Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

வாய்விட்டு சிரிப்பது ஏன் நல்லது

வாய்விட்டு சிரிப்பது ஏன் நல்லது? அப்படி சிரிப்பது புலனுணர்வுடனும் மொழியுடனும் சம்பந்தப்பட்ட மூளையின் பகுதிகளைத் தூண்டிவிடுவதோடு, நியூக்ளியஸ் அக்கம்பென்ஸ் என்ற பகுதியையும், அதாவது சந்தோஷத்தோடும் நன்னிலை உணர்வோடும் சம்பந்தப்பட்ட பகுதியையும் தூண்டிவிடுகிறது என ஆராய்ச்சி காட்டுவதாக த வான்கூவர் சன் என்ற செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. இந்த நியூக்ளியஸ் அக்கம்பென்ஸ் பகுதி, “மூளையின் அதிக வலிமை வாய்ந்த உபபகுதி”யாக இருக்கிறதென ஸ்டான்ஃபர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஆலன் ரைஸ் சொல்கிறார். நகைச்சுவை திறனை ஆராய்வது, சமூக நடத்தையை நன்கு புரிந்துகொள்ள மருத்துவர்களுக்கு உதவும் என ரைஸ் நம்புகிறார். “ஒருவேளை நட்புறவுகளை, சொல்லப்போனால், நிரந்தர காதல் உறவுகளைக்கூட ஒருவர் ஏற்படுத்திக் கொள்வாரா இல்லையா என்பதையும் அதை எப்படி, யாருடன் ஏற்படுத்திக் கொள்வார் என்பதையும் அவரது நகைச்சுவை புலனுணர்வு பெரும்பாலும் தீர்மானிக்கிறது. பலவித அழுத்தங்களை [மக்கள்] சந்திக்கையில் அவற்றைச் சமாளிப்பதற்குரிய அனைத்துலக வழியாகவும் நகைச்சுவை இருக்கிறது” என்கிறார் டாக்டர் ரைஸ். (g04 9/8)

“பெரிய” வழிப்பறி கொள்ளையர்

மனிதர்கள் மட்டுமே வழிப்பறி கொள்ளையில் ஈடுபடுவதில்லை என்பதாக தோன்றுகிறது. பேங்காக் போஸ்ட் செய்தித்தாளின்படி யானைகளும் வழிப்பறி கொள்ளை நடத்துகின்றன. பேங்காக்கிற்கு கிழக்கே உள்ள காடுகளில் வசிக்கும் யானைகள் பசியின் கொடுமை தாங்காமல் கரும்புகளை ஏற்றிச் செல்லும் டிரக்குகளை வழிமறிக்கின்றன, அவற்றிலிருந்து “இனிப்பான” சரக்குகளைக் கொள்ளையடிக்கின்றன. ஆங் லூயி நை வனவிலங்கு சரணாலயத்தில் சுமார் 130 யானைகள் வாழ்கின்றன, ஆனால் வறண்ட வானிலை காரணமாக அவற்றிற்குப் போதுமான உணவு கிடைப்பதில்லை; இதனால் பசியில் வாடும் யானைகள் உணவு தேடி காட்டுக்கு வெளியே அலைந்து திரியும் நிலை ஏற்பட்டிருக்கிறது. சில யானைகள் தோப்புகளுக்குள் புகுந்து வேட்டையாடுகின்றன; மற்றவையோ, கருணை உள்ளம் படைத்த டிரக் டிரைவர்கள் அவற்றிற்காக போட்டுவிட்டு செல்லும் கரும்பை எடுத்துக் கொள்கின்றன என சரணாலயத்தின் முக்கிய அதிகாரி யூ சினாடாம் அறிவித்தார். (g04 9/22)

