள்வார்கள். காலப்போக்கில், 25 பேர் கொண்ட சின்ன சபை ஸ்டிராபெரி பாயின்ட்டில் உருவானது.

பயண வேலையில்

மே 1960-ல், வட்டார ஊழியராக சேவை செய்ய நாங்கள் அழைக்கப்பட்டோம். ராலி, கிரீன்ஸ்பொரோ, டுராம் மாநகரங்களும் மற்றும் அநேக குக்கிராமங்கள் கொண்ட வட கரோலினாதான் எங்களுடைய முதல் வட்டாரம். மின்வசதியும் கழிப்பறை வசதியும் கொண்ட அநேக குடும்பங்களோடு தங்கியதால், எங்களுடைய வாழ்க்கை சூழல் மேம்பட்டது. எனினும், வீட்டிற்கு வெளியே கழிப்பறை வசதி கொண்ட குடும்பத்தினர் கொடுத்த எச்சரிப்புகள் எங்களை கலங்க வைத்தன. சங்கிலிக் கறுப்பன், காப்பர் ஹெட் போன்ற விரியன் பாம்புகள் பாதையில் இருக்கிறதா என்று பார்த்து செல்லுமாறு எச்சரித்தார்கள்!

1963-களின் ஆரம்பத்தில், நாங்கள் ஃப்ளாரிடா வட்டாரத்திற்கு மாற்றப்பட்டோம். அங்குதான் பெரிகார்ட்டிடிஸ் என்ற இதய வெளியுறை வீக்க நோய் என்னை கடுமையாக தாக்கியது, நான் சாவின் விளிம்பிற்கே சென்றுவிட்டேன். டாம்பாவை சேர்ந்த பாப் மற்றும் ஜின்னி மக்கி மட்டும் இல்லையென்றால், நான் ஒருவேளை செத்தே போயிருப்பேன். c என்னை அவர்களுடைய டாக்டரிடம் அழைத்துக்கொண்டு போனார்கள், எல்லா பணச்செலவையும் அவர்களே பார்த்துக்கொண்டார்கள்.

என்னுடைய ஆரம்ப பயிற்சி பயன் தந்தது

1963-⁠ம் வருட கோடை காலத்தில், யெகோவாவின் சாட்சிகளுடைய பெரிய மாநாடு நியு யார்க்கில் நடக்கவிருந்தது, அங்கு வேலை செய்வதற்கு நான் அழைக்கப்பட்டேன். லாரி கிங் தொகுத்து வழங்கிய ஒரு ரேடியோ பேட்டியில் யெகோவாவின் சாட்சிகள் சார்பாக பேசிய மில்டன் ஹென்ஷெலோடு சேர்ந்து சென்றேன். திரு. கிங் இன்றும் பிரபல தொலைக்காட்சி பேட்டி தொகுப்பாளராக இருக்கிறார். அவர் மிகவும் மரியாதையோடு நடந்துகொண்டார்; மேலும் நிகழ்ச்சி முடிந்தவுடன் ஏறக்குறைய ஒரு மணிநேரத்திற்கு நம்முடைய வேலையை பற்றி அநேக கேள்விகளை கேட்டார்.

அதே வருட கோடைக் காலத்தில், கம்யூனிஸ்ட் சீனாவில் சிறையிலிருந்து அப்போதுதான் விடுதலையான மிஷனரி ஹெரால்ட் கிங், சாட்சிகளுடைய உலக தலைமை அலுவலகத்திற்கு விருந்தினராக வந்திருந்தார். ஒரு நாள் மாலையில் கூடியிருந்த சுமார் 700 பேரிடம், தன்னுடைய அனுபவங்கள் சிலவற்றையும், நான்கு வருடங்களுக்கு மேல் அனுபவித்த தனிச் சிறைவாசம் எப்படி விசுவாசத்தை பலப்படுத்தியது என்பதையும் விவரித்தார். அவர் சிறையில் இருந்தபோது, பைபிள் மற்றும் கிறிஸ்தவ ஊழியம் சம்பந்தப்பட்ட தலைப்புகளில் பாடல்களை எழுதியிருக்கிறார்.

நெஞ்சைவிட்டு நீங்காத அந்த மாலையன்று ஆட்ரி நார், கார்ல் க்ளைன், மற்றும் ஃப்ரெட் ஃப்ரான்ஸ்​—⁠டெனர் குரலில் பாடுவதற்கு பயிற்சி பெற்றிருந்த நீண்டகால சாட்சி⁠—⁠ஆகியோருடன் சேர்ந்து ராஜ்ய பாடலான “வீடு வீடாய்” என்ற பாடலை பாடினேன். அந்தப் பாடல் யெகோவாவின் சாட்சிகளுடைய பாட்டு புத்தகத்தில் பின்னர் சேர்க்கப்பட்டது. அதைத் தொடர்ந்து வந்த வாரத்தில் யாங்கி ஸ்டேடியத்தில் “நித்திய சுவிசேஷம்” என்ற பொருளில் மாநாடு நடந்தது. அப்போது சாட்சிகளுடைய வேலையை முன்நின்று நடத்திய நேதன் நார் என்னிடம் அந்தப் பாடலை அந்த மாநாட்டில் பாட சொன்னார். நானும் பாடினேன்.

