Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சர்க்கஸ் கொட்டகையில் எனது வாழ்க்கை

சர்க்கஸ் கொட்டகையில் எனது வாழ்க்கை

சர்க்கஸ் கொட்டகையில் எனது வாழ்க்கை

ஜான் ஸ்மாலி சொன்னபடி

“பெரியோர்களே, தாய்மார்களே, பிள்ளைச் செல்வங்களே, உலகிலேயே மாபெரும் சர்க்கஸை கண்டுகளிக்க வந்திருக்கும் உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்!” சர்க்கஸ் ரிங்மாஸ்டரின் இவ்வார்த்தைகள், மிருகங்களையும், கோமாளிகளையும், ‘அக்ரோபாட்ஸ்’ சாகச கலைஞர்களையும் வைத்து நடத்தப்படும் விறுவிறுப்பான காட்சி ஆரம்பமாவதற்கான சமிக்கையாக பெரும்பாலோருக்கு இருக்கும். ஆனால் எங்கள் குடும்பத்திற்கு, ரிங்லிங் பிரதர்ஸ், பார்னம் & பேலி என்ற சர்க்கஸ் கம்பெனிக்காரரது கொட்டகையில் இன்னொரு நாள் வேலை ஆரம்பிப்பதற்கான சமிக்கையாகவே இருந்தன.

நான் பிறந்தது 1951-⁠ம் வருடத்தில். பிறந்ததுமே “மரத்தூள் என் பாதங்களில்” பட்டது என சொல்லலாம்; இந்தச் சொற்றொடர், பெரிய சர்க்கஸ் கொட்டகைகளின் நிலத்தில் மரத்தூள் பரவப்பட்டிருப்பதைக் குறிக்கிறது. நானும் என் தம்பியும் நடக்க ஆரம்பித்த சமயத்திலிருந்தே சர்க்கஸின் ஏதாவதொரு அம்சத்தில் பங்கேற்க ஆரம்பித்தோம்.

அப்பா பெயர் ஹாரி, அம்மா பெயர் பியாட்ரிஸ். நான் பிறப்பதற்கு முன்பே இவர்கள் இருவரும் க்ளைட் பீட்டி சர்க்கஸ் கம்பெனியில் சேர்ந்திருந்தார்கள். என் அம்மா ஒரு பாடகி, மெக்சிகோ நாட்டவரின் பாரம்பரிய உடையணிந்து ஸ்பானிய பாடல்களைப் பாடி வந்தார். அப்பாவோ இசைக் கலைஞர், முதல் உலகப் போரின் சமயத்தில் இசைக் குழுவின் இயக்குநரும் இசையமைப்பாளருமான ஜான் ஃபிலிப் ஸூசா என்பவருடன் இணைந்து இசைக் கருவிகளை இசைத்து வந்தார். 1950-களின்போது ரிங்லிங் பிரதர்ஸ் பேண்ட் என்ற இசைக் குழுவில் டியூபா என்ற இசைக் கருவியை இசைப்பதற்கு அழைக்கப்பட்டார்; ஒருவேளை ஸூசாவுடன் அவர் பணியாற்றியதால் அழைக்கப்பட்டிருக்கலாம்.

காலப்போக்கில், நாங்கள் பல்வேறு சர்க்கஸ் கம்பெனிகளில் பணியாற்றினோம்; கடைசியில் அல் ஜி. கெல்லி & மில்லர் பிரதர்ஸ் சர்க்கஸ் கம்பெனியில் சேர்ந்தோம். இந்த சர்க்கஸும் அமெரிக்காவில் ரொம்ப பிரபலமடைந்தது. இதில் மூன்று பெரிய கொட்டகைகள் இருந்தன. ஒரு கொட்டகையில் சிங்கங்கள், புலிகள், யானைகள், கழுதைப்புலிகள் ஆகியவையும், அயல் நாட்டைச் சேர்ந்த வேறு மிருகங்களும் வைக்கப்பட்டிருந்தன.