கிரேக்கர்களின் ஆரோக்கிய உணவு

“மத்தியதரை கடல் பகுதியைச் சேர்ந்தவர்கள் உண்ணும் உணவு புற்றுநோயாலும் இருதய நோயாலும் ஏற்படுகிற மரணத்திற்கான அபாயத்தை 25 சதவீதமோ அதற்கும் அதிகமாகவோ குறைக்க முடியுமென ஹார்வர்டிலும் யுனிவர்சிட்டி ஆஃப் ஏதன்ஸ் மெடிக்கல் ஸ்கூலிலும் உள்ள அறிவியலாளர்கள் கண்டுபிடித்தார்கள்; 22,043 கிரேக்கர்களின் உணவுப் பழக்கத்தைச் சுமார் நான்கு ஆண்டுகள் கவனித்த பிறகு இவர்கள் இந்த முடிவுக்கு வந்தார்கள். பெருமளவு கொட்டை பருப்புகள் (nuts), பழங்கள், காய்கறிகள், பயிறு வகைகள், சீரியல், ஆலிவ் எண்ணெய், எக்கச்சக்கமான மீன்கள் ஆகியவற்றுடன், மிதமானளவு பால் பண்ணைப் பொருட்களையும், மதுவையும், சிறிதளவு மாம்சத்தையும் கிரேக்கர் புசிக்கிறார்கள்” என ரீடர்ஸ் டைஜெஸ்ட் புத்தகம் அறிக்கை செய்கிறது. இவ்வாறு, மத்தியதரை கடல் பகுதியின் பாரம்பரிய உணவு ஆரோக்கியத்துக்கு பங்களிப்பது அடிக்கடி கவனிக்கப்பட்டிருக்கிறது. (g04 8/22)

உலகில் பெருகி வரும் சேரிகள்

தற்போதைய நிலை நீடித்தால் “30 வருடத்திற்குள்ளாக உலகில் மூன்று பேரில் ஒருவர் சேரிகளில் வாழ்வார்” என ஐநா அறிக்கை ஒன்றின் அடிப்படையில் லண்டனில் வெளியாகும் த கார்டியன் செய்தித்தாள் குறிப்பிடுகிறது. “94 கோடி மக்கள், அதாவது உலக ஜனத்தொகையில் கிட்டத்தட்ட ஆறில் ஒரு பகுதியினர், அழுக்கடைந்த, சுகாதாரமற்ற பகுதிகளில், தண்ணீர், கழிவுநீக்க வசதி, அடிப்படை வசதிகள், சட்டரீதியான பாதுகாப்பு ஆகியவை இல்லாமல் வாழ்ந்து வருகிறார்கள்” என்பது வருத்தமான விஷயம். கென்யாவில் நைரோபியிலுள்ள கிபேரா மாகாணத்தில் சுமார் 6,00,000 பேர் சேரிகளில் வாழ்கிறார்கள். ஐநா மனித குடியிருப்பு திட்டமான ஐநா-மனையின் இயக்குநரான ஆன்னா டிபையூகா இவ்வாறு சொல்கிறார்: “மட்டுக்குமீறிய அளவில் ஏற்றத்தாழ்வும் வேலையில்லா திண்டாட்டமும் சமூக விரோத நடத்தைக்கு மக்களை வழிநடத்துகிறது. எல்லா தீமைகளும் சங்கமிக்க சேரிகள் துணைபோகின்றன, அங்கு சமாதானமும் பாதுகாப்பும் கிடையவே கிடையாது, அங்கு இளைஞர்களைப் பாதுகாக்க முடியாது.” (g04 9/8)

அலுவலகம் ஆபத்தான இடமா?