பயண சேவையின் அனுபவங்கள்

நாங்கள் இல்லினாய்ஸிலுள்ள சிகாகோவில் சேவை செய்தபோது, மறக்கமுடியாத இரண்டு சம்பவங்கள் நடந்தன. ஒன்று, விர்ரா ஸ்டீவர்ட் என்பவரை வட்டார மாநாட்டில் ஷர்லி பார்த்த சம்பவம். 1940-களின் மத்திபத்தில் கனடாவில் இருந்தபோது, தனக்கும் தன்னுடைய அம்மாவிற்கும் சாட்சிகொடுத்தவரே அவர். ஷர்லி தன்னுடைய 11 வயதில் விர்ராவை முதன்முதலில் பார்த்திருந்தாள். அப்போது பைபிளிலிருந்து கடவுளுடைய வாக்குறுதிகளை கேள்விப்பட்டு பூரிப்படைந்து, “நான் அந்த புதிய உலகத்துல இருப்பேன்னு நீங்க நினைக்கிறீங்களா?” என்று விர்ராவிடம் கேட்டாள். அதற்கு விர்ரா, “ஏன் இருக்கமாட்டாய் ஷர்லி” என்று பதிலளித்தாள். அவர்கள் இருவரும் அந்த வார்த்தைகளை அன்றுவரை மறக்கவில்லை. விர்ராவின் அந்த முதல் சந்திப்பிலிருந்து, தான் விரும்பியதெல்லாம் யெகோவாவை சேவிப்பதே என்பதை ஷர்லி புரிந்துகொண்டாள்.

மற்றொன்று, ஒரு சாட்சி என்னிடம் 1958-ன் குளிர்காலத்தில் எங்கள் வராந்தாவில் 25 கிலோ எடையுள்ள உருளைக்கிழங்கு மூட்டையை பார்த்தது ஞாபகமிருக்கிறதா என்பதாக கேட்ட சம்பவம். ஆம், எனக்கு ஞாபகமிருந்தது. ஒரு நாள் மாலை பனிப்புயலில் மாட்டிக்கொண்டு எப்படியோ வீடு வந்து சேர்ந்தபோது நாங்கள் அதை பார்த்தோம்! அது எப்படி வந்ததென்று எங்களுக்கு தெரியவில்லை, என்றாலும், அதற்காக யெகோவாவிற்கு நன்றி செலுத்தினோம். பயங்கர பனியால் ஐந்து நாட்களுக்கு வீட்டைவிட்டு வெளியே போக முடியவில்லை. ஆனால் வேகவைத்த உருளைக்கிழங்கு, மசியவைத்த உருளைக்கிழங்கு, உருளைக்கிழங்கு அடை, உருளைக்கிழங்கு வறுவல், மற்றும் உருளைக்கிழங்கு சூப் என்று விதவிதமாக சாப்பிட்டு சந்தோஷமாக இருந்தோம். எங்களுக்கு வேறெந்த உணவும் கிடைக்கவில்லை. அந்த சாட்சிக்கு நாங்கள் யார், எங்கே இருக்கிறோம் என்றெல்லாம் ஒன்றுமே தெரியாது. ஆனால் அருகில் சில பயனியர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்பதை கேள்விப்பட்டிருந்தார். இந்த இளம் தம்பதிகள் எங்கு வாழ்கிறார்கள் என்பதை விசாரிக்க ஏதோ தன்னை தூண்டியதாக அவர் சொன்னார். விவசாயிகளுக்கு தங்கள் அக்கம்பக்கத்தாரை பற்றி நன்கு தெரியும் என்பதால், அவர்களிடம் விசாரித்து விரைவிலேயே எங்கள் குடிலை கண்டுபிடித்து, அந்தப் பனியில் உருளைக்கிழங்குகளை தூக்கிக்கொண்டு வந்திருக்கிறார்.

செய்த தெரிவுகளுக்கான நன்றியுணர்வு

1993-க்குள், பயண சேவையில் 33 வருடங்களுக்கு பிறகு, என்னுடைய உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டதால் சேவை செய்ய எனக்கு கிடைத்த அந்த சிலாக்கியத்தை விடவேண்டிவந்தது. அப்போது முதல் இன்று வரை ஷர்லியும் நானும் உடல்நலம் குன்றிய ஸ்பெஷல் பயனியர்களாக இருக்கிறோம். வட்டார சேவையை இனிமேலும் தொடர எனக்கு பலமில்லையே என்று கவலைப்பட்டாலும், என் பலத்தையெல்லாம் முழுநேர ஊழியத்திற்காக செலவழித்திருக்கிறேன் என்று நினைத்து அகமகிழ்கிறேன்.