இரண்டாவது கொட்டகையை நாங்கள் சைட்ஷோ என அழைத்தோம். இதில் பொதுவாக, கத்தியை விழுங்குபவர், அலிகள் என அழைக்கப்படுகிறவர்கள், குள்ளர்கள், மாமிச மலை போன்ற சரீர வாகுடையவர்கள் ஆகியோரும், விநோதமான அங்க அமைப்புடைய வேறு சிலரும் இருந்தார்கள். இப்படிப் பலதரப்பட்ட ஆட்களுடன் வாழ்ந்தது பிள்ளைகளான எங்களுக்கு நல்ல நல்ல பாடத்தைக் கற்றுக்கொடுத்தது. சிலர் கருணையின்றி இவர்களுக்கு பட்டப்பெயர் வைத்து அழைத்தார்கள், ஆனால் எங்களைப் பொறுத்தவரை இவர்களை எங்கள் குடும்பத்தாராகவே கருதினோம். வருடத்தில் பெரும்பாலான சமயங்களில் சேர்ந்தே வேலை செய்தோம், சேர்ந்தே சாப்பிட்டோம், சேர்ந்தே வசித்தோம்.

மூன்றாவது கொட்டகை, சர்க்கஸ் நடைபெறும் கொட்டகை; ஒன்றுக்குள் ஒன்றாக வட்ட வடிவில் மூன்று பகுதிகள் இருந்தன. இவற்றில் ஒரே சமயத்தில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பொதுவாக அதிக ஆபத்தான அல்லது மலைப்பூட்டும் நிகழ்ச்சிகள் நடுவிலிருந்த வட்டரங்கில் நடைபெற்றன.

சர்க்கஸில் ஒரு நாள்

சின்னஞ்சிறு வயதிலிருந்தே நானும் என் தம்பியும் ‘அக்ரோபாட்டிக்’ சாகசங்களைச் செய்து வந்தோம். நாங்கள் வைல்ட் வெஸ்ட் ஷோவிலும் பங்கேற்றோம்; அதில் அமெரிக்க இந்திய சிறுவர்களாக நடித்தோம். அந்த நிகழ்ச்சியில் சாக்டாவ் இனத்தைச் சேர்ந்த ஓர் அமெரிக்க இந்திய குடும்பத்தார் பங்கேற்றார்கள், அவர்கள் அமெரிக்க இந்திய நடனங்களை எங்களுக்குக் கற்றுக்கொடுத்தார்கள்.

பொதுவாக நாங்கள் காலை சுமார் ஆறு மணிக்கு வேலையை ஆரம்பித்தோம். அந்தச் சமயத்தில் அடுத்த ஊருக்கு செல்வதற்கு எல்லாவற்றையும் தயார் செய்ய ஆரம்பித்தோம். சர்க்கஸ் கொட்டகைகளைப் பிரிப்பது, அவற்றை எடுத்துச் செல்வது, மீண்டும் அமைப்பது போன்ற வேலைகளில் எல்லா கலைஞர்களும் பங்குகொண்டார்கள். உதாரணமாக, என் அப்பா இசைக் கலைஞராக இருந்ததோடு ஒரு பெரிய ட்ரக்கின்​—⁠ஏழு யானைகளைச் சுமந்து செல்லும் பெரிய டிரக்கின்​—⁠டிரைவராகவும் இருந்தார். சில சமயங்களில் அப்பாவுடன் சேர்ந்து இந்த டிரக்கில் நானும் அம்மாவும் தம்பியும் பயணித்தோம்.