“எதிர்பாலாருடன் வேலை பார்ப்பது உங்கள் மண வாழ்க்கைக்கே உலை வைத்துவிடுகிறது” என ஸ்வீடன் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு காட்டியதாக த வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தித்தாள் அறிக்கை செய்தது. இதன் ஆராய்ச்சியாளர் ஈவான் அபர்க் விவாகரத்து மற்றும் வேலை சம்பந்தப்பட்ட அரசாங்க பதிவுகளை மறுபார்வை செய்தார்; “அலுவலகத்தில் ஒரே பாலாருடன் மட்டும் வேலை செய்பவர்களையும், எதிர்பாலாருடன் மட்டும் வேலை செய்பவர்களையும் ஒப்பிட்டால், இரண்டாம் தரப்பினரின் விவாகரத்து வீதமே அதிர்ச்சியூட்டும் விதத்தில் 70 சதவீதமாக அதிகரித்துள்ளது” என்பதை அவர் கண்டுபிடித்தார். சக பணியாட்கள் மணமானவர்களாக இருந்தாலும்சரி, இல்லாவிட்டாலும்சரி இது உண்மை என்பதையும் அபர்க் கண்டுபிடித்தார். 1,500 இடங்களிலுள்ள 37,000 வேலையாட்களை வைத்து ஏழாண்டுகளாக நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சி, பதிவுகளின் அடிப்படையில் இருந்ததே தவிர, அவ்வளவு துல்லியமாக இராத, தனிப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில் இருக்கவில்லை. விவாகரத்திற்கான வாய்ப்பை 50 சதவீதம் குறைப்பதற்கு ஒரு வழி, கணவனும் மனைவியும் ஒரே அலுவலகத்தில் வேலை பார்ப்பதுதான் என அந்தக் கட்டுரை குறிப்பிட்டது. (g04 9/8)

அவிசுவாச மதகுரு

“பரலோக தேவன் இல்லை, நித்திய ஜீவன் இல்லை, மானிட உயிர்த்தெழுதல் இல்லை” என்றெல்லாம் ஒரு லூத்தரன் மதகுரு சொன்னதால் கடந்த வருடம் அவரைப் பற்றிய பேச்சே எங்கும் அடிபட்டது. தற்காலிக வேலை நீக்கத்திற்குப் பிறகு பிரசங்கியாக பணியைத் தொடர மீண்டும் அவர் அனுமதிக்கப்பட்டார் என பிபிசி நியூஸ் அறிக்கை செய்கிறது. கோபன்ஹாகனுக்கு அருகே உள்ள, டாபெக் பாரிஷை சேர்ந்த டாகில் கிராஸ்பாயல் என்ற அந்த மதகுரு “தான் சொன்னவற்றிற்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்,” அதோடு சர்ச்சில் தனக்குக் கடமைகள் இருப்பதையும் ஒப்புக்கொண்டார் என்பதாக எல்ஸிநோர் மறைமாவட்டத்தை சேர்ந்த பிஷப் லைச-லாடா சொன்னார். இருந்தாலும், கிராஸ்பாயல் பழையபடியே தொடர்ந்து பிரசங்கித்து வந்தார். அவர் ராஜினாமா செய்ய மறுத்தால் அவரது பணியைத் தொடரலாமா கூடாதா என்பது விசாரணை செய்து தீர்மானிக்கப்பட வேண்டுமென ஜூன் 2004-⁠ல் பிஷப் அறிவித்தார். (g04 9/8)

