Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

சுற்றுச்சூழல் “நமது சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியுமா?” (டிசம்பர் 8, 2003) என்ற கட்டுரை எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்திருந்தது. யெகோவா இந்த அழகிய பூமியைச் சீர்ப்படுத்தி அதை பழைய நிலைக்கு கொண்டுவரும் நாளுக்காக ஏங்குகிறேன். மனிதன் பூமியை இந்தளவு கெடுத்து வைத்திருப்பதை பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது!

டி. எல்., பிரிட்டன் (g04 9/8)

எனக்கு வயது 15. சில சமயங்களில் விழித்தெழு!-வின் சில இதழ்களை நான் வாசிக்காமல் விட்டுவிடுவேன். ஆனால் இந்தக் கட்டுரைகளைப் படித்த பிறகு, இனிமேல் எல்லா இதழ்களையும் ஒன்றுவிடாமல் படிக்க வேண்டும் என்ற ஆசை வந்திருக்கிறது! இந்தக் கட்டுரைகள் நம்முடைய கிரகத்தைப் பற்றி ஆர்வத்தைத் தூண்டும் நிறைய விஷயங்களை எனக்கு கற்றுக்கொடுத்தன. பள்ளியில் இந்தத் தகவலைப் பயன்படுத்தி நிறைய மார்க் வாங்கினேன்.

எஸ். வி., உக்ரைன் (g04 9/8)

மல்ட்டிபிள் ஸ்க்லரோஸிஸ் “மல்ட்டிபிள் ஸ்க்லரோஸிஸ் நோயை சமாளித்தல்” (டிசம்பர் 8, 2003) என்ற கட்டுரைக்கு என் மனமார்ந்த நன்றி. எனக்கு இந்த வியாதி இருப்பதை கண்டுபிடித்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிறது. என்னுடைய கைகால்களும் இடது கண்ணும் செயலிழந்துவிட்டன. முன்பெல்லாம் விரக்தியுடனேயே இருந்தேன். ஆனால் உங்களுடைய கட்டுரை தந்த ஆலோசனையின்படி என்னுடைய நகைச்சுவை உணர்வை வளர்த்துக்கொள்ளவும் நல்லதையே சிந்திப்பதற்கும் இப்போது முயற்சி செய்கிறேன். உற்சாகமூட்டும் இந்தக் கட்டுரைக்கு மிக்க நன்றி.

எம். ஏ., ஜப்பான் (g04 9/8)

மல்ட்டிபிள் ஸ்க்லரோஸிஸ் வியாதியையும் அது படிப்படியாக அதிகரிக்கும் விதத்தையும் அதன் விளைவுகளையும் பற்றி இந்தக் கட்டுரை எத்தனை துல்லியமாக விளக்கியிருக்கிறது! பல வருடங்கள் என் மனதிலிருந்த கேள்விகளுக்கு பதிலை தெரிந்துகொண்டேன். என்னுடைய நெருங்கிய நண்பர்களில் அநேகர் இதைப் படித்துவிட்டு, இதற்கு முன்பு இந்த வியாதியைப் பற்றி இந்தளவு தங்களுக்கு தெரியாது என்று சொன்னார்கள்.

எம். டபிள்யு., ஜெர்மனி (g04 9/8)

நான் கணவன் இல்லாதவள்; எனக்கு மூன்று பிள்ளைகள். மல்ட்டிபிள் ஸ்க்லரோஸிஸ் வியாதியால் நாலாவது முறையாக தாக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் இருந்தபோது இக்கட்டுரையை வாசித்தேன். மனம் நெகிழ்ந்தேன். இந்தத் தீரா வியாதி, யெகோவாவிடம் நான் வைத்துள்ள நட்பையும் நம்பிக்கையையும் ஆழமாக்கியிருக்கிறது என்று நான் சொல்வது உங்களுக்கு விசித்திரமாக தோன்றலாம், ஆனால் அதுதான் உண்மை.

எம். எச்., ஜெர்மனி (g04 9/8)

மல்ட்டிபிள் ஸ்க்லரோஸிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் அனைவருமே இந்தக் கட்டுரையிலிருந்து நன்மை பெறலாம். நான் இன்று சக்கர நாற்காலியே கதியென்று கிடக்கிறேன், என்றாலும் முழுநேர ஊழியத்தில் ஈடுபடுகிறேன்; முக்கியமாக வீட்டிலிருந்தபடியே டெலிபோன் மூலம் நற்செய்தியைப் பிரசங்கித்து வருகிறேன். நான் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டிருப்பதால் ஒரு கிறிஸ்தவ சகோதரி இந்தக் கடிதத்தை எழுத எனக்கு உதவினார்கள்.

எம். ஜி., பிரான்சு (g04 9/8)

எனக்கு மல்ட்டிபிள் ஸ்க்லரோஸிஸ் இருக்கிறதென்று ஏறக்குறைய 21 வருடங்களுக்கு முன்பே கண்டுபிடித்து விட்டார்கள். கிறிஸ்தவ சபையில் நான் ஒரு மூப்பராக இருக்கிறேன். என் வியாதி அதிகமாகாமல் இருக்க சகோதரர்கள் கரிசனையோடு என் பொறுப்புகளை குறைத்திருக்கிறார்கள். “‘வியாதிப்பட்டிருக்கிறேன்’ என்று நகரவாசிகள் சொல்வதில்லை” என்று ஏசாயா 33:24-⁠ல் சொல்லியிருக்கும் காலம் வந்தால் எவ்வளவு அருமையாக இருக்கும்!

இ. சி., ஐக்கிய மாகாணங்கள் (g04 9/8)

பிரபஞ்சத்தின் விதி? “அறிவியல் என் மதமாக இருந்தது” (அக்டோபர் 8, 2003) என்ற அனுபவத்தை எழுதிய கென்னத் டானாக்காவுக்கு, இப்பிரபஞ்சம் தொடர்ந்து விரிவாகிக் கொண்டே போகும் என்ற விஞ்ஞானிகளின் நம்பிக்கை தெரியாது போலும்.

ஆர். ஜி., ஐக்கிய மாகாணங்கள்

“விழித்தெழு!” பதில்: அண்டவியலாளர்கள் அனைவரும் ஒரே கருத்தை தெரிவிப்பதில்லை. உதாரணத்திற்கு, பிரபஞ்சம் விரிவாகிற வேகம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, ஒரு கட்டத்தில் நின்றுவிட்டு, அதன்பின் சுருங்க ஆரம்பித்து, கடைசியில் பழையபடி அடர்த்தியாக ஆகிவிடும் என இப்போதும்கூட அண்டவியலாளர்கள் சிலர் சொல்கிறார்கள். கென்னத் டானாக்கா எந்தவொரு குறிப்பிட்ட கருத்தையும் ஆதரிக்காமல் அவற்றை வெறுமனே குறிப்பிட்டார். வாழ்க்கையின் நோக்கத்தைப் பற்றிய எல்லா கேள்விகளுக்கும் விஞ்ஞானத்தால் பதில் தர முடியாத நிலையில், தான் எவ்வாறு அவற்றை தேடிக்கொண்டிருந்தார் என்பதை வலியுறுத்தத்தான் அப்படி குறிப்பிட்டார். (g04 9/22)