பொதுவாக ஒவ்வொரு நாளும் நாங்கள் ஒரு புதிய இடத்திற்கு சென்று இரண்டு காட்சிகளை நடத்தினோம். ஞாயிற்றுக் கிழமைகளில் மாட்னி ஷோ மட்டுமே நடைபெற்றது, மாலையில் குடும்பமாய் சேர்ந்து ஓய்வாக பொழுதைக் கழித்தோம். ஞாயிற்றுக் கிழமையானால் அப்பா சில சமயங்களில் டவுனுக்கு அழைத்துச் சென்று மில்க் ஷேக் வாங்கித் தருவார், அல்லது டிரைவ்-இன் தியேட்டருக்கு அழைத்துச் செல்வார்; இப்படி குடும்பத்துடன் சேர்ந்து ஸ்பெஷலாக எதையாவது செய்வார்.

சர்க்கஸ் கொட்டகையை அமைக்க நிறைய வேலை செய்ய வேண்டியிருந்தது. அதற்கு யானைகளும் உதவிக்கு வந்தன. எப்படி? மூன்று கொட்டகைகளின் நீண்ட கம்பங்களைத் தூக்கி நிறுத்துவதற்கு அவை பயன்படுத்தப்பட்டன. கம்பத்தின் ஒரு முனை, கொட்டகை துணியிலிருந்த வளையத்தில் செருகப்பட்டிருந்தது, அந்தக் கம்பத்தைச் செங்குத்தாக தூக்கி நிறுத்துவதற்கு வசதியாக மறுமுனையை ஒரு யானை இழுத்து சென்றது. எல்லா கம்பங்களும் தூக்கி நிறுத்தப்பட்டு, மின்சார ஜெனரேட்டர்கள் பொருத்தப்பட்ட பிறகு பிற்பகல் நிகழ்ச்சிக்காக நாங்கள் போய் தயாராக வேண்டியிருந்தது.

புதிய உத்திகளைக் கற்றுக்கொள்ளுதல்

பிற்பகல் நிகழ்ச்சிக்கும் மாலை நிகழ்ச்சிக்கும் இடைப்பட்ட நேரத்தில் சர்க்கஸ் கம்பெனியில் இருந்த பிள்ளைகளான நாங்கள் குட்டிக்கரணங்கள் போடுவதற்கு, ஒயர் கம்பியின் மீது நடப்பதற்கு, பொருள்களை கீழே விழவிடாமல் கை மாற்றி மாற்றி தட்டுவதற்கு, ட்ரப்பீஸிலிருந்து லாவகமாக தாவுவதற்கு கற்றுக்கொண்டோம். எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவர்கள் சர்க்கஸில் நீண்ட காலமாக இருந்தவர்கள், சொல்லப்போனால் இவர்கள் பொதுவாக பரம்பரை பரம்பரையாக சர்க்கஸிலேயே வாழ்க்கையைக் கழித்தவர்கள். முதல் குட்டிக்கரணத்தைப் போட எனக்குக் கற்றுக்கொடுத்த இத்தாலிய நாட்டு கலைஞரை எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. எனக்குக் கிட்டத்தட்ட நான்கு வயதிருக்கும்போது அதைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினேன். ஆரம்பத்தில் அவர் என் பாதுகாப்புக்கு சேஃப்டி பெல்ட்டைக் கட்டிவிட்டார்; பின்னர் நான் கரணங்கள் அடிக்கையில் கூடவே அவரும் ஓடி வருவார், பாதுகாப்பு தேவைப்பட்டால் தன் கைகளால் பிடித்துக்கொள்வார். கடைசியில் அவரது உதவியின்றி தனியாகவே என்னால் கரணங்கள் அடிக்க முடிந்தது.