என்னுடைய மூன்று தம்பிகளும் வெவ்வேறு தெரிவுகளை செய்து கொண்டார்கள். அவர்கள் பண ஆசை பிடித்து அதைத் தேடி போனதால் தற்போது யெகோவாவை சேவிக்கவில்லை. 1958-ல் அப்பா முழுக்காட்டப்பட்டார். யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து, முழுக்காட்டுதல் பெற அநேகருக்கு அப்பாவும் அம்மாவும் உதவி செய்திருக்கிறார்கள். இருவருமே 1999-ல் இறந்துவிட்டார்கள். உலகப் புகழையும் ஆடம்பர வாழ்க்கையையும் தூக்கி எறிந்ததால், அப்பா அம்மா, அவர்களோடு பைபிளை படித்தவர்கள் அனைவருக்கும் நித்திய ஜீவன் என்ற நம்பிக்கையை பெற முடிந்திருக்கிறது. ‘நான் ஆரம்பத்தில் எடுத்த தீர்மானத்தை செய்யாமலிருந்தால் நான் யெகோவாவை தொடர்ந்து சேவிச்சிட்டிருப்பேனா?’ என்று அடிக்கடி யோசித்திருக்கிறேன்.

வட்டார வேலையை விட்டு சுமார் ஐந்து ஆண்டுகளுக்குப்பின், என்னுடைய உடல்நலம் முன்னேற்றம் அடைந்தது; என்னுடைய ஊழியத்தை மறுபடியும் விரிவாக்கினேன். தற்போது கலிபோர்னியாவில் டெஸர்ட் ஹாட் ஸ்ப்ரிங்ஸ் நகரிலுள்ள சபையில் நடத்தும் கண்காணியாக சேவை செய்கிறேன். உதவி வட்டார கண்காணியாகவும், நியாயவிசாரணைக் குழுவில் சேவை செய்யவும் சில சமயங்களில் பயனியர் ஊழியப் பள்ளி போதகராகவும் கூடுதல் சிலாக்கியம் பெற்றேன்.

இன்றுவரை என்னுடைய பெஸ்ட் ஃப்ரெண்ட் ஷர்லி தான். வேறு யாரோடும் இருக்க நான் விரும்பமாட்டேன். நாங்கள் அடிக்கடி ஆவிக்குரிய விஷயங்களைப் பற்றி உரையாடுவோம். பைபிள் சத்தியங்களைப் பற்றி உரையாடியதால் நாங்கள் இருவருமே உற்சாகம் அடைந்திருக்கிறோம். “ஆனால் சார்ல்ஸ், உங்க விசுவாசம் என்ன ஆச்சு?” என்று 47 வருடங்களுக்கு முன் அவள் சாந்தமாக என்னிடம் கேட்ட கேள்வியை இன்றும் போற்றுதலோடு நினைவுகூருகிறேன். இளம் கிறிஸ்தவ தம்பதிகள் ஒருவருக்கொருவர் இது போன்ற கேள்விகளை கேட்டுக்கொண்டால், முழுநேர ஊழியத்தில் நாங்கள் அனுபவித்தது போல சந்தோஷத்தையும் ஆசீர்வாதங்களையும் எத்தனை தம்பதிகள் அனுபவிக்க முடியும்! (g04 8/22)

[அடிக்குறிப்புகள்]

a 1996-ல் ஜான் சினட்கோ தனது 92-வது வயதில் மரிக்கும்வரை யெகோவாவுக்கு உண்மையுள்ள சாட்சியாக வாழ்ந்தார்.

b யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது, ஆனால் இப்பொழுது அச்சில் இல்லை.

c பக்கவாதத்தோடு பாப் மக்கியின் போராட்டத்தை அவரே சொல்வதை பிப்ரவரி 22, 1975 விழித்தெழு!-வில் பக்கங்கள் 12-16-⁠ல் காணலாம்.

[பக்கம் 20-ன் படம்]

1935-ல், பெரியப்பா ஜான் முழுக்காட்டப்பட்ட வருடத்தில்

[பக்கம் 22-ன் படம்]

மரக்கட்டைகளால் ஆன எங்களுடைய சிறுகுடில்

[பக்கம் 23-ன் படம்]

மரிக்கும்வரை உண்மையோடு இருந்த என் பெற்றோர், 1975-ல்

[பக்கம் 23-ன் படம்]

இன்று ஷர்லியோடு