செஸ் ஆட்ட மோசடி

“செஸ் ஆட்டக்காரர்களில் அநேகர் அதன் விதிமுறைகளை எப்போதும் சரியாக கடைப்பிடிப்பதில்லை” என அறிக்கை செய்கிறது ஃப்ராங்க்ஃபர்ட்டர் ஆல்ஜிமைனா ட்ஸைட்டுங் என்ற செய்தித்தாள். பொழுதுபோக்கிற்காக விளையாடும் ஓர் ஆட்டக்காரர் கிரான்ட் மாஸ்டர் ஒருவரையே தோற்கடித்துவிட்டார் என்பது இதற்கு ஓர் உதாரணம். இருப்பினும், மற்றொரு அறையிலிருந்த கம்ப்யூட்டர் செஸ் ஆட்டக்காரருடன் தொடர்பு கொள்வதற்காக தனது நீண்ட தலைமுடிக்கு அடியில் மைக்ரோஃபோனையும், இயர்ஃபோனையும் காமராவையும் அவர் மறைத்து வைத்திருந்தார் என்பது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. இன்னும் சிலரோ, கழிவறைக்குச் சென்று, கதவை தாழிட்டுக் கொண்டு, கையடக்க கம்ப்யூட்டரை வெளியே எடுத்து, எந்தக் காயை அடுத்து நகர்த்தலாம் என்பதைக் கணக்கிடுகிறார்கள் என்பதும் அறிந்ததுதான். இன்டர்நெட்டில் விளையாடும் ஆட்டக்காரர்களும்கூட ஏமாற்றலாம். இன்டர்நெட்டில் விளையாடுகையிலேயே சிலர் தங்கள் கம்ப்யூட்டரில் ஒரு செஸ் புரோகிராமை தயாராக வைத்துக் கொள்கிறார்கள். இன்னும் சில ஆட்டக்காரர்கள், இரண்டு பெயர்களில் எதிரும் புதிருமாக இருந்து தாங்களே விளையாடிக் கொள்கிறார்கள்: ஒரு பெயர் எப்போதும் தோல்வியைத் தழுவும், மற்றொரு பெயர் எப்போதும் வெற்றி பெறும். “பலருக்கு பரிசுத் தொகை அந்தளவு முக்கியமல்ல. கிட்டத்தட்ட எல்லாருடைய விஷயத்திலுமே, பணத்திற்கான ஆசை அல்ல ஆனால் பெயருக்கும் புகழுக்குமான ஆசையே தூண்டுவிக்கும் அம்சமாக இருக்கிறது” என அந்தச் செய்தித்தாள் குறிப்பிடுகிறது. (g04 9/22)

படிப்பதற்கு வயசாகிவிட்டதா?

“[கென்யாவிலுள்ள ரிஃப்ட் வாலி பிராவின்ஸிலுள்ள ஆரம்பப் பள்ளியில்] ஆறு வயது பிள்ளைகள் மத்தியில் ஒரு ‘மாணவன்’ மட்டும் ரொம்பவே உயரமாக தெரிந்தார்” என அறிக்கை செய்கிறது டெய்லி நேஷன் என்ற நைரோபியில் வெளியாகும் செய்தித்தாள். அந்த “மாணவன்” 84 வயதுக்காரர்; “பைபிளை வாசிக்க கற்றுக்கொள்வதற்காக” சமீபத்தில் அவர் முதல் வகுப்பில் சேர்ந்தார். அவருடைய பேரன் பேத்திகளோ அவரை விடவும் மேல் வகுப்புகளில் படித்து வருகிறார்கள்; இருந்தாலும், அவர் தவறாமல் வகுப்புக்கு வந்து விடுகிறார். “பைபிளிலிருந்து ஆட்கள் எனக்கு பல விஷயங்களைச் சொல்கிறார்கள், அவை உண்மைதானா என எனக்குத் தெரியவில்லை, அதனால் நானே பரிசுத்த வேதாகமத்தைப் படித்து அதைத் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்” என அவர் நேஷன் செய்தித்தாள் நிருபரிடம் சொன்னார். பள்ளி சீருடையிலும் பள்ளி புத்தகங்களுடனும் வரும் இவர், பள்ளியின் கண்டிப்பான சட்டதிட்டங்களுக்கு இசைய நடந்துகொள்ள பெரிதும் முயலுகிறார். என்றாலும் சில விஷயங்களில் இவருக்குக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது. மற்ற பிள்ளைகள் உடற்பயிற்சி செய்கையிலும் ஓடியாடி விளையாடுகையிலும் இவர் “கைகால்களை மெல்ல நீட்டி மடக்கினால் போதும்.” (g04 9/22)