சர்க்கஸ் அரங்கில் கலைஞர்களும் மிருகங்களுமாக அணிவகுத்துச் செல்லும் சமயத்தில் ஒரேவொரு முறை எனக்கு விபத்து நேர்ந்தது. இரண்டு குரங்குகளுடன் சென்ற ஒரு கோமாளிக்குப் பின்னால் நானும் என் தம்பியும் அந்த அணிவகுப்பில் நடந்து சென்றோம், எங்களுக்குப் பின்னால் யானைக் கூட்டம் வந்தது. என் கைகளை ஆட்டி ஆட்டி நடந்து சென்றேன்; அதைக் கண்டு அந்தக் குரங்குகளில் ஒன்று​—⁠அது பயந்து போயிருக்கும் என நினைக்கிறேன்⁠—⁠லபக் என என் கையைப் பிடித்து, நறுக்கென்று கடித்துவிட்டது. நல்ல வேளை, அதன் விஷம் எதுவும் ஏறவில்லை, ஆனால் இடது கையில் அந்த வடு இன்னும் லேசாக இருக்கிறது. எனவே, மிருகங்கள் ரொம்ப அழகானவையாக இருந்தாலும் சரி, நன்கு பழக்குவிக்கப்பட்டவையாக இருந்தாலும் சரி, எப்போதுமே அவற்றிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது நினைவில் வைக்க வேண்டிய விஷயம்.

கற்றுக்கொண்ட மதிப்புமிக்க பாடங்கள்

சர்க்கஸ் வாழ்க்கை வேறு, குடும்ப வாழ்க்கை வேறு. ஆம், அப்படித்தான் வளர்க்கப்பட்டோம்; பிள்ளைகளான எங்களுக்கு நன்னெறிகளையும் ஒழுக்கநெறிகளையும் கற்றுக்கொடுப்பதற்கு அப்பா அம்மா இரண்டு பேருமே எப்போதும் நேரத்தை ஒதுக்கினார்கள். அப்பா என்னைத் தன் மடியில் உட்கார வைத்துக் கொண்டு, வித்தியாசமான இனத்தையும் பின்னணியையும் சேர்ந்தவர்களிடம் தப்பெண்ணத்தோடு நடந்துகொள்ளக் கூடாது என்றெல்லாம் அறிவுரை கூறியது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. இது எனக்கு மதிப்புமிக்க ஒரு பாடமாக இருந்தது, ஏனென்றால் உடல் ரீதியில் வித்தியாசப்பட்டவர்களுடன் மட்டுமல்ல, ஆனால் பல்வேறு நாட்டவருடனும் நான் சேர்ந்து வாழ்ந்தேன்.

எங்களைச் செதுக்கி சீராக்குவதில் அம்மாவும் பங்குகொண்டார். சில சமயங்களில் சர்க்கஸ் கொட்டகையில் கூட்டம் நிரம்பி வழிந்தது; வேறு சில சமயங்களில் ஆட்கள் இல்லாமல் அது காற்று வாங்கியது. அம்மா பலமுறை எங்களிடம் (கைதட்டிக் காட்டியபடி) “ஜனங்களைக் குஷிப்படுத்தி கைதட்டலைப் பெறத்தான் நீங்க சாகசம் செய்றீங்க, காசுக்காக இல்ல. அதனால ஆட்கள் நூற்றுக்கணக்கில் வந்தாலும் சரி, கொஞ்ச பேர் வந்தாலும் சரி, எப்போதும் அருமையாக செய்யனும்” என எங்களுக்குச் சொன்னதுண்டு. அதை நான் மறக்கவே இல்லை. சர்க்கஸிற்கு எத்தனை பேர் வந்தாலும் சரி அவர்களிடம் தனிப்பட்ட அக்கறை காட்ட வேண்டும் என்பதை அவரது பாணியில் சொல்லிக் கொடுத்தார்.

நானும் தம்பியும் நிகழ்ச்சியில் நாங்கள் பங்கேற்றதோடு ஒவ்வொரு காட்சிக்குப் பிறகும் சுத்தம் செய்வதில் உதவினோம், கொட்டகையில் கிடந்த குப்பைகளையெல்லாம் பொறுக்கினோம். இதுவும் எங்களுக்கு நல்ல பயிற்சியாக அமைந்தது.

ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை நாங்கள் ஊர் ஊராக போய் சர்க்கஸ் நடத்தினோம், எனவே மற்றவர்களைப் போல எங்களால் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. குளிர்காலத்தில், எங்கள் கம்பெனியின் தலைமையகம் இருந்த ஓக்லகாமாவிலுள்ள ஹியூகோ நகரத்தில் நாங்கள் தங்கினோம். இந்தச் சமயத்தில் சுமார் ஐந்து மாதங்களுக்குப் பள்ளிக்குச் சென்றோம். மற்ற சர்க்கஸ் கம்பெனி ஆட்களும் குளிர்காலத்தில் ஹியூகோவில்தான் தங்கினார்கள், எனவே அநேக பிள்ளைகள் எங்களைப் போன்ற சூழ்நிலையில் இருந்தார்கள். எங்களுடைய பிரத்தியேக சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பாடத் திட்டத்தை நகரப் பள்ளி மாற்றியமைத்து எங்களுக்கு உதவியது.

எங்கள் வாழ்க்கையை மாற்றிய நாள்

1960, செப்டம்பர் 16-⁠ம் தேதி அப்பா விடியற்காலை ஐந்து மணிக்கு எழுந்தார், பயணத்திற்கு எங்களைத் தயார்படுத்த ஆரம்பித்தார். அன்று காலை அப்பாவுடன் சேர்ந்து யானைகளை ஏற்றிச் செல்லும் டிரக்கில் பயணிப்பதற்குப் பதிலாக சர்க்கஸ் கம்பெனி பொதுவாக ஏற்பாடு செய்த வாகனத்தில் நாங்கள் பயணிக்கலாமென அம்மா தீர்மானித்தார்.

சர்க்கஸ் நடைபெறவிருக்கும் நகரத்திற்கு வந்து சேர்ந்ததும் எங்கள் புதிய சுற்றுப்புறத்தை நானும் தம்பியும் ஆராய ஆரம்பித்தோம். “பயங்கரமான விபத்து ஒன்று நடந்துவிட்டது. ஸ்மாலியும் ரிங்மாஸ்டரும் பிழைக்கவில்லை” என அப்போது யாரோ ஒருவர் கத்தினார். அதைக் கேட்டதும் முதலில், ‘அது உண்மையாக இருக்காது, ஏதோ தவறுதலாக சொல்கிறார்’ என நினைத்தேன். பிறகுதான் தெரிந்தது அம்மா ஏற்கெனவே விபத்து நடந்த இடத்துக்குப் போய்விட்டார் என்பது. மலைப்பாங்கான நெடுங்சாலையின் இறக்கத்தில் அப்பா வண்டியை ஓட்டிச் சென்றபோது, கலிபோர்னியாவிலுள்ள ப்ளேசர்வில் என்ற இடத்திற்கு அருகே திடீரென பிரேக்குகள் வேலை செய்யவில்லை. யானைகளின் கனம் தாங்காமல், டிரக்குடன் இணைக்கப்பட்டிருந்த பின்வாகனம் நெட்டுக்குத்தலாக நின்றுவிட்டது. அப்போது ஏற்பட்ட அழுத்தத்தின் காரணமாக டிரக்கின் பெரிய பெட்ரோல் டேங்க் வெடித்து சிதறியது, அப்பாவும் அவருடன் பயணம் செய்த ரிங்மாஸ்டரும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்கள். அன்றைக்கு நான் அப்படியே நொறுங்கிப் போய்விட்டேன். அப்பா என்றால் எனக்கு உயிர். நாங்கள் உற்ற நண்பர்களாய் இருந்தோம்.

மிஸ்சௌரியில் அப்பாவின் சொந்த ஊரான ரிச் ஹில்லில் அவரை அடக்கம் செய்த பின்பு, குளிர்காலத்தில் நாங்கள் தங்கும் ஓக்லகாமாவிலுள்ள ஹியூகோ நகரத்துக்கு சென்றோம். ஆனால் எங்கள் சர்க்கஸ் கம்பெனி அந்தச் சமயத்தில் செல்ல வேண்டிய பல்வேறு இடங்களுக்கும் தொடர்ந்து பயணித்தது. இதற்கிடையில், நாங்கள் வழக்கமான பாடத் திட்டத்தைப் பின்பற்றுகிற பள்ளியில் சேர்ந்து படித்து வந்தோம். அது புதுமையான அனுபவம். இருந்தாலும், அடுத்த பயணத்தில் கெல்லி மில்லர் கம்பெனிக்காரர்களுடன் செல்வதற்கு ஆசை ஆசையாக காத்திருந்தோம். ஆனால் எங்கள் வாழ்க்கை திடீரென திசைமாறியது.

எங்கள் வாழ்க்கையில் பைபிளின் வரவு

ஒருநாள் பள்ளியிலிருந்து வீடு திரும்பியபோது எங்களுக்குப் பைபிளைக் கற்றுக்கொடுக்க வந்திருந்த ஒரு பெண்மணியிடம் அம்மா என்னை அறிமுகப்படுத்தினார். அவருடைய பெயர் ஜிம்மி பிரௌன், அவர் ஒரு யெகோவாவின் சாட்சி. எனக்குப் பைபிளைப் படிப்பதற்குத் துளியும் விருப்பமில்லாதிருந்தது. திரும்பவும் சர்க்கஸுக்குப் போக வேண்டும், ட்ரப்பீஸ் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே என் குறிக்கோளாகவும் என் நெடுநாள் கனவாகவும் இருந்தது. அதனால் இரண்டு மரங்களுக்கு இடையே தாவுவதற்கு வசதியாய் ட்ரப்பீஸ் கட்டையை தற்காலிகமாக அமைத்து நானும் என் தம்பியும் ப்ராக்டிஸ் செய்து வந்தோம். இருப்பினும், நாங்கள் எல்லாரும் பைபிளைப் படிக்க ஆரம்பித்தோம், யெகோவாவின் சாட்சிகள் நடத்திய கூட்டங்களில் கலந்துகொண்டோம்; ஹியூகோவிலிருந்த, தனித் தொகுதியில், எட்டு சாட்சிகளே இருந்தார்கள். கொஞ்ச நாட்களுக்குப் பிறகு, பைபிள் படிப்பைத் தொடருவதற்காக அம்மா சர்க்கஸ் கம்பெனியைவிட்டு விலக தீர்மானித்தார். கண்களில் நீர் முட்ட, அவரது தீர்மானத்தை ஏற்றுக்கொண்டேன். ஆனால், சர்க்கஸ் கம்பெனியைச் சேர்ந்தவர்கள் நாங்கள் ஏன் திரும்பவும் வரவில்லை என அறிந்துகொள்ள எங்களைப் பார்க்க வந்த சமயங்களில் அந்தத் தீர்மானத்தில் உறுதியாக இருப்பது கடினமானது.

அதுவரை சர்க்கஸ்தான் என் உலகம் என்றிருந்தேன். ஆனால், அப்பாவின் நினைவை வேண்டுமென்றே ஒதுக்கியதைப் போல ஒரு கட்டத்தில் நினைத்தேன். என்றாலும் அவரது மரணம்தான் பைபிளைப் படிப்பதற்கு காரணமானது; ஏனென்றால், உயிர்த்தெழுதல் நம்பிக்கை எனக்கு மாபெரும் தூண்டுதலாக அமைந்தது. இந்த நம்பிக்கையில் இன்னும் உறுதியாக இருக்கிறேன். வாக்குறுதி அளிக்கப்பட்ட பூமிக்குரிய பரதீஸில் அப்பா உயிர்த்தெழுந்து வரும்போது முதலாவதாக அவரை வரவேற்பவர்களில் நானும் அங்கிருக்க வேண்டும், அதுதான் என் ஆசை.​—⁠வெளிப்படுத்துதல் 20:12-14.

யெகோவாவின் அமைப்பு மிகப் பெரிய குடும்பம்போல் இருப்பதைப் புரிந்துகொள்ள யெகோவாவின் சாட்சிகளான ரீடர் தம்பதியினர் எங்களுக்கு உதவினார்கள். அப்படி ஒரு பெரிய குடும்பம் இருப்பது எவ்வளவு உண்மை! கொஞ்சப் பேராக இருந்த யெகோவாவின் சாட்சிகளது தொகுதியில் பல குடும்பங்கள் ஒன்று சேர்ந்து வழிபட ஆரம்பித்தபோது ஒரு பெரிய சபையாக அது வளர்ந்தது. ராபர்ட், கேரல் இங்கல்ஹார்ட் தம்பதியரைப் பற்றி கட்டாயம் சொல்ல வேண்டும், அவர்கள் என்னைத் தங்களது ஆன்மீக மகனாக தத்தெடுத்தார்கள். டீனேஜ் பருவத்தில் எனக்குப் புத்திமதிகளையும் வழிநடத்துதலையும் அன்புடன் கொடுத்தார்கள், ஆனால் கண்டிப்புடனும் இருந்தார்கள்.

முதிர்ச்சி வாய்ந்த அத்தகைய கிறிஸ்தவர்களின் அன்பு எங்கள் வாழ்க்கையில் ஏற்பட்டிருந்த பயங்கரமான வெறுமை உணர்வைப் போக்கியது. அதுமட்டுமல்ல, கிறிஸ்தவனாக என் வாழ்க்கை முழுவதிலும் பல்வேறு வழிகளில் அந்த அன்பை ருசித்திருக்கிறேன். கடந்து போன வருடங்களில் நான் வசித்த ஓக்லகாமா, டெக்ஸஸ் ஆகிய இடங்களிலிருந்த ஒவ்வொரு சபையிலும் அநேக அன்பான கிறிஸ்தவ சகோதர சகோதரிகளைச் சந்தித்தேன். வயதான சகோதரர்கள் சிலர் தகப்பனைப் போன்ற வழிநடத்துதலையும் உற்சாகத்தையும் எனக்கு அளித்தார்கள். ஆம், அவர்கள் என் ஆன்மீக தகப்பன்களாக இருந்தார்கள்.

மீண்டும் பயணம்

சில வருடங்களுக்கு முன்பு என் அம்மா இறந்துவிட்டார். கடைசிவரை அவர் ஊக்கமாக பைபிளைப் படித்து வந்தார், உத்தம கிறிஸ்தவராகவும் வாழ்ந்தார். கடவுளுக்கு உண்மையோடு இருந்தவர்களை அவர் கல்லறையிலிருந்து வெளியே கொண்டுவரும் சமயத்தில் அம்மாவும் சந்தோஷமாக வருவார் என்பது எனக்குத் தெரியும். அந்த நாளைக் காண காத்திருக்கும் இச்சமயத்தில், யெகோவாவின் அமைப்பு பல்வேறு விதங்களில் எனக்கு ஒரு குடும்பத்தைப் போல இருந்திருப்பது எனக்கு ஆறுதலைத் தருகிறது.

கடவுளுடைய ஜனங்கள் மத்தியில் என் மனைவி எட்னாவை சந்தித்தபோது ரொம்ப சந்தோஷப்பட்டேன். எங்கள் திருமணத்திற்குப் பின்பு பைபிளைக் கற்பிக்கும் வேலையில் முழுநேரம் ஈடுபடுவதற்காக எங்கள் எல்லா நடவடிக்கைகளையும் ஒழுங்குபடுத்தினோம். அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்ய, டிவி ரிப்போர்ட்டர் பணியில் அப்ரன்டிஸ்ட்டாக வேலைக்குச் சேர்ந்தேன். இந்த வேலையில் எனக்குத் துளியும் அனுபவமும் இல்லை, பயிற்சியும் இல்லை; ஆனாலும், யெகோவாவின் சாட்சிகளுடைய சபையில் பைபிள் போதகராக பயிற்சி பெற்றது என்னை தகுதி பெற செய்தது. இதனால் காலப்போக்கில் வானொலி நிலையத்தில் செய்தி இயக்குநராக பணியாற்ற ஆரம்பித்தேன். எனினும் மீடியாவில் பிரபலமடைய வேண்டுமென்பது ஒருபோதும் என் இலக்கு அல்ல. மாறாக, எங்கு தேவை அதிகமோ அங்கு பைபிள் போதகர்களாக சேவிக்க நானும் எட்னாவும் எப்போதும் தயாராக இருந்தோம்.

1987-⁠ல், யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளைச் சந்திக்கும் வட்டாரக் கண்காணியாக வாலண்டியர் சேவை செய்வதற்கு அழைப்பு கிடைத்தது. அப்படிப்பட்ட கண்காணியாக ஒவ்வொரு வாரமும் வெவ்வேறு சபைகளைச் சென்று சந்தித்தேன், பைபிள் கல்வி புகட்டும் வேலையில் என் ஆவிக்குரிய சகோதர சகோதரிகளுக்கு உற்சாகத்தையும் பயிற்சியையும் அளித்தேன். இப்போது, ஆன்மீக ரீதியில் சொன்னால், என் குடும்பம் இன்னும் பெரியதாக இருக்கிறது. எங்களுக்கென்று பிள்ளைகள் இல்லாவிட்டாலும் யெகோவாவின் அமைப்பில் ஆன்மீக ரீதியில் எக்கச்சக்கமான மகன்களும் மகள்களும் இருக்கிறார்கள்.

ஒரு விதத்தில், பல வருடங்களுக்குப் பிறகு இன்னமும் ஊர் ஊராக பயணித்துக் கொண்டிருப்பதை நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது. ஆனால் ஒரு வித்தியாசம்: அது சர்க்கஸ் வேலை, இது சர்க்யூட் வேலை! ட்ரப்பீஸ் சாகசங்களை ஒருவேளை சிறப்பாக செய்ய கற்றிருப்பேனோ, சிறு வயது முதல் ஆசைப்பட்டபடி மும்முறை கரணம் அடிப்பதில் கரைகண்டிருப்பேனோ என்றெல்லாம் சிலசமயம் யோசிப்பதுண்டு, ஆனால் கடவுள் வாக்குறுதி அளித்திருக்கும் பூமிக்குரிய பரதீஸைப் பற்றி நினைக்க ஆரம்பித்ததும் அந்த யோசனையெல்லாம் வந்த வேகத்தில் மறைந்துவிடும்.​—⁠வெளிப்படுத்துதல் 21:4.

பிறந்ததுமே “மரத்தூள் என் பாதங்களில்” பட்டது என்னவோ உண்மைதான். ஆனால் பைபிள் சொல்வது என் நினைவுக்கு வருகிறது: “நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள்”! (ரோமர் 10:15) கடவுளைப் பற்றி அறிந்துகொள்ள மக்களுக்கு உதவுவது மிகப் பெரிய பாக்கியம்; சர்க்கஸ் கலைஞராக நான் எதைச் சாதித்திருந்தாலும் அவை எதுவும் இதற்கு ஈடாகாது. யெகோவாவின் ஆசீர்வாதத்தால் வாழ்க்கையில் எனக்குப் பரமதிருப்தி! (g04 9/22)

[பக்கம் 19-ன் படங்கள்]

எங்கள் சர்க்கஸ் “குடும்பத்தாரில்” சிலர்; டியூபாவுடன் என் அப்பா

[பக்கம் 21-ன் படம்]

இன்று, என் மனைவி எட்னாவுடன்